Advertisement

6
“உட்காரும்மா” என்றார் சந்தியா.
விலோசனா திரும்பி தன் தந்தையை பார்த்தாள். அவர் கண்ணசைக்கவும் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது. ‘நல்ல வேளை இவளை தான் நான் பொண்ணுன்னு நினைச்சுட்டு பயந்திட்டு இருந்தேன்’
‘அவ கல்யாண பொண்ணா இருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் அக்கேள்வியை சாய்ஸில் விட்டுவிட்டான் செங்கதிர்.
ஆதியின் பார்வை விலோசனாவை தான் அங்குலம் அங்குலமாய் துளைத்தது. அவன் எதிர்பார்த்த அந்த கூந்தல் அது இவளிடத்தில் இல்லை. கண்கள் என்று அதை பார்க்க முற்பட்டான்.
ஆனால் சற்று தொலைவில் அமர்ந்திருந்ததாலும் அவள் அவஸ்தையாய் தலைகுனிந்து அமர்ந்திருந்ததாலும் அவனால் பார்க்க முடியாமல் போனது.
‘நல்லா தான் இருக்கா, ஆனா அந்த பொண்ணு மாதிரி இல்லையே’ என்றிருந்தது அவனுக்கு.
விலோசனாவை பார்த்த மாத்திரத்தில் அவள் அவன் மனதில் பதிந்துவிட்டாள் என்பதை அவன் அக்கணம் உணரவேயில்லை.
“பொண்ணுக்கிட்ட பேசலாமா??” என்றுவிட்டான் அனைவரின் முன்னும்.
சந்தியாவே இதை அவனிடத்தில் எதிர்பார்த்திருக்கவில்லை. “ஆதி என்ன இதெல்லாம்” என்று அவன் காதைக் கடித்தார்.
முதலில் யோசித்த இளவரசன் பின் வந்திருப்பவர்கள் நல்ல குடும்பம் எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் அவர்களை பெண் பார்க்க வரச் சொல்லியிருக்கிறோம் அப்புறம் ஏன் யோசிக்கணும் என்று நினைத்து சரியென்று விட விலோசனா நயனாவை ஏறிட்டாள்.
“என்ன விலோ என்னை பார்க்கறே??” என்று தன் தமக்கையிடம் யாருக்கும் கேட்காத குரலில் மெதுவாய் பேசினாள்.
“அவர் எதுக்குடி என்கிட்ட பேசணும்” என்றாள் இவளும் அவளின் காதில்.
“கட்டிக்கப் போறவர் உன் விருப்பம் கேட்கணும்ன்னு நினைச்சிருப்பாரு. ஒண்ணும் பயம் வேணாம் தைரியமா போ” என்று இவள் சொன்னாள்.
“அம்மாடி நீ அக்கா கூட போ. பின்னாடி தோட்டத்து பக்கம் கூட்டிட்டு போ” என்று அவளின் அத்தை சொல்ல நயனாவும் உடன் சென்றாள்.
“அதான் பேசணும்ன்னு சொல்லிட்டியே… போ போய் பேசிட்டு வா” என்றார் சந்தியா ஆதித்யனிடம்.
பெண்கள் இருவரும் முன்னே சென்றிருக்க அவர்கள் சென்ற வழியில் பின்னோடே இவன் சென்றான்.
விலோசனா அவர்கள் வீட்டின் முல்லைக்கொடியின் அருகில் நின்றிருந்தாள். நயனா தோட்டத்திற்கு செல்லும் வாயிலின் அருகிலேயே நின்றிருந்தாள்.
ஆதி அவளைத் தாண்டி தான் சென்றான். “விலோக்கு கொஞ்சம் பயந்த சுபாவம், பார்த்து பேசுங்க” என்றாள் நயனா மெதுவான குரலில்.
ஆதி அவளிடத்தில் தலையசைத்து பின் வெளியில் இறங்கினான். அவளருகில் சென்றவன் அவளைப் பார்க்க அவளோ அவனை பார்ப்பதை தவிர்த்து எங்கோ பார்த்தாள்.
அங்கேயே அவனுக்கு அடிவாங்கியது. அவனின் வழக்கமான முன் கோபம் தலை தூக்கியிருந்தது கொஞ்சம்.
“ஹலோ” என்றான் அவளிடம்.
