Advertisement

அத்தியாயம் பதினான்கு :

அன்று ஊர்க்கூட்டம் கூடியிருந்தது. வரவிருக்கும் பண்டிகையையொட்டி என்ன செய்வது என்று முடிவெடுப்பதற்காக! அங்கு பண்டிகையில் நடக்கும் முக்கிய நிகழ்வு எருதாட்டம்.

எருதாட்டம் என்பது மாட்டின் கழுத்தில் கயிற்றைக் கட்டி இருபுறமும் ஓடாதவாறு மக்கள் பிடித்துக் கொள்வார்கள். ஒரு நடை வண்டியில் சிவப்புக் நிறத்திலோ அல்லது வெள்ளை நிறத்திலோ ஒரு பொம்மை உருவத்தை வைத்து, அதை மாட்டின் முன்னாள் ஒரு நடைவண்டியில் முன்னும் பின்னும் இழுத்து காட்டுவார்கள். சிவப்பு நிறத்தினை பார்க்கும் மாடு அதனை முட்ட வரும், முட்டி தூக்கி தூர வீசும். இதனைத் தொடர்ந்து மாட்டினை விளையாட விட்டு ரசிப்பார்கள்.

இது காலம் காலமாக நடக்கும் நிகழ்வு! இப்படி நடந்தால் தீமை அழிந்து நன்மை பயக்கும் என்பது ஐதீகம்! ஆம் எருதுகளை வரிசையாக மூக்கணாங்க கயிற்றில் கட்டி ஊரைச் சுற்றி விட்டு பின்பு கோவிலை சுற்றி வர செய்வர்.

அப்படி செய்தால் ஊரும் ஊரில் உள்ள ஆட்களும், கால் நடையும் நன்றாக இருக்கும். அந்த பருவத்தில் மழை நன்கு பெய்யும். விளைச்சல் நன்கு இருக்கும் என்பது ஐதீகம். அதில் இப்போது பிரச்சனை என்னவென்றால் அதனைப் பற்றி என்ன வென்றே தெரியாத சிலர் அது மிருகவதை என்று சொல்லி அதற்கு கோர்ட்டில் தடை உத்தரவு வாங்கியிருந்தனர்.

இந்த மக்கள் எல்லாம் அதனோடு வாழும் மக்கள், வீட்டில் ஒருவராய் நினைத்து பேசும் மக்கள், வீட்டின் கடவுளாய் நினைத்து அதனை வழிபடும் மக்கள். அதற்கு ஒன்று என்றால் தங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு எதோ ஒன்று போலத் துடித்து விடும் மக்கள்.  

ஆனால் தடை உத்தரவு வாங்கியிருந்தவர்கள் இவர்களை வேடிக்கை மட்டுமே பார்த்து இருக்கும் மக்கள். இந்த ஜீவன்களுக்கு ஏதாவதென்றால் அவர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்ட்டார்கள். அப்படி இருப்பவர்கள் தடை வாங்கியிருக்க, என்ன ஆனாலும் நடத்தியே தீருவது என ஊர் மக்கள் கங்கணம் கட்டிக் கொண்டனர் .     

ஆம்! அந்த ஊரில் இருக்கும் எருதுகள் மட்டுமல்ல, சுற்று புற கிராமத்தில் இருக்கும் எருதுகள் கூட அணிவகுக்கும்.  கன்று போடாத கன்னி மாடுகளும் கன்றுகளும் இதில் அடக்கம்!

தடை உத்தரவு போடப்பட்டு இருந்தாலும் எருதாட்டத்தை நடத்துவது என கோவில் திருவிழாக் கமிட்டியினர் முடிவு செய்தனர். பின்பு கூட்டம் களைய, கோவில் தர்மகர்த்தா கண்ணனின் அப்பா சந்திரன், ஊரிலும் அவர் பெரிய ஆள், அதனால் ஊர்க்கூட்டம் அவரும் மற்றும் சிலரின் தலைமையில் நடந்தது.

