Advertisement

அத்தியாயம் முப்பத்தி எட்டு :
இதோ அதோ என்று கண்ணன் அவனின் கல்லூரி படிப்பின் இறுதி கட்டத்தில் இருந்தான். வெள்ளி கல்லூரி முடிந்து கிளம்பினால் பின் திங்கள் காலை கல்லூரி வருவது போல பழக்கப் படுத்தி இருந்தான். நடுவிலும் எப்போது தோன்றினாலும் சென்று வருவான் என்று சொல்ல முடியாது, ஏனென்றால் தோன்றும் சூழ்நிலையே வராது. அது தான் சுந்தரி அழைப்பாளே.  
சுந்தரி அவனை உண்டு இல்லை என்று செய்து கொண்டிருந்தாள் என்று தான் சொல்ல வேண்டும். ஆனாலும் எல்லாவற்றிற்கும் வளைந்து கொடுத்தான். ஒன்று அவனுக்கு நன்கு புரிந்தது வேறு யாரிடமும் சுந்தரி அப்படி அல்ல அவனிடம் மட்டுமே அப்படி என்று.
முதல் முறை அவனை கோவையில் வந்து பார்த்த போது, அபிக்கு உடல் சற்று தேறியதும், அவளுக்கு அங்கே இருக்கவும் முடியவில்லை, தோட்டத்தை பார்க்க வேண்டுமே, காலையில் இருந்து ஒன்றும் செய்யாமல் மாலை வரை வெறும் சமைப்பது என்ன என்று மட்டும் யோசித்து இருக்க அவளுக்கு முடியவில்லை.
தோட்ட ஞாபகமே! “சரியா தண்ணி விட்டிருப்பாங்களா நர்சரிக்கு, புது பதியன் நான் சொன்னதை சரியா சிந்தா போட்டிருப்பாளா, தோப்புக்கு மருந்து வைக்கணுமே வெச்சிருப்பாங்களா?, ஆயா நம்மை தேடுமோ, ராசாத்தி வேற என்ன பண்ணுறா தெரியலை என்று தோட்டம், தொறவு மாடு கண்ணு” என்று எல்லாம் அதே நினைவே.
கணவனின் அருகாமையில் மகிழ்ச்சி தான் என்றாலும் அவ்வப்போது அங்கே ஊருக்கு நினைவு தப்பியது, செய்வதற்கு ஒன்றுமே இல்லாத எண்ணம் கூட.
கண்ணனும் அவ்வப் போது அவளின் முகம் யோசனைக்கு போவதை உணர்ந்தான். பத்து நிமிடத்திற்கு ஒரு முறை சிந்தாவிற்கு அழைத்து வேலை வேறு சொன்னாள்.  
“என்ன பண்ற நீ? இப்படி நொச்சக் கூடாது. சிந்தா சரியா தான் பண்ணும். ஆனா உன் அளவுக்கு அவங்களுக்கு செய்ய வராது” என்று சொல்லிவிட,
முறைத்தாலும் பின் அமைதியாகிவிட்டாள்.
“ஊருக்கு எப்போ போற?” என்று அவனால் கேட்க முடியாது. அது தப்பாகிவிடும்! அவளுக்கு கோபம் வந்து விடும்! ஆனால் இன்று வரை அவள் அமைதியாக இருப்பது அதுவே அதிகம், வெகு நாட்களுக்கு அவளின் தோட்டம் பார்க்காமல் அவளால் இருக்க முடியாது என்று புரிந்தவன்,
அவளிடம் போகிறாயா என்று எப்படி கேட்பது என்பது ஒரு புறம், மனைவி மகன் என்று இரு நாட்களாக எந்த சச்சரவும் இல்லாத அமைதியான வாழ்க்கை, அவனுக்கு இனித்தது. கண்ணனும் கல்லூரிக்கு சென்றாலும் மதியமே வந்து விடுகிறான்.
சுந்தரியோடு வாக்குவாதங்கள் இல்லாத அமைதியான வாழ்க்கை, அவனுக்குமே ரசித்தது. பேசாமல் படிப்பை விட்டு அவர்களோடு சென்று விடலாமா என்று யோசித்தாலும், சுந்தரி பேசினாலும் பொருத்து போக முடியுமா? மீண்டும் என் மனம் முறுக்கினால் என்ன செய்வது என்று அவனுக்குள்ளேயே யோசனை.
இந்த பிரிவு இருவரையுமே சற்று பக்குவப் படுத்தும் என்று தோன்ற படிப்பை விடும் யோசனையை விட்டான்.
மாலை கீழ் வீட்டில் சித்திப் பெண்கள் வந்து அபியை தூக்கி சென்றிருக்க, அமைதியாக கணவனோடு டீ அருந்திக் கொண்டிருந்தாள் சுந்தரி. சூடாய் இருக்க, இஞ்சியின் காரத்தோடு கொஞ்சம் கொஞ்சமாய் தொண்டையில் இறக்கினாள்.