அவள் அவனை பார்க்காமலே ஹ்ம்ம் என்று சொல்ல அவன் கோபம் மூக்கின் நுனியில் இருந்து எந்நேரமும் வெளியே வந்துவிடுவேன் என்றிருந்தது.
“உங்ககிட்ட பேசத்தான் வந்தேன்” என்றான் அவன் பொறுமையை இழுத்து பிடித்த குரலில்.
“தெரியும், சொல்லுங்க” என்றாள் தலை நிமிராமலே.
அவ்வளவு தான் அவன் கோபம் மடை திறந்துவிட்டது. “உனக்கென்ன பெரிய அழகின்னு நினைப்பா. உன்னைப் பார்க்கத் தானே வந்திருக்கோம். நீ பாட்டுக்கு குனிஞ்சுட்டு இருந்தா எப்படி உன்னை பார்க்கறதாம்”

அவள் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது, அதை பார்த்ததும் அவனுக்கு இன்னும் இன்னும் கோபம் தான் அதிகரித்தது. 
“இப்போ என்ன சொல்லிட்டேன்னு நீ அழறே??” என்று சொல்லிக்கொண்டே ஓரடி முன்னில் வைக்க அவள் பின்னால் நகர்ந்தாள். அது அவனை இன்னும் ரௌத்திரமாக்கியது.
“எனக்கு உன்னை பிடிக்கலை போ… உன்னை போய் பொண்ணு பார்க்க வந்தேன் பாரு…” என்று தன் தலையில் இவன் அடித்துக்கொள்ள அவள் அங்கேயே அமர்ந்துக்கொண்டு ஓவென்று அழ நயனா அந்த அழுக்குரலில் பதறிக் கொண்டு வந்தாள்.
சில நொடிகளில் ஒரே ரசாபாசமாகிப் போனது அங்கு. நயனா இவனிடம் என்ன பேசுனீங்க என்று சண்டைப் பிடிக்க வர இளவரசன் தடுக்க சந்தியாவும் அருள்செல்வனும் மாறி மாறி மன்னிப்பு கேட்டனர் அவர்களிடத்தில்.
வெளியில் சென்றவன் நடந்ததை அப்படியே தன் அன்னையிடம் ஒப்புவித்து அங்கிருந்து வெளியேறியிருந்தான். கதிரும் அவனுடனே சென்றான்.
சந்தியாவுக்குமே அவன் செய்தது அப்படியொரு தலைவலியை உண்டு பண்ணியது. கதிருக்கும் கூட நண்பனின் செயலில் பிடித்தமில்லை தான்.
எப்படியோ அவர்களை சமாதானம் செய்து ஆயிரம் மன்னிப்பு கோரி அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
நயனா கடுங்கோபத்தில் இருந்தாள். ஆதியை ஒரு வழி செய்துவிடும் ஆத்திரம் அவளுக்கு விலோசனாவிடம் நடந்ததை கேட்டறிந்தாள். தமக்கையின் பயம் அவளறிந்தது தான்.
அதனால் தான் ஆதியிடம் அதை கோடிட்டு காட்டியிருந்தாள். அப்படியும் அவன் இப்படி பேசி சென்றிருக்கிறான் என்றால் என்ன சொல்லவது. ‘பிடிக்கலைன்னா பேசாம போயிருக்கலாம்ல அதை அவகிட்டவே சொல்லணுமா’ என்று கடுப்பில் இருந்தாள்.
“ஆனா நீ ஏன் விலோ இப்படி இருக்கே?? தைரியமா அவர்கிட்ட பேசுறதை விட்டுட்டு அவர் பார்க்க அழுதிருக்க, உன்னை போ… நீயெல்லாம் ஸ்கூல்ல அத்தனை பசங்களை எப்படித்தான் சமாளிக்கறியோ தெரியலை” என்று தமக்கையையும் கடிந்தாள்.
நயனா ஏதோ யோசைனையோடே வாசலுக்கு வந்திருந்தாள், ஆதி அங்கிருந்தால் அவனை கேட்டுவிடுவது என்று. ஆனால் ஆதித்யன் குடும்பத்தினர் அங்கிருந்து கிளம்பியிருந்தனர்.
கதிர் தான் தன் பைக்கை எடுத்துக் கொண்டிருந்தான். இவள் இங்கிருந்தே குரல் கொடுத்தாள். “ஹலோ கொஞ்சம் நில்லுங்க” என்று.
