Advertisement

7
வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர். 
அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா.
அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம் உறங்கியிருப்பார் என்று தெரியும் அவளுக்கு. சத்தம் போட்டு அழுதிருந்தாள்.
தமக்கையை பிரிந்தது பின் திருமணத்தில் செங்கதிரின் ஒதுக்கம் என்று அனைத்தும் சேர்ந்துக் கொண்டு அவளை அமைதியில்லாமல் தவிக்க வைத்தது.
முதல் நாள் நிகழ்வுகளும் அன்றைய காலை நிகழ்வுகள் என்று வரிசைக்கட்டி வந்தது அவள் மனக்கண்ணில்.
மாலை பெரிதாய் எந்த நிகழ்வும் அவர்களுக்கு இல்லையென்றாலும் மாப்பிள்ளை வீட்டினர் பெண் வீட்டினர் அவர்களின் உறவினர்கள் என்று அனைவரும் பரிசம் போடா அமர்ந்திருந்தனர்.
நயனா தான் ஒவ்வொன்றுக்கும் ஓடினாள். உறவினர்கள் எங்கே தங்களுக்கு வேலை வந்துவிடுமோ என்று பெரும்பாலும் ஒதுங்கியே இருந்தனர்.
செங்கதிர் தன் அன்னையை அழைத்து வந்திருந்தான். அவன் தமக்கை பூங்கோதை மறுநாள் திருமணத்திற்கு வருவதாக சொல்லியிருந்தாள். நயனா இங்குமங்கும் ஓடுவதும் திரும்பி வருவதும் இருப்பதை பார்த்துக் கொண்டு தானிருந்தான்.
பாவம் தனியே கஷ்டப்படுகிறாள் என்று தோன்றிய போதும் அவன் சென்று உதவ முடியாதே என்பதால் அன்னையுடன் அமர்ந்து அங்கு நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.
எல்லாம் முடிந்து சற்று அக்காடா என்று சாயும் வேளை தான் செங்கதிரை பார்த்தாள் நயனா. முகத்தில் தன்னைப் போல ஒரு மலர்ச்சி உண்டாகியது.
அதை காணாதது போல கண்டாலும் அதற்கு மேல் அவள் புறம் திரும்புவதை தவிர்த்தான் செங்கதிர். அவள் தான் விடாகண்டியாயிற்றே அவன் முன்னே வந்து நின்றாள்.
“என்ன சார் எப்படி இருக்கீங்க?? நல்லாயிருக்கீங்களா??” என்று கேட்க அருகே அமர்ந்திருந்த அவன் அன்னை அவனை திரும்பி பார்த்தார்.
“ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்று மேம்போக்காய் அவளுக்கு பதில் சொல்லி அவன் நழுவப் பார்க்க அவளோ “உங்கம்மாவா சார். வணக்கம்மா நல்லா இருக்கீங்களா” என்று வேறு கேட்டு வைக்க இவன் பல்லைக் கடித்தான்.
தன் அன்னைக்கு அவளை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய கட்டாயத்தை அவள் உருவாக்கியிருக்க வேறு வழியில்லாது அவனும் அறிமுகப்படலத்தில் இறங்கினான்.
“அம்மா இவங்க நம்ம ஆதியோட வைப்க்கு தங்கை” என்று அறிமுகம் செய்தான்.
“ஓ!!” என்றவர் முகத்தில் யோசனை ரேகைகள்.
“என்ன சார் விலோவோட தங்கைன்னு மொட்டையா முடிச்சிட்டீங்க. நமக்குள்ள அவ்வளவு தான் பழக்கமா” என்று அவள் கேட்டுவைக்க செங்கதிர் திருத்திருத்தான்.
ராஜாத்தியின் முகத்தில் தீவிரமாய் ஒரு பாவம் ஓடியது. “அதில்லைங்கம்மா நான் சார் கடையில தான் துணி தைக்கக் கொடுப்பேன், எனக்கு, அப்பாக்கு, அக்காக்கு எல்லாம். அப்படித்தான் பழக்கம்” என்று சொல்ல ராஜாத்தி அவ்வளவு தானா என்று பார்த்தார்.
கதிரோ இவளை முறைத்திருந்தான். “சாப்பிட வாங்கம்மா, சாரையும் கூட்டிட்டு வாங்க” என்று உபசரித்து அங்கிருந்து நகர்ந்தாள்.
“என்னய்யா கதிரு இந்த பொண்ணு வந்துச்சு, அதுவா பேசிச்சு, இப்போ அதுவா கிளம்பிருச்சு. நம்மளை எல்லாம் பேசவே விடாது போல” என்றார் அவன் அன்னை. அவன் பதிலொன்றும் சொல்லவில்லை அவருக்கு. 
