Advertisement

நீ என்னுள் யாரடா..

17

காதல்வலி என்றால் இப்படிதானோ என இந்த இரண்டு வாரத்தில் உணர்ந்தாள் காயத்ரி. நிச்சயத்தன்று மிக உறுதியாக ‘என்னால் இருந்துக் கொள்ள முடியும்.. என்னால் வாழ முடியும்..’ என உறுதியோடுதான் இருந்தாள். ம்.. காயத்ரிக்கும் தெரியுமே காதல் என்பது.. பிடித்தவர்கள் இருவருக்குமிடையே பகர்ந்து.. பேசி.. ரகசிய முத்தங்கள் தந்ததுக் கொண்டு.. காத்திருந்து காலம் கடந்து சந்தித்து.. பல பிரச்சனைகள் கடந்து மணமுடிப்பதுதானே காதல். ம்.. அப்படிதானே இருக்கும். ஆக, என்னுடையது காதல் இல்லை..  அவர் என்னைத்தான் பார்த்தார்.. என்னிடம்தான் புன்னகை செய்தார் என எப்படி நமபிக்கையாக சொல்ல முடியும் என்னால். நாங்கள் சரியாக பார்த்துக் கொண்டதே இல்லை.. அவர் என்னிடம் எதையும் சொல்லவேயில்லை.. எதோ பார்வை மாற்றம் அவரின் கண்ணில்.. எதையோ சொல்ல நினைத்தார்.. ம்.. அப்படிதானே எனக்கு புரிந்தது.. இது என்னுடைய புரிதலாக கூட இருக்கலாம் தானே.. அவ்வளவுதானே. இது எப்படி காதல். அதனால், என்னால் அவரை கடந்திட முடியும் எனத்தான் எண்ணிக் கொண்டு தனக்கு பார்த்திருந்த மாப்பிள்ளையிடம் நிச்சயன்று புன்னகைத்தாள்.

ஆனால், அதன்பிறகு காயத்ரியால் பேசவே முடியவில்லை.. ஆதித்யாவிடம். நிச்சயம் முடிந்தவுடன் எண்கள் பரிமாறிக் கொண்டனர்  இருவரும். ஆதித்யா, மறுநாள் அவனின் அலுவலகம் முடிந்து மேசேஜ் செய்தான்.. “ஹாய் பார்பி” என. பின் ‘டைம் டிப்பிரென்ட்.. ப்ளீஸ் ஃப் யூ ப்ரீ கால் மீ எனி டைம்’ என சொல்லி அவளுக்கான நேரத்தை ஒதுக்க தயார் என காயத்ரிக்கு தனது மனதை தெரிவித்திருந்தான்.

ஆனால், இந்த உரிமை கொண்ட உறவை பெண்ணவளால் ஏற்கவே முடியவில்லை. அந்த மேசேஜ் பார்த்ததும் அன்றைய பொழுது முழுவதும் குற்றயுணர்சியானது அவளுக்கு.. அதே சமயம்.. ‘நீங்க இப்படி ஏதும் சொல்லவே இல்லையே மாமா..’ என பரணியிடம்தான் மனம் சென்றது.

காயத்ரிக்கு, இதுவேதான் தொடர்ந்தது. ஆதித்யாவிற்கு, காயத்ரியிடமிருந்து அழைப்பு வரவில்லை எனவும், தன்னுடைய அதிகாலையில் அலராம் வைத்து எழுந்து இரவில் அவளுக்கு அழைத்தான். என்னமோ காயத்ரி அவனுடைய அழைப்பு ஏற்கவில்லை. ஆனால், செய்தி அனுப்பிவிடுவாள்.. ‘பிரிரெண்ட்ஸ் வீட்டில் இருக்கேன்.. அண்ணியோட கடை வேலையில் இருக்கேன்.. வெளியே இருக்கேன்’ என ஏதேனும் செய்தி அனுப்பிவிடுவாள். ஆதித்யாவும் அதிகாலையில் அழைக்க தொடங்கினான்.. அப்போதும் ‘தோட்டத்துக்கு கிளம்பிட்டு இருக்கேன்.. ஷ்ரவன் அழறான்.. அப்பாகூட வாக்கிங் போகிறேன்’ என் ஏதேனும் செய்தியை அனுப்பிவிடுகிறாள் பேசவேயில்லை.

