Advertisement

அத்தியாயம் முப்பத்தி மூன்று :
கண்ணனின் வார்த்தைகளில் சுந்தரி தோய்ந்து அமர்ந்திருக்க, “முதல் தடவை உன்னை பிரியணும்னு டைவர்ஸ் கேட்டு பிரிஞ்சேன், இப்போ நாம சேரணும்னு பிரியறேன்” என்றான் தெளிவாய்.
“ஆனா அது நடக்குமான்னும் இருக்கு, உன்கிட்ட நான் எந்த விளக்கமும் சொல்ல இஷ்டப்படலை, சொன்னாலும் நீ அதை கிண்டலா பார்ப்ப இல்லை நக்கல் பண்ணுவ, இதெல்லாம் என்னால இனி பொறுக்க முடியாது. இப்படி ஒரு வாழ்க்கை வாழணும்னு எனக்கு அவசியமில்லை அபிக்காக கூட, என்னை அது ரொம்ப டிப்ரஸ் பண்ணுது” என்றான்.
அந்த “டிப்ரஸ்” என்ற வார்த்தையின் அர்த்தம் அவளுக்கு புரியவில்லை.
அவன் கோபமாயும் வருத்தமாயும் சொன்ன விதத்தில் மனது பிசைய “என்ன பண்ணுது” என்றாள் கலக்கமாய்.
கண்ணனும் என்ன வார்த்தை போடுவது என்று தெரியவில்லை, யோசித்து “எனக்கு அது அது ஒரு மன அழுத்தம் கொடுக்குது. மே பீ எனக்கு இந்த கல்யாணம் வாழ்க்கையை ஹேண்டில் பண்ண தெரியலையா? இல்லை உன்னை ஹேண்டில் பண்ண தெரியலையா? இல்லை எந்த சூழ்நிலையிலும் நான் இப்படி தான் சமாளிக்க தெரியாம குழப்பவாதியா இருப்பேனா? என்னென்னவோ தோணுது!” என்றான் மீண்டும்.
பயந்து விட்டாள்.
அவனின் பேச்சுக்களில் அவ்வளவு விரக்தி!
சில சமயம் அதிக சுய அலசல்கள் தேவையில்லை, ஆனால் இங்கே கண்ணன் சமீபமாய் அதனை நிறைய செய்திருந்தான். 
சுயஅலசல்களின் முடிவு அவர்களின் இயலாமையை சுட்டிக் காட்டும் போது எல்லோராலும் அதனை இயல்பாய் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. கண்ணன் அப்படி ஒரு நிலையில் இருந்தான்.
சுந்தரியை அவனுக்கு கையாள தெரியவில்லை என்ற இயலாமை அவனை வெகுவாய் பாதித்தது.     
“கொஞ்சம் நாள் பிரிஞ்சு இருப்போம். அப்புறம் சேர்ந்து வாழ ரெண்டு பேரும் இஷ்டப்பட்டா வாழலாம், இல்லை என்னவோ யோசிக்கலாம்.
என்னவானாலும் எனக்கு இந்த நம்மோட உறவு உடையறதுல இஷ்டமில்லை” எனும் போது தன்னை போல அபியை அவனின் கைகள் தூக்கி அணைத்துக் கொண்டது.
“பார்ப்போம் வாழ்க்கை எனக்கு என்ன வெச்சிருக்குன்னு தெரியலை” என்றவனின் குரலில் இருந்த துயரம் சுந்தரியை என்னவோ செய்தது. நீ ஏதோ தப்பு செய்து விட்டாய் என்று அவளுக்கு காண்பித்து கொடுத்தது.   
“இல்லை, இப்படி ஒரு முடிவு வேண்டாம். நீங்க என்ன சொன்னாலும் கேட்கறேன்” என்று சொல்லும் போதே என்ன முயன்றும் சுந்தரியின் குரல் அழுகையை வெளிப் படுத்தியது.
“இல்லை சுந்தரி, என் முடிவு மாறாது, வீணா அழுது என்னை பலவீனப் படுத்த முயற்சி செய்யாத”
“எனக்கு அழுகை வருது அழறேன், உங்களை பலவீனப் படுத்த இல்லை” என்றாள் ரோஷமாக.
