Advertisement

25
“திங்க்ஸ் எடுத்து கீழே வைச்சுடு கதிர். நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று ஆதி சொல்ல அவர்களின் உடமைகள் இறக்கி வைக்கப்பட்டது.
ஆதியும் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவர்களை பார்த்து “பர்ஸ்ட் ரூம் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுவோம். அப்புறம் டின்னர் முடிச்சுட்டு படுக்க போகலாம்” என்றான்.
“ஹ்ம்ம் சரி” என்று மற்றவர்களும் அதை ஆமோதிக்க ரிசப்ஷன் சென்று அவர்களின் அறை சாவியை வாங்கி வந்தான் ஆதி. “போகலாம்” என்றவன் முன்னே நடக்க மற்றவர்கள் பின்னே வந்தனர். 
ஓரிடத்தில் நின்ற ஆதி அங்கிருந்த அறையின் கதவை திறந்து அவர்களின் உடமையை வைத்தவன் அவன் மனைவிடம் திரும்பி “சனா நீயும் நயனாவும் இந்த ரூம்ல ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க, நானும் கதிரும் அந்த ரூம்க்கு போறோம்” என்றவனை கதிர் முறைத்தான்.
நண்பனை இழுத்துக்கொண்டு வெளியில் வந்த ஆதி அடுத்த அறை கதவை திறந்தான். “ஏன்டா சதிகாரா நான் உனக்கு என்னடா செஞ்சேன், எதுக்கு இந்த வேலை பார்த்தே??”
“பேசாம வாடா உள்ள” என்ற ஆதி கதிரின் கையை இழுத்து அறைக்குள் விட கதிர் வாயை பிளந்தான்.
ஆதி ஹனிமூன் கபிள்ஸ் வருகிறார்கள் என்று சொல்லி அவர்களுக்கு பிரத்யேகமாக ஏற்பாடு செய்திருக்க சொல்லி முன்பே சொல்லியிருக்க அந்த அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது.
“இதுக்காக தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தியா?? இப்பவும் நாங்க ரெண்டு பேரும் தானே வந்திருக்கணும், பர்ஸ்ட் நைட் ரூம்குள்ள பிரண்டோட வந்தவன் நானா தான்டா இருப்பேன்”
“அடேய் என்னைவிட அவசரக்காரனா இருக்கே நீ?? உன் வைப்பை சனா ரெடி பண்ணி கூட்டிட்டு வருவா ஓகே வா” என்று ஆதி சொல்ல கதிர் அசடு வழிந்தான்.
“ஆனா ஆதி இதெல்லாம் எதுக்குன்னு தான் எனக்கு தெரியலை. எப்படியும் எனக்கு இன்னைக்கு அடி கன்பார்ம் வேற எதுவும் நடக்க வாய்ப்பில்லை”
“யாரு நீ?? நான் அதை நம்பணும்… போடாங்க… என்னை மாதிரி கோபக்காரனை கூட நம்பிடலாம். உங்க ரெண்டு பேரு மாதிரி அழுத்தக்காரங்களை நம்பவே கூடாதுடா சாமி… இல்லை இல்லைன்னு சொல்லிட்டே பெரிய விஷயமெல்லாம் செஞ்சிருக்கீங்க”
“சரி சரி ரொம்ப புகழாதடா” என்ற கதிர் முதலில் சென்று ரெப்ரெஷ் ஆகி வர அடுத்து ஆதி சென்று வந்தான்.
அடுத்த பத்து நிமிடத்தில் வெளியே வந்த இருவரும் தங்களின் மனைவிமார்கள் இருந்த அறைக்கதவை தட்ட நயனா வந்து கதவை திறக்க அவளைக் கண்டு கதிர் விட்ட ஜொள்ளில் வெள்ளி அருவியில் வெள்ளப்பெருக்கேடுத்தது.
“கதிர்… தம்பி கதிரு” என்று அவன் தோளை தொட்டு ஆதி உலுக்க சுயநினைவு வந்தவனாய் “என்னடா” என்றான்.
“சனா எங்கே நயனா??”
“விலோ உள்ள இருக்கா மாமா” என்றாள்.
