Advertisement

3
“ஹலோ சொல்லு ஆதி”
“என்னத்தை சொல்ல உன்னை காலையிலவே போன் பண்ணி கூப்பிட்டேன்ல இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்ன்னு”
“நான் தான் வேலை இருக்கு முடியாதுன்னு சொன்னேன்ல ஆதி”
“ஓ நீங்க ரொம்ப பெரிய மனுசர் ஆகிட்டீங்க நாங்க கூப்பிட்டால்லாம் நீங்க வருவீங்களா. இருடா இரு அப்படியே இரு…” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் ஆதி.
செங்கதிர் அவனுக்கு மீண்டும் அழைக்க கோபத்தில் இரண்டு முறை கட் செய்தவன் மூன்றாம் முறை எடுத்து “இப்போ எதுக்கு கூப்பிடறே??”
“பொண்ணு பார்க்க போகணும்ன்னு சொன்னியே. நான் அங்க தான் இருக்கேன், நீ தான் இன்னும் வரலை” என்று சொல்ல ஆதித்யனின் முகம் மலர்ந்தது.
“நிஜமாவா சொல்றே கதிர்”
“நிஜம் தான். காலையிலவே அம்மாகிட்ட அட்ரஸ் எல்லாம் வாங்கிட்டேன், நேரா வந்திடறேன்னு சொல்லி. உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்ன்னு பார்த்தா, வழக்கம் போல நீ கோபப்பட்டு பேசி வைச்சுட்ட”
“சரி சரி விடுறா விடுறா இதெல்லாம் நமக்குள்ள சகஜம் தானே” என்றான் ஆதி.
“இந்த பொண்ணை…”
“பிடிக்கலைன்னா வீட்டுக்கு வந்து சொல்றேன் போதுமா” என்றவன் “சரி நாங்க கிளம்பிட்டோம் வந்திடறோம்” என்றுவிட்டு போனை வைத்தான்.
“என்னப்பா உன் பிரண்ட்கிட்ட பேசிட்டியா வர்றேன்னு சொன்னதும் தான் உன் மூஞ்சி பார்க்கற மாதிரி இருக்கு” என்றார் அவன் அன்னை.
“அம்மா அப்பா வரலையா??”
“திருவிழா வரப்போகுதுல அதுக்கு பந்தோபஸ்து எல்லாம் போடணும்ல அதுக்கு ஏதோ மீட்டிங் இருக்காம். சோ அவர் வரமுடியாதுன்னு போன் பண்ணிட்டார்”
“இங்க வர்றதை விட அது ரொம்ப முக்கியமான வேலையாமாம்”
“இன்னைக்கு உனக்கு ஒரு கண் ஆபரேஷன் இருக்கு, நான் வெளிய கூப்பிடுறேன். நீ வந்திடுவியா??”
“அதெப்படி வருவேன், அது முக்கியமில்லையா??”
“உனக்கு உன் வேலை முக்கியம்ன்னா அவருக்கு அவர் வேலை முக்கியம். நீ மட்டும் சேவை செய்யலை, அவரும் தான் சேவை செய்யற வேலையில இருக்காரு”
“அவர் வேலையில நாம எப்பவும் குறுக்கீடு செய்யக்கூடாதுன்னு உனக்கு பலமுறை சொல்லியிருக்கேன் ஆதி”
“ஓகே ஓகே விடுங்க”
“இந்த கோபம் நல்லதில்லை ஆதி”
“சரிம்மா விட்டுடுங்க…”
“சாரின்னு ஒரு வார்த்தை உன் வாயில இருந்து வருதா பாரு…”
“நான் என்ன தப்பா கேட்டுட்டேன்னு என்னை சாரி கேட்கச் சொல்றீங்க??”
“உன்கிட்ட எல்லாம் பேச முடியாது, நீ போய் வண்டி எடு. நான் டோர் லாக் பண்ணிட்டு வர்றேன்” என்றார் அவர்.
அவன் காரை எடுக்க இவர் அமரவும் வண்டியை கிளப்பினான் அவன். “இந்த தெரு தான் உள்ளே போ…” என்று வழி சொல்லிக் கொண்டே வந்தார் சந்தியா.
“பதினெட்டாம் நம்பர் வீடுடா… அதோ அங்கே பாரு நம்ம கதிர் எதிர்க்க நிக்கறான்” என்று அவர் சொல்ல அவன் கதிரை இடிப்பது போல சென்று நிறுத்த செங்கதிர் அசரமால் நின்றான்.
