Advertisement

நீ யாரடா என்னுள்!

16

பரணி, காயத்ரிக்கு அழைத்து ஓய்ந்து போனான். மீண்டும் அவனுள்.. கமலநாதன் வந்து அமர்ந்துக் கொண்டான், குற்றவுணர்வு எழுந்தது அவனுள். சற்று தள்ளி வைத்திருந்த.. கமலின் செயல் எல்லாம் அந்த இரவில் பூதாகரமாக அவனை படுத்தியது. அக்காவிற்கு சொத்துகளை கொடுத்து செட்டில் செய்துவிடு, என்கிற அண்ணனுக்கு தங்கையாக ஏன் இவள் பிறந்தாள் என எப்போதோ நடந்ததை எண்ணி.. குழம்பி தவித்தான்.. எப்படி போய் பெண் கேட்க சொல்லுவேன் அப்பாவிடம்.. அதுவும், அக்காவின் வாழ்வை பறித்த வீட்டில்.. மீண்டும் எனக்கு சம்பந்தம் பேசுங்கள் என எப்படி சொல்லுவேன்.. என எண்ணி எண்ணி ஓய்ந்தான்.

காயத்ரிக்கு, கோவமே வந்தது.. ‘என்ன நினைச்சி இப்போ கால் பண்றாங்க.. நான்தான் தப்பு பண்ணிட்டேன்.. பேசும் போதே சொல்லியிருக்கணும். சிடுமூஞ்சி.. அன்னிக்கு, ரேசொர்ட்டில் உத்து உத்து பார்க்கும் போதே..’ என கண்ணில் நீர் வந்தது.

ஆனாலும் தன்னை தேற்றிக் கொண்டாள் பெண்  ‘ம்.. ஏதும் நினைக்காத.. உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சி. அவங்க மனசில் எதோ இருந்திருக்கும்.. உண்மை புரிந்து அவங்களே அமைதியாக இருக்கும் போது, உனக்கு என்ன..’ என ஏதேதோ தனக்கு தானே எண்ணிக் கொண்டாள். மனது சமாதானம் அடைய மறுக்கிறது.. பரணியின் முகமே நிழலாடுகிறது. ஆனாலும், நிதர்சனம் என்ற ஒன்றை ஏற்றுக் கொண்டது அவளின் மூளை.. ஆனால், மனம்..  அவன் நேரடியாக சொல்லி இருக்கிருக்கலாம்.. என ஒரு சிந்தனை எழுந்தது அவளுள். நம் குடும்ப சூழ்நிலை தெரிந்துதான் சொல்லவில்லை என தனக்கு தானே சொல்லிக் கொண்டாள் பெண். விடியும் வேளையில் உறங்கி போனாள்.

கீழே, சக்திவேல்.. அதிகாலையிலேயே வாக்கிங் செல்லுவார். அப்படி சென்றுவிட்டு வந்து.. பேப்பர் எடுத்து அமர்ந்திருந்தார்.

கார்த்திக்கு, விழிப்பு வந்துவிட்டது. எழுந்து ப்ரெஷ்ஷாகி தன் தந்தையை தேடி வந்தான். அவர் வராண்டாவில் அமர்ந்து இருக்க அருகில் சென்றான் “கொஞ்சம் பேசணும் பா” என்றான்.

சக்திவேல் “என்ன அப்பா.. நேற்றுதானே பாப்பாகிட்ட போட்டோ கொடுத்திருக்கு.. வேற என்ன” என்றார்.

கார்த்திக், மற்றொரு சேரில் அமர்ந்துக் கொண்டான்.. கௌசல்யா மகனுக்கு காபி எடுத்து வர உள்ளே சென்றார். கார்த்திக், நேற்று பரணி அழைத்தது பற்றி சொல்லிக் கொண்டிருந்தான், தந்தையிடம். 

கௌசல்யா காபியை மகனிடம் கொடுத்தார். 

இப்போது சக்திவேல் “என்னமோ போடா.. எனக்கு ஏதும் தோணலை.. இதெல்லாம் கேட்க்கனுமான்னு இருக்கு. சாரதா என்ன விருப்படுகிறான்னு கேளுங்க.. இனி நாம என்ன செய்ய முடியும்.. என்னமோ நடக்கட்டும். காயத்ரிக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டில் சொல்லணும் வேற.. லேசுபாசாக அவர்களுக்கு விஷயம் தெரியும்தான் என்றாலும்.. நாம தெளிவாக சொல்லிவிட வேண்டும்.. பார்த்து நீங்களே செய்ங்க. சாரதாவிடம் நான் சொன்னேன்னு சொல்லிடு.. ஜீவனாம்சம் கேட்க சொல்லு.. அதை பேச சொல்லு.. அவனிடம்” என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கௌசல்யா “ஏங்க, நாமதான் எல்லாம் பார்க்கிறோமே. அப்புறம் என்ன.. அந்த பரணி, குழந்தையை கூட அவன் கிட்ட காட்ட கூடாதுன்னு சொல்றான். நீங்க என்னமோ ஜீவனாம்சம் கேட்க சொல்றீங்க.. என்ன நினைக்கிறீங்க. அவன் நிம்மதியா இருக்கட்டுமே.. விடுட்டுடுங்களேன்.” என்றார்.

