Advertisement

கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாய் அவர்கள் பிரிந்திருந்தனர். ஆதியின் கரம் விலோசனாவை பிடித்திருந்ததால் இருவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் தானிருந்தனர்.
கயிறு வழங்குபவரிடம் இவன் கையை நீட்ட “லேடீஸ்க்கு தான் சார் தருவோம்”
“தெரியுங்க என் பொண்டாட்டிக்கு தான் கேட்கறேன்” என்றவன் அருகிருந்தவளை சுட்டிக்காட்ட விலோசனாவிற்கு கூச்சத்தில் நெளிந்தாள்.
பின் அவளே கையை நீட்ட அவள் கரத்தை தள்ளி தானே அதை பெற்றுக்கொண்ட ஆதி அதை தன் கையால் அவளிடம் கொடுத்தான். அந்த நொடி அவளுக்குள் லேசாய் ஒரு சிலிர்ப்பு ஓடியது.
“கூட்டத்துக்குள்ள நிக்க வேண்டாம், வா போகலாம்” என்றவன் அவளின் கரத்தை விடாமல் அங்கிருந்து நகர்ந்திருந்தான்.
அதுவரை ஏதோவொரு மயக்கத்திலேயே இருந்த விலோசனா அப்போது தான் சுற்றுப்புறம் உணர்ந்தாள். “நயன், நயன் எங்கே??” என்றாள்.
“எனக்கு தெரியலை, நம்ம கூட தானே வந்தா…” என்றான் அவன்.
சுற்றுமுற்றும் பார்க்க கூட்டத்தில் அவளை காணவில்லை. இதென்னடா வம்பா போச்சே என்ற யோசனையோடே அவன் அருகிருந்தவளை பார்க்க அவளோ கூட்டத்திற்குள் செல்ல முயற்சி செய்தாள்.
“ப்ளீஸ் உள்ளே போகாதா, ரொம்ப கூட்டமா இருக்கு. நீ அவளுக்கு போன் பண்ணு, நாம் இங்க இருக்கோம்ன்னு சொல்லு” என்றான் அவன்.
“அவ அவ போனு” என்றவள் தன் ஹான்ட் பாக்கை திறந்து பார்க்க அது அதற்குள் தான் இருந்தது.
“அவ போன் என்கிட்ட தான் இருக்கு, கோவிலுக்கு போது சைலென்ட்ல போட்டு பேக்ல வைச்சா”
“சரி நீ இங்க இரு நான் போய் பார்க்கறேன்” என்று நகரப்போனவனின் கரத்தை பற்றினாள் இவள்.
“நானும் வர்றேன்”
“வேணாம் சொன்னேன்ல கூட்டமா இருக்குன்னு” என்றவன் “இரு” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவன் கைபேசியை எடுத்து கதிருக்கு அழைத்தான்.
“சொல்லுடா”
“எங்கேடா இருக்க??”
“இங்க பக்கத்துல தான்டா இருக்கேன், வண்டியை தெரிஞ்சவங்க வீட்டில போட்டு வந்தேன், அதை எடுக்க தான் வந்தேன். சொல்லுடா என்ன விஷயம்??” என்றான் கதிர்.
“கொஞ்சம் நான் வண்டி நிறுத்தி இருக்க இடத்துக்கு வா” என்றுவிட்டு வைக்க சில நொடிகளில் கதிர் அங்கு வந்திருந்தான்.
“என்ன ஆதி??”
“இவளோட சிஸ்டர் இங்க கூட்டத்துல எங்கயோ மாட்டிடாங்கன்னு நினைக்கிறேன். எங்க கூட தான் உள்ள வந்தாங்க, ஆனா இப்போ காணோம். நீ கொஞ்சம் பார்த்து கூட்டிட்டு வர்றியா??” என்று சொல்ல செங்கதிர் தயங்கி நின்றான்.
விலோசனாவை பார்க்க அவளுக்கு அதில் பிடித்தமில்லை என்று நன்றாகவே தெரிந்தது. “இல்லைடா நான் எப்படி??” என்று அவன் தயங்க “நானே போய்டுவேன்டா இவளும் வர்றேன்னு சொல்றா??”
“இப்போ தான் கூட்டத்துக்குள்ள போயிட்டு வந்தோம், மறுபடியும் போனா இவளை நான் எங்கயும் மிஸ் பண்ணிடுவனோன்னு இருக்கு. அதுக்கு தான் சொல்றேன்” என்று இவன் விளக்க விலோசனாவும் ‘ஓ!! இதற்கு தான் தயங்கினாரா’ என்று பார்த்தாள் அவனை.
