Advertisement

23
கதிர் சாவகாசமாய் வண்டியை நிறுத்தியவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
“வண்டியை எதுக்கு அங்க நிறுத்தினீங்க??”
“வேற எங்க நிறுத்தணும்??”
“வாசலுக்கு நேரவா விடுவாங்க??”
“தெரியும் சாவி கொடு, வண்டியை உள்ள நிறுத்தறேன்??”
“என்னது சாவியா??”
“ஆமா கொடு, டைம் ஆகுது” என்றான் அவன்.
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க??”
“வீட்டுக்கு எதுக்கு வருவாங்களாம்”
“வீட்டில இப்போ யாருமில்லை”
“தெரியும், தெரிஞ்சு தானே வந்திருக்கேன்”
“என்னது தெரியுமா??”
“ஆமா தெரியும் நீ சாவியை கொடு” என்றவன் உள்ளே வந்தான். நயனாவோ இன்னும் பிரமை பிடித்தது போலவே நின்றிருந்தாள். ‘எதுக்கு இப்போ இவர் வந்தார் என்கிட்ட பேசவா இல்லை வேற எதுவாச்சுமா’ என்று ஓடிக்கொண்டிருந்தது அவளுக்குள்.
அவனோ அவளைத் தாண்டிக் கொண்டு உள்ளே சென்றவன் பார்வை அங்குமிங்கும் அலைய அவன் கண்ணில்ப்பட்டது சாவி மாட்டியிருக்கும் ஸ்டான்ட். 
அதில் மாட்டியிருந்த சாவியை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தவன் சின்ன கேட்டை ஒட்டியிருந்த பெரிய கேட்டின் கதவை திறந்தான். பின் அவன் வண்டியை எடுத்து உள்ளே விட்டான்.
“என்ன பண்ணிட்டு இருக்கீங்க நீங்க?? நான் சொல்லிட்டே இருக்கேன் வீட்டில யாருமில்லைன்னு இப்போ போய் வந்திருக்கீங்க”
“எதுக்கு அதையே இத்தனை தடவை சொல்றே??”
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க?? என்கிட்ட பேசவா?? இப்போ தான் உங்களுக்கு என்கிட்ட பேசணும்ன்னு தோணிச்சா??” என்றாள்.
“இங்க வாசல்ல வைச்சே எல்லாம் பேசிடணுமா??”
“சொன்னேன்ல வீட்டில…” என்று அவள் ஆரம்பிக்கவும் “வீட்டில யாருமில்லை அதானே. இப்போ என்ன பிரச்சனையை உனக்கு??” என்றவன் அவளருகே நெருங்கி வர அவள் திரும்பி வீட்டுக்குள் சென்றாள்.
அவனும் பின்னோடு வந்தான். “இப்போ என்ன வேணும் உங்களுக்கு??”
“என்ன விளக்கம் சொல்லப் போறீங்க என்கிட்ட??”
“எந்த விளக்கமும் சொல்லப் போறதில்லை??”
“அப்புறம் எதுக்காக இங்க வந்தீங்க??”
“எதுக்கு அதே கேட்டுட்டு இருக்க, வீட்டுக்கு எதுக்கு வருவாங்க. நான் எங்க வீட்டுக்கு வந்தேன், உனக்கு அதுல என்ன பிரச்சனை??” என்றான் அவன்.
“ஓ!! கல்யாணத்துக்கு முன்னாடியே இது உங்க வீடு ஆயாச்சா…”
“இங்க பாரு நீ என்ன சொல்றே?? எனக்கு புரியலை, மாடியில இருக்க எங்க வீட்டுக்கு நான் போக போறேன். அதுல உனக்கு என்ன பிரச்சனை??”
“என்னது நீங்க மாடியில இருக்கீங்களா??”
“ஏன் அது உனக்கு தெரியாதா??”
“இது எப்போ நடந்திச்சு??”
