Advertisement

24
அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா மற்றொரு அறையில் இருந்தாள். கதிரின் நினைவடுக்கில் பல விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது.
முக்கியமாய் காலையில் தன் அன்னையிடம் பேசியதை அவனால் மறக்கவே முடியாது. அதை இப்போது நினைத்தாலும் முகத்தில் லேசாய் ஒரு புன்னகை அரும்பியது அவனுக்கு. அந்நினைவுகள் நிழலாக ஓடியது.
————————–
பட்டுவேட்டி சட்டையை அணிந்துக் கொண்டவன் தயாராகி நின்றிருந்தான். மனமெல்லாம் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சி அவனை போட்டு அழுத்திக் கொண்டிருந்தது.
அதை தாளாதவனாக தன் தமக்கைக்கு போன் செய்தான். “சொல்லு கதிரு”
“அக்கா அம்மா எங்கே??”
“இங்க தான் இருக்காங்க”
“அவங்களை கூட்டிட்டு என்னோட ரூமுக்கு வா”
“நேரமாவுதுய்யா இன்னும் அரைமணி நேரத்துக்குள்ள தாலி கட்டணும்”
“அக்கா ப்ளீஸ் கூட்டிட்டு வா சீக்கிரம்”
“இதோ வர்றேன்” என்ற பூங்கோதை தன் அன்னையை அழைத்துக்கொண்டு கதிரின் அறைக்கு சென்றாள். அங்கிருந்த ஓரிருவர் இவர்களை கண்டு நகர கதிர் மட்டும் அமர்ந்திருந்தான்.
பூங்கோதை அவனிடம் கண்களால் ‘என்ன’ என்று கேட்க ‘இரு’ என்று சைகை செய்தான் அவனும்.
“என்ன கதிரு நேரமாவுது நீ இங்க வர சொன்னேன்னு அக்கா சொன்னா. என்னப்பா விஷயம்??” என்றார் ராஜாத்தி.
எழுந்து வந்து அவர் காலில் விழுந்தான் செங்கதிர். “என்னை மன்னிச்சிடுங்கம்மா” என்று.
“என்ன என்ன கதிர் சொல்றே?? எழுந்திருப்பா முதல்ல” என்று சொல்லி எழுப்பிவிட்டார்.
“கதிரு” என்றழைத்தாள் பூங்கோதை.
“அக்கா ப்ளீஸ் நான் அம்மாகிட்ட எல்லாம் சொல்லிடலாம்ன்னு இருக்கேன்”
“கதிரு என்னய்யா நான் பேசிக்கறேன் அம்மாகிட்ட”
“இல்லைக்கா நானே சொன்னா தான் எனக்கு நிம்மதி”
“என்னன்னு சொல்லுங்களேன் யாராச்சும், என்னென்னவோ நினைக்க தோணுது எனக்கு” என்றார் ராஜாத்தி படபடப்பாய்.
“அம்மா எனக்கு அவளை பிடிக்கும்மா”
ராஜாத்திக்கு நிஜமாகவே ஒன்றும் புரியவில்லை. அதை அவர் பார்வையே சொல்லிவிட கதிர் தெளிவாய் விளக்கினான்.
“நயனாவை எனக்கு சில மாசங்களா தெரியும்மா. எனக்கு அவளை பிடிச்சிருந்துச்சு. அவளுக்கு இதுவரைக்கும் நான் எந்தவொரு வாக்கும் கொடுத்ததில்லை”
“அவளை கல்யாணம் பண்ணிக்கறேன்னோ பிடிச்சிருக்குன்னோ எதுவும் சொன்னதில்லை. இப்போ வரைக்கும் என் மனசுல என்ன இருக்குன்னு கூட அவளுக்கு தெரியாது”
“உங்க மனசை கஷ்டப்படுத்தி நான் சந்தோசமா வாழ முடியாதுல்லம்மா. அதனால தான் நான் எதையும் யோசிச்சதில்லை”
“ஏதோவொரு சந்தர்ப்பத்துல நான் என்னையறியாம அவளுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்திட்டேன். என்னோட அந்த செயல் தான் என்னை இப்போ தப்பு பண்ண வைச்சது”
“நீங்க… நீங்க நினைக்கிற மாதிரி இந்த கல்யாணம் அரேன்ஜ் மேரேஜ் இல்லைம்மா. நான் சொல்லித்தான் அக்கா இந்த கல்யாணத்தை ஏற்பாடு பண்ணா”
“உங்க மனசு வருத்தப்படாம இந்த கல்யாணம் நடக்கணும்ன்னு தான் நயனா மாமாக்கு தூரத்து சொந்தம் அது இதுன்னு சொல்லி அக்கா இந்த கல்யாணத்தை பேசி முடிச்சா”
“உங்களுக்கு லவ் மேரேஜ் பிடிக்காதுன்னு தான் இப்படி செஞ்சோம்மா. நாங்க பண்ணது ரொம்ப தப்பு தான்மா எங்களை மன்னிச்சுடுங்க. நீங்க இதுக்காக அக்காவை கோவிக்காதீங்கம்மா. தப்பு எல்லாம் என்னோடது தான்”
“நீங்க என்னை நம்பணும், நான் உங்க பையன்ம்மா. எப்பவும் தப்பு பண்ண மாட்டேன்ம்மா. உங்ககிட்ட சொல்லாம கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனா எனக்கு மனசு கேட்கலைம்மா”
“அதான் எல்லாமே சொல்லிட்டேன்ம்மா. அக்கா சாரிக்கா”
ராஜாத்தியோ மகன் அவன் மனதில் உள்ளதை சொல்லச் சொல்ல அப்படியே சிலை போல அமர்ந்திருந்தார்.
