Advertisement

“என்ன சித்தி எங்கம்மாவை வம்பிழுக்கறீங்க?” என்று கண்ணன் வர,
“ஏன்டா தம்பி, என்ற அக்காவை நான் இழுக்கறேன். உனக்கென்ன? என்ன விமலாக்கா நான் சொல்றது சரி தானே!” என்றார்.
கணவனை வம்பிழுக்கவும் அவர்களின் பேச்சினில் வந்து குதித்த சுந்தரி, “அத்தை, என் அத்தைங்க ரெண்டு பேரும் உங்க பக்கத்துல கூட நிக்க முடியாது. பாவம் அவங்களை விட்டுடுங்க. அப்புறம் டென்ஷனாகி அவங்க பாதில வேலையை விட்டு நகர்ந்தா நீங்க தான் பொங்கல் வைக்கணும்!” என்றாள்.
“சுந்தரி என்கிட்டயேவா?” என கண்ணனின் சித்தி பேச,
“பின்ன யாரு செய்வா? எனக்கு செய்ய தெரியாது! நீங்க தான் செய்யணும்” என்றாள்.
“ஆத்தாடி, நான் பேசலை! நான் போய் என்ற ஊட்டுக்காறரு பக்கத்துல உட்காருறேன்” என்றவரிடம்
“அத்தை, இன்னைக்காவது மாமா எல்லோர்கிட்டயும் பேசிட்டு இருக்கட்டும். நீங்க எங்க கிட்டயே வம்பு பண்ணுங்க, பாவம் அவர்!” என்று போலியாய் வருத்தப்பட,
அந்த சித்தியிடம் இவ்வளவு வாய் பேசும் சுந்தரியை விமலாவும் கனகாவும் “ஆ” எனப் பார்த்திருந்தனர்.
இப்படி எல்லாம் சுந்தரி வாய் பேச மாட்டாள், சுந்தரி இவ்வளவு பேசுவாள் என்பதே அவர்களுக்கு இப்பொழுது தான் தெரியும்!
“ஏன் சித்தி இப்படி பார்க்கறீங்க?”
“என்னடா சுந்தரி இம்புட்டு பேசுது” என்று கனகா ஆச்சர்யமாய் கேட்க,
“ம்க்கும், போங்க சித்தி, என்ன அறிவு உங்களுக்கு? அவ பேசுவான்றதையே இப்போ தான் கண்டு பிடிச்சீங்களா” என்று நக்கல் செய்தான் கண்ணன்.
“நீ எப்படி டா சமாளிக்கற” என்று கேட்டவரிடம்,
“ஹ, ஹ, பதில் பேசினா தானே” என்று கண்ணன் சொல்ல,
“அம்மாங்க கிட்டயே பொண்டாட்டிக்கு அடங்கி போறன்னு சொல்றியா?”
“அட அண்ணா உண்மையை தான் சொல்றான் சித்தி, பாரேன் அண்ணி என்ன சொன்னாலும் ஆமாம் சாமி போடுவான் தலையை உருட்டுவான்” என்றாள்.
பக்கத்தில் நின்ற சுந்தரியின் காதினில் இந்த பேச்சுக்கள் விழ, அவளுக்கு பல்பு பளிச்சென்று எரிந்தது.
“ஆம், நீ என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்” என்பது தான் அவன் சொல்ல வந்தது.
வேகமாய் கணவன் அருகில் வந்தவள் “இதுவா சொன்னீங்க” என்று ரகசியம் பேச,
“ஷப்பா, உனக்கு பல்பு எரிஞ்சிடுச்சா” என்றான் கண்ணன் வாய்க்குள் அடக்கிய புன்னகையுடன்.
“ஹி, ஹி, எரிஞ்சிடுச்சு” என்று மெதுவாய் அவனிடம் கிண்டல் பேச,
“இனி என்னை கேட்க மாட்டியே?”
“என்ன கேட்கமாட்டேன்?”
“அதான் என்னை விட்டுட்டு போவீங்களான்னு?”
