Advertisement

பிள்ளைகள் இரண்டுக்கும் சிறகு முளைத்தது போல.. அங்கும் இங்கும் பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தது, இப்போது. 

இனியன் “அம்மா, என் கிரிகெட் பேட் எங்க.. வைட் கேப் காணோம்..” என சாரதாவிடம் இடுப்பில் கை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.

சாரதா “அந்த கதவுக்கு பின்னாடி இருக்கு பாருடா” என சொல்லி.. ஒருநாளிற்கு தேவையான துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

உமேஷ்.. கபோர்டில் இருந்து “அம்மா.. இது..” என தன் அன்னையின் புடவை.. சல்வார் என எல்லாவற்றையும் இழுத்து காட்டிக் கொண்டிருந்தான்.

சாரதா அமைதியாக அதை பார்த்துக் கொண்டே எல்லாவற்றையும் எடுத்து வைத்தாள்.

மணி மாலை மூன்று, சரியாக பரணி வந்துவிட்டான்.. “இனி.. உம்மு” என அழைத்துக் கொண்டு.

இப்போது இவர்கள் எல்லோரும் பொள்ளாச்சியில் உள்ள ஒரு ரேசொர்ட்க்கு செல்லுகிறார்கள்.. உமேஷ்ஷின் பிறந்தநாளை முன்னிட்டு. ம்.. பிள்ளைகள் வந்ததிலிருந்து எங்கும் அழைத்து செல்லவில்லை எனவே, இந்த ஏற்பாடு செய்திருந்தான் பரணி. 

ஆனால், இதில் பரணியே எதிர்பாராத ஒன்று.. இனியன் “அத்தை கூடத்தானே மாமா.. சித்தப்பாவும்” என ஆள் சேர்த்ததுதான். அதன் விளைவு.. இப்போது கார் காயத்ரியை அழைக்க.. அவர்கள் வீட்டிற்கு செல்லுகிறது.

பரணி, காயத்ரியிடம் பேசி நாட்கள் கடந்திருந்தது. என்னவென பேசுவது.. சும்மா சும்மா அழைக்க அவனுக்கு என்னமோ போல இருந்தது. அவள் வேறு அன்றே.. இந்த நேரத்தில் கூப்பிடுறீங்க என கேட்டாள். அதனால், அழைத்து பேசவில்லை. அதனால் ஆவளோடு, அவளை எதிர்பாத்தான் இப்போது.

கார் அவர்கள் வீட்டு போர்டிகோவில் நிற்க.. சாரதா இறங்கி உள்ளே செல்லும்முன்.. இனியன் “அத்தை.. ரெடியா” என கத்திக் கொண்டே வீட்டினுள் ஓடினான்.

சக்திவேல்.. கௌசல்யா இருவரும் அப்போதுதான் காபி குடித்துக் கொண்டிருக்க. இவனின் சத்தம் கேட்டதும் சக்திவேல் எழுந்து வெளியே வர.. கௌசல்யா “காயூ” என மேலே பார்த்து பெண்ணை அழைக்க தொடங்கினார்.

இனியன் நிற்காமல் மேலே ஓடினான்.

சாரதா உள்ளே வந்திருந்தாள்.. சக்திவேல் “பரணியை வர சொல்லும்மா.. காபி சாப்பிட்டு போலாம்.. நான் கூப்பிட்டு வரேன்” என வெளியே செல்ல எத்தனித்தார்.

சாரதா “இல்ல மாமா, டைம் ஆகிடுச்சி.. அதான் வரலைன்னு சொல்லிட்டான்” என்றாள்.

கௌசல்யாவை பார்த்து “எப்படி இருக்கீங்க அத்தை” என்றாள்.

கௌசல்யா “ம்.. வா, சாரதா உமேஷ்க்கு குளோப்ஜாமூன் செய்தேன்.. இதையும் எடுத்துட்டு போங்க.. காயத்ரி, அங்கே அல்லோ பண்ண மாட்டாங்கன்னு சொன்னால். இந்தா.. போகும் போதாவது கொடுத்திடு பையனுக்கு.. அப்புறம் வந்ததுக்கு அப்புறம் நிறைய கொடுக்கலாம்” என சொல்லிக் கொண்டே சின்ன பாக்ஸ் ஒன்றை கையில் கொடுத்தார்.

இப்போது காயத்ரி இறங்கி வந்துவிட்டாள்.. இனியன் இப்போது அத்தையின் கையை பிடித்து இழுத்தான். காயத்ரியிடம், கௌசல்யா “ரொம்ப பசங்களோட விளையாடாத, அவங்களை நீதான் பார்த்துக்கணும். கார்த்தியும் துளசியும் மதியமாக வரேன்னு சொன்னாங்க.. அவங்க கூட நீ கிளம்பி வந்திடு” என இன்னும் ஏதேதோ சொல்லி மகளை அனுப்பி வைத்தார். கௌசல்யா வாசலுக்கு வரவில்லை. என்னமோ பரணி மேல் ஒரு கோவம்.. ‘என் பையன் விஷயத்தில் அவன் எதுக்கு தலையிடுகிறான்’ என லேசாக கோவம், அதனால், பரணியை வந்து பார்க்கவில்லை.

