Advertisement

“ஆமா நயனா அது தெரியாதுல உனக்கு. சார்க்கு என் மேல செம கோபம், என்கிட்ட சண்டை போட்டு சரியா கூட பேசலை தெரியுமா” என்றான் ஆதி.
“டேய் அது அன்னைக்கு நீ பண்ண வேலையால கோபப்பட்டேன். நீ எனக்கு பிரண்டா பேசலைன்னு கோபம்”
“இப்பவும் அன்னைக்கு நான் பேசினதுக்கு எந்த மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏன் தெரியுமா??”
“இருங்க இருங்க… ஆமா மாமா எதுக்கு இந்த சண்டை நடந்துச்சு??”
“எந்த சண்டையை கேட்கறே நயனா??”
“யாரோ உங்க மேல கோபப்பட்டாங்க சொன்னீங்களே??” என்று அவள் சொல்லவும் நன்றாகவே திரும்பி நயனாவை முறைத்தான் செங்கதிர்.
பின்னே அவன் யாரோவாக இருந்த போதே அவள் அவனை விட்டுக்கொடுத்து பேசியதில்லை. இப்போது அவளின் கணவனாகிவிட்டான் ஆனால் யாரோ என்று பேசுகிறாளே என்று கோபம் வந்தது அவனுக்கு.
“யாரோன்னு சொல்லக்கூடாது நயனா அவன் இப்போ உன்னோட புருஷன்” என்று பேச்சில் அவளுக்கு ஒரு கொட்டு வைத்தே தான் ஆரம்பித்தான் ஆதித்யன்.
“உங்க விஷயம் தெரிஞ்சதும் நான் இவன்கிட்ட பேசப் போனேன். சீக்கிரம் கல்யாணம் முடிச்சிடலாம் அது தான் ரெண்டு பேருக்கும் நல்லது. எதுக்கு நயனாவை வெயிட் பண்ண வைக்கிறேன்னு ஒரு வார்த்தை சேர்த்து சொல்லிட்டேன்”
“அது சார்க்கு கோபம் நீ எனக்காக பேசலை. அப்போ உனக்கு நான் முக்கியம் இல்லையா, நீ மாமாவா தான் இங்க வந்திருக்கேன்னு ஒரே சண்டை”
“என்னது மாமாவா??”
“உன் சார்பா பேசினேன்ல அதைச் சொன்னான்”
“ஓ!!”
“ஏன் கதிர் வர வர நீ என்னை மாதிரி மாறிட்டு போறே. நான் கோபத்தை எல்லாம் குறைச்சுட்டேன். சரி கதிர் உனக்கு இன்னும் என் மேல அதே கோபமிருக்கா?? நான் உனக்காகவும் பேசினேன்னு உனக்கு புரியலையா??”
“அப்போ எனக்கு கோபம் தான்டா இல்லைன்னு சொல்ல மாட்டேன். எனக்கு தெரியும் நீ எனக்காகவும் தான் சொன்னேன்னு”
“என்னால எதுவும் செய்ய முடியலைன்னு ஒரு கோபம் என் மேலேயே. அந்த கோபத்தை தான் உன்கிட்ட காட்டிட்டேன் ஆதி, ரொம்ப சாரிடா”
“அடச்சீய் சாரி கேட்கறானாம் சாரி போடா” என்றான் ஆதி.
‘ஓ!! இவங்க நம்ம விஷயம் பேசி சண்டை வேற போட்டிருக்காங்களா’ என்று அதே யோசித்துக் கொண்டிருந்தாள் நயனா.
கொடைக்கானல் மலையேற ஆரம்பித்திருந்தனர். ஒவ்வொரு வளைவுகளில் திரும்பும் போதும் கண்ணை மூடிக் கொண்டாள் நயனா. அதை தற்செயலாய் கண்டுக்கொண்டான் அவள் கணவன்.
“டீ குடிக்கலாமா ஆதி அடுத்து வர்ற இடத்துல எங்காச்சும் நிறுத்தேன்” என்றான் கதிர்.
“ஓகேடா” என்ற ஆதி சில வளைவுகள் கடந்து மேலே ஏற ஓரிடத்தில் டீக்கடையை கண்டுவிட்டு நிறுத்தினான்.
வண்டியை ஓரிடத்தில் நிறுத்தியவன் “வாங்க போவோம்” என்றுவிட்டு கீழே இறங்கினான்.
“எனக்கு எதுவும் வேணாம் நான் வண்டியிலேயே இருக்கேன்” என்று நயனா சொல்லிவிட கதிர் தோளை குலுக்கிக் கொண்டான்.