“அது கேட்கவே மாட்டேன்”
“ஏன் என் மேல அவ்வளவு நம்பிக்கை வந்துடுச்சா?”
“சே, சே, நீங்க எங்க போனாலும் நான் தான் பின்னாடி வந்துடுவேனே” என்று சிரிக்காமல் சுந்தரி சொல்ல,
கண்ணனுக்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்க வாய் விட்டு சிரித்தான்.
“நீ என் பின்னாடி வந்தடுவ?” என்று சிரிக்க,
“நீங்க என் பேச்சுக்கு தலையாட்டுறது உண்மைன்னா, இதுவும் உண்மை தான்”  
“உன்னை பேச்சுல ஜெயிக்க முடியுமா? அது தான் தலையாட்ட பழகிட்டேன்!” என்றான் சிரிப்போடு கண்ணன்.
கண்ணன் ஒரு அடர் நிற சட்டை மற்றும் வெள்ளை வேஷ்டியில் இருந்தான். சுந்தரி ஒரு பேபி பிங்க் நிற சாப்ட் சில்க் சேலையில் இருந்தாள். அதிக நகைகள் எல்லாம் இல்லை, கழுத்தில் தாலி சரடுடன் கணவன் அவளுக்காய் முதல் முதலாய் பரிசாய் வாங்கின நெக்லஸ். பல நாட்கள் அந்த பரிசு பிரிக்கப் படாமல் தான் இருந்தது. ஏதோ ஒரு நாள் அவளாய் “என்னடா இந்த கிஃப்ட் பாக்ஸ் பிரிக்காம ரொம்ப நாளா இருக்கு” என்று பிரிக்க,
அதில் அதை பார்த்தவள், பல முறை அதை தூக்கி எரிந்தது நினைவில் வர, அப்போதிலிருந்து எந்த. விஷேஷம் என்றாலும் அதை மட்டும் தான் அணிவது இல்லை அதோடு சேர்த்து தான் வேறு நகைகளை அணிவது.  
இதுவரை அதை குறித்து கணவனிடம் “சாரி” போல கேட்டதும் இல்லை “இதோ பார் போட்டுக் கொண்டேன்” என்று காண்பித்தும் இல்லை. அவனாய் பார்த்து தெரிந்து கொண்டது தான்.
“சரியான திமிர்டி உனக்கு” என்று சொல்ல, “ஆமாம் ரொம்ப ரொம்ப” என்று சொன்னாள்.         
இப்போதும் சுந்தரி சிரிக்காமல் நிற்க, கண்ணன் பொங்கி பொங்கி சிரிக்க, பார்ப்பவர்களுக்கு கண்ணை பறித்தது. அபி வேகமாக சென்று அப்பாவின் மேல் ஏறிக் கொண்டான். சுந்தரி அவளின் புடவை கட்டை கண்ணனுக்கு பிடித்த மாதிரி மாற்றிக் கொண்டாள். முன்பு போல எல்லாம் ஏன் இதுக்கு என்ன என்று வாக்குவாதம் செய்வதில்லை.
இதோ அத்தனை பெண்களிலும் அவளின் உடை மிகவும் நேர்த்தியாக தெரிந்தது. கணவன் பிள்ளை என்று பாந்தமாய் நின்றிருந்தாள்.    
“புள்ளைங்களுக்கு சுத்தி போடு விமலாக்கா” என்றார் கோவையில் இருந்து வந்த சித்தி.
“ம்ம்” என்பது போல அவரும் தலையாட்டினார்.
எல்லாம் விட ஒரு இடத்தில் சிந்தாமணியோடும் சின்ராசுவோடும் அமர்ந்திருந்த வடிவு பாட்டிக்கு அப்படி ஒரு பூரிப்பு!
தன்னுடைய பேத்தியின் வாழ்க்கையை மலர செய்த கடவுளுக்கு விடாமல் மனதில் நன்றி கூற, அவரின் கண்கள் கலங்கியது.
