Advertisement

மலர் 06
எல்லாப்பொருட்களையும் வாகனத்தில் ஏற்றி அனுப்பி விட்டு, சுப்ரமணியன் காரில் இருவரும் ஏறினர். 
முக்கால் மணி நேரத்தில் அவர்கள் வரவேண்டிய இடத்திற்கு கார் வந்து கேட்டின் உள்ளே சென்றது. 
காருக்குள் இருந்து  இறங்கிய நித்யா அந்த இடத்தை வாயைப்பிளந்து பார்த்துக்கொண்டிருந்தாள். ஏனெனில் அந்த மாடிவீடு இவர்கள் இருந்த வீட்டை காட்டிலும் அழகாக, அம்சமாக,நவீனவசதிகளுடனனும், முன் பக்கம் முழுவதும் பூச்செடிகளும், பின்பக்கம் முழுவதும் பயிர்வகையுமாய் பார்க்கும் இடம் முழுவதும் பச்சைபசேலென்று கண்ணுக்கு விருந்தாக இருந்தது. 
“அப்பா இது உங்களுடைய வீடா? இப்படி ஒரு அழகான வீட்டில் வாழ்ந்து பழகி விட்டா கிராமத்தில் அந்த ஓட்டு வீட்டில் வசித்தீர்கள். “
“நித்தி… மனங்கொண்டது தான் மாளிகை. இந்த வீடு கொடுத்த நிம்மதியை விட அந்த ஓட்டு வீடு கொடுத்த நிம்மதியும், சந்தோசமும் நிறையவே இருக்கிறது. அதனால் ஆடம்பரமாய் 
இருப்பது எல்லாமே ஆனந்தத்தை தராது கண்ணம்மா. வா வீட்டுக்குள்ளே போகலாம்.” என்றார். 
“இருடா மார்க்கண்டேயா… அதுக்குள்ளே என்ன? அவசரம். என் மருமக முதல்முதலாக இன்றுதான் அவ பிறந்த வீட்டுக்கு வந்திருக்கிறா…அவளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டாமா?”
“டேய்… இந்த ஃபார்மாலிட்டிஸ் எல்லாம் எனக்கு பிடிக்காத மாதிரியே அவளுக்கும் பிடித்தமில்லை. “
“சரி…என்ன? சொன்னாலும் நீ கேட்க மாட்டாய். இங்கே பொருட்கள் எல்லாவற்றையும் வேலையாட்கள் அடுக்கட்டும் அதுவரை என்வீட்டுக்கு வாருங்கள்.” என சுப்ரமணியன் அழைத்தார். 
“அங்கிள் உங்களது வீட்டுக்கு போவதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்.”
மற்றவர்கள் இருவரும் சிரிப்பதை பார்த்து அவள் முறைத்தாள்.
“இல்ல கண்ணு… இது தான் என் வீடு.” என பக்கத்து வீட்டை காட்டினார். 
இதுவா? என திரும்பி பார்த்தவள் அந்த வீட்டை பார்த்து வியந்தாள்.இவர்களது வீட்டை விட மிகவும் பிரமாண்டமாய் அசரடித்தது அந்த வீடு. பசுஞ்சோலையாய் நிறைந்த மரங்களிற்கிடையில் அந்த வீடு இன்னும் பிரமாதமாய் இருந்தது. அதை விட இரண்டு வீடுகளையும் பிரிக்கும் பொருட்டு நடுவே ஒரு கட்டை மதிலும் இடையே ஒரு பாதையும் இருந்தது. 
“அங்கிள் உங்களது வீடு சூப்பர்.” என கையால் அபிநயம் பிடித்தாள். 
“இன்று நீ முதல்முதலாக  வருவதால் வாசல் கதவால் போவோம் என்றார்.”
“அவள் திரும்பி தகப்பனை பார்த்து தகப்பா  நீ வரலியா… ?”
“என்னம்மா…? நீயா…? இப்படி உன் அப்பாவை பார்த்து பேசுகிறாய்.”