அதில் கண்ணனும் இருந்தான். கூட்டம் முடிய, வீடு சென்றான் மகனைப் பார்க்க, இரவு ஒன்பதரையை நெருங்கி இருந்தது. பசிக்க வேறு செய்தது, ஆனாலும் மனைவியின் வீடு நோக்கி சென்றான், பார்த்து விட்டு பின்பு அவன் வீடு போய்க்கொள்ளலாம் என.

ஆம்! இப்போது சுந்தரி புது மனைவி தான். பின்னே வாணியின் திருமணத்தின் போது திருமண நேரத்திற்கு முன் மணமக்கள் மண்டபத்தின் பக்கத்தில் இருந்த கரபுரனாதர் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல, அவர்களோடு வீட்டினர் எல்லோரும் சென்றனர். எப்போதும் மனடபதை விட்டு எல்லோரும் செல்ல மாட்டர், இங்கு உறவு ஆட்களை நிறுத்தி சென்றனர். அப்போது தான் மண்டபதிற்கு திருமணதிற்கு வந்த சுந்தரியையும் மகனையும் கூட அழைத்துச் சென்றனர். அங்கே அவளுக்கு செல்லவே மனதில்லை.

அவளுக்கு திருமணம் நடந்த கோவில் அல்லவா, மணமக்கள் கடவுளை வணங்கி முடிக்க, அவர்கள் தள்ளி வந்ததும், “சுந்தரியை வா” என அழைத்தான் கண்ணன்.

ஏதோ வேலை சொல்ல அழைக்கிறான் என நினைத்து பக்கத்தில் செல்ல, அவளின் முன் கை நீட்டி “உன் கழுத்துல இருக்குறது கழட்டிக் கொடு” என, புதிதாக வாங்கிய நகையை கேட்கிறான் போல என நினைத்து அதனை கழட்டப் போக,

“உன் தாலி!” என்றான், “என்ன” என்று அதிர்ந்து நின்றவளிடம், “சீக்கிரம், சீக்கிரம், டைம் ஆச்சு!” என அவசரப்படுத்த, பக்கத்தில் நின்ற விமலாவும் கனகாவும் “குடும்மா” என,

விவாகரத்து ஆகிவிட்ட போது கழட்டாத தாலியைக் கழட்டினால். கண்ணன் அதனை வாங்கி ஈஸ்வரன் சன்னதியில் இருந்த உண்டியலில் போட்டான். போடும்வரை காத்திருந்த அர்ச்சகர், பின்பு சாமி முன் வணங்கி வைத்திருந்த மஞ்சள் கயிற்றோடு கோர்த்திருந்த பொன் தாலியை எடுத்து வர..

“என்ன நடக்கிறது?” என சுந்தரி கிரகிக்க முற்படும் போதே “நில்லு, நில்லு, டைம் ஆகுது!” என அதட்டி அவளை அவன் அருகில் நிறுத்தி தாலியை அவளின் கழுத்தின் அருகில் கொண்டு வந்து “கட்டட்டுமா” என,

எல்லோரும் பார்க்க இறைவன் சன்ன்னதியில் என்ன தான் சொல்வாள் அவள், ஆனாலும் பதில் சொல்லவில்லை! தலை குனிந்து அதனை ஏற்கும் பாவனையுடன் நிற்க, கட்டி முடித்து மூன்று முடுச்சுகலையும் அவனே போட்டான்.

எல்லோரும் அட்சதை தூவி ஆசீர்வதிக்க, திரும்பவும் திருமணமாகி விட்டது. “டைம் ஆச்சு” என யாரோ குரல் கொடுக்க.. “நீங்க போங்க. நாங்க வர்றோம் ஒரு பத்து நிமிஷத்துல” என,

எல்லோரும் கிளம்ப, கண்ணன் சுந்தரி அபி மட்டுமே அங்கே. “கோவில் சுத்தி வந்து, சாமி முன்னாடி வணங்கிடுங்க” என அர்ச்சகர் சொல்ல, கணவன் மனைவி குழந்தை சகிதமாக கோவில் சுற்றி வந்து ஈஸ்வரர் முன் விழுந்து வணங்கிய போது, “நான் செய்த தவறை மன்னித்து வாழ்வை சரியாக்கிவிடு” என்று மனமுருக வேண்டினான் கண்ணன்.

