Advertisement

மலர் 05
அவள் அழுவதையே பார்த்திருந்த சுப்பிரமணி “பார்த்தாயா மார்க்கண்டு உன் பொண்ணு உன்னையே உலகம் என்று இருக்கின்றாள். அவள் இப்படியே இருந்தால் அவள் எதிர்காலம் என்னவாகும் என்று நினைத்தாயா? இப்போது பெண்கள் தம் வீடுகளை விட்டு வெளியே வந்து சுதந்திரமாக நடமாடுகிறார்கள். புதிய சாதனைகளை படைத்து கொண்டிருக்கிறார்கள். நீ என்னடா என்றால் அவளை எதற்கெடுத்தாலும் அவளை அழுவதற்கு பழக்கி வைத்திருக்கிறாய். “
‘ம்… உனக்கு அவளை பற்றி தெரியலை…’ என நினைத்தவர் “டேய் சுப்பு அதை தாண்டியும் பெண்களுக்கு எத்தனை பிரச்சனைகள் இன்னமும் கொடூரமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவளை வெளியே வேலை செய்ய அனுமதிப்பது என்றால் தனியே விட முடியாது. நானும் அவளுடன் செல்வேன். ஆனால் இப்போது எங்கே தங்குவது. “என நண்பனை கேட்டார். 
‘என் வீட்டில் உன்னையும் உன் பெண்ணையும் கண்ணுக்குள் வைத்து தாங்குவதற்கு எல்லோரும் தயாராக தான் இருக்கிறோம்.ஆனால் உன்னால் தான் உன் பிடிவாதத்தையும், நாங்கள் செய்த துரோகத்தையும் தாங்க முடியாது.’ என மனதுக்குள் நினைத்ததை வெளியே சொன்னால் நண்பன் மறுபடியும் முருங்கை மரத்திற்கு ஏறிவிடுவான் என்று அறிந்த சுப்பிரமணி “அப்படி என்றால் நித்தியை என் கம்பனிக்கு வேலைக்கு அனுப்புவதுடன் நீயும் வருகிறாய் அப்படித்தானே… !”
“வேறு வழி. நான் என்ன?  பேசினாலும் நீ விடப்போவதில்லை என்று தெரிந்து விட்டதே…! ஏற்கனவே திட்டத்தோடு வந்திருப்பவனை புது திட்டம் தீட்டி நான் வருத்துவானேன்.உன் விருப்பபடி செய். ஆனால் நண்பா தயவு செய்து உன் வீட்டிற்கு வர மாட்டேன். எனது சொந்த வீடு உனது வீட்டுக்கு பக்கத்தில் தான் இருக்கிறது.அங்கே தான் நானும் என் பெண்ணும் வருவோம்.அதற்கு சம்மதம் என்றால் ஓகே.”
“நீ…நீ எனக்கு பக்கத்தில் வந்தாலே நான் இன்னும் ஸ்ரோங் ஆகி விடுவேன்டா…உனக்கு ஒரு கிழமை தான் அவகாசம். அதற்கு அங்கே வருவதற்கான ஆயுத்தத்தை செய்.” என்றவர் கண்ணில் நீருடன் நண்பனை கட்டித்தழுவினார் .
“அங்கிள்  வந்து நாம் தங்குவதற்கு அப்பாவின் வீடு அங்கே இருக்கிறதா? இது வரை எனக்கு அது தெரியாதே…!”
‘உனக்கு தெரியாத எத்தனையோ விடயங்கள் இருக்கிறது நித்திம்மா… அதை எல்லாம் இப்போது என்னால் சொல்ல முடியாது. நீ ஊருக்கு வந்து எல்லோரையும், எல்லாவற்றையும் பார்க்கத்தான் போகிறாய். உன் அப்பா இழந்ததை எல்லாம் உன் மூலமாக திருப்பி கொடுப்பேன்.’ என நினைத்தவர்,  “நீ தான் இன்னும் ஒரு கிழமையில் அங்கே வந்து பாரேன். என்றவர் நான் கிளம்புகின்றேன்டா. நித்தி அங்கிள் வருகின்றேன்.” என்று கூறி இதன் காருக்கு செல்ல,அவர்கள் இருவரும் வாசல் வரை சென்று வழியனுப்பி வைத்தனர். 