“உன்னை பால் காய்ச்சுற அன்னைக்கு வர சொன்னதுக்கு நீ தான் கல்யாணத்துக்கு முன்னாடிலாம் பொண்ணு மாப்பிள்ளை வீட்டுக்குலாம் போகக் கூடாதுன்னு டயலாக் விட்டியாமே, உன் மாமன்காரன் சொன்னான்”
“என்னது??”
“எதுக்கு இவ்வளவு ஷாக் உனக்கு. எனக்கு புரியலை??”
“எனக்கு தெரியாது நீங்க இங்க தான் இருக்கீங்கன்னு. நான் உங்களை பார்க்கவே இல்லையே”
“வீடு மாத்தின அன்னைக்கு வந்தேன். அப்புறம் அன்னைக்கு ஈவினிங்கே நான் ஊருக்கு கிளம்பிட்டேன். ஊர்ல இருக்கற சொந்ததுக்கெல்லாம் பத்திரிகை வைக்க போனேன். அதுக்கு அப்புறம் இன்னைக்கு காலையில தான் வீட்டுக்கு வந்தேன். இப்போ கடைக்கு போயிட்டு வர்றேன்”
“வண்… வண்டி உங்க வண்டி கூட நான் பார்க்கலையே”
“அது கடையில வைச்சுட்டு போயிட்டேன்”
“உங்கம்மாவை கூட நான் பார்க்கலையே??”
“அது எனக்கெப்படி தெரியும். ஒண்ணு நீ வீட்டை விட்டு வெளிய வராம இருந்திருக்கணும், இல்லையோ அவங்க வெளிய வராம இருந்திருக்கணும். எங்கம்மா பெரும்பாலும் வெளிய வரமாட்டாங்க, சோ நீ பார்த்திருக்க வாய்ப்பில்லை…”
“இன்னைக்கு குலதெய்வம் கோவில்ல பொங்கல் வைக்கணும்ன்னு அக்காவை கூட்டிட்டு போயிருக்காங்க” என்றான் நீளமாய்.
“உங்க அக்கா அவங்களை கூட நான் பார்க்கலையே??”
“இப்போ நீ எல்லாரையும் பார்த்து என்ன செய்யப் போறே?? எங்க அக்கா இன்னும் வந்து இந்த வீட்டை பார்க்கலை, அவ பசங்களுக்கு ஏதோ பரீட்சை நடக்குது அதான் வரலை போதுமா” என்றான் சலிப்பாய்.
“ஓ!!” என்றாள்.
“சரி நான் கிளம்பறேன்”
“அப்போ நீங்க என்கிட்ட எதுவும் பேச வரலையா??”
‘இவளுக்கு கேள்வியை தவிர வேற கேட்கவே தெரியாதா…’ என்று தான் தோன்றியது செங்கதிருக்கு.
“நான் என்ன பேசணும்ன்னு நீ எதிர்பார்க்கிறே??”
“அது… அது வந்து…”
“அது தான் என்ன??”
“ஒண்ணுமில்லை”
“நிஜமாவா”
“உங்களுக்கு எப்பவும் என்னை பேச வைச்சு தானே பழக்கம். நானே தான் எல்லாம் பேசணும்ன்னு எதிர்பார்க்கறீங்க, ஏன்னா நீங்க நல்லவர் நான் கெட்டவ அப்படியே இருந்திட்டு போறேன் விடுங்க” என்றாள்.
அவளுக்கு வெறுப்பாய் இருந்தது, இப்போது கூட அவன் அவளுக்கு எந்த விளக்கமும் சொல்ல முற்படவில்லையே என்ற ஆற்றாமையும் கோபமும் அவளுக்கு அதிகமாகவே இருந்தது.
தனக்காக ஆதி தான் இதையெல்லாம் செய்திருக்கிறான் என்ற எண்ணம் தான் அவளுக்கு இப்போதும். அதனாலேயே கதிரின் மீதான அவளின் கோபம் அதிகரித்திருந்தது.
