Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஆறு :
அவன் கீழே அதனை கொட்டித் திரும்பவும் சித்தி பிடித்துக் கொண்டார், “என்ன உன்ற பொண்டாட்டியை கண்ல காட்டுவியா மாட்டியா நீ, உன்ற  கல்யாணத்துல ஒரு தரம் பார்த்தேன் பின்ன வாணி கல்யாணத்துல ஒரு தரம்” என்றார்.
“விடுங்க சித்தி, நாங்க சாயந்தரம் காஃபி குடிக்க உங்க வீட்டுக்கு தான் வர்றேன்” என்றான்.
சித்தி பேச ஆராம்பித்தார் என்றால் நிறுத்துவது கடினம் பேசிக் கொண்டே இருப்பார். சிறு வயதில் இருந்து விஷேஷங்களில் பார்ப்பது தான். உள்ளதை உள்ளபடி பேசுவார் நாசூக்கு பேச்சு இருக்காது. ஆனால் மற்றபடி நல்லவர், முகத்திற்கு நேரே என்ன பேசினாலும் புறம் பேசுவது கிடையாது. எல்லோருக்கும் ஓடி ஓடி சென்று உதவும் பெண்மணி.
இதோ சுந்தரி அவரிடம் நன்றாக பேசியிருந்தால் அவரே மேலே ஏறி வந்திருப்பார். இன்னும் அறிமுகமில்லை என்பதால் தான் தயக்கம் என்று புரிந்து தான் இருந்தான்.        
“காஃபி மட்டும் தான் குடிப்பியா, இல்லை வேற கூட இந்த பஜ்ஜி சொஜ்ஜி எதுவும் சாப்பிடுவியா?”
“நீங்க என்ன கொடுத்தாலும் சாப்பிடுவேன் சித்தி”
“அப்படிங்கற”
“ஆமாங்கறேன்” என்று சொல்லியபடி சிரித்துக் கொண்டே வந்தவன்,
சுந்தரி அவனை பார்த்து இடுப்பில் கை வைத்து “என்ன ஆட்டங்காட்டுறேன்” என்று கேட்க,
“அப்புறம் சண்டை போடலாம், நானும் இன்னும் சாப்பிடலை பசிக்குது. சாப்பிட்டு குளிச்சிட்டு கீழ போவோம், நேத்து வந்தது நீ, இன்னும் அங்க போகலை, போ, சாப்பாடு எடுத்து வை!” என்றான்.
பின் வேகமாய் உண்டு சுந்தரி குளித்து மகனையும் உடம்பு துடைத்து அப்படி இப்படி என்று கிளம்ப ஐந்தரை மணி.
சுந்தரி புடவையில் தான் வந்தாள், புதிது எல்லாம் உடுத்தவில்லை. அவள் வீட்டில் இருந்து அவசரத்திற்கு தூக்கி வந்த புடவையில், தனக்கு பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றிய ஒன்றை கட்டிக் கொண்டு வந்தாள்.
தயக்கத்தோடே தான் வந்தாள். அவளுக்கு அவர்கள் யார் என்று சத்தியமாய் தெரியவில்லை. நேரில் பார்த்தால் தெரியுமோ என்னவோ?
இன்னும் உறவுகளுடன் அதிகம் கலக்கவில்லை, எந்த விஷேஷங்களுக்கு போகவில்லை அல்லவா? அதனால் தெரியவில்லை!
ஆனால் அவர்களுக்கு தெரியும் முன்பு திருமணமாகி பின்பு விவாகரத்தானது, பின்பு மீண்டும் அவளையே திருமணம் செய்து கொண்டது இப்படி!
சுந்தரி வரவுமே ஆர்பாட்டமாய் தான் வரவேற்றார் அவனின் சித்தி. “எப்படியோ உன்ற பொஞ்சாதியை கண்ல காட்டிட்ட” என்று சொல்லியபடி.
“வாம்மா சுந்தரி” என்றவர், “என்னை ஞாபகம் இருக்கா?” என்று கேட்க,
சுந்தரி பதில் சொல்லாமல் புன்னகைத்தாள். உண்மையில் அவளுக்கு தெரியவில்லை.
