Advertisement

பரணிக்கு, இரவு முழுவதும் உறக்கம் சரியாக வரவில்லை.. தான் சொல்லுவது அவளுக்கு என்னவாக புரிந்திருக்கும் என கணிக்க முடியவில்லை.. தன்போல சரளமாக அவளை சட்டென கேள்வி கேட்டுவிட்டேன்.. அவளுக்கு என்நிலை என்ன புரியும் என யோசனையோடுதான் கடந்தான், அந்த இரவை.விடியலை தன் விழிப்பால் நகர்த்தினான் என கூட சொல்லலாம்.

காலையில் நேரமாக அலுவலகம் செல்லும் போதே, அவளை ஒரெட்டு பார்த்து விடலாம் என ஆசையாக தனது கூட்டை தானாகவே உடைத்துக் கொண்டு.. தன்னவளை பார்க்கலாம் என ஏதேதோ காரணத்தை தனக்குள் எடுத்துக் கொண்டு, அவளை காணும் அவளில் அவர்கள் வீட்டிற்கு வந்தான் காலையிலேயே. 

ஆனால், சத்தியமாக கமல் அங்கே இருப்பார் என பரணி நினைத்துக்கூட பாரக்கவில்லை. பரணியின் மலர்ந்த புன்னகை முகம் அப்படியே கமலை கண்ட நொடி வாடி வதங்கி போனது.  எதோ காண கூடாதவனை கண்ட பாவனை முகத்தில்.

போர்ட்டிகோவில் அமர்ந்திருந்த தன் மாமா கமலநாதனை கடந்து உள்ளே சென்றான் பரணி.. ஏனோ திரும்பி பார்த்து ஒரு முகமன் கூறவும் மனதில்லை பரணிக்கு. நேராக உள்ளே சென்றான்.

ஹாலில் யாருமில்லை.. பரணி “அத்தை” என அழைத்தான்.

கார்த்திக் இப்போது சாமி அறையிலிருந்து வெளியே வந்தான். சற்று இயல்பைவிட குரல் தாழ்ந்து ஒலிக்க “வா பரணி” என்றான் கண்ணில் ஒளியில்லாமல்.

பரணி “ஒரு நல்ல விஷயம் சொல்லலாம்ன்னு வந்தேன். ஆனால்” என நிறுத்தி தன் நண்பனை பார்த்தான் பரணி.

கார்த்திக்கும் எதோ புரிய “வா உட்கார்” என சோபாவை நோக்கி சென்றனர். இருவரும் அமர்ந்தனர். கார்த்தியும் இயல்பான குரலில் கேட்கக் வேண்டும்  என எண்ணி “சொல்லு பரணி என்ன விஷயம்” என்றான்.

பரணி “ஒண்ணுமில்ல..” என சொல்லி தலை கோதிக் கொண்டவன். “எப்போ வந்தாங்க உங்க அண்ணன்” என்றான்.

கார்த்திக் “ம்.. காலையில்” என்றான்.

பரணி “சரி, நான் கிளம்பறேன் அப்புறம் போனில் கூப்பிடுறேன்” என எழுந்தான்.

கார்த்திக் “இரு பரணி.. என்னான்னு சொல்லு” என்றான்.

பரணி ஒரு நிமிடம் அப்படியே கார்த்திக்கை பார்த்தான் இமைக்காமல் பின் “இல்ல, அப்புறம் பேசறேன்” என்றவன் “வரேன்” என சொல்லி எங்கும் பார்வையை செலுத்தாமல் கிளம்பினான்.

கார்த்திக் எழுந்து வழியனுப்ப வந்தான்.. பரணியின் காரில் ஏறி செல்லுவது தெரிந்தது. அதை பார்த்ததும்தான் கார்த்திக்கு எதோ புதிதான கார் என புரிந்தது. சட்டென பரணியை அழைத்தான் கார்த்திக்.

பரணி அழைப்பை ஏற்று காதில் வைத்தான். கார்த்திக் “பரணி, கார் புது கார்தனே” என்றான். இப்போது குரல் இயல்பாக வந்திருந்தது.

பரணி “ம்..அதை சொல்லத்தான் வந்தேன்” என உற்சாகமே இல்லா குரலில் பதில் மொழிந்தான்.

