Advertisement

சில உணர்வுகள், உணர்ச்சிகள், பேச முடியாதவை, ஆனாலும் பேசி விட்டனர். சுந்தரி அதனை ஒதுக்கி வைத்தாள். பின்பு ஒரு அலட்சியப் பார்வை கொடுத்தாள்.    
“உன் கிட்ட போய் பேசினேன் பாரு, உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடி” என்ற பதில் பார்வையை கொடுத்தான்.
“ஆமாம், ஆரம்பிச்சதுல இருந்து நான் தப்பு, நான் தப்புன்னு சொல்லற மாதிரி என்னையே தப்பு சொல்றாங்க, இதுல எனக்கு திமிராம். ஆமாம் திமிர் தான்” என்று மனதிற்குள் நினைத்தவள் அதனை வெளியில் சொல்ல வில்லை.
எழுந்தான்,
“எங்க போறீங்க?” என்றாள்.
ஒற்றை விரலை காண்பிக்க, “ஒஹ், நான் கூட வெளில படுக்க போறீங்களோன்னு நினைச்சேன்” என்று சொல்ல,
“ஏன் அது தான் உன் ஆசையா?” என்றான் காரமாக.
“சே, சே, போனா, உள்ளயே படுங்கனு இந்த முறை சொல்லலாம்னு” என்றாள் நக்கலாக.
“ஏய் என்னடி திமிரா?” என்றான்.
“அது தான் சொல்றீங்களே, எனக்கு ரொம்ப திமிர்ன்னு அதான் கொஞ்சம் காமிக்கலாம்னு” என்றாள் அலட்சியம் போல.
அவளை பொருட்படுத்தாமல் எழுந்து சென்று வந்தான்.
அபி சிணுங்க, இப்போது அவனின் பக்கத்தில் உட்கார்ந்து தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் சுந்தரி.
“என்னவோ போடா வாழ்க்கை?” என்ற சலிப்பே கண்ணனுக்கு வர, கூடவே மனைவியை கூட தனக்கு கையாள தெரியவில்லையோ என்ற எண்ணமும் தலை தூக்கியது.
“நீ படுத்துக்கோ நான் இவனை பார்த்துக்கறேன்” என்று மகனின் பக்கம் அமரப் போக,
“போங்க போய் படுங்க, நான் பார்த்துக்கறேன்” என சுந்தரி சொல்ல,
“உன்னோட தூக்கத்தை வேற கெடுத்துட்டேன். நீ போய் தூங்கு”  
“உங்களை கல்யாணம் பண்ணின நாளா என் தூக்கம் கெட்டு போச்சு, இதொன்னுமில்லை, நீங்க போங்க”  
கண்ணனின் முகம் கடினமாய் மாற,
“ப்ச்” என்று சலித்தவள், “நீங்க உண்மையை சொல்றேன்னு என்னை திமிர், சேர்ந்து இருந்தாலும் பிரிஞ்சு இருப்போம், இப்படி எல்லாம் சொல்லலாம். ஆனா நான் என்ன நடந்ததுன்னு சொல்லக் கூடாதா?”
“நீங்க சொல்ற மாதிரி இது குறை இல்லை யதார்த்தம் சரியா போங்க” என்றாள்.
இவ்வளவு பேச்சுக்களின் போதும் மகனை அவள் மேலே தூக்கி வர முயற்சிக்கவில்லை. கண்ணனுக்கு அந்த ஞாபகமே இல்லை.
அவன் அமைதியாய் சென்று படுக்க, சிறிது நேரத்தில் சுந்தரியும் கட்டில் மேலே வர வந்தவள், இவன் ஓரமாய் படுத்திருக்க, அவனை தாண்டி தான் செல்ல வேண்டும்.
தாண்டும் போது வேண்டுமென்றே கண்ணன் மேல் கை ஊன்றி, தாண்ட முற்பட்டாள்.
