Advertisement

4
“அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை…” என்றாள் நயனா சந்தியாவிடம்.
“அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு தான் வந்தோம்” என்றான் ஆதி அவளிடம் நேரிடையாக.
அவனுக்கு நயனா பேசியதில் கடுங்கோபம் தான், ஆனால் அவன் கோபத்தை இப்போது காட்டுவது சரி வராது என்பது அவனுக்கு புரிந்தது. பின்னே தவறு அவன் மேலாகிற்றே. அதனால் சற்று தணிவான குரலில் தான் பேசினான்.
“ஓ அன்னைக்கு உங்களுக்கு அவளை பிடிக்கலை. இன்னைக்கு மட்டும் பிடிச்சு போச்சா உங்களுக்கு. ஏன் வேற பொண்ணு ஒண்ணும் உங்களுக்கு கிடைக்கலையா??” என்று நறுக்கென்று உறைப்பது போலத்தான் கேட்டாள்.
இளவரசன் தன் மகளை அடக்கினார் “நயனா பொறுமையா பேசு” என்று.
நயனாவின் பேச்சில் ஆதி அடக்கி வைத்திருந்த கோபம் மேலெழுந்தது. “வேற பொண்ணெல்லாம் கிடைக்காம ஒண்ணும் நாங்க இங்க வரலை” என்றவனுக்கு பிடித்து தான் வந்தேன் என்று சொல்ல சட்டென்று வாய் வரவில்லை.
விலோசனாவிடம் என்றால் சொல்லியிருப்பானோ என்னவோ நயனாவிடம் அவனுக்கு சொல்லத் தோன்றவில்லை.
“அப்போ நீங்க எதுக்காக இங்க வந்தீங்களாம்??” என்றாள் அவள் நக்கல் குரலில்.
சந்தியாவிற்கு தன் மகனை ஒரு பெண் நிற்க வைத்து கேள்வி கேட்பதை பார்க்க தர்ம சங்கடமாக இருந்தாலும் அவனுக்கு இது தேவை தான் என்று அமைதியாக இருந்தார்.
“அதை உன்கிட்ட சொல்லணும்ன்னு என்ன இருக்கு. அவளை கூப்பிடுங்க அவகிட்டவே சொல்லிக்கறேன்” என்று அவன் இன்னும் கோபமாகவே மொழிந்தான்.
அதற்குள் வெளியில் நடக்கின்ற பேச்சை காதில் வாங்கியிருந்த விலோசனா அங்கு வந்தாள்.
“நான் இவரை கட்டிக்கறேன்” என்று அவள் சொன்னதில் அனைவருமே அதிர்ந்து நின்றனர்.
“விலோ என்ன பேசறே நீ?? இவ்வளவு நேரமும் நீ பயந்தது என்ன?? இப்போ பேசுறது என்ன??” என்றாள் நயனா.
“புரிஞ்சு தான் பேசறேன்” என்று அவள் சொல்ல ஆதியின் முகம் இளகியது. 
அங்கு அடுத்த பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் முன் வெளியில் ஏதோ வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டது. “அவங்க வந்திட்டாங்க போல” என்றார் இளவரசன் பதட்டமான குரலில்.
“யாரை சொல்றீங்க??” என்றார் சந்தியா.
“விலோவை இன்னைக்கு பொண்ணு பார்க்க வர்றதா இருந்தது. அவங் தான் வந்திட்டாங்கன்னு நினைக்கிறேன், இப்போ என்ன செய்யறது??” என்றார் அவர்.
ஆதி திரும்பி சந்தியாவை பார்க்க அவர் சூழ்நிலையை கையில் எடுத்துக் கொண்டார். “நான் பார்த்துக்கறேன் அண்ணா” என்று சட்டென்று முறைக்கு தாவியவர் “நயனா எந்த வாக்குவாதமா இருந்தாலும் அவங்க போனதுக்கு அப்புறம் பேசிக்கலாம்மா”
“நீங்க நாலு பேருமே இப்போ உள்ள போங்க, ஆதி நீயும் போ, எதுவும் பேச வேணாம்” என்றவர் கதிரையும் ஒரு பார்வை பார்த்தார் பார்த்துக்கோ என்பது போல் அவன் தலையாட்ட அவர் வருபவர்களை எதிர்க்கொள்ள தயாரானார்.
