Advertisement

இப்படியாக இன்னுமே ஒரு மாதம் கடந்து விட, எப்போதும் சுந்தரி அழைக்கும் நேரமானது மாலை ஆறு, அது கடந்து விட, அவள் அழைக்கவில்லை எனும் போது அவனாய் அழைத்தான்.
அழைக்கவும் “நான் ஹாஸ்பிடல்ல இருக்கேன், அபிக்கு காய்ச்சல், சளி , இருமல்” என்றாள்.
“எப்போ இருந்து?”
“நேத்து இருந்தே கொஞ்சம் இருந்தது. ஆனா காலையில இருந்து தான், அதிகமா இருக்கு, வாந்தி வேற பண்ணிட்டே இருக்கான், பயமா இருக்கு?” என்றாள்.
அவள் பேசும் போதே அபியின் அழுகை குரல் கேட்டது.
“சரி நீ டாக்டர் பார்த்துட்டு கூப்பிடு” என்றான்.
டாக்டரை பார்த்து மாத்திரை வாங்கி எல்லாம் முடிக்க ஏழு மணி, சிந்தாவும் சின்ராசும் அவளின் உடன் தான் இருந்தனர்.
வெளியில் வந்ததும் “பார்த்துட்டோம்” என்ற சுந்தரியின் குரலில் அப்படி ஒரு சோர்வு,
“காய்ச்சல்” என்றால் உண்ணாமல் உறங்கமால் அபி படுத்தி எடுப்பான் அவனை தனியாய் சமாளிப்பது என்பது வெகு சிரமம்.
கண்ணன் திரும்ப வரும் முன் சுந்தரி தனியாய் அபியை பார்த்திருந்தது தான், ஆனால் இப்போது முடியும் என்று தோன்றவில்லை. அபி கண்ணனுக்கு பழகியிருந்தானோ என்னவோ சுந்தரி கண்ணனுக்கு பழகியிருந்தாள்.    
“என்னோட அம்மா வீட்டுக்கு போறியா? அங்க சாரு, நித்யா, அம்மா, சித்தி எல்லாம் இருப்பாங்க, உனக்கு அவனை பார்த்துக்க சௌகர்யமா இருக்கும்” என்றான்.
“வேண்டாம்” என்றாள் ஒற்றை சொல்லாய்.  
“தனியா சமாளிப்பியா அவனை?”
“முடியாது”
“அவங்களை உன் வீட்டுக்கு வர சொல்லட்டுமா?”
“ஒன்னும் வேண்டாம்” என்றாள் முறுக்கியவளாய். அவளுக்கு கண்ணன் தான் உடன் வேண்டும், அழைத்தால் வர மாட்டானே!
“நீ இங்க வர்றியா?” என்றான்.
“என்ன?” என்று திருப்பி கேட்டாள். அவள் காதில் சரியாகத் தான் விழுந்ததா என்று எண்ணும் பொருட்டு.
“நீ இங்க வர்றியா?” என்றான் நிறுத்தி நிதானமாக.
“ம்ம்” என்று உடனே சொன்னவள், சிறிது தயங்கி, “இவனுக்கு காய்ச்சல், எப்படி வர?” என்றாள்
குரலே சொன்னது “அச்சோ அழைக்கிறானே, போக முடியவில்லையே” என்ற உணர்வை.
“ஏன் வர முடியாது? வண்டி எடுத்தா ரெண்டரை மணி நேரம் வந்துடலாம், அவனோட மருந்து கைல இருக்குள்ள, சிந்தாவை கொண்டு போய் பாட்டிக்கு துணையா இறக்கி விட்டுட்டு, அவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அஞ்சே நிமிஷத்துல நீ சின்ராசுவை கூட்டிட்டு கிளம்புற, அவன் இங்க வந்து உங்களை விட்டுட்டு நாளைக்கு பஸ் பிடிச்சு போகட்டும், பின்ன நீங்க திரும்ப போகும் போது வந்து வண்டி எடுத்துட்டு உங்களை கூட்டிட்டு போகட்டும், சிந்தா கிட்ட குடு” என்றான்.  
சுந்தரியும் கொடுக்க, சிந்தாவிற்கு வரிசையாக என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளைகள் சொன்னவன், அவனும் வெளியே கிளம்பி மனைவியும் மகனும் வந்தால் தேவை என்று நினைப்பதை வாங்கியவன், பின்பு வீட்டிற்கு வந்து சட்னி அரைத்து இட்லி ஊற்றினான் மகனுக்காய்.
எப்படியும் மகனுக்கு காய்ச்சல் என்பதால் வழியில் நிறுத்தி எங்கேயும் உணவு உண்ண மாட்டாள் என்று தெரியும்.   