கதிரின் பார்வை நயனாவை விட்டு இம்மியளவும் நகரவில்லை. சிம்பிளாய் வெள்ளையில் ஆங்காங்கே கருநீல பூக்கள் தெறித்திருக்க லேசாய் கரை வைத்த புடவை ஒன்றை கட்டி தலையில் மதுரை குண்டு மல்லியை சூடி அவன் முன் நின்றால் அவனும் தான் பாவம் என்ன செய்வான்.
அவர்களை தாண்டிக் கொண்டு உள்ளேச் சென்றான் ஆதி. அங்கு விலோசனா அப்போது தான் முகம் கழுவி வெளியில் வந்தாள்.
“சீக்கிரம் சனா டைம் ஆகுது, சாப்பிட்டு வந்திடலாம்” என்று அவளை கிளப்பி வெளியில் அழைத்துக் கொண்டு வர கதிரும் நயனாவும் இன்னமும் அப்படியே நின்றிருந்தனர். “கதிர் கிளம்பலாம்” ஆதி சொல்ல “எங்கே??” என்றான் மற்றவன்.
“சொர்கத்துக்கு வர்றியா??”
“என்ன?? என்னடா சொல்றே??”
“எங்கே போறேன்னு கேட்டியே அதான் பதில் சொன்னேன்”
“போகலாம் போகலாம்”
“அட வாப்பா அப்புறம் வந்து பாரு” என்று அவனை தள்ளிக் கொண்டு தான் செல்ல வேண்டி இருந்தது ஆதியால்.
நால்வருமாக அங்கிருந்த ரெஸ்டாரென்ட் ஒன்றில் உணவருந்தச் சென்றனர். சாப்பிட்டு இதோ அறைக்கும் கிளம்பியாயிற்று.
கதிர் வீட்டிற்கு அழைத்து பேசிக் கொண்டிருந்தான். நடந்தவாறே அவன் அனைவரிடமும் பேசினான், அவர்கள் நயனாவை கேட்க அவளருகே வந்தவன் “அம்மா லைன்ல இருக்காங்க” என்று சொல்லி போனை அவளிடம் கொடுத்தான்.
அதை வாங்கியவள் “சொல்லுங்க அத்தை”
“ஹ்ம்ம் வந்தாச்சு, கொஞ்சம் முன்னாடி தான் வந்தோம். ரூமுக்கு போயிட்டு இருக்கோம் அத்தை… நீங்க சாப்பிட்டீங்களா?? மதினி பசங்க எல்லாம்?? நாங்க சாப்பிட்டோம் அத்தை. பரவாயில்லை சுமாரா இருக்கு”
“சொல்லுங்க மதினி… ஹ்ம்ம் சரி… ஹ்ம்ம் புரியுது… ஹ்ம்ம்… ஹ்ம்ம்…” என்று மட்டுமே அவள் பேசிக் கொண்டிருந்தாள்.
“யாரு அக்காவா…” என்று வாயசைப்பில் அவளிடம் கேட்க அவள் தலையசைக்கவும் “ஹ்ம்ம் மட்டும் கொட்டிட்டு இருக்க, அதைக் கொடு” என்றவன் போனை அவளிடமிருந்து வாங்கினான். “என்னக்கா சொல்லிட்டு இருந்தே??”
“உன் பொண்டாட்டியை நான் என்னடா சொல்லப் போறேன்”
“வெறும் ஹ்ம்ம் மட்டும் சொல்லிட்டு இருக்காளே என்ன விஷயம்??”
“அதெல்லாம் பொம்பளைங்க விஷயம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது போனை வை. நாளைக்கு கூப்பிடுறேன்” என்றுவிட்டு அப்புறம் போனை வைத்துவிட்டாள் பூங்கோதை.
‘பொம்பளைங்க விஷயமா அப்படி என்ன பேசியிருப்பாங்க’ என்று யோசனையோடே வந்தான் கதிர்.
“கதிர் உங்க ரூம் சாவி” என்று கிளம்பும் போது தான் ஆதி அவனிடம் அதைக் கொடுத்திருந்தான்.
கதிர் அறைக்கு சென்றுவிட நயனா பின்னால் வருகிறாளா இல்லையா என்பதை கவனிக்காமலே சென்றுவிட்டான்.
அறைக்கதவை திறந்து உள்ளே வந்த பின்னே தான் அங்கிருந்த அலங்காரத்தை கண்டு நினைவு வந்தவனாக நயனாவை தேட அவள் அருகில் இல்லை.