“கொஞ்சமாச்சும் பயப்படுறானான்னு பாருங்கம்மா…”
“நான் எதுக்கும்மா பயப்படணும் அதுவும் இவனை பார்த்து”
“உன் மேல ஏத்தினா தெரியும் சங்கதி”
“ஏத்த மாட்டேன்னு நம்பிக்கை தான்” என்றான் அவன்.
“சரி பேசினது போதும் வாங்க உள்ள போவோம்…” என்றவர் தன் கைக்கடிக்காரத்தில் நேரத்தை பார்க்க ஆதி இருந்த இடத்தைவிட்டு அசையவில்லை.
ஏனோ அவனுக்கு உள்ளே போகத் தோன்றவில்லை “என்ன ஆதி அங்கேயே நிக்கறே?? உள்ள வா, நல்ல நேரம் எல்லாம் தொடங்கிருச்சு” என்றார் சந்தியா.
அவன் இப்போதும் அசையாமலே நின்றான். கதிர் அவன் அருகில் வந்து அவன் தோளைத் தட்டினான்.
————————
“நயன் ரொம்ப பயமாயிருக்குடி”
“இங்க பாரு விலோ நான் கோபத்துல உன்னை அடிச்சாலும் அடிச்சிடுவேன் பார்த்துக்கோ. அந்தாளு ஒரு லூசு அன்னைக்கு உன்னை பிடிக்கலைன்னு சொன்னா எல்லாரும் அப்படியே வா இருப்பாங்க”
“அதுக்கு பிறகு உன்னை யாருமே பொண்ணு பார்க்க வரலியா என்ன, மத்த யாரும் அவனைப் போல சொல்லலை தானே அப்புறம் என்ன”
“வந்தவங்க யாருக்கும் என்னை ஏன் பிடிக்கலை விலோ” என்றாள் அவள் சற்று கலவரமான முகத்துடன்.
இதற்கு நயனா என்ன பதில் சொல்வாள். அவள் அமைதியாக இருந்தாள்.
“வந்தவங்க எல்லாருக்கும் உன்னை பிடிக்கணும்ன்னு என்ன இருக்கு விலோ… நீ சொல்லு உனக்கு நீ பார்த்த மாப்பிள்ளைல எந்த மாப்பிள்ளையை உனக்கு பிடிச்சிருந்துச்சு” என்று நயனா கேட்க அவளுக்கு ஆதித்யனின் முகம் வந்து போனது.
பின் ஒவ்வொருவராய் அவள் நினைவில் கொண்டு வர முயற்சி செய்ய அவளுக்கு மற்ற யாரின் முகமும்  ஞாபகத்திற்கு வரவில்லை.
“என்ன விலோ சொல்லு??”

“தெரியலை…” என்று பதில் கொடுத்தாள் தங்கைக்கு.
“இதென்ன பதில், ஒருத்தர் கூடவா உனக்கு பிடிக்கலை”
“பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு எல்லாம் எனக்கு தெரியலை. அப்பா இவரை தான் கட்டிக்கணும்ன்னு சொன்னா கட்டிக்குவேன்”
“இந்த காலத்துலயும் ரொம்ப பழங்காலமா இருக்கே விலோ நீ”
“பரவாயில்லை, நீ நான் கேட்டதுக்கு பதில் சொல்லு. ஏன் யாருக்கும் என்னை பிடிக்கலை”
“உனக்கு ஏன் யாரையும் பிடிக்கலை. அப்பா சொன்னார்ன்னா கழுத்தை நீட்டுவேன்னு நீ சொல்ற மாதிரி அம்மா சொல்ற பொண்ணைத் தான் கட்டுவேன்னு அவங்களும் இருக்கலாம்ல”
“எல்லாருமேவா அப்படி இருப்பாங்க??”
“எல்லாருமே எல்லாம் அப்படி இருக்க மாட்டாங்க, அந்த லூசு ஆதி மாதிரி அம்மா பேச்சை கேட்காதவங்களும் இருக்கத்தான் செய்வாங்க. அதுக போல கேட்டகரி உன்கிட்ட பேசின மாதிரி பேசி வைக்கும்” என்று அவள் சொல்லிவிட விலோவின் முகம் சுருங்கியது மீண்டும்.
