Advertisement

அத்தியாயம் முப்பது :
“பொண்டாட்டின்னு என்ன கவனிக்கணும் உங்களுக்கு? எனக்கு சொல்லுங்க, எனக்கு நிஜமா தெரியலை, கத்துக்கறேன்” என்றாள் ரோஷத்தை விடாமல்.
மீண்டும் ஒரு சண்டை தேவையில்லை என்று உணர்ந்த கண்ணன், “ப்ச் விடு” என்றான் சலிப்பாக.
“என்ன விடு? உங்களுக்கு தான் என்னை பிடிக்கலை, அதுதான் எதுல சாக்கு கிடைக்குமோன்னு என்னை சண்டை பிடிக்கறீங்க, நானா பொண்டாட்டியா இருக்க மாட்டேன்னு சொல்றேன். நீங்க தான் புருஷனா இருக்க நினைக்கலை. நான் அழகா இல்லைன்னு நீங்க தான் என் பக்கத்துல கூட வர்றதில்லை. அதனால தானே முன்ன என்னை விட்டு போனீங்க, விவாகரத்து வாங்கினீங்க?” என்று ஆத்திரம் மிகுதியில் பேசி விட்டவள், பின்பு தன் நெற்றியிலேயே வேகமாய் தட்டிக் கொண்டு எழுந்து வெளியே நடந்து விட்டாள்.
வேகமாய் சென்று நர்சரியில் அமர்ந்து கொண்டாள்.
கண்ணனின் மனம் முழுவதும் அவள் பேசிய பேச்சுக்களில் தான், “நானா வாங்கினேன், ஊரும் உலகமும் சொல்லலாம். ஆனால் உண்மையில் நீதானே வாங்கினாய், விவாகரத்திற்கு முதல் அடி எடுத்து வைத்தது மட்டும் தான் நான். ஆனால் முடித்து வைத்தது யார்? நீதானே!” என்று மனதில் நினைத்தவன் அமைதியாய் கண்மூடினான்.
சுந்தரியின் இந்த ஆத்திரமும் கோபமும் மனதிற்கு ஒரு ஆசுவாசத்தை வேறு கொடுத்தது, அதன் தாக்கத்தில் கண் மூடியதும் உறங்கி விட்டான்.   
ஆறு மணி தாண்டியிருக்க, சிந்தா நர்சரியை பூட்டுவதற்கான வேலையில் இருந்தாள்.
“என்ன சுந்தரி பூட்டற நேரம் வந்திருக்க, இன்னும் எதுவும் வேலையிருக்கா?”
“இல்லை” என்றவள், “ரெண்டு நாள் ஆச்சுல்ல அதான் சும்மா வந்தேன்”
“நல்ல பிள்ளை போ, அபியை விட்டு கூட இருப்ப போல, இதை விட்டு இருக்க மாட்டியோ, கிளம்பு போலாம் வா” என்று அழைத்தாள்
பின்னோடு கண்ணன் வருவான் என்று நினைத்திருக்க கண்ணன் வரவேயில்லை. அதிலேயே மனது பலமாய் அடி வாங்கியது. கண்களில் நீர் வருவேனா என்று நின்றது.
சிந்தா கண்டு பிடித்து விடுவாள் என்பதால் முயன்று கட்டுப் படுத்தியவள், “நீ பூட்டிட்டு போ, நான் தோப்பை ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வர்றேன்” என்று அனுப்பிவிட,
சிந்தாவும் இது அவளின் வழமை தானே என்று சென்று விட்டாள், கிட்ட தட்ட ஒரு மணி நேரம் தோப்பில் அங்கேயும் இங்கேயும் நடக்க கால்கள் வலி எடுக்க ஆரம்பித்தது.
இரவும் வெகுவாய் கவிழ்ந்து விட, வேறு வழியின்று வீடு நோக்கி திரும்பினாள். இரவிற்கு சமைக்க வேண்டுமே என்று.
வீடு திரும்பினால், வீடு முழுக்க இருட்டில், ஒரு லைட் கூட இல்லை! இவளின் ஆயா முன் கேட்டை தாண்டி ரோட்டில் நின்று யாருடனோ அரட்டை!
வேகமாய் உள்ளே சென்றவள் லைட் எல்லாம் போட்டு விட்டு இவளின் ரூம் செல்ல, அங்கே அப்பாவும் மகனும் நல்ல உறக்கத்தில், என்ன மாதிரி உணர்ந்தாள் என்றே தெரியவில்லை.