செங்கதிர் அவளின் முகபாவனைகளை கண்டு லேசானவன் இயல்பாய் அவளருகே நெருங்கி வர முதலில் அதில் கவனமில்லாதவள் இப்போது அவனை முறைத்து பார்த்தாள். “என்ன முறைப்பெல்லாம் பலமா இருக்கு??”
“உங்க பேச்செல்லாம் அதையும் விட பலமா இருக்கே. இப்படி நீங்க பேசி நான் பார்த்ததில்லையே. அதுவும் இவ்வளவு பேசி நான் கேட்டதுமில்லை” என்றவளின் பாவத்தில் அவன் இதழ் வளைந்தது புன்னகையில்.
அதில் அவளுக்கு கோபம் வந்துவிட “என்ன சிரிப்பு??”
“சும்மா தான்…”
“சிரிச்சாச்சுல்ல கிளம்புங்க”
“கிளம்பலைன்னா”
“இது ஒண்ணும் உங்க வீடு இல்லை. எங்கப்பா எப்ப வேணா வருவாங்க. அவங்க வந்து பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று சொல்லவும் கதிருக்கு சுறுசுறுவென்று வந்தது.
“என்ன நினைப்பாங்க?? நமக்கு கல்யாணம் நிச்சயம் ஆகிடுச்சு…”
“ஆகிடுச்சுன்னு சொல்லாதீங்க, அதுக்கு காரணம் எங்க மாமா… நீங்க அதுக்கு எந்த முயற்சியும் எடுக்கலையே”
“ஓ!! அப்படியா!! இதெல்லாம் யாரு உன்கிட்ட சொன்னாங்க??”
“ஏன் எனக்கு தெரியாதா??”
“உனக்கு தெரியாது தான்”
“ஆமா உங்களைப்பத்தி தெரியாம தான் போச்சு எனக்கு…”
“நயனா என்ன வேணும் உனக்கு எதுக்கு என்னோட பொறுமையை சோதிக்கிறே??”
“ஓ!! நான் தான் உங்க பொறுமையை சோதிக்கிறேனா… என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு”
“அதை அப்புறம் சொல்றேன்”
“பேச்சை மாத்தாதீங்க…”
“சரி மாத்தலை, உனக்கு இப்போ என்ன பிரச்சனை??”
“நீங்க தான்”
“நான் என்ன பண்ணேன்??”
“நீங்க எதுவுமே பண்ணலை அது தானே இப்போ பிரச்சனை… ப்ளீஸ் போய்டுங்க இங்க இருந்து… இந்த கல்யாணம் எனக்கு பிடிக்கலை. அசிங்கமா இருக்கு எனக்கு, நானே வந்து வந்து பேச, அதனால உங்களுக்கு என்னை கண்டா ரொம்ப இறக்கமா இருக்குல” என்றவளை நெருங்கியிருந்தான் செங்கதிர்.
“என்னடி சொன்னே?? கல்யாணம் வேணாமா?? அப்புறம்?? அப்புறம் என்ன பண்றதா உத்தேசம்?? சொல்லு” என்றான்.
“நிறுத்திடுங்க கல்யாணத்தை”
“கொன்னுடுவேன் இனிமே இப்படி பேசினா… அன்னைக்கு அவ்வளவு டயலாக் பேசினே, இப்போ இப்படி சொல்றே… என்னைப் பத்தி விசாரிச்சுட்டு எவன் வந்தா உனக்கென்ன?? எதுக்கு அப்படி கேவி கேவி அழுதே??”
அவளோ பதில் சொல்லாமல் முகத்தை தொங்கவிட்டாள். அவள் வதனம் தொட்டு நிமிர்த்தியவன் “அத்தோட விட்டியா, அடுத்து நீ செஞ்சதெல்லாம் என்ன கணக்குல சேர்க்கறது??” என்று அவன் சொல்லவும் அவள் முகம் சுருங்கியது.
