Advertisement

8
“உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??”
அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில்.
“விடமாட்டேன்”
“அப்புறம் எதுக்கு கேட்கறீங்க??”
“என்னை வேணாம்ன்னு சொல்றதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை நீ தவறவிட்டுட்டே, இப்போ வந்து பிடிக்கலைன்னு சொன்னா நான் உன்னை விட்டுடுவேனா”
அவள் பதில் சொல்லவில்லை அமைதியாய் நின்றாள். “சோ உனக்கு என்னை பிடிச்சிருக்கு. அதை ஒத்துக்க உன்னை எது தடுக்குது??”
“எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை, சும்மா கற்பனை பண்ணி பேசவேணாம்”
பெருமூச்சு விட்டவன் “ஓகே இந்த பேச்சு இப்போ வேணாம். உனக்கு நிஜமாவே என்கிட்ட என்ன பிடிக்கலைன்னு சொல்லு. நான் மாத்திக்கறேன், என்னையே பிடிக்கலைன்னு அன்னைக்கு மாதிரி சொல்லாத, அதை நான் நம்ப மாட்டேன்”
அவன் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசுவான் என்று அவள் நினைத்திருக்கவில்லை. ஆனாலும் மனதில் அன்று அவன் அவளை அப்படி பேசி சென்றிருந்த வடு இன்னும் ஆறாதிருந்தது அவள் நெஞ்சில்.
அதனால் அவளால் அவனிடம் இயல்பாய் உணர முடியவில்லை. அவனுக்கு பதில் சொல்லவும் அவளுக்கு தெரியவில்லை.
அவனிடத்தில் அவள் என்ன எதிர்பார்க்கிறாள் என்று அவளே உணராத போது அவள் என்னவென்று அவனிடத்தில் சொல்லுவாள், பேசாமல் அமைதியாய் நின்றாள்.
“சனா”
“அப்படி கூப்பிடாதீங்க??”
“ஏன்??”
“யாரையோ கூப்பிடுற மாதிரி இருக்கு??”
“விலோசனா உன்னோட பேரு தானே”
“அதுக்கு??”
“எல்லாரும் உன்னை விலோன்னு கூப்பிடுறாங்க சோ நான் சனான்னு கூப்பிடுறேன்”
‘இதுக்கொண்ணும் குறைச்சலில்லை’ என்று நொடித்துக் கொண்டாள் அவனை மனதினில்.
“நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை”
“என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியலை”
“இதென்ன பதில்”
“நான் சொன்னது பதிலே இல்லை”
“அது தான் எனக்கு தெரியுதே. நீ ஏதோ குழப்பத்திலே இருக்கேன்னு நினைக்கிறேன். நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. ஆனா உன்கிட்ட ஒண்ணு சொல்லணும்”
‘என்ன’ என்பது போல் பார்த்தாள். “நீ வேலைக்கு போகணும்ன்னு விருப்பட்டா தொடர்ந்து போகலாம் நான் அதுக்கு குறுக்க நிக்க மாட்டேன்”
“இல்லை நான் போகலை”
“ஏன்??”
“எனக்கு தோணும் போது போய்க்கறேன்”
“என்னாச்சு உனக்கு??”

“இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஆளாளுக்கு வேலைக்குன்னு கிளம்பிருவோம். நீ மட்டும் வீட்டில தனியா இருந்து என்ன செய்வே?? உனக்கு போரடிக்காதா??”
“அடிக்காது”
“எனக்கு புரியலை”
“நீங்க எல்லாம் வீட்டுக்கு வரும் போது உங்களுக்காக நான் காத்திட்டு இருப்பேன்ல”
அவனுக்கு இன்னமும் அவள் என்ன சொல்ல வருகிறாள் என்றே புரியவில்லை. அதே எண்ணத்துடன் தான் அவளைப் பார்த்தான்.
