Advertisement

“ஏன் மத்தியானம் உம்முன்னு ஆகிட்டீங்க, உங்களை ரொம்ப படுத்தறனோ?”  
“சே, சே, இல்லடி!”
“இல்லை வெளிநாட்டுல வேலைல இருந்தீங்க, என்னையும் கூப்பிட்டீங்க. முதல்ல முடியாதுன்னு மொத்தமா பிரிஞ்சேன். திரும்பவும் அந்த வேலைக்கே போனீங்க, பின்ன படிக்க போனீங்க, இங்க இருக்க சில சமயம் முடியலையோ, அந்த மாதிரி வேலைல இருக்கலாம்ன்னு நினைக்கறீங்களோ?” என்றாள் கவலையாய்.
“அடியேய் என் சுந்தரி, அப்படியெல்லாம் இல்லவே இல்லைடி!” என்றான் தீர்மானமாக.
பின்னர் “என்னவோ மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. பேச வரலை, அமைதியாகிட்டேன். அதுக்கு இந்த ரவுசா” என்றான்.
“நிஜம்மா” என்று கேட்க,
“நிஜம்மா” என்றவன்,
“பாரு, என் பெண்டாட்டி மடி, ஊதக் காத்து, நிலா வெளிச்சம், அப்படி சுகமா ஒரு தூக்கம் வருது! இப்படியே தூங்கலாம் போல இருக்கு! இது தாண்டி என் இடம். இந்த தூக்கம் வேற எங்கேயும் எனக்கு கிடைக்கும்ன்னு தோணலை”
“நீ இங்க தான்! உன்னோட இடம் இது தான்! அப்போ நானும் இங்க தான்! வேற பேச்சே வேண்டாம்!” என்றான் ஸ்திரமாக.
“கொஞ்சம் நேரம் இப்படியே தூங்கறேன். பின்ன உள்ள போகலாம்” என்ற பேசியவன் தான், திரும்பி படுத்து முகத்தை அவளின் வயற்றில் வைத்து இடையோடு அவளை அணைத்தவன், ஒரு நிமிடம் கூட இருக்காது உறங்கி விட்டான். சுந்தரியும் சுகமாய் அவனின் தலை கோத, சிறிது நேரத்தில் அவளும் அப்படியே சுவரில் சாய்ந்து உறங்கினாள்.
சில நிமிடங்களில் கண் விழித்து விட்டாள் சுந்தரி, “எழுந்திருங்க, உள்ள போகலாம்” என்று அவனை எழுப்ப, எழுந்தவர்கள் மீண்டும் காளையும் பசுவும் என்ன செய்கிறதென்று பார்க்க சென்றனர்.
கண்ணன் வெளியே நிற்க மாட்டு கொட்டகைக்குள் சுந்தரி சென்றவள் சரி பார்த்து வந்தாள்.
வரும் சுந்தரியை தான் புன்னகையோடு பார்த்திருந்தான், இது தானே நீ என்பது போல!
“ஓய் மாமா, என்ன யோசனை, ஆள் வந்தது கூட தெரியாம எவ உன் கனவுல வந்த சுந்தரி” என்று சுந்தரி வம்பு செய்தாள்.
“என் கனவுல வர்றதுக்கு எந்த சுந்தரிக்கும் தைரியமில்லை, இந்த சுந்தரி என்னோட இருக்கும் போது!” என்றான் கண்ணன் புன்னகையுடன்.
“ஓஹோன்னானா, உங்களுக்கு அதுல ரொம்ப வருத்தமோ?” என்று பகடி பேச,
“ரொம்ப, ரொம்ப, அப்படின்னு சொல்ல ஆசைதான். ஆனா பொய்யா கூட அப்படி சொல்ல வரலை” என்றான் கண்ணடித்து.
“பாருடா பேச்சை” என்று பகடியை தொடர்ந்த போதும் சுந்தரியும் முகம் சிவந்து விட்டது.
“ஓய் சுந்தரி, என்ன உலக அதிசயம், உனக்கு வெக்கமெல்லாம் வருது”  
“இப்படி எல்லாம் என்னை கிண்டல் செஞ்சீங்க….” என்று மிரட்டலாய் பேச,
“என்னடி பண்ணுவ?” என்றான் சவால் போல.
“என்ன பண்ணுவனா?” என்று இடுப்பில் கை வைத்தவள், “ம்ம், உங்களை வெட்கப் பட வைப்பேன்” என்று சொல்ல,
“அம்மாடி, என்ன ஒரு மிரட்டல், எனக்கு பயமா இருக்கே!” என்றான் நிஜம் போல.