முன்பே சின்ராசு தான் சந்திரனையும் விமலாவையும் அழைத்து வந்திருந்ததால் அவனுக்கு இடம் தெரியும்.
ஏழரைக்கு கிளம்பியவர்கள் பத்தரைக்கு வீட்டை அடைந்தனர். மெதுவாய் தான் சின்ராசு ஓட்டினான்.
இன்னும் கூட கண்ணனை பார்க்க போகிறோம் என்பது சுந்தரிக்கு நம்ப முடியவில்லை.
காரை வீட்டின் உள்ளே நிறுத்த முடியாது, கீழே இருக்கும் அவர்களின் உறவினரின் கார் நிறுத்த மட்டுமே இடம் இருந்தது.
அதனால் ஸ்கார்பியோவை ரோட்டில் தான் கச்சிதமாய் சின்ராசு நிறுத்தினான்.
அதற்குள் இவர்கள் கார் வந்து விட்டதை கண்ணன் பால்கனியில் இருந்து பார்த்தவன் வேகமாய் படியிறங்கி வந்து கேட்டை திறக்க,
கீழே இருந்த உறவினர் வந்து எட்டி பார்த்தார்.
உறக்கத்தில் இருந்த மகனை கையில் வாங்கிக் கொண்டே, அவரிடம் “சுந்தரியும் பையனும் வந்திருக்காங்க, இங்க தான் ரெண்டு மூணு நாள் இருப்பாங்க சித்தப்பா” என்று தகவல் கொடுத்தவன், “நான் பூட்டிக்கறேன், நீங்க போங்க” என்றான்.
அவனிடமும் ஒரு கேட் சாவி இருந்தது.
“வாம்மா” என்று சுந்தரியை பார்த்து சொன்னவர் “சரி கண்ணா” என்றார்.
மகனை கைகளில் வாங்கியதும் மனைவியை கூட ஆராய முனையவில்லை, கண்ணன் அபியின் உடம்பு அவ்வளவு சுட்டது. அவனும் உறக்கத்தில் இருந்தான்.
சின்ராசுவை உள்ளே அழைக்க, “நேரமாச்சு எவ்வளவு நேரம்னாலும் சிந்தா வந்துட சொல்லியிருக்கு, இப்போ போனா கூட பஸ் ஏறிக்குவேன்” என்றான்.
“இந்த ராத்திரில எங்க போவண்ணா, காலையில போ” என்று சுந்தரி சொல்ல,
“இல்லை சுந்தரி கிளம்பறேன், பஸ்சு நிறைய இருக்கும்” என்றான் அவனும்.
“சரி சாப்பிட்டு பஸ் ஏறுங்க” என்று அவனிடம் சொல்ல, சின்ராசு கார் சாவியை கொடுக்க, கண்ணன் கையில் இருந்து பணத்தை கொடுத்தான்.
“வேண்டாம் சுந்தரி குடுத்திருக்கு” என்று அவன் சொன்ன போதும், “ஏன் சுந்தரி குடுத்தா தான் வாங்குவீங்களா நான் குடுத்தா வாங்க மாட்டீங்களா?” என்று சொல்லி “சுந்தரி வர்றவரை எல்லா வேலையும் கச்சிதமா நடக்கணும், அபி சரியான பிறகு தான் வருவா, பார்த்துக்கோங்க! எதுன்னாலும் உடனே போன் பேசிடுங்க”  என்று சொல்லி அனுப்பினான்.
அவனை அனுப்பின பிறகு தான் சுந்தரியின் முகம் பார்த்தான். ஆனால் அதற்கு முன்பே மகனின் உடல் சூட்டினை உணர்ந்திருந்தான்.
“என்ன இப்படி சுடுது?” என்று சொல்லிக் கொண்டே மாடி ஏற, சுந்தரி அவனை பின் தொடர்ந்தாள்.
“எப்போ மருந்து குடுத்த? எப்போ குடுக்கணும்?”
“அங்க ஹாஸ்பிட்டல குடுக்க சொன்னாங்க குடுத்தேன். ஆனா அழுதுட்டே இருந்ததுல இருமல் வேற அதிகமாகி வீட்டுக்கு வந்ததும் வாந்தி பண்ணிட்டான்”
“எனக்கு திரும்ப உடனே குடுக்கவான்னு தெரியலை, அதனால் குடுக்கலை”
“எதுவும் சாப்பிட்டானா?”
