Advertisement

இதற்கு கணவன் என்று அவள் எதுவுமே செய்வதில்லை, ஆனால் இங்கே கண்ணன் வந்தான் என்றால் எல்லா வேலைகளும் அவனதே, சனி ஞாயிறில் அல்லது ஒரு விடுமுறையில், அவன் வருவதற்காக பல வேலைகள் காத்திருக்கும், சுந்தரி அன்றாட வேலைகள் செய்வதுடன் சரி. பாக்கி நேரம் நர்சரி பார்ப்பது போல வேறு வேலைகள் பார்க்க மாட்டாள்.
தென்னந் தோப்போ, மாந்தோப்போ, வயலோ, பூந்தோட்ட பராமரிப்போ அவனுக்காக காத்திருக்கும்.
இறக்கிய காய்களை எண்ணும் வேலைகள் கூட அவனது தான். மட்டை உரித்தார் என்றால் மேற்பார்வையும் அவனது தான்.
“ரொம்ப தாண்டி என்னை பனிஷ் பண்ற?” என்பான்.
சுந்தரி பதில் சொல்லவே மாட்டாள், அவளின் காரணங்கள் அவளுக்கு.
ஆம்! இங்கு அவன் வரும் நாட்களில் தனிமை அதிகம் இருக்காது. நாள் முழுவதும் செய்யும் வேலையில் அடித்து போட்டது போல உறக்கம் தான் வரும்.    
இதோ இவன் வர போக இருக்க, புதிதாய் வாங்கிய காட்டின் வேலைகளும் பல அவன் தலையில் விழுந்தன, நெற் பயிரிடுவது அங்கே எல்லோருக்கும் புதிதுதானே, கற்றுக் கொண்டிருந்தனர்.
இந்த முறை இயற்கை விவசாயத்தில் விளைந்த நெற்பயிர்கள் சொந்த உபயோகத்திற்கும், தெரிந்தவர்கள் கேட்பதற்கு மட்டும் என்று கொடுத்தது போக, மீதம் இருந்ததை அப்படியே அவர்களின் ஊரின் திருவிழாவிற்கு என்று எடுத்து வைக்க சொல்லி விட்டாள் சுந்தரி.
சொல்லியது என்னவோ சுந்தரி தான்! ஆனால் சொல் எல்லாம் கண்ணன் மூலமே! அப்போது பார்ப்பவர்களுக்கு அவன் தான் செய்வது போல தோன்றும்.
ஆம்! அவள் என்ன டார்ச்சர் செய்தாலும் எங்கேயும் அவனின் பங்கு முன்னிலை இருப்பது போல பார்த்துக் கொள்வாள்.
அதுவும் இப்போது பண விஷயதில் கண்ணா கேட்காவிட்டாலும் வரும் போதெல்லாம் அவனிடம் பணம் இருக்கிறதா என்று பார்த்து விடுவாள்.
“வேலை செஞ்சப்போ எல்லாம் சம்பளம் கொடுக்கலை, இப்போ என்ன இவ்வளவு கொடுக்கற? எதுக்கு? வேணும்னா நானே எடுத்துக்கறேன், இல்லை உன்னை கேட்கறேன்” என்றாலும் விடுவது இல்லை.
“அதென்னா எனக்கு சம்பளம் கூட குடுக்கலை, ஆனா சாருக்கு நித்யாக்கு எல்லாம் பாக்கெட் மணி குடுத்திருக்க” என்று சண்டை பிடிப்பான்.
இதோ சாரு படிப்பை முடித்து விட்டாள். அவளுக்கும் திருமணதிற்கு பார்த்துக் கொண்டிருந்தனர்.
இப்போது கண்ணன் பயணிப்பது கூட “சாருவை, நாளை பெண் பார்க்க வருகிறார்கள், வா” என்று சொல்லி தான்.
