நீ என்னுள் யாரடா!..

1

திருமணம் மண்டபம் வாயிலில் பெரிய கட்டவுட் “சாரதாதேவி B.Tech Weds கமலநாதன் M.E.” என அழகாக அலங்காரமாக மின்னியது. 

மண்டபத்தின் உள்ளே வர, வரவேற்பு பெண்கள்.. விருந்தினரை வரவேற்றபடி நின்றனர். அடுத்து நாதஸ்வரம் மேளம் தாளம் என மங்கள இசை.. அந்த இடத்தை நிறைத்திருந்தது. எங்கும் பூக்களின் தோரணம்.. மங்கையரின் புன்னகை முகங்கள்.. குழந்தைகளின் விளையாட்டு சப்தம்.. மேடையில் ப்ரோகிதரின் மந்திர சப்தம்.. என அந்த இடம் திருமணத்திற்கான அத்தனை அம்சத்தையும் கொண்டு இருந்தது. 

மாப்பிள்ளை கமலநாதன் முகம் எதோ சிறு ஒவ்வாமையை காட்டினாலும் இப்போது சாரதா மல்லிகை பூ மாலை சூடி.. வெட்கம் தாங்கி இமை தாழ்த்தி.. அடிமேல் அடி வைத்து தன்னை நோக்கி வருவதை பார்த்ததும்.. அனிச்சையாய் புன்னகையை பூசிக் கொண்டான் கமல். ‘இதெல்லாம் ஜஸ்ட் கொஞ்ச நேரம்தான்..’ என தனக்குள் சொல்லிக் கொண்டவன்.. தன்னவளுக்காக கை நீட்டினான், ஆசையாக.

சுற்றி இருந்த சொந்தங்களின் முகங்களில்.. கமலின், இந்த செய்கை.. இதமான புன்னகையை வரவைக்க.. ஏதும் சொல்லாமல் அட்சதையை கையில் வைத்துக் கொண்டு இருவரையும் பூரிப்போடு பார்த்து நின்றனர்.

புரோகிதர் மணமக்கள் இருவரையும் அமர்த்தி.. ஒவ்வொன்றாக எல்லா சடங்குகளையும் ஆரம்பித்தார். அதில்தான் கமல்க்கு கொஞ்சம் ஒவ்வாமை. ம்.. இந்த சடங்கு, சம்ப்ரதாயம் என எதிலும் அவனுக்கு பிடிப்பு இல்லை. அதிலும் திருமணம் என்ற அமைப்பிலும் அவனுக்கு பெரிதாக பிடிப்பு இல்லை. ஆனால், ரத்தத்தில் ஊறிய விஷயம் என்பது போல.. இதை தடுத்து.. இடையிட்டு.. ‘இதெல்லாம் வேண்டாம்’ என சொல்லும் தைரியமும்.. நிதானமும் அவனுக்கு இல்லை. ம்.. 28 வயது. கெமிக்கல் இஞ்சினியர்ராக பணிபுரிகிறான். நல்ல நிரந்தர வேலை.. புனேவில். எனவே, திருமணம் முடிந்ததும்.. ஒரு பெரிய விடுதலை கிடைத்திடும். அதன்பிறகு.. இவளை என் விருப்பத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். ம்.. இன்னும் இரண்டு மணி நேரம் இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள  வேண்டும். என எண்ணிக் கொண்டே, தன் கைகுட்டையால்.. தன் நெற்றியை துடைத்துக் கொண்டான்.

ப்ரோகிதர் “கெட்டி மேளம்.. கெட்டி மேளம்” என தன் கைகளை உயர்த்தி.. மங்களநாண் எடுத்து கமலநாதன் கையில் கொடுக்க.. பெரியவர்கள் எல்லோரும் அட்சதை தூவ.. அழகாக கமல் சாரதா திருமணம் இனிதாக நடந்தது.