“பார்த்தியா நம்ம சண்டை ஓயாது சுந்தரி. ஒரு கல்யாணம்… ஆனா ரெண்டு முறை… இப்போ ரெண்டு பிரிவு…. எனக்கு இந்த கல்யாணம் கத்து கொடுத்திருக்கிறது ஒரு பாடம் தான், ஒரு கல்யாணம் நிலைக்கணும்னா முக்கிய தேவை, காதல். அன்பு, பாசம், புரிதல், கமிட்மென்ட், விட்டுக் கொடுத்தல், பணம், இப்படி மட்டும் கிடையாது, இதையும் மீறி ஒன்னு இருக்கு” என்று நிறுத்தினான்.
“என்ன?” என்பது போல கேள்வியாய் பார்க்கவும் “சகிப்புத்தன்மை” என்றான். “கணவன் மனைவின்னா ஒருத்தரை ஒருத்தர் சகிச்சிக்கணும், அவங்க எப்படி இருந்தாலும்”.
சுந்தரி கண்ணீரோடு பார்க்க “எஸ், டாலரன்ஸ், நமக்குள்ள அது இல்லை”
“எனக்கில்லையா? உனக்கில்லையா? நான் பிரிச்சு பார்க்கலை, நமக்கில்லை!”
“என்னோட இந்த முடிவுல என்னை விடவும் நீதான் கஷ்டப்படுவ அபியை தனியா வெச்சிக்கிட்டு. ஆனா என்கிட்டே வேற வழி இல்லை”
“சொல்லப் போனா எனக்கு உன்னோட எப்படி குடும்பம் நடத்தறதுன்னு தெரியலை. வாழ்க்கையை எப்படி வாழணும்னு தெரியாதா அறிவிலியா போயிட்டேன் நான்ற உணர்வை தான் நீ எனக்கு கொடுக்கற”
“கொஞ்சம் நாள் பிரிஞ்சு இருக்கலாம், அது நம்மை சரி படுத்தும்மான்னு பார்க்கலாம் நமக்கு இன்னும் வயசு இருக்கு வாழ, உனக்கு இருபது தான் ஆகுது, எனக்கு இருபத்தஞ்சு தான். கொஞ்ச நாள் பிரிவுல நாம கிழவன் கிழவி ஆகிடப் போறோம என்ன?” என்றான் கண்ணன்.
“ஒரு வேளை அப்போவும் சரியாகலைன்னா?” என்றவளின் கேள்வி உடனே குதித்து விழ,
அவளை நேர்கொண்டு பார்த்தவன், “இதுக்கு பதில் என்கிட்டே கிடையாது. உன்கிட்ட இருக்கா?” என்றான்.
“இருக்கு, நாம பிரிய வேண்டாம்” என்றாள் உடனே.
“இல்லை, அது முடியாது!” என்றவன் மகனை தூக்கிக் கொண்டு வீட்டை நோக்கி நடையை கட்டினான்.
அவன் பின்னேயே வேகமாய் சென்றவள், “பிரிவுன்னா நீங்க உங்க வீட்ல? நான் என் வீட்லையா?” என்றாள் கேள்வியாய்.
“இல்லை” என்றவன், “நான் இந்த ஊர்ல இருக்கப் போறதில்லை, யார் கேட்டாலும் நான் மேல படிக்கப் போயிருக்கேன்னு சொல்லிடு. நானும் அப்படி தான் சொல்லப் போறேன், அப்பா அம்மா கிட்ட கூட நமக்குள்ள நடக்கறது யாருக்கும் தெரியனும்னு அவசியமில்லை. நான் சொல்லப் போறது இல்லை நீயும் சொல்லலைன்னா தெரியாது”    
“எங்க போகப் போறீங்க?”  
“தெரியலை” என்றவனின் குரலில் அவ்வளவு வருத்தம், கூட ஒரு இறுக்கம்.