ஹைவேஸில் நூற்றி முப்பதை தொட்டது வேகம், ஒன்றரை மணி நேரத்தில் அடைந்து விட்டான்.
அவன் கிளம்பிய நேரத்தை கணக்கிட்டிருந்த சுந்தரி, அவன் வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும் என்று நினைத்திருக்க அவனோ அதற்கு முன்பே நின்றான்.
“எப்படி இவ்வளவு சீக்கிரம் வந்தீங்க?” என்றாள் சுந்தரி.
“வேகமா பறந்து வந்தேன்” என்று சொல்ல,
“யாரு உங்களை இவ்வளவு வேகமா வர சொன்னா, கொஞ்சமும் உங்களுக்கு அக்கறை இருக்கா எங்க மேல? பொண்டாட்டியும் பையனும் பார்த்துட்டு இருப்பாங்கன்னு…?” என்று ஆரம்பித்த சுந்தரி வொய் ப்ளட் சேம் ப்ளட் ரேஞ்சுக்கு பேசிய பேச்சுக்களில் நொந்து விட்டவன்,    
“பொண்டாட்டியும் பையனும் காத்துட்டு இருப்பாங்கன்னு தான் வேகமா வந்தேன்” என்றான் பாவமாய்.
“அதுக்கு வேகமாக வரணும்னு வரக் கூடாது, பத்திரமா வரணும்னு தான் நினைப்பிருக்கணும்” என்று சொல்ல, சுற்றும் பார்த்தவன் “அபி எங்கே?” என்றான் பேச்சை மாற்றும் பொருட்டு. இல்லாவிட்டால் சுந்தரியின் பேச்சை நிறுத்த முடியாது என்பது அவன் இந்த சில மாதங்களில் கண்ட உண்மை.     
“அவனை சாரு கூட்டிட்டு போயிருக்கா”
“பாட்டி எங்கே?”
“சித்தப்பா ஒருத்தர் பொண்ணுக்கு குழந்தை பொறந்திருக்கு, பார்க்க போயிருக்கு”
“அப்போ வீட்ல யாரும் இல்லையா?” என்று உல்லாச குரலில் சொன்னான், அப்படியே சுந்தரியை தள்ளி சுவரோடு சாய்த்து நிறுத்தி அவளின் இருபுறம் கை ஊன்றி, அவள் வெளியே செல்ல முடியாதபடி கைது செய்ய,
“அய்யே” என்று முகம் சுளித்தாள் சுந்தரி. அவள் எதற்கு முகம் சுளிக்கிறாள் என்று தெரியும்.
“நீ இருக்கியே” என்று சலித்தபடி அவனின் சட்டையை கழற்றி வீசினான். ஆம், அவன் பெர்ஃபியும் போட்டிருந்தான், சுந்தரிக்கு செண்டின் மனம் ஆகாது!
இப்போது நெருங்கி நின்று “இப்ப வருதா?” என்றான்.
“ரொம்ப வரலை, ஆனா கொஞ்சம் வருது” என்றாள் வேண்டுமென்றே.
ஆனால் வரவில்லை, அவன் உடையின் மீது தான் அடித்திருந்தான்.
அவள் வேண்டுமென்று சொல்கிறாள் என்று புரிந்தவன், அவள் மேல் சாய்ந்து நின்று “வாசம் பிடிடி என்னை, வருதான்னு” என்றான் உல்லாசமாக.
சுந்தரியின் சத்தம் எல்லாம் குறைந்து “ம்ம்” என்றாள் மெல்லிய முனகலாய், அவள் வாசம் பிடித்தாளோ இல்லையோ அவன் பிடித்தான்.
“இப்ப தான் குளிச்சியா?” என்றான்.
“ம்ம்” என்றாள் முகம் திருப்பி.
“ஏன் எதுக்கு?” என்று கேட்ட படியே, அவள் முகம் திருப்பியதால் வாகாய் தெரிந்த அவளின் கழுத்தில் முகத்தை பதித்து வாசம் பிடிக்க, சுந்தரியின் உடல் முற்றிலும் தளர, “விடுங்க” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.