அவர்கள் உள்ளே செல்ல இளவரசனின் பதட்டம் இன்னும் குறைந்த பாடில்லை. “அண்ணே நீங்க எதுக்கு இப்படி இருக்கீங்க??”
“இல்லைம்மா என்ன நடக்குமோன்னு இருக்கு, வர்றவங்ககிட்ட நான் என்னன்னு சொல்லுவேன். இங்க எல்லாருக்குமே நடந்த விஷயம் தெரியும், ஏற்கனவே ஆளாளுக்கு பேச ஆரம்பிச்சுட்டாங்க”
“அதனால தான் இன்னைக்கு இந்த விசேஷத்துக்கு கூட நான் யாரையும் கூப்பிடலை. நாளைக்கு இவளுக்கு பின்னாடி இன்னொருத்தி நிக்கறா, நான் என்ன செய்வேன்” என்றார் அவர்.
பெண் பிள்ளைகளை பெற்ற தகப்பனின் நிலை நன்றாக புரிந்தது சந்தியாவிற்கு. “விடுங்க அண்ணே நான் பார்த்துக்கறேன்” என்றார் அவர்.
அதற்குள் உள்ளே மாப்பிள்ளை வீட்டினர் நுழைய சந்தியா தன்னை இளவரசனின் தங்கை என்று அறிமுகம் செய்துக் கொண்டார். “தூரத்து சொந்தம்” என்று சொல்லிக்கொண்டார்.
அவர்களும் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. தாயில்லா பெண் என்று அறிவர் தானே. அதனால் தான் அத்தை வந்திருக்கிறார் போல என்று எண்ணிக்கொண்டனர்.
உள்ளே நால்வரும் திசைக்கொன்றாய் பார்வையை வைத்திருந்தனர். விலோசனாவை பார்த்தால் எங்கே நயனா எதுவும் கேட்டுவிடுவாளோ என்று ஆதி ஒரு புறம் பார்க்க நயனா கதிரை பார்க்க அவளின் பார்வையை தவிர்க்க கதிர் வேறு புறம் பார்க்க விலோசனா மட்டும் ஆதியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகளில் சந்தியா உள்ளே வந்தார். “விலோசனா நீ கொஞ்சம் வந்து அவங்க முன்னாடி நின்னுட்டு போயிடும்மா” என்று அவர் சொல்ல ஆதியின் கண்களில் கனல் தெரிந்தது.
“ஆதி நீ எதுவும் பேச வேண்டாம். விலோசனா இப்போ அவங்க முன்னாடி நின்னுட்டு வந்திடுவா. வர்றவங்ககிட்ட பொண்ணை காட்ட மாட்டோம்ன்னு சொன்னா தான் பிரச்சனை வரும், புரிஞ்சுக்கோ”
“நாளைக்கு இவளுக்கு பின்னாடி இன்னொருத்தி இருக்கா. அவளும் கல்யாணத்துக்கு நிக்கறா, அவ லைப்ல எந்த பிரச்சனையும் வந்திடக்கூடாது. நீ பேசாத சரியா” என்றார் சேர்த்து.
“நயனா அக்காவை கூட்டிட்டு வாம்மா” என்று அவர் வெளியேறப் போக நயனா விலோசனாவை பார்த்தாள்.
“விலோ வா போகலாம்” என்று சொல்லி அவள் கைப்பிடிக்க “அவ வரமாட்டா??” என்றான் ஆதி.
“அதை சொல்ல நீங்க யாரு??” என்றாள் கோபமாய் நயனா.
“அச்சோ இப்போ தானே உங்களை பேச வேணாம்ன்னு சொன்னேன். ஏன் இப்படி கத்தி பேசறீங்க. பேசாம வாங்க”
“அதை உங்க புள்ளைக்கு சொல்லுங்க” என்றாள் நயனா கடுப்பாய்.