“நாம போவோம்” என்று அவன் சொல்லிவிட மற்ற மூவரும் கடைக்குச் சென்றனர்.
செங்கதிர் ஸ்டைலாக கூலிங்கிளாஸ் ஒன்றை மாட்டிக்கொண்டு எங்கோ வேடிக்கை பார்த்துக்கொண்டே தேநீரை பருகிக் கொண்டிருந்தான். 
‘மூஞ்சியை பாரு கண்ணாடி வேற யாரை பார்க்குறார்ன்னே தெரியலை’ என்று புலம்பியது நயனாவே தான். அவள் இறங்கி வரவில்லையே தவிர இவர்களைத் தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதை கண்டுவிட்ட ஆதி அவன் டீயை குடித்து முடித்ததும் நயனாவிடம் சென்று பேசினான். 
“நயனா”
“மாமா”
“நானே உனக்கு டீ வாங்கிட்டு வரட்டுமா. நல்லா இருக்குமா, உங்க அக்காவை பாரு பஜ்ஜி வேற வாங்கி சாப்பிட்டு இருக்கா, நல்லா இருக்குன்னு சொன்னா. உனக்கு வாங்கிட்டு வரவா” என்றான்.
“என் புருஷனுக்கே என்னை பத்தி அக்கறை இல்லை. எனக்கு எதுவும் வேணாம் மாமா”
“நயனா”
“எனக்கு வேணாம் மாமா. அப்படியே குடிக்கணும்ன்னா என் புருஷனே எனக்கு வாங்கித் தரட்டும்” என்றாள்.
“ஏன்மா நான்லாம் வாங்கிக் கொடுத்தா குடிக்க மாட்டியா நீ??”
“நீங்க எதுவும் தப்பா நினைக்காதீங்க மாமா ப்ளீஸ்” என்று பாவம் போல் முகத்தை வைத்து சொல்ல ஆதி நகர்ந்தான்.
“மாமா” என்று இவள் அழைக்க திரும்பி பார்த்தான் என்னவென்பது போல்.
“நான் சொன்னேன்னு அவர்கிட்ட சொல்லாதீங்க. அவரே வாங்கிட்டு வரட்டும் இல்லைன்னா விடுங்க” என்றாள்.
‘இதுகளுக்கு நடுவுல சிக்கிட்டு நான் படுற அவஸ்தை கடவுளே கொஞ்சம் கருணை காட்டு. எப்படி இருந்த ஆதி நீ இப்போ இப்படி ஆகிட்டியே’ என்று தன்னைக் குறித்தே புலம்பினான் ஆதித்யன்.
அவன் திரும்பி இவர்களை நோக்கி வர “அண்ணே ஒரு டீ” என்று உள்ளே குரல் கொடுத்தான் கதிர். 
“இப்போ தானேடா குடிச்ச மறுபடியும் எதுக்கு??”
“எனக்கில்லை அவளுக்கு”
ஆதி தனக்குள் சிரித்துக் கொண்டான். சரியான ஜோடி தான் என்று சொல்லிக்கொண்டான்.
“அவ்வளவு தானே பே பண்ணிடவா??”
“வேணாம் நானே கொடுத்திட்டேன்” என்றுவிட்டு இரண்டு பஜ்ஜியையும் வாங்கிக் கொண்டு அவளை நோக்கிச் சென்றான்.
நயனா அவன் வருவதை தூரத்தே பார்த்துவிட்டாலும் கண்டுக்கொள்ளாது போல வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.
“டீ குடி” என்று நீட்டினான் செங்கதிர்.
“எனக்கு வேணாம்”
“ஏன்??”
“மாமா சொல்லியிருப்பாங்க அதான் வாங்கிட்டு வர்றீங்க??”
“உங்க மாமா பேச்சை எடுக்காம உன்னால பேச முடியாதா… அப்புறம் என்ன சொன்னே, அவன் சொல்லித்தான் நான் என் பொண்டாட்டிக்கு டீ வாங்கி கொடுக்கணுமா என்ன??”
“இப்போ தான் உங்களுக்கு என் ஞாபகம் வருதோ”
“பேச்சை வளர்த்தாம குடி, நம்ம சண்டை எல்லாம் அப்புறம் வைச்சுக்கலாம்” என்றவன் அவன் வாங்கி வந்ததை அவளிடம் நீட்டினான்.
அதற்கு மேலும் பிடிவாதம் பிடிக்காமல் அதை வாங்கிக்கொண்டாள்.
“இந்த கொடைக்கானல் குளிர்ல கூலிங்கிளாஸ் எதுக்கு??” என்றாள் டீயை ஊதிக் குடித்தவாறே.