“அப்போ தெரியலைங்கற?” என்றவர், “இவன் சொல்லியிருக்க மாட்டானே, நாங்க எல்லாம் பங்காளி முறை வேணும்”
“இவனோட அப்பாவோட அப்பாவும், என் வீட்டுக்காரடா அப்பாவும் கூடப் பொறந்தவங்க. அதாவது சித்தப்பா மக்க, பெரியப்பா மக்க, கொஞ்சம் நெருங்கின சொந்தம் தான். ஒரே ஊர்ல இருந்த வரப் போக தெரிஞ்சிருக்கும். எல்லாம் தூரம், அப்போ விசேஷத்துக்கு வர்றதொட சரி” என்றார்.
“இப்போ வாணி கல்யாணத்துல என்னை பார்க்கலை நீ” என்று கேட்க,
சுந்தரி இல்லை என்பது போல தலையசைக்க, “அப்போ இந்த மாமியார் சரியில்லை, நாலு வேலை சொல்லியிருந்தா என்னை நீ மறந்திருக்க மாட்ட” என பேசும் போதே அவரின் மக்கள் வந்தனர், இரண்டுமே பெண் பிள்ளைகள், ஒருத்தி கல்லூரியில், ஒருத்தி பள்ளியில்.
“டேய், குட்டி பையா” என்று அபியை தூக்க முற்பட அபியை அவர்களிடம் விடாத கண்ணன் “போங்க, கை கால் கழுவிட்டு வந்தா தான் தருவேன்” என்றான்.
“அண்ணா” என்று சிணுங்கினர்.
“ஓடு, ஓடு” என்று விரட்டினான்.
பின்பு சிறிது நேரத்திலயே அவனின் சித்தப்பா வந்து விட்டார்.
“வாம்மா” என்றவர் பின் அவரும் உடை மாற்றி வந்து அமர, அதற்குள் அவரின் பெண்கள் “அண்ணி, இந்த சாரு எப்பவும் எங்க அண்ணி அப்படி, எங்க இப்படின்னு ஒரே பேச்சு தான், போங்க” என்றனர்.
“சாரு பேசுவாளா?” என்றாள் சுந்தரி ஆர்வமாக.
“ம்ம், எங்களோட பாமிலி கேர்ள்ஸ் க்ரூப் இருக்கே. நாங்க நிறைய பொண்ணுங்க , அண்ணா மட்டும் தான் பையன் சோலோ” என்று சொல்லி சிரித்தனர்.
சுந்தரி புன்னகைக்க, “நீங்க அவ்வளவு வேலை பார்ப்பீங்கலாம். நிறைய மேனேஜ் பண்றீங்களாம், நிறைய தோப்பு இருக்காம். இப்போ புதுசா ஒரு பெரிய தோப்பு வாங்கியிருக்கீங்கலாம். பெரிய பூந்தோட்டம் இருக்காம், நர்சரி இருக்காம், முக்கியமா அவளுக்கும் நித்யாக்கும் நிறைய பேக்கட் மணி குடுப்பீங்கலாம்” என்று பேச,
“இது எப்போ” என்ற பார்வை கண்ணன் பார்க்க, வேகமாய் பார்வையை திருப்பிக் கொண்டாள்.
“பாருடா நான் வேலை பார்த்ததுக்கு நான் வாய்விட்டு கேட்டும் எனக்கு சம்பளம்ன்னு ஒத்தை  பைசா குடுக்கலை, எங்கப்பா கிட்ட பணம் வாங்கினேன். காலேஜ் போற பிள்ளைகளுக்கு பேக்கட் மணி, ம்ம்” என்று மனதிற்குள் பெருமூச்சு விட்டான்.  பின்பு அவனே “அதான் நான் இப்போ காலேஜ் போறேன்னு பணம் குடுக்கறாலோ? என்ன புத்திசாலிதனம், நானா அவளான்னு தெரியலையே” என்று நினைத்தவனுக்கு சிரிப்பு வந்தது. 
சுந்தரி அந்த பெண்களை பார்த்து, “நீங்க ஊருக்கு வாங்க எல்லாம் சுத்தி பார்க்கலாம்” என்றாள்.