ஆதித்யாவின் மனதில் இது பதிந்து போகிற்று. இவர்களின் திருமணத்திற்கு, ஆறுமாதம் இருக்கிறது. அதனால், அவனும் பொறுத்து போகலாம் என அமைதியானான் யாரிடமும் ஏதும் காட்டிக் கொள்ளவில்லை.

பரணிக்கு, எதையும் எங்கும் காட்ட கூட முடியாத ஒரு நிலை.. அலுவலகம் சென்றான். தன் அக்காவின் கடை திறப்பு விழாவிற்கு தேவையான ஏற்பாடுகளை கவனித்தான். இரவில் இனி உமேஷ்ஷோத்டுஅதிகமாக நேரம் செலவிடுகிறான். தன் அக்காவின் வீட்டிலேயே தங்கிக் கொள்கிறான் வாரத்தின் மூன்று நாட்களில்.  

வள்ளி, மகனிடம் “என்னடா முகமே சரியாக இல்லை.. காலையில் எழுவதில்லை.. அதிகமாக வீடு வருவதில்லை.. என்னமோ சரியில்லை நீ..” என விசாரணை செய்வதால்.. இப்படி அக்காவின் வீட்டில் ஒளிந்துக் கொள்ள தொடங்கியிருந்தான் பரணி.

தந்தை தணிகாசலம் இப்போது மகளின் நிலையை ஏற்றுக் கொண்டார்.. அதனால், தன் உடலை பேண தொடங்கினார். மகனும், அலைகிறான்.. சாரதாவிற்க்கு உதவ என.. அதனால்,  பரணியின் வேலை பளு அதிகமாகிறதே. எனவே, தானும் அலுவலகம் வர தொடங்கிவிட்டார்.. மகனின் வாடிய முகத்தை பார்த்து.. வேலை பளுதான் காரணம் என எண்ணிக் கொண்டு.

இன்று, சாரதாவின் பொத்திக் திறப்பு விழா. அவள் தையல் கற்றுக் கொண்ட ஆசிரியர்.. அங்கே சூழ்ந்த நட்பு வட்டம்.. பின், தங்கள் இருவரின் வீடு.. சில வீட்டருகே உள்ள கஸ்டமர்ஸ்.. என  அழைத்திருந்தாள். முன்பக்கம் பெரிய ஆபர்ஸ் தாங்கிய போர்ட் இருந்தது. மேலே அழகான வண்ணங்களால் செய்த ஒரு பெண்ணின் முகத்தோடு “ஸ்வப்னம்” என தங்கநிற எழுத்துகள் மின்னியது. அந்த இடத்தை இரண்டு பாகமாக பிரித்திருந்தனர்.. பார்ட்டிஷயின் செய்து. முன்பக்கம் துணி வகைகள்.. புடவைகள்.. உள்ளே, இரண்டு பெண்கள் தையல் இயந்திரத்தோடு வேலை பார்க்க வசதியான இடம்.. என அளவாக இருந்தது.

சக்திவேல் கௌசல்யா.. வள்ளி தணிகாசலம் என பெரியவர்கள் காலையிலேயே வந்துவிட்டு சென்றிருந்தனர். அன்றே வேலையை ஆரம்பித்துவிட்டாள்.

கார்த்திக், துளசியையும் காயத்ரியையும் அலுவலகம் செல்லும் போது கொண்டு வந்து, விட்டு விட்டு சென்றான்.

பரணி அலுவலகம் சென்றுவிட்டு.. பதினோரு மணி போல வந்தான்.. அக்காவை பார்ப்பதற்கு. காயத்ரி ஷ்ரவன்னை கையில் வைத்துக் கொண்டு.. சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டு நின்றிருந்த கோலம்தான் அவன் கண்ணில் பட்டது. கடையின் எதிரேதான் வண்டியை நிறுத்தினான். அப்படியே அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான், காரிலேயே. ஏனோ இறங்கினால்.. இந்த பார்வை கூட பார்க்க முடியாது என அவனுக்கு எண்ணம் அதனால் அவளையே கண்ணில் நிரப்பினான்.

ஆனால், இப்போது முகத்தில் அவன் ரசித்திருந்த குறும்புகள் இல்லை.. வண்ணத்து பூச்சியாய் வட்டமிடும் அவளின் கண்கள் காணோம்.. அமைதியாய் நின்றிருந்தாள்.. இளைத்திருந்தாள்.. மொத்தத்தில்  ஜீவனில்லை அவளிடம். இப்படி அவளை பார்க்க முடியவில்லை பரணியால். அமைதியாக இறங்கி உள்ளே வந்தான். துளசியை பார்த்து “வாங்க அக்கா” என்றான்.

