Advertisement

அத்தியாயம் நாற்பத்தி ஒன்று :
இதோ திருவிழா ஜோராய் களை கட்டியது. எருதாட்டாட்டமும் மிகுந்த பந்தோபஸ்துடன் நடந்து கொண்டிருந்தது.
நமது பாரம்பர்யத்தை கட்டிக் காக்க ஒரு முயற்சி! அழிந்து வருபவைகளை அழியவிடாமல் காக்கும் ஒரு உத்வேகம்!
சிறப்பாய் தான் நடந்து கொண்டு இருந்தது!
கண்ணனுக்கு எப்போதும் அங்கே எல்லாம் போகும் பழக்கம் கிடையாது என்பதால் அவன் வீட்டில் தான் இருந்தான். ஆனால் அம்மா வீட்டினில், உடன் சுந்தரியும் அபராஜிதனும். அவனின் அப்பாவும் சித்தப்பாவும் திருவிழா நடக்கும் இடத்தினில் இருந்தனர்.
சுந்தரி இவனிடம் வம்பு வளர்த்துக் கொண்டிருந்தாள், “நீங்க போகலையா?” என்பது போல.
“அப்பாவும் சித்தப்பாவும் இந்த மாதிரி விஷயங்கள்ல முனைப்பா இருக்காங்க. அவங்க ஓய்வெடுக்கும் போது நான் போறேன். இதுவே எனக்கு ரொம்ப ரொம்ப அதிகம். நான் நினைச்சு பார்க்காத மாற்றம் என்கிட்டே. இதுக்கு மேல எல்லாம் என்கிட்டே எதிர் பார்க்க கூடாது” என்று தீர்மானமாய் சொல்லி விட்டான்.
வீட்டில் மூன்று தங்கைகள் இருக்க, அதோடு அபியும் இருக்க, ஒரே சத்தம் தான். வாணியை ஐந்து மாதத்திற்கு சீர் வைத்து அழைத்து வந்திருந்தனர்.
ஒரு வழியாக கார் பஞ்சாயத்தை முடித்திருந்தாள் சுந்தரி, “வாயை திறந்து சாரு கேட்டிருக்க கூடாது. அப்படி கேட்ட பிறகு நாம செய்யாம இருக்க கூடாது. நம்மகிட்ட வசதியில்லைன்னா பரவாயில்லை. ஆனா இருக்கு! அப்போ என்ன நினைப்பா? இந்த அண்ணா நமக்கு செய்யக் கூடாதான்னு தானே!”
“ப்ச், புரிஞ்சிக்கோ சுந்தரி. அவ எங்கப்பா கிட்ட இருந்தா ஆசைப்படலாம். ஆனா உன்கிட்ட இருக்குறதுக்கு ஆசைப் படறது அதிகம்!”
“ப்ச், நீங்க முதல்ல புரிஞ்சிக்கோங்க!” என்று அவனை போல பாவனை காண்பித்தவள், “அவ பிரிச்சு பார்க்கலை உங்களையும் என்னையும். அவளை பொறுத்தவரை அண்ணன் கிட்ட இருக்கு, அவ்வளவு தான்!”
“எனக்கு அந்த எண்ணத்துல மாற்றம் வர்றதுல விருப்பம் இல்லை, உங்களுக்கு புரியுதா?” என்று அவனை விடவும் சுந்தரி கடினமாய் பேச,
இருவருக்குள்ளும் மீண்டும் ஒரு கடினமான சூழல்!
“நான் நீ சொல்றது எல்லாம் கேட்கணும்னு எதிர்பார்க்காத” என்றவனுக்கு அப்படி ஒரு கோபம் மூண்டு விட்டது.
“நான் ஒன்னும் எல்லா விஷயத்துளையும் சொல்ல மட்டேன்” என்றாள் அவளும் கோபமாக.
அப்போதும் கண்ணன் முறைத்துக் கொண்டு தான் இருந்தான்.
இரவின் தனிமையிலும் கூட முறைத்து தான் இருந்தான். மகனை தூக்கிக் கொண்டு வந்து படுக்க செய்து அவனும் படுத்துக் கொண்டான். எவ்வளவு சொல்லியும் அவளின் பிடிவாதத்தில் தானே நிற்கிறாள் என்ற கோபம்.     