அவசரமாய் கதவை சாற்றிவிட்டு வெளியில் வந்தவன் தூரமாய் அவளும் விலோசனாவும் பேசுவதை கண்டு நிம்மதியடைந்தவனாக சற்று தள்ளி நின்றுக் கொண்டான்.
ஆதி அவன் அறைக்கதவை திறந்து கொண்டு வந்தான். இன்னமும் விலோசனாவும் நயனாவும் பேசுவதை கண்டவன் கொஞ்சம் தள்ளி கதிர் நிற்கவும் அவனிடம் சென்றான்.
“இங்க எதுக்கு நிக்கறே??”
“இல்லைடா பேசிட்டு இருக்காங்க அதான்…”
“நீ ரூமுக்கு போ, சனா கூட்டிட்டு வருவா”
“இந்த பார்மாலிட்டி இப்போ ரொம்ப முக்கியமாடா”
“அடேய் மடையா இது பார்மாலிட்டிக்காக செய்யலை. நயனா என்ன மனநிலையில இருக்கான்னு உனக்கு தெரியும் தானே. நீ கல்யாணத்துக்கு முன்னாடியே அவகிட்ட பேசியிருக்கணும்”
“நான் தலைகீழாகத் தான் குதிப்பேன்னு கவுண்டமணி சொன்ன மாதிரி, கல்யாணத்துக்கு அப்புறம் தான் பேசுவேன்னு சொல்லிட்டே”
“அவ இருக்கற கடுப்புக்கு கோவை சரளா வடிவேலை பர்ஸ்ட் நைட்ல தூக்கி போட்டு மிதிச்ச மாதிரி மிதிச்சிட்டா என்ன செய்ய, அதுக்கு தான் அவளுக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு இருக்கா என் பொண்டாட்டி”
“நல்லா எக்சாம்பிள் கொடுக்குறடா… சிறப்பு”
“நீ போ நான் அனுப்பி வைக்குறேன்” என்று ஆதித்யன் சொல்ல கதிர் நகர்ந்தான்.
“வாழ்த்துக்கள்டா கதிர்”
“எதுக்குடா அடி வாங்குறதுக்கா??”
“எல்லாத்துக்கும் தான்… கண்டிப்பா நீ அடி வாங்க மாட்டே, நயனா அப்படியெல்லாம் இல்லை. இருந்தாலும் எதுவும் சொல்றதுக்கு இல்லை”
“பேசி டைம் வேஸ்ட் பண்ணாத அனுப்பி வை…”
“டேய் நான் உன் பிரண்ட்டா”
“நீ மாமாடா”
“என்னது??”
“என் பொண்டாட்டிக்கு சொன்னேன்” என்று சிரித்துவிட்டு அறைக்குள் ஓடி மறைந்தான் கதிர்.
“நயன் சொல்றது எல்லாம் புரிஞ்சுதா??”
“நீ சொல்லி முடிச்சிட்டியா இல்லை இன்னும் இருக்கா??”
“நான் என்ன கதையா சொல்லிட்டு இருந்தேன்”
“வேற எப்படி தெரிஞ்சுதாம் உனக்கு”
“ஏன்டி”
“போ விலோ செம கடுப்பிலே இருக்கேன். நீ மட்டும் நான் அட்வைஸ் பண்ணதெல்லாம் கேட்டியா என்ன?? நான் மட்டும் கேட்கணுமா??”
“நயன் எங்க கதை வேற”
“அதே தான் சொல்றேன் எனக்கு அட்வைஸ் பண்றேன்னு நீ எதாச்சும் சொல்லாத. எங்க கதையே வேற?? நாங்க அடிச்சுக்குவோம் பிடிச்சுக்குவோம் இதுக்கெல்லாம் நீங்க யாரும் குறுக்கால வந்து அறிவுரை சொல்றேன்னு வந்தா விழுகற அடிக்கு நான் பொறுப்பில்லை சொல்லிட்டேன்”
“என்ன பேசி முடிச்சாச்சா??” என்று வந்தான் ஆதித்யன்.
“உங்க வேலை தானா மாமா இதெல்லாம்”
“எதும்மா நயனா??”