“அன்னைக்கு நீ செஞ்சதை இப்போ நானும் செய்யப் போறேன். ஏன்னா நானும் கோபமா தான் இருக்கேன். உன் கன்னத்துல கொடுக்கறேன் வாங்கிக்கோ” என்றவன் அவள் இருக்கன்னத்திலும் மாறி மாறி அழுந்த முத்தமிட்டான்.
“இப்போ இங்க கொடுத்ததை இங்கயும் கொடுக்க வைச்சிடாதே, அப்புறம் நீ தாங்க மாட்ட ஞாபகம் இருக்கும்ன்னு நினைக்கிறேன்” என்றவன் அவள் உதட்டை தொட்டு காண்பித்து சொல்ல நயனாவிற்கு பேச்சே எழவில்லை.
“இனிமே கல்யாணம் வேணாம், நிறுத்திடுங்கன்னு சொன்னே என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது, போடி” என்றவன் படியேறி அவன் வீட்டிற்கு சென்றான்.
செங்கதிரின் குடும்பம் ஒரு வாரம் முன்பு தான் அங்கு குடி வந்திருந்தனர். அவர்கள் வெளியில் சென்றிருந்ததால் அவர்கள் வீட்டில் ஆள் வந்தால் கொடுத்துவிடுமாறு சாவியை அங்கே கொடுத்து சென்றிருந்தனர். 
காலையில் இளவரசன் வெளியே செல்லும் முன் கோவிலுக்கு சென்று திரும்பி வந்தவளிடம் அந்த சாவியை கொடுத்தார். அது இப்போது தான் அவளுக்கு ஞாபகம் வந்தது.
கதிர் சொன்னதே மனதிற்குள் ஓடியது. அன்றைய நாள் மனதிற்குள் வந்து சென்றது. எவ்வளவு துயரமாக ஆரம்பித்த அந்நாளின் முடிவில் அவள் எவ்வளவு சந்தோசமாக இருந்தாள்.
————————
கதிரை பற்றி பெண் வீட்டினர் விசாரித்துச் சென்ற அன்று அழும் நயனாவை சமாதானம் செய்யும் பொருட்டு அவளை அணைத்திருந்தான் அவன்.
“சொல்லுங்க நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் கேட்டுக்கறேன். அதை தானே இப்போ வரை நான் கேட்டுட்டு இருக்கேன்”
“வேணாம்ன்னு சொல்லிட்டீங்க. ஆனா என் கண்ணு முன்னால நீங்க நடமாடுறீங்க. அது என் தப்புமில்லை உங்க தப்புமில்லை அதெல்லாம் என் விதி. கடவுள் எனக்கு கொடுத்த சோதனை அதெல்லாம். நான் என்ன செய்வேன் என்னால முடியலை” என்று இன்னும் அழுதுக் கொண்டிருந்தாள்.
“எனக்கு உங்களை பிடிச்சுது, அதனால தானே நான் இதெல்லாம் அனுபவிக்கறேன். போதும் இனிமே என் கண்ணு முன்னாடியே வராதீங்க” என்றவள் என்ன நினைத்தாளோ “இல்லை உங்களுக்கு நான் எப்படி ஆர்டர் போட முடியும்”
“இனிமே நான் உங்க கண்ணுலவே படமாட்டேன். இனிமே இங்க வரமாட்டேன். வந்தா தானே உங்களை பார்க்கணும்” என்று என்னென்னவோ உளறினாள்.
“நயனா பேசாம இரு”
“எதுக்கு பேசாம இருக்கணும்?? ஏன் பேசாம இருக்கணும்?? சொல்லுங்க நான் ஏன் பேசக்கூடாது… பேசுவேன் அப்படித்தான் பேசுவேன், இதுவும் பேசுவேன். இதுக்கு மேலயும் பேசுவேன்”
“என்னை உங்களால கட்டுப்படுத்த முடியாது, என்ன பண்ண முடியும் உங்களால. சொல்லுங்க என்ன பண்ண முடியும் உங்களால…” என்று ஆவேசமாய் பேசியவள் அதே ஆவேசத்தில் அவன் முகம் முழுதும் முத்தமிட்டாள்.