கண்ணன் என்னவோ அவளுக்கு கற்றுக் கொடுக்க டீ வைத்து காண்பித்து சொல்லியிருக்க, அவளோ “என்னை விட நீங்களே நல்லா வைக்கறீங்க” என்று சான்றிதழ் கொடுத்து அவனையே அங்கிருந்த எல்லா வேளையும் டீ வைக்க செய்திருந்தாள். 
நெருங்கி தோள் உரச தான் அமர்ந்திருந்தனர். மெதுவாக சுந்தரியே “நான் அங்க கொஞ்சம் நாள் இங்க கொஞ்சம் நாள் இருக்கட்டுமா, நீங்க சொன்ன மாதிரி” என்று கேட்டு விட்டாள்.
“வேண்டாம் சுந்தரி” என்று கண்ணன் சொல்ல, அவன் அடுத்த வார்த்தை பேசக் கூட இல்லை, அவனை திரும்பி பார்த்தவளின் கண்களில் ஏகத்திற்கும் முறைப்பு, அதனையும் விட கண்களில் நீரும் நிற்க அவனை பார்த்திருந்தாள்.
எப்போதும் சுந்தரிக்கு ரோஷம் அதிகம் தானே, கேட்கலாமா வேண்டாமா என்று பல மாதிரி மனதை வருத்தி ஒரு சஞ்சலத்தோடு அதனை கேட்டிருக்க, இவன் வேண்டாம் என்று மறுக்கவும், ஒரு இயலாமை, கேட்டிருக்க வேண்டாம் என்ற உணர்வு, கண்களில் நீர் நிறைய வைத்திருந்தது.  
“ஹேய், என்ன?” என்று அவளின் தோளை சுற்றி கண்ணன் கையை போட அவளிடம் சற்று அசைவில்லை, அப்படியே அமர்ந்திருந்தாள்.
“என்ன இப்போ?” என்றான் சற்று கடுமையான குரலிலேயே.
“அப்போ உங்களுக்கு என் மேல கோபம், அதான் நான் வேண்டாம் சொல்றீங்க” என்றாள்.
“போடி லூசு” என்றவன், “நீ வராத நான் வர்றேன்னு சொல்ல விடணும்” என்றான்.
நம்பாமல் திரும்பி பார்க்க, “சும்மா பண்ணாத சுந்தரி, உன்னால அங்க இங்கன்னு இருக்க முடியுமா? கண்டிப்பா முடியாது! உனக்கு தெரியுமோ இல்லையோ உன்னை பத்தி எனக்கு தெரியும்” என்றான் ஸ்திரமான குரலில்.
“நான் எதுக்கு இதுக்கு ஊரை விட்டு வரணும், என் வீட்ல போய் உட்கார்ந்து இருக்க முடியாதா? நான் வேணும்னா நீ என்னோட அங்க வந்து பொழைன்னு சொல்ல முடியாதா?”
“உனக்கு இப்போ குற்றவுணர்ச்சி, உன்னால தான் நான் வந்துட்டேனோன்னு. அதனால உனக்கு இப்படி எல்லாம் தோணுது. நிச்சயமா உன்னால அங்கேயும் இங்கேயும் இருக்க முடியாது”
“இப்போ நீ ஒரு ஆசையில செஞ்சாலும், ஒரு கட்டத்துல உனக்கு எரிச்சல் வரும், அப்புறம் சொல்லிக் காட்டுவ, உங்களுக்காக நான் என்னை மாத்திக்கிட்டேன். என்னோட உயிர்ப்பு என்னோட செடி மரம் காடு ன்னு தெரிஞ்சும் நீங்க வேணும்னே நான் உங்க பின்னால வரணும்னு இப்படி பண்ணிட்டீங்க, உங்களால தான்னு சொல்லுவ” என்றான்.  
சுந்தரி அவன் சொல்ல வருவதையே புரிந்து கொள்ளவில்லை “அப்போ உங்களுக்காக நான் எதுவுமே செய்ய மாட்டேன்னு சொல்றீங்க” என்றாள் காட்டமாக.
“திரும்ப திரும்ப எல்லாத்துலயும் பிடிவாதம் பிடிக்காத சுந்தரி, உன்னால முடியாத விஷயத்தை பேசாதே, எனக்கு தெரியும்” என்று அவளுக்காய் நிற்க,
சுந்தரிக்கு ஒரே எண்ணம் தான், இன்னும் இவனுக்கு என்னை பிடிக்கவில்லையோ? அது தான் அதுவும் இதுவும் சொல்கிறானோ? அதுதான் இப்போது குழந்தை வந்து விடும் என்று சொல்லி என்னை தள்ளி வைக்கிறானோ என்ற எண்ணம்.
அது கண்களில் நீராய் வடிய அப்படியே முறைப்புடன் அமர்ந்திருக்க , “பார்த்தியா நம்மளால ரெண்டு நாள் சேர்ந்திருக்க முடியலை, சண்டை பிடிக்க ஆரம்பிச்சிட்டோம்!”
