Advertisement

சுணங்கிய முகத்தை சில நொடிகளில் மாற்றிக் கொண்ட கண்ணன், பிறகு அவனின் முகத்தில் எந்த பாவனையையும் காண்பிக்கவில்லை. காலேஜில் ப்ரொஃபசர் கிளாஸ் எடுக்கும் போது, புரிகிறதோ இல்லையோ கவனிக்கிறோமோ இல்லையோ, புரிவது போல கவனிப்பது போல முகத்தை வைத்திருப்போம் அல்லவா அப்படி வைத்திருந்தான்.   
அமைதியை கலைத்தது சுந்தரி தான்.
“அது அப்படி கிடையாதுங்க அத்தை, அவருக்கு இன்னும் எல்லாம் பெருசா செய்யணும்னு, இப்போ அவரில்லைன்னாலும் எந்த வேலையும் நிக்க போறதில்லை, நானே எல்லாம் சமாளிச்சிக்குவேன் தெரிலைன்னா இவரை கேட்பேன். அதனால இப்போவே படிச்சிக்கலாம்னு” என்றாள் கண்ணனை விட்டுக் கொடுக்காமல்.
“அப்போ எல்லாம் உன் தப்பு தான். என்னால எல்லாம் உங்களை விட்டுட்டு இருக்க முடியாது. ஒன்னு இங்க இருங்க இல்லை என்னை கூட்டிட்டுப் போங்கன்னு சொல்ல மாட்டியா?” என்று அவள் மேல் பாய்ந்தார்.
கண்ணனுக்கும் சுந்தரிக்கும் என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.      
பின்னே இப்படியாக பேசி அபி தூக்கத்திற்காக அழும் வரை பேச்சு தொடர்ந்தது.
வேகமாக அவனுக்கு தோசை ஊற்றி கொடுத்தார். கண்ணனையும் சுந்தரியையும் உணவுண்ண சொல்ல, இன்னொரு நாள் சித்தி இப்போ இவனுக்கு நாங்க மேல போய் ஊட்டிக்கறோம் சித்தி” என்று மகனை தூக்கி மேலே வந்தனர்.   
மேலே வந்த இருவருமே அமைதியாய் இருந்தனர்!
சுந்தரிக்கு கண்ணனின் சித்தி பேசியது எல்லாம் மனதில் ஓடினாலும், அப்போது முதன்மையாய் நின்றது ஒரே எண்ணம் தான். கண்ணன் ஒரு பேச்சுக்காக சொன்னானா இல்லை உண்மையிலேயே தான் அங்கும் இங்கும் மாற்றி மாற்றி இருக்க சொல்வானா? சாத்தியமா? என்ற யோசனை.
அவளையும் மீறி அதன் சாதக பாதகங்களை யோசிக்க ஆரம்பித்தது மனது.  
மேலே வந்தவுடன் “நீ இவனுக்கு ஊட்டு, நான் நமக்கு என்னனு பார்க்கறேன்” என்று அபியை கொடுக்க,
வேலைகள் இயந்தர கதியில் நடக்க,
“இப்போ எதுக்கு இவ்வளவு யோசனையா இருக்கா?” என்று அவளையே யோசனையாய் பார்த்திருந்தான் கண்ணன்.
தடுமாற்றங்கள் தடுமாற்றங்கள் இருவரிடமுமே! வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்று தெரியவில்லை..
கண்ணுக்கு சுந்தரியை மிகவும் பிடிக்கும், அவளின் உழைப்பால், நேர்மையால், தனியாய் மீண்டு வந்ததினால் இப்படி, என் மனைவி என்ற பாசம் உண்டு, பிடித்தம் உண்டு, ஆனால் விட்டு விட்டு இருக்க முடியாது என்றளவில் ஒரு தேடுதல் இல்லை, மனதளவிலும், உடலளவிலும்!
இப்போதும் தனியாய் என்ன செய்கிறாளோ என்ற கவலை உண்டு. ஆனால் அதையும் மீறி சிலது வேண்டும் அல்லவா?
இங்கே சுந்தரிக்கு கண்ணன் அவளுடன் திரும்ப வாழ வந்த பிறகு, அவனை குறித்த தேடுதல்கள் எல்லா வகையிலும் இருந்தாலும், அதனை உணர்ந்திட்டாலும், உணர்த்திட்டாலும் சில பல சண்டைகள் நெருங்க விடவில்லை. அவனையும் அவளையும்!
