Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஐந்து :
                 
குளித்து விட்டு வந்த சுந்தரியை இரவு உடையில் பார்த்த போது வித்தியாசமாய் தெரிந்தாள். எப்போதும் புடவையில் மட்டுமே தானே பார்த்திருக்கிறான். இன்னும் சிறிய பெண்ணாய் கண்களுக்கு தெரிந்தாள்.
அதுவும் தலைக்கு ஊற்றி இருக்க, “நைட் தலைக்கு ஊத்தினா உனக்கு ஒத்துக்கறது இல்லை தானே, உன்னை யாரு ஊத்த சொன்னா, தலைய துவட்டு நல்லா” என்று பேசியபடி மகனை தொட்டு பார்க்க, உடல் அனலாய் கொதித்து.
மீண்டும் ஈர துணியை நெற்றியில் பத்து போட்டான்.
அதன் பின்னே எங்கே சுந்தரியை ரசிப்பது கவனிப்பது.
அன்றைய இரவை கழிப்பதற்குள் கண்ணனும் சுந்தரியும் சிரமப்பட்டு போயினர். அபியின் காய்ச்சல் விடவே இல்லை. அபியும் அவ்வப்போது விழித்துக் கொள்ள, அவனை வைத்து மாற்றி மாற்றி நடை பயின்று கொண்டிருந்தனர். 
சுந்தரியின் முகம் அதீத கவலைய காண்பிக்க, கண்ணன் “ஒன்றுமில்லை சரியாகிவிடும்” என்று அவளை வெகுவாக தேற்றிக் கொண்டிருந்தான்.
ஒன்று மகனின் காய்ச்சல், இன்னொன்று தனியாய் இந்த சூழலை எப்படி சமாளித்திருப்போம் தனியாய் என்ற எண்ணம்.  
விடியலில் மீண்டும் ஒரு முறை காய்ச்சல் மருந்து கொடுக்க, அதன் பிறகே சற்று காய்ச்சல் குறைந்தது.
காய்ச்சல் குறைந்த பிறகு அவனுக்கு அந்த நேரம் பாலை காய்ச்சி கொடுத்து, பின்பு அவனுக்கும் சுந்தரிக்கும் டீ வைத்து என்று மூவரும் குடித்து படுத்தனர். இரண்டு மணி நேரம் கூட இருக்காது, அபி எழுப்பி விட்டான் அவனின் அப்பாவை
“பா” என்று அவனின் முகத்தினை வருட, அதில் விழித்தவன் மகனை தூக்கி மார்பில் போட்டுக் கொண்டான். சுந்தரி நல்ல உறக்கத்தில். அபி அவன் மேல் இருந்து இறங்க முற்பட, “கொஞ்சம் காய்ச்சல் குறைஞ்சா உன்னை கைல பிடிக்க முடியாதே” என்றபடி மகனை தூக்கிக் கொண்டு எழுந்தான்.
அவனுடைய கல்லூரியில் ஒரு இண்டர்நேஷனல் கான்பிரன்ஸ் அதில் அவன் பேப்பர் ப்ரசென்ட் செய்கிறான். அதன் பொருட்டே அவர்களை வர சொன்னான். ஆனால் இவ்வளவு காய்ச்சல் இருக்கும் என்று அனுமானிக்கவில்லை. இரவு போக வேண்டாம் என்று தான் நினைத்திருந்தான். இப்போது அவன் காய்ச்சல் சற்று மட்டுப் பட்டிருக்கவும், போகலாமா வேண்டாமா என்று மனம் ஊசலாடியது.
ஏழு மணி அப்போது. சரி இன்னும் நேரமிருக்கிறது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்தவன், பால்கனியில் மகனை வைத்து வேடிக்கை காண்பித்து கொண்டிருந்தான்.
கீழே இருந்து அவனின் சித்தி எட்டிப் பார்க்க, அவருக்கு அபியை காண்பிக்க, கீழே இறங்கி அவரிடம் காண்பிக்க, அவர் கை நீட்ட, ம்கூம் அபியோ அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டவன் அசையவேயில்லை.
“என்னை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறான் சித்தி அதுதான்” என்றான்.