“ஆதி உனக்கு விலோசனாவோட கல்யாணம் நடக்கணும்ன்னா, இப்போ அவ வரணும். இல்லை வேண்டாம்ன்னு நீ நினைச்சா அப்புறம் உன்னிஷ்டம் ஒரு தரம் நீ பண்ணி வைச்சதுக்கு போனா போகுதுன்னு உனக்கு சப்போர்ட் பண்ணறோம், திரும்பவும் எல்லாம் உனக்காக நாங்க நிற்போம்ன்னு நினைக்காத” என்று சந்தியா கறாராய் பேச ஆதி சற்று அமைதியானான்.
“சீக்கிரம் கூட்டிட்டு வாம்மா” என்று சொல்லிவிட்டு சந்தியா வெளியேறினார். ஆனாலும் அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அப்படியே இறுகி போய் நின்றான். 
நயனா விலோசனாவின் ஒரு கரத்தை பற்றியிருந்தாள். அவளை அழைத்துக்கொண்டு வெளியேறப் போக ஆதி விலோசனாவின் மறுக்கரத்தை பற்றியிருந்தான்.
பார்வையோ போகாதே என்பது போல் இருந்தது. அதைக் கூட அவன் கெஞ்சுவது போல எல்லாம் சொல்லவில்லை, கோபமான ஒரு பார்வை தான்.
“அவளோட கையை விடுங்க. உங்கம்மா சொன்னதை கேட்டீங்க தானே”
“என்னால முடியாது” என்றவன் அவளின் கரம் பற்றி தன் புறம் இழுக்க முனைய நயனா “விலோ நீ தான் இப்போ பேசணும், நானே பேசிட்டு இருக்க முடியாது” என்று தன் தமக்கையை பார்த்தாள்.
விலோசனா “ப்ளீஸ்” என்று சொல்லி அவனை பார்க்க பட்டென்று அவன் கரம் விலக்கினான்.
அவர்கள் வெளியில் சென்றுவிட இவன் கையை சுவற்றில் குத்திக்கொண்டான். “டேய் என்னடா பண்றே??” என்ற செங்கதிர் அவனின் கரத்தை தன் புறம் இழுத்தான்.
“விடு கதிர்” என்று அவன் திமிறினான்.
“இப்போ எதுக்கு உனக்கு இந்த கோபம்??”
“நான் அந்த பொண்ணை பார்க்காம இவ தான் வேணும்ன்னு இங்க ஓடி வந்திருக்கேன். இவ என்னடான்னா இன்னொருத்தன் முன்னால நிக்கறதுக்கு என்னைய இங்க நிக்க வைச்சுட்டு போறா??” என்றான் ஆத்திரமாக.
‘இது தான் இவனின் கோபமா’ என்ற கதிருக்கு அவனுக்கு என்ன பதில் சொல்ல என்று பார்த்தான்.
“என்னமோ என் பொண்டாட்டியை அடுத்தவன் பார்க்கற மாதிரி இருக்குடா. எனக்கு இங்க இருக்கவே முடியலை” என்றான் ஆதித்யன்.
“ஆதி ப்ளீஸ் பேசாம இரு. எல்லாமே உன்னோட தப்பு, இப்போ வந்து அவங்களை குறை சொல்றது ரொம்பவே தப்பு…”
“இன்னைக்கு நீ இங்க வராம இருந்திருந்தா அவங்க இப்போ வந்திருக்க மாப்பிள்ளையை கூட கட்டிக்கிட்டிருக்கலாம்…”
“அதெல்லாம் சொல்லாத அப்படியெல்லாம் நடந்திருக்காது”
“நடந்திருக்காதுன்னு நீ எப்படி சொல்றே?? நீ இங்க வரலைன்னா அது தான் நடந்திருக்கும்”
“வேணாம் எதுவும் சொல்லாத. வர்ற கோபத்துக்கு நான் வெளிய போய் அந்த மாப்பிள்ளையை அடிச்சிட்டு இவ என் பொண்டாட்டின்னு சொல்லி அவளை கையோட கூட்டிட்டு வந்தாலும் கூட்டிட்டு வந்திடுவேன்” என்றவனின் பேச்சில் அளவில்லா முரட்டுத்தனமிருந்தது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே விலோசனாவும் பின்னோடு நயனாவும் வந்தனர். ஆதி அவளைக் கண்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.
