Advertisement

அத்தியாயம் முப்பத்தி நான்கு :
முதலில் கண்ணன் சென்றது சிங்கார சென்னைக்கே, வேலை தேடி தான். ஆனால் அவன் எதிர்பார்த்தது போல வேலை அமையவில்லை, முன்பிருந்தது போல தேடினான். ஏதோ ஒரு வேலையில் அமரலாம் என்றால் மனதில்லை.
கிட்ட தட்ட இரண்டு மாதங்கள் சோர்ந்து தான் போனான். அப்பாவின் கார்டை எத்தனை நாள் தான் தேய்ப்பது. முதல் மாதம் முழுவதும் தேய்த்தான். உண்ண உறங்க ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடம் செல்ல, நண்பர்களை பார்த்தால் செலவு செய்ய என்று பணம் தண்ணீராய் செலவானது.
சிறுவயதில் இருந்தே எப்போது நண்பர்களுடன் இருந்தாலும் செலவு செய்வது இவன் தான். அப்படி தான் பழகியிருந்தான். இப்போது மாற்றிக் கொள்ள முடியவில்லை. அதனால் பணம் கூடுதலாய் செலவானது.
இவனாய் யாரையும் பார்க்க முயலா விட்டாலும் இவன் சென்னையில் இருப்பது தெரிந்து இவனை தேடி நண்பர்கள் யாராவது வருவர். அவனின் கல்லூரி நண்பர்கள் பெரும்பாலும் சென்னையில் தான் வேலையில் இருந்தனர். பின் அவன் முன்பு வேலை பார்த்த அலுவலகத்தில் இருந்த நண்பர்கள். அவர்களோடு இருக்கும் பொழுதுகளில் தான் அவன் வேறு எண்ணங்களில் உழளாமல் இருக்க அவனாய் அழைக்கா விட்டாலும் வரும் அவர்களாய் வரும் போது தடுக்கவில்லை.         
இங்கே சேலத்தில் சுந்தரிக்கு கண்ணன் சென்ற தினத்தில் இருந்தே அவனிடம் கேட்க ஆயிரம் சந்தேகங்கள் இருந்தது. “உங்ககிட்ட எப்படி கேட்க?” என்று அவனிடம் கேட்டிருக்க, “ஃபோன்ல பேசு” என்று சொல்லியிருந்தான்.
அதனால் தினமும் ஒரு முறை அழைத்து விடுவாள், “தோட்ட வேலையோ இல்லை பேங்க் வேலை குறித்த சந்தேகமோ? ஏதோ ஒன்றிற்காக பேச அழைத்து, “எங்க இருக்கீங்க? இன்னைக்கு என்ன பண்ணுனீங்க? என்ன சாப்பிட்டீங்க” என்பாள். அவன் அவளுடன் இருந்த போது இப்படி எதுவுமே பேசிக் கொண்டதில்லை.  
அதிகம் இல்லை ஐந்தே நிமிடம், உண்மையில் கண்ணனை இழுத்துப் பிடிக்க முற்பட்டாள். இந்த பிரிவு தன்னால் மட்டும் தான் என்று அவளின் மனம் உண்மையை அவளுக்கு எடுத்து உரைத்தது.     
அவன் செய்ததை சொல்வதால் பதில்கள் தயங்காமல் வரும். பின் அவனும் அங்கே என்ன நடக்கிறது என்று கேட்டுக் கொள்வான்.
மாதம் முடிந்து சில நாட்களில் ஒரு தடுமாற்றம், “என்ன சாப்பிட்டீங்க?” என்றால் யோசிப்பான். ஒன்றிரண்டு நாட்களியே கண்டு கொண்டாள், அவன் சரியாக உண்ணுவதில்லை என்று.
வேலையை விட்ட நாளாக பணம் தானே அவனின் பிரச்சனை. கிளம்புபோதே “பணம் செலவு பண்ண யோசிக்காதீங்க, எவ்வளவுன்னாலும் எடுத்துக்கோங்க, உங்க கிட்ட இருக்கா? என்று கேட்டிருந்தாள். ஆம் உண்மையில் பண வரவு செலவு எல்லாம் இப்பொது சமீப நாட்களாய் கண்ணன் தானே. முன்பு அவள் மட்டும் எல்லாம் பார்த்த போதே வரும் பணத்தை அப்படியே தான் போட்டு வைப்பாள். கணக்கு பார்த்து எடுத்து வைத்து இப்படி எதுவும் கிடையாது. எல்லாம் கண்ணன் வந்து தான் சரி செய்தான். அதனால் என்ன தேவையோ எடுத்துக் கொள்ள சொன்னாள்.     
