Advertisement

அத்தியாயம் நாற்பது :
மிகவும் பக்குவப்பட்ட சுந்தரிக்கு, கண்ணனிடம் கொஞ்சமும் பக்குவம் காண்பிக்க இஷ்டமில்லை. கண்ணனிடம் அவள் எதிர்பார்ப்பது கொஞ்சல்ஸ். ஆனால் அவனிடம் சுந்தரி காண்பிப்பது மிஞ்சல்ஸ். அவளுக்கு கொஞ்சல்ஸ் எல்லாம் வரவேயில்லை.
அவளுக்கு கொஞ்சல்ஸ் வந்தது அபியிடம் மட்டுமே! அதுவும் அவனது அப்பாவை போல அபியிடம் வரவில்லை அதுவும் ஒரு குறையாகிப் போனது.
இப்படியாக சுந்தரியை சில முறை சமாளித்தும், பலமுறை சமாளிக்க முடியாமலும் கண்ணன் திணறினான். ஆனாலும் என் மனைவி என்ற எண்ணம் இன்னும் இன்னும் ஸ்திரமாய் அமர்ந்துவிட்டது. இன்னொரு வார்த்தையில் சொல்லப் போனால் சுந்தரிக்கு பழகி விட்டான்.
பொட்டி படுக்கை கட்டாமல் போட்டது போட்டபடி போட்டு சுந்தரியுடன் சேலத்திற்கு வந்துவிட்டான் கோவையை விட்டு, பரீட்சைக்கு மட்டும் சென்று விடலாம் என்று.
நிறைய வேலைகள் ஊருக்கு சென்று விடலாம் என்று தான் வந்தான். என்னே அதிசயம் ஊருக்கு வந்ததில் இருந்து அவ்வளவாக வேலைகள் இல்லை, அளவாக தான் இருந்தது.
சுந்தரியும் அவளின் நர்சரியை விட்டு வெளியே வந்திருந்தாள். ஆம்! இந்த வருடமாக அவள் நர்சரி வேலைகளை மட்டும் பார்த்ததினால் தான் அவனுக்கு நிறைய வேலைகள்.
இப்போது சுந்தரி எல்லாம் பார்க்கவும் அவனுக்கு பெரிதாக வேலைகள் இருப்பது போலவே தெரியவில்லை. இது உழைப்பவர்கள் எளிதாய் செய்ய முடியும் வேலை தான்.
அபியுடன் அம்மா வீடு சென்று வந்தவன், “வாணிக்கு, இப்போ அஞ்சாவது மாசம், நாள் பார்த்துட்டு வந்திருக்காங்க. இந்த வாரம் புதன் கிழமை நாள் நல்லா இருக்கு சீர் கொண்டு போகலாம் சொன்னாங்க” என்றான்.
“ம்ம்” என்று முடித்து விட்டாள். மனம் சுணங்க செய்தது, “ஏன் வீட்டினர் என்னிடம் சொல்ல மாட்டார்களா?” என்று. ஆனாலும் காண்பித்து கொள்ளவில்லை.
சுந்தரியிடம் சொல்லக் கூடாது என்று இல்லை. சுந்தரி அளவாக பேசுவதால் இன்னும் உரிமைகள் அவளின் மாமியார்களுக்கு அவளிடம் வரவில்லை. எல்லாம் கண்ணன் மூலமே சொல்லப்படும். ஆனால் அவர்களுக்கு மட்டும் தான் அப்படி, மற்றபடி அவளின் மாமனார் ஆகட்டும் சின்ன மாமனார் ஆகட்டும் பெண் பிள்ளைகள் ஆகட்டும் சகஜமாய் தான் இருந்தனர்.
அபி அந்த வீட்டின் இளவரசன் தான்!
“எதோ செய்யணும்ன்னு லிஸ்ட் சொல்லிட்டு இருந்தாங்க, நாளைக்கு இங்க காலையில வேலை முடிஞ்சதும் நர்சரியை சிந்தாவை பார்க்க சொல்லிட்டு, வீட்டுக்கு போய் என்னன்னு கேட்டுட்டு என்ன தேவையோ  வந்துடலாம்”
“இன்னும் பதினஞ்சு நாள்ல பண்டிகை வேற, எல்லோருக்கும் துணி எடுத்துக் கொடுக்கலாமா இல்லை பணம் குடுத்துடலாமா” என்றான்.