“அட…ஆமா அங்கிள் என் மூட் மாறினால் நான் அப்பிடி தான் பேசுவேன் நீங்க இதை பெரிசா நினைக்காதீங்க என்ன?”
“இதுக்கு மேல் நான் ஏதும் கேட்க மாட்டேன் தாயே…!நீ ஆச்சு உன் அப்பனாச்சு..” ‘அது தான் சந்தடி சாக்கில் என்னையே ‘அட’ என்றாகி விட்டது.என மனதினுள் நினைத்து புன்னகைத்தவர் நினைவில் இவள் தான் நம்ம பையனுக்கு ஏத்த பொண்னோ……!!!!
“அப்பா எனக்கு இங்கே யாரையும் தெரியாது. உனக்கு எல்லாரையும் தெரியும் தானே? பிறகு நீ எதுக்கு அங்கே தனித்து நிற்கிறாய் வாப்பா… போகலாம்.”என்றாள்.”
“இல்லை….” என எதை கூற முற்பட்டவரை அவள் கையை உயர்த்தி தடுத்திருந்தாள். 
“போதும்…போதும்… உன் லெக்சரரை நீயே வைத்து கொள் டாடி. உன் ஃபிரண்டு வீட்டுக்கு நான் தனியா போனா நல்லா இருக்காது. நீயும் வா. “
“சரி…சரி மூக்கால முகாரி பாடாதே வருகிறேன் கிளம்பு. ” என்று கூறிக்கொண்டு தகப்பன் வரவும், “அது” என்று விரல் நீட்டி கூறியவள் “வாங்க… வாங்க… அங்கிள் போகலாம்.”
“ஓகே…வாருங்கள் போகலாம்.” என்று சொல்லி அவர் வீட்டுக்கு மூவரும் சென்றனர். 
கார் அவரது வீட்டு வாசலில் நிற்கவும் ஓட்டோமெட்டிக்காக கதவு திறக்க கார் உள்ளே சென்றது. 
காரில் இருந்து இறங்கியவர்களை உள்ளே வாருங்கள் என அழைத்து கொண்டு உள்ளே செல்லவும், “உள்ளே வராதீர்கள்.அங்கேயே நில்லுங்கள்.” என்ற குரல் உள்ளிருந்து வரவும் மூவரும் அதிர்ந்து நின்றனர். 
உள்ளே இருந்து யாரோ…? வரும் சத்தம் கேட்கவும் பயத்தில் நித்யா சுப்பிரமணியன் பின்னே சென்று ஒளிந்து கொண்டாள்.
உள்ளே கேட்ட குரல்கள் அருகில் கேட்கவும் நித்யாவிற்கு இதயம் ‘படபட’த்தது.
சந்திராவும், அவர்கள் வீட்டின் சமையற்காரி பார்வதியும் கையில் ஆரத்தி தட்டு சகிதம் வந்தனர். 
அவர்கள் முன்னால் வந்தவர்கள் மார்க்கண்டேயனை பார்த்து “அண்ணா” என கண் கலங்கவும் சந்திராவை பார்த்து தலையசைத்தவர் வேறு ஏதும் பேசாது இருக்கவும், உள்ளே போய் பேசலாம் என நினைத்தவர் கணவனை பார்த்து “என்னங்க எங்கே என் மருமகள்.” என்றார். 
“ஏன்டி…உள்ளே வரும் போதே உள்ளே வராதீர்கள் என்று உள்ளே இருந்து நீ கத்தவும் புள்ள பயந்து போய் என் பின்னால் ஒளிஞ்சு நிக்குது பார்.” என்றவர் தன் பின்னால் நின்ற நித்யாவை கூப்பிட்டு முன்னால் நிறுத்தினார். 