கமலநாதன், சக்திவேல் கௌசல்யா தம்பதியின் மூத்தமகன். அடுத்து கார்த்திகேயன் 24, தன் தந்தையோடு சேர்ந்து இப்போதுதான் தங்களின் ட்ரான்ஸ்போர்ட் பார்த்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறான். அடுத்து காயத்ரி இப்போதுதான் பதினோராம் வகுப்பு. 

மாலையில் மணமக்கள் சொந்தங்கள் புடைசூழ கமலநாதன் வீடு வந்தனர். முக்கிய சொந்தங்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர் வீட்டில். இரவு உணவிற்காக ஏற்பாடுகள் வீட்டின் முன்பகுதியில் அட்டானஸ் போட்டு.. மின் விளக்குள் ஒளிர.. பஃப்வே முறையில் நடந்துக் கொண்டிருந்தது.

காயத்ரி தன் புது அண்ணியோடு பேசியபடியே.. ஸ்வீட் உண்டுக் கொண்டிருந்தாள். சாரதா, ஒப்பணைகள் அதிகமில்லாமல்.. ஒரு டிஷூ புடவை உடுத்திக் கொண்டு.. கண்கள் மின்ன.. கணவனின் ரகசிய பார்வையை உணர்ந்துக் கொண்டே, தன் நாத்தனாரோடு பேசிக் கொண்டிருந்தாள்.

கமலநாதனின் ஏற்பாடு இந்த பார்டி போன்ற அமைப்பு. ம்.. சக்திவேல் இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளவேயில்லை ‘கல்யாணம் முடிந்து, சாந்திமூர்த்தம் இருக்கு.. கோவிலுக்கு போனாமா.. அமைதியாக வீட்டில் உண்டு, சாந்திமுகூர்த்தத்திற்கு மணமக்களை அனுப்பிவிட்டு, உறவுகளுக்கு விடைகொடுத்து.. அமைதியாக இல்லாமல். இதென்ன ஆர்பாட்டமாக டின்னராம்.. அரட்டையாம்.. என, அப்போதே.. கடந்த எட்டு வருடத்திற்கு முன்பே இப்படி புலம்பினார், சக்திவேல். ஆனாலும், மகனின் விருப்பத்தை ஏற்றார். விருந்தை நடத்தினார்.

கமலநாதன் தன் மச்சானிடம் தன் அறையின் சாவியை கொடுத்தான் “டேய்.. பரணி, ஹரிஷூம் நீயும் மட்டும் போங்க.. ம்.. ரூமின் வெளியே.. டெக்ரெட் ஐட்டம்ஸ் இருக்கு.. சீக்கிரம் முடிச்சிட்டு வந்திடுங்க. அங்கிருக்கும் எதையும் நோண்ட கூடாது.. ஹரிஷீ அங்க வெயிட் பன்றான் பாரு..” என.. மேலே விரல் நீட்டில் சொல்லி, மேலே அனுப்பி வைத்தான் தனதறைக்கு.

ஹரீஷ், கமலநாதனின் அத்தை மகன். பரணி, கமலநாதனின் மச்சான். இரு வாலிபர்களும் மணமக்களுக்கான அறையை தயார் செய்ய சென்றனர்.

கீழே அந்த விருந்து ஆனந்தமாக சென்றுக் கொண்டிருந்தது. சற்று நேரத்தில் யாரின் கவனத்தையும் கவராமல் சாராதவை பெரியவர்கள் அழைத்து.. தயாராக சொல்லினர்.

அப்போது, சாரதா தன் பெர்ப்யூம் மறந்து வைத்துவிட.. கயாத்ரியை அழைத்தாள் “காயூ, எனக்கு பர்ப்யூம் ஏதாவது கொடு..” என்றாள்.

காயத்ரி, அதை எடுக்க மேலே தனதறைக்கு சென்றாள். தன் அறையை தாண்டி இருந்த, தன் பெரியண்ணனின் அறை திருந்திருக்கவும்.. எட்டி பார்த்தாள் உள்ளே. 

