Advertisement

அத்தியாயம் பத்தொன்பது :
உறங்கியும் உறங்காத நிலை கண்ணனிற்கு, நான்கு மணிக்கு எழுந்து கொண்டவன், சட்டையை கழற்றி விட்டு பேன்ட் பனியனோடே, மோட்டார் போட்டு விட சென்று விட்டான்.
அவன் போட்டு விடவும் சுந்தரி வரவும் சரியாய் இருக்க, அவனை பார்த்தவள் வேறு ஒன்றும் பேசாமல் வீட்டிற்கு சென்று விட்டாள்.  
நிச்சயம் அவளை விட்டு போகும் எண்ணமில்லை, ஆனால் இறங்கி போய் பேச மனதில்லை, அவனும் வீட்டின் உள்ளே சென்றவன் அவனாய் அடுப்படிக்கு சென்று பாலை காய்சினான். பின்பு அவனாக காபி ஊற்றி குடிக்க ஆரம்பித்தான்.
டீ தான் அருந்துவான், காபி எப்போதாவது தான், இன்று சுந்தரியிடம் “டீ வை” என்று சொல்ல மனதில்லாமல் அவனாய் காஃபி போட்டு குடித்துக் கொண்டவன், வீட்டில் அபிக்காய் வைத்திருக்கும் பிஸ்கட்டையும் நான்கைந்து வாயில் போட்டுக் கொண்டவன், பின்பு வெளியே சென்றிருந்தான்.
பார்த்தும் பார்க்காத மாதிரி அங்கே இங்கே திரிந்த சுந்தரிக்கு தோன்றியது, “ஓஹ், எப்பவும் நான் டீ வைக்கிற வரை இருப்பவருக்கு இன்னைக்கு என் டீ வேண்டாமா?” என்பது தான்.
அவன் பசியில் தான் அப்படி செய்கிறான் என்பது கூட அவளுக்கு விளங்கவில்லை.
“அம்மா வீட்டுக்கு போயிட்டு வந்த பவுசு போறான்” என்று எப்போதும் போல நினைத்தவள் அவளுக்கும் பாட்டிக்கும் மட்டும் வைத்துக் கொண்டாள்.
அப்போதே திரும்ப டீ யை கொண்டு போய் கொடுத்திருந்தாலும் கண்ணன் குடித்திருப்பான்.
சண்டைகள் சகஜம் போல சாமாதானங்களும் சகஜமாக வேண்டும்.. கண்ணனுக்கு மனதில்லை, சுந்தரிக்கு வரவில்லை.  
அதன் பின் பூப்பறிக்க ஆட்கள் வந்து விட கணவன் மனைவி இருவரையும் வேலை இழுத்துக் கொள்ள, ஆறு மணி போல அபி எழுந்ததும் பாட்டி குரல் கொடுத்தார்.
“இதோ வர்றேன் ஆயா” என்று குரல் கொடுத்து வேலை பார்த்துக் கொண்டே இருக்க, கண்ணனிற்கு கடுப்பானது. அருகில் வந்தவன், “போடி முதல்ல, பையன் எழுந்து பசிக்கு அழுவான்னு தெரியாது, நான் இவ்வளவு பெரிய பையன் ஆகிட்டேன், எங்கம்மால்லாம் ஒரு நாள் கூட என் வயிறை வாட விட்டது கிடையாது” என்றான் முறைப்பாக.
நேற்று பட்டினி போட்டது, இன்று அபி அவளை எழுந்ததும் தேடுவான் என்று தெரிந்தும் சுந்தரி தாமதிப்பது, அவனை அப்படி பேச வைக்க..
“நான் நல்ல அம்மா கிடையாது, அதனால நான் இப்படி தான். ஆனா நீங்க ரொம்ப நல்லா அப்பா, அதான் பையன் பொறந்ததும் கைல வாங்கி அவனை ஒவ்வொரு நாளும் ரசிச்சு, அவனை பார்த்து பார்த்து வளர்க்கறீங்க” என்று சுள்ளென்று சொல்ல,
“அம்மா” இதற்கு மேல் தன்னால் தாங்க முடியுமா என்று அவனுக்கு தெரியவேயில்லை. ஒன்றும் பேசாமல் அவளை ஒரு பார்வை பார்த்தவன், வந்து சட்டையை மாட்டிக் கொண்டு பைக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். எங்கே அந்த இடத்தில் இருந்தால் அவள் மீது வெறுப்பு வந்து விடுமோ என்று பயந்தே விட்டான்.
