சாரதாதேவி, தணிகாசலம் வள்ளியம்மாள் தம்பதியின் மூத்த பெண். அவளிற்கு அடுத்து பரணீஷ்வரன் மெக்கானிக்கல் இஞ்சினியரிங்  இறுதி வருடம். தணிகாசலம் முன்னால் MP. அவர்களின் தொழில் சாரதா மோட்டார்ஸ் என்பது, அதாவது.. பலதரப்பட்ட மோட்டார்ஸ் தயாரிக்கும் நிறுவனம். ஏற்றுமதியும் செய்கிறார்கள். அதனால், அரசியலில் இப்போது தணிகாசலம் அதிகமாக ஈடுபாடு காட்டுவதில்லை.. தொழிலை பற்றி மட்டுமே கவனம் அவருக்கு இப்போது.

இப்போது, விருந்தினர்கள் அதிகமில்லை.. கமலின் நண்பர்கள்.. மற்றும் நெருங்கிய உறவுகள் என சிலர்தான். எனவே, உணவு முடித்து.. பெற்றோர் சாரதா கமல் இருவரையும் உள்ளே அழைத்து.. சுவாமியை நமஸ்கரிக்க சொல்லினர். கமல் தூரமாக நின்றுக் கொண்டான். சாரதா, பூஜை அறையில் விளக்கேற்றி.. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி என.. எல்லாம் செய்துக் கொண்டிருந்தாள். கமல் மேலே தனதறைக்கு சென்றுவிட்டான் நிற்காமல். பெரியவர்கள் நால்வரும் அப்படியே பார்த்துவிட்டனர் அனிச்சையாக கமலநாதனை.

சக்திவேல், கமலின் தந்தைக்கும் சங்கடமே.. சட்டென அந்த இடம் அமைதியானது.  ஆசீர்வாதம் வாங்கமல் மகன் மதிக்காமல் சென்றதாக ஒரு எண்ணம்.. எதையும் காட்ட முடியவில்லை அவருக்கும். ஒரு சின்ன அமைதி அங்கே.

தணிகாசலம், சாரதாவின் தந்தை.. “மாப்பிள்ளைக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை, அதான்.” என அங்கிருந்த தன் அக்கா மாமா.. பங்காளி என அனைவருக்கும் பொதுவாக சொல்லினார். என்ன முயன்றும் குரலில் நூலிழை வருத்தம் இருந்தே இருந்தது, அவருக்கு.

சம்பந்திகள்.. இருவரும் சொந்தம் உருவாவதற்கு முன்பே.. அறிமுகமானவர்கள். ம்.. சாரதா மோட்டார்ஸ் என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை.. அதே போல, சக்திவேல் பஸ் சர்வீஸ்.. என்பதும் எல்லோரும் அறிந்ததுதான். அத்தோடு, ஒரே கட்சி ஆட்கள்.. எப்படி என்றாலும் கூட்டம்.. தேர்தல்.. ஆதரவு.. என அங்கே இங்கே பார்க்கவும் பேசவும் நேரிட்டிருக்கிறது. எனவே, அறிமுகம் உண்டு. குடும்ப பெருமை தெரிந்தவர்கள்.. பெண்ணிற்கு வரண் பார்க்கும் போது.. சொந்தங்கள் சக்திவேல் மகன் பற்றி சொல்ல.. மணமக்களின் ஜாதகம் பொருந்தி வர.. சந்தோஷமாக இணைந்துக் கொண்டனர் சம்பந்திகளாக. 