“இல்லை, நீங்க போக வேண்டாம்” என்று அவனின் கை பிடிக்க,
“ப்ளீஸ் சுந்தரி, கை எடு. என்னை கொஞ்சம் நானா இருக்க விடு, பைத்தியம் பிடிச்சிடும் போல இருக்கு நீ என்னை படுத்துற அவமானத்துல, நானும் அதை சரி பண்ண முயற்சி எடுக்கறேன், ஆனா நீ மாற மாட்டேங்கற, வேண்டாம், எதுவும் சொல்லா,த தயவு செஞ்சு என்னை போக விடு!” என்று நீளமாய் பேசினான்.
அவன் போகிறான் என்பது பாதி, மீதி ஊருக்குள் என்னை என்ன சொல்வார்கள் என்பது மீதி என்று சுந்தரி முற்றிலும் நிலை குலைந்து போனாள்.
“ப்ளீஸ், போகாதீங்க” என்று அவன் முன் மீண்டும் நின்றாள்.
“புரிஞ்சிக்கோ சுந்தரி, என் பசங்க எல்லாம் டென்ஷன்னா சிகரட் பிடிப்பாங்க, பீர் அடிப்பாங்க, குடிப்பாங்க, நான் அது பக்கம் எல்லாம் யோசிச்சது கூட இல்லை. ஆனா சமீபமா தோணுது, அதுவும் இன்னைக்கு நிறைய, அதெல்லாம் பிடிச்சா குடிச்சா என் பதட்டம் தனியுமோன்னு. எங்கேயோ என்னவோ நான் சரியில்லை, ரொம்ப யோசிச்சப்போ இப்போ நாம பிரிஞ்சு இருக்குறது தான் நல்லதுன்னு தோணுது!” என்றான்.  
அவன் மேலே படிக்கப் போகிறேன் என்று சொன்ன போது, கண்ணனின் வீட்டில் நிறைய சத்தங்கள், ஆனால் ஊருக்குள் இப்போது வரை தெரிய விடவில்லை.
எந்த காலேஜ், ஏன் இப்போ போகணும் என்று பல மாதிரி சந்திரன் கேட்க என்ன பிரச்சனை என்று மீண்டும் குடும்பமே கேட்க, “ஒன்றுமில்லை மேலே படிக்க ஆசை” என்று வந்து விட்டான்.
இதோ அவன் சென்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டன, எல்லோரிடமும் மேற்படிப்பு என்ற காரணம் மட்டுமே! அவர்களின் பிரச்சனையை அவன் சொல்லவில்லை.   
சின்ராசுவையும், சிந்தாமணியையும் அவர்களின் தோப்பிற்கு பக்கம் குடி வைத்திருந்தான். காரை இங்கே சுந்தரியிடம் நிறுத்தி விட்டான், அவள் எங்கே போக வர இருந்தாலும் சின்ராசுவை கார் ஒட்டி அவளை அழைத்து செல்ல ஏதுவாக.
புதிதாக வாங்கியிருந்த தோப்பை அப்பாவையும் சித்தப்பாவையும், தான் வரும் வரை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி விட்டான்.
சுந்தரி பார்த்துக் கொள்வது பழைய வேலைகள் மட்டுமே! ஆனால் அதுவே அவளால் முடியவில்லை, முன்பு அவன் வேண்டாம் என்று விட்டு சென்ற போது இருந்த இறுமாப்பு அவளை செயல் பட வைத்தது.
ஆனால் இப்போது தன்னால் தான் அவன் சென்று விட்டானோ என்று மனதில் இருந்த குற்ற உணர்ச்சி அவளை செயல் பட விடவில்லை.
இந்த ஒரு மாதமாக தான் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறாள். வேலைகள் தன்னை போல நடக்க இருந்தாலும், அவளும் முன்பு போல கருத்தாய் இப்போது தான் எல்லாம் பார்க்க ஆரம்பித்து இருந்தாள்.
இரண்டு மாதங்கள் கண்ணன் சென்றது ஒரு பக்கம், கண்ணனை தேடும் அபியை தனியாய் சமாளிப்பது ஒரு பக்கம், மறு பக்கம் ஊரில் என்ன பேசுவார்களோ? சுற்றம் என்ன சொல்லுமோ? என்று பலதரப்பட்ட சிந்தனைகள், பதற்றங்கள்.