மறுநாள் திருமணத்திற்கு முன் இவள் வரவேற்பில் நின்றிருந்தாள். வருபவர்களுக்கு சந்தனமும், கற்கண்டும் பூவும் கொடுத்து வரவேற்க அருகில் இவளின் தூரத்து உறவினர் பெண்ணின் ஆறு வயது பெண் இவளுக்கு துணையாக நின்றிருந்தாள்.
செங்கதிர் தன் குடும்பத்தோடு வந்திருந்தான். அவளின் அக்கா பூங்கோதையும் அவனின் அன்னையும் முன்னே வர அவன் அக்காவின் மக்கள் இருவரும் அவனின் இரு தோளில் ஏறி இருந்தனர்.
“வாங்க வாங்கம்மா” என்றாள் நயனா.
“இவங்க சாரோட சிஸ்டரா??” என்று கேட்கவும் தவறவில்லை அவள்.
“ஆமாம்மா” என்றார் ராஜாத்தி.
“எங்க இருக்காங்கம்மா??”
“இங்க தான் விருதுநகர்ல கட்டிக்கொடுத்திருக்கோம்”
“நல்லதுங்கம்மா உள்ள போங்க” என்றாள்.
“அக்கா” என்று முன்னே சென்றுக் கொண்டிருந்த பூங்கோதையை அழைத்தான் செங்கதிர்.
“என்னய்யா கதிரு” என்று அவனருகே வந்தாள் அவள்.
“பசங்களை உள்ள கூட்டிட்டு போ, எனக்கு வெளிய ஒரு சின்ன வேலை இருக்கு நான் போயிட்டு உடனே வந்திடறேன்” என்று சொல்லி அவள் பிள்ளைகளை கொடுக்க ராஜாத்தியும் அவளும் ஆளுக்கொரு பிள்ளையை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றனர்.
அவர்கள் சென்றதை உறுதிப்படுத்திக் கொண்ட கதிர் நிதான நடையுடன் நயனாவின் அருகே வந்தான். அவனுக்காய் பிரத்யேகமாய் அலங்கரித்து ரோஸ் நிற பட்டுச்சேலை உடைத்து ரோஜாப்பூவாகவே நின்றிருந்தாள் அவள்.
“என்ன வேணும் உனக்கு??” என்றான் நேரிடையாக.
அவன் கேள்வியில் சற்று அசந்தாலும் நிதானமாய் சொன்னாள் “நீங்க தான் வேணும்”
“நீ பண்றது சரியில்லை”
“என்ன சரியில்லை??”
“நீ பண்றது எதுவும் சரியில்லை, என்ன நினைச்சு என் அம்மாகிட்டயும் அக்காகிட்டயும் நீ பேசினே”
“நீங்க எதை நினைச்சீங்களோ அதை நினைச்சு தான்” என்றாள் அவளும் விடாமல்.
“தேவையில்லாத கற்பனையை வளர்த்துக்காத, இதெல்லாம் நடக்காது. அதுக்கு முதல்ல ஒண்ணை தெரிஞ்சுக்கோ. எனக்கு உன் மேல எந்த அபிப்பிராயமும் இல்லை”
“இனிமே என்னை பார்த்து வம்பு பண்ணுறது. எங்கம்மாவை பார்த்தா வந்து பேசுறதுன்னு இருந்தேன்னு வை, நீ வேற ஒருத்தனை பார்க்க வேண்டி இருக்கும்”
“பார்த்திட்டா போச்சு” என்று அதையும் இவள் விளையாட்டாய் எடுத்துக்கொள்ள அவன் கண்கள் அப்படியொரு கனலை கக்கியது அவளிடத்தில். கொஞ்சம் மிரண்டு தான் போனாள் அதில்.
ஒரு விரல் நீட்டி அவளை எச்சரிக்கை செய்துவிட்டு இவன் உள்ளே சென்றுவிட்டான். அதன் பின் எக்காரணத்தை கொண்டும் அவள் புறம் பார்வையை அவன் திருப்பவேயில்லை.
அவள் அருகே வருவது போல தெரிந்தாலும் தன் வீட்டினருடன் அவன் நகர்ந்து சென்றான். உணவருந்தும் போதும் கூட எதிரில் அமர்ந்திருந்தவளை சுத்தமாய் பார்க்கவில்லை.