அவளை பார்த்த சந்திராவின் கண்கள் கலங்கியது. அவளை தன் தலையிலிருந்து கால் வரை பார்த்தவர். “உன் மாமா சொன்னது போலவே ரோசாப்பூ மாதிரி இருக்கிறியே…கண்ணு…என் கண்ணே பட்டுவிடும் போல,”என்றவர் பார்வதி வைத்திருந்த ஆரத்தி தட்டை தன் கையில் வாங்கி இவளுக்கு சுற்றி விட்டு கன்னம் வழித்தவர்,  “பார்வதி இதை கொண்டு போய் தெருவில் கொட்டி விட்டு வா.” என்று கூறியபடி அவளது கையை பிடித்து வீட்டுக்குள்ளே கூட்டிச்செல்லவும் நின்று போயிருந்த மின்சாரம் பட்டென்று வரவும் வீடு பூராக ஒளிவெள்ளம் பெருகியது. 
இதை நல்ல சகுனமாக கருதி சந்திராவும், ஹாலின் நடுவில் அமர்ந்திருந்த சந்திராவின் மாமியாரும் அர்த்தம் பொதிய சிரித்து கொண்டனர்.
“வாம்மா… வாங்க தம்பி.” என்று வரவேற்ற பாட்டிக்கு சந்தோசமாக நித்யா வணக்கத்தை கூற, மார்க்கண்டேயன் சங்கடத்தை மனதில் புதைத்து கொண்டு கரம் கூப்பினார்.
உட்கார்ந்தவர்கள் கதை பேச ஆரம்பிக்க நித்யா தான் தலை கால் புரியாததால் அங்குமிங்கும் விழிகளை ஓட விட்டுக்கொண்டிருந்தாள். 
என்னங்க பேசினது போதும் வாங்க… சாப்பிடலாம். உங்க பேச்சு புரியாமல் புள்ள ‘பேந்த பேந்த’ முழிக்குது. அண்ணா நீங்களும் வாங்கோ என அனைவரையும் சாப்பாட்டு மேசைக்கு அழைத்து சென்று ‘தடல்புடல்’ விருந்தொன்றை வைத்து நித்யாவை திணற வைத்து விட்டார்கள். 
அவள் சாப்பிட்டு முடித்து எழப்போகவும்,  “என்னம்மா கொறிக்கிறாய்.வளரும் பிள்ளை அதை சாப்பிடு, இதை சாப்பிடு.” என பக்கத்தில் இருந்த பாட்டி அவளை வதைத்து விட்டார்.
அவளது முக பாவனை மாறுவதை பார்த்த சுப்பிரமணியன் “அம்மா… அவளை விடுங்கள்.அவ மூட் மாறினால் என்ன? நடக்கும் என்று தெரியாது?”
“அங்கிள்… ” என கூறி கைகளை விரித்தாள் என்ன இது? என்பது போல.
“பாவம்…பாட்டி வயசானவங்க இல்லையா கண்ணு அது தான் சொன்னேன். “
அவள் சாப்பிட்டாலும் தகப்பன் இலை மேல் ஒரு கண் இருந்து கொண்டே தான் இருந்தது. அதைப்பார்த்த சந்திரா “அம்மா…தாயே…உன் அப்பாவுக்கு நான் சாப்பாடு நன்றாக தான் நான் வைக்கின்றேன்.அவரும் நன்றாக தான் சாப்பிடுகின்றார். பிறகு என்ன? உன் லுக்கே சரியில்லையே…!”
“இல்லை… ஆன்ரி… வழமையாக நான் தான் அப்பாக்கு சாப்பாடு போடுவேன் அது தான்… ” என இழுத்தாள்.
“ஹலோ  மேடம் நீ பிறக்க முதல் என் அண்ணனுக்கு ஒவ்வொரு நாளும் நான் தான் எங்க வீட்ல சாப்பாடு போடுவேன் அது உனக்கு தெரியுமா… ?”