கண்ணனுக்கு மிகுந்த கோபம் வந்த போதும், அவளின் இந்த எண்ணத்தை உடைக்க முற்பட்டால், மீண்டும் அவளும் அவனும் வேறு என்பது போல வரும் என்று புரிந்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறி அமைதியாய் கண் மூடிக் கொண்டான்.
சுந்தரி உள்ளே வந்து கதவை தாளிட்டு அருகில் வருவது அவனுக்கு உணர்வாய் உணர்ந்தாலும் கண் திறக்கவில்லை.
என்ன வந்து கோபத்தில் அவள் ஒரு புறம் உறங்க போகிறாள், நடப்பது தானே என்ற சலிப்பும் தோன்ற, கண் மூடிய நிலையிலேயே ஒரு புறமாய் திரும்ப படுத்துக் கொண்டான்.
ஆனால் என்னே அதிசயம் சுந்தரியும் சற்று கண்ணனிடம் மாற்றம் காண்பித்தாளோ? அவனின் அருகில் படுத்தவள் அவனை பின்புறமாய் அணைத்துக் கொண்டாள்.   
“அட சுந்தரியா?” என்று கண்ணன் மனதில் நினைக்க, 
முதலில் கோபத்தை காண்பித்த சுந்தரி, அந்த நேரம் எப்பொழுதும் இல்லாதபடி “ப்ளீஸ், இதை செய்வோமே, எனக்காக!” என்று தணிவாய் பேசினாள்.
அவள் அந்த த்வனியில் பேசும்போது அவன் ஏன் எகிறப் போகிறான், கண்ணனுமே தணிவாய் பேசினான், “நாம இன்னும் செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு, ஒருத்தி இல்லை மூணு பேர், எனக்கு சாரு ஸ்பெஷல்னாலும், மத்த தங்கைங்களும் அப்படி தான். சீர்ன்னு வரும் போது அதுல வித்தியாசம் காட்ட எனக்கு விருப்பமில்லை” என்றான் தெளிவாய்.
“யாரு உங்களை வித்தியாசம் காண்பிக்க சொன்னா? சாருக்கு செய்யறதை வாணிக்கும் செய்வோம்!” என்றாள்.
“ஓய் சுந்தரி எவ்வளவு செய்வோம், இது உங்கப்பா சம்பாத்தியம், எனக்கு செய்யறன்னா அவரோட மாப்பிள்ளை அப்படி கூட வெச்சிக்கலாம், மாபிள்ளையோட தங்கைக்கெல்லாம் செய்வாங்களா. அது சரி கிடையாது”    
“அதனால என்ன? எங்கப்பா ரொம்ப சந்தோஷப் படுவார். நான் பெரிய குடும்பமா வாழணும்னு தான் அவருக்கு ரொம்ப ரொம்ப ஆசை”
“அதுவுமில்லாம என் மனசு சொல்லுது, நாம இன்னும் நல்லா வாழ்வோம் வசதி வாய்ப்புகள் பெருகும்னு. அப்போ சாருக்கு தோணலாம் இல்லையா, இவ்வளவு வசதியிந்தும் ஒரு கார் வாங்கிக் கொடுக்க இவங்களுக்கு மனசு வரலைன்னு!” என்றாள்.
அவள் புறம் திரும்பி படுத்தவன், “ப்ச் சுந்தரி” என்றான் அலுப்பாய்.
“ப்ச், என்னங்க” என்றாள் அவனை போலவே.
“போடி நீ” என்றான் சலிப்பாய்.
“பார்றா, அதெல்லாம் நானும் போக முடியாது. உங்களையும் போக விடமாட்டேன்!” 
“நான் என்ன உனக்கு புரிய வைக்க ட்ரை பண்ணினேன்னு கண்டு பிடிக்க முடியலை. இதுல வேற எல்லாம் பெருசா கண்டு பிடி” என்றான் அவளிடம் வம்பு வளர்க்கும் விதமாய்.
“அது உங்க விஷயம்னு வரும் போது என் கண்டு பிடிப்பு எல்லாம் வேலை செய்யறது இல்லை” என்று கிண்டல் பேச,
“அடிங்க, உன் வாய் இருக்கே” என்ற படி அவளின் உதடுகளை இரு விரல்களால் வலிக்கும் படி பற்றினான்.