அதையும் விட கண்ணன் இப்படி சென்றது வெகுவாக மனதை பாதித்து இருந்தது. “இப்படி என்னை அவன் விட்டு செல்லும் அளவிற்கு அவனை நான் சிரமப்படுத்தியிருக்கிறேனா? முந்தைய நிகழ்வை விடு, இங்கே வந்த பிறகு, திரும்ப திருமணம் செய்த பிறகு, அவன் உன்னிடம் எப்படி நடந்து கொண்டான், நன்றாக தானே நடந்தான். குற்றம் குறை சொல்ல எதுவும் இல்லையே. நான் தான் பழையதை பேசி எல்லாம் சிக்கலாக்கிக் கொண்டேனோ?” என்ற எண்ணம்.    
உண்மையில் அதனை கடந்து வர உதவியது கண்ணனே. ஆம்! இருவரும் பேசும் அலைபேசி அழைப்புக்கள், அவளுக்கு யானை பலம் கொடுத்தது. நிகழ்வில் சுந்தரி தான் பலமாய் கண்ணனை தாங்கினாள். ஆனால் அவனுடனான பேச்சுக்கள் அவளுக்கு தைரியம் கொடுத்தது.
ஒரு கட்டத்தில் நிச்சயம் அவனை யாராவது தாங்கி பிடிக்க வேண்டும் என்று கண்ணனின் பேச்சுக்களில் உணர ஆரம்பித்தாள். அவர்களின் பிரச்சனை யாருக்கும் தெரிய விடாது, இப்படி தனியாய் சென்று சிரமப் படுகிறான் என்று புரிந்த க்ஷணம், சுந்தரிக்கு தோன்றியது ஒன்று தான். சேர்ந்து வாழுகிறோமோ இல்லையோ, கண்ணன் நன்றாய் இருக்க வேண்டும். என்னால் அவன் இப்படி வாழ்வில் தடுமாறி, நிலை மாறி இருக்கக்கூடாது என்பது தான்.         
“இப்பதானே கண்ணு சேர்ந்து வாழ ஆரம்பிச்சீங்க, இப்போ எதுக்கு படிக்க போகணும். சரி ராசா போனது தான் போச்சு, ஒரு முறை வந்துட்டு போக என்ன? மூணு மாசம் ஆச்சு” என்றார் ஆதங்கமாக வடிவு பாட்டி.  
“இவரு லேட்டா சேர்ந்தாரு ஆயா, அதனால படிக்க நிறைய வேலை இருக்காம்” என்றவளின் பதிலில்,
“சரி இருக்கட்டுமே, அபி பையன் ஏங்கிப் போறான் தானே, நீயாவது போயிட்டு வா” என்றார்.
“நான் எங்க ஆயா தனியா போறது, அதான் அபி ஒரு தடவை அவன் தாத்தா பாட்டியோட போய் உன் ராசாவை பார்த்துட்டு தானே வந்தான்”
“நீயேன் தனியா போற, திரும்ப உன் மாமனார் மாமியாரை கூட்டிட்டு போகச் சொல்லுடி” என்றார் சற்று குரலுயர்த்தியே.
ஆம்! உண்மையில் துரைகண்ணன் இப்போது படிக்க தான் செய்கிறான். 
“ஏன் உன் ராசா தான் அப்போ அப்போ உன் கிட்ட பேசுதே, நீ சொல்லு!”  
“நானும் சொல்றேன், நீயும் சொல்லு” என்றார் அவர்.
“நீயே சொல்லு” என்று சொல்லி நிற்காமல் சென்று விட்டாள்.
“கூறுகெட்ட கழுதை, இது எப்படி தான் பிள்ளை பெத்துச்சோ?” என்று சலித்துக் கொண்டார்.
அபி மண்ணில் உருண்டு புரண்டு கொண்டிருந்தான், கையில் ஒரு மண் புழுவை வைத்து, “டேய்” என்று மகனை பார்த்து கத்தியவள், அவனை குளிக்க வைக்க தூக்கிக் கொண்டு சென்றாள்.