எங்கிருந்தாலும் தன் ஆயாவின் மேல் ஒரு கண் வைத்திருந்த சுந்தரி வேகமாக வந்து “என்ன ஆயா கண்ணு கலங்குது, என்ன பண்ணுது?” என்று கவலையாய் கேட்க, 
“நீ போ, போய் உன் புருஷன் வீட்டோட இரு” என்று அவர் விரட்டினார்.
“டீ சிந்தா, என்னடி பண்ணின என் ஆயாவ கண்ணு கலங்குது?” என்று அவளையும் பேச,
“ஆத்தாடி ஆத்தா, நான் செவனேன்னு உட்கார்ந்து இருந்தா என்னை வம்புக்கு இழுப்பியா நீ. அது நீ குடும்பம் நடத்தற லட்சணத்தை பார்த்து கண்ணு கலங்குது, நீ போடி உனக்கு தான் வம்பு பண்ண கண்ணன் தம்பி இருக்குதுல்ல” என்று சொல்ல,
அவர் அழுத்தத்தின் அர்த்தம் புரிய, “அய்யே போ ஆயா நீ” என்று சந்தோஷமாய் சலித்தபடி சென்றாள் சுந்தரி.
அதற்குள் அங்கே புதிதாய் இரண்டு இளம் காங்கேயம் பசுக்களையும், ஒரு இளம் காங்கேயம காளையையும் அன்று வாங்க இருக்க, அது ஒரு டெம்போவில் வந்து நின்றது.
சுந்தரிக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று கண்ணன் நினைத்திருக்க, அவன் மனதில் நின்றது இது தான்.
அன்று தான் வந்தது. மெதுவாய் அங்கே இறக்கினர்.
அருகில் அதன் விற்பனை உரிமையாளர் இருக்க, இள வயது காளை என்றாலும் பெரிய திமிலுடன் பார்க்கவே கம்பீரமாய் அந்த காளை இறக்கப் பட, பின்னேயே பசுக்களும் இறக்கப்பட்டது.
பசுவின் அருகில் ஆர்வமாய் சென்ற உறவினர்கள் காளையை சற்று தூரத்தில் இருந்து தான் பார்த்தனர். சுந்தரிக்காக கண்ணன் தான் வரவழைத்து இருந்தான்.
சுந்தரிக்கு அந்த தயக்கம் எல்லாம் இல்லை, அதன் உரிமையாளரோடு பேசியபடி அதனின் அருகில் சென்றாள்.
அவரோ “இனி நீ இவங்க கிட்ட தான் இருக்கணும்” என்று காளையிடம் பேச்சுக் கொடுக்க, “அம்மா நானு” என்று அபி வந்து சுந்தரியின் அருகில் நின்றான்.
இருவரும் மெதுவாக அதனின் அருகில் செல்ல, சுந்தரி அந்த காளையின் கழுத்தை தடவிக் கொடுத்தாள். முதலில் ஒரு விலகல் தன்மை அது காண்பித்த போதும், சிறிது நேரம் தடவிக் கொடுத்தவள், மகனை கையில் தூக்கி அவனின் தளிர் கரங்களை கொண்டு தடவிக் கொடுத்தாள்.
என்ன அதிசயம் காளையின் உடல் மொழியில் ஒரு இணக்கம்! “அபி பையா உனக்கு ஃபிரண்ட் ஆகறாண்டா இவன்” என்று சுந்தரி சொல்ல,
“நம்ம செவளை மாதிரியம்மா?”
“ஆமாம்” என்றாள்.
கண்ணன் தூரமாய் நின்று தான் பார்த்திருந்தான். இதற்கெல்லாம் கொஞ்சம் பழகிவிட்டாலும் இன்னும் தூரம் தான் அவனிற்கு.
“வாங்க” என்று அவனை பார்த்து சுந்தரி சொல்ல,
“அம்மாடி, நான் மாட்டேன்!” என்றான் சத்தமாகவே.
எல்லோரும் சிரித்தனர்!
அதற்கெல்லாம் அவன் அசரவில்லை, “நீங்களே பாருங்க” என்பது போல நின்றான்.