ஆம்! பயம் தான் வந்து விட்டது.
சுந்தரி கணவனிடம் என்ன பேசுகிறாள் என்றே யாருக்கும் தெரியாது. இதில் சரி, தப்பு, இப்படி பேசக் கூடாது என்று சொல்ல எல்லாம் ஆட்கள் ஏது… நேற்றிலிருந்து அவளுடன் இருக்கும் ஒரு வயதான ஜீவனின் மனம் படும் பாடு அவருக்கு தான் தெரியும்.
ஆம்! அவளின் பாட்டி தான் , “ராசா இப்போ தான் வீட்டுக்கு வந்திருக்கு, இவ எதுவும் சுணக்கம் காமிச்சு திரும்ப போயிருமோ?” மனதினில் இது ஓட.. ஆட்கள் வந்து பால் கறந்து கணக்கு சொல்லி சென்றது எதுவும் அவரின் மூளையில் பதிய வில்லை..
அபியின் அழுகுரல் வீரிட்டு கேட்க, “அழக்கூடாது அம்மா இங்கே தானே இருக்கேன்” என்று வாரி அணைத்துக் கொண்டவளுக்கு தோன்றியது.
“ஏன் அம்மாவே தான் பார்க்கணுமா, இவன் வந்து தூக்க கூடாதா? இவன் வந்து தூக்கினா அபி அழுகையை நிறுத்த மாட்டானா, இவனுக்கு காஃபி விட்டு குடிக்க தெரியுதில்லை, பையனுக்கு பால் விட்டு கொடுக்க மாட்டானாமா?” என்று மனதினில் தோன்றிய போதும் கைகள் பாட்டிற்கு அவளின் வேலையை செய்தது.
சிறிது நேரத்திலேயே மனது சமன் பட வீட்டிற்கு வந்து விட்டவன், அவனின் தினப்படி வேலைகளை பார்த்தான் அவளிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை,
“பா” என்று வந்த மகனை தூக்கி கொண்டான்.
இப்படியே மூன்று நாட்களும் சென்றது, சண்டையும் இல்லை உரிமை பேச்சுக்களும் இல்லை, ஆனால் தொழில் பேச்சுக்கள் மட்டும் இருந்தது .
டீ அவளாய் கொடுத்தால் குடிப்பான் , சமைத்து வைத்திருந்தால் அவனே பரிமாறிக் கொண்டு உண்டான், படுக்கையும் வெளியில் கயிற்றுக் கட்டிலில் தான்.
இதெல்லாம் வடிவு பாட்டிக்கு மட்டுமே தெரியும், கூட இருக்கும் சிந்தாமணிக்கு கூட தெரியவில்லை.. சின்னராசுவால் கண்ணன் வந்த பிறகு ஒரு பைசா கூட ஏமாற்றவோ இல்லை பிந்தி கொடுக்கவோ முடியாது போயிற்று..
சற்று தள்ளி இன்னொரு தோப்பு விலைக்கு வர, சந்திரன் மகனின் காதினில் போட்டிருந்தார். “முடிஞ்சா சுந்தரி கிட்ட பணமிருந்தா அவ பேர்லயே வாங்கி போடு” என்பதாக,
“ஏன் உங்க மருமக சொத்தை நான் ஏமாத்திடுவனோ”
“அப்படி கிடையாதுடா, அவங்கப்பன் இருந்தா மாப்பிள்ளைக்கு செய்யறான்னு சொல்லுவாங்க. இப்போ அப்படி எதுவும் நடந்துட்டா பாரு விட்டுட்டு போனான், இப்போ பணம் காசுக்காக வந்துட்டான், வந்தவுடனே ஒரு சொத்தையும் அவன் பேர்ல வாங்கிட்டான்னு வந்துடும் கண்ணா” என்றார் உள்ளதை உள்ளபடி சொன்னார்.