“நான் பார்க்கறது தெரியக்கூடாதுன்னு தான்”
“யாரை பார்த்தீங்க அப்படி??” என்று எட்டி வெளியில் பார்த்தாள்.
“உன்னைத்தான்…” என்று அவன் சொல்லவும் வாயை இறுக மூடிக்கொண்டாள்.
“ஏங்க??”
“என்ன சனா??”
“நிஜமாவே அவங்க லவ் பண்ணாங்களா??”
“ஏன் உனக்கு அப்படியொரு சந்தேகம்??”
“இல்லை ரெண்டு பேரும் நேரடியா பேசிக்க கூட மாட்டேங்குறாங்க. அவங்களை பார்த்தா லவ் பண்ணாங்கன்னு சொல்லவே முடியலை, எப்பவும் முறைச்சிட்டே இருக்காங்க, என்னமோ மிஸ் ஆகுது” என்றாள்.
“பேசிக்கலைன்னா லவ் இல்லைன்னு அர்த்தமா என்ன?? நம்ம கல்யாணம் முடிச்சு வந்தப்போ நம்ம என்ன பேசிக்கிட்டா இருந்தோம்”
“நம்ம கதை வேற??”
“எப்படி நமக்கும் ஒரு கதை இருந்துச்சோ அது மாதிரி அவங்களுக்கும் ஒரு கதை இருக்கும். அது அவங்க பாடு நீ ரொம்ப யோசிக்காத உன் தங்கச்சி சந்தோசமாவே இருப்பா சரியா” என்றவாறே மனைவியின் தோளில் கைப்போட்டுக் கொண்டு வந்தான் ஆதித்யன்.
அவன் காரை நோக்கி வரவும் கதிர் தன் மனைவிடமிருந்த டீ கிளாசை வாங்கிக்கொண்டு கடையை நோக்கிச் சென்றவன் சில நொடிகளில் திரும்பி வந்தான்.
ஆதி காரில் ஏறி அமர்ந்தவன் “இப்போ நாம ஒரு சின்ன ஸ்வாப் பண்ணிக்கலாமா”
“என்னடா சொல்றே??”
“சனா இங்க வந்து உட்காரட்டும், நீ பின்னாடி உட்கார்ந்துக்கோடா” என்றான்.
“ஏன்??”
“உன் கூட பேசிட்டு வர்றது போரடிக்குதுன்னு உண்மையை சொல்ல முடியுமா. என் பொண்டாட்டி கூட ரொமான்ஸ் பண்ணலாம்ன்னா விடுறியாடா கேள்வி கேட்குறான்”
கதிர் அதற்கு மேல் ஒன்றும் கேட்கவில்லை சிரித்துக்கொண்டே பின்னால் உட்கார்ந்துக் கொண்டான். நயனா அவனை முறைத்தவள் வேறு புறம் திரும்பி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள். 
கதிர் அமர்ந்தவன் அவள் இடக்கரத்தை தன் வலக்கையினால் பற்றிக்கொள்ள போக அதை உணர்ந்தவளாக அதிலிருந்து விடுபட அவள் எடுத்த முயற்சி வீணானது.
கதிர் கள்ளச்சிரிப்புடன் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அடுத்து வந்த வளைவில் நயனா கண்ணை மூடிக்கொள்ள அவளை சற்று நெருங்கி அமர்ந்து தோளோடு கைபோட்டு தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
முதலில் என்னவோவென்று நிமிர்ந்து பார்த்தவள் பின் வசதியாக அவன் மீதே சாய்ந்துக் கொண்டாள். சிறிது நேரத்தில் தூக்கம் வந்துவிட அவள் சரிந்து விழ சற்று நகர்ந்து அமர்ந்தவன் தன் மடி மீது அவளை படுக்க வைத்தான்.
ஆதி தன் மனைவிடம் கண்களால் சைகை செய்தான் அங்க பாரு என்று. கண்டும் காணாமல் அவளும் மெதுவாய் திரும்பி பார்த்தவள் லேசாய் புன்னகைத்துக் கொண்டாள்.
ஒரு வழியாய் அவர்கள் கொடைக்கானல் வந்தடைந்தனர். ஏழரை மணியளவில் அங்கு வந்து சேர்ந்திருந்தனர். இன்னமும் உறங்கிக் கொண்டிருந்த நயனாவை மெதுவாய் தட்டி எழுப்பினான் கதிர்.
அலங்க மலங்க விழித்தவள் எழுந்து அமர்ந்தாள். “ரிசார்ட் வந்தாச்சு அதான் எழுப்பினேன்” என்றுவிட்டு அவன் கதவை திறந்து இறங்கிக்கொள்ள அவளும் இறங்கினாள்.

Advertisement