Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்பது :
சாருவை பெண் பார்த்து சென்று திருமணமும் முடிவாகிவிட, இன்னும் பொறுப்புகள் கூடின கண்ணனுக்கு. இன்னும் ஒன்றிரண்டு மாதங்கள் இருந்தன படிப்பு முடிய, அதுவும் இன்னும் ஒரு வாரம் கல்லூரி சென்றால் போதும், பின் இறுதி பரீட்சைக்கு ப்ராஜக்ட் சப்மிட் செய்ய என்று சென்றால் போதும்.
ஆக இன்னும் ஒரு வாரத்தில் கோவையை விட்டு சேலத்திற்கு மூட்டை கட்ட முடிவெடுத்து விட்டான். ஆம்! பரீட்சையின் போது மீண்டும் சென்று கொள்ளலாம் என்று.
இங்கே தனியாய் இருந்து என்ன செய்ய என்று எண்ணம்?
ஆனால் வீட்டை காலி செய்ய வேண்டாம், பரிட்சை முடிந்து காலி செய்து கொள்ளலாம் என்று எண்ணம்.
இந்த அவனின் முடிவை ரகசியமாக வைத்திருந்தான் சுந்தரியிடம் சொல்லவில்லை. ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என்ற எண்ணம்.    
இன்னம் சில நாட்களில் திருவிழா வேறு, இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த எருதாட்டாம் இந்த வருடம் நடத்த முடிவு செய்திருந்தனர்
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்பார்த்து இருந்தனர். தீர்ப்பு என்ன வந்தாலும் அதை மீறும் எண்ணத்திலும் இருந்தனர். தீர்ப்பு சாதகமாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மீண்டும் ஒரு கலவரம் நடக்க வாய்ப்புகள் அதிகம். அதனால் இப்போதைக்கு மனைவி, மகனை தனியாய் விடும் எண்ணமில்லை. அப்பாவின் சித்தப்பாவின் அருகில் இருக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது.
எப்படியும் இந்த வாரம் அங்கேயே சென்று விட தானே போகிறோம் என்று நினைத்தவன், புதன் அன்று இடையில் சென்று வருவான். புதன் மாலை சென்று வியாழன் காலை திரும்புவான், இந்த முறை போகவில்லை. இந்த முறை ஊரில் நிறைய வேலை அவனிற்கு. ஊரிலிருந்து வந்ததில் இருந்தே மிகுந்த அசதி. அன்று அவனுக்கு தலைவலியும் கூட, எப்போதும் இந்த மாதிரி வலி உணர்ந்ததில்லை. அதனால் வந்ததும் படுத்துக் கொண்டான். சுந்தரியிடம் வரவில்லை என்று கூட சொல்லவில்லை. 
சுந்தரி “வந்துட்டு இருக்கீங்களா, எந்த இடத்துல இருக்கீங்க?” என்று மாலை ஐந்து மணிக்கு அழைத்தாள். எப்போது நான்கு மணி கல்லூரி முடிந்ததும் காரை கிளப்பியிருப்பான்.
இன்று அவள் கேட்கவும், “இல்லை சுந்தரி, வரலை, நாளைக்கு முக்கியமான காலேஜ் வேலை, தலை வேற வலிக்குது, வந்துட்டு உடனே திரும்பணும்னா சிரமம், நான் தூங்கறேன், முழிச்சதும் கூப்பிடறேன்” என்று வைத்து விட்டான்.
அவனின் குரலும் சோர்வாக தான் ஒலித்தது.
சுந்தரிக்கு அவனை அப்போதே பார்த்தாக வேண்டும் போல தோன்றியது மனதே இல்லை அவளுக்கு! இந்த முறை அவன் வந்த போது அவனுக்கு நிறைய வேலைகள், சுந்தரியும் அதனை உணர்ந்தே இருந்தாள். எப்போதும் எந்த வேலையும் உடனுக்குடன் முடித்து விடுவாள். ஆனால் இந்த இரண்டு வருடமாக எல்லாம் கண்ணனுக்காக காத்திருக்க அவனுக்கு நிறைய வேலைகள். அவளின் பயம் அவளிற்கு என்ன செய்வாள்.       
அவளிற்கு தெரிந்த இரண்டு வருடங்களில் இப்படி அவன் சொல்லியதே இல்லை. நிறைய அவனை படுத்துகிறோமோ, அதனால் வரவில்லையோ என்ற எண்ணமும் தலை தூக்க கண்ணிடம் சென்றே ஆக வேண்டும் என்ற உந்ததுதல்.
