Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஏழு :
அணைப்பிலேயே வெகு நேரம் நின்றிருந்தவள் அவனிடம் “சாரி” என்றாள்.
அணைப்பை விலக்காமலேயே “எதுக்கு” என்றான். அவனுக்கு உண்மையில் புரியவில்லை.
“முதல் தடவை நீங்க போனதுக்கு நான் எந்த வகையிலும் காரணம் இல்லை. ஆனா இப்போ நீங்க என்னை விட்டு வந்ததுக்கு நான் மட்டும் தானே காரணம்” 
ஒரு பெருமூச்சை வெளியிட்டவன், “அப்படி சொல்ல முடியாது சுந்தரி. ரெண்டு பேர் இருக்கும் ஒரு விளையாட்டுல ஒருத்தர் ஜெயிச்சா மத்தவங்க தோத்து போவாங்க. அப்போ ஒன்னு ஜெயிச்சவன் திறமைசாலியா இருக்கணும் இல்லை தோத்தவன் திறமையில்லாதவனா இருக்கணும்” என்று நிறுத்தியவன்,
“இங்க ரெண்டாவது நான். இந்த சுந்தரி பொண்ணை எனக்கு கையாள தெரியலை, அதனால ஓடி வந்துட்டேன்” என்றான் கணமான குரலில்.
“இல்லையில்லை, நான் தான் துரத்தி விட்டுட்டேன்” என்றாள் வருத்தமான குரலில்.
“நீ என்னை போன்னு சொல்லலை, அப்போ நீ என்னை துரத்தலை, நானே தான் வந்துட்டேன். என்னவோ எல்லாம் எப்பவும் தப்பு தப்பா செய்யறேன்” என்றான். குரலில் ஒரு இயலாமையின் வெளிப்பாடு.
எதுவாகினும் அவனின் எண்ணங்களை சொல்லக் கூடிய ஆள் சுந்தரி மட்டுமே! அவளிடம் திரும்ப வந்த பிறகு கண்ணனுக்கு அது தானாகவே வந்தது.
பல சமயம் சுந்தரி தான் அதற்கு செவி சாய்க்க மாட்டாள், அவனை புரிந்து கொள்ள முயற்சிக்கவேயில்லை.    
இப்போது கண்ணனின் குரலில் இருந்த இயலாமை சுந்தரியை வருத்த அந்த பேச்சை மேலே தொடர இஷ்டப்படாமல், “ஆமாம்! முன்னால ஈரம் ஆகுதுன்னு திரும்பி நிக்க சொன்னீங்க. அப்போ பின்னால ஈரம் ஆகாதா?” என்ற அதி முக்கியமான கேள்வியை கேட்க,
கண்ணன் சிரித்து விட்டான், பின் “இதெல்லாம் சொல்லுவாங்களா? பின்னால நான் மட்டும் தான் பிடிச்சிருந்தேன், இப்போ முன்னால நீயும் என்னை பிடிச்சிருக்க தானே!” என்றான் ரசனையாக.  
“ஒரு வேளை, நான் கட்டி பிடிக்கலைன்னா?”
“நானே உன் கையை எடுத்து என்னை சுத்தி போட்டுகிட்டிருப்பேன்”
“என்ன திடீர்ன்னு?” என்றாள் கிண்டல் போல.
“அதானே என்ன திடீர்ன்னு?” என்றான் அவளை போலவே.
“ம்ம், இந்த கட்டிப்பிடிக்கறது”
“சும்மா தான்” என்றான் அவளை விடாமல். மெதுவாக அவனின் கைகளில் இருந்து விலகியவள் இருவருக்கும் பால் விட்டாள்.
இருவரும் அதனை எடுத்துக் கொண்டு வந்து மகனை பார்த்து விட்டு அங்கேயே கட்டிலில் ஆளுக்கு ஒரு புறமாய் அமர்ந்தனர்.
பின்னே மீண்டும் பேச்சுக்களற்ற மௌனம்.
அமைதியாக பாலை அருந்தியவர்கள் பின் மகனை நடுவில் போட்டு படுத்துக் கொண்டனர்.
இருவரிடமுமே ஒரு தயக்கம்.
நடு இரவில் அபி எழுந்து கொண்டு சிணுங்க லேசாக ஜுரம் இருப்பது போல தோன்ற , வேகமாக சுந்தரி எழுந்து கொண்டாள். அபி அம்மாவின் மேல் படுத்து சிணுங்கியதால் அவளுக்கு விழிப்பு வந்து விட்டது.
ஆனால் அதிக சத்தமில்லை. அதனால் கண்ணன் விழிக்கவில்லை.
அவனின் உறக்கம் கலைக்காமல் மகனை தூக்கி கொண்டு வந்து இடுப்பில் வைத்துக் பால் சுட வைத்து ஆற்றினாள்.