வாழ்க்கைக்கான புரிதல் இருவரிடமும் இருந்தாலும் வாழ்க்கையை எப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்ற புரிதல் இல்லை. இருவருமே தவறினர்.
இப்போது என்ன செய்வது என்றும் தெரியவில்லை. சித்தி நேரே பேசிவிட்டார், என்ன மற்றவர்கள் பின்னால் பேசுவர்.
மகன் உண்டு முடித்ததும், கண்ணனிடம் கொடுத்தவள், என்ன செய்யலாம் என்று சமையல் அறையில் நின்றாள்.
கண்ணனும் எதுவும் செய்திருக்கவில்லை. எதுவாக இருந்தாலும் வெங்காயம் வேண்டும் தானே, அதனால் அதை மட்டும் அரிந்து வைத்து இருந்தான்.
மகனை கையில் வாங்கியவனிடம் “என்ன செய்ய?” என்று கேட்க, “தெரியலையே” என்றான் சலிப்பாய்.
வாழ்க்கையிலும் என்ன செய்வது என்று தெரியவில்லை, சமையலும் என்ன செய்வது என்று தெரியவில்லை,
“நீங்க பொதுவா உங்களுக்கு என்ன சமைப்பீங்க”
“மாவு வாங்கிக்குவேன், தக்காளி வணக்கிக்குவேன். மதியம் காலேஜ் கேண்டீன், வீட்ல இருந்தா சாதம் வெச்சிக்குவேன், அப்புறம் தயிர் வாங்கிக்குவேன், பின்ன ஏதாவது பொறியல் மட்டும் செய்வேன்” என்றான். இது தினமும் அவர்கள் அலைபேசியில் பேசிக் கொள்வது தான்.
ஊரிலேயே சற்று இளைத்து தான் இருந்தான், இப்போது இன்னுமே அதிகம்!
“இப்படி சாப்பிட்டா எப்படி? நல்லா சாப்பிடணும் தானே” என்றாள் கவலையாய்.  
“என்ன பண்ண எனக்கு சமையல் பெருசா வராது! என் பொண்டாட்டிக்கும் வரலை, எங்கம்மா எனக்கு வக்கனையா கொட்டிக்க பழக்கிடுச்சு, எங்க வீட்ல நிறைய பொண்ணுங்க, அப்போ எனக்கு சமையலும் கத்து தரலை, அங்க வீட்டை விட்டு போனதுல இருந்து கிடைச்சதை உண்டு வாழும் ஆளுங்க லிஸ்ட்ல சேர்ந்துட்டேன் இப்போவும் அதே தொடருது” என்று பெரிதாய் பேசினான்.  
சுந்தரிக்கு உணவு ஒரு பிரச்சனை இல்லை என்ன இருந்தாலும் எப்படி இருந்தாலும் உண்டு கொள்வாள். அதன் பொருட்டே அவளுக்கு உணவு ஒரு பெரிய விஷயம் இல்லை, கண்ணன் அங்கே வந்த போதும் சறுக்கி விட்டாள்.
இப்போது வரையிலுமே கண்ணனுக்கு என்ன பிடிக்கும் என்று கூட தெரியாது.
ஏன் அவனுக்குமே சுந்தரிக்கு என்ன பிடிக்கும் என்று தெரியாது என்பது வேறு விஷயம்.
அவனை சுந்தரி கவலையாய் பார்க்க, “ஹேய், என்ன லுக்கு இது, விடு சீக்கிரம் சமைக்க கத்துக்கறேன்” என்றான்,
“ஹ, ஹ” என்று சிரித்து விட்டவள், “நான் இதை சொல்லணுமா?” என்றாள் சிரிப்போடே.
“நீ சொல்லிட்டாலும்” என்று சிரித்தவன், “உனக்கு சமையல்ன்ற ஒன்னு வரும்னு எனக்கு தோணலை” என்றான் அதே சிரிப்போடு.
ஆனாலும் அதில் உனக்கு வராது என்ற செய்தி தான் பொதிந்து இருந்தது.