ஆம்! கிளம்புவான் என்று தெரிந்த பிறகு என்ன செய்வாள்? அதுவும் கண்ணனின் முகம் மனதை பிசைந்தது.
“இருக்கு” என்று முடித்து விட்டான். அவனிடம் துருவி கேட்கவும் பயமாய் இருக்க பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டாள்.
ஒரு மாதம் தானே, அப்பாவின் பணம் உபயோகித்து கொள்ளலாம். பின் எப்படியும் வேலையில் சேர்ந்து விடலாம் என்று தான் நினைத்தான். ஆனால் முடியவில்லை, வேலை கிடைக்கவில்லை.  
உணவு உண்ணும் வேளையை இரண்டாய் குறைக்க ஆரம்பித்தான். அதுவுமே வயிறு நிறைய இல்லை, அளவாய். அனாவசிய செலவுகள் எதுவும் இல்லை. முன்பு ஆட்டோவில் அல்லது கால் டேக்ஸியில் சென்று கொண்டிருந்தவன் இப்போது எங்கு செல்லவென்றாலும் பேருந்து மட்டுமே, ஒரு ஸ்டாப் இரண்டு ஸ்டாப் என்றால் நடந்தே, இப்படி பல சிக்கன நடவடிக்கை.     
இப்படி இருந்த போதும் கண்ணனுக்கு என்னவோ எல்லாம் தப்பு தப்பாய் செய்து கொண்டிருக்கும் உணர்வு. மனதை என்னென்னவோ செய்தது.  
இவனின் தடுமாற்றங்களை புரிந்தவள் “பணம் இருக்கா உங்ககிட்ட?” என்றாள்.   
“இருக்கு” என்றான் எப்போதும் போல.
“இங்க இருந்து எடுத்த மாதிரியே எனக்கு தெரியலை, யார் கொடுத்தா?” என்றாள்.  
“அப்பா கார்ட் என்கிட்டே இருக்கு” என்றான்.
“அப்போ மாமாது எடுப்பீங்க, ஆனா நம்மோடது எடுக்க மாட்டீங்க?” என்றாள் கோபமாக.
“அது நம்மோடது இல்லை உன்னோடது”   
“இந்த பேச்செல்லாம் பேசினா, எனக்கு ரொம்ப கோபம் வரும், வீணா சண்டை வேண்டாம்” என்றாள் விரைப்பாய்.  
கண்ணன் பதில் பேசவில்லை.
“உங்க அக்கௌன்ட் நம்பர் சொல்லுங்க, நான் சின்ராசு அண்ணா கிட்ட பணம் கொடுத்து பேங்க்ல கட்ட சொல்றேன், நீங்க வாங்க மாட்டீங்கன்னா நானே போய் வீட்ல நாங்க பிரிஞ்சிட்டோம்ன்னு சொல்ல போறேன்” என்று மிரட்டல் விடுக்க,
“போடி, போய் சொல்லு, இந்த கொஞ்சம் நாளைக்குன்னு நான் சொன்னதை நிரந்தரமாக்கறேன்” என்றான் சிறிதும் அசராதவனாக.
சுந்தரி தான் தணிந்து வரும் படி ஆகிற்று “ஏன் இந்த பிடிவாதம், பணம் இல்லைன்னா பரவாயில்லை. நம்ம கிட்ட தான் இருக்கே, ஏன் அங்க மாமா கிட்ட இருந்து எடுக்கறீங்க. அவரோடதுல இருந்து எடுக்காதீங்க, நீங்க இப்படி பண்ணுணிங்கன்னா நானும் சாப்பாட்டை குறைப்பேன். சும்மா சொல்றேன்னு நினைக்காதீங்க நிச்சயம் செய்வேன்” என்றாள்.
“ஏய், அங்க இருந்தும் என் உயிரை எடுப்பியா நீ?” என்று கத்தினான்.
“ஆமாம் எடுப்பேன், சொல்றதை செய்யலைன்னா நேர்ல வந்து எடுப்பேன்” என்றாள் குரல் உயர்த்தாமல் உறுதியான குரலில்.
ஃபோனை வைத்து விட்டான், இரண்டு நாட்கள் ஃபோனே எடுக்கவில்லை. சுந்தரிக்கு அப்படி பயந்து வந்தது என்னென்னவோ நினைக்க தோன்றியது.
விடாது முயற்சிக்க இரண்டு நாட்கள் கழித்து கண்ணன் எடுக்கவும், அவன் குரல் கேட்கவுமே அப்படி ஒரு அழுகை பொங்கி விட்டது. ஏன் இப்படி செய்யறீங்க?” என்று தேம்பி தேம்பி அழ, கண்ணனின் மனதிற்கு கஷ்டமாய் போய்விட்டது.