“நீதான் என்ற சாப்பாட்டை சாப்பிட மாட்ட, பையனையும் சாப்பிட விடாம இருக்கக் கூடாது, இங்க இருந்து குட்டி போற வரை அவனுக்கு என்ற சமையல் தான். நீயும் உன்ற பொண்டாட்டியும் என்னவோ பண்ணுங்க?  எட்டு மணிக்கு ரெடியா வெச்சிருப்பேன் வந்து வாங்கிக்கோணும்” என்று சொல்லிப் போனார்.
பின் மகனை தூக்கிக் கொண்டு வந்தான்.
பாதி தூக்கத்தில் பார்த்தவள் தந்தையும் மகனும் அருகில் இல்லாதது கண்டு விழித்திருந்தாள்.
இவர்கள் வரவும் சுந்தரி எழுந்து உட்காரவும் சரியாய் இருக்க, மகனை நோக்கி கை நீட்டவும் அவன் வராமல் அப்பாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டான்.
“பாருடா அலப்பறைய, ஊருக்கு போனதும் என் கிட்ட தான் வந்தாகணும் தம்பி” என்று சொல்லிக் கொண்டே எழுந்து அபியின் கழுத்தை தொட்டுப் பார்க்க, அது வெது வெது வென்று இருந்தது, ஆனால் நேற்று போல இல்லை.
“அதொண்ணுமில்லை, அவனும் எழுந்ததுல இருந்து தேடிட்டு இருக்கான் அவங்கம்மா எங்கேன்னு, இங்க ஒரு சின்ன பொண்ணு கையை நீட்டவும் அவனுக்கு அவங்கம்மாவை தெரியலை” என்று புன்சிரிப்போடு கண்ணன் சொல்ல
“யாருக்கு, அவனுக்கு தெரியலை?” என்று நொடிப்பது போல சொன்னவளின் முகத்தில் தானாய் ஒரு சிறு வெட்கம் கண்ணனின் பேச்சினில்.
“பரவாயில்லை, பையனுக்கு தான் தெரியலை, ஆனா பாரேன், அவங்கப்பா கரக்டா கண்டு பிடிச்சிட்டான்” என்று கெத்தாய் சொன்னான்.
“அய்யே” என்று பழிப்பு காட்டியவள் சென்று முகம் கழுவி பல் துலக்கி வர, அப்பாவும் மகனும் மீண்டும் படுக்கையில் உருண்டிருந்தனர்.
“என்ன செய்ய?” என்று சுந்தரி கேட்க,
“ஓய் என்ன நீ? நீ என்ன விருந்தாளியா? இது உன் வீடு, ஓடு ஓடு, மதியத்துக்கு என்னன்னு பாரு, ஏதாவது வேணும்னா சொல்லு, வாங்கிட்டு வர்றேன். எனக்கு காலேஜ் கிளம்பணும் அபிக்கு கீழ சித்தி குடுப்பாங்க, நமக்கு காலையில கடையில வாங்கி வர்றேன்”  
“என்ன காலேஜ் போறீங்களா?” என்றாள் திடுக்கிட்டு.
“ம்ம், ஒரு பேப்பர் ப்ரசென்டேஷன் இருக்கு என்னோடது. முதல்ல முடிச்சிட்டு வந்துடறேன். அப்புறம் சாயங்காலம் முடியும் போது போய்க்கறேன்”
“அதுவரை சமாளிப்பியா? இப்போ இவனுக்கு காய்ச்சல் இல்லை”
“அது ரொம்ப முக்கியமா” என்றாள்.
“வேண்டாம்னா விட்டுடலாம், ஆனா இதுக்காக நான் பத்து நாளா ரெடி பண்ணினேன், போனா பரவாயில்லை”  
“சரி” என்ற தலையசைப்பு இருந்த போதும், சுந்தரியின் முகம் சுணக்கம் காண்பிக்க,
“நேத்து வரைக்கும் நாம தனியா தான் இருந்தோம்” என்றான்.
“அய்யே, பெரிய கண்டு பிடிப்பு, நாளைக்கும் நாம தனியா தான் இருக்கப் போறோம்” என்றாள் நொடித்த வாறே.