“உன்னை தேடினேன்” என்று சொல்லியாகி விட்டது அதற்கும் ஒரு பிரதிபளிப்பும் இல்லை. “உனக்கு என்னை பிடிக்கவில்லை போல, அதுதான் பக்கம் வரவில்லை” என்றும் சொல்லியாகிவிட்டது. அதற்கும் ஒரு பிரதிபளிப்பும் இல்லை, நிஜத்தில் இவனுக்கு என்னை பிடிக்கவில்லை போல.
நிதர்சனத்தை ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் என்று நினைத்தவளுக்கு மனம் கனத்து போனது.
இவள் விளக்கை போட்டு அப்பாவையும் மகனையும் பார்த்து நிற்கவுமே அபி சிணுங்க, மகனை வந்து தூக்கினாள்.
அவள் அபியை தூக்கும் போதே, கண்ணன் விழித்து விட, மகனை தூக்கிக் கொண்டு வெளியில் சென்று விட்டாள்.
மெதுவாக எழுந்து வெளியே வந்தவன், சுந்தரி சமைக்க நிற்கவுமே, “சமைக்காதே இன்னைக்கு சாப்பிட நாம வெளில போகலாம்” என்றான்.
“நான் வரலை” என்று சுந்தரி பட்டென்று சொல்ல,
“நீ வர்றியா வரலையான்னு நான் கேட்கவே இல்லையே, போகலாம்னு சொன்னேன்!” என்றான் சற்று சத்தமாகவே, அப்போது தான் உள்ளே வந்து டீ வீ பார்த்துக் கொண்டிருந்த வடிவு பாட்டி திரும்பி பார்த்தார்.
எப்போதும் அவர்களின் பிரச்சனை வெளியே தெரியக் கூடாது என்று கண்ணன் தணிந்து போய் விடுவான், சுந்தரி அவளின் பேச்சினில் பிடிவாதத்தில் நிற்பாள், இன்று இப்படி கண்ணன் பேசுவான் என்று நினைக்கவில்லை.
மகனுக்கு பாலை காய்ச்சி கொண்டிருந்தாள், அருகில் சென்றவன் காய்ச்சிய பாலை வாங்கிக் கொண்டவன், மகனையும் வாங்கினான்.
பின்னே அவளை பார்த்து “டீ போடு” என்று அங்கிருந்த சோஃபாவில் சென்று அமர்ந்து கொண்டான்.
இதோ அவளுக்கு கொடுத்த பொருட்களில் சோஃபாவும் அடக்கம். வடிவு பாட்டிக்கு ஒரு சாய்வு நாற்காலி ஆர்டர் செய்திருந்தான், இவர்கள் சோஃபாவில் அமர அவர் கீழே அமருவார் என்று புரிந்து.
இதோ அதுவும் அவர்கள் வீடு வந்தவுடன் வந்திருக்க, வடிவு பாட்டி அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்போது சத்தத்தில் இவர்களை பார்க்க, “அது ஆயா வெளில போலாம்னு சொன்னார், நான் வேண்டாம் சொன்னேன்” என்று விட்டாள்.
“ஏன் கண்ணு ராசா கூப்பிட்டா போக வேண்டியது தானே” என்று சொல்லி பேச்சு முடிந்தது என்பது போல அவர் டீ வீ யில் மூழ்க,
“நான் வர மாட்டேன்” என்ற பார்வையை சுந்தரி மீண்டும் கொடுத்து, டீ கொடுக்க அருகில் வர,
“கிளம்பு போ” என்றான்.
“முடியாது” என்று நிற்க,
“என்னடி உன் பிரச்சனை? எப்பவும் எந்த பேச்சும் கேட்காத, முறைச்சிட்டே நில்லு, அப்புறம் நீங்க பக்கத்துல வரலை, என்னை பிடிக்கலை, அது இதுன்னு பேச வேண்டியது”
“இப்படி பொழுதுக்கும் மல்லுகட்டிட்டே திரிஞ்சா எவனுக்குடி பக்கத்துல வரத் தோணும்” என்று சற்று சத்தமாக கேட்டான்.
அச்சோ பாட்டிக்கு கேட்டு விடுமோ என்று பதறி அவனின் வாய் மூடினாள்.