                                 ********
என்றைக்கும் போலவே இன்றைக்கும் முழு போதையில் வந்த செந்தூரை வீட்டு வாசலிலே எதிர் கொண்ட சுப்பிரமணியன் அவன் காரை நிறுத்தி விட்டு தள்ளாடிய படியே வந்தவனை பார்த்துக்கொண்டிருந்தவர் மனமெல்லாம் வலித்தது. 
‘இவனை பெத்ததற்கு இன்னுமொரு பொம்பிளைப்பிள்ளையை பெத்திருந்தால் அது மூலமாகவேனும் என் வம்சம் தளைத்திருக்கும். கொள்ளி போட பையன் வேணும் என்று தவமிருந்து பெத்த பிள்ளை,இவன் பழக்கத்தை பார்த்து எனக்கு வர்ற கோபத்திற்கு நானே வெட்டி சாய்ச்சிட்டு இவனுக்கு கொள்ளி போடும் நிலை வந்தாலும் வந்திடும் போலவே’….  என மனதுக்குள் நினைத்தவர் அதை வெளிக்காட்டாது அவன் முன் போய் நின்றார். 
“துரை ஏன் லேட்டா வீட்டுக்கு வர்றீங்க என்று தெரிஞ்சுக்கலாமா… ?”
அவன் குனிந்தபடி “லேட்டாகிடுச்சு…” என்றவன் குரல் பிசிறாது வெளிவந்தது. 
“ம்… அதைத்தான் நானும் கேட்கின்றேன். “
“அது தான் பதில் சொன்னேனே…” என்றவன் வேறு பதில் பேசாது தன் றூமுக்குள் சென்று கதவை அடித்து சாத்தியவன் அப்படியே பெட் மீது பொத்தென்று விழுந்தவன் கண்கள் அடுத்த நொடியே தூக்கத்தை தழுவிக்கொண்டது. 
“பார்த்தாயாடி உன் பையனை இவ்வளவு போதையிலும் குரலில் பிசிறுதட்டாமல் கதைக்க இவனால் மட்டும் தான் முடியும்.தறுதலை இவனை பெத்ததுக்கு நீ தாண்டி சந்தோசப்பட்டுக்கணும். இந்த லட்சணத்தில் உன் மகனுக்கு கல்யாணத்துக்கு பெண் வேற பார்க்கணுமாக்கும்…” என்று நொந்த குரலில் கூறியவர் தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டார். 
கணவன் பேசியதை கேட்ட சந்திராவின் கண்கள் கசிய செய்வதறியாமல் கைகளை பிசைந்தவாறு நின்றவர் மேலே நிமிர்ந்து பார்த்தார், அவன் றூமில் லைட் எரிவதை கண்டு மேலே ஏறிப்போனார். 
அவன் றூமை திறந்து உள்ளே சென்றவர் லைட்டை அணைக்காது தூங்கி விட்ட மகனருகில் சென்று அவனது முதுகில் நாலு மொத்து மொத்தியவர் அவன் எந்த உணர்வுமின்றி தூங்கியவனை பார்த்து, “தடிமாடு,வளர்ந்து கெட்டவன், உன்னை பிள்ளையா பெத்ததற்கு ஒரு கல்லை பெத்திருந்தாலும் அது ஒரு இடத்தில் இருந்திருக்கும். “என சத்தமாக திட்டியவர் ‘இவனை திட்டி நமக்கு தான் எனர்ஜி வேஸ்டாகிறது.’ என நினைத்தவர் றூம் லைட்டை அணைத்துவிட்டு கதவை சாத்திக்கொண்டு வெளியேறினார். 
கீழே வந்து தங்களது அறைக்கு போனவர், அங்கே கணவன் எதோ யோசனையில் இருக்கவும் அவர் அருகே போய் உட்கார்ந்து “என்ன? மாமா யோசனை…? ஏதாவது முக்கிய விடயமா… ?” என்றார். 
