Advertisement

5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்”
“நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும்.
“அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு போனீங்களாமே. அதான் உங்ககிட்ட கேட்கச் சொன்னார்” என்று அவள் சொல்லவும் அவனுக்கு என்னவோ போலானது.
அவள் சொன்னது உண்மை தான். அன்று நாச்சியப்பன் இவள் உடையை தைக்கக் கேட்க அவனுக்கு தான் அதை அவரிடம் கொடுக்க மனதில்லை.
“உங்களுக்கு வேலை இருக்கும் நீங்க பாருங்க. இதை நான் அப்புறம் தைச்சுக்கறேன்” என்று சொல்லியிருந்தான்.
அவளின் உடையின் அளவை வேறு எவரும் எடுப்பது அவனுக்கு பிடிக்கவில்லை அது தான் உண்மை. அதற்காக தான் அப்படி செய்தான். அதை அவளிடம் சொல்லவா முடியும்.
“என்ன மாப்பிள்ளை பிரண்டு பதில் பேசாம இருக்கீங்க??”
“அவர் உன்னோட மாமா அந்த மரியாதையோட பேசு” என்றான் அவனும்.
“மாப்பிள்ளை எனக்கு மாமான்னா மாப்பிள்ளையோட பிரண்டும் அப்படித்தானே… என்ன மாமா நான் சரியா சொன்னேனா??” என்று அவள் குறும்பாய் தலையசைத்து கேட்க அவன் இதயம் துடித்தது வேகமாய்.
“இப்போ உனக்கென்ன வேணும், ட்ரெஸ் தானே. இரு எடுத்து தர்றேன்” என்றவன் கீழே அடுக்கி வைத்திருந்த ரேக்கில் அவள் உடையை தேடி எடுத்து அவளிடம் கொடுத்தான்.
“எவ்வளவுன்னு சொல்லலை??”
“பில்லுல போட்டிருக்கு தானே. கொடுத்திட்டு கிளம்பு” என்றான் அவன்.
“ரொம்ப பிகு பண்றீங்க. காசு வேணாம்ன்னு என்னைக்கு நீங்க சொல்வீங்க செங்கதிர்”
“நீ என்ன எனக்கு உறவா காசு வேணாம்ன்னு சொல்ல”
“உறவாகத் தானே கேட்கறேன்” என்று அசராமல் பதில் கொடுத்தாள் அவள்.
“நீ முதல்ல கிளம்பு எனக்கு காசே வேணாம். யாரோ பிச்சைக்காரங்களுக்கு போட்டதா நினைச்சுக்கறேன்” என்று இவன் கடுப்பாய் சொல்ல அவளுக்கும் சுர்ரென்று கோபம் வந்தது. எதுவும் பேசாமல் காசை எடுத்து டேபிளில் வைத்துவிட்டு உடையை எடுத்துகொண்டு நகர்ந்துவிட்டாள்.
அவள் கிளம்பியதும் எப்போதும் போல் பெருமூச்சு விட்டுக்கொண்டான் கதிர். அவளும் அவனை ஒரு வருடமாய் பின் தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள்.
ஆதி விலோசனாவை பிடிக்கவில்லை என்று சொன்ன அதே தினத்தில் நயனா இவனை பிடித்திருக்கிறது என்று சொல்லியிருந்தாள்.
நான்கு ஜோடிகளும் அன்றைய நிகழ்வை தங்களுக்குள் அசைப்போட்டனர்.
“ஆதி இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும், நேத்து சொன்னேன்ல ஞாபகம் இருக்கு தானே. நீ பாட்டுக்கு ஆஸ்பிட்டலுக்கு கிளம்பி போய்ட போறே” என்றார் ஆதியின் அன்னை சந்தியா.
“அம்மா அதெல்லாம் ஞாபகம் இருக்கு. அதனால தானே இன்னைக்கு நான் லீவ் போட்டிருக்கேன். எனக்கு கொஞ்சம் கிரீன் டீ கொடுக்கறீங்களா??”
“சந்து எனக்கு ஒரு காபி” என்று பேப்பரில் முகத்தை புதைத்துக் கொண்டு வந்த அருள்செல்வன் அங்கிருந்த மகனை கவனித்திருக்கவில்லை.