“இத்தனையும் நீயே எப்படி பார்க்கறம்மா” என்று சித்தப்பா கேட்க,
“நான் மட்டும் இல்லைங்க மாமா, ஆளுங்க இருக்காங்க, மேற்பார்வை தான் நான். இவர் எல்லா வேலைக்கு ஆள் வெச்சிட்டு தான் வந்தாருங்க, புது தோப்பையும் காட்டையும் நான் பார்க்கறது இல்லீங்க, மாமாவும் சின்ன மாமாவும் தான் பார்க்கறாங்க”
“ஏன்டா கண்ணா பார்க்கறதுக்கு இத்தனை வேலை இருக்கு, அப்புறம் எதுக்குடா கண்ணா நீ மேல படிக்கறேன்னு எல்லாத்தையும் உட்டுபோட்டு வந்த” என்றார்.  
“இப்போ படிச்சாதானே சித்தப்பா” என்றான்.
“அதுக்குன்னு பையனை வெச்சிக்கிட்டு ஒத்தையா சுந்தரி எப்படி சமாளிப்பா?” என்று சித்தியும் பேச,
“நான் தானே அத்தை அனுப்பினேன்” என்று சுந்தரி கண்ணனுக்காக பரிந்து பேசிய போதும், அவளின் மனசாட்சி “நீ அனுப்பலை, துரத்தி விட்டுட்ட” என்று கௌண்டர் கொடுத்தது.
“எங்க அவ தனியா இருக்கா? எல்லோரும் இருக்காங்க. அதுவுமில்லாம நான் இங்க முதல்ல பழகணும்னு ஒரு மாசம் விட்டேன், இனி இங்க கொஞ்சம் நாள் அங்க கொஞ்சம் நாள் இருப்பா” என்றான்.
“என்ன பேசறாங்க இவங்க, இது எப்போ, சொல்லவேயில்லை” என்று சுந்தரி கண்ணனை பார்க்க அவன் இவளை பார்க்கவில்லை. இருவரும் கண்ணாமூச்சி ஆடினர். 
இதற்கு மேல் இதை பேசுவது முடியாது என்று அவனின் சித்தப்பாவும் சித்தியும், பின் “பூந்தோட்டம்னா என்ன எல்லாம் போட்டிருக்கீங்க, அதுல என்ன நிக்கும்” என்று வருமானத்தை பேச,
பொதுவில் சுந்தரி வருமானங்களை சொல்வது கிடையாது, சில இடங்களில் வசதி வாய்ப்பை சொல்லிக் கொள்ள தான் வேண்டும் என்று புரிந்து, 
“அதுங்கத்தை, அதுல ஒன்னும் பெருசா நிக்காது. கூலி எல்லாம் போனா ஒரு மூன்றுவா சராசரி ஒரு நாளைக்கு நிக்கும்” 
“ஏன்டா கண்ணா மூன்றுவான்னா மூணாயிரமா?” 
“ஆமாங்க சித்தி” 
“ஒஹ் அப்போ சுந்தரி பெரிய பிசினஸ் வுமன்னு சொல்லு”
“சித்தி, இது அவளோட வேலைல ஒரு பகுதி தான். இது இல்லாம நிறைய இருக்கு” என்றவன், “அவ பிசினெஸ் வுமன் இல்லை சித்தி பிசினெஸ் கேர்ள்” என்றான் சிரிப்போடு, ஆனால் அந்த நிமிடத்தில் மனைவியை குறித்து மிகுந்த பெருமை.
“ஆமாம் சின்ன வயசு தானே” என்றவர்,
“இங்க தான் சித்தி இப்படி உட்கார்ந்து இருக்கா, அங்க வீட்ல எல்லாம் விடாமா வேலை பார்ப்பா, எங்கம்மா இவ ஃபேன் ஆகிட்டாங்கன்னு பார்த்துக்கோங்களேன்” என்றான்.
“அட விமலக்காவா, சும்மா சொல்லக் கூடாது. அப்போ சுந்தரி பெரிய ஆளு தான்!” என்று அவனின் சித்தி சிலாகிக்க,
கூச்சத்தில் நெளிந்த சுந்தரி, “அது அப்படி இல்லீங்க அத்தை, எனக்கு அந்த வேலை பிடிச்சிருக்கு, தோட்டம் செடி எல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம், அதனால் செய்யறேன், மத்தபடி சும்மா தான் இருப்பேன்!”