தலையை உலுக்கி மனைவியை பார்த்தவர்… “இன்றைக்கு மார்க்கண்டேயன் வீட்டுக்கு போயிருந்தேன். 
“நிஜமாவே? மாமா.” அண்ணன் எப்படி இருக்கிறார்.”
“எதோ? இருக்கிறான். அவன் மகளுக்காகவே வாழ்கிறான். அவனும்,அம்முவும் அடுத்த கிழமை இங்கே வருகிறார்கள்…”  என்று அங்கே நடந்த விடயங்களை கூறிமுடித்து,தன் கை,கால்களை நீட்டி நெட்டி முறித்தார். 
“என்னங்க…! அப்போ நித்திய கூட பார்தனிங்களா? அவ எப்பிடி இருக்கா? 
“இன்றைக்கு தான் அவ வளர்ந்த பிறகு ‘முதல்முதலாக’ அவளை பார்த்தேன். ராசாத்தி ரோசாப்பூ மாதிரி அவ்வளவு அழகு. அவ அப்பாவை மாதிரியே நல்ல குணவதி.” 
“அப்படியா?  அப்ப நம்ம பையனுக்கு நித்திய பேசலாமா… ?என்றார் தயக்கமாக.”
“ஏன்டி… இப்போது தானே சொன்னேன் அவ பூ மாதிரி இருப்பா எண்டு…யாரும் தெரிஞ்சு பூவை தூக்கி குரங்கு கையில கொடுப்பாங்களா? உன் பையனுக்கு அவளை கட்டி வைக்கிறதும், குரங்கு கையில பூமாலையை கொடுக்கிறதும் ஒன்று தான். உன் பையனுக்கு நாம பெண் பார்க்க தேவையில்லை அவனே ஒரு சிலுப்பாவெட்டுகாரியை கூட்டிக்கொண்டு வருவான், அப்படி வந்தால் காத்திருந்து நீயே கல்யாணத்தை பண்ணி வை. என்னை ஆளை விடு. நாளைக்கு நிறைய வேலை இருக்குது.நான் நித்திரை கொள்ள போறன். நீயும் படுத்து தூங்கும்மா.”
கணவன் மேசை விளக்கை அணைக்கவும் வேறு வழியின்றி முருகா சரணம் சொல்லி கணவனருகில் தானும் படுத்துக்கொண்டவர் மனதில் ஏராளமான எண்ணங்கள் ஓடி மறைந்தன. அதை வெளியே சொன்னால் கணவன் ஒருபக்கமும், பையன் ஒருபக்கமுமாக பாய்ந்து விடுவார்கள்.கடைசியில் வேதனை தனக்கு தான் என்பதை உணர்ந்தவர் தானும் கண்ணை மூடி உறங்க முயன்றார். 
அடுத்த நாள் காலையில் சீக்கிரமாக எழுந்த நித்யா காலைக்கடன்களை முடித்துக்கொண்டு, அவசரமாக தேநீர் தயாரித்துக்கொண்டு தோட்டத்தை நோக்கி ஓடினாள். 
தோட்டத்தில் தண்ணீர் இறைப்பதற்கு மோட்டரை போட்டு விட்டு ஏதோ யோசனையில் இருந்த தகப்பனருகில் சென்றவர், “அப்பா…” என அழைத்தவள் அவர் திரும்பாதிருக்கவும் அவர் தோளில் கை வைத்து “என்னப்பா யோசனை… ரொம்ப தூரம் போயிட்டிங்க போல…” என்றாள். 
மகளது பேச்சில் திரும்பியவர் “அப்படி ஒன்றுமில்லை அம்மு…” எனசமாளித்தார். 