“காபி எல்லாம் கிடையாது” என்று உள்ளிருந்து குரல் கொடுத்தார் அவரின் மனையாட்டி.
“அப்பா” என்று குரல் கொடுத்தான் மகன்.
‘இவனை கவனிக்காம விட்டுட்டோமே’ என்று தான் பார்த்திருந்தார் அவர் இப்போது.
“வாக்கிங் போயிட்டு வந்தீங்களா??”
“வந்தாச்சு ஆதி”
“உங்களை ஜாகிங் தானே போகச் சொன்னேன் நீங்க என்னடான்னா வாக்கிங் போயிட்டு வர்றேன்னு சொல்றீங்க??” என்றான் அவன் தொடர்ந்து.
‘என்னை காப்பாத்தேன் சந்து’ என்று இவர் மனதிற்குள் தன் மனைவியிடம் வேண்டுதல் வைக்க அதை கேட்டவர் போல் அவர் வெளியில் வந்தவர் மகனிடம் அவன் கேட்ட கிரீன் டீயை கொடுத்தார்.
“என்னடா சும்மா தொணதொணன்னு அவரை கேள்வி கேட்கறே?? அவர் எவ்வளவு பெரிய போலீஸ் அவரை நீ வீட்டுக்குள்ள இந்த வாட்டு வாட்டறே” என்றார் அவர்.
‘இவ எனக்கு சப்போர்ட் பண்ண வந்தாளா இல்லை என்னைய டேமேஜ் பண்ண வந்தாளா’ என்று தான் பார்த்தார் அருள்செல்வன்.
“போலீஸ் அப்படிங்கறது அப்பா பார்க்கற வேலை. ஆனா எனக்கு அவர் அப்பா அவரோட ஹெல்த் எனக்கு ரொம்ப முக்கியம்” என்றான் ஆதித்யன்.
“நீ அவரோட மகன் தானே. அவர் வேலையை அவர் வாசலுக்கு வெளிய தான் பார்க்கணும் அப்படிங்கற மாதிரி தானே நீயும் உன் வேலையை வாசலுக்கு வெளிய பார்க்கணும்”
“அதைவிட்டு அதை செய்யாத, இதை செய்யாத, அது சாப்பிட்டா நல்லதில்லை. இது சாப்பிட்டா நல்லதில்லைன்னு ரொம்ப ரூல்ஸ் பேசறே நீ” என்றார் அத்தாய்.
“அம்மா… அப்போ நான் எதுவும் சொல்லக் கூடாதா. உங்க மேல எல்லாம் எனக்கு அக்கறை இருக்க கூடாதுன்னு சொல்ல வர்றீங்களா. அப்பா போன வருஷம் உடம்புக்கு முடியாம இருந்தப்போ எவ்வளவு கஷ்டப்பட்டார்”
“உங்களுக்கு ஏன் அது புரியலை?? போங்க இனிமே நான் இந்த வீட்டில எதுவும் சொல்ல மாட்டேன்” என்றவன் டீ கிளாசை தொப்பென்று கீழேறிந்துவிட்டு சென்றுவிட்டான்.
“ஷப்பா சாமி மலையேறிடுச்சு. இவனோட என்னால முடியலைங்க, ஒருத்தியை கட்டிவைச்சு நீயே இனிமே மேய்ச்சுக்கோம்மான்னு அக்காடான்னு உட்காரணும் எனக்கு”
“நான் அப்போவே சொன்னேன், இன்னொன்னு பெத்துக்கலாம்ன்னு நீங்க தான் வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க. என் ஹெல்த் அது இதுன்னு” என்று கணவரை சாடினார்.
“சந்து அவனை அவன் போக்கிலே விட்டிரு”
“அடப்போங்க பெரிய மகான் மாதிரி பேசிட்டு”
“நான் மகனைப் பத்தி பேசிட்டு இருக்கேன் நீ மகான்னு சொல்றே”
“செம கடிங்க”
“கடிக்கவா” என்று அருகில் வந்தார் அருள்செல்வன்.
“போதும் போதும் ஆளை விடுங்க”
“இப்போ அவன் கோவிச்சுக்கிட்டானே, பொண்ணு பார்க்க வருவானா??”