ஒரு சின்ன நெருடல் என்றால், கமலநாதனின் இந்த தன்னிச்சை  கொள்கை. ம்.. பெண்பார்க்கும் வைபவத்திற்கு ஒத்துக் கொள்ளவில்லை கமலநாதன். எனக்காக எதுக்கு அத்தனை நபரின் வேலையையும் கெடுக்க வேண்டும் என்றான்.. ஸ்கைப்பில்தான் பெண் பார்ப்பேன்.. லீவ் இல்லை.. எதுக்கு அலைச்சல் என்றான். அத்தோடு பெண்ணுக்கு,  புடவை அலங்காரம் என எதுவும் வேண்டாம்.. இயல்பாக வீட்டில் இருப்பது போல இருந்தால் போதும் என  மாப்பிள்ளை சொல்லிவிட்டார்.. அதனால் பெண்ணை சுடிதாரில் இருக்க சொல்லுங்க.. என சாரதா வீட்டிற்கு தகவல் வந்தது.

இதெல்லாம் சாரதாவின் காதில் கேட்க்க கேட்க்க அத்தனை சந்தோஷம் அவளுக்கு.. தன்னை இயல்பாக ஏற்பவன்.. சக மனுஷியாக.. மதிக்கும் ஒருவன் கணவனாக வருவது என்னமோ சந்தோஷமாக இருந்தது பெண்ணுக்கு. எனவே, கமலின் ஆர்டர்களை ரசித்துக் கொண்டே வீட்டில் ஆனந்தமாக வளையவந்தால் சாரதா.

தணிகாசலம் தயங்கினார்.. முதலில். சக்திவேல் “அவனுக்கு லீவ் இருக்காதுங்க.. சினீயர் டெக்னிஷியன், அதான் இப்படி சொல்றான். போட்டோ அனுப்பிட்டோம்.. அவனுக்கு பெண்ணை பிடித்திருக்கு. இதெல்லாம் பார்மால்டீஸ்தானே.. எதுக்கு அலையனும்ன்னு நினைக்கிறான். அவன் எல்லோரையும் தனி மனிதராக பார்ப்பான். எல்லோரையும் சமமாக நடத்துவான் சம்பந்தி. குறையில்லாத மனசுக்காரன்.. யாரிடமும் குறையை தேடமாட்டான்.. கல்யாணம் வேண்டாம்ன்னு சொல்லிட்டிருந்தான். உங்கள் பெண்ணை பார்த்ததும் தான் ஒத்துக் கொண்டான்.” என்றார்.

தணிகாசலம் “இல்லங்க.. சொந்தமெல்லாம் மாப்பிள்ளையை நேரில் பார்க்கணும் சொல்றாங்க..” என்றார்.

சக்திவேல் “நிச்சயத்தை பெருசா நடத்திடுவோம்.. இது பூ வச்சிட்டு போற விசேஷம் தானுங்க சம்பந்தி.. பெரியவங்கதானே முதலில் செய்துக்குவோம்..” என்றார்.

தணிகாசலம் வீட்டில் அதிர்ச்சிதான் முதலில் ‘யோசிக்கலாமோ.. நேரில் வந்து பேசி கண்ணில் பார்த்தால்தானே சிலதை புரிந்துக் கொள்ள முடியும்’ என வள்ளி தணிகாசலத்தின் மனைவி.. சாராதாவின் அன்னை தன் கணவரிடம் அப்போதே முறையிட்டார்.

ஆனால், பத்து பொருத்தம் பொருந்தி இருக்கு வள்ளி என்றார் தணிகாசலம். நிச்சயம் பெருசா செய்திடலாம். நீ கவலைபடாதே என்றார்.

சொன்னது போலவே பெண்பார்க்கும் நிகழ்வில் பெரியவர்கள் எல்லோரும் சந்தித்துக் கொள்ள.. ஸ்கைப்பில் வந்தான் கமலநாதன். எல்லோரிடமும் சகஜமாக பேசினான். பெரியவர்கள் எதிரிலேயே சாரதாவிடம் “என்னை பிடித்திருக்கா.. சொல்லு” என பளிச்சென கேட்டான்.

சாரதா சிவந்து.. அந்த திரையை பார்க்க முடியாமல் வெட்கி நின்றாலும், விடவில்லை.. அவள் வாயிலிருந்து “பிடித்திருக்குங்க” என சொல்லும் வரை விடவில்லை கமலநாதன். எல்லோரின் எதிரிலும் அவளை பேச வைத்தான். பின் தனியாக பேச வேண்டும் என்றான் கமலநாதன்.

