Advertisement

நீ என்னுள் யாரடா!

14

கமல் இரண்டு நாட்கள் இருந்தான். அந்த இரண்டு நாட்களிலும், சக்திவேல் அவனை பார்க்க எண்ணவில்லை. என்னமோ சக்திவேலுக்கு.. பெரிய மகனை பிடிக்காமல் போனது. ம்.. வந்து அன்றிலிருந்து பார்க்கிறார்.. கமல் கீழே ஹாலிலேயே இருக்கிறான், வெளியே எங்கும் செல்லவில்லை. அவர் அலுவலகம் போகும் போதும்.. வரும் போது.. உணவு உண்ணும் போது என கமல் எப்போதும் ஹாலில் அமர்ந்துக்  கொண்டு தந்தையின் வரவை எதிர்பார்த்துக் கொண்டே இருந்தான். 

அதனால், சக்திவேலுக்கு எரிச்சல்தான் வந்தது. எத்தனை முறை  ஊருக்கு வா என அழைத்தால்.. வராமல் இருந்தவன்.. வந்தாலும், பிள்ளைகள் குடும்பத்தை பார்க்காமல் ஊர் சுற்ற கிளம்பியவன், இப்போது.. எதற்கு இங்கே அமர்ந்திருக்கிறான்.. என கோவம் எரிச்சல் எல்லாம் வந்தது.

அதனாலே, சக்திவேல் மகனை பார்ப்பதை தவிர்த்துவிட்டார். முதல் நாள் மதியம், டைனிங் டேபிளில் உண்ண அமரும் போது சரியாக வந்து அமர்ந்தான் கமல்.. “அப்பா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என தந்தையின் எதிரே வந்து அமர்ந்தான்.

சக்திவேல் அமைதியாகவே இருந்தார். காலையில் மகன் வந்திருக்கிறான் என மனையாள் சொன்னதிலிருந்து.. என்னமோ சரியில்லை என எண்ணிக் கொண்டார். கெளசல்யாவிடம் “எதுக்கு வந்திருக்கான்” என கேட்டார். கெள்சல்யாவிற்கும் முதலில் தெரியவில்லை. 

எனவே கௌசல்யா “தெரியலை.. மனசு மாறி வந்துட்டான் போல.. நிதானமாக பேசுங்க” என்றார்.

சக்திவேல் “அஹ.. எப்படி எப்படி மனசு மாறி வந்திருக்கனா.. இந்நேரம் பொண்டாட்டி எங்கேன்னு கேட்டிருந்தால், மனசு மாறி வந்திருக்கான்னு சொல்லலாம்.. என்னடி என்ன நடக்குது” என்றார் மனையாளிடம் அதட்டலாக.

கௌசல்யா “இங்க பாருங்க எனக்கு ஒன்னும் தெரியாது, நான் இன்னும் கேட்டுக்கலை.. நீங்க பேசிக்கங்க” என்றவர் வெளியே சென்றுவிட்டார்.

ஆக, காலையில் சக்திவேல் மகனிடம் பேசவில்லை. பதினோரு மணிக்கு, காயத்ரி கீழிறங்கி வரும் போதுதான், தன் அன்னையிடம் பேசி விவரம் சொன்னான் கமல்.

அதை கேட்க்க கேட்க்க.. அன்னைக்கு பயம்தான் பிறந்தது. ஆக, அவன் பங்கு சொத்துகளை பிரித்து கேட்க்கிறான். அந்த பெண்ணை திருமணம் செய்ய போகிறான் போல.. அதனால் டிவோர்ஸ் செய்கிறேன் என வந்து நிற்கிறான் என அன்னைக்கு புரிந்தது.

இப்போது மதியம் கமல் “அப்பா, எனக்கு என்னோட ஷேர்ஸ் பிரிச்சி கொடுத்திடுங்க பா, நான் அவளை டிவோர்ஸ் செய்ய போகிறேன்.. அத்தோடு ஜீவனாம்சம் என ஏதனும் கொடுத்துவிட்டால்.. உங்களுக்கும் ஒன்றும் தொந்திரவு இருக்காது. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நானும் என் வழியில் போய்டுவேன். டிவோர்ஸ் ஆகாமல் இருப்பதால்தானே எல்லாம் நீங்கள் செய்ய வேண்டி இருக்கிறது” என்றான் தன்  தந்தையை உற்று பார்த்துக் கொண்டு.

சக்திவேல் மனையாளை நிமிர்ந்து பார்த்தார். கெளசல்யாவிற்கு கதி கலங்கி போகிற்று.

சக்திவேல் “ம்.. பாருப்பா உன் வேலையை நீ பாருப்பா.. அவர்கள், எங்கள் பேரன் எங்கள் மருமகள்.. நாங்க பார்த்துக்கிறோம்” என்றார்.