“அதெல்லாம் வருவான், இன்னும் அரைமணி நேரத்துல உங்களுக்கு டிபன் கொடுக்கலை அவனுக்கு மூக்கு வேர்த்திடும் அம்மா என்ன பண்றீங்க. அப்பாவை பார்க்காமன்னு குரல் கொடுப்பான் உள்ள இருந்தே” என்றுவிட்டு எழுந்து சமையலறை சென்றார் சந்தியா.
அறைக்குள் சென்ற ஆதித்யன் தன் நண்பனுக்கு அழைத்தான். “ஹலோ கதிர் என்ன பண்றே??”
“இப்போ தான் சாப்பிட்டு இருக்கேன்டா, கடைக்கு போக ரெடி ஆகிட்டு இருக்கேன்”
“கடைக்கு லேட்டா போய்க்கலாம். இன்னைக்கு என் கூட நீ துணைக்கு வர்றே??”
“எதுக்குடா?? எங்கே??”
“பொண்ணு பார்க்க”
“யாருக்கு??”

“எனக்கு தான்”
“அதுக்கு எதுக்கு என்னை கூப்பிடுறே??”
“நீ என் பிரண்ட் தானே, உன்னை கூப்பிடாம வேற யாரை கூப்பிடுறதாம்” என்றான் ஆதி.
“வேணாம்டா நான்லாம் எதுக்குடா, எனக்கு கடையில வேலை இருக்குடா”
“ஓ அப்போ உன்னால வர முடியாது. என்னைவிட உனக்கு கடை தான் முக்கியம் அதானே” என்று இவன் பொரிய ஆரம்பிக்கும் போதே செங்கதிர் “நான் வர்றேன்” என்று சொல்லியிருந்தான்.
செங்கதிர் ஆதியை நன்றாய் புரிந்தவன். சிறு வயதில் இருந்தே இருவரும் ஒரே பள்ளியில் தான் படித்தனர். கதிரின் வீட்டில் அவனை ஆங்கில வழி கல்வியில் தான் சேர்த்திருந்தனர்.
அவன் தமக்கை தமிழ் வழியில் தான் படித்தார். ஆண் பிள்ளை என்று சிறு வயது முதலே அவனுக்கு கொஞ்சம் சலுகை தான். ஆனால் அவன் அனுபவித்த அதிகப்பட்ச சலுகையே அது தான் என்பதை காலம் தான் உணர்த்தியது.
பன்னிரண்டாவது வரை ஆதியும் செங்கதிரும் ஒன்றாகவே படித்தனர். கதிர் ஆதி அளவிற்கு இல்லாவிட்டாலும் நன்றாகவே படிக்கும் மாணவனாகவே இருந்தான்.
குடும்ப சூழ்நிலை இவன் வேலை பார்க்கச் செல்ல ஆதி மருத்துவம் படிக்கச் சென்றான். ஆதியின் கோபத்தினாலேயே அவனுக்கு நண்பர்கள் அதிகமில்லை.
“அவன் என்னடா சட்டுன்னு எடுத்தெறிஞ்சு பேசறான்” என்றுவிட்டு ஒதுங்கி போவர் பெரும்பாலும். கதிர் மட்டுமே இன்றுவரை அவனுக்கு நண்பனாயிருக்கிறான்.
கதிரிடத்தில் அவன் அதிகம் கோபத்தை வெளிப்படுத்தியதில்லை. கதிரும் அதற்கு எப்போதும் இடம் கொடுத்ததுமில்லை.
“சரி நீ நேரா கிளம்பி வீட்டுக்கு வந்திடு கதிர்”
“இல்லைடா நான் கடைக்கு போய் சொல்லிட்டு கிளம்பி வர்றேன். நீ அட்ரஸ் அனுப்பிடு, நான் நேரத்துக்கு கண்டிப்பா வந்திடுவேன்” என்று உறுதி கொடுக்க ஆதி வரவேண்டிய நேரம், முகவரியை நண்பனுக்கு அனுப்பி வைத்தான்.