நேரே அவளின் ஆயாவிடம் போய் நின்றவள், “அவருக்கு வேலையாம் ஆயா வரலை. நானும் அபியும் ஊருக்கு அவர்கிட்ட போறோம்” என்றாள்.
“என்ன கண்ணு? காரு ராசா கிட்ட இருக்கு, நீ எப்படி போவ?” என்றார்.
“பஸ்ல” என்றாள்.
“எப்படி கண்ணு? நீ இன்னும் பஸ்ல போனதேயில்லை, இரு நானு சின்ராசை அனுப்பறேன்”
“ஒன்னும் வேணாம், இங்க யாரு பார்த்துக்குவா? நான் தனியா போறேன்” என்றாள் பிடிவாதமான குரலில்.
“என்ன கண்ணு நீ? உனக்கு பழக்கமில்லை, சரி உன் மாமனார் கிட்ட சொல்லு” என்றார் வடிவுப் பாட்டியும் விடாமல்.
“என் புருஷனை பார்க்க போக யார் கிட்ட சொல்லணும், முடியாது! உனக்கு யார்கிட்டன்னாலும் சொல்லிக்கோ” என்றவள் வேகமாக ஒரு பையில் மகனுக்கும் அவளுக்கு உடை எடுத்து வைத்து, அவர்கள் இருவரும் உடை மாற்றி, அரை மணி நேரத்தில் தெரிந்த ஆட்டோ ஒன்றை வரச் சொல்லி அதில் ஏறி பை பாஸ் வந்து கோவை செல்லும் பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது ஆறு மணி!
பஸ்ஸோ சென்றது, சென்றது, சென்று கொண்டே இருந்தது! அது கோவையை தொட்ட போது ஒன்பதரை மணி! எப்போதும் அவர்கள் வர இரண்டு மணி நேரம் தான் இன்று மூன்றரை மணி நேரம். பஸ்ஸில் இவ்வளவு நேரம் ஆகுமென்று தெரியாது.
அபி வேறு பேசிக் கொண்டே வர, “அபி பேசாதே வேடிக்கை பாரு” என்று அவனிடமும் கடுமையாக பேசினாள். அபி குழந்தை தான் என்றாலும் புரிந்து கொண்டான். அம்மா இப்போது பேச மாட்டாள் என்று. அவனும் பின்னர் சமத்தாக வெளியே வேடிக்கை மட்டுமே பார்த்தான். அவ்வப்போது அம்மாவின் முகத்தையும் பார்க்க, எதுவுமே சுந்தரியின் கருத்தினிலும் இல்லை கவனத்திலும் இல்லை.          
பஸ் ஸ்டாண்டில் பஸ் நிற்கவும், வெளியே வந்து மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து இவர்களின் வீடு இருக்கும் இடம் வந்த போது பத்து மணி.
அப்போது தான் கண்ணன் எழுந்து அமர்ந்து இருந்தான். தலைவலி அதிகாமாகி இருக்க சித்தியிடம் அவனாக சென்று காஃபி கேட்டு குடித்து அவர் கொடுத்த மாத்திரையும் உண்டு உறங்கி இருந்தான்.
சுந்தரியிடம் பேசவேயில்லையே என்று ஃபோன் எடுத்து அழைக்க, அப்போது தான் அவளும் அபியும் இறங்கினர் வீட்டின் வாயிலில்.
ஆட்டோவிற்கு பணம் கொடுக்கும் மும்முரத்தில் அவள் போனை எடுக்காமல் இருக்க, அபி அவளின் கையில் இருந்து வாங்கியவன், அதை எடுத்து காதில் வைத்து “ஹலோ” என்றிருந்தான்.
“சிங்கக் குட்டி என்ன பண்றீங்க?”  
“பா, வெளில வாங்க” என்றான் மகன்.
இதோ மூன்றரை வயது அல்லவா, பள்ளிக்கு இந்த வருடம் சேர்க்க இருந்தனர்
“எதுக்குடா?”  
“பா வாங்க” என்றான் மீண்டும்.
ஏதோ உந்த வேகமாக கதவை திறந்து பால்கனியில் நிற்க, கீழே ஆட்டோவிற்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த சுந்தரி தான் பட்டாள்.
வேகமாய் படியில் இறங்கினான்.
சுந்தரி ஆட்டோவை அனுப்பிவிட்டு நிற்க, “ஹேய், எப்படி வந்த? வர்றேன்னு சொல்லவேயில்லை” என்று வேகமாக கேட்டை திறக்க,
“பஸ்ல வந்தோம் பா” என்று மகன் தான் பதில் சொன்னான்.