“உங்க விருப்பம்” என்றாள்.
“ஓய் சுந்தரி, ஏதாவது உருப்படியா சொல்லுடி. நான் மட்டும் லொட லொடன்னு பேசற மாதிரி இருக்கு”
அடுப்படியில் உருட்டிக் கொண்டிருந்தவள் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்து, “துணியும் எடுத்துக் கொடுக்கலாம், பணமும் கொடுத்துடலாம்” என்று முடித்து விட்டாள்.
“அடங்கம்மா, நீ என்ன செலவை கூட்டுற! ஆத்துல போட்டாலும் அளந்து போடணும், எல்லாம் நம்ம ஆளுங்க தான், நம்ம அப்பா அம்மா நம்ம தங்கச்சிங்க தான். ஆனா ஒரு முறை செஞ்சா மறுமுறை அதையே எதிர்பார்ப்பாங்க” என்று பேசிக் கொண்டே அவள் சமைக்க செல்வதை பார்த்தவன்,
“நீ சமைக்க போறியா? வேண்டாம், வேண்டாம் கடையில் வாங்கிக்கலாம்” என்றான் அவசரமாக.  
ஆம்! எல்லோருக்கும் எல்லாமும் வந்து விடுவதில்லை. நிலத்தை, விவசாயத்தை, செடி கொடிகளை உயிர்பிக்க தெரிந்தவளுக்கு சமையல் மட்டும் வரவேயில்லை. மிகவும் சுமார் ரகமே. உடல் உழைப்பை அதிகமாய் போடுபவர்களுக்கு தயிர் சாதம் அல்லது பழையது கூட தேவாம்ரிதமாய் தான் இருந்தது. ஆனால் சுந்தரியின் சமையல் வயிறார உண்ண முடியவில்லை.    
கண்ணன் குறைவாய் உண்ணுவதை பார்த்து சமைக்க ஒரு பெண்மணியை சுந்தரியாகவே வைத்துவிட்டாள். இன்று மாலை அவர்கள் வரமாட்டேன் என்று சொல்லியிருக்க, அதனால் சுந்தரி சமைக்க நிற்க அதற்கு தான் இந்த பாடு!
“நீங்க ரொம்ப பண்றீங்க” என்றாள் முறைப்பாய் சுந்தரி.
“நல்ல சாப்பாடு சாப்பிட்டு பழகிட்டேன், இது இறங்க மாட்டேங்குது” என்று கிண்டல் பேச,
சுந்தரிக்கு வந்த கோபத்திற்கு அவனை அடிக்க என்ன கிடைக்கிறது என்று பார்த்தாள்.
அவளானால் “உண்மையை சொன்னா கோபப்படக் கூடாது” என்று மீண்டும் வம்பு செய்ய,
“உங்களை” என்று அவனை அடிக்க வர,
“முடிஞ்சா என்னை பிடிடி பார்க்கலாம்” என்று அவன் தெனாவெட்டு காண்பித்தான்.
அபியும் பாட்டியும் டிவி கார்டூனில் ஆழ்ந்திருக்க, அவர்கள் கவனத்தை திருப்பாமல், அவனை அடிக்க நெருங்கி வந்தாள். அவன் போக்கு காட்டி அப்படியே படியிறங்கி தோப்பு பக்கம் போக,
இவள் நடையை சிறிய ஓட்டமாக்க, அவன் பெரிய ஓட்டமாக்க, அந்த மாலை மங்கி விட்ட நிலையில் இருட்டு இன்னும் நன்கு கவிலாத நிலையில் “பிடிடி பார்க்கலாம்” என்று ஒரு இடத்தில் சவால் விட்டு நிற்க, சில நொடி சுந்தரி நின்றவள் சேலையை தூக்கி சொருகி, “என்னை பத்தி உங்களுக்கு தெரியாது” என்ற பார்வையை கொடுத்தாள்.