“ஆமாம் சித்தி சும்மா தான் இருப்பா, இவ தூங்கற நேரம்! நானே இவளுக்கு அசிஸ்டன்ட்ன்னா பார்த்துக்கோங்க” என்றான் சிரிப்போடு.
“என்ன ஆச்சு இவருக்கு” என்று சுந்தரி விந்தையாய் பார்த்தாள்.  
அவனின் சித்தி இருவரையும் அவ்வளவு பேச வைத்தார்.
அவரின் மக்கள் இருவரும் அபியோடு பிஸியாகிவிட, நேற்று இரவு அவ்வளவு காய்ச்சலோடு மகனை தூக்கிக் கொண்டு வந்த சூழல் அங்கே இல்லைவே இல்லை, இப்போது அபிக்கு நன்கு காய்ச்சல் விட்டிருந்தது.
ஆனாலும் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை அபி வந்து அப்பா இருக்கிறானா என்று பார்த்து, அப்பாவின் கழுத்தை வளைத்து கன்னத்தில் முத்தமிட்டு பின் அத்தைகளிடம் ஓடி விடுவான்.
இதனை பார்த்திருந்த அவனின் சித்தி பொறுக்க முடியாமல் பேசியே விட்டார், “என்ற பையன் மாதிரி நினைச்சு தான் சொல்றேன்” என்று ஆரம்பித்தார்.
“என்ன சித்தி இப்படி பேசறீங்க, உங்க பையன் தான் சொல்லுங்க” என்றான்.     
“நான் சொல்றது என் கருத்து தான் கண்ணா” என்று பீடிகையோடு ஆரம்பித்தவர், “படிக்கறது வேலைக்கு தான்னாலும் அறிவை வளர்த்துக்கன்னும் சொல்வாங்க உண்மை தான், அதான் டிகிரி வாங்கிட்ட கொஞ்சம் நாள் வேலையும் பார்த்துட்ட, அப்போ வேலைக்கு உனக்கு படிப்பு தேவையில்லை, அறிவை வளர்த்துக்க அவசியமில்லை, இப்போ எதுக்கு பொண்டட்டியையும் பையனையும் விட்டுட்டு இங்க படிக்க வந்திருக்க”
“அவசியமேயில்லை! அங்க இருக்குற வேலையை பார்க்கவே ஆள் பத்தலை போல, வருமானம் ஏகத்துக்கும் வருது. இப்போ தான் சேர்ந்து வாழ ஆரம்பிச்சு இருக்கீங்க, இப்போ எதுக்கு அவங்களை விட்டுட்டு வரணும். பாரு, பையன் எவ்வளவு ஏங்கி போயிருக்கான்” என்று பொறுமையாக பேசிக் கொண்டு இருந்தவர்,
பின்பு கோபமாக, “அதென்ன புள்ளைய மட்டும் ரெண்டு பேரும் சேர்ந்து பெத்துக்கணும், வளர்க்கறது மட்டும் பொண்ணுங்களா? ஏன் நீ கூட்டிட்டு வந்து வெச்சிக்கோ உன்ற பையனை” என்று பேசினார்.
அவர் பேசப் பேசவே கண்ணனின் முகம் சுணங்கி போக, சுந்தரிக்கு தன்னால் தான் எல்லாம் என்று மனம் உதைத்தது.
“என்ன பேசற நீ?” என்று அப்போது தான் அவனின் சித்தப்பா அதட்டினார் சித்தியை.
“ஏன் என்ற பையன் தானே, சொன்னா என்ன? நல்லது கெட்டது சொல்றது தானே” என்றார்.
கூடவே கண்ணனை பார்த்து “அப்படியில்லை கண்ணா, முன்னேற்றம் முக்கியம் தான், இருந்தாலும்  சுந்தரிக்கு அப்பா அம்மா இல்லை, அப்பா அம்மா இல்லாத புள்ளையை நாம பந்தாடுறோம்னு பேச்சு வரும்” என்றார் கணமான மனதோடு.
உண்மையில் வந்த பேச்சு தான் அது.
அங்கே அப்படி ஒரு அமைதி.
எப்போதும் போல டுர்ர்ரர்ர்ர்ர் என்ற சத்தத்தோடு அபி வந்து கண்ணனின் கழுத்தை வளைத்து முத்தமிட்டு செல்ல இன்னும் அமைதி அதிகமாகியது.

Advertisement