“உங்ககிட்ட சொன்னேனா எனக்கு அட்வைஸ் வேணும்ன்னு”
“அதுக்கும் எனக்கும் கொஞ்சமும் சம்மந்தமில்லை. அது முழுக்க முழுக்க உங்க அக்காவோட திருவிளையாடல்”
“ஏன்டி அவரை இதுல இழுக்கறே?? நான் உன்கிட்ட தானே பேசிட்டு இருந்தேன்” என்றாள் விலோசனா.
“மாமா உங்க பொண்டாட்டி கூட்டிட்டு செகண்ட் ஹனிமூன்க்கு கிளம்புங்க. எனக்கு அறிவுரை சொல்ற வேலை எல்லாம் வேணாம்ன்னு சொல்லிடுங்க”
“உனக்கு நான் சொல்லாம வேற யாருடி சொல்வா??”
“இந்த விஷயத்துல யார் என்ன சொன்னாலும் நான் டென்ஷன் ஆகிடுவேன் பேசாம கிளம்புற வழியை பாருங்க…”
“நீங்க சொன்ன மாதிரி தயாராகிட்டேன்ல அத்தோட விடுங்க. இதுக்கு மேல பேசிட்டு இருந்தா நான் நேரா கொடைக்கானல் பஸ் ஸ்டாண்ட் போயி உட்கார்ந்துப்பேன். காலையில முத பஸ்ஸை பிடிச்சு ஊருக்கு போய்டுவேன், அவ்வளவு தான் பார்த்துக்க” என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்ல விலோசனா முகம் வாடினாள்.
ஆதிக்கு தன் மனைவியை அவமானப்படுத்துவது போல் நயனா பேசியது பிடிக்கவில்லை. லேசாய் முகம் கன்றியது அவனுக்கு. 
“சனா நீ கிளம்பு உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை” என்று சொல்லிய ஆதி “சாரிம்மா” என்றுவிட்டு அவளை கூட்டிக் கொண்டு சென்றான்.
நயனா இருந்த கடுப்பில் அதையெல்லாம் கவனித்திருக்கவில்லை. அதே கோபத்தோடே அவள் அறைக்கதவை திறந்துக் கொண்டு உள்ளே வர செங்கதிர் சாவகாசமாய் மொபைலில் ஏதோ காமெடியை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான்.
‘வண்ண நிலவே வா வஞ்சிக் கொடியே வா, வசந்த மண்டபமே வா…’ என்று அதில் டயலாக் வர ஆதி சொன்னது போல தானும் இப்படித்தான் அவளிடம் அடிவாங்குவோமோ என்று நினைத்து நினைத்து சிரித்தான் அவன்.
நயனா அறைக்கதவை மூடிவிட்டு வந்தவள் அறையின் அலங்காரத்தை கண்டுவிட்டு ‘இது ஒண்ணு தான் இப்போ குறைச்சல்’ என்று முணுமுணுத்தவாறே கட்டிலின் மறுபுறம் சென்று படுத்துக் கொண்டாள்.
அருகே கேட்ட சத்தத்தில் மொபைலை அணைத்து ஒரு ஓரமாய் வைத்தான் கதிர்.
“எப்போ வந்தே??”
“வேற காமெடி சீன் எதுவும் கிடைக்கலையா?? பார்க்க வேண்டியது தானே” என்றாள் நக்கலாய்.
“அது சும்மா பொழுது போகலைன்னு பார்த்தேன்”
“என்ன அதுக்குள்ள படுத்திட்டே”
“தூக்கம் வருது படுக்காம என்ன செய்ய??”
“என்கிட்ட உனக்கு கேட்க எதுவுமில்லையா??”
“நான் என்ன கேட்கணும் உங்ககிட்ட”
“கோவமா இருக்கியா”
“இல்லை ரொம்ப ரொம்ப கோவமா இருக்கேன்”
“நயனா” என்றவன் படுத்திருந்தவளின் தலை வருட சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
“என்ன வேணும் இப்போ உங்களுக்கு??”
“உன்கிட்ட பேசணும்”
“நான் எதிர்பார்க்கும் போது நீங்க சொல்லலைல்ல இப்போ எனக்கு கேட்க வேணாம் போங்க. எனக்கு தெரிய வேணாம்ன்னு தானே சொல்லலை. நான் எப்பமோ அதை தெரிஞ்சுக்க விரும்பலை” என்றாள் சற்றே கரகரத்த குரலில்.