பரணிதரன்.. அந்த ஸ்கைப் காலை.. லாப்ப்பில் தனியாக சாரதாவின் அறையில் கனெக்ட் செய்து கொடுத்து வந்தான்.

கமலநாதன், சாரதாவிடம் “சாரதா..ம்.. என்ன பேர் இது. எந்த ஊர் சாமி இது” என ஆரம்பித்தான்.

சாரதா விளக்கம் கொடுத்தாள். கேட்டுக் கொண்டான் பொறுமையாக/

பின் “என்னை பத்தி சொல்லட்டுமா  ம்..  வாங்க போங்கன்னு மரியாதை எல்லாம் சரி. கல்யாணம் முடிந்ததும் என்னை பேர் சொல்லியே கூப்பிடனும்.. எனக்கு அப்படிதான் விருப்பம். எனக்கு இந்த திருமணம் எளிமையாக ரிஜிஸ்டர் ஆபீசில் நடந்தால் போது, உன் விருப்பம் எப்படி நடக்கணுமோ அப்படி சொல்லு.. நடத்திக்கலாம். அப்பா அம்மா எல்லாம் பெருசா பண்ணுவாங்க. எனக்கு அதிலெல்லாம் விருப்பமில்ல. சரி, நான் ரொம்ப எளிமையானவன். எனக்கு பிடித்ததை சொல்லிடுவேன். அதேபோல.. உனக்கு என்ன பிடிக்குமோ அதை சொல்லலாம் செய்யலாம்.. உடை வேலை என எல்லாம் உன் விருப்பம்தான். நீ வேலைக்கு போ.. அப்போதான் வெளியுலகம் தெரியும். எனக்கு ஒன்னும் பிரச்சனையில்ல..” என தெளிவாக சொன்னான்.

சாரதாவிற்கு எதோ கனவு காண்பது போல இருந்தது. அந்த கணினி திரையில் தெரியும் கமலின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.. டார்க் ப்ளூ நிற ஷர்ட்.. கண்ணில் கண்ணாடி.. உச்சரிப்பிலோ.. கருத்தை சொல்லுவதிலோ தயக்கமோ அசட்டு தனமோ இல்லாதவனை பார்க்க ஹீரோ பீல். நான் கனவிலும் காணாத இளவரசன் என தோன்ற.. பூரிப்போடு தன்னவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

கமல் “ஹேய்.. சாரதா” என இரண்டு முறை அவளை அழைத்தபின்தான்.. அதிர்ந்து விழித்தாள் பெண்.

கமல் “என்ன ஓகே வா, நான். இங்க வேலை தேடவா உனக்கு” என்றான் ஆளுமையான குரலில்.

சாரதா “ஓகேங்க” என்றாள்.

கமல் “ஹேய்.. இவ்வளோ சொல்லி.. என்ன யூஸ்.. ஓகே கமல்’ன்னு சொல்ல வேண்டாமா நீ” என சலித்த ஆசையான குரலில் கேட்டான் கண்ணாளன்.

சாரதா வெட்கமாக புன்னகைத்தாள்.

கமல் விடவில்லை “என் பேர் சொல்லு.. டைம் ஆச்சு.. ம்..” என ஊக்கினான்.

தயங்கினாலும் சாரதா “ஓகே கமல்” என்றாள் மென்குரலில்.

ஆக, சின்ன சின்னதாக கமல் கலாட்டா செய்தாலும்.. பெற்றோர் சாரதா என பல இடங்களில் விட்டுகொடுத்து போனான். அதன்படியே அமைதியாக திருமணம் நடந்தது. இப்போது சாரதாவை.. அவனின் அறையில் விட்டு வந்தனர் உறவு பெண்கள்.

உறவுகளும் சாரதாவின் பெற்றோரும் விடைபெற்று கிளம்பினார்கள் தங்கள் இருப்பிடத்திற்கு.