பின் சோபாவில் அமர்ந்து மகனை அருந்த வைக்க, கண்ணன் விழித்தவன், இவர்களை காணாமல் வந்து விட்டான்.
“ஏன் என்னை எழுப்பலை?” என்று கேட்டுக் கொண்டே.
“இப்போ எழுப்ப தான் இருந்தேன், இவனுக்கு லேசா சுடுது, மருந்து கொடுக்கலாமா?”  
“எப்போ காய்ச்சல் மருந்து கொடுத்தோம்” என்று கணக்கு பார்த்து, “இல்லை, வேண்டாம்! இன்னும் ஆறு மணி நேரம் ஆகலை. அதுவுமில்லாம ரொம்ப காய்ச்சல் இல்லை லேசா தானே சுடுது” என்றவன்,
அபி பால் குடித்து முடித்ததும் அவனை கையில் வாங்கிக் கொண்டான்.
பால் குடித்ததும் தெம்பான அபி, அப்பாவின் கைகளில் இருந்து இறங்க முற்பட, வேறு வழியில்லாமல் கண்ணன் இறக்கி விடவும், வெளியே போக முற்பட்டு கதவிடம் போய் நின்றான்.
“டேய், என்ன பகல்ன்னு நினைச்சியா, உள்ள வா” என்றான்.
குழந்தையும் என்ன செய்யும், கிடைத்த ஒரு பொருளை அவனின் கைகளில் எடுத்துக் கொண்டு அப்பா “டுர்ர்ரர்ர்ர்ர்” என்று கார் ஓட்டுவது போல் காண்பித்தான். அவனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு.
“டேய், இந்த நேரம் விளையாட்டா?” என்று கண்ணன் சலிப்பது போல பேச,
சுந்தரியின் முகத்தில் ஒரு ரகசிய புன்னகை.
எதற்கோ அவள் புறம் திரும்பிய கண்ணனின் கண்களில் அது பட, “என்ன சிரிப்பு?” என்றான்.
“நான் சிரிச்சேனா எப்போ?” என்று அவள் கேட்ட விதத்திலேயே சிரித்திருக்கிறாள் என்று புரிய,
“என்ன சொல்லு?” என்று அவன் வற்புறுத்த,
“அதுவா அப்பா தான் எந்த விளையாட்டும் விளையாடமாட்டார், பையனும் விளையாடக் கூடாது சொன்னா, என்ன சொல்ல?”
“என்ன நான் விளையாட மாட்டேனா? நான் எல்லாம் ஸ்கூல்ல காலேஜ்ல எல்லாம் நான் ஸ்போர்ட்ஸ்மென்” என்றவன், “இந்த நேரம் பையன் விளையாண்டான், அது தான் சொன்னேன்” என்று சீரியசாய் பேச,
சுந்தரிக்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்க சிரித்து விட்டாள்.
பின்பு தான் அவள் ஏடாகூடமாக ஏதோ பேசுகிறாள் என்று புரிந்து பின் யோசித்து, பின்பு பல்பு எரிய, “ஓய், என்னடி நக்கலா? நான் உன்கிட்ட விளையாடாம தான் உன் பையன் இப்போ இங்க விளையாடுறானா?” என்றான் கெத்தாய்.   
“அச்சோ விளையாடுணீங்களா, எப்போ? எங்கே? எனக்கு ஞாபகமேயில்லை!” என்றாள் பாவனையாய் உதடு பிதுக்கி.  
“ம்ம், ஞாபகப்படுத்தலாம்னு பக்கம் வந்தா தான் என்னை தள்ளி விடற, அப்போவும் கெஞ்சி நின்னா அசைய மாட்டேங்கற என்ன பண்ண?” என்றான் அவளை போலவே உதடு பிதுக்கி.
பதில் சொல்லாமல் ஒரு கிண்டல் பார்வை சுந்தரி பார்க்க, “ஃபோர்ஸ் பண்ணவா முடியும்? மனைவின்னாலும் அது தப்பில்லையா?” என்றான் உணர்ந்து.
இதற்கு சுந்தரியிடம் பதிலே இல்லை! ஆனால் கிண்டல் பார்வை விடை பெற்று சென்றிருந்தது.  
அமைதியாகிவிட்டாள்.
“ஹேய், உன்னை ஹர்ட் பண்ணனும்னு சொல்லலை விடு” என்றவனிடம்.  
“அது, அன்னைக்கு… அன்னைக்கு… நான் உங்களை தேடினேன்னு சொன்னேன், நீங்க என் பக்கம் வர்றதில்லைன்னு சொன்னேன். அதுக்கு பிறகு என் பக்கம் வந்தீங்களா? எனக்கு கஷ்டமா போச்சு, நான் கூப்பிட்டு நீங்க வந்த மாதிரி…” என்று கூம்பிய முகத்தோடு சொல்ல,
இதற்கு என்ன பதில் சொல்வது என்று இப்போது கண்ணனுக்கு தெரியவில்லை.