“வேலைக்கு போயிட்டு வர்றவங்க வீட்டுக்கு வரும் போது அவங்களை இன்முகத்துடோ வரவேற்க வீட்டில ஒருத்தர் இருக்கும் போது எவ்வளவு சந்தோசம் கிடைக்கும் தெரியுமா”
“முக்கியமா வேலைக்கு போற பெண்கள். குடும்ப சூழ்நிலை காரணமா வேலைக்கு போனாலும், என்ன தான் விரும்பி அவங்களே வேலைக்கு போனாலும் ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் ஒரு சலிப்பு வரும்”
“வீட்டுக்கு போய் இன்னைக்கு என்ன சமைக்க அதை செய்யவா இதை செய்யவான்னு எப்பவும் ஒரு யோசனை உள்ளே ஓடிட்டே இருக்கும். துணியை மடிக்கணும், மெஷின் போடணும், பாத்திரம் விளக்கணும் இப்படி ஏகப்பட்ட எண்ணங்கள் அவங்களை சுத்திட்டே இருக்கும்”
“ஒரு நாள் உடம்புக்கு முடியாத போது யாராச்சும் நமக்கு செஞ்சு தரமாட்டாங்களா, நம்மளே தான் செஞ்சுக்கணுமான்னு ஒரு சலிப்பு வரும்”
“சோ??”
“நான் வீட்டில இருக்கத்தான் விருப்பப்படுறேன். உங்க எல்லார்க்காகவும் என்னால முடிஞ்சதை செஞ்சுக்க கொடுக்க விரும்பறேன். நாளைக்கு குழந்தை குட்டின்னு வந்திட்டா அவங்களை கவனிக்கறதுல என் பொழுது இன்னும் வேகமா ஓடிடும்” என்று அவள் முடிக்க ஆதித்யனின் முகத்தில் ஒரு மின்னல் ஓடியது.
முகம் பளீரென்று தெரிய ‘என்ன சொல்லிட்டோம்ன்னு இப்படி பல்ப் போட்ட மாதிரி பார்க்கறாரு’ என்று தான் பார்த்தாள் விலோசனா.
“எல்லாம் சரி, உங்க வீட்டில இருக்கும் போது இதெல்லாம் உனக்கு தோணலையா”
“நான் வேலைக்கு போயிட்டு இருந்தது பத்தி கேட்கறீங்கன்னு நினைக்கிறேன். எனக்கு கொஞ்ச நாளைக்கு வேலைக்கு போகணும்ன்னு தோணிச்சு, அதான் போனேன்”
“அதுக்குள்ளே தான் கல்யாணத்துக்கு பார்க்க ஆரம்பிச்சாங்க அப்பா. எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் நீ வேலையை விடத்தானே போறே அது வரைக்கும் போன்னு நயன் அப்பா ரெண்டு பேரும் சொன்னாங்க, அதான்” என்றாள் விளக்கமாய்.
“தேங்க்ஸ்”
“எதுக்கு??”
“இன்னைக்கு நீ ரொம்ப நீளமா பேசிட்டே அதுக்கு தான்”
“ஹ்ம்ம்”
“நான் நாளையில இருந்து ஆஸ்பிட்டல் போறேன்”
“ஹ்ம்ம் சொன்னீங்களே அத்தைக்கிட்ட” என்றாள்.
“உன்கிட்ட சொல்லிட்டு இருக்கேன்”

“சரி”
ஆதித்யனுக்கு கோபமாய் வந்தது. கூட வார்த்தை சேர்த்து பேசுறாளா நானா பேச வேண்டி இருக்கு என்று தான் நினைத்தான்.
அவன் முகம் அந்த கோபத்தை காட்டியது போலும். “எதுக்கு கோபம்??”
“கோபப்பட்டா மட்டும் நீ பதில் பேசிட போறியா என்ன” என்றான் சிடுசிடுப்பாய்.
அவளோ இதற்கு மேல் இவனிடம் பேசி எதுவும் ஆகப்போவதில்லை என்ற ரீதியில் அங்கிருந்து நகரப்போக “நில்லு” என்றவன் அவள் கைப்பிடித்தான்.
“ஹ்ம்ம் சொல்லுங்க”
“பக்கத்துல வா”
“எனக்கு இங்கிருந்தே கேட்கும் சொல்லுங்க” என்று சொல்ல “போடி ஓவரா பண்ணிட்டு இருக்க, ஒருத்தன் கெஞ்சினா நீ மிஞ்சுவியா” என்று கத்தியவனின் கையில் அன்று அகப்பட்டது பிடித்திருந்த அவள் கரத்தில் அணிந்திருந்த கண்ணாடி வளவிகள் தான்.
அவன் பிடியில் அது நொறுங்கியது மட்டுமின்றி அவள் கையையும் பதம் பார்த்திருக்க அதை கவனியாத ஆதித்யன் வேகமாய் வெளியேறி சென்றுவிட்டான் நில்லாது.
அவன் சென்ற பின்னே அப்படியே அமர்ந்து கண்ணீர் உகுத்தாள் அவள். 