கண்ணனோ அவளின் ஓடும் வேகம் தெரியாமல் “பிடி பார்க்கலாம்” என்ற சவால் விட்டு ஓட,  
அந்தோ பரிதாபம்! சில நிமிடங்களில் எட்டி பிடித்திருந்தாள், எட்டி பிடித்தவளை அப்படியே கட்டி தூக்கி கொண்டு அருகில் இருந்த தென்னை மரத்தில் சாய்ந்து நின்றான்.
இருவருக்குமே மூச்சு வாங்கியது!
அவன் மேலேயே சாய்ந்து மூச்சு வாங்கினாள்.
“என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று கேட்டபடி,
“உனக்கு என்ன ஆச்சு?” என்றான் பதிலுக்கு.
“எனக்கா? எனக்கு என்ன?” என்றாள் புரியாதவளாய்.
“ஊர்ல இருந்தப்போ அவ்வளவு வேலை குடுத்த, இப்போ இங்க வந்த பிறகு எனக்கு பெருசா ரொம்ப வேலை இல்லை. ஏன்னா பாதி வேலை நீ செய்யற. அப்போ செய்யலை, இப்போ செய்யற, ஏன்,” என்றான்.
“சும்மா தான்” என்றாள் அவனின் முகம் பார்த்து தோளை குலுக்கி.
“இல்லை ஏதோ இருக்கு, நீ சொல்லாம நான் விடமாட்டேன்” என்றான் இறுக்கமாய் கட்டி.
“ஒன்னுமில்லை” என்றாள் மறுப்பாய்.  
“ஏதோ இருக்கு, ஒரு வேளை, வேலை இருந்தா நான் வாரா வாரம் வருவேன்னு அவ்வளவு வேலை வெச்சியோ”  
ஒரு புன்னகை மட்டுமே சுந்தரியிடம் பதிலாய், அந்த புன்னகை “என்னே உன் யோசனை?” என்று பரிகாசம் செய்தது.
ஆனாலும் அதிசயமாய் கோபம் வரவில்லை கண்ணனிற்கு. 
“ஓய் சுந்தரி, இந்த பீ ஈ எம் பி ஏ மூளைக்கு தோணாத ஏதோ ஒன்னு இருக்கு, என்ன அது?” என்றான்.
“அபி தேடுவான்” என்றாள் அதற்கு பதில் சொல்லாமல்.
“பாட்டி பாத்துக்குவாங்க, தனியா விட மாட்டாங்க, அவனுக்கு பிடிச்ச ஷோ இன்னும் ஒரு மணி நேரம், அவனும் அசைய மாட்டான். நீ பேச்சை மாத்தாம சொல்லு” என்றவனின் குரலில் இருந்த பிடிவாதம் நீ சொல்லாமல் விட மாட்டேன் என்று சொன்னது.
“பணம்” என்றாள் ஒற்றை வார்த்தையாய்.
“என்ன பணம்?” என்றான் புரியாதவனாய்.
இப்படி ஒரு பதில் எதிர்பார்க்கவே இல்லை!
“அது நமக்குள்ள எப்பவும் பணம் ஒரு பிரச்சனையா இருந்தது, நீங்க வேலையை விட்டு இங்க முழு நேரம் வந்த பிறகு, இங்க சம்பளம் மாதிரி கேட்டீங்க, சண்டை போட்டதுல அந்த மாதிரி எதுவும் நான் பண்ணலை, கொஞ்சம் சொதப்பிட்டேன். நீங்க அதுல கோபிச்சிக்கிட்டு பணத்தை எடுக்காம இருந்தீங்க”
“சரி. நாம சொதப்பினதை சரி செய்வோம்ன்னு நீங்க பணத்துக்காக என்னை எதிர்பார்க்க வேண்டாம்ன்னு உங்க பேர்ல நிலம் வாங்கினேன், அதுல வர்ற வருமானத்தை நீங்க எடுத்துக்கட்டும்னு, நீங்க யாரையும் எதுக்கும் எதிர்பார்க்க வேண்டாம்னு, அதுலயும் உங்களுக்கு கோபம் வந்துச்சு, அதுவும் சொதப்பிடிச்சு, அப்புறம் என்னவோ தப்பு தப்பா நடந்து பிரிஞ்சு போனீங்க!”