“நீ கேட்கலைன்னு சொன்னா நான் அப்படியே விட்டிடுவேனா” என்றவன் அவளை தன் புறம் இழுக்க தடுமாறி அவன் மேலே விழப் போனவள் சமாளித்து கையை ஊன்றி அருகே அமர்ந்தாள்.
“எதுக்கு இப்படி அடாவடித்தனம் பண்றீங்க??”
“நானா??”
“நீங்க தான்… ரொம்ப புதுசா தெரியறீங்க, நீங்க இப்படி கிடையாது. உங்க பேச்சுல செயல்ல எப்பவும் ஒரு நிதானமிருக்கும். என்னோட கதிர் அப்படித்தான் இருப்பார்” என்று அவள் சொல்ல அவன் புன்னகை விரிந்தது.
“உண்மையை சொல்லவா இது தான் நான். எனக்கு வேண்டியவங்ககிட்ட தானே நான் சுயமா இருப்பேன். என்னோட விருப்பு வெறுப்பு கோப தாபம் எல்லாம் உன்கிட்ட காட்டாம வேற யாருகிட்ட காட்டுறதாம்” என்று அவன் சொல்ல அமைதியானாள் அவள்.
“நயனா ப்ளீஸ்”
“ப்ளீஸ்ங்க என்னை விட்டிடுங்க” என்று அவள் சொல்லிவிட அதற்கு மேல் அவளை தொந்திரவு செய்ய அவன் விரும்பவில்லை. 
ஒரு பெருமூச்சுடன் நகர்ந்தவன் “நான் கொஞ்சம் வெளிய போயிட்டு வர்றேன்” என்றுவிட்டு அவன் கதவை திறக்கப் போக “இந்த நேரத்துல எங்க போறீங்க??”
“நீ எதுக்கு அதை கேட்கறே??”
“நான் கேட்காம வேற யாரு கேட்பா…” என்று அவள் சொல்ல அவன் புன்னகையை வாய்க்குள்ளேயே அடக்கிக் கொண்டான்.
“நீயும் வேணா என்கூட வாங்கிங் வா, வர்றியா??” என்றவன் கை நீட்ட ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.
அவளிடம் பதில் இல்லாது போக தோளை குலுக்கிக் கொண்ட கதிர் வெளியே செல்லப் போக “நானும் வர்றேன்” என்றவள் ஷால் ஒன்றை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு அவனுடன் சென்றாள்.
அந்த ரிசார்ட்டை சுற்றியிருந்த நடைப்பாதையிலேயே இருவரும் நடந்துக் கொண்டிருந்தனர். வாய் மொழி இல்லை ஆனால் இருவர் மனமும் மற்றவர் அருகாமையை அந்த நொடி ரசித்துக் கொண்டிருந்தது.
குளிர் அவள் அணிந்திருந்த ஷாலையும் மீறி உடலை துளைத்தது. அங்கு ஓரமாய் போட்டிருந்த பெஞ்ச் ஒன்றை காண்பித்து “கொஞ்ச நேரம் இங்க உட்காரலாமா??” என்று கேட்க அவள் தலையசைத்தாள்.
அவள் அமரவும் அருகே அமர்ந்து அவள் மடி மீது தலை வைத்துக் கொண்டான் செங்கதிர். அதை அவள் எதிர்பார்க்காததால் சட்டென்று உடலில் ஒரு உஷ்ணம் பரவியது அவளுக்கு. அவனை விலக்க முடியவில்லை அவளால். அவன் கண்ணை மூடி படுத்திருந்தான்.
சில நொடி அமைதியாய் வேடிக்கை பார்த்தவளின் கரம் அவன் தலையை மெல்லக் கோத அவன் விழி மணிகள் அசைந்தது. கண்ணை திறந்து பார்த்தான்.
“உனக்கு இன்னும் என் மேல கோபமா??”
“இல்லை”
“நான் சொல்றதை நிதானமா கேட்பியா??”
விரக்தியான சிரிப்பொன்றை உதிர்த்தாள். “உங்க மேல கோபமில்லைன்னு சொன்னேன் தான். ஆனா நிறைய வருத்தமிருக்கு”
“எதனால??”
“என்கிட்ட நீங்க ஏன் எதையும் சொல்லணும்ன்னு நினைக்கலை??”