——————–
“வாடா புது மாப்பிள்ளை?? என்ன கடைப்பக்கம் வந்திருக்கே, எதுவும் தைக்கணுமா??” என்றான் செங்கதிர்.
“இல்லை” என்றவனின் சோர்ந்த குரல் நண்பனின் மீது கவனத்தை திருப்பியது கதிருக்கு.
“என்னாச்சுடா??”

“வெளிய போகலாமா??” என்று சொன்னவனை வியப்புடன் பார்த்தான்.
ஆதியின் குரலில் இதுவரை இல்லாத ஒரு பாவம் அது. சட்டென்று கோப முகம் காட்டுபவன் தான், ஆனால் எந்த வேகத்தில் அந்த கோபம் வந்ததோ அதே வேகத்தில் அது தணிந்தும் போகும் அவனிடத்தில்.
யாரும் அவனை தனியே சென்று சமாதானம் எல்லாம் செய்யத் தேவையே இல்லை. அவனே இறங்கி வந்துவிடுவான். அப்படிப்பட்டவன் இப்படியொரு சோர்வான மனப்பாவத்துடன் இருப்பது கதிருக்கு கவலையைக் கொடுத்தது.
“எங்கே போகணும்??”
“மனசுக்கு நிம்மதி வேணும், கோவிலுக்கு போகலாமா??”
“என்ன??” என்றான் கதிர்.
“ஆதி” என்றவன் தாங்கள் இருக்குமிடம் உணர்ந்து “அண்ணே” என்று குரல் கொடுத்தான்.
“சொல்லுப்பா கதிர்” என்று வந்து நின்றார் நாச்சியப்பன்.
“கடையை கொஞ்சம் பார்த்துக்கோங்க நான் கொஞ்ச நேரத்துல வந்திடறேன்” என்றவன் நண்பனின் தோளில் கை வைக்க அவனும் எழுந்து நின்றான்.
“கார் இங்கவே இருக்கட்டும், நாம பைக்ல போகலாம்” என்ற செங்கதிர் தன் உள்ளே நிறுத்தி வைத்திருந்த தன் பைக்கை எடுத்து வந்தான்.
அவன் ஏறிக்கொண்டு “உட்காரு” என்று சொல்ல ஆதி அவன் பின்னில் அமர்ந்தான்.
வழியில் எந்த பேச்சும் கொடுக்கவில்லை அவனிடம். அடுத்து சென்று நிறுத்தியது ஒரு ஹோட்டலில் தான். இருவருக்கும் குடிக்க ஜூஸ் கொண்டுவரச் சொல்லிவிட்டு நண்பனை பார்த்தான்.
“ஆதி என்னாச்சு உனக்கு??”
“எதுவும் பிடிக்கலை கதிர்”
“எதுக்கு இப்படி விரக்தியா பேசறே??”
“அப்படித்தானே நடக்குது”
“என்னன்னு நீ சொல்லாம எனக்கு புரிய போறதில்லை”
“ஐ லவ் ஹர்டா”
“நான் தான் உன் பொண்டாட்டியா??” என்றான் செங்கதிர்.
எதுக்கு இப்படி சொல்றான் என்று நிமிர்ந்து அவனைப் பார்த்தான் ஆதித்யன்.
“என்கிட்ட வந்து ஐ லவ் ஹர்ன்னு சொல்றே, அவங்ககிட்ட சொன்னியா இல்லையா”
“எங்கடா சொல்ல விடுறா என்னை பேசவே விட மாட்டேங்குறா… இல்லையா பேசி பேசி கோபத்தை வரவைக்குறா, சாரி சாரி பேசி பேசின்னு சொல்றது தப்பு. பேசாமலே கோபத்தை வரவைக்குறா”
“நான் உன்கிட்ட கோவிலுக்கு தானே போகலாம்ன்னு சொன்னேன். இங்க எதுக்கு கூட்டிட்டு வந்தே”
“கோவில்க்கு என்னை கூட்டிட்டு போய் என்ன செய்ய?? உன் பொண்டாட்டியை கூட்டிட்டு போ” என்றான் கதிர் நிதானமாய்.
“வருவாளா??” என்றான் ஆதி ஆர்வமாய்.
“நீ கூப்பிட்டியா??”
“இல்லையே”
“அப்புறம் வருவாங்களா வரமாட்டாங்களான்னு இங்கவே கேட்டுட்டு இருக்க, கோவிலுக்கு எந்த பொண்ணும் வரமாட்டேன்னு எல்லாம் சொல்ல வாய்ப்பே இல்லை கூப்பிட்டு பாரு” என்றான்.