“இல்லை வண்டி ஏறினதுல இருந்து தூங்கறான்”  
கீழே உறவினர் வீடு தான் என்பதால் அவர்களின் வீட்டில் அதிகப் படியாய் இருந்த கட்டில் சோபாவை எல்லாம் இங்கே போட்டிருக்க, மெத்தை, மற்றும் இதர உபயோகப் பொருட்கள், பிரிட்ஜ், அடுப்பு, மிக்சி, சில பாத்திரம் பண்டம், எல்லாம் வாங்கியிருந்தான்.
சோபாவில் மகனை கிடத்தியவன், பாத்ரூம் அங்கே இருக்கு என்று ரூமை காண்பித்தவன் சமையலைறை உள்ளே சென்றான்.
வேகமாய் உள்ளே சென்றவள் தன்னை சுத்தப்படுத்தி வந்து நிற்க, அவள் மேல் முழுவதும் இன்னும் அபியின் வாசம் தான். அவன் வாமிட் செய்தது இவள் துடைத்து இருந்தாலும் அவள் மேல் வந்தது.
குளித்து உடை மாற்ற வேண்டும் போல என்று தோன்றிய போதும் முதலில் மகனுக்கு ஏதாவது உண்ண கொடுக்க வேண்டும் என்று வேகமாய் வந்தாள்.    
சட்னி அரைத்து வைத்திருந்தான், இட்லியும் ஒரு நான்கை மட்டும் செய்து வைத்திருந்தான்.
“மாவு ஏது?” என்றாள்.
“அது இங்க சூப்பர் மார்கெட்ல கிடைக்கும், ரொம்ப மோசமில்லை. ஓரளவு சாப்பிடர மாதிரி இருக்கும். ஆனா இட்லிக்கு நல்லா இருக்காது. அதனால அபிக்காக கீழ சித்தி கிட்ட மாவு வாங்கினேன் கொஞ்சமா அவனுக்கு மட்டும். அவனுக்கு கடையில் வாங்கினது சேரலைன்னா” என்று சொல்ல,
பாருடா எவ்வளவு யோசித்து இருக்கிறான் என்று தோன்றியது.  
கணவனை தான் கண்களில் நிரப்பினாள். வீட்டில் கட்டும் வேஷ்டி, அதனை மடித்து கட்டியிருக்க, முண்டா பனியன், தோளில் ஒரு துண்டு என்று இட்லியை சிறிது தண்ணீர் வைத்து அதில் ஒரு பாத்திரம் வைத்து மகனுக்கு சூடு செய்து கொண்டிருந்த கண்ணனை தான் பார்த்திருந்தான்.
“என்ன வேடிக்கை, சூடானதும் இறக்கு” என்றவன், அவளிடம் விட்டு, ஒரு பத்திரத்தில் தண்ணீர் எடுத்து, வேஷ்டி துணி கிழித்து, மகனிடம் விரைந்தான். அவனின் நெற்றியில் ஈர பற்று போட்டு, அபியின் உடைகளை கலைந்தவன், அவனின் உடலையும் தண்ணீரால் துடைத்தான்.
அவ்வளவு காய்ச்சல்!  
கிட்ட தட்ட நான்கு மாதம் கழித்து பார்க்கும் கணவனும் மனைவியும் வேறு எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
அதுவும் கண்ணனின் செய்கைகளை வெறும் மௌனப் பார்வையாளராய் சுந்தரி பார்த்துக் கொண்டிருந்தாள்.
கண்ணன் உடல் துடைக்கவும், அபி விழித்து சிணுங்க, கண்ணன் கையில் தூக்க, அப்பாவை பார்த்ததும் மீண்டும் அப்படி ஒரு அழுகை, கத்தி கத்தி அழ, மீண்டும் வாமிட் செய்தான் கண்ணின் மேலேயே.
அபியை சுத்தப்படுத்தி சுந்தரியிடம் விட்டு, தன்னையும் சுத்தப்படுத்தி அபியை சாப்பிட வைத்து, மருந்து கொடுத்து, தோளில் போட்டு கண்ணன் தட்டிக் கொடுத்துக் கொண்டிருக்க,
காய்ச்சலின் சோர்வில் கண்ணின் கழுத்தை கட்டிக் கொண்டவன் விடவே இல்லை. கீழே விட்டால் அடுத்த நொடி அழ ஆரம்பிக்க,
மீண்டும் வாமிட் செய்து விடுவானோ என்று கண்ணன் கீழே விடவேயில்லை.
அங்கே சுந்தரி வெறும் பார்வையாளர் மட்டுமே, கண்ணன் சொன்ன உதவிகளை மட்டுமே செய்தாள்.
இப்போதும் பார்த்து நிற்க “பசிக்கலையா நமக்கு தோசை ஊத்து” என்றான்.