“வாட்…”
‘ஐயோ…கடவுளே… உளறிவிட்டோமே என தலையை சொறிந்தவர் சரி சமாளிப்போம்’ மனதில் நினைத்து கொண்டு, “நித்தி குட்டி உன் அப்பாவும், நானும் சகோதரர்கள் அதாவது உன் அப்பா என் சொந்த அண்ணா. நான் அவரது சொந்த தங்கை போதுமா?”
“மாரா…இவங்க சொல்லுறது உண்மையா?” என அவள் கேட்க தகப்பன் ஆம் என்பது போல தலையை ஆட்டினார்.
“இதுவரைக்கும் நீ இதைப்பற்றி எனக்கு ஒருநாளும் சொல்லவில்லையே… ஏன்?” என்றாள். 
“என்ன? குட்டிம்மா… அப்பாவை இப்படித்தான் பேசுறதா? “
“ஆன்டி… என் அப்பாவை தானே பேசுகிறேன்.வேறுயாரின் அப்பாவை பேசினால் அது தப்பு… இது என் அப்பா. நீங்க உங்கள் அண்ணை ‘வா போ’ என்று பேசியதில்லையா?” என்றாள். 
“அது… நித்திம்மா… என அவர் இழுத்ததை பார்த்தாள் அப்போது நீங்கள் பேசலாம்… ஆனால் நான் பேசக்கூடாது? அப்படியா ஆன்டி.”
தகப்பன் அவளை பார்த்து “சும்மா இரு நித்து…” என அடக்க முயலவும் அவரைப் பார்த்தவள் “அப்பா இதை விட ஏதாவது ட்டுவிஸ்ட் இருந்தா இன்னிக்கே சொல்லிவிடு…’புதுசு புதுசா’ ஒவ்வொரு நாளைக்கு ஒன்றாக சொல்லி எனக்கு பிபி ஏத்தாமல் ஒரே நாளில் எல்லாவற்றையும் சொல்லிடு… முடிஞ்ச வரைக்கும் தாக்கு பிடிக்க முயற்சி பண்ணுகிறேன்…”என்றாள். 
‘சின்னக்குட்டி சரியான அழும்பு புடிச்சது போல இருக்கும். ஆனால் வந்து கொஞ்ச நேரத்திலேயே வீட்டையே கலங்கடிக்க வைத்து விட்டாளே… !’ என யோசனையில் இருந்த சந்திராவை அவரது மாமியார் கோதையின் குரல் கலைத்தது. 
“ஏன்? சந்திரா… என் பேத்தி வந்து கொஞ்ச நேரத்திலே இந்த வீட்டை ‘கலகல’க்க வைத்து விட்டாளே…!”
“உண்மை தான் அத்தை என் பொண்ணுங்க இரண்டும் கல்யாணமாகி போன பிறகு இப்போது தான் இந்த வீட்டுக்கு ஒரு களையே வந்திருக்குது அத்தை. “
“அத்தை அவளுக்கு அவ அம்மா பற்றி எதுவும் தெரியாது. நீங்க ஏதும் உளறி வைக்காதீங்க… “
“ம்… சரி நான் ஏன்?சொல்கிறேன்.இருபது வருசத்துக்கு பிறகு இப்போது தான் அவளை பார்க்கிறேன்… இந்த சந்தோசமே போதும்.” என அவர் கண்கலங்கினார். 
“அத்தை அவ கைகழுவிக்கிட்டு இருக்கிறா,அவ வர முன் கண்ணை துடையுங்க…”
கைகழுவி விட்டு வந்த நித்யா “அச்சச்சோ… ” என தலையிலடித்தபடி வெளியே இருந்து கதைத்த சுப்பிரமணியன்  அருகில் மூச்சிரைக்க ஓடி வந்து நின்று,”அங்கிள்… அங்கிள்… சீக்கிரமாக வந்து உங்கள் கார்டிக்கியை திறவுங்கள். ” என்றாள். 
இவள் ஓடுவதை பார்த்த சந்திராவின், மாமியாரும் பதட்டத்துடன் இவள் பின்னால் பதட்டத்துடன் விரைந்தனர். 
 

Advertisement