“அம்மா எதாச்சும் பேசுங்கம்மா. இந்த கல்யாணம் வேணாம்ன்னு நீங்க நினைக்கறீங்களாம்மா” என்று அவன் சொல்லவும் ராஜாத்தி தன் கையால் அவன் வாயை மூடினார்.
அவர் இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. பூங்கோதை தன் அன்னையின் அருகே வந்து “அம்மா” என்றழைக்க திரும்பி பார்த்தார்.
“ஏதாச்சும் பேசுங்கம்மா தம்பி பாவம்மா. அவனுக்கு பிடிச்ச வாழ்க்கையை நாம அமைச்சுக் கொடுக்கலைன்னா அப்புறம் என்ன இருக்கு சொல்லுங்கம்மா…”
“இத்தனை வருஷமா நமக்காக எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கான்ம்மா. நான் அன்னைக்கே உங்ககிட்ட சொன்னேன்லமா அவனுக்கு யாரோட கல்யாணம் நடந்தாலும் அது அவன் விருப்பப்படி நடக்கணும்ன்னு”
“இப்பவும் அவன் நம்ம விருப்பத்தை கேட்டுட்டு தான்மா செய்ய நினைக்கிறான்”
“பூங்கோதை எனக்கு புரியுது. நான் ஒண்ணும் பெரிய வில்லி எல்லாம் இல்லை. எதுவும் தப்பா நடந்திடக் கூடாதுன்னு தான் நான் நினைச்சேனே தவிர என் புள்ளைக்கு விருப்பமில்லாததை நான் எப்பவும் செய்யணும்ன்னு நினைக்கலை”
“நாளைக்கு இன்னொருத்தி வந்து உங்க அக்கா தம்பி உறவுக்குள்ள பிரச்சனை பண்ணிடுவாளோ உங்களுக்குள்ள எந்தவொரு உறவும் இல்லாம போயிருமோ இப்படியெல்லாம் தான் நான் யோசிச்சேன்”
“இப்போ நடந்திருக்கறதை பார்க்கும் போது அப்படி எதுவும் எப்பவும் நடக்காதுன்னு எனக்கு புரியுது. தம்பிக்காக நீ பார்க்கற, உன்னை ஒண்ணும் சொல்லிடக் கூடாதுன்னு அவன் நினைக்கிறான்”
“எம் புள்ளைங்க சந்தோசம் தான் எனக்கு எப்பவும் முக்கியம். இந்த கல்யாணத்துல எனக்கு முழு சம்மதம். நீங்க ரெண்டு பேரும் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை”
“கதிரு முகத்தை துடைச்சுட்டு பவுடர் போட்டுட்டு போய் நிம்மதியா மணமேடையில உட்காருய்யா. அந்த புள்ளைக்கிட்ட நல்லவிதமா பேசு. எத்தனை நாளு எனக்காக பார்த்திட்டு நீ பேசாம இருந்தியோ”
“எல்லாத்துக்கும் நான் தான் காரணம், என்னோட தேவையில்லாத நம்பிக்கையும் காரணம். போனது போகட்டும். இனிமே நடக்கறது எல்லாம் நல்லதாவே நடக்கட்டும்” என்றார்.
வெளியில் கதவு தட்டும் சத்தம் கேட்க “ஆளுக உன்னை கூப்பிட வந்திருப்பாக, நீ முகத்தை சரி பண்ணிட்டு கிளம்புய்யா” என்று ராஜாத்தி சொல்ல செங்கதிரின் முகம் அளவில்லா உவகை கொண்டது. தன் தாயை ஒரு முறை கட்டியணைத்துக் கொண்டவன் தன்னை சரிப்படுத்திக் கொண்டு வெளியில் வந்தான்.
—————————-
அந்நினைவுகளில் இருந்து விடுப்பட்டவனை நித்திரை அழைக்க கண்ணை மூடி உறங்க சித்தமானான்.