“அதனால நாம இன்னைக்கு சண்டை போட வேண்டாம் ரைட். போயிட்டு சீக்கிரம் வந்துடுவேன், காலையில இவன் மருந்து கொடுத்தா தூங்குவான், அவனோட தூங்கு, எப்படியும் மதியதுக்குள்ள என்னோடது முடிஞ்சிடும் நான் வந்துடுவேன், மதியமும் வாங்கிக்கலாம், சமைக்க வேண்டாம். இப்போ குளிச்சிட்டு வர்றேன்” என்றவன்,
சென்று குளித்து வர, மகனோடு அமர்ந்திருந்தாள், ஏதோ அம்மா வீட்டிற்கு வந்த பெண்ணின் தளர்வோடு.
அவர்களை பார்வையால் வருடியபடி, “இரு வந்துடறேன்” என்று வெளியே சென்று இருவருக்கும் உணவு வாங்கி வந்தான்.
பின் சித்தியிடம் மகனுக்கு வாங்கி வந்தவன், “ஊட்டு” என்று சுந்தரியிடம் சொன்னான்.
அவள் ஊட்டி முடித்ததும் மகனுக்கு மருந்து கொடுத்தான், பின் அவளிடம் “அபியை கைல வெச்சிரு கீழ விடாத, அழ விடாத, வாமிட் பண்ணிடுவான்” என்று சொன்னவன்,
“நான் சாப்பிடறேன் டைமாச்சு” என்றவன் வேகமாக வாங்கி வந்திருந்த சப்பாத்தியை உண்டு, “உனக்கு பொங்கல், இட்லி, வடை இருக்கு” என்று சொல்லி வேகமாய் தயாராகி வந்தான்.
சுந்தரிக்கு யோசிக்க கூட ஒன்றுமில்லை எல்லாம் வரிசையாய் சொன்னான்.
சுந்தரிக்கு அவனை பார்ததும் சிரிப்பு தான் வந்தது, ஏதோ கல்யாண மாப்பிள்ளை ரிசப்ஷனிற்கு நிற்பது போல ஃபுல் கோட் சூட் டை யில் இருந்தான்.
வராண்டாவில் அமர்ந்து கண்ணன் ஷூ அணிய, சுந்தரி அவனையே குறு குறு வென்று பார்த்தாள்.
“ஒய் என்ன மனசுக்குள்ள கிண்டல் ஓட்டற, மானேஜ்மென்ட் ஸ்டுடண்ட்ஸ்க்கு இது யூனிஃபார்ம்” என்றவன், “பை, கிளம்பறேன்” என்று சொல்லி நிற்க,
உண்மையில் அத்தனை பாந்தமாய் அவனுக்கு பொருந்தியிருக்க சற்று ரசித்து பார்த்தாள்.  
“நான் சொன்னதெல்லாம் ஞாபகமிருக்கட்டும் எதுன்னாலும் ஃபோன் பண்ணு, ஏதாவது தேவைன்னா சித்தியை கேளு” என்றவன் விரைய,
“கார் சாவி எடுக்காம போறீங்க” என்றாள்.
“பக்கம் தானே நடந்து போய்க்குவேன்”
“பரவாயில்லை இருக்கும் போது ஏன் நடந்து போகணும்? நீங்க வாங்கினது தான்” என்று சொல்லி அவனை நோக்கி சாவி எடுத்துக் கொண்டு போக,
“ஆனா டியூ நீ கட்டுற” என்று சொல்ல வந்தவன் சொல்லவில்லை.
கையில் இருந்த மகன் அவனிடம் தாவ, “டேய், அப்பா ட்ரெஸ் கசங்கிடும்” என்று இழுத்துப் பிடித்தாள்,
தன்னிடம் தாவ வந்த மகனின் கன்னத்தில் முத்தமிட்டான், சுந்தரி அதனையே பார்த்திருக்க, “எதுக்கு இப்படி எங்களை முறைச்சு பார்க்கற, உனக்கும் வேணுமா?” என்றான்.
சுந்தரி பதில் சொல்லாமல் அவனை பார்க்க, “குடுத்துடுவேன், ஆனா தள்ளி விடுவியோன்னு ஒரு சின்ன நினைப்பு” என,
சுந்தரி பதில் சொல்லாம திரும்பி நடக்க, அவளின் ஜடையை பிடித்து இழுத்தான்.