கழுத்தை விடுத்து அவளின் ஈர கூந்தலில் முகம் புதைத்தவன், “எதுக்கு இப்போ தலைக்கு குளிச்ச” என்றான் மீண்டும்.
“நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றாங்கன்னு சீக்கிரம் போகணும்னு தலைக்கு இப்போவே ஊத்திக்கிட்டேன்”  
“ஏன் இல்லன்னா என் பக்கத்துல வர மாட்டீங்களா?” என்றாள் சவால் விடும் த்வனியில்.   
“ம்ம், இது வாஸ்தவமான பேச்சு” என்றவன், “எனக்கு இந்த சோப் வாசனை பிடிக்கலை” என்று மீண்டும் கழுத்தை வாசம் பிடித்தவன் “எனக்கு உன் வாசனை தான் வேணும்!” என்றான்.
சுந்தரியிடம் பதிலில்லை கணவனின் தீண்டலில் மயங்கி அனுபவித்து நின்றாள்.
அணைப்பில்லை, முத்தமில்லை, எதுவுமில்லை, சுவரில் கையூன்றி அவள் மேல் சாய்ந்து நின்றான், முகத்தை அவளின் மேல் புதைத்து, ஒரு இளைப்பாறுதல்.  
சில நிமிடங்கள் இருவரும் மற்றவரின் அருகாமையில் இளைப்பாறினர்.
“எப்போ போகணும்?” என்றாள் மெதுவாய்.
எப்போதும் அவள் கேட்கும் கேள்வி, கணணன் வந்ததுமே! ஆம்! வேலைகளும் பட்டியலிட வேண்டும், அவளும் மனதிற்கு சமாதானம் சொல்ல வேண்டும் அவனை விட்டு இருக்க.
அப்படி அவனுக்கு பழக்கப் பட்டிருந்தாள் மனதளவில்!
“ம்ம்! நாளைக்கு புதன் இல்லையா? எப்படியும் திங்கள் தான் போவேன்?” என்றான்.
ஐந்து நாட்கள் இங்கே தான் என்றதில் சுந்தரியின் அகமும் முகமும் மலர, அவனை அணைத்து நெஞ்சினில் முகம் பதித்துக் கொண்டாள்.
“என்ன சுந்தரி? பாசமா கட்டிப் பிடிக்கற? நிறைய வேலை வெச்சிருக்கியோ எனக்கு?” என்று கிண்டலாய் கேட்க.
“அட எப்படி கண்டுபிடிச்சீங்க” என்று கிண்டலாய் கேட்டவள், “முதல்ல எனக்கு டீ வேணும்” என்றாள்.
சிரிப்பு வந்து விட சிரித்து விட்டவன், “ஹ, ஹ, நீ கேட்பேன்னு தெரிஞ்சு நானும் வழில எங்கேயும் நிறுத்தலை. வீட்டுக்கு போனா என் பெண்டாட்டி கேட்பா, அப்போ அவளோட சேர்ந்து குடிச்சிக்கலாம்னு வந்துட்டேன்” என்றான்.
“அப்போ சரி போங்க, போய் டீ வைங்க” வாய் தான் சொன்னதே தவிர கை அணைப்பை விலக்கவில்லை.
“என்னை விட்டா தான் போக முடியும்”  
“அதெல்லாம் முடியாது, இப்படியே போங்க!” என்றாள் வேண்டுமென்றே.