கார்த்திக் “ஹேய்.. கங்கராட் பரணி.. எனக்கொரு டிரைவ் கொடுக்காமல் போற பாரு” என்றான்.

பரணி “ச்ச.. அதுக்குதான் எடுத்து வந்தேன்.. நீ ஆபீஸ் வா கார்த்திக்.. எனக்கு வீட்டுக்கு வர முடியாது” என்றான்.

கார்த்திக் “சரி ஈவ்னிங் வரேன் பேசலாம்” என்றான். இருவரும் மற்றதை பற்றி தவிர்த்து அழகாக விஷயத்தி மட்டும் பேசினர்.

பரணிக்கு என்ன இருந்தாலும் காயத்ரியை பார்க்க முடியாத வருத்தம் வந்தே சேர்ந்தது. அமைதியாக அலுவலகம் வந்து வேலையை கவனித்தான். 

இன்று மதியம் அக்கா வீட்டிற்கு செல்லவில்லை. சாரதா அழைத்து கேட்டவும்தான் “வெளியே வந்துட்டேன் அக்கா”  என்றான் முதலில். பின் பரணியே “அக்கா.. கமலநாதன் வந்திருக்கார் அவங்க வீட்டுக்கு.” என்றான்.

சாரதா இரண்டு நிமிட அமைதிக்கு பின் “என்னவாம்” என்றாள்.

பரணி “தெரியலை..” என தான் சென்ற காரணம் சொல்லி “அப்போ போன் போது பார்த்தேன்.. எந்த பீலிங்கும் இல்லாமல் அப்படியே ஹாயாக அமர்ந்து காபி குடிச்சிட்டு இருக்கார். நான் திரும்பியும் பார்க்கலை” என்றான் வெறுப்பான குரலில்.

சாரதா “அவர் வீடுடா.. நாம் என்ன செய்ய முடியும். நல்லவேளை, நான் இப்படி தனியா இருப்பது நல்லதுன்னு ஆகிடுச்சி பாரு” என்றாள்.

பரணி “அக்கா, அவரோட உன்னை சேர்த்துக் குழபிக்க இனி எதுவும் இல்லை. விட்டுடு. பசங்களை பார்க்கணும் பாச பயிர் வளர்க்கணும்ன்னு ஏதாவது அழைப்பு வந்தால்.. என்கிட்டே சொல்லாமல் போக கூடாது சொல்லிட்டேன்” என்றான் ஆர்டர் குரலில்.

சாரதா “அஹ.. இந்நேரம் கால் வந்திருக்கணும் அப்படி ஏதும் வரலையே.. பார்ப்போம்” என்றாள்.

பரணி “நான் உனக்கு அண்ணனாக பிறந்திருக்கலாம் அக்கா.. இந்த ஆளை நல்லா விசாரிச்சு அப்புறம்.. வேண்டாம்ன்னு அப்புவே சொல்லி இருப்பேன்” என்றான் சிறுவனாக.

சாரதாவிற்கு வெளியே சிரிப்பு.. உள்ளுக்குள் கலக்கம்.. “என்ன செய்ய முடியும். யாருக்காகவும் எதுவும் நிற்காது.. நீ வேலையை பாரு” என்றாள்.

!@!@!@!@!@!@!@!@!@

காயத்ரிக்கு, இரவிலிருந்து.. அவளுக்கு ஒன்றும் ஓடவில்லை ‘நான் என்ன செய்தேன்.. இவரை மாமான்னு கூப்பிடனுமா.. எல்லா நாளும் அப்படிதானே கூப்பிடுவேன். இவங்க கொஞ்சம் என்னை கன்சிடர் பண்றாங்களேன்னு கேட்டேன்.. எனக்கு நீ மரியாதை தரலேன்னு சொல்றமாதிரி நீ கூட மாமான்னு கூப்பிட்லேன்னு சொல்றாங்க. வேற எப்படி கூப்பிட்டேன் நேற்று..’ என யோசித்து அழுது தீர்த்து ஒருமணி நேரம் சென்று.. ‘நான் மரியாதையாதான் கூப்பிட்டேன். அவங்கதான் எல்லாம்.. புதுசா இந்த நேரத்தில் கால் பண்றீங்கலேன்னு கேட்டேன். உடனே நீ மாமா கூப்பிடலை.. மரியாதை கொடுக்கலைன்னு என்னை சொல்லிட்டாங்க’ என தீர்மானமாக, மனதில் ‘அவங்கதான் தவறு..’ என சொல்லி சமாதனம் செய்துக் கொண்டு உறங்கினாள்.