“இங்க வைச்சு பேச வேணாம் ரூமுக்கு போவோம்” என்றவன் எழுந்து அமர்ந்தான்.
“இல்லை நான் வரலை. இங்க கொஞ்ச நேரம் இருக்கணும் போல இருக்கு”
“உனக்கு குளிருதுன்னு நினைக்கிறேன். ரொம்ப சில்லுன்னு இருக்கு உன்னோட கை” என்று சொல்லி அவள் கரத்துடன் தன் கரத்தை கோர்த்தான். அவனின் கரத்தில் இருந்த சூடு அவளுக்கு இதமாக இருந்தது.
அதற்கு மேல் அவள் வீம்பாய் எதுவும் சொல்லவில்லை. அவனுடன் நடக்க அவள் தோளை அணைத்தவாறே அவன் நடக்க அறைக்கு சென்றனர்.
அறைக்குள் வந்து சில நொடிகளும் ஓடிப் போனது. நயனா அமைதியாகவே இருந்தாள். கதிர் அவள் முகத்தை தான் பார்த்திருந்தான்.
“நயனா பேச மாட்டியா??”
“என்ன பேசன்னு எனக்கு தெரியலை??”
“உன்கிட்ட நான் சாரி எல்லாம் சொல்ல மாட்டேன். அதை நீ எதிர்பார்த்திருந்தா அதுக்கு நான் பொறுப்பு கிடையாது” என்று ஆரம்பித்தான்.
“உங்க சாரி ஒண்ணும் எனக்கு வேணாம். நான் அதை எதிர்பார்க்கவும் இல்லை. நமக்குள்ள சாரிங்கற ஒரு விஷயம் வர்றதை நான் இப்போ இல்லை எப்பவும் விரும்ப மாட்டேன்” என்றாள்
“இங்க வா”
“அங்க இருந்தே சொல்லுங்க”
“நீ என் பொண்டாட்டி உன்னை தூரமாய் வைச்சுக்கிட்டு வேடிக்கை பார்க்க சொல்றியா??”
“உங்களை நான் விரும்பினேன். நீங்க என்கிட்ட வேணாம்ன்னு சொன்னீங்க உங்களை தூரமா வைச்சுட்டு நான் வேடிக்கை தானே பார்த்தேன். இப்போ நீங்களும் பாருங்க” என்ற அவளின் பதிலில் அவன் அயர்ந்து போனாலும் மனதிற்குள் அவளை மெச்சிக்கொள்ளவே செய்தான்.
“அதுக்காக என்னை சோதிக்கறியா??”
“இப்போ என்ன எதிர்பார்க்கறீங்க என்கிட்ட, எனக்கு மனசு சரியில்லை. என்னால இயல்பா உங்க கூட இருக்க முடியலை”
“எனக்கு தெரியுது நீங்க என்னை விரும்பறீங்கன்னு. அதை ஏன் என்கிட்ட நீங்க முன்னாடியே சொல்லலை. நான் சந்தோசப்பட்டிருவேன்னு நினைச்சு தான் சொல்லலையா”
“நயனா உன்கிட்ட சொல்லாதது தப்பு தான் இல்லைன்னு சொல்லலை. ஆனா உனக்கு ஒரு பொய்யான நம்பிக்கையை கொடுத்திட்டு அது நடக்கலைன்னா கஷ்டப்படப் போறது நீயும் நானும் தானே. அதுக்காக தான் சொல்லலை”
“நம்ம கல்யாணம் ஒண்ணும் லேசா நடந்திடலை. அது  நடக்க கொஞ்ச நஞ்ச வேலையா பார்த்தோம். எவ்வளவோ யோசிச்சு ஒவ்வொண்ணும் செஞ்சோம்ன்னு தெரியுமா”
“இதுல அம்மாக்கு நம்ம கல்யாணம் வேணாம்ன்னு எங்கயும் தோணிட கூடாதுன்னு ஒவ்வொரு நிமிஷமும் பயம் இருந்துச்சு எனக்கு. அதெல்லாம் உனக்கு சொல்லி புரியாது, என்னோட வலியும் உனக்கு தெரியாது” என்றவனின் முகம் அந்த வேதனையை காட்ட நயனா அவனையே பார்த்தாள்.

Advertisement