பின் மெதுவாய் “நீ என்னை உன் பக்கத்துல கூடவிடலை, என் பக்கமும் நீ வரலை. கிட்ட தட்ட ஒரு மாசம் வெளில படுத்தேன், உள்ள வந்து படுங்கன்னு கூட சொல்லலை. அப்போ நீ என்னை தேடுறியா இல்லையான்னு எனக்கு எப்படி தெரியும். பிரிஞ்சு போய் ஒரு வகையில கட்டாயப் படுத்தி வந்திருக்கேன். அப்போ எனக்கு தயக்கம் இருக்க தானே செய்யும். அன்னைக்கு தான் கொஞ்சம் பக்கம் வந்தாலும் ஓகேன்ற மாதிரி பேசின அது தான் வந்தேன். என்ன பண்ணட்டும்? இந்த சுந்தரி பொண்ணு பக்கம் வர எனக்கு பயம் போல” என்றான் ஆதங்கமான குரலில்.
கணமான அந்த சூழலை விரும்பாத சுந்தரி “ஆங், ரொம்ப தான் பயம். நம்பிட்டேன். பக்கம் வராததுக்கு இது ஒரு சாக்கு” என்று நொடிப்பவள் போல சொல்ல,
“பாருடா வாயை, இனி தள்ளி விட்டாலும் உன்னை விட்டேன்னா என்னன்னு கேளுடி?” என்று மீசையை முறுக்கினான்.
“அதெல்லாம் அப்புறம்” என்று அருகில் வந்தவள், அவளின் நெடு நாளையை ஆசையான மீசையை முறுக்கி விட, அவளை மேல் அமர்த்திக் கொண்டான்.
மகன் அவன் பாட்டிற்கு விளையாட இங்கே அவனின் அப்பாவும் அம்மாவும் வேறு ஒரு லோகத்தில் இருந்தனர்.
“என்ன பண்றடி?” என்றான் மனைவியின் அருகாமையை அனுபவித்தவாறே, லேசாய் அவளை வாசம் பிடித்து.
“ம்ம் மீசையை முறுக்கரேன். எனக்கு ரொம்ப நாளா இப்படி பண்ணனும்னு ஆசை, ஆனா முன்ன மாதிரி இல்லை குறைச்சிக்கிடீங்க” என்றாள் ஆதங்கமாக.
“அங்க விவசாயி, அப்போ பெரிய மீசை ஓகே! இங்க கார்ப்பரேட், அப்போ சரி வராது! வித்தியாசமா தெரிவேன்”  
சுந்தரி ஏமாற்றமாய் பார்க்க, “திரும்ப அங்க வந்த பிறகு வெச்சிக்கலாம்” என்றான்.
“ம்ம், ம்ம்” என்றாள் சன்னக் குரலில்.
அவளின் கைகளை மீசையில் இருந்து விலக்கி உதட்டில் பதித்துக் கொண்டான். ஒரு சிறு செய்கை ஆனால் சுந்தரியின் உடல் சிலிர்த்தது.   
அங்கே அவர்கள் மட்டுமல்ல மகனும் இருக்கிறானே, அது புத்தியில் உரைக்க, அந்த உணர்வின் தாக்கத்தில் இருந்து சில நொடிகளில் வெளியே வந்து அனிச்சையாய் மகனை பார்த்தாள்.
மகன் இவர்களை பார்த்திருப்பது புரிய, சுந்தரியின் பார்வை உணர்ந்து கண்ணனும் அபியை பார்த்தவன், “வாடா என் சிங்கக் குட்டி” என்று அழைக்க, இதற்கே காத்திருந்தவன் போல வேகமாய் வந்து “மா” என்று அழைத்து சுந்தரியை இழுத்தான், அவன் மேலே அமர்வதற்காக.
“முடியாது போடா” என்று மகனிடம் சண்டையிட்டு இன்னும் வாகாய் கண்ணனின் மேல் சாய்ந்து அமர, கண்ணனும் அவளை அணைப்பது போல கைகளை வைக்க,  
அவ்வளவு தான் அபி அழுகைக்கு கத்திய கத்தலில் துள்ளி இறங்கியவள், அடுத்த நொடி அவனை தூக்கி கண்ணனின் மடியில் வைத்து “மூச்! கத்துன!” என்று மிரட்டினாள்.
சுந்தரி இறங்கிய வேகத்திற்கு, “ஷப்பா, நம்மை தள்ளி விடாம போனாளே!” என்று கண்ணன் பதறியே விட்டேன். இறங்கிய வேகத்திற்கு அபியை தூக்கி திணிக்க, மகனை இறுக்கிக் கொண்டான்.   
பின்னே நடு ஜாமம், அபி இந்த கத்து கத்தினாள் சுந்தரியும் தான் என்ன செய்வாள்.

Advertisement