“கல்யாணம் பண்ணி டைவர்ஸ் குடுத்துட்டேன்னு வாழ்க்கை முழுசும் தண்டனை குடுக்காதே சுந்தரி, புதுசா வாழ்க்கையை ஆரம்பி, என்னை நம்பு, திரும்ப திரும்ப பேச வைக்காதே!”
“பாஸ்ட் இஸ் பாஸ்ட்! நோ எக்ஸ்ப்லனேஷன்ஸ்! நோ ரெக்ரெட்ஸ்!” என்றான் தீர்க்கமாய் பார்த்து.
“அப்படின்னா?” என்றாள் புரியாமல், வாயை திறந்து.
“போனது போகட்டும், விளக்கமும் வேண்டாம், வருத்தமும் வேண்டாம்!” என்றான் தீர்க்கமான குரலில்.
“என் மேல உனக்கு ஆசை பாசம் எல்லாம் இருந்தாலும், இன்னமுமே நம்பிக்கை இல்லவே இல்லை. அதை எப்படி கொண்டு வர்றதுன்னும் எனக்கு தெரியலை. முதல் கோணல் முற்றும் கோணல்ன்னு நம்ம வாழ்க்கையை கொண்டு போயிடக் கூடாது. நான் சொல்றதை கொஞ்சம் நாளைக்கு கேள், நீ அங்கேயே இரு, நான் வருவேன்!” என்றான்.
“நாலு மாசம் ஆச்சு நீங்க வரவேயில்லை, என்னையும் கூப்பிடலை, ஆயா, சிந்தா, உங்கப்பாம்மா எல்லோரும் என்கிட்டே கேட்கறாங்க, ஏன் நீங்க வரலை இல்லை நான் ஏன் உன்கிட்ட போகலைன்னு, என்ன சொல்வேன்? மனசுக்கு கஷ்டமாயிருக்கு”      
“இனி யாரும் கேட்க மாட்டாங்க, அப்போ நான் வர்றேன்னு சொல்லவேயில்லையே, இப்போ சொல்றேன் தானே!” என்றான்.
ஆனாலும் நம்பாமல் இருக்க, கண்ணன் தானே ஊருக்கு அழைத்து வந்தான். பின் கார் அவனிடம் தான். ஆம்! அது தான் சனி ஞாயிறின் போதும், இடையில் எப்படியும் ஒரு முறையாவது வரவழைத்து விடுவாள். அதனால் அவனுக்கு கார் தேவை என்பதால் பிடிவாதமாய் “எடுத்து செல்லுங்கள், இல்லை உங்களின் வீட்டிற்கு தேவை என்று நினைத்தால் புதிது வாங்குங்கள்” என்று சொல்ல,
திரும்பவும் செலவு செய்ய மனதில்லாதது, கூடவே அவனின் பணத்தில் வாங்கியது தானே அதனை தன்னுடன் வைத்துக் கொண்டான்.  
அதுவும் அவள் அழைக்கும் அழகே அலாதி தான். “எனக்கு டீ சாப்பிடணும் போல இருக்கு, வந்து போட்டுக் குடுங்க” என்று அழைப்பாள் சுந்தரி.
“ஏய், என்ன ஏத்தம்டி உனக்கு, உனக்கு டீ போட்டு குடுக்க நான் கோயம்பதூர்ல இருந்து சேலம் வரணுமோ?” என்று அவன் சொன்னாலும்,
“வந்து போட்டு தருவீங்களா? இல்லையா?” என்று தான் அவளின் கேள்வி இருக்கும்.
“ஏன் உங்களை பார்க்கணும்னு சொன்னா குறைஞ்சு போயிடுவியா?” என்பான்.
“அதெல்லாம் சொல்ல முடியாது, சொல்ல மாட்டேன்” என்பாள்.
“போடி வர முடியாது” என்று சொன்னாலும் நிச்சயம் வந்து நிற்பான். அப்படி வரும்போதும் சுந்தரி சில சமயம் காய்ந்து விடுவாள் அவனிடம்.   
பல சமயம் தேடுகிறாள் என்பது பிடித்திருந்தாலும், சில சமயம் என்ன இது என்று தோன்றும். ஆம்! காலங்கள் ஓடினாலும், இணக்கங்கள் வந்திருந்தாலும், பிணக்குகள் அவ்வப்போது வரத் தான் செய்கின்றன.
சுந்தரி எப்படியோ கண்ணன் அதற்கு பழகிக் கொண்டான், சுந்தரிக்கும் சில சமயம் புரியும், தான் செய்வது அதிகப் படி என்று. “நான் அவனிடம் எதற்கு காய்கிறேன்? என்ன எதிர்பார்க்கிறேன்” என்று அவளுக்கும் புரியவில்லை.

Advertisement