Advertisement

அத்தியாயம் முப்பத்தி இரண்டு :
விடியற் காலை மோட்டார் போட எப்போதும் விழித்து விடும் துரை கண்ணன் அன்று விழிக்கவே இல்லை.
சுந்தரி அவனை ஒரு வழி செய்திருந்தாள். அவனும் ஒரு வழியாகியிருந்தான். என்ன அவளின் எதிர்பார்ப்பு என்று அவளிற்கே தெரியவில்லை?
சுந்தரியின் முரட்டு முத்தத்திற்கு பிறகு சில பல தேடல்கள் ஆரம்பிக்கும் வேளையில் கண்ணனை விட்டு மகனோடு சென்று படுத்துக் கொண்டாள்.
“கோபப்படாதே மேல வா” என்று அவன் பல மாதிரி அழைத்தும் வரவில்லை. கண்ணனுக்கு தானாய் சுந்தரியின் அருகில் செல்லவும் பயமாய் இருந்தது, அவளை கட்டாயப்படுத்தி விடுவோமோ என்று.   
கொஞ்சல் கெஞ்சல் மிஞ்சல் என்று அத்தனை வகை காண்பித்தும் சுந்தரி அசையவில்லை. “போடி” என்று சலித்தவன் விட்டு விட்டான். மனதும் உடலும் எரிந்தது. 
கண்ணனின் மனம் சுந்தரியை எப்படி கையாள்வது என்று தெரியாத நிலையில் முற்றிலும் தளர்ந்தது.
ஒரு அதீத வெறுப்பு நிலை, வெறுத்த நிலை, ஆழியாய் அவனை சூழ. அவனிற்கு அதனை கையாள தெரியவில்லை. வேண்டாம் இப்படி ஒரு வாழ்க்கை எனக்கு வேண்டாம் என்று அந்த க்ஷணம் மனம் ஸ்திரமாய் முடிவெடுத்தது.   
இதோ உடலின் தேவைகளில், மனதின் அயர்ச்சியில் வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்து உறங்கியிருந்தான்.
அதனால் உறக்கம் கலையவில்லை! கலைந்திருந்தாலும் எழுந்து சென்றிருக்க மாட்டான் என்பது வேறு.
சுந்தரிக்கு உறக்கம் கலைந்து விட, எழுந்து தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்று விட்டாள்.
பூப்பறிக்க வருபவர்கள் வந்து, பறித்து முடித்து, எடை போட்டு, லோடு ஏற்றி அவள் வீடு வரை கண்ணனும் விழிக்கவில்லை, அபியும் விழிக்கவில்லை.
கிட்ட தட்ட மூன்று மணி நேரமாக வேலை தன்னை போல நடக்க அவ்வப்போது வந்து கணவனையும் மகனையும் எட்டி பார்த்து சென்றாள்.
பின் வந்து பாலை காய்ச்சி குளித்து விட்டு வர, அப்போது தான் அபி விழித்திருப்பான் போல, அப்பா மேல் ஏறி படுத்து இருந்தான். கண்ணனின் கைகள் அவனை அணைத்திருக்க, அபியும் சத்தம் செய்யாமல் சமர்த்தனாய் அப்பாவின் மேல் படுத்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தான்.
“வாடா” என்று மகனின் புறம் வந்து கை நீட்ட, அம்மாவிடம் வர அப்பாவின் கைகளில் இருந்து விலக, அதில்தான் கண்ணனின் உறக்கம் கலைந்தது.
அம்மாவின் கைகளில் அபி தஞ்சமடைந்து, அவளின் கழுத்தை கட்டிக் கொண்டான்.
சுந்தரி கண்ணனின் முகத்தை தான் பார்த்திருந்தாள், அவளை கவனியாதவன் போல திரும்பி கவிழ்ந்து படுத்துக் கொண்டான்.
என்னவோ எழவே பிடிக்கவில்லை!
சுந்தரிக்கு தான் செய்தது தவறு என்று தெரிந்தாலும், எத்தகைய தவறு என்று தெரியவில்லை. குழந்தையே பிறந்து விட்டாலும், எல்லா வேலைகளும் அவளாய் செய்து கொண்டாலும், ஒரு தோட்டத்தையே நிர்வகித்தாலும், அவளின் உணர்வுகளும் அவளுக்கு தெரியவில்லை, கணவனின் உணர்வும் தெரியவில்லை. அவள் செய்த செயலின் வீரியமும் புரியவில்லை.
இதனால் வரப் போகும் நிகழ்வுகளை அனுமானிக்கவில்லை!  