“ஷ் விடுங்க” என்ற சத்தத்தோடு அவள் பின்னால் வர, “திமிருடி உனக்கு. ஒரு பேச்சுக்காவது இல்லை, தள்ள மாட்டேன்னு சொல்றியா?” என்றான் சற்று கடுப்பான குரலில்.   
“இப்போ என்ன நான் மன்னிப்பு கேட்கணுமா? அது தான் என்னை விட்டு வந்துட்டீங்கள்ள?” என்றாள் அவளும் சற்று காரமாக.
அன்றைய இரவு இப்போது அதன் தாக்கம் சிறிதும் இல்லையென்றாலும் அன்று அதிகம் தான். அதன் பொருட்டே முடிவெடுப்பதில் இனி யோசனை தேவையில்லை என்று கண்ணனை உந்தவும் செய்தது.  
பேச்சு மறுபடியும் சண்டைக்கு மாறுவதை உணர்ந்தவன், அபியை அவளிடம் இருந்து வாங்கினான். பின் “போ, போய் தண்ணி கொண்டு வா” என்றான்.
சண்டையோடு போக அவனுக்கு மனதில்லை, சுந்தரி கொண்டு வரவும் வாங்கி குடித்தவன், அபியை அவளிடம் கொடுத்தான். அவள் வாங்கவும் மீண்டும் மகனுக்கு கன்னத்தில் முத்தமிட்டவன், ஒரு கையால் மகனின் முகத்தை வேறு புறம் திருப்பி, மறுகையால் சுந்தரியை அணைத்து பிடித்து, அவளின் இதழ்களில் ஒரு மின்னல் வேக சில நொடி முத்தம் பதித்து விலகினான். முதலில் புரியாமல் திமிறிய சுந்தரி பின் இசைந்து நிற்கும் நொடி அவளை விட்டு விலகினான்.
“என்ன செஞ்சாங்க இவங்க இப்போ?” என்று சுந்தரி விழிக்க,
“நான் திரும்ப வந்த பிறகு இதுக்கு சண்டை போடு” என்று சொல்லி சென்றான்.
கண்ணன் சென்ற பிறகு, மகனோடு அமர்ந்த போது, என்னவோ மனதிற்கு உற்சாகமாய் இருந்தது.
பின்பு கதவை பூட்டிவிட்டு மகனோடு படுக்க, அபி உறங்கிய பிறகு அவளும் கண்ணயர்ந்தாள். முகத்தில் இருந்த புன்னகை மட்டும் உறக்கத்தில் கூட தங்கி இருந்தது.    
கண்ணன் கல்லூரி சென்றவன், இவனின் ப்ரசென்டேஷன் முடிந்த பிறகும் மதியம் வரை இருந்து ஹெச் ஓ டி யிடம் பெர்மிஷன் வாங்கி, நண்பர்களிடம் சொல்லிக் கொண்டு, மதிய உணவை வாங்கி வீடு வந்தவன், கீழே சித்தி கொடுத்த பருப்பு சாதத்தையும் வாங்கி கொண்டான்.
“என்ன கண்ணா சுந்தரி கீழ வரவேயில்லை?” என்றார் அவர்.
“இன்னும் உங்களோட பழகலைள்ள சித்தி, அதுதானா இருக்கும். சாயந்தரம் கூட்டிட்டு வர்றேன்” என்று சொல்லி சென்றான்.
இவனிடமிருந்த சாவி கொண்டு கதவை திறந்து உள்ளே செல்ல, படுக்கையறையில் சுந்தரி இன்னும் உறக்கத்தில், அபியோ விழித்திருந்தவன் சுந்தரியை அணைத்து வெறுமனே படுத்திருக்க,
“நீ தங்கம்டா என் காளை” என்று மகனை கைகளில் வாரிக் கொண்டான்.
அதன் பின் மகனை தூக்கி குளியலறை சென்று அவனை சுத்தப் படுத்தி, பின்பு அவனும் உடை மாற்றி, கை கால் கழுவி வந்து அபிக்கு பருப்பு சாதம் கொடுத்து மதியத்திற்கான மருந்து கொடுக்கும் வரையிலும் சுந்தரி கண்விழிக்கவில்லை.