அவள் மட்டும் குறைந்தவளா என்ன இதற்கு முன்பு எத்தனை முறை அவன் ஒதுக்கம் காட்டிய போதும் அது பெரிதாய் அவளை பாதித்திருக்கவில்லை. ஏனென்றால் அவனின் ஒதுக்கம் பெயருக்காய் இருந்தது போலவே அவளுக்கு தோன்றியதால்.
ஆனால் இன்றைய அவனின் ஒதுக்கமும் பேச்சும் சாதாரணமாய் இல்லை என்பதை அவளறிவாள். ஏற்கனவே விலோசனாவை பிரிந்த வருத்தம், தற்போது மனதிற்கு பிடித்தவனான கதிரும் ஒதுக்கம் காட்டியதால் வந்த வருத்தம் என்று மொத்தமாய் அவளை படுத்தியிருந்தது.
——————–
விலோசனா ஒரு மாதிரி மனநிலையில் இருந்தாள். ஆதியின் அறையில் அவள் தனித்து விடப்பட்டிருந்தாள். அறையை சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்தாள். பெரிய அறை தான் அனைத்தும் நீட்டாகவே அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
நல்ல வேளையாக அறையில் எந்த அலங்காரமும் இல்லை. சினிமா பார்த்ததினால் வந்த கற்பனை தான் வேறன்ன. ஆனா ஏன் அலங்காரம் செய்யலை என்ற கேள்வியும் அவளுக்குள் இருந்தது.
சந்தியா அவளிடம் நன்றாகவே பேசினார். இரவு உணவின் போது அவளுக்கு என்ன பிடிக்கும் என்பதை அவள் வாயாலேயே பேச வைத்திருந்தார்.
அவர் ஒரு பள்ளியில் உதவி தலைமை ஆசிரியை என்பது அவர் பேசிய போது தான் தெரிந்தது அவளுக்கு. மாப்பிள்ளையின் அப்பா டிஜிபி, மாப்பிள்ளை கண் டாக்டர் இதை தான் அடிக்கடி கேட்டிருக்கிறாள்.
மாமியாரும் வேலைக்கு செல்கிறார் என்பதே இப்போது தான் அவளுக்கு தெரிந்தது. அவள் எந்த பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள் அதில் அவளுக்கு எதுவும் கஷ்டமிருக்கிறதா என்றெல்லாம் கேட்டறிந்தார்.
ஏற்கனவே அவருக்கு தெரியும் தான் அவள் எந்த பள்ளியில் வேலை செய்கிறாள் என்று ஆனாலும் அவளை இயல்பாக்கும் பொருட்டு அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஆதித்யன் அவன் அன்னையிடம் முன்பே சொல்லிவிட்டான். அலங்காரம் எல்லாம் செய்து அவளை இன்னும் பயமுறுத்த வேண்டாம் என்று, அதுவே அவருக்கும் சரியென்று பட அவரும் விட்டுவிட்டார்.
அவர் தான் அவளை ஆதியின் அறைக்கு கொண்டு வந்து விட்டுச் சென்றிருந்தார். “ஆதி அவன் பிரண்டுகிட்ட பேசிட்டு இருக்கான்மா, கொஞ்ச நேரத்தில வந்திடுவான்”
“உனக்கு தூக்கம் வந்தா தூங்கு” என்று சொல்லிவிட்டு அவர் சென்றுவிட “என்னது தூங்கறதா” என்று தான் நினைத்தாள் அவள்.
“தூங்கிட்டா பர்ஸ்ட் நைட்ல போய் தூங்கிட்டியான்னு அந்த பிசிக்ஸ் டீச்சர் ஜானகி என்னை கிண்டல் பண்ண மாட்டாளா” என்று வாய்விட்டு இவள் சொல்ல அறைக்குள் நுழைந்தான் ஆதித்யன்.
‘அச்சோ நான் வேற வாய்விட்டு சொல்லிட்டனே இவர் கேட்டிருப்பாரோ’ என்று நினைத்துக் கொண்டே எழுந்து நின்றாள்.
அவள் எழுந்து நிற்கவும் அவனின் இயல்பான கோபம் முன்னே வந்துவிட்டது. “நான் என்ன டீச்சரா எதுக்கு என்னை பார்த்தும் இப்போ நீ எழுந்து நிக்கறே” என்று கடிந்தான்.
அதில் அவளுக்கு முணுக்கென்று கண்ணீர் வந்துவிட “ஆனா ஊன்னா கண்ணுல தண்ணி வந்திடுது உனக்கு. வைகையாத்து தண்ணி மொத்தமும் உன் கண்ணுல தான் தேக்கி வைச்சிருக்க போல” என்றான் அவன்.
அவள் கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள். “என்னாச்சு” என்று கேட்டவாறே அவன் அருகே வந்திருந்தான்.