கமல் “போதும் பா, டிராமா வேண்டாம். எனக்கு ஷேர்ஸ் வேண்டும். நீங்க அவங்களை பாருங்க பார்க்காமல் போங்க தட்ஸ் நாட் மை ப்ராப்லேம். எனக்கு என் ஷேர்ஸ் கொடுத்திடுங்க.” என்றான்.

சக்திவேல் “இங்க பாருப்பா.. நான் இன்னும் திடமாதான் இருக்கேன். நான் இப்போதைக்கு சொத்தை பிரிப்பது போல இல்லை. அப்படியே பிரித்தாலும்.. என் பேரன்களுக்குதான் போகும். நீ கிளம்பு” என்றார் திட்ட வட்டமாக.

கமலுக்கு டென்ஷன் ஆகியது “எல்லாம் தாத்தாவோட சொத்து.. உங்களுக்கு என்ன” என்றான்.

சக்திவேல் உண்டு கொண்டிருந்தவர் விருட்டென எழுந்தார்.. “டேய்” என விரல் நீட்டில் மிரட்டியவர், அப்படியே தட்டிலேயே கையை கழுவிக் கொண்டவர் “உங்க தாத்தாவோடது பொள்ளாச்சி கிட்ட இருக்கிற பூர்வீக வீடு ஒண்ணுதான். இது எல்லாம் என்னோட 45 வருஷ உழைப்பு தெரிஞ்சிக்கோ.. நான் பார்த்து கொடுக்கிறதுதான். போடா.. இதெல்லாம் உனக்கெப்படி புரியும்.. எந்த ஜென்ம பாபமோ இப்படி எனக்கொரு புள்ள..” என்றார்.

கமல் “அதை வைத்துதானே தொழிலே ஆரம்பிச்சீங்க.. அப்போ எல்லாம் எங்களுக்கும் உண்டு. நான் கேட்பேன், கோர்ட்டுக்கு போவேன்” என சத்தமில்லாமல் அதிராமல் எதிர்த்து நின்றான் கமல்.

கௌசல்யா “டேய், போடா அந்தபக்கம்.. அப்பா முன்னாடி என்ன பேச்சு பேசற.. அவரை சாப்பிட கூட விடமாட்டிய.. போடா அந்தபக்கம்” என தொரத்தினார்.

கமல் “நான் கண்டிப்பா செய்வேன். என்னை தாண்டிதான் பேரன் பேத்திக்கு எல்லாம்.. பார்க்கிறேன்” என்றான்.

சக்திவேல் எதையும் காதில் வாங்காமல் சென்றுவிட்டார்.

கெளசல்யாவிற்கு, மகன் தன்னிடம் சாரதாவை பற்றி பிள்ளைகளின் படிப்பு பற்றி காலையில் கேட்கவும், கௌசல்யா ‘அப்பாவும் பரணியும் சேர்ந்துதான் எல்லாம் பார்க்கிறார்கள் டா.. அட்வான்ஸ் அப்பா கொடுத்திருக்கார்.. இந்த மூணுமாசமாக பரணிதான் வாடகை கொடுப்பான் போல.. கார்த்தியை கேட்டால் தெரியும். நான் எவ்வளவோ சொன்னேன்.. எதுக்கு தனியாக போற இங்கேயே இருன்னு சொன்னேன் கேட்கலையே” என தன்புலம்பலை கொட்டியிருந்தார் அன்னை, கமலிடம். எனவே கமல், சாராதவை விவாகரத்து செய்துவிட்டால், இந்த நெருக்கடி உங்களுக்கு இருக்காது என சொல்ல துணிந்துவிட்டான். அதனால், டிவொர்ஸ் கொடுக்கனும்.. ஜீவனாம்சம் தரவேண்டும் என சொல்லி, தன் பங்கு சொத்துக்களை கேட்டுவிட்டான் மகன்.

இரவில் கார்த்திக்கும்.. அண்ணனை பார்த்து ஏதும் பேசவில்லை. கமல் ஹாலிலேயே அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டுதான் இருந்தான். கமல், தம்பியின் மகன் குறித்துக் கூட.. நேரடியாக தம்பியிடம் கேட்டுக்கொள்ளவில்லை. கௌசல்யா சொல்லியிருந்தார்.. கார்த்தியின் குழந்தை பற்றி. அதைபற்றி.. அண்ணன் தம்பி இருவரும் கூட ஏதும் பேசிக் கொள்ளவில்லை.

மறுநாள்தான் கெளசல்யாவாக பேரன்களை அழைத்துவர சொன்னார் கார்த்திக்கிடம். சாரதாவிற்கு, அழைத்து பேசவில்லை கௌசல்யா.. மகன் வந்தது பற்றி ஏதும் சொல்லவில்லை. கார்த்தியிடமே பேசி கூட்டி வரும்படி சொல்லிவிட்டார்.