காலையில் தாமதமாகதான் எழுந்தாள். பொறுமையாக தனது வேலைகளை முடித்தாள். போனை ஜார்ஜில் இருந்து எடுத்து பார்த்தாள்.. நேற்று இரவு அழைப்பு வந்ததோடு சரி பரணியிடமிருந்து, அதன் பின் வேறு அழைப்புகளோ செய்திகளோ இல்லை. மனது சட்டென சோர்ந்து போனது, பெண்ணவளுக்கு.

சற்று நேரம் நேற்றைய அவனின் அழைப்பை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். பின் தன்னை தானே மீட்டுக் கொண்டாள்.. ‘எதுக்கு அவங்க கூப்பிடனும்’ என சொல்லிக் கொண்டே அமர்ந்திருந்தாள். மனம் எதையோ எதிர்பார்த்து அது நடக்காத ஏமாற்றம் அவளுள் நிரம்பி வழிந்தது.

மணி 11 நெருங்கியிருந்தது. கீழே இறங்கவில்லை பெண். இப்போதுதான் லேசாக பசிப்பது போலிருக்க ‘அம்மா ஏன் இன்னும் என்னை கூப்பிடலை’ என எண்ணிக் கொண்டே கீழே வந்தாள், காயத்ரி.

ஹால் தாண்டி டைனிங் அறையில் எதோ பேச்சு சத்தம்.. இந்த நேரத்தில் யார் என யோசித்துக் கொண்டே வேகமாக சென்றாள் காயத்ரி. அங்கே அண்ணனும் தன் அன்னையும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

காயத்ரி அப்படியே நின்றாள் ‘இதென்ன புதுசா.. வான்னு கூப்பிட்டாலே வரமாட்டாங்களே.. எதுக்கு வந்திருக்காங்க இந்த அண்ணா’ எண்ணிக் கொண்டாள்.

கமல் முதலில் கவனித்தான் தங்கையை “ஹாய் காயூ” என்றான்.

காயத்ரி பதிலே பேசாமல் தன் அன்னையை.. அவரின் முகம் பார்ப்பது போல வேகமாக சென்று முன்னே நின்றாள். கௌசல்யாவிற்கு பெண்ணின் பார்வை சங்கடத்தை கொடுத்தது. அன்னை அதை பெரிதாக எடுக்காமல், பெண்ணவளை அதட்ட தொடங்கினார் “என்ன இதுதான் நீ எழுந்து வருகிற நேரமா.. காலையில் அப்பா, காயூ எங்க.. என்ன டிப்பனு கேட்க்கிறாங்க. வயது பெண் எழுந்து சீக்கிரம் வர வேண்டாம். என்ன பழக்கம் இது. சாப்பிட கூட வரமாட்டியா கூப்பிடலைன்னா” என அதட்ட தொடங்கினார்.. சமாளிப்புக்காக.. பெண்ணிடம் கோவப்பட தொடங்கினார்.

காயத்ரி அன்னையை பார்க்காமல், அவரின் பேச்சை காதில் கூட வாங்காதவளாக.. ஹோட்பாக்கில் என்ன இருக்கிறது என திறந்து பார்த்தாள். சாம்பார் மட்டும் இருக்க.. பிரிட்ஜ் திறந்து மாவு எடுத்து தோசை வார்க்க சென்றாள் கிட்செனுக்கு.

அங்கே வேலை செய்பவர் “காயத்ரி, நான் ஊற்றி தரேன் நீ சாப்பிடு டா” என்றார் அக்கறையாக.

காயத்ரி “இல்ல ஆன்ட்டி.. நான் பார்த்துக்கிறேன்” என்றவள் தனக்கு தேவையானதை செய்துக் கொண்டு.. டேபிளில் அமர்ந்து உண்டாள்.

கமல் இரண்டாம் முறையும் தங்கையிடம் எதோ பேசினான் “காலேஜ் முடிஞ்சதுன்னு அம்மா சொன்னாங்க. போர்மிங் செய்றியாம். ம்.. சூப்பர்” என்றான் சிலாகிப்பான குரலில்.