துளசி “பரணி, என்ன இப்படி இருக்கீங்க.. அன்று பார்த்ததை விட இளைச்சிடீங்க.” என்றாள் அக்கறையாக.

பரணி புன்னகைத்தான் பதில் சொல்ல முடியாமல்.

சாரதா “அவன்தான் எல்லா ஏற்பாடும். ஈரோட்டிலிருந்து, புனேவிலிருந்து என ஹோல்செல் டீலரிடம் பேசி ஏற்பாடுகள் செய்து என.. கடையோட லுக் மாற்றி.. எல்லாம் அவன்தான். என்னால் அவனுக்குதான் அலைச்சல்.. வேலை.. கவலை.. செலவு.. எல்லாம்.. ஒன்றுக்கு இரண்டு பங்காக அதிகம்” என்றாள் உணர்ந்த குரலில்.

பரணி “அக்கா..” என்றான் மிரட்டுவது போல. சாரதா இப்போது பரணியின் கைபிடித்துக் கொண்டாள்.. “எதோ புண்ணியம் செய்திருக்கேன்” என்றாள் சட்டென கண்கள் கலங்க.

காயத்ரி,  இந்த நிலையை தூரமாக நின்றே பார்த்திருந்தாள் , சாரதாவின் வார்த்தைகள் எல்லாம் காதில் விழுகிறது.. ‘ம்.. அதான் அக்கா சரியாக வாழாத வீட்டில் நான் இருப்பதால்.. என்னை பிடிக்கவில்லை போல.. ம்.. அதான், வேண்டாம்ன்னு விட்டுட்டு போயிட்டாங்க போல.. ஆனால், அவங்க என்னை புதுசா எதோ மாதிரி பார்த்தாங்க தானே.. அப்போ பிடிச்சி விட்டுட்டு போயிட்டாங்க..’ என அவளுள் சந்தேகம் எழுந்தது. அவளின் மனதில், காய்ந்திருந்த பரணியின் பிம்பம் எல்லாம் மீண்டும் உயிர் பெற தொடங்குகிறது, சாரதாவின் பேச்சில்.  

இப்போது பரணியின் குரல் “சாரதா” என அதட்டுகிறது.

காயத்ரி தன் சிந்தனையை விட்டு விழிவிரித்து பார்த்தாள். பரணி மரியாதை இல்லாமல் அழைத்ததேயில்லை சாரதாவை இத்தனை வருடங்களில். இப்போது பேர் சொல்லி அழைக்கவும் பார்த்தாள் அதிர்ச்சியாக. மீண்டும் பரணியே “சும்மா இரு.. இன்னிக்குதான் உன்முகத்தில் அந்த சந்தோஷத்தை பார்த்தேன் ரொம்பநாள் சென்று, அதை கலைக்காத.. வே டூ கோ.. இட்ஸ் யுவர் ட்ரீம். ம்.. யாரவது வர போறாங்க.. காம் அக்கா.” என்றான் தணிந்த குரலில்.

துளசி “அக்கா, பரணிதான் சொல்றாங்க இல்ல. நீங்க சந்தோஷமாக இருங்க. எல்லாம் சரியாகிடும். சரி செய்திடுவான் பரணி” என்றாள்.

சாரதா ஆமோதிப்பாய் கண் மூடி திறந்தாள். காயத்ரிக்கு அங்கு செல்ல வேண்டும் போல இருந்தது. அவனின் அந்த அதட்டல் வேண்டும் போல இருந்தது. தன்னை இப்படி, சத்தமில்லாமல் கண்ணியமாக மிரட்டுவதை.. அவன் வாயால் கேட்க வேண்டும் போல இருந்தது. ம்.. அவனோடு சேர்ந்துக் கொள்ள ஆசைதான் வந்தது அவளுக்கு.

இப்போது துளசி பேச்சை மாற்றும் விதமாக “அக்கா, காயூக்கு.. ப்ரைடல் ப்ளௌஸ் காட்டுங்க.. இங்கேயே எல்லாம் டிசைன் செய்திடலாம். காயூ ஓகே தானே” என்றாள் இப்போது காயத்ரியிடம் திரும்பி.

சாரதா காயத்ரியை பார்த்து புன்னகைத்தாள்.. கண்களை துடைத்துக் கொண்டே.

காயத்ரி அசையாமல் நின்றாள்.