“என்ன பயமில்லையா?” என்று சுந்தரி அருகில் வர, “உள்ள போயிடுவோம், இல்லை நீ சொன்ன படி செஞ்சா என் மானம் தான் போகும்” என்றவன் விரைந்து அவளை தூக்கிக் கொண்டான்.
“அச்சோ கீழ விழுந்துடுவேன்” என்று எப்போதும் போல சொல்ல,
“எத்தனை தரம் தூக்கினாலும் நீ என் மானத்தை தான் வாங்குவ, வாயை மூடிட்டு வா” என்றான் அதட்டலாய்.
“எனக்கு மூட முடியலை, நீங்க வேணா மூடி விடுங்களேன்” என்று சுந்தரி கண்ணடிக்க, 
“என்னமா பேசறவ நீ?” என்ற கண்ணனின் முகமும் சற்று சிவந்ததோ?
“பார்த்தீங்களா வெட்கப் பட வெச்சிட்டேன்” என்றபடி சுந்தரி இன்னும் பேச, கண்ணன் படியேறிக் கொண்டே, “சுந்தரி, ஆயா காதுல விழப் போகுது. என் மானம் தான் போகும், வாயை மூடிடி!” என்று அதட்டல் விட்டு கெஞ்சிக் கொண்டே சென்றான்.
சுந்தரியின் முகம் அப்படி ஒரு சிரிப்பை தத்தெடுக்க, கண்ணனின் முகம் உதடுகள் விரியாமலேயே ஒரு சிரிப்பை கொடுக்க, அங்கே துரைகண்ணன் மாயக் கண்ணனாய் தான் தெரிந்தான் சுந்தரிக்கு.
சுந்தரி பேச்சை நிறுத்தி விட உள்ளே வந்து அவளை படுக்கையில் விட்டவன் பின்னே வெளியே வந்து கதவை பூட்டி வர மகனை அணைத்து படுத்திருந்தாள்.
வந்தவன் அவனும் அவளை அணைத்து படுத்துக் கொள்ள,
மகனின் புறம் படுக்காமல் தன் புறம் படுத்ததினால் ஒரு வேளை தான் அவனுக்கு தேவையோ என நினைத்து, மிகுந்த களைப்பாய் இருந்த போதும் “வெறும் பேச்சு தானா?” என சுந்தரி விட்டேனா என்று கண்ணனை சீண்டினாள்.
“சுந்தரி பேசாம படு, அசந்து இருக்க!” என்று அதட்டி அவளை தூங்க செய்ய, தன்னை உணர்ந்து கொண்ட கண்ணனிடம், “என்னை பத்தி உங்களுக்கு எல்லாம் தெரியுது” என்ற சொல்லி மகனை விட்டு திரும்பி அவனை அணைத்து உறங்க ஆரம்பித்தாள்.
உறங்கிவிட்டாள் என்று நினைக்கும் நேரம் காலை தூக்கி மேலே போட,
“ஒய் என்னடி உதைக்கற” என்றான் கண்ணன்.
“உங்க பையன் போட்டா சுகமா இருக்கும். நான் போட்டா உதைக்கிறேனா என்றவள் இன்னும் வசதியாய் காலை போட்டுக் கொண்டாள்.
“போடுடி போடு, எதை வேணா போடு!” என்று சொல்ல,
“ஒரு முறை போய் பார்த்துட்டு வருவோமா?” என்று பசுவையும் காளையையும் பார்க்க தூக்கம் சொக்கியபடியே கேட்க,
“உன் தொல்லை தாங்கலை, இப்போ தானே போய் பார்த்துட்டு வந்த, நாளைல இருந்து ஒரு வாரத்துக்கு ஆளை போடலாம். அங்கே பக்கமா படுக்க, இப்போ நீ தூங்கு!” என்றான்.
“ம்ம்” என்று முனகியவள் நிமிடத்தில் உறங்கியிருக்க, கண்ணனுக்கு அவ்வளவு அசதியிருந்த போதும் உறக்கம் எட்டவில்லை.