சக்திவேல் “நாம மட்டும் பார்க்கலை. சொல்ல போனால் பரணிக்குதான் அதிக ரைட்ஸ். அவன்தான் எல்லாம் பார்க்கிறான். இதில் பாதிப்பு அந்த பொண்ணுக்கும்.. பசங்க இரண்டு பேருக்கும் தான்.. உனக்கு புரியுதா.. இல்ல, புரியாத மாதிரி இருக்கியா. இதில் சாரதா என்ன முடிவெடுத்தாலும்.. சரிதான்..” என்றவர் மனைவியை பார்த்து நன்றாக முறைத்துவிட்டு கார்த்திக்கிடம் திரும்பி “சரிதானே கார்த்திக். பரணியும் நீயும் பார்த்து பேசி.. சாரதாவிற்கு எது நல்லதோ அதை செய்துடுங்க” என்றவர் குளிப்பதற்கு தனதறைக்கு சென்றார்.

கௌசல்யா கார்த்திக்கிடம் “ஏன் பரணிக்கு.. கமல் போன் பண்ணியிருக்கான். எதுக்கு எல்லாகிட்டையும் அனுமதி கேட்கனும் அவன். டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்ப வேண்டியதுதானே. இந்த பரணி எதுக்கு உன்கிட்ட சொல்றான். அவன் அக்காவிற்கு வாழ தெரியலை.. இப்போ எல்லார்கிட்டவும் நல்லவன் வேஷம்” என்றார் புலம்பலான குரலில்.

கார்த்திக் அன்னையிடம் எதையும் பேச முடியாமல் அலுவலகம் கிளம்ப சென்றான்.

காயத்ரி, கீழே வந்தாள்.. தன் தந்தைக்கு பரிமாறினாள்.. கார்த்திக் தங்கையின் முகத்தை பார்த்தான் அடிக்கடி. ஒன்றும் வேறுபாடு தெரியவில்லை எனவே, “என்ன டா, பதிலே சொல்லல” என்றான் தங்கையிடம்.

சக்திவேல் கௌசல்யா எல்லோரும் பெண்ணின் முகத்தையே பார்த்திருந்தனர். காயத்ரிக்கு இப்போதும் பரணி யாருமில்லா சாலையில் தன்னை காப்பதற்காக வந்தது போல வரமாட்டானா என் தோன்றியது.. திடுக்கிட்டு காயத்ரி தன் தந்தையை பார்க்க.. அவர் ஆவலாக தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது புரிய பெண்ணவள் “அப்பாக்கு ஓகேன்னா.. எனக்கும் ஓகேதான்.” என்றாள் உயிரே இல்லாத குரலில்.

கார்த்திக் “ஓ… அப்படி. நேற்று எதோ பதியனும்.. பதியம் போடணும்ன்னு சொன்னாங்க” என்றான் அவளை வம்பு செய்ய.. அவள் இருக்கும் நிலை புரியாமல்.

காயத்ரி வெடுக்கென.. ஹாலுக்கு சென்றுவிட்டாள். பெரியவர்கள் எல்லோரும் அவள் காதில் விழாமல் புன்னகைத்தனர். காயத்ரிக்கு, உள்ளுக்குள் என்னமோ நொறுங்கியது.. ‘என்ன டா செய்த என்னை.. என்னை புகழலை.. என்னை சிரிக்க வைச்சி மனசை கெடுக்கல.. கொஞ்சி பேசலை.. கூடவே நடக்கலை.. தொட்டு தொட்டு பேசி என்னை உருக கூட வைக்கலை.. எப்படி டா உன் முகம் நினைவில் வருது.. அய்யோ இதென்ன..’ என பூகம்பம் எழ தொடங்கியது அவளுக்கு.

தந்தையும்.. அண்ணனும் எழும் சத்தம் கேட்க்க.. அவசரமாக மேலே தனதறைக்கு சென்றாள், காயத்ரி. ஆண்கள் இருவரும் வெளியே கிளம்பினர். 

கௌசல்யா அழைத்தார் மகளை உண்பதற்கு. காயத்ரி வந்தாள் உண்டாள்.. கௌசல்யா “சமையல் என்னான்னு பார்த்துக்க காயூ..  ராகுகால பூஜைக்கு போயிட்டு வந்துடுறேன்” என சொல்லி பெண்ணை வீட்டில் விட்டு விட்டு கிளம்பினார் கௌசல்யா.