“ஒண்ணும்மில்லை லென்ஸ் கழட்ட மறந்திட்டேன்” என்றாள்.
“லென்ஸா?? எதுக்கு லென்ஸ்?? என்ன பவர்??” என்று அங்கு மருத்துவனாய் மாறி கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
“இல்லை அது பிளைன் லென்ஸ் தான்”
பெண் பார்க்க சென்ற அன்றே கண்டிருந்தான் அவள் லென்ஸ் உபயோகம் செய்கிறாள் என்று. அவள் அழுத போது அவள் கண்களை ஒரு நொடி என்றாலும் உற்று நோக்கியிருந்தான் தானே.
“ஏதோ பவருக்காக போட்டிருக்கிறாள் போல” என்று தான் அன்று எண்ணியிருந்தான்.
இப்போதும் அதை எண்ணியே அவளிடம் கேட்டான். அவள் பிளைன் என்று சொல்லவும் “எதுக்காக பிளைன் லென்ஸ்??”
“எனக்கு தூக்கம் வருது தூங்கவா??” என்றாள்.
“லென்ஸ் கழட்டி வைக்கணும்ன்னு சொன்னே??”
“ஹ்ம்ம் ஆமா கழட்ட தான் போறேன்”
“நான் எதுக்காக பிளைன் லென்ஸ்ன்னு கேட்டேன்”
“எதுக்கோ??” என்று சத்தமாய் சொல்லிவிட்டு நகர்ந்து சென்றாள்.
அவள் பையை தேடி அவள் லென்ஸ் வைக்கும் அந்த சிறு டப்பாவை திறந்து கையில் கொஞ்சம் லென்ஸ் கிளீனர் போட்டுக்கொண்டு அதை கழற்றி கிளீனரினால் சுத்தம் செய்து பின் அதில் வைத்தாள்.
குளியலறை சென்று முகத்தை அடித்து கழுவிட்டு கையை சுத்தம் செய்து அங்கிருந்த துவாலையில் முகத்தை துடைத்து அவள் வெளியில் வர ஆதி அதே இடத்தில் நின்றிருந்தான் இன்னமும்.
அவள் அவனை தாண்டிக்கொண்டு கட்டிலின் மறுபுறம் செல்லப் போக அவன் அவள் கைப்பிடித்து இழுத்தான்.
அதில் அவன் நெஞ்சின் மீது வந்து அவள் விழ இருகரம் கொண்டு அவள் முகத்தை பற்றி ஆவலுடன் பார்த்தான் அவள் விழிகளை.
அவன் பார்த்த விழிகள் அதே நீல நயனங்கள் அவன் மனம் என்ன உணர்கிறது என்பதை சொல்ல வார்த்தைகளே இல்லை. அவன் கண்கள் இப்போது அவள் தலை முடியை பார்க்க சுருள் கேசம் அவன் கண்ணில்ப்பட்டது.
இத்தனை நாள் இது எப்படி என் கண்ணில் விழாமல் போனது என்ற யோசனை தான் அவனுக்கு. பெண் பார்க்க வருகிறார்கள் என்று இவள் அன்று ஸ்ட்ரைட்னிங் செய்து வந்திருந்தாள் கூந்தலை.
அது எப்போதும் அடங்காமல் அவளை படுத்தி எடுக்கும். அவள் தினமும் கஷ்டப்பட்டு தான் தலை சீவி செல்வாள். நயனா கொடுத்த ஐடியாவில் தான் அன்று அப்படி செய்திருந்தாள்.
இந்த இரண்டு நாளாய் பியூட்டி பார்லர் பெண் அவள் கூந்தலை அடக்கி ஸ்ப்ரே எல்லாம் செய்து பின் சவுரி வைத்து ஜடை வைத்திருந்ததால் அவனால் பார்த்திருக்க முடியவில்லை.
“விடுங்க எனக்கு தூக்கம் வருது” என்றாள் விலோசனா மெதுவாய்.
“எனக்கும்” என்றான் இவன் ஒரு மார்க்கமாய்.
அவன் குரலில் இருந்த வித்தியாசம் அவளுக்கும் புரிந்தது. அவன் இன்னமும் அவள் இரு கன்னத்தையும் பற்றியிருந்தான்.
“கையை எடுங்களேன்”
“சனா”
‘என்னது சனாவா?? யாரை கூப்பிடுறார் என்னையவா… இம்புட்டு அமைதியா கூட இவருக்கு பேச வருமா’ என்பது போல் அவன் விழிகளை பார்த்தாள் அவள்.