ஆம்! கண்ணனை பற்றி சுந்தரிக்கு தெரிந்ததை விட சுந்தரியை பற்றி கண்ணனுக்கு அதிகம் புரிதல் தான்/ அவளின் உணர்வுகள், அவளின் காதல் எல்லாம். ஆம்! கணவனுடன் காதல் என்றாலும் அதையும் விட அவளின் வேளை, அவளின் இடம், அவளின் இயற்கை, அது தான் அவளின் உயிர்ப்பு என்று சரியாய் புரிந்து வைத்திருந்தான்.
சுந்தரியை இன்னும் இறுக்கமாய் அணைத்தவன் உதடுகளில் வாடா புன்னகை.
அந்த சொல் பேச்சு கேட்காத சுந்தரியை அவ்வளவு பிடித்தது அவனுக்கு, சொல்ல முடியா வார்த்தைகளில்! அதை காதல் என்பதை விட, சுந்தரி அவனின் கர்வமாகி விட்டாள்!
மனது அவ்வளவு நிறைவாய் இருந்தது. தன்னை அணைத்து தன்னுள் முகம் புதைத்திருந்த மனைவியை அணைத்த படி வெகு நேரம் விழித்திருந்தவன் அப்போது தான் உறங்கியிருப்பான்.
எங்கோ கதவு திறக்கும் ஒலி கேட்பது போல இருந்தது!
சிரமப் பட்டு கண் திறந்தான், அவ்வளவு தூக்கம், பார்த்தால் கதவு திறந்திருக்க சுந்தரியை காணவில்லை!
“இவளை” என்று பல்லை கடித்தவன் எழுந்து செல்ல, ஆம்! அவன் நினைத்தது போல மாட்டு கொட்டகையில் தான் இருந்தாள், அங்கிருந்த பசுவின் கழுத்தை தடவிக் கொடுத்தபடி.
ஏதோ உந்த திரும்பி பார்க்கவும் கையை கட்டி கண்ணன் நின்றிருந்தான். வேஷ்டியை மடித்து கட்டி, கால்களை அகட்டி வைத்து, கைகளை கட்டி, தோரணையாய் கணவன் நின்றிருந்த தோற்றம் சுந்தரியை கொள்ளை கொண்டது.    
சில நொடிகள் அவனை ரசித்தவள், “புது இடமில்லையா? பழக்கமில்லையேன்னு பார்க்க வந்தேன்!” என்று விளக்கம் கொடுத்தாள்.
கோபமாய் வந்தவனுக்கு, அப்போது புன்னகை தான் வந்தது.
ஆனாலும் கெத்தை விடாமல் முறைப்பாய் பார்த்திருந்தான்.
“அதான் சொல்றேனில்லை” என்றாள் சிணுங்கலாக.
“அர்த்த ராத்திரியில வந்து தனியா நின்னிட்டுயிருக்க, இதுல நான் வேற சத்தம் செய்யாம வந்து நின்னிருக்கேன், பயமில்லை உனக்கு”
“எதுக்கு பயம்?” என்றாள் புன்னகையோடு.
“அதானே உனக்கு எதுக்கு பயம்? எனக்கு தான் உன்னை தனியா இங்க விட பயம், எதுவும் காத்து கருப்பு அடிச்சிடுமோன்னு, உள்ள வா முதல்ல” என்று அதட்டினான்.
“என்னது காத்து, கருப்பா, ஹ ஹ அது யாரு?” என்று சிரிக்க,
“நீ இப்படி சிரிச்சா காத்து கருப்பு தான் பயந்து ஓடும், வா!” என்றான்.
அதுவரை ஒரு பசுவினை தடவி கொடுத்திருந்தவள் இப்போது அடுத்த பசுவின் பக்கம் போக,
அங்கு ஓரமாய் இருந்த திண்டின் மீது அமர்ந்து அவளை பார்த்திருந்தான்.
“ஏங்க மணி என்ன? தோட்டத்துக்கு தண்ணி எடுத்து விடுவோமா, நேத்து விருந்து ஜோருல கொஞ்சம் நேரம் குறைவா தான் தண்ணி விட்டேன், வாடிடுமோ?”   
“அடியே சுந்தரி, அலும்பு பண்ணாத! இப்போதான் மணி ரெண்டு. ஒரு நாள் தண்ணி கம்மியா விட்டா வாடுமா? இது உனக்கே ஓவரா தெரியலை? உனக்கு தெரியாததா எனக்கு தெரியும்!” என்று அதட்டினான்.
