Advertisement

9
நயனாவிற்கு அன்று செங்கதிர் தனக்காக பேசியது குறித்து அப்படியொரு சந்தோசம் பொங்கியது. அவளுடன் வேலை பார்க்கும் எழில் சில நாட்களாய் அவளிடம் இப்படித்தான் தொந்திரவு செய்துக் கொண்டிருக்கிறான்.
இன்று இப்படி வந்து கையை பிடிக்க வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. செங்கதிரும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பான் என்றும் அவள் நினைத்திருக்கவில்லை.
அதை நினைக்க நினைக்க நெஞ்சம் இனித்தது அவளுக்கு. வெளியில் சோவென்று மழை கொட்டிக் கொண்டிருந்தது. திடிரென்ற கோடை மழை தான் ஆனால் பெரிதாய் பொழிந்தது.
அவள் மனதும் அப்படித்தான் கதிரின் பேச்சில் நனைந்து நெகிழ்ந்து போயிருந்தது. சூடாய் தனக்காய் டீயை போட்டுக் கொண்டு வந்து அவளறையின் ஜன்னலை திறந்து வைத்துக் கொண்டு மழையை ரசித்தவாறே டீயை பருகினாள்.
அவளுக்கு சில நாட்களுக்கு முன் நடந்த அந்நிகழ்வு மனதிற்குள் வந்து போனது. சட்டென்று எழுந்தவள் டீ கோப்பையை டேபிளின் மீது வைத்துவிட்டு தன் பீரோவை திறந்தாள்.
அதில் பத்திரப்படுத்தி இருந்ததை கையில் எடுத்து பார்த்தாள். மஞ்சள் கயிறு அடங்கிய சிறிய கவர் இருந்தது அதில்.
விலோவின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில தினங்களிலேயே சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்திருந்தது.
வரிசையாய் ஒவ்வொரு நிகழ்வுகளும் நடந்தேற மீனாட்சி திருக்கல்யாண நிகழ்வு நாளும் வந்தது. மதுரை என்றாலே தினம் ஒரு திருவிழா என்று தானிருக்கும். திருவிழா நகரம் தூங்கா நகரம் என்று மதுரைக்கு பல சிறப்புகள் எப்போதும் உண்டு.
ஆயிரம் விழாக்கள் நடந்தேறினாலும் அங்கு முக்கிய விழா என்பது சித்திரை திருநாள் விழாவே. அதில் மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் போன்ற நிகழ்வுகள் குறிப்பிட்டு சொல்வன.
சந்தியா அன்று காலையிலேயே விலோசனாவின் தந்தைக்கு போன் செய்திருந்தார். மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மருமகளை தங்களுடன் அனுப்புமாறு.
மனைவியிடத்தில் ஆயிரம் பரிவு பாசம் இருந்தாலும் இது போன்ற விஷயத்தில் அருள்செல்வன் கொஞ்சம் கறார் தான். சந்தியா தான் கெஞ்சி கூத்தாடி அவரிடம் பேசியிருந்தார். அதன் பொருட்டு தான் கொஞ்சம் முன்னே சென்று பார்ப்பதற்கு அனுமதி வாங்கியிருந்தார்.
இளவரசனும் மகளை அனுப்ப சம்மதம் தெரிவித்துவிட்டார். விலோசனா இனி அவர்கள் வீட்டு பெண்ணாக போகிறாள் என்ற எண்ணத்தில் சரியென்றுவிட்டார். மகளிடம் அது பற்றி பேச விலோசனாவோ “அப்பா என்னால அங்கெல்லாம் போக முடியாதுப்பா” என்றாள்.
“என்னம்மா இப்படிச் சொல்றே?? உன்னை அவங்க எவ்வளவு ஆசையா கூப்பிட்டிருக்காங்க, நீயென்னடான்னா போகலைன்னு சொல்றே”
“இந்த மாதிரி எல்லாம் நாம பக்கத்துல பார்க்க பார்க்கிற கொடுப்பினை எல்லாம் நமக்கு சீக்கிரத்துல கிடைக்காதும்மா. சொல்றதை கேளு நீ கிளம்பி போயிட்டு வா” என்று சற்று அழுத்தி சொல்ல அவளுக்கு என்னவோ போலானது.
“அப்பா நான் மட்டும் தனியா போகலை. நயனையும் என் கூட கூட்டிட்டு போகவா, எனக்கு சங்கடமா இருக்குப்பா” என்று அவள் சொல்ல இப்போது நயனா தன் தமக்கையை முறைத்தாள்.
“என்ன விலோ இதெல்லாம் அவங்க அவங்களோட மருமகளை கூப்பிட்டிருக்காங்க. நீ எதுக்கு என்னை இதுல இழுத்துவிடுறே, என்னை ஆளை விடும்மா. எனக்கு நிறைய வேலை இருக்கு”
“நயன் ப்ளீஸ்டி எனக்காக வாயேன்…”
“ஏன் விலோ இப்படி பண்றே??”