ஜெக்கின் திரீபோர்த் பேன்ட்.. பிங்க் வண்ணத்தில் நீலநிற சின்ன சின்ன பூக்கள் போட்ட.. தொள தொள டாப், ஏற்றி போட்ட ஒருபோனி.. ஒப்பணையே இல்லா முகம்.. என காயத்ரி காஸுவல்லாக வந்து அமர்ந்தாள் சாரதாவோடு காரில்.

பரணி பார்த்தும் பார்க்காதவன் போல.. ஸ்டியரீங்கில் கைகளை வைத்துக் கொண்டு.. கார் நோக்கி, போனி துள்ளி துள்ளி விழ நடப்பவளை ரசித்தான். அவள், அருகே வந்ததும்.. சக்திவேலிடம் விடைபெற்று அவளை காணாதவன் போல.. “போலாமா அக்கா..” என்றான்.

சாரதா “ம்..” என்றாள். வண்டி நகர்ந்தது ரதமென.

காயத்ரி அமர்ந்ததும்தான்.. அவனின் ஏர் ப்ரெஷ்னரை தாண்டியும் எதோ சுகந்த மணம்.. அவன் இதயம் நுழைந்தது. ம்.. இப்போது காரை செலுத்திக் கொண்டே.. தன் காரை சுற்றி ஒரு பார்வை பார்த்தான்.. ‘ம்.. அவள் வந்து அமர்ந்ததும்.. பாரேன் இந்த கார் அழகாகிடுச்சி..’ என எண்ணிக் கொண்டான் தனக்குள், முகத்தில் ஒரு மலர்ச்சி அழகாக வந்து அமர்ந்தது.

 ரேசொர்ட்டில் வந்து இறங்கினர்.

காயத்ரி பரணியை வேண்டுமென்றே கண்டுக் கொள்ளவில்லை போல, திரும்பி கூட பார்க்கவில்லை.

பரணி, ரிசப்ஷன் உள்ளே சென்று.. தங்களின் விவரம் சொல்லி.. அறையின் கீய் வாங்கிக் கொண்டு வருவதற்குள்.. காயத்ரி பசங்கள் எல்லோரும் அங்கே முன்பக்க தோட்டத்தை சுற்றி பார்க்க செண்டிருந்தனர். சாரதா மட்டும், அங்கே அமர்ந்திருந்தாள்.

பரணி, கார் அருகே சென்று லக்கேஜ் எடுத்து வைத்துவிட்டு, தன் அக்காவிடம் “இருக்கா.. கார் பார்க் செய்துட்டு வரேன்” என சொல்லி சென்றான்.

சற்று நேரத்தில் பரணி வந்துவிட்டான்.. காயத்ரியும் பிள்ளைகளோடு வந்திவிட்டிருந்தாள். எல்லோருமாக அறைக்கு சென்றனர். இரண்டு அறைகள்.. ஒன்றில் பரணியும் இனியனும் தங்கிக் கொண்டனர். மற்றதில் மற்ற மூவரும்.

அழகாக பெரிய பொள்ளாச்சி இளநீர் வந்தது எல்லோருக்கும். அதை குடித்துவிட்டு.. அப்படியே சைக்கிள் எடுத்துக் கொண்டு கிளம்பினர் பெரியவர்கள் மூவரும். மரங்களுக்கு  நடுவே அழகான பயணம்.. நடுவில் சின்ன ஓடை போன்று சலசலவென ஓட.. அந்த இடத்தில் சைக்கிளை நிறுத்தி.. பிள்ளைகள் கால் நனைக்க.. காயத்ரி அவர்கள் மீது நீரை வாரி இறைக்க.. பிள்ளைகள் இருவரும் முழுக்க நனைத்து போயினர். ஆனால், அந்த பிஞ்சு விரல்கள் எவ்வளவு நீர் எடுத்து அத்தையின் மீது ஊற்றியும்.. அவள் முகம் மட்டுமே நனைந்திருந்தது.. லாவகமாக.. நகர்ந்துக் கொண்டு.. தன்னை மறைத்துக் கொண்டு என விளையாடினாள் பெண். ‘சார்.. வேறென்ன வேணும்.. இந்த இயற்கை.. இந்த காற்று.. காயத்ரி’ என மனதுள் விளம்பர பாணியில் கவிதை படித்துக் கொண்டான் பரணி.

சாரதா “டேய் இருட்டாகுதுடா.. வா இனி.. இன்னும் அவளோ தூரம் போகனும்” என கிளப்பினாள்.

இப்போதுதான், எல்லோரும் கிளம்பினர்.