சுந்தரி வேண்டுமென்றே வலிக்கும் படி ஊன்றியதில், ஒருக்களித்து படுத்திருந்த கண்ணன் நேரே திரும்ப, அவன் மேலேயே விழுந்து வைத்தாள்.
உண்மையில் அவனுக்கு வலிக்க மட்டுமே கை ஊன்றினாள், இப்படியாகும் என்று நினைக்கவில்லை.
அவளுக்குமே எதிர்பாராமல் அவன் மேல் விழுந்ததால் அடி, இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள, உடலும் உடலும் மோதிய வலி, அம்மா என்று மெல்லிய குரலில் கத்திவிட்டு உருண்டு நேராய் படுத்துக் கொண்டு அடிபட்ட இடத்தை தடவி விட,
“இப்படியா கை ஊனுவ?” என்று அவளை கடிந்தான் கண்ணன்.
“ஏன் கொஞ்சம் வலி பொறுக்க மாட்டீங்களோ? இப்போ எனக்கு தான் அடி!” என்றாள் எரிச்சல் மிகுதியில்.
“நான் இப்போ கை ஊனப் போறேன் வலிச்சா பொருத்துக்கோங்கன்னு நீ சொன்னியா, திடீர்ன்னு ஊனினா நகரத் தானே செய்வாங்க” என்று அவனும் பதில் பேச,
அந்த நொடியில் இருவருமே பேச்சை நிறுத்தினர், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது போல,
இருவரும் அருகருகே, உடல் பட்டுக் கொண்டு இருந்தது, ஆனால் உரச வில்லை.
“எங்க வலிக்குது? பிடிச்சு விடட்டுமா!” என்றான் மெதுவாக.
ஏன் எங்கே வலிக்கின்றது என்று அவனுக்கு தெரியாதா, அவள் தான் நெஞ்சை நீவி விட்டுக் கொண்டாள் தானே.    
இருந்த கடுப்பில், “எங்க வலிக்குதா? இன்னைக்கு நீங்க பண்ணின அக்கப் போர்ல நடந்து நடந்து இடுப்பும் காலும் வலிக்குது, உங்க கிட்ட சண்டை போட்டு போட்டு தலை வலிக்குது, இப்படி என் வாழ்க்கை இருக்கேன்னு நினைச்சு நெஞ்சு வலிக்குது” என்று பட படவென்று பொரிந்தவள், அவனுக்கு மறு புறம் திரும்பி படுத்துக் கொண்டாள்.
வேகமாய் பேசியதில் அவள் தஸுபுஸு என்று மூச்சு வாங்க, அவளின் உடல் ஏறி இறங்க, அதனை பார்த்தவன், அவளை கை போட்டு தன் புறம் நகர்த்தி இறுக்கி அணைத்தான்.
கண்ணனின் செய்கையில் “நானா கேட்டா இவங்க பக்கம் வருவாங்களா?” சுந்தரிக்கு நினைப்பே கசந்தது.
“இதெல்லாம் விட இன்னும் ஒரு காரணம் இருக்கு, என்ன தெரியுமா?” என்று நிறுத்தியவன், “வேண்டாம்ன்னு விட்டுட்டு போயிட்டு, இப்போ திரும்ப வந்தவுடனே, நீ சொல்ற மாதிரி, உன் மேல பாஞ்சிடக் கூடாது இல்லையா? அது எல்லாத்தையும் விட பெரிய தப்பா தோணிச்சு” என்றான்.
கண்ணனின் வார்த்தைகளை உணர்ந்தாலும், “விடு, விடு” என்று திமிறினாள்.
எல்லா செயல்களையும் காரண காரியதிற்குள் அடக்கிவிட முடியாது. நடந்தவையை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் அந்த நிலையை இன்னும் அடையவில்லை. தேவையற்ற விளக்கங்கள் தேவையற்ற காரணங்கள்.  
சுந்தரி திமிற திமிற அவன் அணைப்பு இறுக ஆரம்பிக்க, “வலிக்குது” என்றாள்.