“நீங்க பணம் காசுக்காக தானே கல்யாணம் பண்ணி வெச்சீங்க, அப்போ நான் அதை தான் செய்ய போறேன்” என்று அவரிடம் முறுக்கினான்.
“ப்ச்” என்று சலித்த அவனின் அப்பா, “சும்மா பேச்சுக்கு கூட இனி அப்படி சொல்லாத, திரும்ப வாழ ஆரம்பிச்சிட்ட, அப்போ இந்த மாதிரி பேச்சு அந்த புள்ளையை கஷ்டப் படுத்தும்.. என்ன நான் சொல்றது புரியுதா?” என்றார், கூடவே இனி இந்த வார்த்தை உன் வாய்மொழியாக வரக் கூடாது என்ற கட்டளை இருந்தது. 
வெகு அபூர்வமாய் இப்படி பேசுவார், “இதுவே என் கட்டளை, இதுவே என் சாசனம்” என்பது போல, இப்படி பேசித்தான் சுந்தரியை திருமணம் செய்து வைத்தார்.
அப்படி ஒரு ஆத்திரம் அவனுள் பொங்கிய போதும், எதுவும் பேசினால் முன்பு எப்படியோ இனி அது சுந்தரிக்கு கொடுக்கும் மரியாதை அல்ல என்று புரிந்தவன்,                            
“உழைப்பை எல்லாம் அவளுக்கு தான் குடுக்கறேன். ஆனா காசு நீங்க சொன்ன மாதிரி இப்போ வேண்டாம், அவகிட்ட இருந்து நான் எடுக்கலை, ஆன்லைன்ல வேலை தேடிட்டு இருக்கேன், கைல காசில்லைன்னா எனக்கு டென்ஷன் ஆகுதுப்பா, பணம் வேணும் அவசரப்பட்டு பெரிய வண்டி வேற வாங்கிட்டோம்” என்றான்.
மகனின் இந்த பேச்சு சந்திரனை அசைக்க, “இந்தாடா என் கார்டு, இது உன்கிட்ட இருக்கட்டும், எப்போன்னாலும் எடுத்துக்கோ” என்று கொடுத்தார்.
“உங்களுக்கு” என்றவனிடம்,
“உங்கம்மாது இருக்குடா. என் பேர்ல பாதி அவ பேர்ல பாதி தான் வருமானம் போடுவேன், இனியும் அப்படி தான் போடுவேன், உங்கம்மாதே எங்களுக்கு போதும்.., இதுவரை நான் அதை எடுத்ததேயில்லை, இனி அதை எடுத்துக்கறேன், நான் இருக்கும் போது பணத்துக்கு இவ்வளவு கவலை எல்லாம் படக் கூடாது.. பத்தலைன்னா சொல்லு நான் போடறேன்”
“ம்ம்” என்று அவன் தலையாட்ட,
“ஆன்லைன் வேலை எல்லாம் இப்போ வேண்டாம் அப்புறம் பாரு , இப்போது தான் சுந்தரியோட இருக்க. அவளை பாரு, மகனை பாரு” என்றார்.
“எனக்கு சொல்ற நீங்க அம்மாவை ஏன் பார்க்கலை?” என்று அவன் கேள்வி வைக்க,
“யாருடா சொன்னா அவளை பார்க்கலைன்னு? அவ சொன்னா ஆகிடுமா? வீட்ல சொகுசா உட்கார்ந்து இருக்கா, வெளில இருக்குற கஷ்டம் என்ன தெரியும். ஒரு புள்ளையை கல்யாணம் பண்ணி வெச்சா, அவளை வீட்டை விட்டு விரட்டுவாளா, அப்போ பேச தான் செய்வேன், ஒன்னும் கொண்டு வராம, அத்தனை கொண்டு வந்த பொண்ணை நீ ஏன் விரட்டினன்னு கேட்க தான் செய்வேன்”
“என்ன செஞ்சாலும் பார்த்துட்டு சும்மா இருப்பாங்களா” என்று கோபமாய் பேச,
“என்னவோ போங்கப்பா?” என்று சலித்தான்.