அவன் செய்வதெல்லாம் சிறுகுழந்தை தன் பொம்மையை அடுத்த குழந்தை பிடுங்கிக் கொள்ளும் ஆத்திரத்தில் செய்யும் செயலாகவே இருந்தது.
அந்த அறையில் அமைதி மட்டுமே சில நொடிகளுக்கு. நொடிகள் கரைந்து போக ஆரம்பிக்க சந்தியா உள்ளே வந்தார். “வெளிய வாங்க, அவங்க கிளம்பிட்டாங்க” என்றவாறே.
அவர்கள் வெளியில் வர அப்போதும் சில கணங்கள் அமைதியாகத்தான் கழிந்தது. யார் முதலில் பேச என்ற எண்ணம் அனைவருக்குமே இருந்தது.
சந்தியாவே ஆரம்பித்தார், “நீங்க என்ன சொல்றீங்கண்ணே?? உங்க முடிவு எங்களுக்கு முக்கியம்”
“என் பொண்ணுங்க சந்தோசம் தான் என் சந்தோசமே. அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கணும் அது மட்டும் தான் எனக்கு வேணும்”
“விலோவே உங்க பையனை கட்டிக்க சம்மதம் சொல்லியாச்சு. இனி நான் சொல்ல என்ன இருக்கு” என்றார் அவர் தன் சம்மதத்தை நாசூக்காய்.
“ஆனா எனக்கு ஆட்சேபனை இருக்கு” என்றாள் நயனா.
‘இவ யாரு சரியான கொடுக்கா இருப்பா போல. சும்மா கேள்வி கேட்டுட்டே இருக்கா’ என்று கடுப்பானான் ஆதி.
“என்ன??” என்றான் ஆதி.
“எனக்கு நீங்க இப்போ எதுக்கு வந்து இருக்கீங்கன்னு தெரியணும்??”
“விலோசனாவை கல்யாணம் பண்ணிக்க வந்திருக்கேன்”
“அது எனக்கு தெரியுது. திடிர்ன்னு என்ன ஞானோதயம் உங்களுக்கு”
“அதை நான் உங்க அக்காகிட்டவே சொல்லிக்கறேன்”
“விலோ நீ நிஜமா தான் சொல்றியா இவரை கல்யாணம் பண்ணிக்கறேன்னு” என்று இப்போது தன் தமக்கையை பார்த்து கேட்டாள் நயனா.
அவள் ஆமென்பது போல் தலையாட்டினாள். “இங்க பாரு இந்த தலையாட்டல் எல்லாம் வேணாம். எப்படி சரின்னு சொன்னே??”
“அது… அது… என்னால மறக்க முடியலை” என்றாள் மொட்டையாய்.
அதை ஆதி சரியாய் தப்பாய் புரிந்துக்கொண்டான். “புரியலை எனக்கு” என்றாள் நயனா.
“ஒரு ஒரு மாப்பிள்ளை வந்து பார்க்கும் போதும் இவர் என்னை பிடிக்கலைன்னு சொல்லிடுவாரோன்னு நினைச்சு நினைச்சு எனக்கு உயிரே போகுது நயன்”
“யார் வந்தாலும் இவர் பேசினது மட்டும் தான் என் காதுல கேட்குது… என்னால இனியும் பயந்திட்டே இருக்க முடியாது. பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனவரே திரும்ப வந்திருக்காரு”
“அதுக்கு??”
“இவரை தவிர என்னால யாரையும் கட்டிக்க முடியும்ன்னு தோணலை”
“புரியாம பேசாத விலோ”
“புரிஞ்சு தான் பேசறேன் நயன், ஏதோவொரு விதத்துல இவரு என்னை பாதிக்கறாரு. இவரா தானே தேடி வந்திருக்காரு. நாம ஒண்ணும் போகலையே” என்றாள் விலோசனா.
“அதுக்காக கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லுவியா. பதிலுக்கு நீ எதுவும் கேட்க மாட்டியா??”
“எனக்கு இப்போ எதுவும் கேட்க தோணலை”
“எனக்கு இவர்கிட்ட சொல்ல சில விஷயம் இருக்கு” என்றாள் நயனா.