சுந்தரிக்கு ஒன்றே ஒன்று தான், அவள் சொல்லி கண்ணன் அருகில் வந்த போது, அது மேலே முன்னேறுவதில் அவளுக்கு பிடித்தமில்லை. அது மட்டுமே அவளின் எண்ணமாய் இருந்தது. அந்த இடத்தில் எங்கோ அவளின் சுயமாரியாதை வந்து குதிக்க, மொத்தமாய் அவனின் உணர்வுகளோடு விளையாடி விட்டாள்.  
இங்கே விருப்பமில்லை என்பது எங்கேயும் இல்லை. ஆனால் பிடித்தமின்மை அந்த க்ஷணம் தோன்றியது விலகி விட்டாள்.
கண்ணன் பத்து மணி வரையிலும் எழவில்லை. படுத்தே தான் இருந்தான்.
“என்ன கண்ணு ராசாவை காணோம். அவங்க அம்மா வீட்டுக்கு போயிருக்கா?” என்றார் வடிவு பாட்டி கூட.
என்ன சொல்வது என்று தெரியாமல், “இல்லை ஆயா, உள்ள தான் படுத்திருக்கார் தலைவலி போல” என்றாள்.
“டீ தண்ணி, இல்லன்னா காபி தண்ணி குடு, இதமா இருக்கும், நீ குடுத்துட்டியா?” என்றவரின் கேள்விக்கு.
“அவர் கண் முழிக்கட்டும்ன்னு இருந்தேன்” என்றாள்.
ஆம்! அவள் சென்று பார்க்கும் போதெல்லாம் கண்மூடி இருக்க, சற்று நேரம் நின்று பார்க்கும் போது உறங்குவது போலவும் தோன்றும், விழித்திருப்பது போலவும் தோன்றும்.
இப்போது அபியை தூக்கும் போது பார்த்த, உணர்ந்த முகத் திருப்பலில், என்னவோ ஒரு தயக்கம், பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
டீ வைத்துக் கொண்டு சென்றவள், அபியிடம் “அப்பாவை எழுப்பு” என்று சொன்னாள்.  
மகனும் படுக்கையில் அமர்ந்து அப்பாவின் முகம் தேடி, தலையணைக்குள் புதைந்திருந்த முகத்தின் ஒரு சிறு பகுதி தெரிய அதில் தன் பிஞ்சு கைகளால் தட்டி “பா” என்றான்.
பார்க்கவே கவிதையாய் இருந்தது!
சோம்பலாய் தலையை திருப்பியவன் “சொல்லுடா என் கண்ணு குட்டி” என்று மகனை கொஞ்ச,
“பா தீ” என்றான்.
“டீ” என்பதை சொல்லிக் கொடுத்து அழைத்து வந்திருந்தாள்.
“என்னது தீ யா?” என்று தலையை திருப்பி பார்க்க அங்கே சுந்தரி கையில் டீ யுடன் நின்றிருக்க,
“பாருடா, உங்கம்மா போடற டீ யை குடிச்சா தொண்டை தீ மாதிரி எரியும்னு உனக்கு கூட கரக்டா தெரியுது” என்றான் குரலில் ஏகத்திற்கும் நக்கலை தேக்கி.
சுந்தரிக்கு கோபம் ஆத்திரம் எல்லாம் வர ஆரம்பிக்க, டீயை அங்கே இருந்த நாற்காலி மேல் வைத்து நகர போக,
“உங்கம்மா கிட்ட சொல்லு, அதை என் முகத்துல ஊத்த சொல்லு, அதுவும் சூடா இருக்கும் போதே ஊத்த சொல்லு” என்றான்.
“சுந்தரி என்ன பேச்சு பேசறீங்க?” என்று கேட்க,
“உண்மையை தான் பேசறேன், எப்பவும் என் முகத்துல சூடா ஏதோ ஊத்துற மாதிரி தான் நீ பண்ற” என்றவன்,
எழுந்து அமர்ந்தான்.
அவனின் கண்களில் அப்படி ஒரு தீவிரம்.
“இப்போதைக்கு முகத்துல ஊத்தலைன்னா என்ன?” என்று சொல்லியபடி அந்த டம்ளரை வலது கையால் எடுத்தவன்,
அப்படியே அவனின் இடது கையின் மணிக்கட்டில் ஊற்ற ஆரம்பித்தான்.
கொதிக்க கொதிக்க அந்த டீயை கொண்டு வந்திருந்தாள் சுந்தரி. “ஐயோ என்ன பண்றீங்க?” என்று நொடியில் அவன் கை பிடித்து இழுக்க, டீ சுவரில் எல்லாம் பட்டு சிதறியது.
“நீ எனக்கு எப்போ டீ குடுத்தாலும் இனி இப்படி தான்” என்றான். .