“அப்போவும் அப்பா பணத்தை செலவு பண்ண உங்களுக்கு சங்கடம், என்னென்னவோ பேசி உங்களை நம்மகிட்ட பணத்தை வாங்க வெச்சாலும், எப்போன்னாலும் சூழ்நிலை மாறலாம்னு புரிஞ்சது. அது தான் நீங்க உங்க உழைப்பை போட்டீங்கன்னா அந்த பணத்தை உபயோகப்படுத்த சங்கடப் படமாட்டீங்கன்னு கொஞ்சம் அதிகமா வேலை வெச்சேன்” என்றாள் அவனின் முகம் பார்த்து சிறு சங்கடத்துடன்.
கண்ணனின் முகம் பெரிதாய் ஒரு புன்னகை சிந்தியது. “என்னே என் அறிவு வாளி” என்று அவளின் நெற்றியோடு நெற்றி முட்டினான்.
முகம் முழுவதும் ஒரு மலர்ச்சி அவனிடம், கூடவே “என்னமா யோசிக்கற சுந்தரி நீ” என்றான்.
இவன் பாராட்டுகிறானா கிண்டல் செய்கிறானா என்று புரியாத சுந்தரி, அவனின் முகத்தினையே பார்க்க, அந்த பார்வை கண்ணனின் மனதை நெகிழ்த்தியது.
“என்ன சுந்தரி?” என்றான் வாஞ்சையாய்.
ஒன்றும் சொல்லாமல் அவனின் நெஞ்சினில் முகம் புதைத்துக் கொண்டாள்.
உண்மையில் கண்ணனுக்கு கோபம்போல வருத்தம் போல எல்லாம் வரவேயில்லை, எவ்வளவு யோசித்து இருக்கிறாள் தங்களுக்குள் இன்னும் எதுவும் சரி வராமல் போகக் கூடாது, நானும் பணத்தை உபயோகிக்க வேண்டும் என்று நினைத்து என.
அதுதான் நிஜமும் கூட, முதல் சில மாதங்கள் தயங்கினாலும், பின் அந்த பணம் உபயோகிக்க அவனிடம் எந்த தயக்கமும் இல்லை, ஏனென்றால் எல்லா வேலைகளும் அவன் செய்தான் அதனால்.
“புத்திசாலிடி நீ” என்றான்.
“ம்ம், நான் ஒன்னும் நிறைய படிக்கலை உங்களை போல” என்று முகம் உயர்த்தாமல் சொல்ல. அதில் நிச்சயம் பெருமை தான் என் கணவன் நிறைய படித்திருக்கிறான் என்று.
“அடியேய் என் சுந்தரி” என்று கொஞ்சலாய் பேசியவன், “படிச்சவன் அறிவாளி ஆக முடியும், ஆனா புத்திசாலி ஆக முடியாது”
“புத்திசாலித்தனம்ன்றது இயற்கை, அதுக்கும் படிப்புக்கும் சம்மந்தமில்லை, அது தானா வரும். அது உனக்கு நிறைய இருக்கு. என்ன தான் உழைச்சாலும் கூட ஒரு புத்திசாலித்தனம் இருந்தா தான் அந்த உழைப்புக்கு ஒரு அர்த்தம் கிடைக்கும். அது உனக்கு நிறைய இருக்கு” என்றான் கர்வமாய்.      
சுந்தரி அவனின் அணைப்பில் அப்படியே நின்றாள். அவனின் அணைப்பில் அவனால் சுந்தரியை உணர முடிந்தது மிகவும் நெகிழ்ந்திருக்கிறாள் என்று.
“இப்போ அபி தேடமாட்டானா?” என்றான்.
அப்போதும் சுந்தரி அவனை விட்டு அசையவில்லை.
“என்ன நீ? உன் சமையல் கொடுமையில இருந்து எங்களுக்கு விடுதலை கொடுக்க போறியா இல்லையா, என்னை விட்டா தான் கடையில போய் வாங்கணும்”  
அதற்கும் அசைவில்லை!
“என்ன சுந்தரி, சொன்னா தானே தெரியும்” என்றான் பொறுமையாய்.
நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தவள், “என்னை விட்டுட்டு இனிமே போக மாட்டீங்க தானே” என்றாள். அந்த குரல், அந்த முகம் கண்ணனை வெகுவாக தாக்கியது.  

Advertisement