“இப்போ உங்களுக்கு சமைக்க இங்க ஆள் வைப்போமா? நான் கீழ அத்தை கிட்ட பேசறேன்”
“வேண்டாம், வேண்டாம், ஏன் ஒருத்தன் நீ என் சாப்பாட்டை சாப்பிட மாட்டியா சொல்வாங்க. பார்த்தல்ல எப்படி பேசினாங்க. இதுவரை மாட்டிக்காம தப்பிச்சேன். இன்னைக்கு வசமா மாட்டிகிட்டேன்”    
“ஆமாம் ரொம்ப பேசறாங்க” என்று சொன்னவள், “நானும் அடிக்கடி வருவேன்னு சொல்லி சமையலுக்கு ஆள் கேட்போம்” என்றாள்.
“நான் தனியா இருக்கேன்” என்றான்.
“அப்போ நான் அங்கேயும் இங்கேயும் மாத்தி மாத்தி இருப்பேன்னு சொன்னது” என்று அவள் சொல்ல,
அதற்குள் உண்ட களைப்பில் அபி உறங்க ஆரம்பிக்க, பேச்சை நிறுத்தி “அச்சோ, இவனுக்கு மருந்து குடுக்கணும்” என்று இருவருமே பதறி பின் மகனுக்கு மருந்து கொடுத்து கண்ணன் அவனை உறங்க வைக்க,
சரியாய் சிந்தா அழைத்து அன்றைய கணக்கை, என்ன என்ன நடந்தது என்று சொல்ல, பின் வடிவு பாட்டி பேச,
சுந்தரி ஃபோன் பேசும் போது தான் கண்ணன் விமலா காலையில் இரண்டு முறை அழைத்த போது “நானாய் கூப்பிடுகிறேன்” என்று சொன்னது ஞாபகம் வர மகன் உறங்கியது தெரிந்ததும் அவன் அழைத்து பேசினான்.
அபியின் உடல் நிலையை கேட்டுக் கொண்டவர் “என்னடா சாப்பிட்டீங்க?” என்றார்.
“இன்னும் ஒன்னுமில்லை மா. அபிக்கு சித்தி குடுத்தாங்க, இப்போ தான் அவனை தூங்க வெச்சோம், இனி தான் பார்க்கணும்” என்றான்.
“மணி இப்போவே ஒம்போதுடா கண்ணா, மாவு இருக்கா?”
“இருக்கு” என்றவன் “சட்னி செஞ்சுக்கறோம்” என்றான்.
“கடையில வாங்கினதா மாவு, தோசை ஊத்தாதே, வெங்காயம் பச்சை மொளகா அரிஞ்சு போட்டு பணியாரம் ஊத்து, சட்டினி செஞ்சுக்கோங்க”  
“ம்ம்” என்றவன் வேகமாய் அம்மா சொன்னதை செய்ய, சுந்தரி பணியாரம் ஊற்ற, இவன் சட்டினி ஆட்ட,
என்னவோ கணவனும் மனைவியும் சேர்ந்து சமைத்து உண்டது சற்று வயிற்றுக்கு அதிகமாகவே சென்றது.
பல நாட்களுக்கு பிறகு திருப்தியான உணவு!
மகனை சோபாவில் இருந்து தூக்கி படுக்கையறை வந்தனர்.
மகனை கிடத்தியவனிடம் மீண்டும் “நீங்க பேச்சுக்கு சொன்னீங்களா? இல்லை நிஜமா சொன்னீங்களா?” என்ற கேள்வியை முன் வைத்தாள்.
பூச்சு பேச்சுக்கள் எதுவுமின்றி “அப்போ சித்தி கேட்ட உடனே சமாளிக்க இந்த பதில் தான் தோணிச்சு சொல்லிட்டேன்” என்றான்.
“ஒஹ்” என்றவள் வேறு எதுவும் பேசாமல் பால் காய்ச்சுவதற்காக சமையலறை வந்து விட்டாள்.
சுந்தரியின் முகத்திலேயே அவளின் ஏமாற்றம் புரிந்தது. ஆனால் அங்கே விட்டு வரமாட்டாளே என்ன செய்ய முடியும் என்று தான் அவனிற்கு தோன்றியது. கண்ணன் சொன்னது போல இருக்க யோசிப்பால் என்று நினைக்கவேயில்லை.     