இன்னமும் அவளின் கோபமும் தணிந்திருக்கவில்லை, “நான் ஏன் உங்களை மிஸ் பண்ணனும், முடியாது” என்றவளின் இதழ்கள் அவனிதழை முற்றுகை செய்தது.
கதிர் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்ததே அவள் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கிறாள் என்று தான். தானும் பேசினால் அவள் இன்னும் உடைந்து போவாளோ என்று அமைதியாயிருக்க நொடியில் சூழ்நிலையே மாறிப்போனது.
அவளின் கோபம் கதிரின் பதில் தாக்குதலில் காணாமல் போயிருந்தது. நயனா ஆரம்பித்து வைத்ததை கதிர் முடித்து வைத்திருந்தான் வேண்டுமின்றில்லை தன்னையுமறியாமல் அவன் அவளுடன் ஒன்றியிருந்தான்.
தான் செய்வது புரிய மெதுவாய் விடுவித்தான் அவளை. நயனாவின் முகம் நன்றாக மலர்ந்திருந்தது. அப்படியொரு மகிழ்ச்சியை இதுவரை அவள் முகத்தில் அவன் கண்டதேயில்லை.
“எனக்கு தெரியும், நீங்க வாய்விட்டு உங்க மனசுல உள்ளதை சொல்லலைன்னாலும் எனக்கு புரிய வைச்சுட்டீங்க. உங்க மனசுல நான் இருக்கேன்னு நீங்க புரிய வைச்சுட்டீங்க, எனக்கு இது போதும்” என்று அவள் சொல்ல கதிர் கண்களை மூடித் திறந்தவன் ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து சென்றுவிட்டான்.
அந்நிகழ்வுக்கு மறுநாளில் இருந்து அவன் கார்மெண்ட்ஸ்க்கு வராது போனதால் நயனாவிற்கு ஆரம்பித்த இடத்திலேயே நிற்பது போன்ற உணர்வு.
அவன் செய்ததை நினைத்து சந்தோசப்படுவதா வருத்தப்படுவதா என்ற நிலை அவளுக்கு. அவன் வாராது போனதால் அவளால் வருத்தப்படத்தான் முடிந்தது.
———————– 
தன் நினைவுகளில் இருந்து விடுப்பட்டவள் அப்போது தான் ஏதோ நினைவு வந்தவளாக ஆதிக்கு போன் செய்தாள். “சொல்லுமா” என்றான் அவன் போனை எடுத்ததுமே.
“ஏன் என்கிட்ட சொல்லலை??”
“கதிர் உங்க வீட்டில குடி இருக்கிறதையா??”
“ஆமா…”
“நான் தான் சொன்னேன்ல கதிர் வீடு மாறுறான் நீ வான்னு உன்னை கூப்பிட்டேனே. நீ தான் வரலையே, வந்திருந்தா அன்னைக்கே உனக்கு தெரிஞ்சிருக்கும்…”
“எல்லாரும் சேர்ந்து என்ன சதி பண்றீங்க??”
“என்னது சதியா??”
“பின்னே இன்னும் என்னெல்லாம் சேர்ந்து செஞ்சிருக்கீங்கன்னு தெரியலையே. அவர் என்ன கேட்டாலும் வாயே திறக்க மாட்டேங்குறார்”
“யாரு கதிரா??”
“வேற யாரை சொல்வேன்”
“என்ன கேட்டே??”
“கல்யாணத்தை பத்தி எதுவுமே பேசலைன்னு கேட்டேன்”
“என்ன சொன்னான்??”
“அதான் ஒண்ணுமே சொல்லலையே”
“நீ விட்டுட்டியா என்ன??”
“நீங்க தானே எல்லாம் அரேன்ஜ் பண்ணீங்க அதை சொன்னேன்”
“அதுக்கு என்ன சொன்னான்??”