ஆனாலும் ஒரு அந்நிய ஆடவனை அனுப்பி தன் தங்கையை தேடச் சொல்கிறானே என்றும் அவளுக்கு தோன்றியது.
“இல்லை ஆதி நீ போய் பாரு. நான் இவங்களுக்கு துணையா இங்க இருக்கேன். அம்மாக்கு போன் பண்ணி வரச்சொல்லுவோம்” என்று சொல்ல ஆதித்யன் மற்றவனை முறைத்தான்.
“ஏன்டா ஒரு ஹெல்ப் கேட்டா செய்ய மாட்டியா, என்னென்னவோ சொல்லிட்டு இருக்க நீ… நான் போக எனக்கு தெரியாதா உன்னை எதுக்கு கூப்பிடுறேன். புரிஞ்சுக்க மாட்டியா நீ” என்று சட்டென்று கோபத்தை காட்டினான் அவன்.
‘இவர் என்ன எல்லார் மேலயும் கோவத்தை காட்டுறாரு. பாவம் இவருக்கு பிரண்டா இருக்க பாவத்துக்கு அவருக்கும் திட்டு விழுகுது’ என்று கதிரை பரிதாபமாக பார்த்தாள்.
“அவங்க எதுவும் நினைச்சுக்க போறாங்கடா??” என்று தன் மனதில் உள்ளதை சொல்லியே விட்டான் கதிர்.
“என்ன தப்பா?? எதுக்கு??” என்று புரியாது விழித்த ஆதி “ஏன் நீ இவனை தப்பா நினைக்கணும். நான் தான் இவன், இவன் தான் நான். ரெண்டு பேரும் வேற இல்லை”
“என்ன எப்படி நம்புறியோ அதை மாதிரியே இவனையும் நம்பலாம். அவன் ரொம்ப நல்லவன் என்னைவிட” என்று அழுத்தி சொன்னான் ஆதி.
‘நீங்க தான் இவருன்னா கண்டிப்பா நம்பக்கூடாது. ஆனா அவரை பார்த்தா அப்படி தெரியலை. ஒண்ணு மட்டும் சரி உங்க அளவுக்கு அவரு இல்லைன்னு தான் தோணுது. இவ்வளவு நேரம் அமைதியா இருக்காரே. நீங்க இவ்வளவு பேசியும் அவர் ஒண்ணுமே சொல்லலையே’ என்று எண்ணிய விலோசனாவிற்கு கதிரின் மேல் நல்மதிப்பு தோன்றியது.
“நான் எதுவும் சொல்லலையே” என்றாள் ஆதிக்கு பதிலாய்.
“அதான் சொல்லிட்டால்ல போடா போய் பாரு” என்றுவிட்டு “நான் கார்ல இருக்கேன், உனக்கு தான் நான் எங்க நிறுத்தி இருக்கேன்னு தெரியும்ல” என்று சொல்ல செங்கதிர் தலையாட்டினான்.
கூட்டத்திற்குள் அவன் நுழைய நகர கூட முடியவில்லை அவனால். எதுக்குடா இதுக்குள்ள வந்தோம் என்று அவன் எண்ணுமளவுக்கு கூட்டம் நெட்டித் தள்ளியது.
எப்படியோ முண்டியடித்து அவன் செல்லப் போக அங்கே முன்னாடி கையை நீட்டி நின்றிருந்த நயனா அவன் விழிகளில் விழுந்தாள்.
அவளை நோக்கி அவன் செல்ல அவள் இன்னமும் அங்கிருந்து நகரவில்லை. நீட்டிய கை நீட்டியவாறே நின்றிருந்தாள்.
எப்படியோ அவள் அருகே வந்துவிட்டவன் “இங்க என்ன பண்றே??” என்றுவிட்டு எட்டி அவள் கரம் பற்றினான். திரும்பி பார்த்தவள் இவனை கண்டதும் மலர “இல்லை அதை வாங்க வந்தேன்” என்று சுட்டிக்காட்டினாள்.
“அதெல்லாம் வேண்டாம் வா, உன்னை அங்க தேடுறாங்க” என்று சொல்லி அவளை தன் புறம் இழுத்தான்.