காயத்ரி தன்னை திசை திருப்பி கொள்ள எண்ணி சமையல் வேலையை கவனித்தாள்.

பரணி அலுவலகம் வந்துவிட்டான். அவனுக்கு இப்போது குற்றவுணர்வுதான் எழுந்தது. அதை மீறி.. காயத்ரியை நினைக்க முடியவில்லை. எதோ அக்காவின் வாழ்வை கெடுத்தவர்களோடு தான்  உறவு எதிர்பார்ப்பதாக எண்ணம்.. அப்படி இல்லை என மூளைக்கு சொன்னாலும்.. நம்பவில்லை அது. நேற்று அக்காவிடம் டிவொர்ஸ் கேட்டு கூப்பிட்டிறுக்கான் கமல்.. நீ  அவங்க வீட்டில் சம்பந்தம் பேச நினைக்கிற. ஏன், அக்காகிட்ட இன்னும் சொல்லலை.. பாவம் இல்ல அவள். உனக்கு இப்போதுதான் ஏமாற்றம். அவள் அனுபவித்து ஏமாந்தவள்.. என பரணிக்கு புதிய கவலை வர.. தனது வேலைகளை விரைவாக முடித்துக் கொண்டு மதியம் அக்காவின் வீட்டிற்கு சென்றான்.

சாரதாவிடம் எந்த பீடிகையும் இல்லாமல் விஷயத்தை சொல்லிவிட்டான், பரணி.

சாரதா எந்த உணர்வும் இல்லாமல் “அப்ளே செய்ய சொல்லு.. பரணி.. இங்கேயே பண்ண சொல்லு.. என்னால் அலைய முடியாது. ம்..” என்றாள்.

பரணி அக்காவையே பார்த்துக் கொண்டிருந்தான்.. இமைக்காமல்.

சாரதா “என்ன டா.. ஏன் டல்லா இருக்க.. ” என்றாள்.

பரணி “இல்ல அக்கா, நான் பயந்தேன்.. ஆனால், நீ கூல்லாக இருக்க” என்றான்.

சாரதா “தெரியலை.. அதைவிடு. இங்க மெயின்ல ஒரு ஷாப் வேக்கென்ட்டா இருக்கு.. பேசி வைச்சிருக்கேன். பொட்டிக் ஆரம்பிக்க சரியான பிளேஸ். பக்கத்திலேயே ப்யூட்டி பார்லர்.. நல்ல மெயின் ரோட்.. நீயும் பாரேன்.. போலாமா இனியை கூப்பிட்டு வரும் போது” என்றாள் கண்ணில் புது கனவுகளோடு.

பரணிக்கு ஆசுவாசம் ஆகுவதா.. அதிர்ச்சியாகுவதா என ஒரு நொடி தயக்கம். பின்.. ஆசுவாசம் ஆனான். ‘இதுதான் சரி.. கல்யாணம் மட்டுமே வாழ்க்கை இல்லையே..’ என எண்ணிக் கொண்டே “சூப்பர் க்கா.. போலாம். பேசி முடிச்சிடலாம்” என்றான் திடமாக.

அடுத்தடுத்த நாட்கள் வேகமாக கடந்தது. துளசி பிள்ளையோடு புகுந்த வீடு வந்து சேர்ந்தாள். அன்றுதான் நீண்ட நாள் சென்று, சாரதா தன் வீட்டிற்கு வந்திருந்தாள்.

எல்லோரும் நிறைந்து இருந்தனர். கெளசல்யாவிற்கு பெரியமகன் இல்லாத குறை மனதுள் வந்தே விட்டது. முயன்று அமைதியாக இருந்துக் கொண்டார். 

துளசியும் சாரதாவும் காயத்ரியிடம் அவளுக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை பற்றி கேட்டனர். காயத்ரிக்கு ஏதும் விவரமாக சொல்லவில்லை.. அந்த பேச்சை எடுத்ததும்.. ஷ்ரவனோடு விளையாடும் பாவனையில்.. அந்தபக்கம் சென்றுவிட்டாள் பெண். பெண்கள் தங்களை பார்த்துக் கொண்டனர். என்னவென துளசிக்கு கேட்க தோன்றியது. ஆனால், என்னவென கேட்பது என பயம். அதனால் அமைதியாகிவிட்டனர்.

நீண்டநாள் சென்று.. பரணி அக்காவை அழைத்து செல்லுவதற்கு வந்தான்.. இங்கே. கார்த்திக் காலையில்  அண்ணியையும் பிள்ளையையும் கூட்டி வந்துவிட்டான். அதனால், அழைத்து செல்ல பரணி வந்தான்.

Advertisement