“உங்கம்மாவை நான் பார்த்துக்கறேன், நீ எதையும் குழப்பாத, சுந்தரியை மட்டும் பாரு.. சின்ன வயசுல இருந்தே என் கண் முன்ன வளர்ந்த புள்ள, தனியாவே இருந்துடுச்சு, அதிகம் யாரோடையும் பழக்கமில்லை. அதுதான் உங்கம்மா பேசவும் நீயும் விவாகரத்து அனுப்பவும் போயிடுச்சு”
“நான் விவாகரத்து எல்லாம் குடுக்க மாட்டேன்னு சொல்லக் கூட தெரியலை, பார்த்துக்கோ” என்றார் அக்கறையாய்.
“என்னத்த பார்க்க” என்ற சலிப்பு தான் அவனுள்.
காலை அவன் எழுந்ததும் “இன்னைக்கு நாம வாணி வீட்டுக்கு போகணும்” என்றவன் நேற்றே அவளிடம் புடவையையும் ப்ளவுசையும் கொடுத்திருந்தான்.
“எத்தனை மணிக்கு?” என்றவள் அவன் சொன்ன நேரத்திற்கு அவன் கொடுத்த புடவையை உடுத்தாமல் தன்னிடம் இருந்த வேறொன்றை அணிந்து நிற்க,
அப்படி ஒரு கோபம் அவனில் பெருக . “இது வேண்டாம், நீ நான் கொடுத்ததை கட்டு, அதுதான் நீ போடணும்” என்றான்.  
“எனக்கு அது வேண்டாம், நான் இப்படி தான், இப்படி தான் கட்டுவேன், இதுல யார் எனக்கு மரியாதை கொடுக்கறாங்களோ போதும். என் உடையை பார்த்து தான் எனக்கு மரியாதை கொடுப்பாங்கன்னா அப்படி ஒரு மரியாதை எனக்கு தேவையில்லை” என்று பேச,
“ப்ச், புரியாம பேசாத சுந்தரி, இதுல மரியாதை எங்க இருந்து வந்தது, இப்படி டிரஸ் பண்ணினா நீ நல்லா இருப்பன்னு தான்”
“இல்லை, எனக்கு நல்லா இருக்க வேண்டாம். நான் இப்படி தான் இருப்பேன். இப்படி இருக்குற என்னை உங்களுக்கு பிடிச்சா பிடிக்கட்டும் பிடிக்கலைன்னா பரவாயில்லை”  
“என்ன பேசற சுந்தரி நீ? உன்னை யாரு பிடிக்கலைன்னு சொன்னா?”
“அப்போ நான் ஏன் மாறனும்” என்று பிடிவாதமாய் நிற்க, கண்ணனுக்கு ஆயாசமாய் இருந்தது.   
“சுந்தரி நேரமாச்சு, என்னவோ நீ தப்பா நினைக்கற, எனக்கு சரியா சொல்ல தெரியலை போல, இப்போ அதுக்கான நேரமில்லை, எதுன்னாலும் அப்புறம் பேசிக்கலாம்” என்று பொறுமையாய் சொன்னவன்.
“உனக்கு இஷ்டமில்லைன்னா வேண்டாம், இனி தைக்க வேண்டாம், உனக்கு என்ன இஷ்டமோ போட்டுக்கோ. ஆனா இன்னைக்கு நீ இதை தான் கட்டணும்”
“இல்லை நான் கட்ட மாட்டேன்” என்று சுந்தரி பிடிவாதமாய் நிற்க,
“அந்த புடவையோட வர்றதானா வா, இல்லையா வேண்டாம்” என்று கண்ணனும் நிற்க,
“முடியாது”
“நீ வராதே” என்று சொல்லி அபராஜிதனை தூக்கி கொண்டு கண்ணன் மட்டும் சென்று விட்டான்.
             
            

Advertisement