பின் அந்த புது உறவுகளோடு அம்மாவும் மகனும் சிறிது நேரம் செலவளிக்க, “டேய் கண்ணா, நிஜம்மா சுந்தரி சூப்பர் சுந்தரி தாண்டா” என்றார் சித்தி.
புன்னகைத்தான் கண்ணன்!
ஆம்! அவனின் சுந்தரி சூப்பர் தான்!
மனது நிறைவாய் உணர அமைதியாகி விட்டான்!
அவ்வளவு நேரம் கலகலப்பாய் சுத்திக் கொண்டிருந்த கணவன் அமைதியாகி விடவும், மெதுவாக யார் கவனத்தையும் கவராமல் அருகில் வந்தவள் “என்ன ஆச்சு?” என்றாள்.
“என்ன ஆச்சு? ஒன்னுமாகலையே”
“இல்லை, என்னவோ அமைதியாகிட்டீங்க, என்ன ஆச்சு?” என்றாள் மீண்டும்.
“ஹேய் ஒன்னுமில்லை, நிஜமா எதுவுமில்லை” என்று அவன் மீண்டும் மீண்டும் சொன்ன போதும் மனம் நம்ப மறுத்தது.
பின்பு வேலைகள் இழுத்துக் கொள்ள மாலை ஆகிற்று விருந்து முடிந்து வேலைகள் முடிய.
அதுவும் வாணியின் வீட்டினரிடம், “சாருக்கு கார் வாங்கிக் கொடுக்கறதால இதை வாணிக்கு அவளோட அண்ணனும் அண்ணியும் கொடுக்கறாங்க” என்றே சந்திரன் சொல்லி அந்த டெபாசிட் பத்திரம் கொடுத்தார்.
என்ன தான் ஒரே வீட்டில் இருந்தாலும் இப்படி சித்தப்பா மக்களுக்கு செய்யவும் மனது வேண்டும் அல்லவா! கண்ணன் கூட அண்ணன், உடன்  வளர்ந்தவன் என்று சொல்லாம், சுந்தரிக்கு அப்படி எதுவுமில்லையே. அதுவும் எத்தனை பிரச்சனைகள் நடந்து விட்ட போதும் செய்ய மனது வேண்டும் அல்லவா?   
முன்பு அவளின் உறவுகள் அவளிடம் எப்படி இருந்தாலும் இப்போது பெருமை தேடிக் கொடுத்தனர். எல்லாவற்றிற்கும் அவளை முன் நிறுத்தினர்.
சுந்தரி உறவுகளின் மத்தியில் பெருமையாய் தான் பார்க்கப்பட்டாள். ஆயிரம் மனஸ்தாபங்கள் வந்தாலும் ஏன் அவளை விட்டு சென்றாலும் கூட, கண்ணன் அவளை யாரிடமும் விட்டுக் கொடுக்கவில்லை.     
புது வரவான புது உறவுகளை வீடு கொண்டு வந்து சேர்த்தனர்.
பின்பு அதற்கு தண்ணீர் காண்பித்து, தீவனம் வைத்து என்று சில பல வேலைகள் முடித்து, இரவு அங்கே அம்மா வீடு சென்று உணவை முடித்து, மீண்டும் இங்கே வந்து வடிவு பாட்டிக்கு உணவு கொடுத்து, அபியை உறங்க செய்து,
மீண்டும் பசுக்களையும் காளையையும் பார்த்து என்று எல்லாம் முடித்து சோர்வாய் திண்ணையில் அமர்ந்தாள் சுந்தரி.
ஆயா படுத்திருக்க அபி உள்ளே அறையில் உறங்கியிருந்தான்.
சுந்தரி அமரவும் எல்லாம் பூட்டி லைட்டை அணைத்து வந்த கண்ணன், அவளின் மடியில் தலை வைத்து நீட்டி படுத்து விட்டான்.
சிலுசிலு வென ஊதக் காற்று அடித்தது.
சில அமைதியான நிமிடங்கள், சிறு உறுத்தலாய் மனதில் இருந்ததை கேட்டு விட்டாள்.

Advertisement