காயத்ரி தன் அன்னையை முறைத்தாள். கௌசல்யா “ஏன் டி, என்ன இப்போ சொல்ல கூடாதா. நாளைக்கு கல்யாணம் ஆகும் போது இவன்தான் முன்ன நிக்கணும்” என்றார்.

காயத்ரி “அப்படின்னா… இவரை போலவே எனக்கும் மாப்பிள்ளை பார்க்க போற..” என்றாள் பார்வையில் பேச்சில் பாவனையில் எல்லாவற்றியிலும் கிண்டல் த்வனிக்க.

கௌசல்யா அனிச்சையாய் “அடி ராஸ்கல்..” என திட்ட தொடங்க.. மகன் எதிரில் இருக்கவும் ஏதும் பேச முடியாமல்.. பெண்ணின் முகத்தை கடிவது போல பார்த்தார்.

கமல் “ம்.. அதெல்லாம் நாம் எப்படி முடிவு செய்ய முடியும். வாழும் போதுதான் உனக்கு புரியும்” என்றான் கொஞ்சம் சலிப்பான குரலில். பின் அன்னையிடம் திரும்பி “ஏன் ம்மா.. உண்மைதானே” என்றான்.

கௌசல்யா தலையை உருட்டினார்.

காயத்ரி உண்டு முடித்து எழுந்துக் கொண்டாள். அடுத்து இவர்களை பார்க்கவேயில்லை. வெளியே கார் இருக்கிறதா என் பார்த்தாள்.. “ம்மா.. நான் ஷ்ரவன்’னை பர்ர்க்க போயிட்டு வரேன்” என சொல்லிக் கொண்டு கிளம்பினாள். கார்த்திக்கின் மகன்தான் ஷ்ரவன்.

கார்த்திக், இரவு வேலை முடித்துக் கொண்டு பரணியை அழைத்து ‘அலுவலகத்தில் இருக்கிறனா’ என கேட்டுக் கொண்டு பரணியை அலுவலகத்தில் சென்று பார்த்தான்.

பரணி கார்த்திக் இருவரும் நல்ல உறவுகள்.. நண்பர்கள்.. மாமன் மச்சான்கள்.. இப்படி எத்தனை அனுசரணையான உறவின் பெயர்கள் இருக்குமோ அத்தனை பெயர்களும் அவர்களுக்கு பொருந்தும். அத்தனை பிடிப்பு அவர்களிடம். கடகடவென பேசிக் கொண்டதில்லை. இதை நீ செய்! அதை நான் செய்கிறேன்! என கலந்துக் கொள்வது கூட எப்போதாவதுதான். ஆனால், ஒத்து போகிடுவர். அவன் வருவதற்கு டிக்கெட் போட்டான்.. நான் இங்கிருந்து போவதற்கு டிக்கெட் போடுகிறேன்.. என தாங்களாகவே உணர்ந்து.. பேசிக் கொள்ளாமல்.. உணர்ந்து வேலைகளை செய்திடுவார். 

அதனாலோ என்னமோ கார்த்திக் ஈகோ பார்க்காமல்.. இப்போது அலுவலகம் வந்தான். பரணி அவன் போன் செய்ததுமே வேலைகளை ஒதுக்கி வைத்து காத்திருந்தான். கார்த்திக் வந்ததும் பார்க்கிங் வந்து சாவியை அவனிடம் கொடுத்துவிட்டான், பரணி.

கார்த்திக் வண்டி எடுக்க.. பரணி அமர்ந்துக் கொண்டான். வண்டி அரைமணி நேரம் டிராபிக்கில் நின்று நின்று வந்தது. பரணி காரின்  ப்யூசர்ஸ் பற்றி சொல்லிக் கொண்டே வந்தான். கார்த்தியும் ஏதேதோ கேட்டுக் கொண்டே வந்தான்.

அதன்பின் ஹைவே.. அந்த வண்டியின் நிதான வேகமே 120.. இருவரும் பேசிக் கொண்டே பாதி அவினாசி வந்து சேர்ந்திருந்தனர். அப்படியே ஹோட்டலில் நிறுத்தி உண்பதற்கு அமர்ந்தனர். கார்த்திக் இப்போதுதான் தன் அண்ணன் பற்றி பேசத் தொடங்கினான். 