‘ஆத்தி மாரியாத்தா வருதே. எனக்கு வேப்பிலை அடிக்க போறாளோ, பைக்கை அவ வீட்டு பக்கம் நிறுத்துனதுக்கே அந்த பாட்டு படிச்சா’ என்று கதிர் புலம்பிக் கொண்டிருக்க அவள் அவனை சமீபித்திருந்தாள்.
“என்ன நினைச்சுட்டு இருக்காரு உங்க பிரண்டு??”
‘அதை அவனை தான் கேக்கணும் என்னை கேட்டா நான் எப்படி பதில் சொல்வேன்’ என்று பதில் சொல்லிக் கொண்டான் மனதில்.
“எங்கக்காவையே அழவைச்சுட்டாரு. வீட்டில எல்லாரும் இருந்தாங்கன்னு தான் நான் எதுவும் பேசலை. பெரிய இவரா அவரு கண் டாக்டர்ன்னா கண்ணு தெரியாதாமா அவருக்கு” என்று அவள் இஷ்டத்துக்கு ஆதியை வசைப்பாடிக் கொண்டிருந்தாள்.
“நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீங்க அமைதியா இருந்தா என்ன அர்த்தம்”
“நீங்க பேசறதை கேட்டுட்டு இருக்கேன்னு அர்த்தம்”
“நீங்க என்ன பூம்பூம் மாடா தலையாட்டிட்டு இருக்க பதில் சொல்ல மாட்டீங்களா”
“என்ன பதில் சொல்லணும்ன்னு எதிர்பார்க்கறீங்க. உங்க கோபம் நியாயமானது, அதை நீங்க கொட்டிட்டு இருக்கீங்க. உங்க கோபம் வடியறதுக்கு நான் இப்போ வடிக்காலா இருந்திட்டு போறேன். அதுல என்ன கெட்டுப்போச்சு” என்று செங்கதிர் சொல்ல அவன் பதிலில் இவள் அமைதியானாள்.
ஆம் அவளின் கோபம் மட்டுப்பட்டிருந்தது என்று சொல்வதை விட இப்போது காணாமல் போயிருந்தது. கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தாள்.
பின் அவனை ஏறிட்டு “சாரி” என்றாள் மெதுவான குரலில்.
“கோபம் நம்மோட நல்ல குணத்தை அழிக்கற சத்ரு. கோபத்தை குறைச்சுக்கோங்க, முடிஞ்சா விட்டிருங்க”
“ஊருக்கு தான் உபதேசமா”
“நண்பனுக்கும் செய்வோம், ஆனாலும் நண்பனை அவனோட அந்த குணத்தோட ஏத்துக்கறது தான் நட்புக்கு அழகு”
“நட்பு நல்ல புத்தியையும் சொல்லிக் கொடுக்கணும்”
“அவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை. இந்த கோபம் அவனுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு மேல இருக்காது. அவனை தெரிஞ்ச நண்பனா சொல்றேன்”
“எங்கக்காவை அப்படி அவர் பேசியிருக்க வேணாம்”
“இதுக்கான விளக்கம் இப்போ என்கிட்ட இல்லை. நண்பனுக்காக ஒண்ணு செய்யறேன், அவன் செஞ்சதை மன்னிச்சுடுங்க. அவனை தெரிஞ்ச நண்பனா ஒண்ணு சொல்றேன், அவனோட இந்த கோபம் மறந்ததும் தானா வருவான்” என்றுவிட்டு பைக்கில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.
“வந்தா எங்கக்கா ஏத்துக்கணுமா??”
“நான் அப்படி சொல்லலை”
“அப்போ என்ன சொல்ல வர்றீங்க??”
“ஹ்ம்ம் அது இப்போ புரியாது”
“அது எனக்கு புரியுதோ புரியலையோ. எனக்கு இப்போ ஒண்ணு புரிஞ்சது”
அவன் என்ன அது என்பது போல் பார்க்க “எனக்கு உங்களை பிடிச்சிருக்கு” என்றாள் நயனா பட்டென்று. 
அதில் கொஞ்சம் அதிர்ச்சி உண்டான போதும் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் வண்டியை கிளம்பிச் சென்றுவிட்டான்.
அவரவர் நினைவுகளில் இருந்து அவர்கள் இயல்பிற்கு வந்தனர்.

Advertisement