கண்ணனும் சிறிதும் யோசிக்கவில்லை, அவளை இரு கை கொடுத்து தூக்கிக் கொள்ள, “அச்சோ, விடுங்க, என்னை கீழ போடப் போறீங்க” என்று சொல்ல,   
“உன்னை” என்று அவளை முறைத்தபடியே அப்படியே தூக்கி சென்று சமையல் மேடை மேல் அமர்த்தி டீ வைக்க ஆயத்தமாக,
என்னவோ என்னவோ சுந்தரிக்கு மனதிற்கு இதமாக இருந்தது. “இங்கே வாங்க” என்று ஏதோ சொல்பவள் போல கூப்பிட, கண்ணனும் ஏதோ விஷயம் போல என்று வந்தான் அவளின் பாவனையில்.
“உங்க முகத்துல ஏதோ இருக்கு” என்று முகத்தை பக்கம் இழுக்க, ஏதோ இருக்கிறது போல என்று கண்ணனும் முகத்தை பக்கம் கொண்டு சொல்ல, சுந்தரி பார்த்திருக்க “என்ன இருக்கு சுந்தரி?” என்றவனிடம்.
“எனக்கு முத்தம் வேண்டும்” என்றாள்.
அவளை நெருங்கி நின்று அமர்ந்திருந்த அவளை இடுப்போடு வளைத்து பிடித்தவன், “இதெல்லாம் கேட்க கூடாது குடுக்கணும்” என்று இன்முகமாய் சொல்ல,
“இல்லை, எனக்கு குடுக்க வேண்டாம், எனக்கு வாங்க தான் வேணும்” என,
சுந்தரியின் பிடிவாதம் தெரிந்தது தானே, “நான் நிறைய குடுக்கறேன். நீ ஒன்னே ஒன்னு குடு பார்ப்போம்” என்று பேரம் பேசினான். ஆம்! சுந்தரியாய் கொடுத்ததேயில்லை.
“அது அப்புறம் பார்க்கலாம், முதல்ல நீங்க குடுங்க” என, பின்னே அங்கே இன்னுமா பேசி நிற்பான். வேண்டுமென்றே இதழ் ஒற்றி எடுக்க, “ப்ச், இது பத்தாது” என்றாள், இன்னும் சிறிது நேரம் நிலைக்க விட, “இதுவும் பத்தாது” என்றாள். கண்ணன் சொன்னது போல அவன் நிறைய நிறைய கொடுத்த போதும், “போதும்” என்று சுந்தரி விலகவில்லை, அவளாகவும் கொடுக்கவில்லை.   
இது அவர்களுக்கான உலகம் மட்டுமே! அவர்களின் இருவருக்குமான உலகம்! அதில் அவர்களோடு அபி மட்டுமே!
ஆம் சுந்தரிக்கு முன்பே யாரோடும் பெரிய ஒட்டுதல் கிடையாது! இப்போது கண்ணன் வந்த பிறகு கண்ணன் மட்டுமே!
கண்ணனுக்கு அம்மா அப்பா தங்கை சித்தி சித்தப்பா தங்கைகள் என இருந்தாலும் முன்பு இருந்த ஒட்டுதல் சுந்தரியுடனான திருமணதிற்கு பின் இருக்கவில்லை. வீட்டை விட்டு சென்றபோது அதுவும் சென்றிருந்தது. இப்போதும் எல்லோருடனும் பேசுவான், கவனித்து கொள்வான், எல்லாம் செய்து கொடுப்பான், ஆனால் எல்லாம் பகிரும் ஒரு ஒட்டுதல் சுந்தரியுடன் மட்டுமே! .என்ன நடந்தாலும் சுந்தரியை யாரிடமும் விட்டுக் கொடுக்கவேயில்லை!
“போதும் போகலாம், அப்புறம் உன் முகமே வித்தியாசமா தெரியும், வா!” என்று சொல்லி சுந்தரியை கிளப்பிச் செல்ல, சுந்தரியின் மனம் முழுவதுமே ஒரு நிறைவு!   
அப்போதும் “டீ” என்றாள்.
“அடியேய், எங்கம்மாவை வெச்சி தர சொல்றேன் வா” என்று இழுத்து சென்றான் புன்னகையோடு.

Advertisement