அவனும் தான் என்ன செய்வான் பிரிந்து இருப்போம் என்று சொல்லி வந்த பிறகு அவளிடம் பணம் வாங்கி உபயோகம் செய்வதா? 
பேச்சை மாற்றினான் “அபி என்ன பண்றான்?” என,
“சிந்தாவோட இருக்கான், உங்களை ரொம்ப தேடறான்” என்று தேம்பி சொல்ல,  
“கொஞ்சம் நாள்ல பழகிடுவான், என்னை தேடமாட்டான்” என்றான் பதிலாய்.
“எதுக்கு இவ்வளவு கஷ்டம் வந்துடுங்களேன்” என்றாள் கலங்கிய குரலில்.
“ப்ளீஸ் சுந்தரி, அதை தவிர வேற ஏதாவது பேசு” என்றான்.
“சரி வேண்டாம், வர வேண்டாம், இந்த பணம் உபயோகிங்க, அப்புறம் எப்போன்னாலும் நீங்க எனக்கு செய்வீங்கலாம்” என்றாள் தணிவாய் அதே சமயம் கெஞ்சலாய்.
“சரி, நீ சொல்றதை நான் கேட்கறேன். நான் பணம் யூஸ் பண்றேன். அப்பாது எடுக்க எனக்கும் கஷ்டமா இருக்கு, ஆனா ஒரு கண்டிஷன் நீ என் பேர்லயும் உன் பேர்லயும் ஒரு இடம் வாங்கின இல்லையா, அதை உன் பேருக்கு முழுசா மாத்தணும் அப்போ தான் வாங்குவேன்” என்றான்.      
“அது நீங்க பணத்துக்கு கஷ்டப்படக் கூடாது என்னை எதிர் பார்க்கக் கூடாதுன்னு தான் அதை உங்க பேர்ல வாங்க நினைச்சேன். நீங்க தனியா முடியாது சொன்னீங்க, அப்போ ரெண்டு பேர் பேர்லயும் வாங்கினோம்” என்றாள் அவளை புரிய வைக்கும் நோக்குடன்.
“புரிஞ்சிக்கோ சுந்தரி, நாம சேர்ந்து வாழ ஆரம்பிச்சே சில மாசம் தான் ஆகுது. என்னோட உழைப்பை நான் இப்போ தான் குடுத்தேன். அதனால அந்த பணத்துல என்னோட உழைப்பு எங்கேயும் இல்லை. அதுல போட்ட முதல் எல்லாம் உங்கப்பா உனக்காக சேர்த்தது, மீதம் உன் உழைப்பு. தயவு செஞ்சு மாத்து. எனக்கு ரொம்ப பேட்டா ஃபீல் ஆகுது. ஒரு மனிஷன் சாகும் போது கூட உன்னை பத்தின கவலைல செத்திருக்கார். அதுக்கு காரணம் நான், அவரோட உழைப்புல நான் சொத்து வாங்குவேனா? புரிஞ்சிக்கோ என்னை!” என்றான் உணர்ச்சிமயமாய்.
இப்படி ஒரு கோணம் சுந்தரி யோசிக்கவேயில்லை!
“நீங்க வேற, நான் வேற இல்லை, அப்படி நினைச்சு தான் வாங்கினேன்” என்றாள் கம்மிய குரலில்.
“புரிஞ்சிக்கோ சுந்தரி, இப்போ நான் சம்பாரிச்சு உன் பேர்ல சொத்து வாங்கலாம், அது நியாயம். அதுக்காக எங்கப்பாம்மா சம்பாரிச்சதுல உனக்கு சொத்து வாங்கினா, அது நல்லாவா இருக்கும். எனக்கும் அப்படி தானே!” என்றான் பொறுமையாய். 
“சரி, நீங்க இங்க வரும் போது கண்டிப்பா மாத்திக்கலாம். இப்போ வந்தாலும் சரி, எப்போ வந்தாலும் சரி. நம்ம பணம் எடுத்து தான் நீங்க செலவு பண்ணனும்” என்று கெஞ்சலாய் பேச,
அவனுக்கு வேறு வழி இல்லையே “சரி” என்றான்.
மீண்டும் ஒரு மாதம் வேலை தேடல், ஆனால் அவன் தேடுவது போல அமையவேயில்லை. சுந்தரி தினமுமே இன்னும் சற்று நேரம் பேச ஆரம்பித்து இருந்தாள். 