கார்த்திக் “எதுக்கு வந்திருக்கார்னு தெரியலை. காலையில் நான் எழும் போது உட்கார்ந்திருந்தார். அம்மாவிடம் கேட்டேன். இது அவன் வீடும் டா.. வர கூடாதா என என்னிடம் முறைக்கிறார்கள்.. என்னான்னு தெரியலை” என்றான் சங்கடமாக.

பரணி இப்போது நிமிர்ந்து பார்த்தான். கார்த்திக் இப்போது பரணியின் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திணறினான்.

இருவருக்கும் என்ன சொல்லுவது என தெரியவில்லை. எல்லோருக்கும் தெரியும். சாரதா இங்கேதான் இருக்கிறாள் என. சக்திவேல் குடும்பம் அவளை பார்த்துக் கொள்கிறது, பிறந்த வீடும் அவளை பார்க்கிறது.. என எல்லோருக்கும் தெரியும். கமல் இங்கே வருவதில்லை எதோ பிரச்சனை என சொந்தங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்படி இருக்க இவர் எதற்கு இங்கே வந்திருக்கிறார். என தோன்றியது இருவருக்கு, ஆக, அங்கே அவருக்கு எதோ பிரச்சனை. அதான் இங்கே வந்து நிற்கிறார் என இருவருக்கும்.. குடும்பத்தாருக்கும் கூட புரிந்துவிட்டது.

பரணி ஏதும் முயன்று கேட்டுக் கொள்ளவில்லை. கார்த்திக் தனக்கு ஏதும் தெரியாது என விஷயத்தை மட்டும் சொல்லி.. வேறு பேச தொடகிவிட்டான்.

இருவரும் கிளம்பினர். பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை இருவரும் கமல் பற்றி. பொதுவாக தொழில்.. அரசியல்.. ஷ்ரவன் என பேசி வீடு வந்து சேர்ந்தனர். பரணி, கார்த்தியை இறக்கிவிட்டு கிளம்பிவிட்டான்.

காயத்ரி இரவு உணவு உண்டுதான்.. தன் சின்ன அண்ணி வீட்டிலிருந்து வந்திருந்தாள். கார்த்திக் வரவும்.. தான் ஷ்ரவன் பற்றி கவனித்ததை பேச தொடங்கினாள். பின்தான் மேலே சென்றாள்.

சற்று நேரத்தில் பரணி அழைத்தான் காயத்ரியை. எடுப்பதா வேண்டாமா என பெரிய போராட்டம்தான் அவளுள். ஆனால், அவனின் நேற்றைய ரகசிய குரல்.. இன்னமும் அவளுள் கேட்டுக் கொண்டே இருக்க.. இரண்டாம் அழைப்பில் ஏற்றாள், பெண்.

அழைப்பை ஏற்று “ஹலோ” என சொல்லவில்லை பெண்.

பரணிதான் அவளின் ஹலோ கூட இல்லாத அமைதி கண்டு “ஹெலோ இருக்கீங்களா” என்றான் நிதான குரலில்.

காயத்ரி “ம்.. சொல்லுங்க” என்றாள் அவளும் அமைதியாக.

பரணி “நேற்று எதோ கோவம் போல போனை வைச்சிட்டீங்க சொல்லாமல் கொள்ளாமல்” என்றான் கேள்வி பதமாக இல்லாமல்.. பேச்சு வழக்கில் சொல்லி நிறுத்தினான்.

காயத்ரிக்கு இந்த அதிராத குரல் பிடித்தது.. நேற்று இழைந்த குரல் போல.. எதோ செய்யவில்லை என்றாலும்.. இந்த மென்மை பிடித்தது அவளுக்கு  ‘எப்படி போசுவாங்க தோரணையாக.. இதென்ன இவ்ளோ சாஃப்ட்டா கேட்க்கிறாங்க.. என்னமோ இருக்கில்ல..’ என எண்ணிக் கொண்டாள், இன்பமாக.

பரணி மீண்டும் “என்னாச்சுங்க” என்றான் அழ்ந்த குரலில்.

காயத்ரிக்கு முத்து முத்தாக மேலுதடு வேர்க்க தொடங்கியது “இல்ல.. நீங்க இப்போவெல்லாம் AC வேலை பார்க்குறீங்களோ” என்றாள்.