“விடுங்க, விடுங்க வலிக்குது” 
அப்போதும் கண்ணன் விடாமல் இருக்க, அபியை எழுப்ப சுந்தரி கைகளை நீட்ட, “அடியேய் சுந்தரி” என்று அவசரமாய் விட்டான்.
“அது அந்த பயம் இருக்கணும். இப்போ என்ன விஷயம்னு சொல்லலைன்னா அவனை எழுப்ப போறேன்” என்று போர்க்கொடி பிடித்தாள்.       
அவசரமாய் அவளின் கை பிடித்து தடுத்தவன், “சரி, இந்த திருவிழா முடியற வரை டைம்! அதுக்குள்ள கண்டுபிடிக்கலைனா நான் சொல்றேன்!” என்று கண்ணனும் பேரம் பேச, அரை மனதாய் “சரி” என்று இருந்தாள்
இதோ இப்போது திருவிழா விமரிசையாய் நடந்தது கொண்டிருந்தது. சுந்தரியும் மாமியார் வீட்டில் பொருந்தி அங்கிருந்த வேலைகளை பார்த்து கொண்டிருந்தாள்.
பெரிதாக வேலை இல்லை, சமைக்க இந்த வாரம் முழுவதுமே ஆள் வைத்து இருந்தனர்.            
நாளை இவர்கள் இரண்டு வருடம் முன்பு வாங்கியிருந்த தோப்பில் விருந்து. 
அது பெரிய சொத்து! அதை வாங்கின பிறகு விருந்து போல எதுவும் கொடுக்கவில்லை. அதனால் உறவுகளை திருவிழாவினோடு சேர்த்து அதற்கும் அழைத்து இருந்தனர்.
கூடவே திருமணதிற்கு சாருவிற்கு கார் கொடுக்க இருக்க, அதற்கான பணத்தை வாணியின் பேரில் டெபாசிட் செய்து, அதற்குரிய காகிதங்களை நாளை வரும் அவர்கள் புகுந்த வீட்டினரிடம் கொடுத்து விடலாம் என்ற ஏற்பாடு. ஆம்! வாணி கார் வேண்டாம் என்று விட்டாள். அதனால் அதற்குரிய பணம்.
சந்திரனிற்கும் சண்முகதிற்கும் இதில் சிறிதும் உடன் பாடில்லை. “வேண்டாம்” என்று மறுக்க, சுந்தரி தான் “நாங்க சாருக்கு வாங்கிக்கொடுக்கறோம்னு சொல்லிட்டோம் மாமா” என்று பொதுவாய் சொல்ல,
“இனி நீங்க இந்த மாதிரி எதுவும் செய்யக் கூடாதும்மா” என்றனர் இருவருமே.
“எங்க வசதிக்கு பொண்ணை கட்டினா கட்டுறானுங்க, கட்டலைன்னா போறானுங்க. வேற இடம் பார்ப்போம். நம்ம பொண்ணுக்கு தான் மரியாதை இருக்கணும், அவங்க கொண்டு போற பணத்துக்கு இல்லை” என்றனர்.
சுந்தரி பரிதாபமாய் கணவனை பார்த்தாள். அவன் தான் வந்தான், “பா, விடுங்களேன். ஏதோ ஒரு முறை செஞ்சா, செஞ்சிட்டே இருப்போமா என்ன? அதெல்லாம் செய்ய மாட்டோம்” என்று முடித்து விட்டான்.
வாணி கால் நீட்டி சோபாவில் அமர்ந்திருக்க, கனகா அவளுக்கு பார்த்து சிறிது நேரத்திற்கு ஒரு முறை சாப்பிட ஏதாவது கொடுத்துக் கொண்டே இருந்தார்.
இரண்டு நாட்களாக காலையில் வந்து விட்டால், இரவு தான் சுந்தரி மீண்டு அவளின் வீட்டிற்கு செல்ல இருக்க, இது அவளின் கண்களுக்கு தப்பவில்லை, இதில் வாணியின் கணவன் வேறு தினம் மாலை ஒரு முறை வந்து அவளை பார்த்து விட்டு செல்ல,
சுந்தரிக்கு பெரிதாய் ஏக்கம் போல எல்லாம் இல்லை என்றாலும் “நமக்கு இப்படி பார்த்து பார்த்து செய்ய அம்மா இல்லையே” என்று தோன்ற தான் செய்தது.