ஆனால் அப்படி எந்த வேண்டுதலும் சுந்தரியிடத்தில் இல்லை. ஒரு அதிர்ச்சியில் இருந்தால், எப்படி தன்னைக் கேட்காமல், தன்னிடம் சொல்லாமல் இப்படி செய்யலாம்! இவன் தான் சொல்லவில்லை என்றால் வேறு யாரும் கூட, சொல்லவில்லையே என்பது போல்.

கண்ணனின் வீட்டினில் இருந்து அவளுடன் சகஜமாக பேசும் ஒரே ஜீவன் அவன் தான்! ஏன் சந்திரன் கூட தள்ளி தான் நிற்பார். நான் சொல்லிட்டேன் என அவன் சொல்லிவிட்ட போது உண்மை என நம்பிவிட்டனர். இப்போது சுந்தரியின் முகம் பார்க்கவும் தான் சொல்ல வில்லை போல எனத் தோன்றியது. அவனே சமாளிக்கட்டும் என அவன் கிளம்ப சொன்ன போது எல்லோரும் கிளம்பி விட்டனர்.

“ஏன் இப்படி பண்ணுனீங்க, சொல்லணும் கூட தோணலையா” என அவள் கேட்க, “சொன்னா நீ ஒத்துக்குவேன்னு தோணலை, ஏற்கனவே தாலி இருக்கு தான். ஆனா அதுக்கு லீகல் வேலிடிட்டி கிடையாது! சரியா சொல்லணும்னா தாலி இருந்தாலும் விவாகரத்து ஆனதுனால அந்த தாலி செல்லாது! அதனாலதான் இப்படிப் பண்ணினேன்! நீ போட்டிருந்ததை மாத்தி விட்டேன்! அவ்வளவு தான்!”

“சேர்ந்து வாழறது உன்னோட விருப்பம் தான்! அதுல எந்த கட்டாயமும் இல்லை! உன் இஷ்டம் தான்! வெயிட் பண்றேன் எவ்வளவு நாளானாலும்” என முடித்துக் கொண்டவன் “டைம் ஆகுது!” என,

முதல் முதலில் தன் கணவனின் பின் அமர்ந்து பைக்கில் போகிறாள். மகனை முன் புறம் அமர்த்தி அவன் பைக் ஸ்டார்ட் செய்து நிற்க, ஏறி அமர்ந்தாள். “இருங்க, இருங்க, நல்லா பிடிச்சிக்கறேன்!” என கெட்டியாகப் பற்றிக் கொண்டாள். அந்தோ பரிதாபம், கண்ணனை அல்ல பைக்கை தான்!

“இதுக்கு தான் இவ்வளவு பில்ட் அப்பா” என முனுமுனுத்தவன் மண்டபத்தை அடைய, திருமணம் மிக சிறப்பாக நடந்தது. மேடையில் மணமகளின் பின் புறம் தான் நின்றிருந்தாள், அவளை ஏற்றி விட்டு இருந்தனர்.

அவளின் தனிமை வாழ்க்கைக்கு எல்லாம் புதிது இது. அப்பாவுடன் இருந்த போதும் அவர் மனைவி இல்லாததினால் ஒதுங்கி நிற்க, சுந்தரியும் எங்கும் முன் செல்ல மாட்டாள். இப்போது திடீரென்று மூன்று நாத்தனார்கள் வந்து குதித்து விட, தப்பிக்க முடியவில்லை. விமலாவும் கனகாவும் இவள் விலகி சென்றாலும் விடாது முன்னிறுத்தி வேலை வைத்தனர்.

திருமணம் முடிந்து தாரை வார்த்துக் கொடுக்க வேண்டும்!