‘அச்சோ தேவையில்லாம பேசி சொதப்பிட்டமோ’ என்று தனக்குள் குட்டிக் கொண்டவள் “விலோ எல்லாருமே எல்லாம் அப்படி இல்லை, சரியா… இன்னைக்கு வர்ற மாப்பிள்ளையை உனக்கு பிடிக்கும் பாரேன்”
“அவர்க்கு உன்னை பிடிக்கணும். உனக்கு அவரை பிடிக்கணும்ன்னு ஒரு பாசிட்டிவ் எண்ணத்தை முதல்ல கொண்டுவா. அப்புறம் எல்லாமே தானா நடக்கும் பாரேன்…” என்று விலோசனாவிற்கு நம்பிக்கை கொடுக்க அதில் சற்று தெளிந்தாள் அவள்.
அதற்குள் அவளின் தந்தை இளவரசன் பூவை வாங்கிக்கொண்டு வந்து தர அதை தன் தமக்கைக்கு சூட்டிவிட்டாள் அவள்.
“ஆமா சித்தியை கூப்பிடலையா அப்பா இந்த வட்டம்”
“இல்லைடி எல்லா டைமும் எல்லாரும் இருக்காங்களா. வர்றவங்க எல்லாம் வேணாம்ன்னு சொல்லிட்டு போறாங்க. அதான் அப்பா இந்த டைம் யாரும் வேண்டாம். வர்றவங்க பிடிச்சுருக்குன்னு சொன்ன பிறகு இன்னொரு நாள் மத்த எல்லாரையும் வர வைச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க”
“ஹப்பா… அப்பா இப்போ தான் ரொம்ப சரியா யோசிச்சு செஞ்சிருக்கார். சித்தி தொல்லை நமக்கில்லை இந்த முறை… ஐ யம் வெரி ஹாப்பி” என்றவள் கவுண்டமணியை போல் டான்ஸ் ஆட விலோசனா பக்கென்று சிரித்துவிட்டாள்.
அவள் இன்னமும் சகஜமாகியிருந்தாள் இப்போது. வெளியில் யாரோ வரும் அரவம் கேட்டது. இளவரசன் அவர்களுடன் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது.
இன்னும் கொஞ்ச நேரத்தில் அக்காவை கூப்பிடுவாங்க என்று நயனா எண்ணிக் கொண்டிருக்க அப்பா வேகமாய் உள்ளே வந்தார். பதட்டமாக வேறு இருந்தார்.
“என்னப்பா என்னாச்சு எதுக்கு இப்படி இருக்கீங்க??”
அவரோ பதில் சொல்லாமல் தன் மூத்த மகளை கவலையாய் பார்த்தார்.
“அப்பா என்னாச்சுப்பா??” என்றாள் இளையமகள்.
அவளுக்கு பதில் சொல்லாமல் அவர் விலோசனாவின் அருகே சென்றார்.
“அவன் வந்திருக்கான்ம்மா??”
“யாருப்பா??”
“அவன் தான்…”
—————————
“டேய் ஆதி என்ன யோசனை எதுவா இருந்தாலும் வீட்டில போய் யோசிக்கலாம் உள்ள வா…” என்று கதிர் அவன் கைப்பிடித்து இழுக்க அவனோ மற்றவனையும் உள்ளே போக விடாமல் அவன் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டான்.
சந்தியா வேகமாய் அவனருகில் வந்தார். “ஆதி ஆர் யூ ஆல்ரைட்”
“ஹ்ம்ம்” என்ற பதில் மட்டுமே அவனிடத்தில்.
“அப்போ ஏன் இங்க நிக்கறே??”
“எனக்கு இந்த பொண்ணை பார்க்க வேணாம்மா”
“என்ன??” என்று அதிர்ந்தனர் மற்ற இருவரும்.
“என்ன சொல்றே ஆதி??” என்றான் செங்கதிர்.
“வேணாம்டா கதிர், நிஜமா தான் சொல்றேன்”
“இவ்வளவு தூரம் வந்திட்டு உள்ள போகாம இருந்தா எப்படிடா?? உனக்கு பிடிக்கலைன்னா இந்த சம்மந்தம் முடிக்க வேண்டாம். ஆனா வர்றேன்னு சொல்லிட்டு போகலைன்னா என்னடா நினைப்பாங்க” என்றார் சந்தியா.
“அம்மா ப்ளீஸ் என்னை விட்டுடுங்க??”
“காலையில நான் சொன்னப்போ சொல்லியிருக்கலாம்ல இப்போ நான் கிளம்பும் போது கூட அவங்களுக்கு போன் பண்ணி கிளம்பிட்டோம்ன்னு சொன்னதை நீயும் பார்த்திட்டு தானே இருந்தே??”
“அதுக்காக எல்லாம் போக முடியாதும்மா” என்று அவன் முகத்தை காட்ட அவனுக்கு மேலே கோபமாய் இருந்தார் சந்தியா.