கண்ணனின் ரூமிற்கு அபியை சிறிது நேரம் மதிய உறக்கத்திற்கு கூட்டி போக, பின்னேயே வந்த கண்ணன் “என்னடி வாணியை விடாம பார்க்கற, பழசை நினைக்காத, அடுத்த முறை பாரு அவங்களை விட சிறப்பா கவனிக்கலாம்” என்று கண்ணன் சொன்னான். கண்ணன் நினைத்து விட்டான் முதல் குழந்தையின் போது தான் அருகில் இல்லாததை குறையாய் நினைக்கிறாளோ என்பது போல.  
புன்னகைத்தவள் “சிறப்பா கவனிக்கலாம்ன்றதே அடி உதை குத்துன்ற மாதிரி கேட்குதே”
“பாருடா அடி உதை குத்தா” என்று முறைத்தான்.
“ஹ, ஹ” என்று சிரித்தவள் “இல்லை, எனக்கு அம்மா இல்லைன்னு தான் தோணிச்சு வேற ஒன்னுமில்லை. நடந்தது என்னவா இருந்தாலும் எனக்கு இப்போ எந்த குறையும் இல்லை என் புருஷன் கிட்ட” என்றாள் மன நிறைவோடு.
“விடு சித்தி எப்படி பார்த்துக்கறாங்கன்னு நான் பார்த்துகிட்டு அப்படியே உன்னை பார்த்துக்கறேன்” என்றான் சமாதானமாக
“ச்சே சே, எனக்கு அப்படி எந்த ஆசையும் இல்லை. எனக்கு அம்மா இல்லை, அவ்வளவு தான். அது முடிஞ்சு போனது!” என்றாள் தெளிவாக.
பின் உடனே “நம்ம வீட்டுக்கு கொஞ்சம் நேரம் போயிட்டு வரலாமா?” என்றாள்.
“எதுக்கு?” என்றவனிடம்.
“எனக்கு டீ குடிக்கணும், இங்க வைக்கற டீ நல்லாவே இல்லை” 
“அடிங்க” என்றான், இப்படியாக சிரிப்பும் பேச்சுமாக நேரம் கழிந்தது.
அடுத்த நாள் கிடா வெட்டி பொங்கல் வைத்தனர் புது தோப்பில், சுந்தரிக்கு எதுவும் பழக்கமில்லை, அவளின் அத்தையும் சின்ன அத்தையும் செய்ய, உதவிக்கு சாருவும், நித்யாவும்.
கோவையில் இருந்து அவர்கள் வீடு வாடகைக்கு இருந்த சித்தியும் சித்தப்பாவும் பெண்களும் கூட வந்திருந்தனர்.
“டேய் கண்ணா, சுந்தரி கெட்டிகாரி தாண்டா! ரெண்டு மாமியாருங்க வேலை பார்க்கறாங்க இவ வேடிக்கை பார்க்கறா” என்று அந்த சித்தி பேசியவர்,
விட்டேனா என்று விமலாவிடம் வேறு “என்ன விமலாக்கா உன்ற மருமக வேடிக்கை பார்க்க நீங்க வேலை செய்யறீங்க” என்று வம்பு வேறு பேசினார்.
“இந்த வேலையை தான் நீயும் நானும் செய்ய முடியும். பின்ன அவளை மாதிரி தோட்டம் தொறவுன்னு போய் இறங்கி வேலை பார்ப்போமா என்ன?” என்று விமலா பேச,
“அதானே விமலாக்காவை மருமக அடக்கிட்டாளோன்னு நினைச்சேன்” என்று அதற்கும் வம்பு பேச,
“அவ அடக்கலைன்னாலும் நாம அடங்கிடணும்ல” என்று கனகா பங்குக்கு வர
சுந்தரி எந்த பேச்சுக்கும் வரவில்லை, அச்சோ எதுவும் ரசாபாசம் ஆகிவிடுமோ என்று பதறியும் பார்க்கவில்லை, “ம்ம், அப்புறம் வேற எதுவும் இருக்கா?” என்பது போல ஊரில் இருந்த வந்த அத்தையை பார்க்க,
“அட சுந்தரி நீ கெட்டிகாரி தான் போ” என்றார் அவர்.

Advertisement