“அப்படின்னு உனக்கு யாரு சொன்னாங்கன்னு கேட்டாங்க”
“ஹ்ம்ம் அப்புறம்”

“மாமா நான் என்ன கதையா சொல்றேன்”
“நீ என்ன சொன்ன??”
“கல்யாணம் வேணாம்ன்னு சொன்னேன்”
“லூசா நீ??”
“மாமா…”
“வேற என்ன சொல்வாங்க உன்னை… ஆசைப்பட்ட வாழ்க்கையை யாரும் வேணாம்ன்னு சொல்வாங்களா…”
“எதுக்கு மாமா செய்யணும்??”
“நயனா”
“பிடிக்கலை மாமா எனக்கு. உங்ககிட்ட எனக்கு சொல்லத் தெரியலை. ஆனா இந்த கல்யாணம் எனக்கு இப்போ பிடிக்கலை” என்று சொல்லும் போது லேசாய் அழுகையில் குலுங்கினாள். போனை வைத்துவிட்டாள்.
————————
மணமேடையில் அமர்ந்திருந்தான் செங்கதிர். அய்யர் சொன்னதை கருத்தாய் செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு பட்டுவேட்டி சட்டை அடங்கிய தட்டு கொடுக்கப்பட அதை வாங்கிக்கொண்டு மேடையில் இருந்து இறங்கினான். அடுத்து நயனா வர அவள் உடைகள் அவளிடம் கொடுக்கப்பட்டது. 
இருவரும் உடைமாற்ற சென்றிருந்தனர், நயனா தயாராகி இருந்தாள். கதிர் இன்னமும் மணமேடைக்கு வந்திருக்கவில்லை. அய்யர் அவனை அழைத்து வருமாறு அருகே இருந்த ஆதியிடம் சொல்ல அவன் நகர்ந்தான். 
கதிரின் அறைக்கதவை தட்ட சில பல நிமிடங்களுக்கு பின் கதவு திறக்கப்பட்டது. உள்ளே ஆதி, ராஜாத்தி மற்றும் பூங்கோதை நின்றிருந்தனர்.
“நேரமாகுது உன்னை அங்க அழைச்சுட்டு வரச்சொல்றாங்க நீ என்னடான்னு இங்க சாவகாசமா பேசிட்டு இருக்கே” என்றான் ஆதித்யன்.
அவனருகே வந்த கதிர் “அம்மாகிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டேன் ஆதி” என்றுவிட அவன் ராஜாத்தியை பார்த்தான்.
மலர்ந்திருந்த அவர் முகமே சொன்னது கதிருக்கு சாதகமாகத்தான் எதுவோ நடந்திருக்கிறது என்று. “சரி நேரமாகுது வா போகலாம் அப்புறம் பேசுவோம்” என்று முடித்துவிட்டான் ஆதி.
கதிருக்கு தன் விருப்பத்தை அன்னையிடம் சொல்லிவிட்டதில் மனநிம்மதி. அதுக்கொடுத்த மகிழ்ச்சியான உணர்வில் அவன் முகமும் மலர்ந்திருந்தது. அதே மகிழ்வுடனே அவனிருக்க நயனா அவனருகே வந்து அமர வைக்கப்பட்டாள். 
திருமாங்கல்யம் பெரியவர்களால் ஆசிர்வதிக்கப்பட்டு கதிரின் கைகளில் வர நயனாவை பார்த்தான். அவள் முகமோ இன்னமும் இறுகியே இருந்ததை கண்டவன். மெதுவாய் அவளை அழைத்தான்.
“நயனா” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாய் அழைக்க அக்குரலில் அவள் திரும்பி அவன் முகம் பார்க்க அதே குரலில் “ஐ லவ் யூ” என்றவன் அவளுக்கு மாங்கல்யம் அணிவித்து தன் மனைவியாக்கியிருந்தான்.

Advertisement