அவர் டீ வீ சீரியலில் மூழ்கி இருந்தார், சுந்தரியின் முகத்திலும் அவ்வளவு பதட்டம், சிறிது அவமான உணர்வு கூட, அதை சரியாக படித்தவன்,  
அவளின் கை பிடித்து தன்னில் இருந்து விலக்கியவன், “சாரி, நான் அந்த அர்த்தத்துல சொல்லலை, வேற அர்த்தத்துல சொன்னேன். போ, போய் கிளம்பு” என்றான் தணிவாக.
சுந்தரி வேறு வழியில்லாமல் செல்ல, கண்ணன் மகனை தூக்கி அவனை ரெடியாக்க கிளம்பினான். இப்படியாக கிளம்பினர், பைக்கில் செல்லவில்லை, இரவு கவிழ்ந்து விட்டதால் மகனும் கூட இருப்பதால் காரில் தான் கிளம்பினான்.
காரில் செல்லும் போது “இப்போ எதுக்கு வெளில சாப்பிட போறோம்னு நீ கேட்கலை” என்றான்.
சுந்தரி அமைதியாக இருக்க, “ஏன்னு கேளு?” என்றான் அதட்டலாக.
“ஏன்?” என்றவளிடம்,
“என் பர்த்டேக்கு நீ பழைய சாப்பாடு சாப்பிட்ட இல்லையா, அதுக்கு” என்றான்.
கண்ணனை திரும்பி முறைத்து பார்க்க, அவளை ஒரு பார்வை பார்த்து, பின்பு சாலையை நோக்கி பார்வையை திரும்பியவன், “சும்மா சும்மா முறைக்காத, அந்த கண்ணு வெளில வந்து டப் போகுது, ஏதோ சீரியல்ல வில்லியா நடிக்கறவங்க பார்க்கற மாதிரி எப்போ பார்த்தாலும் கஷ்டப்  பட்டு என்னை முழிச்சு முழிச்சு பாரு” என்று ஏகத்திற்கும் வம்பிழுப்பது போல சொன்னான்.
சுந்தரி மேலும் முறைக்க, “இந்த ரொமாண்டிக் லுக்கை பார்த்தா, யாரா இருந்தாலும் பத்தடி…. இல்லையில்லை பத்து வீடு தள்ளி ஓடிடுவான்” என்று இன்னுமே அவளை சீண்டினான்.
சுந்தரிக்கு அப்படி ஒரு கோபம் கிளம்ப, முகத்தை ஜன்னலுக்கு மறு புறம் திருப்பிக் கொண்டாள்.
ஒரு புகழ் பெற்ற ஹோட்டலுக்கு வந்து இறங்கியவன், வேலட் பார்க்கிங் கொடுத்து அவர்களை உள் அழைத்து சென்றான். அங்கிருந்த லிஃப்டில் செல்லும் போது மனைவியை விடாது ஆராய்ந்தான். சுந்தரியின் உடை இப்போது அவனுக்கு வெகு திருப்தி. அவளின் பீரோவில் உறங்கியது எல்லாம் வெளியே வந்திருக்க, இதோ அவளை பாந்தமாய் தழுவிய ஒரு புடவை, சிகப்பு கலரில் சிகப்பு நூல் கொண்டே நூலில் எம்ப்ராயிட்ரி வேலை செய்திருக்க, பார்க்கவே ஒரு வசதியான தோற்றத்தை கொடுத்தது. ஆள் பாதி ஆடை பாதி தானே. புடவை கட்டும் மாறியிருக்க, எப்போதும் அவளிடம் இருக்கும் திமிர் அவளை இன்னும் நிமிர்வாய் காண்பித்தது.
இந்த அழகு எல்லோருக்கும் வராதே! சுண்டி இழுக்கும் அழகான முகமில்லை, ஆனால் லட்சணமான, திமிரான, நிமிர்வான, ஏன் கர்வமான முகம். அவளின் உடை கட்டு மாறியிருக்க சுந்தரியை சுந்தரமான யுவதியாய் தான் காண்பித்தது. பருவத்தின் அழகும் அவளுக்கு கூட தானே, இருபதே வயதான இளம் பெண் அல்லவா?
இதெல்லாம் ஏழாவது மாடிக்கும் லிஃப்டில் செல்லும் போது நடந்த கண்ணனின் மன ஆராய்ச்சி.   