என்ன பேச்சு இது என்று புரியாமல் பதறி பார்த்தவள், அவனின் மணிக்கட்டை பார்க்க, அதில் தோல் சிவந்து இருக்க, வேகமாய் தண்ணீரை எடுத்து அதன் மேல் ஊற்றினாள், அசையாமல் நின்றான்.
அந்த இடம் அப்படி எரிந்தது அவனின் மனதை போல!
“ஏய் கையை விடுடி, நான் என்ன உன் பின்னாடி வர்ற நாய் குட்டின்னு நினைச்சியா, நகருடி” என்றவன் மகனை கூட தூக்காது வெளியில் சென்றான்.     
சென்று சோபாவில் அமர்ந்தான்.
“இப்போ தலைவலி பரவாயில்லையா ராசா” என வடிவுப் பாட்டி கேட்க,
எப்போதும் அவருக்கு பதில் சொல்பவன், இப்போது வெறும் தலையசைப்பு மட்டுமே கொடுத்தான்.
அவருக்கு வித்தியாசம் நன்கு தெரிந்தது, ஆனால் தலைவலி போல என்று நினைத்துக் கொண்டார்.
யாரிடமும் அவனுக்கு பேச பிடிக்கவில்லை. தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டாளே என்று அதீத கோபம் மனதிற்குள் பெருகியது.      இயல்பை தொலைத்துக் கொண்டிருந்தான். அது அவனிற்கு புரியவும் செய்தது.
அவனின் ரூம் சென்றவன், முகம் கழுவி உடை மாற்றி எதுவும் யாரிடமும் சொல்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
சுந்தரிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மீண்டும் மீண்டும் வாழ்க்கை சிக்கலாகிக் கொண்டிருப்பது அவளுக்கும் புரிந்தது.
மனதிற்குள் நினைத்துக் கொண்டாள், சரியோ தவறோ ஒரு மன்னிப்பை  கேட்டு அவனுடன் இணக்கமாய் நடக்க வேண்டும் என்று.
ஆனால் காலம் கடந்த ஞானோதயம் என்று அவளுக்கு காலம் உணர்த்த காத்துக் கொண்டிருந்தது.
மதியத்திற்கு மேல் ஆகியும் கண்ணன் வரவில்லை. அவளுக்கு உணவே இறங்கவில்லை. அவனின் அலைபேசிக்கு அழைத்தாள். அதுவோ நீங்கள் அழைக்கும் வாடிக்கையாளரின் எண் தற்போது சுவிச் ஆஃப் செய்யபட்டுள்ளது என்று பதிலளித்தது.
அம்மா வீட்டிற்கு தானே சென்றிருப்பான் அங்கே நேரில் செல்வோமா என்று அவள் நினைக்கும் போதே அவளுக்கு சந்திரன் அழைத்தார்.
“சொல்லுங்க மாமா” என்ற இவளின் குரலுக்கு,
“எங்கம்மா கண்ணனுக்கு ஃபோன் போட்ட சுவிச் ஆஃப் ன்னு வருது. அவன் கிட்ட ஒரு விஷயம் பேசணும் போன் கொடு” என்றார்.
“அங்கேயில்லையா?” என்றாள், குரலில் ஒரு பதட்டம் வந்து உட்கார்ந்து கொண்டது.
“என்னமா?” என்றார் அவளின் குரலில் அவரும் என்னவோ என்று நினைத்து.
“காலையில வெளில போனார். இன்னும் வரலை, நான் அங்க தான் வந்திருப்பார்ன்னு நினைச்சேன்” என்றாள்.
“எங்கயாவது வெளில போயிருப்பான். ஃபோன் சுவிச் ஆஃப் ஆகியிருக்கும். அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டம், நீ அங்க வந்தா எனக்கு சொல்லு, நான் இங்க வந்தா உனக்கு சொல்றேன்” என்று முடித்து விட்டார்.
இரண்டு, நான்காகி, எட்டாகி, பத்தாகியது அப்போதும் வரவில்லை, பயந்து விட்டாள். மாமனாருக்கு அழைத்தாள், “மாமா இன்னும் வரலை” என்று.
“நான் சாயந்தரம் ஃபோன் பண்ணினேன் மா, ஃபோன் போச்சு, எடுத்தான். எங்கயோ அவன் சிநேகிதப் பசங்களை ரொம்ப நாள் கழிச்சு பார்த்தானாம். எல்லாம் ஏற்காடு போனானுங்க போல, உன்கிட்ட சொல்லிடறேன்னு சொன்னானே. அது தான் நான் கூப்பிடலை” என்றார்.