திமிறிய மகனிடம் “நீ குளிச்சா அப்பாக்கு ஃபோன் பேசலாம்” என, அது சிறிது வேலை செய்தது.
நேரம் பார்த்தால் ஐந்து மணி தான், அவன் ரூம் வர எப்படியும் ஆறு மணி ஆகிவிடும்.
இதோ கார் எடுத்தால் மூன்று மணி நேரம் தான் அவனை பார்த்து விடலாம், ஆனால் அதற்கான அனுமதி இன்னும் அவளுக்கு கிடைக்கவில்லை என்பதனை விட அவளும் கேட்கவில்லை.
இந்த மூன்று மாதத்தில் இருவருக்குள்ளும் ஒரு புரிதல் ஆரம்பித்திருந்தது.
கண்ணனை கண்ணனின் புறம் இருந்து பார்த்து புரிந்து கொள்ள முயன்று கொண்டிருந்தாள். இப்போதைய கண்ணனின் இந்த முடிவிற்கு அவள் மட்டுமே காரணம் என்பது வரையில் தெளிவாய் இருந்தாள்.
ஆம்! எல்லோராலும் எல்லா நிலையிலும் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடிவதில்லை, கண்ணன் அப்படி தான் இருந்தான். சுந்தரி அவளின் ரோஷம் சுயமரியாதை எல்லாம் விட்டு வாழ்க்கையில் அவனுக்காக யோசிக்க ஆரம்பித்தாள்.
அவனை விட சிறு பெண் தான். ஆனால் அந்த சமயத்தில் கொஞ்சம் பக்குவம் கொண்டு வர முயற்சித்தாள். கண்ணனுக்கு எப்படியோ அவளுக்கு கண்ணனை பிடித்திருந்தது. அவன் வந்ததில் இருந்து அவளுக்கும் அவனுக்கும் சண்டைகள் ஏராளம். ஆனால் வேறு எந்த கவலையும் இல்லை. எல்லாம் எல்லாம் அவன் பார்த்துக் கொண்டான் தானே. பல முறை பிணக்குகள் வந்த போதும் திட்டி, அடித்து, அவமானப்படுத்தி இப்படி எதுவும் கிடையாதே!
பல ஆண்கள் மனைவியிடம் தனிமையில் குலைந்தாலும், கொஞ்சினாலும் நாலு பேருக்கு முன் அரட்டுவதும், கீழிறக்கி பேசுவது சகஜம், ஏன் கணவனுக்காய் பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் சமையலை வக்கணையாய் வகை வகையாய் கொட்டிக் கொண்டு அவளின் சமையலை குறை கூறும் ஆண்கள் அனேகம்! “என்ன சமைக்கிறா? ஏதோ நானா இருக்கவும் சாப்பிடறேன், இப்படி பேச்சுக்கள் சகஜம் பலரிடத்தில். அவளின் முன் இல்லையென்றாலும் அவளின் பின்னாவது பேசி விடுவர்.  
இதெல்லாம் செய்தால் ஆண்மகனாய் எனக்கு கெத்து என்று நினைக்கும் மூடர்கள் சிலர் இருக்க, பலர் இப்படி இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு இடத்தில் இந்த வகையில் சறுக்கி தான் விடுவார்.   
ஆனால் இப்படி எதுவுமே கண்ணன் இல்லை.  
இதோ இப்போது போவது கூட அவனின் முடிவு என்று காண்பித்து தான் சென்றான்.
இதுவரையிலும் அவர்களுக்குள் இருந்த பிணக்குகள் எதுவும் அடுத்தவருக்கு சிறிதும் தெரியாது.
அந்த வகையில் இன்னும் பிடித்தது, “பின்னே வந்த புருஷனை விரட்டிட்டா” என்று யாராவது சொன்னால் தாங்க முடியுமா என்ன?
ஆனால் ஒரு சுய அலசல் விரட்டி தான் விட்டேனா என்று?
       
                                                                    

Advertisement