“போங்க, நீங்க ரெண்டு பேரும் போய் நில்லுங்க!” என்றார் சந்திரன். “என்ன நானா?” என்பது போல அவள் விழி விரித்து எங்கே கண்ணன் என்பது போலத் தேடினாள். அங்கே தான் இருந்தவன் “நான் இல்லை, இது எனக்கேத் தெரியாது” என்று சொல்ல,

திரும்பவும் “டைம் ஆச்சு, போங்க! போங்க!” என்ற அவசரம் போய் நின்றனர். எல்லோருக்கும் தெரியும் இப்போது கண்ணன் தினமும் சுந்தரியின் வீட்டிற்குப் போக வர இருக்கிறான் என. இருந்தாலும் எல்லாம் சரியாகிவிட்டது என்று ஊருக்கும் உறவுகளுக்கும் முறையாகக் காட்ட விரும்பினார் சந்திரன். அதன் பொருட்டே திருமணமும், இந்த ஏற்பாடும்!  

எல்லாம் சரியாகிவிட்டது என்று காட்டிவிட்டனர்! ஆனால் எதுவும் சரியாகவில்லை! சுந்தரி இவர்களின் வீட்டிற்கு வரவில்லை! கண்ணனையும் தங்களின் வீட்டிற்கு வா என அழைக்கவில்லை.

இதோ இப்போது ஊர்க்கூட்டம் முடிந்து அவன் சுந்தரி வீடு செல்ல கேட்டை பூட்டியே விட்டனர். எதிரில் தான் கயிற்றுக் கட்டிலில் வடிவுப் பாட்டி படுத்து இருந்தார். ஒரு சத்தம் கொடுத்தால் விழித்து விடுவார், ஆனால் அவனுக்கு எழுப்ப மனதில்லை. சுற்றும் முற்றும் பார்த்தான், யாரையும் காணோம்! ஒரே எம்பாக எம்பி கேட்டை தாண்டி குதித்து விட்டான்.

“ரெண்டு தரம் கல்யாணம் பண்ணி, பொண்டாட்டியைப் பார்க்க கேட் ஏறிக் குதிக்கறேன்! என்ன செய்ய?” என முனுமுனுத்துக் கொண்டே படியேறி கதவைத் திறக்க கை வைக்க, அது தாளிடப்பட்டு இருந்தது! “அதுக்குள்ள தூங்கிட்டாளா? இப்ப திரும்ப ஏறிக் குதிக்கணுமோ” என நினைத்தவன். ஒரு சிறு வாய்ப்பாக கதவை ஒரு தட்டு தட்டி நின்றான்.

சாப்பிட்டது சரியாக செரிக்காமல், சிறிது நேரம் முன்பு தான் அபி வாமிட் செய்திருக்க, அதுவும் சுந்தரியின் மேலேயே செய்திருக்க, அவனை திரும்ப பால் கொடுத்து உறங்க வைத்து இருந்தாள். பின்பு குளிக்க சென்றவள் வெளியில் வர கதவு தட்டும் சத்தம் கேட்க, பாட்டி தான் தட்டுகின்றாரோ என நினைத்து கதவை திறந்தாள், கேட் தான் பூட்டியாகிவிட்டதே!

எட்டி குதித்து இவன் வந்து நிற்பான் என அவள் அனுமானித்தாலா என்ன? அசட்டையாக வந்து கதவை திறக்க, எதிரில் நின்றது கண்ணன். எதிர்பார்க்கவில்லை அவளுமே இவனுமே! பின்னே பாவாடை மட்டுமே ஏறக் கட்டி இருந்தாள்.