“ஒஹ் சரி” என்றவளின் குரல் வெகுவாக இறங்கியிருக்க,
“இப்படி எப்போவாவது அவன் போறது தான் படிக்கும் போதே, வந்துடுவான், ஏற்காடெல்லாம் அவனுக்கு தண்ணி பட்ட பாடு, ட்ரக்கிங்   போறேன்னு நடந்தே எறிடுவானுங்க” என்றார் பெருமையாய்.
பன்னிரண்டு மணி நெருங்க, மகனை உறங்க வைத்து விட்டு வடிவுப் பாட்டியிடம், “அவங்கம்மா வீட்ல இருக்காங்க ஏதோ வேலையாம்” என்று பொய் சொல்லி இவள் வாசலில் அமர்ந்திருந்தாள்.
அவன் வந்த போது அந்த நேரம் தான், லைட்டை அணைத்து வாயில் படியில் இருட்டில் அமர்ந்திருந்தாள். வேகமாய் சென்று கேட்டை திறந்தாள், இவள் வாயிலில் இருப்பாள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை போலும் அவளை ஒரு அலட்சியப் பார்வை பார்த்தவன் பின்பு பைக்கை உள்ளே விட்டான்.
அதனை நிறுத்தியவன், இவளை சிறிதும் கண்டு கொள்ளாமல்,  வீட்டின் பக்கவாட்டிற்கு சென்று உடைகளை கலைந்தவன், தொட்டியில் இறங்கி குளிக்க துவங்கினான்.
இவளுக்கு இருப்பதா போவதா என்று தெரியவில்லை, வீட்டின் உள்ளே சென்றவள், அவனுக்கு சோப்பும் துண்டும் எடுத்து வந்து கொடுத்தாள், சோப்பை தொட்டியின் மேல் வைக்கவும் எடுத்துக் கொண்டான், துண்டையும் அங்கேயே வைத்து பின் வாயில் படியில் வந்து அமர்ந்து கொண்டாள்.
ஏதாவது பேசலாம் என்றால் பார்வையிலேயே தள்ளி நிறுத்தினான்.
அவன் துண்டை மட்டும் கட்டிக் கொண்டு வரவும், இவள் உள்ளே போக எழ, “இங்கயே இரு பேசணும்” என்று இறுகிய குரலில் சொல்லி சென்றான்.
அவன் அப்படி சொன்னதுமே என்னவோ என்று அவளின் இதயம் எகிறிக் குதிக்க ஆரம்பித்தது பதட்டத்தில்.
சில நிமிடங்களில் வந்தான் பனியன் வேஷ்டியில், அவனின் தோளில் அபி.
சுந்தரி என்னவோ என்று பார்க்க, அவளிடம் விளக்கம் எதுவும் சொல்லவில்லை, இவர்கள் பேசும் போது அவன் எழுந்து தேடும் அபாயம் இருப்பதால் மகனை தூக்கிக் கொண்டான். அதனை விட அவனுடன் இருக்க வேண்டும் போல இருக்க.. அதற்காகவும் தூக்கிக் கொண்டான்.    
கேட்டை பூட்டி தோட்டத்து பக்கம் இருந்த லைட்டை உயிர்ப்பித்தவன், “வா” என்று தலையாட்டி தோட்டத்தை நோக்கி செல்ல, சுந்தரியும் சென்றாள்.
அங்கிருந்த கயிற்றுக்கட்டிலில் ஒரு ஓரமாய் அமர்ந்தவன், மகனை நடுவில் கிடத்தி, ஒரு போர்வையை போர்த்தி, மறு ஓரம் அவளை அமரும் படி சைகை செய்தான்.
எல்லாம் என்னவோ என்று சுந்தரி பயந்து பயந்து பார்த்திருக்க, அவளின் பயத்திற்கு தக்கார் போல கண்ணனின் வார்த்தைகள் வெளி வந்தன.
“நாம பிரிஞ்சிடலாம்” என்றான் அவளின் முகம் பார்த்து.
அமர்ந்திருந்த போதே உடல் பயத்தில் வேரோட, கண்களில் நிராசையை தேக்கி அவனை பார்க்க, அந்த இருட்டில் கூட அவளின் கண்கள் கண்ணீரில் பளபளத்தது.  
கண்ணன் திரும்பவும் அதே வார்த்தைகளை நிறுத்தி நிதானமாய் சொன்னான், அதுவே அவன் முடிவெடுத்து விட்டான் என்று அவனை தெரிந்தவர்களுக்கு புரியும். “பிரிஞ்சிடலாம்” என்று நிறுத்தியவன் சிறிது இடைவெளி “கொஞ்சம் நாளைக்கு” என்றான் அவளின் முகம் பார்க்காமல்.       
   
   
     
        

Advertisement