அவள் பார்வையில் அவனிடத்தில் கிறக்கம் வந்தது. அதையும் கண்டுக்கொண்டாள் அவள்.
“விடுங்க” என்று அவள் கையால் அவன் கையை எடுத்துவிட்டாள்.
“விட மாட்டேன்” என்றவன் இருக்கையால் அவள் இடையை பற்றி தன் புறம் இழுத்தான்.
“ப்ளீஸ் விடுங்களேன்”
“எதுக்கு விடணும்?? நீ என்னோட பொண்டாட்டி” என்றான்.
“அதுக்காக”
“ஐ நீட் யூ”
அவள் பட்டென்று சொல்லிவிட்டாள் “ஐ ஹேட் யூ” என்று.
——————–
மறுவீடு அது இதென்று எல்லாம் முடிந்து பத்து நாட்கள் ஓடிவிட்டது. ஆதியும் விலோசனாவும் ஒன்றாய் தான் இருக்கிறார்களே தவிர இருவருமே சிரித்துக் கூட பேசிக்கொள்ளவில்லை.
சந்தியாவின் கண்களுக்கு இது தப்புமா என்ன?? பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார். எதுவாக இருந்தாலும் மகன் சமாளித்திருப்பான் என்று நினைத்திருக்க இப்போதோ இருவர் முகத்திலுமே சிரிப்பில்லை என்பதைக் கண்டு அந்த தாயின் மனம் வேதனை கொண்டது.
“அம்மா நாளையில இருந்து நான் ஆஸ்பிட்டல் போகணும்” என்றான் ஆதி அறிவிப்பாய்.
“இன்னும் பத்து நாள் ஆகும்ன்னு அப்போ சொன்னே”
“இப்பவும் நான் தானே சொல்றேன்” என்றான் அவன்.
“ஏன்மா விலோ நீ எப்போல இருந்து வேலைக்கு போகணும்??” என்றார் சந்தியா.
“இல்லை அத்தை நான் வந்து வேலையை விடப்போறேன்னு”
“என்னது வேலையை விடப்போறியா ஏன்மா??”
“இல்லை அத்தை இந்த வருஷம் கிளாஸ் மட்டும் தான் எடுப்பேன்னு சொல்லிட்டேன். அதுவும் எல்லா நாளும் வரமுடியாதுன்னு சொல்லிட்டேன்”
“எதுக்காக அப்படி சொன்னே??”
“கல்யாணம் பிக்ஸ் ஆகிடுச்சு இனிமே எதுக்கு வேலைக்கு போயிட்டுன்னு அப்பா சொன்னாங்க அதான்” என்றாள் அவள்.
சந்தியா மகனை பார்த்தார் பேசு என்பது போல். “நீங்க சாப்பிட்டு இருங்க, உங்க மாமா இன்னைக்கு ஏதோ கலெக்டர் கூட மீட்டிங்ன்னு சொன்னாங்க, போய் பார்த்திட்டு வர்றேன்” என்று நகர்ந்தார் அவர்.
“ஏன் என்கிட்ட நீ இதை சொல்லலை” என்றான் ஆதி.
“எதை??”
“நீ வேலையை விடப் போறேன்னு”
“இதெல்லாம் கூட நான் உங்ககிட்ட சொல்லணுமா??” என்றாள் அவள்.
“சாப்பிட்டு முடிச்சிட்ட தானே வா என்னோட” என்ற ஆதி அங்கு பேச பிரியப்படாமல் அவனறைக்கு செல்ல விலோசனாவும் கையை கழுவிட்டு பின்னோடே வந்தாள்.
“சொல்லுங்க”
“உனக்கு என்ன பிரச்சனை சனா??”
“எனக்கு என்ன பிரச்சனை??” என்று இவள் பதில் கேள்வி கேட்டாள்.
“நான் தினமும் உன்கிட்ட சொல்லிட்டு தான் இருக்கேன்”
‘என்னவென்பது போல் அவனை பார்த்தாள்’
“நான் உனக்கு வில்லன் இல்லைம்மா. உன்னோட புருஷன், என்கிட்ட நீ எதையும் ஷேர் பண்ணிக்கலாம்”
“எனக்கு உங்ககிட்ட சொல்லணும்ன்னு தோணலை” என்றாள் ஒருமாதிரிக் குரலில்.
“உனக்கு என்ன தான் பிரச்சனை நான் இப்போ உன்னை என்ன செஞ்சிட்டேன்னு இப்படி விட்டேத்தியா பேசறே??”
“என்ன செய்யலை??” என்றாள் அவள் மீண்டும் கேள்வியாய்.

Advertisement