“அப்போ என் கைல இருந்து போக நினைக்காதே” என்றவன் இறுக்கத்தை தளர்த்தினாலும் அணைப்பை விளக்கவில்லை. 
“எங்க வலிக்குது?” என்றான் மீண்டும் வேண்டுமென்றே.
சுந்தரி பதில் சொல்லாது விட, மெதுவாய் அவளின் இடுப்பை பிடித்து விட ஆரம்பித்தான். வலிமையான கைகள் அவளின் உடலில் மாயம் செய்ய ஆரம்பித்தன என்றால் மிகையல்ல. 
சுந்தரியின் உடலின் இறுக்கமும் தளர, மனமும் மயங்க, உடலும் பறக்க, ஒரு பரவச நிலை தான், இந்த தீண்டல் அவளை இவ்வளவு பலகீனப் படுத்துமா என்ன?
படுத்தியதே! வேண்டும் என்று உடல் நினைக்க, வேண்டாம் என்று மனம் நினைத்தது!  
சுந்தரியின் மனம் முரண்டு பிடிக்க ஆரம்பித்தது. மெதுவாய் விலக நினைத்தாள், நினைக்க மட்டுமே முடிந்தது, ஆனால் முடியவில்லை. இறுக்கிப் பிடித்திருந்தான்.
“விடுங்க” என்றாள் ஹீனமான குரலில்.
“ஏன்?” என்றான் ஒற்றை வார்த்தையில்.
“எனக்கு வேண்டாம்?” என்றாள்.
“ஏன் வேண்டாம்?”
“வேண்டாம்னா வேண்டாம்” என்றவளின் குரல் திடப் பட ஆரம்பிக்க,
“எனக்கு வேணும்” என்றவன், “என்னை பார்த்து திரும்ப படு” என்றான் அதட்டலாய்.
“முடியாது”  
“ப்ச், என்னை முரட்டுத்தனம் காண்பிக்க வைக்காதே”
“ம்ம், என்ன பண்ணிடுவீங்க என்னை?” என்று கோபமாய் திரும்பி பேச,
அதற்கு மேல் அவளுக்கு பேச வாய்ப்பில்லை.
இதழ்களால் இதழை பூட்டி கதற கதற ஒரு முத்தம் என்று நினைத்தால் இல்லவே இல்லை!
இதழ்களை இதழ்களால் பூட்டி அனுபவிக்க வேண்டி ஒரு முத்தம், அவர்களுக்குள் முதல் இதழ் முத்தம்.
இதில் மகனுக்கு இரண்டு வயதாகப் போகிறது, என்ன சொல்ல? அவர்களுக்குள் என்ன நடந்தது என்று கேட்டால் இருவருமே விழிப்பர்! அப்படியான ஒரு உறவு நிலை முன்பு!     
தற்போது அதன் சுவடுகள் ஏதுமன்றி, முதல் முறை இருவரும் ஒருவரை ஒருவர் உணர்ந்தனர். அவளை காயப்படுத்தி விடக் கூடாது என்ற தடுமாற்றமும், தயக்கமும் கண்ணனிடம் அதிகமாய் இருக்க, “என்னை எவ்வளவு டார்ச்சர் பண்ணிட்டாங்க இவங்க, ஒரு வேளை இவங்க திரும்ப வராம இருந்திருந்தா, அபியும் நானும் தனியா தானே இருந்திருப்போம்” என்று மனதிற்குள் ஓடிய நினைப்பினால் கோபம் சுந்தரிக்கு பெருகியது.
கண்ணன் அனுபவித்து கொடுத்த முத்தத்தை, சுந்தரி முரட்டு இதழ் யுத்தமாக மாற்றியிருந்தாள்.
கொன்று தின்னும் நிலை தான் அவளிற்கு! தொலை தூர வெளிச்சம் தானே அவன்!
ஆம்! தனிமையின் வேதனை, பயம், அதனை அனுபவித்தவர்களுக்கும், அனுபவிப்பவர்களுக்கும் தானே புரியும்!
ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே

Advertisement