பிள்ளைகள் உடைமாற்றி வந்தனர். பரணி, அந்த லாபியில் நின்றுக் கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். தென்னை மரங்கள் அழகுற நின்றது.. அழகான வேப்பமரம் வேறு பக்கத்தில். கிளைபரப்பி இருந்த அந்த பெரிய மரங்கள் காற்றில் அசைய.. அதை தொட்டு தென்னங்கீற்றும்  அசைந்து சாமரம் வீச.. முழு சந்திரன் வானவீதியில்.. ராஜ தோரணையில் ஊர்வலம் வர தொடங்க.. ‘அஹ இந்த இயற்கைதான் எவ்வளவு பெரிய ராஜாங்கத்தை கட்டி ஆள்கிறது..’ என மனதில் முதல்முறை.. ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தான் பரணி.

காயத்ரி முதலில் வெளியே வந்தாள்.. பீட்ரூட் கலர் ஷிபான் சல்வார்.. வைரமாய் ஆங்காங்கே மின்னிய கண்ணாடி வேலைபாடுகள்.. அவள் நடக்க நடக்க.. அந்த பெரிய நிலவு அவளின் உடை  கண்ணாடியில் அடைப்பட்டு.. சிந்தி சிதற.. ‘என் தேவையை தேடி வந்து சேர்ந்திருகிறது போல.. அத்தனை பொருத்தம் இவளுக்கு… இந்த உடை’ என எண்ணிக் கொண்டே எந்த நிலவை பார்ப்பது என தடுமாறி இமைக்க மறந்து அவளையே  பார்த்திருந்தான், காதலன்.

காயத்ரிக்கு அவனின் பார்வை.. புதிதாக இருந்தது.. எதோ எதோ என இருந்தவளுக்கு.. முயன்று அவனை பார்க்க கூடாது என இருந்தவளுக்கு.. இப்போது நடையில் நளினம் கூட.. எதோ மாயவலை அவர்களை மட்டும் சூழ்ந்தது போல.. இன்னும் பொறுமையாக நடந்தாள் அவனை நோக்கி. என்ன தயக்கம் என்றாலும்.. பத்தடி தூரத்தை எவ்வளவு நேரம் கடக்க முடியும்.. பரணி இன்னும் பார்வையை மாற்றவில்லை. பெண்ணவளுக்கு வேர்க்க தொடங்கியது.. அவளும் தன்னிரு கைகளை.. லாபில் உள்ள அந்த பிடிமானத்தில் ஊன்றி.. அவனை பார்க்காமல் இருக்க.. நிலவை பார்க்க தொடங்கினாள். பரணி அப்பட்டமாக அவளையே பார்த்தான்.

பெண்ணவளுக்கு கன்னங்கள் மெருகேற தொடங்கியது.. முன்விழாத முடியை.. காதோரம் ஒதுக்கினால்.. உதடுகளை இறுக்கி மூடி திறந்து.. தன்னுள் எதையோ மறைக்க எண்ணினாள்.. ஆனாலும் பரணி அசையவில்லை.

காயத்ரிக்கு அவ்வளவுதான் பொறுமை.. வெடுக்கென திரும்பி பரணியை பார்த்தாள்  “என்ன.. என்ன பார்க்குறீங்க புதுசா” என்றாள் முயன்று சத்தமாக கேட்டால்தான், ஆனால் குரல் கெஞ்சியது.

பரணி “புதுசா.. ம்.. அப்படி தோணுதா” என்றான் ஆழ்ந்த குரலில்.

காயத்ரி “அந்த பக்கம் பாருங்க” என்றாள்.

பரணி “உனக்கு புதுசான்னு தோணுதா” என்றான் விடாமல்.

காயத்ரி “அண்ணிகிட்ட கேட்க்கிறேன்.. உங்க தம்பி இப்படி பார்க்கிறார்ன்னு” என்றாள்.

பரணி சட்டென நிமிர்ந்து.. சுற்றுபுறம் பார்த்தான்.. லேசாக அவளை பார்த்து புன்னகைத்துவிட்டு, தன் பேன்ட் பாக்கெட்டில், இடகையை  விட்டுக் கொண்டான், மற்றொரு கையால் தலை கோதிக் கொண்டான்.. பரணி “ம்.. மரியாதையே வரமாட்டேங்குது” என்றான் இப்போது திமிராக

காயத்ரி அமைதியாகிவிட்டாள்.

பரணி “ம்.. என்ன நினைக்கிற.. எனக்கும் புதுசாதான் இருக்கு” என்றான் ஆழ்ந்த குரலில்.

காயத்ரி “என்ன என்ன.. என்ன இது” என்றாள். தைரியம் எல்லாம் காணாமல் போக.

பரணிக்கு, அவளின் குரல் என்னமோ செய்ய.. “என்ன, என்ன..” என்றான் ஒருமாதிரி டென்ஷனாக.

இப்போது இனி “அத்தை” என அழைத்துக் கொண்டே ஓடி வந்தான்..

சட்டென அவர்களை சூழ்ந்திருந்த மாயவலை அறுந்தது அந்த சத்தத்தில். 

Advertisement