“தேங்க்ஸ்” என்றவனின் முகத்தில் இப்போது மலர்ச்சி.
“இங்க பாரு ஆதி சந்தோசத்தை வெளிய தேடாத, அது உனக்குள்ள தான் இருக்கு. உன் பக்கத்துல தான் இருக்கு, உனக்கானதை நீ தான் எடுத்துக்கணும்” என்றான் செங்கதிர்.
ஆதிக்கு உபதேசம் செய்தவனுக்கு அதை தனக்கு நிறைவேற்றிக் கொள்ள தெரியவில்லை என்பது தான் துயரமே!!
“எதுக்கு இப்போ ஓவரா அட்வைஸ் பண்றே??”
“இப்போ இப்படித்தான்டா பேசுவீங்க, அப்புறம் மனசு சரியில்லைன்னா என்னை தான்டா தேடி வருவே” என்றான் கதிர்.
“அப்படி வரும் போது ஆறுதல் சொல்லு இப்போ நான் கிளம்பறேன்” என்று எழுந்தான் ஆதி.
“டேய் ஜூஸ்”
“நீயே குடிச்சுக்கோ”
“அடேய் உன் காரு கடைகிட்ட நிக்குது”
“நான் ஆட்டோ பிடிச்சுப்போய் எடுத்துக்கறேன்”
“படுத்தறானே” என்ற செங்கதிர் “இரு நானும் வர்றேன்” என்றவன் வந்த ஜூஸை மடமடவென்று ஒரே மூச்சில் குடித்து முடித்து பணத்தை கொடுத்து வெளியில் வந்தான்.
——————–
செங்கதிர் ஐடி பார்க்கின் வாயில் நின்றிருந்தான். அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் அவனை அங்கு வரச்சொல்லி இருந்தார்.
அவர்கள் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு சீருடை தைக்க வேண்டும் என்று கேட்டிருந்தனர். அதை பற்றி பேசுவதற்காக வரச்சொல்லி இருக்க அவருக்கு அழைத்துவிட்டு அங்கு நின்றிருந்தான்.
அவனை அழைத்த நபரும் வந்துவிட அலுவலகத்தில் பேசிவிட்டு கீழே வந்திருந்தான் அவன். அப்போது அவனை யாரோ உற்று நோக்குவது போன்ற உணர்வு தோன்ற சட்டென்று திரும்பி பார்த்தால் நயனா நின்றிருந்தாள்.
அவனிடம் பேசவா வேண்டாமா என்ற தயக்கத்துடன் அவள் நின்றிருக்க “ஹலோ நயன் என்ன இங்க நின்னுட்டு இருக்கே, கம்பெனி கொடுக்கணுமா” என்று ஒருவன் வந்து அவளிடம் வழிய அதை பார்த்த கதிரின் முகம் இறுகியது.
அவனால் அங்கு நிற்க முடியவில்லை அவன் திரும்பி நடக்கப் போக “செங்கதிர்” என்றழைத்தாள் நயனா.
அவளின் அழைப்பில் நின்று திரும்பியவனின் முன்னே வந்து நின்றாள். “நயன் எங்கே போறே??” என்று சொல்லிக்கொண்டே அவள் பின்னேயே வந்து நின்றான் அவளுடன் வேலை செய்பவன்.
“நான் எங்க போனா உனக்கென்ன?? எதுக்கு என் பின்னாடி வர்றே??” என்றாள் சிடுசிடுப்பாய்.
“எதுக்குன்னு உனக்கு தெரியாதா??” என்றான் அவன் இன்னுமும் வழிந்தவாறே.
“இங்க பாரு திஸ் இஸ் தி லாஸ்ட் சான்ஸ் பார் யூ. இதுக்கு மேல என்கிட்ட மரியாதை இல்லாம பேசினே நான் உன் மேலே கம்பிளைன்ட் பண்ணிடுவேன். ஏற்கனவே நீ நிறைய மெமோ வாங்கி இருக்க. என் சார்பா ஒரு மெமோ கொடுக்க வைச்சிடாதே” என்று எச்சரித்தாள்.
அவனோ அதையும் மீறி அவளின் கரம் பற்றப் போக “கையை எடு” என்றான் செங்கதிர் கடுமையாய்.
“நீ யாரு??”