ஆதி நயனாவை என்னவென்பது போல் பார்த்தான். கதிர் இவன் காதில் “மச்சினிச்சியை பகைச்சுக்காதடா” என்று போதனை செய்தான். அதெல்லாம் எனக்கு தெரியும் என்று பதிலுக்கு லுக் கொடுத்தான் மற்றவன்.
“என்னோட அக்கா கண் கலங்கக்கூடாது, முக்கியமா உங்களால”
“சரி”
“அவளை நீங்க திட்டக்கூடாது”
“சரி”
“அவகிட்ட உங்க கோபத்தை காட்டக் கூடாது”
“சரி”
“என்ன சரி சரின்னு சொல்லிட்டு இருக்கீங்க??”
“அதை தானே நான் சொல்லணும் இப்போ. நான் உங்க அக்காவை திட்ட மாட்டேன், கோபப்பட மாட்டேன், கண் கலங்க விடமாட்டேன் போதுமா” என்றான்.
“முக்கியமான ஒரு விஷயம்??” என்று கேள்விக்குறியோடு நிறுத்தினாள்.
“என்ன??”
“அவகிட்ட நீங்க ஏன் பிடிக்கலைன்னு போனீங்கன்னு சொல்லணும், ஏன் பிடிச்சுதுன்னும் சொல்லணும்”
“எப்போ சொல்லணுமோ அப்போ சொல்லிக்கறேன்”
“நீங்க நினைக்கிற நேரத்துக்கு எல்லாம் சொல்ல முடியாது. இப்போவே சொல்லுங்க” என்று நின்றாள் நயனா.
வாயிலில் மீண்டும் வண்டி சத்தம் கேட்க அனைவருமே எட்டிப்பார்த்தனர். அருள்செல்வன் வந்துக் கொண்டிருந்தார். சந்தியா அவருக்கு போன் செய்து காக்கியில் வந்துவிடாமல் வேறு உடை மாற்றி வரச்சொல்லியிருக்க அவர் வீடு சென்று உடைமாற்றி வந்திருந்தார்.
“கொஞ்சம் லேட் ஆகிட்டு சாரி” என்று வந்தார் அவர்.
இளவரசன் அவருக்கு கைக்கூப்ப பதிலுக்கு அவரும் வணக்கம் செய்தார்.
“உட்காருங்க” என்று இளவரசன் சொல்ல அனைவருமே நின்றுக் கொண்டிருப்பதை பார்த்த அருள்செல்வன் “நீங்க எல்லாரும் ஏன் நிக்கறீங்க உட்காருங்க” என்று சொன்னார்.
அதுவரையிலும் அனைவருமே நின்றுக் கொண்டு தான் பேசிக் கொண்டிருந்தனர். யாருமே யாரையும் உட்காரச்சொல்லவில்லை என்பதை அப்போது தான் உணர்ந்தார் இளவரசன்.
வீட்டு மனிதராய் அனைவருமே அவர் அமரச்சொல்ல அவர்கள் சோபாவில் அமர்ந்தனர்.
“சொல்லுங்க பேச்சுவார்த்தை எப்படி போயிட்டு இருக்கு. எதுவும் பிரச்சனையா??” என்றார் அவர் பொதுவாகவே.
“அதை தெரிஞ்சுக்கறதுக்கு முன்னாடி எல்லாரும் எங்களை மன்னிச்சுடுங்க. போன முறை நடந்ததுக்கு எங்களை நீங்க எல்லாரும் மன்னிக்கணும்” என்று அவர் கரம் கூப்ப ஆதியோ அவன் தந்தையை முறைத்தான்.
அவரே மீண்டும் மன்னிப்பு கேட்பதை பார்த்து இளவரசன் “பழசெல்லாம் இப்போ எதுக்குங்க பேசிட்டு. நாம மேற்கொண்டு நடக்க வேண்டியதை பேசுவோமே” என்றார் அவர்.
“அப்போ உங்களுக்கு ஓகே தானா”
“ஹ்ம்ம் எங்க எல்லாருக்கும் சம்மதம்” என்றார் இளவரசன்.
“அப்பா” என்றாள் நயனா அழுத்தமாய்.
“என்னம்மா??”
“எனக்கு இப்போ கூட இது சரியா வரும்ன்னு தோணலை” என்றாள் ஆதியை முறைத்துக் கொண்டே
“ஏன்மா??” என்றார் அருள்செல்வன்.