ஆதி உள்ளே வந்தவன் மாடியறைக்கு வந்தவன் அங்கிருந்த பூங்கோதையிடம் “அக்கா கதிர் எங்கே??”
“உள்ள ரெஸ்ட் எடுக்கறான் ஆதி”
“ஒரு நாலு மணி போல கொடைக்கானல் கிளம்புற மாதிரி இருக்கும்க்கா சொல்லிடுங்க அவன்கிட்ட”
“சரி ஆதி நான் சொல்லிடறேன். நீயே தான் வண்டி ஓட்டப் போறியா??”
“ஆமாக்கா…”
“டிரைவர் போட்டுக்கலாம்ல”
“லாஸ்ட் டைம் நான் தான்க்கா ஓட்டிட்டு போனேன். நீங்க பயப்படவே வேணாம். சரியா…” என்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜாத்தி வந்துவிட “ஏன்பா ஆதி இன்னைக்கு இங்க இருந்திட்டு நாளைக்கு போகக்கூடாதா… ஒரே அலைச்சலா இருக்குமே”
“அம்மா முதல்லவே போட்ட பிளான் தானேம்மா. நான் பத்திரமா கூட்டிட்டு போறேன், தவிர சனாவும் வர்றா. நயனாக்கும் துணையா இருக்கும்மா”
“சரிப்பா” என்று முடித்துவிட்டார் அவர்.
கதிர் திருமணத்திற்கு முன்பே ஆதி அவர்களுக்காய் ஹனிமூன் ட்ரிப்பை பிளான் செய்துவிட்டிருந்தான். ஆதிக்கு நயனாவின் மனநிலை ஒரளவு புரிந்திருந்தது அவனுக்கு.
மற்றவர்களின் முன்னே அவர்கள் இயல்பாய் காட்டிக்கொண்டாலும் மனம்விட்டு இருவரும் பேசினால் தான் அனைத்தும் சரியாகும் என்று புரிந்ததனாலேயே அப்படியொரு ஏற்பாட்டை செய்திருந்தான்.
 
அருள்செல்வன் ஆதிக்கு முன்பு தன் நண்பரிடம் சொல்லி ரூம் புக் செய்திருந்தது போல இந்த முறையும் செய்திருந்தார்.
ஆதி பிளானை கதிரிடம் சொல்ல அவன் தான் நண்பனும் உடன் வரவேண்டும் என்றிருந்தான். அதனால் தான் ஆதியும் இப்போது அவர்களுடனே கிளம்புகிறான்.
திருமணம் முடிந்த அன்றே கிளம்ப வேண்டும் என்பது கதிரின் விருப்பம். ஆதி இரண்டு நாட்கள் கழித்து கிளம்புவதாக சொல்லியிருக்க கதிர் தான் திருமணம் முடிந்த அன்றே கிளம்பலாம் என்றிருந்தான்.
இரண்டு ஜோடிகளும் தங்களுக்கு தேவையான துணிமணிகளை ஏற்கனவே எடுத்து வைத்திருந்தனர். ஆதி கீழிருந்து குரல் கொடுத்தான்.
“கதிர்”
“இதோ வந்திட்டேன் ஆதி” என்றவாறே அவன் இறங்கி வந்தான்.
நயனாவும் பின்னோடே வந்தாள். தன் உடமைகள் அடங்கிய பையை அவள் தூக்கிக்கொண்டு இறங்க அவளிடமிருந்து அதை வாங்கிக் கொள்ள முயல அவள் கையை விலக்கினாள்.
நிமிர்ந்து அவளை முறைத்தவன் சட்டென்று அவளிடமிருந்து அதை பிடிங்கிக் கொண்டான். அனைவரிடமும் விடைப்பெற்று அவர்கள் காரில் ஏறினர்.
ஆதி வண்டியை ஓட்ட கதிர் அவனருகே அமர்ந்திருந்தான். “என்னடா ஹாப்பியா இப்போ??” என்றான் ஆதித்யன்.
“என்ன ஹாப்பியோ போ??” என்றான் கதிர் பின்னாலிருந்த நயனாவை பார்த்தவாறே.
“ரொம்ப தான் சலிச்சுக்கறே??”
“வேற என்ன செய்ய??”
“மாமா இப்போ எதுக்கு சும்மா பேசிட்டு வர்றீங்க” என்று கடுப்பாய் மொழிந்தாள் நயனா.
“ஆமாமா சும்மா பேசாதடா காசு கொடுத்திட்டு பேசு” என்றான் கதிர்.
“ச்சு போதும்” என்ற ஆதி “உன் கோபமெல்லாம் போயிடுச்சா இப்போ??” என்றான் நண்பனை பார்த்து.
“கோபமா??” என்று பின்னால் இருந்து குரல் கேட்டது மீண்டும்.

Advertisement