தன்னறையில் அமர்ந்துக் கொண்டு இன்னைக்கு பார்க்கப் போற பொண்ணு அவளை மாதிரி இருப்பாளா, அதே நீலக்கண்ணு, சுருள் கேசம், என்று யோசித்தவன் அன்று பார்த்த அந்த பதின்ம வயது பெண்ணை நினைவுக்கு கொண்டு வர முயற்சி செய்தான்.
அவனுக்கு அப்பெண்ணின் முகம் ஞாபகத்தில் இல்லை, அவள் கண்களும், கேசமும் மட்டுமே நினைவில்.
‘போய் தான் பார்ப்போமே’ என்று தான் பெண் பார்க்க ஒரு வழியாக சம்மதம் சொல்லியிருந்தான் அன்னையிடத்தில். குளித்து முடித்து தயாராகி வெளியில் வந்தான்.
“அம்மா அப்பா சாப்பிட்டாச்சா??” என்று கேட்டவாறே.
சந்தியா தன் கணவரை ஒரு பார்வை பார்த்தார் ‘சொன்னேன்ல’ என்பது போல.
“இன்னும் சாப்பிடலை”
“சாப்பிடலையா ஏன்?? நீங்க இன்னும் அவருக்கு டிபன் வைக்காம என்ன பண்ணிட்டு இருக்கீங்க, அவரு நேரத்துக்கு சாப்பிடணும்” என்று ஆரம்பித்தான்.
“யப்பா சாமி உன்னோட என்னால முடியலைடா. கொஞ்சம் என்னையும் பேச விடு, இன்னைக்கு நீ வீட்டில இருக்கேன்னு உன்னோட சாப்பிடறேன்னு உங்கப்பா சொல்லிடாரு”
“ஒரு நாள் பத்து நிமிஷம் லேட்டா சாப்பிட்டா ஒண்ணும் ஆகாதுடா ராசா. பேசாம நீயும் வந்து சாப்பிட உட்காரு, சாப்பிட்டு நாம கிளம்ப வேண்டியது தான் பாக்கி” என்ற சந்தியா கணவருக்கும் மகனுக்கும் பரிமாறிவிட்டு தனக்கும் பரிமாறிக்கொண்டு சாப்பிட அமர்ந்தார்.
“இன்னைக்கு ஓகே எப்போமே இப்படி செய்யாதீங்க. வேணும்ன்னா அப்பா சாப்பிடற நேரமே நான் வந்து சாப்பிட்டுக்கறேன்” என்று ஆதி சொல்ல அருள்செல்வனுக்கு புரை ஏறியது.
“என்னை எதுக்கு இப்போ அவன்கிட்ட மாட்டிவிடுற, ஒரு நாள் அவன் கூட உட்கார்ந்து சாப்பிடலாம் தினமும்ன்னா முடியாது. அப்புறம் என் கண்ணுல நீ எந்த சாப்பாடையும் காட்டவே மாட்டே, அவன்கிட்ட சொல்லு” என்றார் அருள்செல்வன் தன் மனைவியின் காதில்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ எப்பவும் சாப்பிடுற நேரத்துக்கே சாப்பிடு. அவருக்காக எல்லாம் நீ பார்க்க வேணாம்” என்றார்.
ஒருவழியாய் அவர்கள் சாப்பிட்டு முடித்து கிளம்பினர். ஆதி காரை எடுக்க அருள்செல்வன் அவனருகில் அமர்ந்தார்.
“அப்பா நீங்க வேணா அம்மாக்கூட உட்கார்ந்து வாங்கப்பா”
“வேணாம் வேணாம் உங்கப்பா முன்னாடியே உட்காரட்டும்” என்றுவிட்டார் சந்தியா.
அதில் அருள்செல்வனின் முகம் வாட “அம்மா அப்பா பாவம்மா பாருங்க, முகமே வாடிப்போச்சு” 
“டேய் பிள்ளை மாதிரி பேசுடா” என்று கடிந்தார் சந்தியா.
“பிள்ளையா இருக்கப் போய் தான் அம்மா அப்பா சந்தோசமா இருக்கணும்ன்னு நினைக்கிறேன்”
“நல்லா நினைச்சே போ, மணியாகுது ஒழுங்கா வண்டியை எடு” என்றார் அவர்.