“அப்படியாப்பா…நீங்கள் சொன்னது உண்மை என்று நான் நம்பிட்டேன்… எனக்கு தெரியாதா?  உங்கள் நினைப்பெல்லாம் நாம ஊருக்கு போகிறதைப்பற்றி தான் இருக்கும் என்றவள், அப்படி போனால் இவ்வளவு பெரிய தோட்டத்தை யார்?  கவனிக்கிறது அப்பா. “
“ம்… பக்கத்தில இருக்கின்ற மகேந்திரன் மாமாவிடம் சொல்லியிருக்கின்றேன்.முக்கியமான நேரத்தில் பஸ்ல வந்துட்டா போச்சு… தோட்டத்தை சுற்றி கம்பி வேலி இருக்கிறதால கால்நடைகளை பற்றி பயமில்லை…”
“அப்பா… என்னால உங்களுக்கு ரொம்ப கஸ்ரம்…  பேசாமல் நாம ஊருக்கு போகாமல் இங்கேயே இருந்திடலாமா? அங்கே நமக்கு யாரையும் தெரியாது?” என்றாள். 
“இல்ல… அம்மு தெரியாது? என்று இருப்பதை விட உன்னால் முடிந்தளவு எல்லா விடயங்களையும் தெரிந்து கொள்ள முயற்சி செய்.எனக்கு பிறகு இந்த உலகத்தில் நீ தனித்து வாழ்வதற்கான ஒரு சந்தர்ப்பம் என்று நினைத்து கொள்.”
“அப்பா என்னை தனியா விட்டுட்டு எங்கேயும் போக உங்களை நான் விடமாட்டேன்.” என அவர் தோள்களில் கண்ணீருடன் சாய்ந்தாள்.
“சரி… நித்திம்மா… அப்பா ஒரு பேச்சுக்கு சொன்னேன்டா… நீ போய் அங்கே போவதற்கான ஆயத்தங்களை செய்.” என்றார். 
“சரிப்பா… இந்த தேநீரை குடியுங்கள். காலைச்சாப்பாட்டுக்கு சீக்கிரமாக வந்துவிடுங்கள். என்றவள் தகப்பனிடம் அப்பா அங்கே இருக்கிறவங்க எல்லாரும் நல்லவங்க தானே… நமக்கு அவர்களால் எந்த பிரச்சனையும் இருக்காதில்ல… “
“எல்லோரையும் பார்த்து அப்படி சொல்ல முடியாது. நாம தான் நமக்கு என்ன? தேவை என்று தேர்ந்தெடுக்க வேண்டும். உனக்கு ஏதாவது தொந்தரவுகள் சிலரிடமிருந்து வரலாம் அதையும் நீ தான் எதிர்த்து நிற்க வேண்டும்… “
“அப்பா…நான் பார்க்க தான் சாது மாதிரி.இதுவரைக்கும் எனக்கு எந்த பிரச்சனையும் வந்ததில்லை அதனால நான் சாதுவான பொண்னா இருந்தேன். இனி ஏதாவது பிரச்சனை வந்தா நான் எப்பிடி மாறுவேன் என்று எனக்கே தெரியாது? “
சிரிப்புடன் “அப்படியா” என்றார் தந்தை. 
“அப்பா… கிண்டல் பண்ணாதீங்க… நான் வீண் சண்டைக்கு போகமாட்டேன்.ஆனால் வந்த சண்டையையும் விடமாட்டேன். “
“பார்க்கலாம் அம்மு உன் பெபோமன்ஸ் எப்படி என்று அங்கே போய் பார்க்கலாம் ஓகே. “
“ஓகே பார்க்கலாம். நான் இப்போது  வீட்டுக்கு போகின்றேன் நீங்க சீக்கிரமாக வாங்கோ.வரும்போது தெருச்சந்தையில் மீன் வாங்கிக்கொண்டு வாங்கோ.நான் போகிறேன்.”
வீட்டுக்கு வந்து காலை உணவை தயாரித்தவள்.மதிய உணவிற்கு நேரமிருக்கவே அறைக்குள் சென்று தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மற்றைய பொருட்களை அடுக்கி வைத்து அறைகளை சுத்தம் செய்து விட்டு தேவையான பொருட்கள், துணிகள் என்பவற்றை மூட்டை கட்டி ஓரமாக எடுத்து வைத்தாள். 
அவள் வேலையை முடிக்கவும், மார்க்கண்டேயனும் வர சரியாக இருந்தது. 
அம்மா

Advertisement