“என்னை என்னன்னு நீ நினைச்சுட்டு இருக்கே ஆதி??”
“அம்மா…”
“என்கிட்ட இனி நீ பேசாதே” என்றவர் கதிரை பார்த்து “கதிர் என்னை வீட்டில கொண்டுப் போய் விட்டிரு” என்றார்.
“அம்மா ஒரு நிமிஷம்மா அவனுக்கு என்ன பிரச்சனைன்னு தெரியாம நீங்களும் கோபப்படாதீங்கம்மா. என்னன்னு கேட்போம், அதுக்கு முன்ன பொண்ணு வீட்டுக்கு போன் பண்ணி வழியில ஆஸ்பிட்டல்ல இருந்து அவனுக்கு போன் வந்திட்டு கிளம்பிட்டான்னு சொல்லிடுங்க”
“இன்னொரு நாள் வர்றோம்ன்னு சொல்லிடுங்கம்மா” என்று கதிர் சொல்ல “என்னை பொய் சொல்லச் சொல்றியா கதிர்”
“அம்மா உண்மையை சொல்ல வேணாம்ன்னு சொல்றேன்”
“இவனோட எனக்கு இதே தலைவலியா போச்சு. ஒரு வருஷம் கழிச்சு வேற பொண்ணை பார்க்கப் போறோம், இப்பவும் தகராறு பண்றான்”
“பேசாம லவ் பண்ணி எவளையாச்சும் இழுத்திட்டு ஓடிட சொல்லு இவனை” என்றார் அவர்.
“அம்மா நீங்க பதட்டப்படாம முதல்ல அவங்களுக்கு போன் பண்ணுங்க. நாம அப்புறம் பேசுவோம்” என்றான் செங்கதிர்.
அவர் காரில் ஏறி அமர்ந்துக் கொண்டு பெண் வீட்டிற்கு அழைத்து பேசினார். பத்து நிமிடத்திற்கு பின் உள்ளிருந்தே கதிருக்கு அழைத்தார்.
“சொல்லுங்கம்மா”
“அவனை வந்து வண்டியை எடுக்கச் சொல்லு கதிர். இங்க இருந்து எதுவும் பேச வேணாம்” என்றார் அவர்.
“சரிம்மா” என்றவன் “ஆதி வண்டியை எடு பக்கத்துல ஒரு காபி ஷாப் இருக்குல அங்க போய் பேசுவோம்” என்று சொல்ல ஆதி வண்டியில் ஏறினான்.
“எதுக்கு பொண்ணு பார்க்க வந்திட்டு வேணாம்ன்னு சொன்னே??” என்றார் சந்தியா எங்கோ பார்த்துக் கொண்டு.
“சொல்றேன்” என்றவன் வண்டியை கிளம்பினான்.
சில பல நிமிடங்கள் கடந்து வண்டி வந்து நின்ற இடத்தை பார்த்த சந்தியாவிற்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான்.
“இங்க எதுக்குடா இப்போ கூட்டிட்டு வந்தே??” என்றார் பதட்டமாய்.
பின்னாடியே வந்திருந்தான் செங்கதிர். அவனுக்குமே ஒரு வித புரியாத மனநிலை தான். வண்டியை நிறுத்திவிட்டு அவன் இறங்கி வர ஆதி இறங்கினான் வண்டியில் இருந்து.
“டேய் என்ன பண்ணப்போறேன்னு சொல்லுடா. எனக்கு இப்போவே கண்ணைக் கட்டுது” என்றார் சந்தியா.
“எனக்கு விலோசனா தான் வேணும். நான் அவளைத் தவிர வேற யாரையும் கட்டிக்க மாட்டேன்” என்றான்.
சந்தியா எச்சிலை கூட்டி விழுங்கினார். இவனை மகனா பெத்ததுக்கு என்னை வைச்சு செய்யறான் என்ற மனநிலை அவருக்கு. இதை அவர் சத்தியமாய் எதிர்பார்த்திருக்கவில்லை. 
“நீ என்ன சொல்றேன்னு” என்ற கதிரிடம் “புரிஞ்சு தான் சொன்னேன்…”
“பொண்ணு பார்க்க போறப்போ கூட எனக்கு எதுவும் தோணலை. ஆனா அங்க இறங்கினப்போ எனக்கு விலோசனா முகம் தான் கண்ணுல வந்துச்சு…”
“என்னால அவளை மறக்க முடியலைன்னு நினைக்கிறேன். வேற எந்த பொண்ணையும் என்னால பார்க்க முடியும்ன்னு தோணலை. எனக்கு அவளை கல்யாணம் பண்ணி வைச்சிடுங்க” என்றான் அவன்.