“தினமும் நாம வயிறு நிறைய சாப்பிடறோம் தானே, பாதி சாப்பாட்டுல எழுப்பினா எப்படி இருக்கும்? அப்படி தான் தோட்டத்துல இருக்குற மரம் செடி எல்லாத்துக்கும் இருக்கும்!” என்று சொல்ல,
அவளின் பதிலில் அசந்து விட்டவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பார்த்திருக்க…
அவளோ விடாமல் பேசி நின்றாள், “உங்க கிட்ட பேசி எனக்கு ரொம்ப களைப்பாகிடுச்சு, டீ வெச்சு குடுக்கறீங்களா?” என்று அவனை பார்த்து சிரித்தபடி கேட்டாள்.
“குடிகாரி ஆகிட்ட சுந்தரி நீ” என்றான் சந்தோஷ சலிப்பாய்.  
“பாருடா, நான் குடிகாரியாம்! என்ன பண்ணலாம் இவரை?” என்று பசுவிடம் பேசி நின்றிருந்தாள், அதை விட்டு வர மனதில்லாமல்!      
அவளையே தான் பார்த்திருந்தான், இது தான் அவனின் சுந்தரி, இது அவளின் சுயம், என்றும் இதனை விட்டு மாற மாட்டாள்.    
தூக்கம் சொக்கிய போதும் பொறுமையாய் அவளுக்கு காத்திருந்தான் துரை கண்ணன்!  
“நீ யாரடி என் சுந்தரி பெண்ணே!” என்ற எண்ணங்களில் “நீ என்னுடையவள்” கர்வமான பார்வையை தாங்கி!  
நீ என்பது யாதெனில்? 
நீ ஆணாய் இரு, பெண்ணாய் இரு, ஆஸ்திகனாய் இரு, நாஸ்திகனாய் இரு, பலவானாய் இரு, பலமில்லாதவனாய் இரு, அறிவாளியாய் இரு, முட்டாளாய் இரு, தமிழனாய் இரு, இந்தியனாய் இரு, உலகனாய் இரு, 
எவனாய் வேண்டுமானாலும் இரு, ஆனால் மனிதனாய் மட்டும் இருக்க மறந்து விடாதே! 
இதுவே நீ! உன்னுள் இருக்கும் நான்! 
ஆம்! நீ என்பது உன்னுள் இருக்கும் நான்! 
எனக்கு இங்கே தான் மண்! என்னுடைய வேர் இங்கே! என்னை மாற்ற நினைக்காதே! நீ மாறிப் போவாய்!
பாலைவனத்தில் பட்டு ரோஜாவை வளர்க்க நினைத்தால் பட்டுப் போவாய்!   
உன் பாரம்பர்யம்! உன் பழக்க வழக்கம்! உன் உணவு! உன் உடை! நீ இருக்கும் இடத்தை கொண்டது மட்டுமல்ல.. இது உன்னுடைய மரபு! 
மாறும் போது நீயும் மாறிப் போவாய்!    
எங்கே என்று தேடாதே உன்னுள் இருக்குறேன்! உனக்குள் இருக்கிறேன் விரைவில் கண்டு கொள்! 
நான் உணவாய் இருக்கலாம், உடையாய் இருக்கலாம், தண்ணீராய் இருக்கலாம், ஏரிக்கரையாய் இருக்கலாம், கிணறாய் இருக்கலாம், விளைச்சல் பூமியாய் இருக்கலாம், மூன்று போக அரிசியாய் இருக்கலாம், நிலக் கடலையாய் இருக்கலாம், பொங்கல் பண்டிகையாய் இருக்கலாம் ஜல்லிக் கட்டாய் இருக்கலாம், காளையாய் இருக்கலாம், சிப்பிப் பாறையாய் இருக்கலாம், பனை மரமாய் இருக்கலாம், தூக்கணாங் குருவியாய் இருக்கலாம், கில்லி தாண்டியாய் இருக்கலாம், பல்லாங்குளியாய் இருக்கலாம், ஆடு புலி ஆட்டமாய் இருக்கலாம், தெம்மாங்கு பாட்டாய் இருக்கலாம், கரகாட்டமாய் இருக்கலாம், தப்பட்டையாய் இருக்கலாம்!   
இன்னும் இன்னும் நிறைய இருக்கலாம்கள்.   
உன்னை வளர்! உன் இயற்கையை வளர்! மனிதம் வளர்! ஏனெனில் நீ என்பது நான்! என்னை தொலைந்து போக விடாதே!  
                    ( நீ என்பது யாதெனில் )
                         ( நிறைவுற்றது ) 

Advertisement