விழி விரித்து இவனைப் பார்த்து “எப்படி வந்தீங்க?” என, “ஏறிக்குதிச்சு” என சொல்லி, அவளை ரசனையாகப் பார்த்து நிற்க, இவனைப் பார்த்தும் ஓடவா முடியும், வேகமாக கதவை மூடப் போனால், “புடவை கட்டிட்டி வந்துடறேன்” என,

“நீ ரூம்குள்ள போய் கட்டு!” என்று அவன் உள்ளே வந்திருந்தான். பார்வையும் சற்றும் கூச்சமின்றி உடலை மேய, அவனின் பார்வையில் உடல் முழுவதுமே ஒரு உணர்வு. தடுமாறி ஈரக் கால்களோடு அவள் வேகமாகத் திரும்பி நடக்க, அது வழுக்க, விழப் போனவளை வேகமாக நெருங்கி தாங்கிப் பிடித்தான்.

உடலை இறுகப் பற்றி வெற்று தோள்களில் முகம் பதித்து இதழ் பதிக்க, உடல் முழுவதுமே சிலிர்த்து அடங்கியது இருவருக்குமே!  ஆனாலும் திமிறி விலக முயன்றாள்.

கண்ணன் அவளை கடுப்பேற்ற “இந்த மாதிரி சீன்ஸ் எல்லாம் படத்துல தான் பார்த்திருக்கேன், எப்படி சரியா இப்படி வந்த” என,

அவளின் இடையில் கைபதித்து இருக்க, அதனை விலக்கி விட்டவள், “ம்ம்ம், நீங்க வருவீங்கன்னு இப்படி நிக்கறேன்” என்று போக,

“இந்த வெக்கம் வெக்கம்ன்னு ஒன்னு இருக்கே, அது உனக்கு வரலையா? இப்படி அரைகுறையா நிக்கறோமே ஒரு பாவப்பட்ட ஜீவன் பார்க்குதே, ஏதாவது செய்ய விடலைன்னாலும் ஒரு எக்ஸ்ப்ரஷனா குடுப்போம், அவன் மனசு குளிர்ற மாதிரின்னு ஏன் தோணலை?”

“வெட்கமா? அது வரலையே? என்ன பண்ணலாம்! எந்த கடையில் விக்குது! கொஞ்சமா வாங்கி வெச்சிக்கறேன்!” என்று வாய் பேசிக் கொண்டே ரூமின் உள் போய் கதவடைத்துக் கொண்டாள்.

இருவர் முகத்திலுமே முகம் கொள்ளா சிரிப்பு, “இந்த ரொமான்ஸ்ன்னு ஒன்னு இருக்கே, அது எனக்கு வரலையா, இல்லை அவளுக்கு வரலையா? இப்படியாடா சேன்ஸ் மிஸ் பண்ணுவ!” என அவனுக்கு அவனே சலித்து பேசிக் கொண்டான்.

அது சுந்தரியின் காதுகளிலும் நன்கு விழுந்தது. இன்னும் புன்னகையை வரவைத்தது. “ஹ, ஹ, சேன்ஸ் கிடைச்சா என்ன பண்ணுவாங்களாம்!” என அவளுக்கு அவளாகவே சிரித்துக் கொண்டாள்.

அவள் வெளியில் வரவும், “ஏன் இந்த நேரத்துல குளிச்ச?” என,

“அபி வாமிட் பண்ணிட்டான்” என, “ஏன்” என்று கேட்டு மகனின் அருகில் விரைய, அவன் நல்ல உறக்கத்தில். “சாப்பிட்டது செரிக்கலை போல, இப்ப பால் கொடுத்து தூங்க வெச்சிட்டேன்!” என்றாள்.

“சுந்தரி?” என்ற பாட்டியின் குரல் கேட்க, “என்ன ஆயா?” என்றவளிடம், “யாரு பேச்சு சத்தம்” என கேட்க, “ம்ம், உங்க ராசா தான்” என, கண்ணனும் “நான் தான் பாட்டி” என மீண்டும் அவர் உறங்கிப் போனார்.

“எங்க போயிட்டு வர்றீங்க” என, “ஊர்க்கூட்டம், உனக்கு தான் தெரியுமே! நான் இன்னும் போனதில்லை. அப்பா கூட்டிட்டு போனதில்லை. இனிமே இங்கே தானே! அதான் போனேன்!”