“என்ன பஸ்லயா?” என்றபடி மகனை தூக்கினான்.
கேட் திறக்கும் சத்தம் கேட்டு சித்தப்பா வந்து பார்த்தவர், “வாம்மா சுந்தரி” என்றார். சித்தியும் அந்த பேச்சில் வந்தவர் “வாம்மா” என்றவர், “என்ன தனியாவா வந்த” என்றார்.
சுந்தரி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழிக்க, “ஆமாம் சித்தி, நான் தான் கொஞ்சம் அசதியா இருக்கு வான்னு சொன்னேன்” என்றான்.
“என்னடா நீ? இந்த நேரத்துல புள்ளைய தூக்கிட்டு தனியா வந்திருக்கா?” என்று திட்டினார்.
“அட என்ன சித்தி. பொண்ணுங்க அமெரிக்கா போறாங்க, இது என்ன இங்க தானே!” என்று சமாளித்தான்.
“இந்த பேச்செல்லாம் வேண்டாம்” என்று அவனை கடிந்தவர், “இனி இந்த நேரத்துகெல்லாம் ஒத்தையில வரக் கூடாது, முன்னமே கிளம்ப என்ன?” என்று சொல்லி,
“சாப்பிட்டு இருக்க மாட்டீங்க, நீங்க போங்க, நான் குடுத்து விடறேன்!” என்றார்.
“எதுக்கு அத்தை வேண்டாம்? நான் ஏதாவது செஞ்சிக்குவேன்” என்று அதற்கு தான் சுந்தரி வாயை திறந்தாள்.
“ப்ச், தினமுமா குடுக்கறேன்” என்று அதட்ட, “சரி” என்று அவர்கள் மேலே செல்ல, அபியை தூக்கிக் கொண்டே தான் கண்ணன் மாடி ஏறினான்.
சுந்தரி அவர்களுக்கு பின் தான் ஏறினாள்.
அபியை சென்று சோபாவில் விட்டான், சுந்தரி எதுவும் பேசாமல் படுக்கையறைக்குள் சென்று விட்டாள்.
“என்னடா ஆச்சு அம்மாக்கு?” என்று ரகசியம் பேசினான் கண்ணன் அபியிடம்.
“தெரியலைப்பா, பஸ்ல கூட நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலை. கோபிச்சாங்க, நான் வெளில தான் வேடிக்கை பார்த்தேன்” என்று மகன் முகம் சுருக்கி உதடு பிதுக்கி அப்பாவிடம் சொல்ல,
அவனை தூக்கி அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவன், “அம்மா, ஏதோ நினைப்புல சொல்லியிருப்பா, அபி கிட்ட அப்படி பேசக் கூடாதுன்னு அப்பா சொல்லிடுவேன்” என்றான் சமாதானமாக.
அபியும் கழுத்தை கட்டிக் கொண்டான், சிறிது நேரம் அப்பாவும் மகனும் கொஞ்சிக் கொண்டனர்.    
பின்னே, “அத்தை இப்போ சாப்பாடு கொண்டு வருவாங்க, இங்கேயே இரு, வந்தா அப்பாவை கூப்பிடு” என்று உள்ளே சென்றான்.
குளியறையில் சத்தம் கேட்க “சரி, பிரெஷ் ஆகிறாள்” என்று புரிந்தான்.
அதற்குள் அபி வந்தான் “பா, சுச்சா” என்று சொல்லிக் கொண்டே, “சுந்தரி, அபிக்கு போகணும் வா” என்று கதவை தட்டினான் கண்ணன் வேண்டுமென்றே வம்பு செய்வதற்காக.
சுந்தரியின் மனம் முழுவதும் சஞ்சலம்! காபி குடித்து மாத்திரை போட்டு தூங்கி இப்போது மனைவி மகனை பார்த்ததால் கண்ணன் உற்சாகாமாய் இருக்க, “என்னை பார்க்க பிடிக்காமல் தான் வரவில்லையோ? இப்போது நன்றாக தானே இருக்கிறான்!” என்று சஞ்சலம்.
வெளியே வரவும் மகனை தூக்கிக் கொண்டு வேகமாய் சென்றான் பாத்ரூமினுள்.
“அம்மா பேசவேயில்லை” என்று மகன் சொன்ன பிறகு அதற்கு ஈடு  செய்ய என்று மகனிடம் உற்சாகமாய் கதை பேசினான்.
மகனின் வேலையை முடித்து அவனை அழைத்து வெளியே வந்த போது சுந்தரி ஹாலிற்கு வந்து அமர்ந்து இருந்தாள்.