“டேய் நீ பண்ணி வைச்ச வேலைக்கு இதெல்லாம் நடக்கும்ன்னு நினைக்கறியா நீ??” என்று கொதித்தார் சந்தியா.
உடனே தன் கணவருக்கு அழைத்துவிட்டார் போனில். “என்னங்க இவன் என்னென்னவோ சொல்றான்” என்று.
“சந்து என்னாச்சு பதட்டப்படாம என்னன்னு சொல்லு??”
“இவன் அந்த பொண்ணு விலோசனாவை தான் கட்டுவானாம்” என்றவர் சற்று முன் நடந்ததை சொல்லி முடித்தார்.
“நான் தான் காலையிலவே சொன்னேன்ல” என்றார் அருள்செல்வன்.
‘என்ன சொன்னார்’ என்று யோசித்த சந்தியாவிற்கு தன் கணவர் காலையில் சொன்னது ஞாபகம் வர சற்று தள்ளி செங்கதிருடன் பேசிக் கொண்டிருந்த தன் மகனை ஆச்சரியமாய் ஏறிட்டார்.
“நிஜமாவே இவன் அந்த பொண்ணை லவ் பண்றானாங்க”
“அது எனக்கு தெரியலை. ஆனா அந்த பொண்ணை தான் கட்டுவான்னு நினைக்கிறேன்”
“நான் என்னங்க செய்யட்டும்??”
“போய் பேசி பாரு சந்து”
“இது சரியா வருமாங்க”
“பேசிப் பாரு சந்து, முடியலைன்னா நானும் வந்து பேசறேன் சரியா…”
“அவங்க முடியலைன்னு சொன்னா”
“அப்படி தான் சொல்வாங்க”
“அப்புறம் எப்படிங்க??”
“முயற்சி திருவினையாக்கும்”
“இவன் செஞ்ச வினைக்கு திருவினை வேற அடப்போங்க” என்றார் சந்தியா.
“சந்து நம்பிக்கையா போ, நல்லதே நடக்கும்”
“ஹ்ம்ம்” என்றுவிட்டு மகன் அருகில் வந்தார் சந்தியா.
————————
“யாரைப்பா சொல்றீங்க??” என்று கேட்டவாறே அருகே வந்தாள் நயனா.
“அந்த ஆதித்ய கரிகாலன் தான்”
“என்ன?? அவனா?? அவன் எதுக்கு வந்தான் இப்போ??”
“அவன் நம்ம விலோவைத் தான் கட்டுவேன்னு வந்து நிக்கறான்” என்றார் அவர்.
விலோசனாவோ என்ன என்பது போல் தன் தந்தையை தான் பார்த்திருந்தாள்.
“நீங்க என்னப்பா சொன்னீங்க, அவங்களை விரட்டி விடுறது தானே”
“வீடு தேடி வந்தவங்களை எப்படிம்மா அப்படி விரட்ட முடியும். எல்லாம் பெரிய மனுஷங்கம்மா”
“அதுக்காக அவங்க பண்ணது எல்லாம் மறந்துட்டு விலோவை அவருக்கு கட்டிக் கொடுக்க போறீங்களா”
“இதெல்லாம் சரியா வராது நீங்க வாங்க நான் அவங்ககிட்ட பேசறேன்” என்று அவருக்கு ஆறுதல் சொல்லி வெளியே வந்தவள் செங்கதிரை கண்டுவிட்டு அப்படி நின்றுவிட்டாள்.
‘இவனுமா வந்திருக்கான்’ என்ற எண்ணம் தான் ஓடியது அவளுக்கு. ஆனாலும் அவள் இதை அப்படியே விடப்போவதில்லை.
“எங்க வந்தீங்க??”
“அப்பா சொல்லலையாம்மா” என்றார் சந்தியா.
அப்போது தான் அவரை பார்த்த நயனா ‘இவருமா வந்திருக்கிறார். அன்னைக்கு மகன் செஞ்சதுக்கு அத்தனை முறை மன்னிப்பு கேட்டவங்க இவங்களே வந்திருக்காங்க’ என்ற யோசனை அவள் முகத்தில் படர்ந்தது.
ஆனாலும் அதெல்லாம் ஒரு ஓரம் ஒதுக்கியவள் பேச உள்ளிருந்து வெளியில் வந்திருந்தாள் விலோசனா.
“நான் இவரை கட்டிக்கறேன்” என்று அவள் சொன்னதில் அனைவருமே அதிர்ந்து நின்றனர்.

Advertisement