“அது… அது வந்து”
“சொல்லும்மா என்கிட்ட எந்த தயக்கமும் வேணாம்”
“உங்க பிள்ளை பண்ணது சரியில்லை”
“அது தப்புன்னு நானும் சொல்லிட்டனேம்மா”
“அன்னைக்கொரு பேச்சு இன்னைக்கொரு பேச்சுன்னு பேசுறாரு. இவரை நம்பி எப்படி எங்கக்காவை கொடுக்க முடியும்” என்றாள் அவள் தெளிவாய்.
“நீ சொல்றது சரி தான், உன்னோட பயம் நியாயம் தான். இதுக்கு நாங்க பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கோம்மா”
“எங்க பையன் அன்னைக்கு ஏன் அப்படி பேசினான்னு எங்களுக்கு தெரியலை. அவனுக்கு கொஞ்சம் கோபம் வரும் ஆனா அதெல்லாம் கொஞ்ச நேரத்துல மறந்திடுவான். அது தான் அவன்…”
“அவனுக்கான சுதந்திரத்தை நாங்க கொடுத்திருக்கோம். அவனுக்கு பிடிச்சதை தேர்ந்தெடுக்கற உரிமை அவனுக்கு இருக்குன்னு நினைச்சதால தான் அப்போ எந்த கேள்வியும் கேட்கலை”
“ஒண்ணு மட்டும் உறுதியா சொல்றேன்மா. நயனா இது உன்னோட கேள்வியா இருந்தாலும் பதில் உங்கக்காவுக்கானதும்மா” என்று விலோசனாவை பார்த்துச் சொன்னார் அவர்.
“இனி என் பையன் பின்வாங்க மாட்டான். அவனுக்கு பிடிச்சதை அவன் எப்பவும் விடமாட்டான். இதை நீங்க நம்பலாம். விலோசனாவோட வாழ்க்கை அவனை நம்பி மட்டும் ஒப்படைங்கன்னு நாங்க சொல்லலை”
“அவளுக்கு இன்னொரு அப்பாவா நானும் அம்மாவா என் சந்துவும் எப்பவும் இருப்போம். என் பையனுக்கு சப்போர்ட் பண்ண மாட்டோம், எங்களோட முழு ஒத்துழைப்பும் விலோசனாவுக்கு தான் இருக்கும்” என்றார் அவர்.
“தேங்க்ஸ் அங்கிள்” என்றாள் நயனா.
“உங்க ரெண்டு பேரை நம்பி எங்க அக்காவை கல்யாணம் பண்ணிக்கொடுக்க நாங்க சம்மதிக்கறோம். என்னாடா நானே பேசிட்டு இருக்கேன்னு உங்களுக்கு எல்லாம் தோணலாம்”
“இவளுக்கு பேசத் தெரியாது. அதுக்காக அமைதியான பொண்ணுன்னு எல்லாம் நினைக்க வேணாம். அவ ஒரு வார்த்தை பேசினாலும் நம்மால திரும்பவே பேச முடியாத மாதிரி செஞ்சிடுவா…”
“கொஞ்சம் பயந்த சுபாவம். அப்பாவுக்கு நாங்க தான் எல்லாம். அவர்க்கு பொண்ணுங்க நல்லா இருக்கணும், அதைத்தவிர வேற யோசிக்க மாட்டாரு. சோ இந்த வீட்டில எங்கம்மாவோட பொறுப்பை நான் அப்பப்போ எடுத்துக்குவேன்”
“அதுக்காக தான் இவ்வளவு கேள்வி கேட்டேன். என்னை நீங்க தப்பா நினைச்சுக்கிட்டாலும் எனக்கு அதைப்பத்தி கவலையில்லை” என்றாள் அவள்.
“நீ பேசுறது எங்களுக்கு பிடிச்சிருக்கும்மா. உங்கக்கா மட்டுமில்லை எங்களுக்கு இன்னொரு பையன் இருந்தா உன்னையும் எங்க வீட்டுக்கே கூட்டிட்டு போயிருப்போம். நீயும் எங்களுக்கு இன்னொரு பொண்ணு தான்ம்மா” என்றார் சந்தியா இப்போது.

Advertisement