பரணிக்கு அவள்.. தான் நிதனமாக பேசுவதை சொல்லுகிறாள் என புரிகிறது. எனவே “எப்போதுமே ACதாங்க” என்றான் இயல்பான குரலில்.

காயத்ரி “ஓ.. அப்படின்னா கண்டிப்பா போதிமரத்துக்கு மரீட்டீங்களோ” என்றாள்.

பரணி “ம்.. போதிமரம்.. போதைமரம்.. அப்படிதான் தோணுது” என்றான்.

காயத்ரி ஏதும் பேசவில்லை.

பரணி “காலையில் உங்க வீட்டுக்கு வந்திருந்தேன்” என்றான், இயல்பாகிக் கொண்டு.

காயத்ரி “ஓகே..” என்றாள்.

பரணிக்கு என்னமோ போலானது. ‘உங்களை பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லணும் போல்தான் இருந்தது.. அப்போதாவது அவள் அதிர்வாள் என எண்ணினான். ஆனால், சொல்ல முடியவில்லை அவனால். அமைதியானான்.

பரணியே “உங்க அண்ணனை பார்க்க வந்தேன்” என்றான்.

காயத்ரி “கமல் அண்ணாவையா.. அவர் வருவது உங்களுக்கு தெரியுமா” என்றாள்.

பரணி “அவரை இல்லைங்க.. கார்த்திக்கை. அவர போய்.. அவர் ஏன்தான் இப்போ வந்தாரோ. எதுக்கு வந்திருக்கார்ங்க. அக்கா இப்போதான் கொஞ்சம்” என கடகடவென பேசி கொண்டே வந்தவன், எதையோ உணர்த்தார் போல.. நிறுத்தக் கொண்டான் சட்டென.

பரணியே “சாரி.. டிஸ்ட்ரப் செய்துட்டேன். நான் அப்புறம் பேசுறேன்” என்றான்.

காயத்ரிக்கு ஏமாற்றமே. ஆனாலும், அண்ணன் பற்றி தான் என்ன பேசுவது.. பேசாமல் இருப்பது என தோன்ற “சரிங்க.. பை..” என சொல்லி அழைப்பை துண்டித்தாள்.

பரணிக்கு காயத்ரிக்கு என இருவருக்குமே மனம் கனத்து போனது. சற்று இயல்பை கடந்து இருவரும் பேசலாம் என்றால், இயல்பு போல.. கமல் பேச்சில் வந்துவிடுகிறான். இருவருக்கும் என்னமோ நிறையாத உணர்வு.. என்ன ஆகும்.. எதுக்கு இந்த கமல் வந்தான் என சட்டென யோசனை வந்துவிட்டது இருவருக்கும்.. அடுத்து என.. யோசிக்கவே பயமாக இருந்தது.  போனை கையில் வைத்துக் கொண்டு இருவரும்.. நெஞ்சில் அழுத்திக் கொண்டனர். 

“நீதானே.. நீதானே.. 

என் நெஞ்சை தட்டும் சத்தம்..

அழகாய் உடைந்தேன்.. 

நீயே அர்த்தம்..”

அடுத்த இரண்டு நாளில்.. கார்த்திக் பரணிக்கு அழைத்தான் ஒரு மதிய பொழுதில்.

கார்த்திக் “அண்ணன்.. டிவோர்ஸ் பண்ண போறாங்களாம்.” என்றான்.

பரணிக்கு ஏதும் பெரிதாக தோன்றவில்லை. 

கார்த்திக் தொடர்ந்தான்.. “அண்ணா.. கமல் அண்ணா.. அப்படியே சொல்லி பழகிடுச்சி” என்றான் சங்கடமாக.

பரணி அமைதியாக இருந்தான். கார்த்திக் “ஜீவனாம்சம் கொடுக்கணுமாம். சொத்துகளை பிரிக்க சொல்றார்” என்றான்.

பரணி “ம்.. என்னமோ பண்ணுங்க எங்க அக்காவை விட்டுடுங்க” என்றான் நக்கலாக. 

கார்த்திக் சிரித்தான்.  “அப்படி எப்படி முடியும். சரி, அப்புறம் பேசறேன்” என்றான் இவருவரும் போனை வைத்துவிட்டனர்.

Advertisement