அருள்செல்வன் முன் இருக்கையில் அமர சந்தியா பின்னிருக்கைக்கு சென்றார்.
கதிர் முன்பே அங்கு வந்திருந்தான். வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு அவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க “ஹலோ என்னதிது” என்றவாறே வந்தாள் நயனா.
அவள் என்ன கேட்க வருகிறாள் என்று புரியாதவனாய் அவளை ஏறிட்டான் அவன்.
“இங்க வந்து வண்டியை நிறுத்தியிருக்கீங்க. யார் நீங்க??”
“இல்லை வந்து…”

“என்ன வந்து போயின்னு இழுக்கறீங்க, இங்க இருந்து முதல்ல வண்டியை எடுங்க. இது எங்க வீடு” என்றாள் அவள்.
‘ஓ இது தான் கல்யாண பொண்ணா, செம வாயா இருக்கும் போலவே. ஆதிக்கு செட் ஆகுமா’ என்று யோசித்தான் கதிர்.
“ஹலோ என்ன நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன், நீங்க என்ன கனா காண்டுட்டு இருக்கீங்களா” என்றாள் அவள் தொடர்ந்து.
“நான் வண்டியை ரோட்ல தானே நிறுத்தியிருக்கேன்”
“எங்க வீட்டு பக்கமா நிறுத்தி இருக்கீங்க”
“அதுக்கு”
“முதல்ல எடுங்க”
“கவர்மென்ட் போட்ட ரோடு என்னால இங்க இருந்து இப்போ வண்டியை எடுக்க முடியாது. இங்க தான் நிறுத்துவேன்” என்றவன் சைடு லாக் போட்டுவிட்டான்.
“யோவ் மரியாதையா வண்டியை எடு, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம், நான் கோலம் போட்டு உள்ள போகணும். சும்மா வம்பை கட்டி இழுக்காதே, எனக்கு இப்போ நேரமில்லை”
‘நேரமிருந்தா என்ன செய்வாளாம்’ என்று யோசித்த கதிர் ‘டேய் இது ஆதிக்கு பார்த்த பொண்ணுடா நீ எதுக்கு வம்பு பண்ணுறே’ என்று அவன் மனசாட்சி கேட்ட கேள்வியில் வண்டியை அங்கிருந்து நகர்த்தி சற்று தள்ளி நிறுத்தினான்.
“தேங்க்ஸ்” என்றாள் அவள் புன்னகை முகமாய்.
அவள் புன்னகை அவனையும் தொற்றிக் கொண்டு பதில் புன்னகை செய்ய வைத்தது.
அவள் புள்ளி வைத்து கோலமிட்டவள் காம்பவுண்ட் சுவர் புறமாய் இருந்தா காலி இடத்தையும் விட்டு வைக்கவில்லை அவள் வீட்டை அடைத்து மூன்று பெரிய கோலங்களை போட்டு முடித்து தான் எழுந்திருந்தாள்.
கேட்டை திறந்து உள்ளே சென்றவள் வாயிலில் நின்றவாறே எட்டி கதிர் நின்ற இடத்தை பார்த்தாள். அவனும் அந்நேரம் அவளைத் தான் பார்த்திருந்தான். அவள் சும்மாயில்லாமல் இவனைப் பார்த்து கண்ணடித்து உள்ளே ஓடிவிட்டாள்.
கதிருக்கு மூச்சே நின்றுவிடும் போலானது. ‘இந்த பொண்ணு தான் கல்யாணப் பொண்ணா ஷப்பா முடியலைடா’ என்று மனதிற்குள் சொல்லியவன் நெஞ்சை லேசாய் நீவிக் கொண்டான் அவள் செய்த செயலில் திகைத்து.
அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே கார் ஹார்ன் சத்தம் கேட்க திரும்பி பார்த்தால் ஆதித்யன் தான் வந்திருந்தான்.
அவன் ஒரு ஓரமாய் காரை நிறுத்தத் இறங்கிக்கொண்டனர் அவன் அன்னையும் தந்தையும், உடன் இவனும் காரைப் பூட்டி இறங்கி வந்தான்.