பரணி அங்கிருந்த டேபிள் சேரில் அமர்ந்துக் கொண்டான்.

துளசியும் சாரதாவும் மெட்டிரீயல்ஸ் பார்க்க சென்றனர். சாரதா புதுவித புடவைகளை எடுத்து காட்டினாள், துளசி காயத்ரியையும் கூட்டிக் கொண்டு சென்று பார்த்துக் கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் ஷ்ரவன் அழவும்.. துளசியிடம் அவனை கொடுத்தாள் காயூ. சாரதாவும் துளசியும் பேசிக் கொண்டே அமர்ந்தனர். காயத்ரி வெளியே வந்தாள்.. பரணியின் அருகே வந்தாள். பரணியின் கண்கள் போனிலிருந்து மேலே நிமிரவில்லை. வந்திருப்பது அவளென தெரியும் அதனால்தான் நிமிரவில்லை.

காயத்ரிக்கு தொண்டையில் சிறுவலி.. எச்சில் விழுங்க முடியவில்லை.. அவனின் நிமிரா முகம் பார்த்து. ஒருமாதிரி அவமானமாக கூட இருந்தது.. ஆனால், அதை அப்படி ஒத்துக் கொள்ள அவளின் நேசம் கொண்ட மனம் ஒப்பவில்லை. எல்லோரும் வாய்திறந்து ‘நான் உன்னை காதலிக்கிறேன் என சொல்லுவார்கள். ஆனால், இவன் மட்டும் அதை உணர்த்துகிறான்.. நானும் உணர்ந்துவிட்டேன். ஆனால், எந்த ஆதாரமும் இல்லை. இப்போது எந்த உறுதியும் இல்லை எங்களிடம். என்னிடம் அடையளமாக வாய் திறந்து  பேசியதில்லையே  எப்படி அவனிடம் கேட்பேன்.. ஏன் மாமா என்னை பார்க்கமாட்டேங்கிறீங்க என எப்படி கேட்பேன் அவனிடம் என எண்ணியவளின் கண்ணிலிருந்து இரண்டு சொட்டு கண்ணீர் அந்த மேசையின் மீது விழவும்.. பரணி நிமிர்ந்தான்.

காயத்ரி பரணியின் கண்களையே பார்த்தாள்.. அலைச்சலின் சாயல் என தெரியாதவர்கள் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், இது தேடலின் சாயல் என பெண்ணவளுக்கு புரிய.. அவனின் மனம் எதோ அந்த கண்களில் தெரியும் என ஊடுருவி பார்த்தாள் பெண்.

பரணியால் பெண்ணவளின் ஊடுருவம் பார்வையை எதிர்கொள்ள தைரியம் இல்லை.. எழுந்துக் கொண்டான் சேரிலிருந்து.. “எப்படி இருக்கீங்க” என்றான் மூன்றாம் மனிதரிடம் நான்காம் நபர் நலம் விசாரிப்பது போல..

காயத்ரி, சட்டென திரும்பி கண்களை துடைத்துக் கொண்டு.. தன் அண்ணிகள் இருக்குமிடம் சென்றுவிட்டாள்.

பரணிக்கு, அதற்குமேல் அங்கிருக்க முடியவில்லை. எல்லோரிடமும் விடைபெற்று.. காயத்ரியை தவிர்த்துவிட்டு சென்றுவிட்டான். நேராக வீடு சென்றுவிட்டான். மீண்டும் அவனுக்கு காயத்ரியின் காய்ச்சல் அடிக்க தொடங்கிவிட்டது. அவளிடம் பேச வேண்டும் என..  தீவிரமானாது. ஆனால், அவனின் கட்டுபாடுகள் அதற்கு அனுமதிக்கவில்லை. என்ன முயன்றும் உறக்கம் வரவில்லை.. சாப்பிட அன்னை அழைத்தார் உண்டு வந்தான்.. உறங்குகிறேன் என சொல்லி. ஆனால், உறக்கம் வரவில்லை.. அவளின் முகம்தான், கண்களுக்கு நடுவில்.. ‘ஏன் அவள் என்னிடம் வந்தாள்.. அழகாக இருந்தாள்.. நான் அவளை பாதிக்கிறேன். ஆனால், அவள் என்னவள் இல்லையே.. ம்.. நான் எதையும் நினைக்க கூடாதுதானே..’ என மனம் எங்கோ செல்ல.. எங்காவது ஓடிவிடலாம் போல தோன்றியது.

Advertisement