முகமும் ஒரு மாதிரி இருக்க, கண்ணன் என்ன என்று கேட்பதற்குள் கீழே சித்தி வீட்டில் இருந்து சின்னவள் சாம்பார் எடுத்து வர, அவளுடன் பேச ஆரம்பித்து இருந்தாள் சுந்தரி. பின் பெரியவளும் தோசைகள் எடுத்து வர, இவர்கள் மூவரும் உண்ணும் வரையிலும் சலிக்காமல் இரண்டு இரண்டு தோசைகளுக்கு நடந்தனர்.
ஒன்றாக சுட்டு எடுத்து வர சொன்னாலும் கேட்கவில்லை. சுந்தரிக்கு பசி வேகமாக உள்ளே இறக்க, அபியை கண்ணன் பார்த்து கொண்டான்.
மூவரும் உண்டதும் சிறிது நேரம் அபியுடன் விளையாடி தான் சென்றனர். அவர்களின் சித்தி உறங்க அழைத்தாலும் அசையவில்லை. அவர்கள் செல்லவும், அபி அப்பாவின் மடியில் அமர்ந்து கதை பேசினான்.
பார்த்த சுந்தரிக்கு தான் மட்டும் ஏதோ தனி என்பது போல தோன்ற உள்ளே சென்று விட்டாள்.
“சுந்தரி” என்று கண்ணன் அழைக்க வேறு செய்ய, அப்போதும் திரும்பவில்லை. என்ன விஷயம் என்று தெரியவில்லை, ஆனால் அந்த க்ஷணம் மகனை பார்ப்பது தான் முக்கியம் என்று தோன்றியது.
ஐந்து நிமிடம் தான் வாயடிப்பான், பின்பு அவனே இறங்கி ஓடி விடுவான் என்று அபியை பற்றி தெரிந்தவனாக கண்ணன் அங்கேயே இருக்க, தன் பின்னாலும் கண்ணன் வரவில்லை என்பது இன்னும் மனதை ஏதோ செய்ய அமைதியாய் படுத்து விட்டாள்.
சிறிது நேரத்தில் அபி வந்தவன் அம்மாவை அணைத்து படுத்துக் கொள்ள, அப்போதும் கண்ணன் வரவில்லை, பத்து நிமிடங்கள் கழித்து தான் வந்தான் மகனிற்கு பாலை எடுத்துக் கொண்டு வந்தான்.
அப்போது அபி பாதி உறக்கத்தில் இருக்க, “ப்ச், அவனை எதுக்கு தூங்க விட்ட பால் குடிக்கணும் தானே” என்று சுந்தரியை கடிந்தவன் பின் மகனை எழுப்பி பாலை கொடுத்தான்.
அவனும் சிணுங்கியபடியே குடிக்க, சுந்தரியை முறைத்து பார்த்தான். கோபத்தில் சுந்தரி வெளியே எழுந்து போய் விட, கண்ணன் மகன் குடித்ததும் அவனை உறங்க வைத்து தான் வெளியே வந்தான்.
சுந்தரி சோஃபாவில் அமர்ந்திருக்க, சென்று பக்கத்தில் அமர்ந்தவன், எதுவும் பேசாமல் அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். எதுவும் பேசவுமில்லை கேட்கவுமில்லை.
சுந்தரி எதுவும் பேசுவதாக காணோம் என்று புரிந்தவன், அவனாய் எதுவும் பேசவில்லை, மனைவியின் மடியில் படுத்தும் அவனிற்கு மனதிற்கு ஒரு இதம், அதனை எதுவும் பேசி கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. அவளுக்கு ஏதோ சுணக்கம் என்று புரிந்தது. எதற்கு என்றும் தெரியவில்லை.
அந்த நேர இதத்தை தொலைக்க விரும்பாதவன்,  
நேராய் அவளின் முகம் பார்த்து படுத்திருந்தவன், அவள் தன்னை பார்ப்பதாய் காணோம், நேராய் தான் பார்க்கிறாள் என்று புரிந்தவன், அவள் புறம் திரும்பி படுத்து, வயிற்றில் முகம் புதைத்து இடுப்பை கட்டிக் கொண்டான். சுகம் சுகம் ஒரே சுகம் தான்!
இடையை இறுக்கமாய் பிடித்து முகத்தை அழுத்தி புதைக்க, அத்தனை நேரம் இருந்த சுந்தரியின் சுணக்கமும் குறைந்து, அவனின் தலை முடியை இதமாய் கோதினாள்.
 

Advertisement