“என்னடா நீ வந்து ரொம்ப நேரமாச்சா” என்றான் நண்பனை பார்த்து.
“ஒரு அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் வந்தேன்” என்றான் அவன் நேரத்தை குறைத்து.
“எப்படிப்பா இருக்கே கதிர்??” என்று அவனிடம் நலம் விசாரித்தனர் சந்தியாவும் அருள்செல்வனும்.
“உள்ளே போகலாம் வாங்க” என்றுவிட்டு அவர் தன் கணவருடன் உள்ளே செல்ல நண்பர்கள் இருவருமே பின்னாலேயே நுழைந்தனர்.
“கதிர் ரொம்ப நேரமா நீ இங்க நின்னுட்டு இருந்திருக்கேன்னு நினைக்கிறேன். பொண்ணு பார்க்க முடிஞ்சதா”
“அடேய் அது நீ பார்க்க வந்த பொண்ணு என்னை பார்த்தியான்னு கேட்கறே??” என்று அதிர்ந்தான் கதிர் நண்பன் கேட்ட கேள்வியில்.
“அதில்லைடா நான் வர்றதுக்கு முன்னாடியே வந்திட்டியே, நீ பார்த்திருந்தா எப்படியிருக்கான்னு கேட்கலாம்ன்னு பார்த்தேன்”
“ஏன் நீ போட்டோல பார்க்கலையா??”
“இல்லையே, அதுல அவ்வளவு நல்லா தெரியாதுன்னு நான் தான் பார்க்கலை. இப்போ தான் போன்ல அழகா காட்டுறதுக்கு ஏகப்பட்ட ஆப் வந்து நமக்கு ஆப்பு வைக்குதே”
“அதைச்சொல்லு” என்று நண்பனும் ஆமோதித்தான்.
அவர்கள் உள்ளே வந்திருந்தனர் இப்போது. இளவரசன் அவர்களை வாங்க என்றழைத்து அமரச்சொன்னார்.
“இவங்க என்னோட மனைவி வழி சொந்தம் அவங்களுக்கு தங்கை முறை, அவரு அவங்க கணவர். இவங்க என்னோட தங்கை தான் தூரத்து சொந்தம், அவங்க கணவர்” என்று அங்கிருந்தோரை அறிமுகம் செய்து வைத்தார் அவர்.
சந்தியா அவர்களுடன் சகஜமாய் உரையாடிக் கொண்டிருந்தார். ‘இந்தம்மாக்கு மட்டும் எப்படி தான் இப்படி இயல்பா பேச வருதோ’ என்று யோசித்துக் கொண்டே நண்பன் அருகில் அமர்ந்திருந்தான் ஆதி.
கதிருக்கோ அங்கிருக்கவே சங்கடமாக இருந்தது. மற்றவர்களின் பார்வை அவனையும் கூறுப்போட்டது. அவன் கடைக்கு செல்வதால் எப்போதும் சட்டையை டக்கின் செய்வதில்லை.
அது ஒரு புறம் நல்லது தான் என்றிருந்தாலும் அவனுக்கு அங்கு இயல்பாகவே இருக்க முடியவில்லை. எப்போதடா கிளம்புவோம் என்ற மனநிலையை கொடுத்தது.
“பொண்ணை பார்க்கலாங்களா??” என்றார் சந்தியா.
சித்தி முறை என்ற பெண் எழுந்து அந்த ஹாலிலேயே இருந்த அறை ஒன்றின் வாயிலில் நின்று “நயனா விலோசனாவை கூட்டிட்டு வாம்மா” என்றார்.
‘நயனா இந்த பொண்ணு தான் வெளிய கோலம் போட்டிருப்பாளோ’ என்ற கதிர் அவள் பெயரை உச்சரித்து பார்த்தான்.
ஆதியோ ‘விலோசனா’ என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டான்.
நீண்ட ஜடை வைத்து பின்னியிருக்க முகத்தில் லேசாய் வியர்வை அரும்பியிருக்க அழகிய மாம்பழ வண்ணச் சேலையில் வந்து நின்றாள் விலோசனா.
ஆதியின் வாய் தன்னைப் போல மஞ்சக்காட்டு மைனா என்று சொல்லிக்கொண்டது.

Advertisement