“இல்லை நான் வாங்கிட்டு தான் வருவேன்” என்றவள் அங்கிருந்து நகரவில்லை.
“லூசா நீ, அங்க உங்கக்காவும் மாமாவும் உன்னை காணோம்ன்னு பதறிப் போயிருக்காங்க, நீ கூலா பேசிட்டு இருக்க” என்று சற்று கோபமாகவே சொன்னான் அவன்.
“நான் என்ன சின்ன குழந்தையா தொலைஞ்சு போக” என்றவள் அவன் கையை உதறினாள்.
அதற்குள் அருகிருந்தோர் “உங்க சண்டை எல்லாம் வீட்டில போய் வைச்சுக்கோங்க. இப்போ எங்களுக்கு வழி விடுங்க” என்று சொல்ல கதிர் மீண்டும் அவள் கையை பிடித்தான்.
“என்ன பண்றே நீ வா பேசாம” என்றான் மீண்டும்.
அவள் அவனை முறைத்து அடமாய் அங்கே நின்றிருந்தாள். பின்னே அவள் வேண்டுதலாயிற்றே அதை வாங்காமல் சென்றால் தன் மனதில் நினைத்தது நடக்காமல் போய்விடுமோ என்ற கவலை அவளுக்கு.
“இப்போ என்ன உனக்கு அதை வாங்கணும் அதானே” என்றவன் “அண்ணே இவங்க ரொம்ப நேரமா நிக்காங்க அவங்களுக்கு கொடுங்கண்ணே” என்றவன் கையை நீட்ட அவன் கையில் வந்து விழுந்தது ஒரு கயிறு.
ஆனால் இன்னமும் அவள் கையில் எதுவும் வரவில்லை. “இங்க பாருங்க என் கையில இருக்கு. வாங்க போகலாம்” என்று சொல்லி அவளை இழுக்காத குறையாக இழுத்து வந்தான்.
சற்று தள்ளி வந்த பின்னே கூட்டம் குறைந்திருக்க அதை அவள் கையில் கொடுக்க அவனையே பார்த்திருந்தாள் அவள்.
‘இதென்ன பார்வை’ என்று தான் தோன்றியது அவனுக்கு.
“தேங்க்ஸ்” என்றாள் மனமார.
“எனக்கு எதுக்கு தேங்க்ஸ்??”
“நான் நினைச்சது நடக்கும்ன்னு என் மனசு சொல்லுது” என்றாள் அவள்.
‘அடி ஆத்தி இவ என்ன நினைச்சா’ என்றவனின் முகம் யோசனைக்குள்ளானது.
தன் யோசனை விடுத்து ஆதித்யனுக்கு அழைத்தான். “ஹலோ ஆதி அவங்களை பார்த்திட்டேன்டா, என் கூட தான் இருக்காங்க. ஓகே கூட்டிட்டு வந்திடறேன்” என்றவன் “போகலாம்” என்று சொல்ல அவளோ தன் கையை நீட்டினாள்.
‘என்ன’ என்பது போல் பார்த்தான் கதிர். “இவ்வளவு நேரம் என் கையை பிடிச்சுட்டு வந்தீங்க, இப்ப மட்டும் என்னவாம்”
“அது… அது நீ வரமாட்டேன்னு சொன்ன அதனால தான்”
“ஓ!! அப்போ நான் வரமாட்டேன்னு சொன்னா தான் என் கையை பிடிப்பீங்களா” என்றவள் “சரி  நான் வரமாட்டேன்” என்று சொல்ல அவளை கடுமையாய் முறைத்தான் கதிர்.
“என்ன விளையாடுறீங்களா??”
“இல்லை… எனக்கு உங்ககிட்ட பேசணும்”
“எனக்கு உன்கிட்ட பேச எதுவுமில்லை, கிளம்பலாம்” என்றுவிட்டு அவன் முன்னே நடக்க இவள் அவன் பின்னே நடந்தாள்.
அன்றைய நாள் அவளின் வேண்டுதல் அந்த கயிறை வாங்கி விடுவதாகத் தான் இருந்தது. விலோசனா வந்ததுமே அது அவளுக்கு கிடைத்திருக்க நயனாவிற்கு கதிர் வந்த பின்னே அது கிடைத்தது.
அதுவே சொன்னது பெரும் போராட்டத்திற்கு பின்னே தான் அவள் எண்ணம் ஈடேறும் என்று…

Advertisement