Advertisement

மலர் 21

அப்படியே அவன் மீது பாய்ந்தவள். உருப்படாதவனே… நான் என்ன? என்னுடைய கடைக்கா வேலை செய்யுறேன் உன்னோட கடைக்கு தானே…! கொஞ்சம் கூட ஹெல்ப் பண்ணணும் என்று தோணல. எனிரைம் கிண்டல் பண்றதே வேலையா உனக்கு.”

அவன் மீது பாய்ந்த வேகத்தில் மொத்தமாக அவன் மீது வீழ்ந்து, அவனை உண்டு இல்லை என ஆக்கிக்கொண்டிருந்தாள்.

“யேய்…விடு… விடு…விட்றி வலிக்குதுடி.”

அவள் எழுந்து உட்காரவும், அவனும் எழுந்தவன் “அரிசி மூட்டை மாதிரி இருக்கமே என்ற நினைப்பு உனக்கு கொஞ்சமாவது இருக்காடி. மத்தவங்களுக்கு வலிக்குமே என்று நினைக்கிறியா.”

“டேய் நான் அரிசிமூட்டையா..?”

“இல்ல அது உன்னை விட ஐந்து கிலோ குறையத்தான் இருக்கும். நீ அதுக்கும் மேலடி.” என ஒற்றை வார்த்தையில் அவளை அடித்து நொருக்கி காலி பண்ணினான்.

‘இவனே என்னை கிண்டல் பண்றானே…

வந்த நாளில் இருந்து என்னோட மூட் ஸ்பொயில் பண்ணிட்டு இருக்கானே…’ என மனதுக்குள் நினைத்தவள் எழ முயற்சிக்க அதற்கு முன்னதாக அவன் எழுந்து, அவள் எழுப்புவதற்காக தனது கையை நீட்டினான்.

அவள் அதனை தட்டி விட்டு தானே எழுந்து அமர்ந்திருந்த இடத்தில் மறுபடியும் அமர்ந்து கம்பியூட்டரில் வேலைகளை பார்க்க ஆரம்பித்தவள் அவனை கவனிக்கவில்லை.

‘சரியான திமிர்பிடிச்சவ…’ என்றவாறு தானும் தன் அறைக்குள் சென்று மறைந்தான்.

‘இருடா மவனே, உனக்கு வைக்கிறன்டா ஆப்பு…’ என மனதுக்குள்ளே பல திட்டங்களை போட்டவள். மூன்று  மணி நேரம் கழித்து வேலையை முடித்தவள்

எழுந்து மாமனாரிடம் சென்றாள். அவள் கீழே போன போது அவன் வெளியே போயிருந்தான்.

“மாமா… இன்னும் கிளம்பல்லயா நீங்க.”

“இல்ல நித்தி. மதியம் லஞ்சுக்கு வரச்சொல்லி உங்க அத்தை ஆர்ப்பாட்டம் பண்ணினா. வந்தேன் சாப்பிட்டாச்சு. சாப்பாடு நல்லாயிருந்துச்சு… அதனால் கொஞ்சம் கூடச் சாப்பிட்டேன். அதான் கொஞ்சநேரம் ஓய்வு எடுக்கலாம் என்று இருக்கின்றேன்.

நீ என்ன? விசயம் சொல்லு மா.”  

“மாமா மேல இருக்கிற உங்க மகனோட ரூம் எனக்கு வேணும். அது கொஞ்சம் வசதியா இருக்கிற மாதிரி இருக்கு மாமா. அந்த ரூமால அப்படியே என் வீட்டுக்கு போற மாதிரி வசதி இருக்கிற மாதிரி கட்டியிருக்கீங்க. நான் அப்பப்போ அப்பாவையும் போய் பாத்துக்கொண்டு வருவன். கொஞ்ச நாளைக்கு அதை பாவிக்கட்டுமா மாமா.”

“அதுக்கென்ன குட்டிம்மா. ஊர் சுத்துறவனுக்கெல்லாம் எதுக்கு ரூம். படுக்கைக்கு அவன் கீழ் ரூமை பாவிக்கட்டும். நீ ரூமை மாத்திக்கோடா.”

“ஓகே… மாமா… நன்றி. இதனால் வரும் பிரச்சனையெல்லாம் உங்க பொறுப்பு.”

“அடிப்பாவி. என்னை கோத்து விடுறியா.”

“ஆமாம். அவர் உங்களை என்றால் ஒண்டும் சொல்ல மாட்டார்.”

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த சந்திரா. அவர்களருகில் வரவும் விசயத்தை அவருக்கும் தெரியப்படுத்தினாள்.

“என்ன? நித்திம்மா இது. நீ எதுக்கு அவன் கூட வலிய சண்டைக்கு போகிறாய். அவனே ஆட்களோடு சுள்ளென்று காய்வான். பிறகு உன்கூட ஏதும் பிரச்சனை பண்ணப்போறான்.”