“ப்ளீஸ் நயன்” என்று அவள் திரும்ப திரும்ப கேட்க இளவரசனும் “அதான் கூப்பிடுறல்லம்மா நீயும் போயிட்டு வா. அவளைப் பத்தி தான் உனக்கு தெரியுமே, அவங்ககிட்ட நான் போன் பண்ணி சொல்லிடறேன்” என்றுவிட அவளுக்கு வேறு வழியிருக்கவில்லை சரியென்று சொல்லி தன் தமக்கையுடன் கிளம்பினாள்.
“நயன் நீயும் புடவை கட்டிக்கோ” என்று அவள் சொல்ல “கல்யாண பொண்ணு நீயா இல்லை நானா” என்றாள் மற்றவள்.
“அதில்லை நயன் நாம கோவிலுக்கு போறோம்ல அதான் சொன்னேன்” என்று அவள் சொல்ல அது சற்று ஏற்றுக் கொள்ளும் படியாய் இருக்க அவளும் சம்மதித்து புடவை கட்டிக்கொண்டாள்.
அவர்கள் தயாராகி இருக்க சந்தியா தன் குடும்பத்தினர் சகிதம் வந்தார். அருள்செல்வன் முழு சீருடையில் இருந்தார்.
அவரை பார்க்கவே கொஞ்சம் பயமாக கூட இருந்தது விலோசனாவிற்கு. ரொம்ப விறைப்பான ஆளா தெரியறாரு என்று தான் எண்ணினாள்.
சந்தியா வந்ததும் மருமகளிடம் பூவைக் கையில் கொடுத்து தலையில் வைத்துக் கொள்ளச் சொன்னார். நயனாவிற்கும் தனியே அவர் கொடுத்திருக்க இருவருமாக அவர்களுடன் பயணம் செய்தனர்.
நல்ல வேளையாக ஆதித்யன் வந்திருக்கவில்லை. அதனால் விலோசனா இயல்பாகவே இருந்தாள். ஏன் வரவில்லை என்றெல்லாம் அவள் சந்தியாவிடம் கேட்டுக்கொள்ளவில்லை.
அவர்கள் கோவில் அருகே செல்லும் போது தான் சந்தியாவிற்கு அழைப்பு வந்தது.
“வந்திட்டியா ஆதி. எங்கே இருக்கே?? நாங்களும் பக்கத்துல வந்திட்டோம்” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது விலோசனா நயனாவின் கையை இறுக்கினாள்.
“என்னாச்சு??” என்றாள் நயனா தன் தமக்கையிடம் கிசுகிசுப்பாய்.
“ஒண்ணுமில்லை…” என்று சொன்னாலும் அவள் ஆதியை குறித்தே யோசிக்கிறாள் என்பது மற்றவளுக்கு புரிந்தே தான் இருந்தது.
கூட்ட நெரிசலாக இருந்தது. எள் விழுந்தால் கூட பொறுக்க முடியாத அளவுக்கு அப்படியொரு கூட்டம் நிறைந்து வழிந்தது. பின்னே மீனாட்சியின் திருக்கல்யாணம் என்றால் சும்மாவா.
அதைப் பார்க்க கண்கோடி வேண்டுமே. இவர்கள் வண்டியை ஓரிடத்தில் நிறுத்தி இறங்கியிருக்க அங்கே ஆதியும் செங்கதிரும் நின்றிருந்தனர்.
“என்னப்பா கதிர் நீ மட்டுமா வந்திருக்க?? அம்மா அக்கா எல்லாம் கூட்டிட்டு வந்திருக்கலாம்ல” என்றார் சந்தியா,
“இல்லைம்மா அம்மாக்கு ரொம்ப நேரம் நிக்க முடியாதுல மூட்டு வலி இருக்கே. அக்காக்கு இப்போ வரமுடியாதுன்னு சொன்னாங்க” என்றான்.
“ஓ சரி சரி” என்று முடித்துவிட்டார் சந்தியா.
நயனாவிற்கு செங்கதிரை பார்த்ததும் மனதிற்குள் ஒரு பரபரப்பு தோன்றியது.
இதோ அதொவென்று அவர்கள் காத்திருந்து மீனாட்சி திருக்கல்யாண வைபோகத்தை ஏகபோகமாய் பார்த்து மகிழ்ந்திருந்தனர்.
அருள்செல்வன் இவர்களை விட்டுவிட்டு தன் வேலையை பார்க்கச் சென்றுவிட்டார். சந்தியா அங்கேயே தன் சினேகித பெண் ஒருவரை பார்த்துவிட்டு அவரிடம் பேச ஆரம்பித்துவிட்டார்.
மகனிடம் “ஆதி நான் வர்றதுக்கு லேட் ஆகும். இங்க கொஞ்ச வேலை இருக்கு அதை முடிச்சுட்டு நான் போன் பண்றேன், நீ வந்து கூட்டிட்டு போ…”
“நீ இவங்களை கூட்டிட்டு போய் வீட்டில விட்டிரு ஆதி” என்று அவர் சொல்ல விலோசனாவிற்கு லேசாய் கோபம் எட்டிப்பார்த்தது.