அவளின் கண்கள் விரிந்தது ஆச்சர்யத்தில்.. ஹரீஷ் முதலில் பெட்டில் அமர்ந்து எதோ செய்துக் கொண்டிருப்பது தெரிய.. டீனேஜ் பெண்.. முதலிரவு அறையை காணும் ஆவலில், உள்ளே நுழைந்தாள் காயத்ரி. அந்த அறையில் நுழைந்ததும் மலர்களின் வாசம்.. இன்னது என சரியாக தெரியவில்லை அவளுக்கு.. மல்லிகை லாவண்டர்.. இன்னும் எதோ.. புதிய மணம் அவளின் நாசியை தொட.. “டேய் ஹரீஷ், என்ன டா பண்ற..” என்றாள் கள்ளமில்லாமல் அதிசயத்தை கண்ட குரலில்.

இப்போது இரு ஆண்களும் பரணியும் ஹரிஷூம் ஒருசேர அதிர்ந்து திரும்ப, காயத்ரி.. இவர்கள்மேல் சட்டென ஒரு பார்வையை வீசிவிட்டு.. அவர்களை பொருட்படுத்தாமல், முகமெல்லாம் எதோ அதிசயத்தை கண்டுவிட்ட பாவனையில் கண்கள் விரிய.. உதடுகள் கள்ள புன்னகையை சிந்தாமல் சிந்த.. ரசனையாக அந்த அறையை பார்வையிட்டுக் கொண்டிருந்தாள், பெண்.

பரணிக்கு, ‘சின்ன பொண்ணு எதுக்கு இங்க வருது. மாமா யாரையும் விட கூடாதுன்னு சொன்னார்.. திட்ட போறார்’ என எண்ணிக் கொண்டே அவளை ஆராய்ச்சியாகவும்.. சங்கடமாகவும்  பார்த்திருந்தான்.

ஹரீஷ், கையில் ரோஜா இதழ்களை எடுத்துக் கொண்டே.. பெட்டிலிருந்து கீழே இறங்கி.. “ஹேய் காயூ.. நீ எங்க இங்க வந்த.. கீழ போ.. மாமா திட்டுவார்.. போ” என அவளிடம் அதட்டினான்.

இப்போது மீண்டும் காயத்ரி “டேய்.. என்ன டா.. இப்படிதான் இருக்குமா.. பப்ர்ஸ்ட் நைட் ரூம்..” என விரிந்த புன்னையோடு கேட்டுக் கொண்டே கண்ணில் மின்னிய குறுகுறுப்போடும்.. தேடுதலோடும்.. பார்வையை சுழற்றினாள் பெண். 

ஹரீஷ் புன்னகையோடு “ஹேய்.. போ.. காயத்ரி, கார்த்தியோ.. மாமாவோ பார்த்துட்டா திட்டுவாங்க.. நீ கீழ போ., சின்ன பெண்ணு நீ எதுக்கு எங்க வந்த” என அவளை துரத்துவதிலேயே இருந்தான்.

என்னமோ பரணிக்கும் ஹரீஷ் சொல்லுவதுதான் மனதில் ஓடியது.. அத்தோடு, சின்ன பெண் இப்போதுதான் பள்ளி படிப்பே, அவள் இப்படி டேய் என அழைப்பதும் பிடிக்கவில்லை.. அதுவும் ஹரீஷ் கல்லூரி முடித்துவிட்டான்.. எப்படி இப்படி அழைக்கலாம் என தோன்றியது. எனவே, அதை பார்வையில் தாங்கி அவளை பார்த்தான்.

காயத்ரி, இருவரின் முகத்தையும் பார்க்கவேயில்லையே.. “டேய் இருடா.. இதென்ன கேண்டல்ஸ்சா.. ஓ.. ப்லூன்ஸ் அஹ..” என ஒவ்வொன்றாக எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.

இப்போது பரணிக்கு பொறுமை பறந்தது.. அவனுக்கு மரியாதை மிகவும் முக்கியம்.. சரி, மாமாவின் தங்கை என இத்தனை நேரம் அமைதியாக இருந்தவன், ஹரீஷ் பேச்சை கேட்க்காமல்.. சொல்ல சொல்ல வெளியே செல்லாமல் எல்லாவற்றையும் ஆராயவும்.. பொறுமை பறக்க.. அதட்டலாக  “காயத்ரி, கீழ போங்க ப்ளீஸ்.. ஸ்கூல் கேர்ள்ஸ்க்கு இங்க என்ன வேலை.. போங்க” என்றான் அதட்டலாக.

இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த பாவை.. இப்போதுதான் இமை தாழ்த்தி.. யாரென பார்க்க.. தன் அண்ணியின் தம்பி.. பரணியின் பேச்சில் ஒரு பயம் வந்துவிட்டது அவளுள்.. ஆனாலும், ‘இவங்களுக்கு என்ன இப்போ’ என தோன்ற “ஓ.. இதை பார்க்க கூட சென்சாரா” என துடுக்காக கேட்டவள் மீண்டும் எதையோ ஆராயாத் தொடங்கினாள், அவனை பொருட்படுத்தாமல்.

ஹரீஷ்க்கு, சின்ன புன்னகைதான் வந்தது அவளின் பேச்சில் ஆனாலும் “காயூ.. கீழ போ, சென்சார்தான்” என பெண்ணவளின் கைபிடித்து இழுத்துக் கொண்டு, கதவை நோக்கி  போனான்.

காயத்ரி “இரு.. இருடா.. அந்த க்ளாஸ் எதுக்கு வைச்சிருக்கீங்க..” என தன் அத்தானை தாண்டிக் கொண்டு உள்ளே வந்தாள்.

பரணி சட்டென “மரியாதையே இல்லையாங்க.. அவர் உங்களைவிட எவ்வளோ பெரியவர்..” என கூறி முன்னே வந்தான்.

காயத்ரி இப்போது பெருமூச்சு விட்டு, ஹரிஷை நிமிர்ந்து பார்த்தாள்.. பின் பரணியிடம் திரும்பி “என்ன பிரச்சனை.. அவனுக்கு மரியாதையெல்லாம் கொடுக்க முடியாது.” என்றவள் தன் அத்தானை பார்த்து “ஹரி டா.. சூப்பர் டெக்ரேஷன்டா..” என சொல்லியவள்.. வெளியே வந்து பரணியை பார்த்து “பை மாமாங்க..” என மரியாதையாக சொல்லி பரணியை சீண்டினாள்.

பின்  பார்வையால் மீண்டும் ஒருமுறை அந்த அறையை ரசித்துவிட்டு.. தன் அத்தானை பார்த்து கைகளால் ‘பை’ என சைகைய செய்து.. கண்சிமிட்டி அந்த அறையின் கதவை சாற்றி சென்றாள்.

ஹரீஷ், அப்படியே நெற்றி சுருக்கி சென்றவளையே பார்த்துக் கொண்டிருந்த பரணியின் தோளில் தட்டிய ஹரீஷ் “ஹேய் மேன்.. கூல். அவ குழந்தை டா, நாங்க அவகிட்ட இதையெல்லாம் எதிர்பார்க்க மாட்டோம்.. ம்.. வா.. சீக்கிரம்” என மீண்டும் தனது வேலையை தொடர்ந்தான்.

பரணிக்கு, அவளின் சொல்பேச்சு கேளாமையும்.. பள்ளி செல்லும் பெண்.. இது முதலிரவு அறை என தெரிந்தும் உள்ளே வந்தது.. மரியாதை இல்லாமல் பேசியது..  என ஏதும் பிடிக்கவில்லை. என்ன செய்ய முடியும்.. தன் மாமாவின் தங்கை என அமைதியாக நின்றான். ஆனாலும், பிடித்தமின்னமையை அவனின் முகம் காட்டிவிட்டது. ஹரிஷின் பேச்சை கேட்டதும், தன் முகத்தை சீராக்கிக் கொண்டான் பரணிஷ்வரன்.

அடுத்த பதினைந்து நிமிடத்தில் வேலை முடித்து.. அந்த அறையின் சாவியை, கமலநாதன் கையில் கொடுத்தனர் இரு வாலிபர்களும்.