“ஏன்? உன் மகனை சொன்னால் உனக்கு வலிக்குதா? உன் மகன் எப்ப ரூமில இருக்கிறான், எப்போது காணாமல் போறான் என்றே உனக்கு தெரியாது. இந்த லட்சணத்தில் அவனுக்கு பரிஞ்சுகிட்டு நீ வேற. போ போய் உருப்படியா வேற வேலை ஏதும் இருந்தா பார்.”

“ஆமாம். அவன் எனக்கு மட்டுமில்ல உங்களுக்கும் தான் பையன். அதை மறந்துடாதீங்க.”

“இல்லடி அவனை ஹாஸ்பிட்டல்ல மாறி எடுத்துட்டு வந்துட்டமோ என்று எனக்கு ஒரு டவுட் இருக்கத்தான் செய்யுது டி.”

“என்ன பேச்சு இது. அப்பாக்கும், மகனுக்கும் நடுவில அல்லாடியே என் மொத்த வாழ்க்கையும் போயிடும் போலயே.”

“சந்திரா… நான் முன்னமே சொன்னது தான். அவன் எப்பவாவது என கஷ்டத்தில் வந்து உதவி செய்யட்டுமா அப்பா என்று கேட்டு பழக்கம் இருக்கா? அவனுக்கு. அப்பா உழைக்கிறார். அவன் செலவு பண்றான். எத்தினை தொழில், அப்பா வயசான காலத்தில் எப்படி? எல்லாத்தையும் கவனிக்கிறார் என்று நினைக்கிற பிள்ளையாக இருந்தால், அவன் எப்போதோ என்னோடு தொழில் எல்லாத்தையும் கவனிக்க கிளம்பி வந்திருப்பான்.”

“எப்ப பார்த்தாலும் அவனை கரிச்சு கொட்டினால் அவனும் என்ன தான் செய்யிறது.”

“ஐயோ…! அத்தை, மாமா. இரண்டு பேரும் சற்று அமைதியாக இருங்கள். எனக்கு உங்க மகன் ரூமும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம். ஒத்தை ரூமுக்கு இத்தனை வாக்குவாதமும் வேண்டாம். உங்களிருவருக்கும் என்னால் பிரச்சனையும் வேண்டாம். ஆளை விடுங்கோ சாமி.”

என்றவள் நான் இன்று என்னோட வீட்டுக்கு போகப்போறன் மாமா. அப்பா தனியா இருக்காங்க. நானும் இல்லை என்றால் ரொம்ப தனியா ஃபீல் பண்ணுவார். என்றவள் பேக்கரிக்காக தயார் செய்த பெயர்ப்பலகை டிசைன். மற்றும் விலை விபரங்கள். கொள்வனவு செய்ய தேவையான பொருட்களின் விபரம். கடைக்கு புதிதாக செய்வதற்கான காரம், சுவீட்ஸ் வகைகள், மற்றும் எல்லா வகையான கேக் வகைகள் மற்றும் அந்த ஆண்டுக்கான அந்த மாதத்திற்குரிய இலாப,நஸ்ரம் மற்றும் கண்ணாடி தடுப்புகளான பெரிய ஷோகேஸ் செய்ய வேண்டும் என்றாள்.

மாமா கடைக்கு வருபவர்கள் கேக், பன், பட்டர், சுவீட்ஸ், என்பன கண்ணாடி தட்டுக்களில் அடுக்கி, ஈ, எறும்பு என்பன மொய்க்காத மாதிரி அடுக்கி வைத்தால் மக்களும் என்ன பொருள் வாங்க வேண்டும் என பார்த்து சொல்ல முடியும். சுத்தமானதாகவும் இருக்கும். கடைக்கு வியாபாரம் அதிகரிப்பதோடு, நன்மதிப்பும் இருக்கும். மேலே உள்ள கட்டிடத்தில் உணவு  தயாரிப்பதற்கு நவீன வசதி முறைகள் செய்ய வேண்டும். கேக் வகை தயாரிக்க ஒரு பிரிவு இடமும் அதற்கான  இன்னும் சில உபகரணங்களும் வாங்க வேண்டும். அதே போல சுவீட் வகைக்கும் செய்ய வேண்டும்.

“ஏன்? நித்தி காரம், சுவீட் எண்டு சொல்லுறியே அது சரிப்பட்டு வருமா?”

கட்டாயம் மாமா. றோல்ஸ், பேஸ்ரி, பருப்பவடை, உழுந்து வடை, சமோசா,

பால்கோவா, ஐசிங்கேக், பூந்தி, தொதல் என வச்சால், பேக்கரிக்கு பன்,பட்டர்,கேக் வாங்க வர்ற மக்கள்ட கண்ணுக்கு அதுவும் தெரியும். அத்தோடு ஒரு நாளைக்கு ஆயிரம் பேராவது வந்து போன இடம் என்றதால் இதெல்லாம் உடனே தீர்ந்து போகிற மாதிரி இருக்கும். விலையும் மக்கள் வாங்ககூடிய அளவில் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். 