அதிகமல்ல அதே ஐந்து நிமிடங்கள் இன்னும் கூடதலாய் ஒரு ஐந்து நிமிடம். ஆனால் இருவருக்குள்ளும் அது ஒரு புரிதல் கொண்டு வர ஆரம்பித்து இருந்தது. முன்பு கண்ணன் எடுத்த முயற்சி ஆனால் சுந்தரி ஒத்துழைக்கவில்லை. இப்போது சுந்தரி எடுத்தாள் கண்ணன் ஒத்துழைத்தான் என்று சொல்ல முடியாது ஆனால் சுந்தரி ஒத்துழைக்க வைத்துக் கொண்டிருந்தாள்.
கண்ணனின் வாய் மொழியாக அவனின் நிலையை உள் வாங்கிய சுந்தரி,   “எல்லோர்கிட்டயும் படிக்க போறேன்னு தானே சொல்லியிருக்கீங்க, பேசாம படிக்கிற வேலைய பாருங்க, வேலை ஒன்னும் தேடவேண்டாம்”  
“காலேஜ் ஆரம்பிச்சு ரெண்டு மாசம் ஆகியிருக்கும்”
“எனக்கு படிப்பை பத்தி தெரியாது, ஆனா காசு குடுத்தா சீட்டு வாங்க முடியும்னு தெரியும், பாருங்க ஏதாவது நல்ல காலேஜ்ல சேருங்க. நம்ம பணம் இருக்கு எடுத்துக்கலாம்” என்று வெகுவாக அவனை பேசி கரைத்துவிட்டு, அவனை கல்லூரியை தேட வைத்திருந்தாள்.
கோவையில் ஒரு புகழ் பெற்ற, தரமான கல்லூரியில் இடம் இருக்க சந்திரன் மூலம் பணம் கொடுத்து விட்டு, இதோ இப்போது கோவையில் ஒரு கல்லூரியில் எம் பி ஏ சேர்ந்திருந்தான்.
ஆகிற்று ஒரு மாதம் ஆகிற்று , கல்லூரி பக்கத்தில் அவர்களின் தூரத்து உறவினர் வீடிருக்க, அங்கே மேலே ஒரு போர்ஷன் காலியிருக்க, அவன் ஒருவனுக்கு அது தேவையில்லை, வாடகையும் அதிகம், ஆனால் சுந்தரி தான் பிடிவாதம், இல்லை அது உங்களுக்கு சௌகர்யமா இருக்கும் என்று.
கூடவே “நானும் அபியும் வந்தா இருக்கணும்ல அதுக்கு தான்” என்று மனதில் தோன்றும் எண்ணத்தை மறைக்க, ஆனாலும் கண்ணனுக்கு புரியாதா என்ன?
உடன் இருந்து எதையும் சரி படுத்த முடியவில்லை என்று விலகி வந்து விட்டான். இப்போது சுந்தரியாய் வரவும், அவள் சொல்வதற்கு தலையசைக்க பழக ஆரம்பித்தான். அவன் விலகி வந்தது எதற்கு சேருவதற்கு தானே!  
“யாருக்கு சௌகர்யம்?” என்றவனிடம்,
“நமக்கு” என்றாள் முறைப்பாய்.
அவளின் பாவனையில் சில மாதங்களுக்கு பிறகு அப்படி ஒரு சிரிப்பு கண்ணனுக்கு. “அபிக்கு உங்களை பார்க்கணுமாம்” என்று பிடிவாதம் பிடித்து வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருக்க, இங்கே அபிக்கும் அப்பாவின் சிரிப்பை பார்த்து சிரிப்பு அவனும் சிரிக்க,
சுந்தரி முகத்தை சுருக்கி முறைப்பை காண்பிக்க, கண்ணன் கண்டு கொண்டான் இல்லை மகனை பார்த்து பேசி சிரித்துக் கொண்டிருந்தான். 
இப்படியாக படிப்பை, வீட்டை என்று மீண்டும் பிடிவாதம் தான், ஆனால் சுந்தரி செய்து முடித்திருந்தாள்.
விட முடியாது கண்ணனின் வாழ்க்கை மட்டுமல்ல அவளின் வாழ்க்கையும் கூட அபியின் வாழ்க்கையும் கூட. சுந்தரியின் எண்ணம் அதுவாய் இருக்க, கண்ணனுக்கும் அது தானே வேண்டும்.   
அப்பாவையும் மகனையும் விழி எடுக்காமல் பார்க்க, “ஓய், என்ன நீ இப்படி பார்க்கற? முதல்ல எங்க ரெண்டு பேருக்கும் திருஷ்டி சுத்துடி” என்றான் அதட்டலாய்.
“இது வேறையா?” என்று சலிப்பது போல சொன்னாலும், அவள் நெட்டி முறிக்க,
படபடவென சத்தம் “உன் கண்ணு போதும் போல” கண்ணன் கிண்டல் செய்ய,
“அய்யே” என்று மீண்டும் முகம் சுருக்கினாள்.

Advertisement