“நான் யாரா இருந்தா உனக்கென்ன?? நயனா எங்க வீட்டு பொண்ணு, என் முன்னாடியே அவ மேல கை வைக்கறே??”
“இப்படி பொறுமையா பேசிட்டு இருக்கேன்னு நினைக்காதே. எப்பவும் இப்படி இருக்க மாட்டேன், அவளை தொட்ட கையை வெட்டி வீசிருவேன் பார்த்துக்கோ” என்றவனுக்குள் இன்னமும் ஆத்திரம் கட்டுக்கடங்காமல் தானிருந்தது.
நயனாவே அவன் கோபத்தை கண்டு வியந்தும் பயந்தும் தான் போனாள். ஆனால் அவள் உடன் வேலை பார்ப்பவனோ “நான் அவளை லவ் பண்றேன்” என்றான்.
கதிர் திரும்பி நயனாவை பார்த்தான். “எனக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இவன் எல்லார்கிட்டயும் இப்படி தான் பேசுவான்” என்றாள் மற்றவனை முறைத்து.
“இங்க பாருங்க மிஸ்டர்”
“எழில்” என்றாள் நயனா.
“நீ இப்படியே இவங்ககிட்ட வம்பு பண்ணிட்டு இருந்தேன்னு வை, உன் பேருல மட்டும் தான் எழில் இருக்கும் உன் முகத்துல கொஞ்ச நஞ்சம் மிச்சமிருக்க எழிலை இல்லாம பண்ணிடுவேன்” என்று அவன் சொன்ன குரலில் அரண்டு தான் போனான் மற்றவன்.
சட்டென்று அவ்விடத்தைவிட்டு அவன் அகன்றுவிட நயனா செங்கதிரை நன்றி பார்வை பார்த்தாள். அதைக் கண்டுக்கொள்ளாமல் அவன் திரும்பி நடக்க இவள் அவன் பின்னே ஓடினாள்.
“ஒரு நிமிஷம்”
“என்ன??”
“எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்”
“எதைப்பத்தி??”
“நம்மளைப்பத்தி”
“நம்பளைப்பத்தி பேச என்ன இருக்கு??”
“சரி என்னைப்பத்தி”
“உன்னைப்பத்தி தெரிஞ்சுக்க எனக்கு என்ன தேவை??” என்று அவளை மேற்கொண்டு பேசவிடாமல் பேசினான் அவன்.
“உங்களால இப்போ என் கூட பேச வரமுடியுமா முடியாதா” என்றாள் நயனா பிடிவாதமான குரலில்.
“முடியாது” என்றவன் திரும்பி நடக்க “நீங்களே வந்து என்கிட்ட பேசுவீங்க. உனக்கு என்ன தான் வேணும்ன்னு கேட்பீங்க, கேட்க வைக்குறேன்” என்றவள் அவனை தாண்டிக் கொண்டு சென்றுவிட்டாள் வேகமாய்.
செங்கதிருக்கு நயனாவை பிடித்திருந்தது. ஆனால் அவளோடு தன் வாழ்வு என்பது நடக்காது என்று அவன் முன்பே தீர்மானித்திருந்தான். 
தன் அன்னைக்கு வாக்கு கொடுத்திருந்தான் அவர் பார்க்கும் பெண்ணை தான் மணமுடிப்பதாய். இந்த காலத்தில் வாக்காவாது ஒண்ணாவாது என்று நினைக்கத் தான் தோன்றும்.
ஆனால் அவன் அன்னையின் பயம் அது. அதன் பொருட்டு தான் அவருக்கு அப்படியொரு வாக்கை அவன் கொடுத்தான்.
நயனாவை பார்த்த முதலே அவனுக்கு பிடிக்க ஆரம்பித்திருந்தது. அவளின் தடையில்லாத தைரியமான பேச்சு அவனை நிரம்பவே கவர்ந்தது. 
அதைவிட அவன் மனதில் அவளைப் பற்றி அவன் சொல்ல முடியாத கருத்தை அவள் உடனே சொல்லிவிட்டு சென்றது அவனுக்கு அப்படியொரு கர்வத்தையும் நிறைவையும் இப்போது வரை கொடுத்தது எதுவென்றால் அவள் அவனை பிடித்திருக்கிறது என்று மறையாமல் சொன்னது தான்.
மனதில் ஒரு வலி எழ கடந்து சென்றவளின் மீதே அவன் கண்ணும் கருத்தும் நிறைந்து கிடந்தது.

Advertisement