‘இவங்க தானே கூட்டிட்டு வந்தாங்க, அப்போ இவங்க தானே கூட்டிட்டு போய் விடணும், இவரை எதுக்கு அனுப்பறாங்க…’ என்று சடசடப்பு தோன்றியது அவளுக்குள்.
அவனுடன் தான் திருமணம் என்று சொன்னவளுக்கு அவனுடன் செல்ல மட்டும் விருப்பமில்லையாம் என்ன விந்தை இது. அவளின் மனமே அவளை கேள்வி கேட்கத்தான் செய்தது.
“விலோம்மா அத்தை இப்படி பாதியில விடறேன்னு நினைக்க வேண்டாம்டா. உங்க கல்யாண வேலையா தான் கொஞ்சம் வெளிய போக வேண்டி இருக்கு. அதனால தான், இவங்களோட போனா அதை கையோட முடிச்சிட்டு வந்திடுவேன். தப்பா எடுத்துக்காதடா, நான் உங்கப்பாக்கு போன் பண்ணி சொல்லிடறேன். சரியா நீங்க பார்த்து கிளம்புங்க. வீட்டுக்கு போய் போன் பண்ணுங்க” என்றார் அவர்.
அவரிடம் பெண்கள் இருவரும் லேசாய் தலையாட்டி வைத்தனர். வேறு என்ன சொல்ல முடியும் அவரிடம்.
“போகலாமா??” என்று ஆதி சொல்ல விலோசனா தலையை மட்டும் ஆட்டினாள்.
“சரி கதிர் நான் இவங்களை விட்டுட்டு அப்படியே வீட்டுக்கு போறேன். நீயும் என்னோட வந்திடறியா??”
“இல்லை ஆதி. நான் தனியா போய்க்கறேன். நீங்க கிளம்புங்க” என்றவன் நயனாவை ஒரு பார்வை பார்த்து தான் சொல்லியிருந்தான்.
அவளின் பேச்சு பார்வை எல்லாம் அவன் மீதான அவளின் பிடித்ததை சொல்லியதை அத்தனை நாட்களில் உணர்ந்தே தானிருந்தான்.
ஆனாலும் அவனாய் அவளுக்கு எந்தவொரு நம்பிக்கையும் அவளுக்கு கொடுத்ததேயில்லை. நயனாவிற்கு அவன் செயல் புரிந்தது. தன்னை தவிர்க்கவே தான் அவன் அப்படி செய்கிறான் என்று புரிந்த போது சற்று வேதனையாகவே இருந்தது.
அதைக் காட்டிக்கொள்ளவில்லை அவள். இவர்கள் நடந்து வரும் போது அங்கு ஓரிடத்தில் மஞ்சள் கயிறு வழங்கிக் கொண்டிருந்தனர்.
நயனாவிற்கு சட்டென்று மனதிற்குள் ஒரு வேண்டுதல். அன்று அந்த கயிறை வாங்கிவிட வேண்டும் என்று. அருகிருந்த தன் தமக்கையின் கையை சுரண்டினாள்.
“என்ன நயன்??”
“நான் போய் அங்க மஞ்சள் கயிறு வாங்கிட்டு வந்திடறேன் நீ இங்க இரு” என்று அவள் சொல்ல “ஹேய் என்னை தனியா விட்டுப் போகாதே நயன் நானும் உன்கூட வர்றேன்” என்றாள் அவள்.
“அதான் அவர் இருக்கார்ல” என்று ஆதியை சுட்டிக்காட்டி நயனா சொல்ல தன் தங்கையை முறைத்தாள் மற்றவள்.
“என்ன பிரச்சனை??” என்றான் ஆதி அவர்களின் முகபாவம் பார்த்து.
இருவரும் சத்தமில்லாமல் அருகில் இருப்பவனுக்கு கூட கேட்காதவாறு தான் பேசினர். ஆதியால் அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை புரிந்துக் கொள்ள இயலவில்லை. ஆனால் இருவரும் ஏதோ வாக்குவாதம் செய்கின்றனர் என்று புரிந்து தான் கேட்டான்.
“அது அது வந்து இவளுக்கு அங்க போய் அந்த கயிறு வாங்கணுமாம். நானும் வர்றேன் ரெண்டு பேரும் போவோம்ன்னு சொன்னேன்” என்றாள் விலோசனா திக்கி திணறி.
“அவ்வளோ தானா… என் கூட வா நானே வாங்கித் தர்றேன்” என்றவனின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் விலோசனா தலை குனிந்தாள்.
“இல்லை நாங்களே”
“வா” என்றவன் அவள் கையை பிடித்துக் கொண்டு நடக்க ஒரு புன்சிரிப்புடன் அவர்களை பார்த்துக் கொண்டிருந்த நயனா சற்றுதள்ளி அவர்களின் பின்னே சென்றாள்.

Advertisement