சுந்தரி தோசை வார்க்கவுமே அப்படியே நின்று கொண்டே சாப்பிட்டான், பின்பு அவளும் சாப்பிட அபி மருந்தின் வேகத்தில் உறங்கி இருக்க, ரூமின் உள் இருந்த கட்டிலில் அவனை விட்டவன்.
லைட்டை அணைத்து மகன் விழித்தாலும் தெரியுமாறு கதவை திறந்து வைத்து, சோஃபாவில் வந்து அமர்ந்தவன், அதன் பின்னே தான் சுந்தரியை சரியாய் பார்த்தான்.
“எப்படி இருக்க சுந்தரி?” என்ற கேள்வியோடு.
“அழுக்கா இருக்கேன், குளிக்கணும்” என்று சொல்ல,
கண்ணனுக்கு சிரிப்பு வந்து விட்டது, சிரித்து விட்டான்!
“என்ன நான் இப்போ சிரிக்கற மாதிரி சொன்னேன்?” என்று சுந்தரி முகம் சுணங்க,
“நீ அறிவாளின்னு தெரியும், ஆனா அறிவு வாளின்னு தெரியாது, ஹ ஹ என்று சிரித்தவன், “போ, போய் குளிச்சிட்டு வா” என்றான்.
“விட்டுட்டு வந்துட்டு பேச்சை பாரு, எப்படி இருக்கியாம்? நல்லா இருக்கேன்னு நான் சொல்லணுமாக்கும்!, நல்லா இல்லாதப்போ நல்லா இருக்கேன்னு எதுக்கு சொல்வேன்” என்று அவனுக்கு கேட்குமாறு நொடிக்க
கண்ணன் பத்தி பேசவில்லை. சுந்தரியை சிறு புன்னகையோடு பார்த்திருந்தான்.  
“நான் மாத்திரை பை மட்டும் தான் எடுத்துட்டு இறங்குனேன், உடுப்பு இருக்குற பை கார் குள்ள இருக்கு, போய் எடுத்துட்டு வாங்க நான் குளிக்கணும்” என்றாள்.
“பரவாயில்லை காலையில எடுத்துக்கலாம். நான் உனக்கு, அபிக்கு ட்ரெஸ் வாங்கிட்டேன், வர்ற அவசரத்துல நீ எடுத்துட்டு வரலைன்னா என்ன பண்றதுன்னு” என்று அவன் வாங்கியவற்றை காண்பிக்க,
இரண்டு புடவை, அதற்குரியவை, பின்பு இரண்டு நைட்டி இரண்டு சுரிதார் , மகனுக்கு ஐந்து செட் ட்ரெஸ் என்று மின்னல் வேக ஷாப்பிங் செய்திருந்தான்.
“நல்லா இருக்கான்னு தெரியலை அவசரமா எடுத்தேன்”  
“என் அளவு எப்படி தெரியும்? எதுக்கு நைட்டி சுரிதார்?” என்று விந்தையாய் அதனை பார்த்தாள் நான் இதனை உபயோகிப்பது இல்லையே என்பது போல.
“அங்க தான் போட மாட்ட, இங்கே போடு” என்றவன், “கடை பொண்ணு கிட்ட குடுத்தேன், ரெடிமேட் ப்ளவுஸ் அளவு, வேற அளவு எல்லாம் சாரு சொன்னா, செலெக்ஷன் மட்டும் தான் நான். உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான்.
“எவ்வளவு யோசிச்சு இருக்கீங்க, அபிக்கு மாவு வாங்கி இட்லி செஞ்சு, எங்களுக்கு ட்ரெஸ் வாங்கி…” என்று சொல்லியபடியே சுந்தரி புடவையை தூக்கிக்கொண்டு குளிக்க போக,
அவள் கைகளில் இருந்ததை வாங்கியவன், “சுந்தரி நைட்டி போடு, இங்க யாருமில்லை நம்ம தான்” என்று அவளை அனுப்பினான்,
“வேண்டாம்” என்று சொல்ல வந்தவள், பின்பு ஒன்றும் சொல்லாமல் நைட்டி எடுத்துக் கொண்டு சென்றாள்.
“ம்கூம், முடியாது” என்று சண்டை பிடிப்பாள், பிடித்தால் எப்படி அவளை சமாளிக்க என்று கண்ணன் நினைக்க அப்படி ஒன்று நடக்கவேயில்லை!   
மனதிற்கு இதமாய் இருந்தது கண்ணனிற்கு!
குளிக்க சென்ற சுந்தரியின் முகத்திலும் ஒரு புன்னகை!

Advertisement