இதை எதையும் கவனியாமல் லிஃப்டில் இருந்த வாசகத்தை படித்துக் கொண்டிருந்தாள் சுந்தரி. அபியோ அப்பாவின் கழுத்தை கட்டிக் கொண்டான்.                 
சென்றது ஏழாவதுமாடி, அங்கே நீச்சல் குளம் இருக்க, பக்கத்தில் ரூஃப் டாப் இருக்க, அங்கே தான் புஃபே இருந்தது.
சுந்தரி இந்த மாதிரி வந்ததில்லை, பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்தது போல பார்த்து வைத்தாள். ஆனால் சற்றும் அது வெளியே தெரியாமல் பார்த்துக் கொண்டாள்.
ஒரு டேபிளில் அவர்களை சௌகர்யமாக அமர்த்தியவன், உணவிற்கு பணத்தை செலுத்தி விட்டு வந்தான்.
“வா, என்ன வேணுமோ எடுத்துட்டு வரலாம்” என்று சொல்ல, போவதா வேண்டாமா இல்லை முறுக்கிக் கொள்ளலாமா என்று சுந்தரியின் யோசனைகள் ஓடும் போதே,  
“ஒருத்தர் சாப்பிட ஆயிரத்து நானூத்தி தொன்னுத்தி ஒன்பது ரூபா, நம்ம ரெண்டு பேருக்கும் மூவாயிரம் குடுத்திருக்கேன். அவன் மிச்சம் ரெண்டு ரூபா கூட குடுக்கலை. நீ சாப்பிடலைன்னா வேஸ்ட்” என்று பாவம் போல சொல்ல,
அவ்வளவு பணமா? அவ்வளவு பணம் வீணாய் போவதா என்று நினைத்தவள் எழுந்து கொள்ள,
சிரிப்பு தான் வந்தது கண்ணனுக்கு. ஆனால் சிரித்தால் அவ்வளவு தான் எதையாவது போட்டு உடைத்து லட்சங்களில் செலவு வைக்கும் அபாயம் ஏகத்திற்கும் இருப்பதால், அமைதியாய் மகனை தூக்கி கொண்டு அவளின் பின்னோடு வந்தான்.
என்னவோ சுந்தரியை ஏகத்திற்கும் சீண்ட தோன்றியது, சுந்தரியின் தன் மீதான பிடித்தம் அவளின் வாய்மொழியாக கேட்ட பிறகு ஒரு உல்லாசம் தான் மனதினில்.  
ஆனாலும் மனதில் ஒரு வருத்தமும் இருந்தது, வந்த நாளாக தன்னை எவ்வளவு படுத்தி எடுத்து விட்டாள். நம்பவேயில்லை என்னை?
“எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் எடுத்துக்கோ, அப்போ தான் எல்லாம் டேஸ்ட் பண்ண முடியும்” என்று சொன்னான்.
அங்கே ஊர்வன பறப்பன மிதப்பான எல்லாம் இருக்க, அவள் எடுக்கும் வரை பொறுமையாய் இருந்தான்.
“கோபத்தை சாப்பாட்ல காண்பிக்க கூடாது” என்று கனிவாய் சொல்ல, சுந்தரி அவனை திரும்பியும் பார்க்கவில்லை. ஆனால் எல்லாம் சிறிது சிறிது எடுத்தாள்.  
மகனுக்கு எளிய உணவை எடுத்தவன், பொறுமையாய் அவள் எடுக்கும் வரை இருந்தான்.
அதன் பின் அதிக பேச்சுக்கள் இல்லை.
அமைதியாய் சுந்தரி உண்ண, அபி ஓடிக் கொண்டே இருக்க, அபி உண்டு முடித்ததும், அங்கிருந்த ஹெல்பர் ஒருவரிடம் விட்டு அவனும் உண்ண ஆரம்பித்தான். 
எல்லாம் முடித்து பெரிய மில்க் ஷேக் எடுத்து வந்து அவளிடம் கொடுத்து, இவனும் எடுத்து அமர்ந்து, மகனுக்கு சிறிது புகட்டி என்று வந்ததில் இருந்து சுந்தரி அபியின் புறம் திரும்பாமல் இருக்க, கண்ணனானால் அபியை அப்படி பார்த்து பார்த்து கவனிக்க,
சுந்தரி முடிவே செய்து கொண்டால் மகனுக்காக மட்டும் தான் என்னுடன் வாழ வந்திருக்கிறான் போல என்று.