“இவ்வளவு நேரம் ஆகிடுச்சா” என அவள் வினவ,

“ஆமாம்!” என்று மகனின் அருகில் அமர்ந்து கொண்டான்.. பின்பு ஏதேதோ பேச்சுக்கள் வீட்டிற்கு கிளம்ப அவனுக்கு மனதேயில்லை.

அதை அவளுமே உணர்ந்தால் “போ” என்றா சொல்ல முடியும்! “சாப்பிட்டியா” என்றவனிடம்,

“இல்லை, இனிமே தான்!” என்றவள், “நீங்க சாப்பிட்டீங்களா” என,

“இல்லை, இனிமே தான்! வீட்டுக்கு போய்” எனச் சொல்லி நேரம் பார்க்க, பத்தரை! “நீ சாப்பிடு” என அவன் எழ,

சுந்தரியாக உரிமையாய் இதுவரை ஒரு வார்த்தைக் கூட பேசியதில்லை, எல்லாம் அவனாகப் பேசுவது தான். முதல் முறையாக “சாப்பிடறீங்களா” என,

“நிஜம்மா கேட்கறியா? இல்லை வாய் வார்த்தைக்கா?” என்றவனிடம், “நிஜம்மா” என்றாள்.

“என்ன இருக்கு? எனக்கு இருக்கா?”  

“சாதம் தான், ஆனா எனக்கு மட்டும் தான் இருக்கு! உங்களுக்கு தோசை ஊத்தட்டுமா, சட்னில சாப்பிடுவீங்களா” என,

“சரி” என அவன் தலையசைக்க, வேகமாக சட்னி ஆட்டி தோசை சுட்டு விட்டாள். அவனுக்கு இருந்த பசிக்கு அவனும் அவள் சுட சுட அங்கேயே கீழே அமர்ந்து வேகமாய் உள்ளே தள்ளினான். அந்த சூழல் ஒரு சொல்ல முடியாத இதம் இருவர் மனதிலுமே!

“நீயும் சாப்பிடு!” என, அவளும் தக்காளி சாதத்தோடு அமர, “கொஞ்சம் குடு” என அதனையும் உண்டான். “நல்லா இருக்கு, நீ நல்லா சமைக்கற” என அவன் சொல்லிய விதத்தில் சிரித்து விட்டாள்.

“நிஜம்ன்னு நம்பி இப்படியே சமைப்பேன், செய்யட்டுமா?” என, அவன் முழிக்க, கலகலவென்று சிரித்தவள் “பொய் தானே சொல்றீங்க”

“ஆம்” என்பது போல தலையாட்டியவன், அவனும் சிரித்து விட்டான். “இப்படி தான் என் மகனுக்கு நீ சமைச்சு போடறியா, அதான் வாமிட் பண்ணிட்டான்”

“இது நான் செய்யலை, இன்னைக்கு ஆயா தான் செஞ்சிச்சு. நான் நர்சரில தானே இருந்தேன், உங்களுக்கு தெரியும் தானே!”

ஞாபகம் வந்தவனாக “ம்ம்” எனத் தலையாட்டி, அவள் உண்டு முடித்ததும், அவன் தோப்பின் வழியாக வீட்டிற்கு போக, வெகு நேரம் பார்த்து நின்றாள் அவன் சென்றதை.

மனதிற்கு இனிமையாக இருந்தது இப்போதெல்லாம் அவனுடன் இருப்பது..

கண்ணனை “இங்கேயே இரு” என்று சொல்ல வாய் வரை வார்த்தை வந்தது தான். ஆனாலும் அவளாக சொல்ல ஒரு தயக்கம், “கேட்காம தாலி கட்டத் தெரியுதில்ல, அப்புறம் என்ன நீ இஷ்டப்பட்டா தான்னு ரூல்ஸ் பேசறான். அதையும் நான் இங்கதான் இருப்பேன்னு சொல்லி இருக்க வேண்டியது தானே!” என்று வெகுவாக மனது அவனின் மீது கோபம் கொண்டது.     

 

Advertisement