“ஆ…இன்னொன்று மாமா. சுவையும், தரமும் விலையை விட நன்றாக இருக்க வேண்டும்.”

“சரிடா. இதெல்லாம் செய்வதற்கு ஆட்கள் போதாது போல.”

“ஆமாம் மாமா. சுவீட்,காரம் செய்ய நல்ல திறமையானவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். கேக் வகைகளிலே கூட எண்ணிலடங்காத வகைகள் இருக்கே..! அதுக்கு கூட அந்த கோர்ஸ் முடித்தவர்கள் இருக்கின்றார்கள். அவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு உதவிக்கு ஆட்களை கொடுத்தால் சூப்பராக வெடிங் கேக்கில் இருந்து பேர்த்டே கேக் வரையும் சூப்பராக செய்து கொடுக்கலாம். அதற்கு முதலில் ஆட்களை எடுக்க விளம்பரம் கொடுக்க வேண்டும். அதே போல சுவீட், காரம் செய்பவர்கள் இங்கே  இருந்தாலும், ஊரில் எனக்கு தெரிந்தவர்களும் இருக்கின்றார்கள் அவர்களை தொடர்பு கொண்டு கேட்கட்டுமா? மாமா.”

“சீக்கிரமாக கேளும்மா.”

“பெயின்டிங் வேலை செய்யணும். இது எல்லாம் செய்து முடிக்க இன்னும் ஒன்றிரண்டு மாதங்களேனும் வேண்டும். முதலில் பேக்கரியின் மீது இருக்கும் இரண்டு மாடிகளுக்கும் பெயின்டிங் வேலை தொடங்கலாமா.?”

“இன்று வெள்ளிக்கிழமை. சனி,ஞாயிறு கழித்து திங்கள் தொடங்கலாம். நித்யா”

“மாமா. நான் பெயின்ட் கலர் செலக்ட் பண்ணிவிட்டேன். அது ஓகேயா என்று சரிபாருங்கள் என ஃபோனில் இருந்த கலரை காட்டியவள். அத்தை நீங்களும் பாருங்கள்.” என அவருக்கும் காட்டினாள்.

“நல்லாயிருக்கு நித்தி வேற கலர் மாத்த வேண்டாம் இதையே அடிக்கச் சொல்லுங்கள்.” என சந்திரா கூற அவரின் விருப்பமே தன் விருப்பம் என சுப்பிரமணியனும் ஆமோதித்தார்.

“சரி மாமா. வேலை ஆட்களுக்கு பெயின்ட் அடிப்பது தொடர்பாக தெரிவித்து விடுங்கள். கென்ராக்ட் ஆக குடுத்தால் இன்னும் நல்லது. மேல் தளம் இரண்டையும் முதலில் அடித்தபிறகு கீழே இருப்பதை கடைசியாக அடிக்கலாம்.”

“சரி நித்யா. கென்ராக்ட்ரருக்கே கொடுத்து விடலாம். இப்போதே ஃபோன் பண்ணி சொல்கின்றேன் ஓகே.” என்றவர் உரிய ஆட்களிடம் தகவல் தெரிவித்தவர். திங்கட்கிழமை வேலையை தொடங்குமாறும் கூறியவர் ஃபோனை கட் பண்ணினார்.

“சரி மாமா அடுத்த கிழமை நான் உங்கள் சுவீட் கடைக்கு போக வேண்டும். மனேஜர் அங்கிளிடம் சொல்லி விடுங்கள்.இப்போது நான் என் வீட்டுக்கு போகப்போகின்றேன்.”

அருகில் இருந்த சந்திரா அப்போது தான் நினைவு வந்தவனாக, ” பூக்குட்டி நீ வீட்டுக்கு போக முடியாது. அண்ணன் ஊருக்கு போயிருக்கிறார்.”

“ஏனாம்? அத்தை. என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லையே…!”

“ம்…இப்போது அவரது முருங்கை தோட்டத்தில் காய் பறிக்கும் சீசனாம். அதனால் மரங்களுக்கு தண்ணி காட்டி விட்டு, காய்களை பறித்து மொத்தமாக சந்தைக்கு கேட்டார்களாம், கொடுத்து விட்டு வர இரண்டு நாளேனும் ஆகுமாம்.

உன்னை ஃபோனில் கதைக்கச்சொன்னார்.”

“சரி அத்தை. நான் அப்பாக்கு ஃபோன் பண்ண போகின்றேன்.”

“இல்லை. முதலில் நீ மதியம் சாப்பிடவில்லை. வா சாப்பிட்டு விட்டு கதை.”

“சரி… சந்திரா நானும் ஆபிஸ் கிளம்பப்போகின்றேன். நீங்கள் இருவரும் சாப்பிடுங்கள்.” என்றவர் ஆபிசுக்கு கிளம்பினார்.

நீங்க போய்விட்டு சீக்கிரமாக வாருங்கள். என்று அவரை அனுப்பி விட்டு, பெண்களிருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

 

 

 

Advertisement