அந்த குளிர்ச்சியான மில்க் ஷேக் தொண்டையில் சூடாய் இறங்கியது. முகமும் வாடியது. கோபம் வேறு வாட்டம் வேறல்லவா?  
“என்ன?” என்றான் அவளையே பார்த்திருந்த கண்ணன்,
என்ன சொல்வது என்று தெரியாமல், “இது பிடிக்கலை” என்றாள் மில்க் ஷேக்கை காண்பித்து.
“சரி, எனக்கு குடு, நான் வேற ப்ளேவர் எடுக்கறேன்” என்றான்.
“இல்லை வேண்டாம்”  
“சரி இதை குடி” என்று அவனதை கொடுத்தான்.
“அபிக்கு வேணும்”
“அபி இவ்வளவு குடிக்க வேண்டாம், நீ குடி” என்றான்.
பின்பு மௌனமாய் அதனை குடித்து முடித்து, பின்பு கிளம்பி வீடு வர இரவு பதினோரு மணி.
மகன் சுந்தரியின் மீது உறங்கியிருக்க, உண்ட களைப்பில் தோப்பில் விடாது நடந்த உடலின் அயர்ச்சியில் சுந்தரியும் உறங்கியிருந்தாள்.
இறங்கி கேட்டின் உள் வண்டியை விட்டு நிறுத்தி, கேட்டை பூட்டி மகனை தூக்கும் போது தான் உறக்கம் கலைந்தாள். இதற்கு அதிக நேர பயணம் கூட இல்லை, இருபது நிமிட பயணமே!
அமைதியாய் எழுந்தவள் ஒரு வார்த்தை கூட பேசாது அப்படியே தூக்க கலக்கத்தில் பாத்ரூம் சென்று தன்னை சுத்தப் படுத்தி அப்படியே படுக்கையில் விழுந்தாள். அவளின் அப்பா பார்த்து பார்த்து வாங்கிய கட்டிலும் மெத்தையும் அவளை சுகமாய் உள் வாங்கியது.
மகன் எங்கே படுத்தான் என்று கூடப் பார்க்கவில்லை.
பொறுப்பான சுந்தரி அங்கே தொலைந்து போனாள், என்னவோ? வீடோ.. மகனோ… கண்ணன் பார்த்துக் கொள்ளட்டும் என்றோ? இல்லை பார்த்துக்  கொள்வான் என்றோ? ஏதோ ஒன்று, ஒரு தளர்வு, அவளுள்.
எல்லாம் பூட்டி சோஃபாவில் படுத்திருந்த மகனை தூக்கி படுக்கையறை வந்த போது சுந்தரி ஆழ்ந்த உறக்கத்தில். “என்னடா இவ இப்படி தூங்கறா அபியை கூட தூக்கிட்டு வராம?”
கீழே ஒரு படுக்கை போட்டு, மகனை படுக்கப் போட்டு, சுற்றிலும் தலையணைகள் முட்டுக் கொடுத்து, ஒரு அவசர குளியல் போட்டு, உடை மாற்றி படுக்கைக்கு வந்தவன், மகனின் தூக்கத்தை உறுதி செய்து அவனை கீழேயே படுக்க விட்டு மேலே சுந்தரியின் அருகில் படுத்தான்.
அவளின் உறக்கம் கலைப்பதா? வேண்டாமா? என்ற பட்டி மன்றம் நடத்தி, முடிவில் ஒரு நாள் உறக்கம் கெட்டால் என்ன எனத் தோன்ற, அவளை அணைத்து பிடித்தவன், ஒரு புரட்டு புரட்டி தன் மேல் போட்டுக் கொள்ள,
அதில் உறக்கம் கலைந்த சுந்தரி கண் விழித்து பார்க்க, அவளின் முகத்தின் வெகு அருகில் கண்ணனின் முகம்.
“சொல்லுடி, இப்போ சொல்லு, என்ன பஞ்சாயத்து உனக்கு?”  
சுந்தரி வாய் திறக்கவில்லை, கண்ணனை மட்டுமே பார்த்திருந்தாள். திமிறி இறங்க முற்பட இப்படி எதுவும் இல்லை!
ஆடாது அசையாது அவன் மேல் இருந்தாள். 
இன்னும் இது கனவா நனவா புரியாத ஒரு நிலை!
   
     
    

Advertisement