பிறகு தான் கவனித்தான் காலை உணவு சுந்தரி உண்ணவேயில்லை என்று.
அவனுக்கு என்ன தெரியும் ஒரு முத்தத்தில் அவள் மொத்தமும மறந்து போனால் என்று. இதில் உணவு உண்ண எங்கே ஞாபகம் இருக்கும்?
தான் கொடுத்த முத்தத்தில் கோபமோ? அதனால் உணவு உண்ணவில்லையோ என மனம் சஞ்சலமாக, அவனின் இதமான மனநிலை மொத்தமும் தொலைந்தது.     
சுந்தரி கண் விழித்த போது நான்கு மணி, பார்த்தால் அப்பாவும் மகனும் டீவியில் கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“எப்போ வந்தீங்க? எனக்கு தெரியவையில்லை, இவன் எப்போ எழுந்தான் என்று உற்சாகமாக சுந்தரி பேச, அதன் பிரதிபலிப்பு கண்ணனிடம் சற்றும் இல்லை.
“நீ தூங்கின, எழுப்பலை” என்று எங்கோ பார்த்துக் கொண்டு சொன்னான்.
“சாப்பிட்டீங்களா?” என்று இயல்பாய் கேட்ட படி சமையல் மேடை வந்து பார்த்தாள். ‘காலையில் வாங்கி வந்தது இப்போது வாங்கி வந்தது எல்லாம் அப்படியே இருக்க, அதுவும் காலையில் வாங்கி வந்தது சட்னி சாம்பார் எல்லாம் ஊசிப் போய் ஒரு வாடை வர ஆரம்பித்து இருந்தது. 
“அச்சச்சோ” என்று மூக்கை பொத்தியவள், அதில் தண்ணீர் ஊற்றி இதை எங்கே ஊத்தலாம் என்று கண்ணனின் முன் வந்து நின்றாள்.
“எதுக்கு சாப்பிடலை?” என்றான் கறாரான குரலில்.
“அது” என்று அவள் இழுக்க,
“என்ன அது? ஒரு முத்தம் குடுத்தா கூட உனக்கு ஆகாதா? கோவிச்சிக்கிட்டு சாப்பிட மாட்டியா?” என்றான்.
“அடப் பாருடா” என்று அவனின் கோபத்தை பார்த்து சலித்தவள், “ஒரு முத்தம் குடுத்துட்டு சும்மா சலம்ப வேண்டாம். ஆமாம்! முத்தம் குடுத்ததுனால தான் சாப்பிடலை. ஆனா அது கோவிச்சிக்கிட்டு இல்லை, வேற சாப்பிடற ஞாபகம் வரலை. இப்போ இதை எங்கே கொட்டணும்னு சொல்லலை, உங்க தலையில கொட்டுவேன்” என்றாள்.
“கீழ டிரைனேஜ்ல தான் கொட்டணும்” என்றவன், “கொடு” என்று வாங்கி நடந்தான்.
அவ்வளவு நேரமாய் மீண்டும் பிடித்தமில்லையோ என்று ஒரு டென்ஷனில் இருந்தவனுக்கு சுந்தரி சொன்ன விஷயத்தை கிரகிக்க சிறிது நேரம் தேவைப் பட்டது.
பின்பு கூடவே ஒரு சலிப்பும், “ஆட்டம் காட்டுறடி நீ? வாய் தான், வேற ஒன்னுமில்லை. சிந்தா கிட்ட எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசுவ? என்கிட்ட கிட்ட வர்றதில்லைன்னு சொல்லுவ, வந்தா தள்ளிவிடுவ” என்று நின்று அவளை பார்த்து சொல்லி சென்றான்.  
சறுக்கலில் சறுக்கிய பிறகும் அது சறுக்கல் விளையாட்டு, சறுக்க தான் போகிறோம் என்று தெரிந்த பிறகும் வேகமாய் மேலே ஏறுவோம் சறுக்குவதற்கு – சில சமயம் காதலும் இதுவே வாழ்க்கையும் இதுவே!
     
     

Advertisement