கார்த்திக் வந்து நின்றான் அண்ணியின் வீட்டிற்கு. கார்த்திக் வந்து “அண்ணி, அம்மாதான் கூட்டி வர சொன்னாங்க.. அவன், என் அண்ணன் கூட்டி வர சொல்லலை பிள்ளைகளை. என்ன செய்யறது.. அதான் நானும் வந்திருக்கேன்.. என்னை தப்பாக நினைக்காதீங்க” என விளக்கம் சொன்னான்.

சாரதா பரணிக்கு அழைத்து பேச.. பரணியோ அனுப்பாதே என்றான். சாரதாவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை. பரணியோ ‘உன் மாமியாரும் கூப்பிட்டு சொல்லலை.. பிள்ளைகளின் அப்பானும் பார்க்கனும்ன்னு சொல்லலை.. எதுக்கு இப்போது பசங்க அங்கே போகனும் யோசிச்சி பாரு’ என நியாயஸ்தன் விவாதம் வைத்தான்.

ஆனால், எப்போதும் உறவுகளுக்குள் நியாயம் செல்லாது. மகனிடம் பேரன்களை காட்ட வேண்டும் என.. ஆசைபடுகிறார் கௌசல்யா. இங்கே நியாயம் தர்மம்.. சரி தவறு இதெல்லாம் பார்த்தால்.. அவரின் வயதுக்கும்.. உறவுக்கும்.. மரியாதை தரவில்லை என ஆகிடுமே.. சாரதாவிற்கு தர்மசங்கடம், இப்போது.

கார்த்திக் “அண்ணி, ஏன்.. என்ன” என வினவினான்.. சாரதா தயங்குவதை பார்த்து.

சாரதா, பரணி சொல்லுவதை சொன்னாள்.

கார்த்தி ஈகோ பார்க்காமல்.. பரணிக்கு அழைத்து பேசினான் “பரணி.. இதெல்லாம் அம்மா.. சம்பந்தப்பட்டது மட்டுமே. அவங்க பாவம். எதோ நல்லதாக நடந்திடும்ன்னு நம்பறாங்க. அப்படி ஏதும் நடக்காதுன்னு நம் எல்லோருக்கும் தெரியும். குழந்தைகளை நாம் ஏன், நம்ம.. சண்டைக்குள் இழுக்கனும்.” என்றான்.

பரணி “அதேதான் நானும் சொல்றேன்.. நான் யாரையும் சண்டைக்குள் கொண்டு வரலை கார்த்திக். உங்களுக்கு புரியாதா.. திரும்பவும் பசங்களுக்கு அப்பா ஞாபகம் வந்திட போகுது. உமேஷ் பாவம்” என்றான். அவனுக்கு, கௌசல்யா அத்தையின் மேல் கோவம்.. ஒருவார்த்தை மகனிடம் பேசவில்லை போல.. இப்போது அழைகிறார். மருமகளிடம் கூட சொல்லவில்லை.. என கோவம். அக்காவை அவர்கள் மதிக்கவில்லை என. ஆனால், கார்த்திக்கிடம் எப்படி அப்படி சொல்லுவது என.. கொஞ்சம் நிதர்சனத்தை பேசினான்.

கார்த்திக் “அதெல்லாம் வராது. பெரியவங்களையும் குழந்தைகளையும்.. இந்த சண்டைக்குள் கொண்டு வர வேண்டாம் பரணி. நானே கொண்டு வந்துவிட்டுடுவேன். நான் பார்த்துக்க மாட்டேனா” என்றான்.

அதன்பிறகு பரணி ஏதும் பேசவில்லை.

கார்த்திக் பிள்ளைகளை கூட்டி சென்றுவிட்டு, தந்தையிடம் விட்டான். பாவம்.. உமேஷ்க்கு அப்பாவை தெரிய.. குதித்துக் கொண்டு ஓடி விளையாடினான். இனியனுக்கு எதோ புரிய தொடங்கும் நிலை என்பதால்.. சற்று தாமதமாக தந்தையிடம் ஓட்டினான். கமல் வந்துவிட்டார்களே என பிள்ளைகளை பார்த்தான். அப்படிதான் கார்த்திக்கு தோன்றியது. இரவில், தூங்கும் பிள்ளைகளை தூக்கி வந்து வீட்டில் விட்டு சென்றான்.. “அண்ணி, பரணிக்கு சொல்லிடுங்க” என விடைபெற்றுக் கிளம்பினான், கார்த்திக்.

!@@!@!@!@!@!@!@!@!@!@

Advertisement