சிறிது நேரம் பொறுத்த கண்ணன் வர, சாப்பிட்ட பாத்திரங்களை சுந்தரி கழுவிக் கொண்டிருந்தாள், அடுப்பில் பால் இருந்தது, சிறிது நேரம் அவளை நின்று பார்த்தான்.
இவன் வந்ததை நின்றதை எல்லாம் கவனித்த மாதிரி தெரியவில்லை, அவளின் கைகள் வேலை செய்து கொண்டிருக்க, முகம் தொய்ந்து இருந்தது.  
பால் பொங்க போக கண்ணன் வேகமாய் வந்து அடுப்பை அணைத்தான். சற்று விட்டிருந்தாலும் பொங்கி இருக்கும். அது அவளுக்கு தெரியவில்லை!
சுந்தரியின் தோற்றம் கவனமின்மை கண்ணனை ஏதோ செய்ய, சிறிது தயக்கம் இருந்தாலும், மெதுவாய் அருகில் வந்தவன், “என்ன அப்படி யோசனை?” என்று பேசியபடி இருகைகளாலும் அவளை பின்னிருந்து இடையோடு அணைத்தான்.
சுந்தரிக்கு அவளின் இயக்கம் முழுவதும் நின்று பிறகு இயங்கியது.
அனிச்சையாய் பாத்திரம் துலக்கியை கையோடு அவனின் கையை பிடித்தாள்.
“ஹே என்னடி பண்ற?” என்றான்.
சுந்தரி எதுவும் பேசாமல் கண்ணனின் கையினில் பாத்திரம் துலக்கிய சோப் ஒட்டிக் கொள்ள, தண்ணீர் பிடித்து அவளின் கையால் அதனை துடைத்தாள். அவனின் கையோடு சேர்ந்து அவளின் புடவையும் ஈரமாகிற்று.
பின் அவனின் கையை தன் ஈரமான புடவை கொண்டு துடைத்தாள். ஒரு பதட்டம். ஆனால் கண்ணன் மனைவியை அணைத்தபடி அவள் செய்யும் ஏறுக்குமாறான வேலைகளை அனுபவித்தபடி நின்றிருந்தான்.
“சுந்தரி, நீ பாத்திரம் விளக்குறியா, இல்லை என் கையை விளக்குறியா” என்றான் சிரிப்போடு.
அதற்கும் பதிலில்லை, கணவனின் அணைப்பில் நின்றவளுக்கு இன்னுமே கண்ணனின் செய்கை படபடப்பை கொடுக்க, இதயம் வேகமாக துடித்தது.
“பாத்திரம் விளக்கினது, என் கையை விளக்கினது எல்லாம் போதும், முதல்ல என்னை திரும்பி பார்” என்றவனின் குரலுக்கு,
“முடியாது” என்பது போல அப்படியே நின்றாள்.
இன்னும் சில பாத்திரங்கள் சுந்தரி சோப்பில் விளக்கி வைத்திருக்க, அதனை தண்ணீரில் கழுவும் செய்கையை அவளின் கைகள் நிறுத்தியிருக்க,
அதனை கவனித்தவன், சுந்தரியை அணைத்து பிடித்த கைகளை விலக்கி, அவளின் மேல் நன்கு சாய்ந்து கைகளை அவளை சுற்றி இருந்ததை எடுக்கமாலேயே அப்படியே அந்த பாத்திரங்களை எடுத்து பைப்பை திருகி தண்ணீரில் கழுவ ஆரம்பித்தான்.
சுந்தரியின் மேல் எல்லாம் தண்ணீர் தெளித்தது.
“பாரு உன் மேல தண்ணி படுது. நீ என்ன பண்ற திரும்பி நின்னு என்னை கட்டி பிடிச்சிக்கோ” என்றான்.
சில நொடிகள் தயங்கிய சுந்தரி அதனை அப்படியே செய்ய,
அவளின் செய்கையில் சில நொடி தயங்கிய கண்ணனின் கைகள், அந்த பாத்திரங்களை முடித்தே நின்றது.
ஆனால் சுந்தரியின் கைகள் கண்ணனை இறுக்கமாய் அணைத்து பிடித்து, சுகமாய் அவளின் முகம் அவனின் நெஞ்சில் மஞ்சம் கொண்டிருந்தது.     

Advertisement