Advertisement

22
ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
“எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே.
நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள்.
நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல் அவள் பார்வை இருக்க ஆதி நிலைமையை கையில் எடுத்துக் கொண்டான்.
“முதல்ல நீங்க எல்லாம் ஏதாச்சும் குடிக்கணும் அப்புறம் தொடர்ந்து பேசலாம்” ஆதி விலோசனாவையும் நயனாவையும் ஒரு பார்வை பார்த்தான்.
“முதல்ல பேசி முடிச்சிடுவோம் அப்புறம் கை நினைக்கிறோம்” என்றார் ராஜாத்தி.
“அம்மா கண்டிப்பா பேசி முடிக்கத்தான் போறோம். நீங்க காபி குடிக்கறதுல எதுவும் ஆகிடாதும்மா” என்றான் அவன்.
அதற்கு மேல் அவனை மறுத்து பேச முடியாமல் அவரும் அமைதியாகிவிட பெண்கள் இருவரும் சமையலறை நோக்கி நடந்தனர். அவர்களுடனே செல்லாமல் சற்று பின்தங்கி ஆதியும் சென்றான். விலோசனா வந்தவர்களுக்கு காபியை தயாரிக்க ஆரம்பித்தாள்.
அறைக்குள் வந்த ஆதி “சொல்லும்மா நயனா என்ன பேசணும் உனக்கு என்கிட்ட??” என்றாள்.
அவள் விலோசனாவை ஒரு பார்வை பார்த்தாள். “நீ வா” என்றவன் நயனாவுடன் வெளியே சென்றான்.
சமையலறை வழியே பின் வாயிலுக்கு செல்ல ஒரு வழி இருந்ததால் அதில் சென்றனர் இருவரும். அங்கு வந்ததுமே பொரிந்தாள் அப்பெண்.
“என்ன மாமா நினைச்சுட்டு இருக்கீங்க நீங்க??”
“என்னையாமா கேட்டே??”
“உங்களைத்தான்”
“நான் மனசுல சனா தான்மா இருக்கா…”
“மாமா!!” என்று பல்லைக்கடித்தாள் அவள்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்??”
“நீங்க ரெண்டு பேரும் ஆஸ்பிட்டல்ல பேசினப்பவே தெரியும். எல்லாமே கேட்டுட்டேன்” என்றான் அவன்.
“அப் அப்போவே தெரியுமா, எதுவுமே நீங்க கேட்கலையே??”
“யார்கிட்ட கேட்கணும்??”
“என்கிட்ட இல்லை அவர்கிட்ட”
“எதுக்கு??”
“ஆமா எதுக்கு கேட்கணும்?? அதான் களத்துல இறங்கி இருக்கீங்களே… அன்னைக்கு நான் பேசினதை கேட்டும் இப்படி செஞ்சு இருக்கீங்கன்னா உங்களை என்ன சொல்ல”
“நான் என்ன பண்ணியிருக்கணும்ன்னு நீ நினைக்கிறே??”
“எதுவுமே பண்ணியிருக்க கூடாது…”
“எதுக்காக??”
“எனக்கு அசிங்கமா இருக்கு மாமா… என்னை வேண்டாம்ன்னு சொன்னவரை இழுத்து பிடிச்சு வந்து எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கறீங்க நீங்க…”
“சம்மந்தப்பட்டவர் இன்னைக்கு வரக்கூட இல்லை… எனக்கு இந்த கல்யாணம் வேணாம் மாமா. அவர் வேணாம் எனக்கு” என்று தன் மனதில் இருந்தை சொல்லிவிட்டாள்.
“அவ்வளவு தானா… முதல்ல இதுக்கு பதில் சொல்லிடறேன், கதிர் வராததுக்கு காரணம் அவங்க பேமிலில மாப்பிள்ளை முதல்ல வரமாட்டாராம். அதனால தான் அவன் வரலை”
“அப்புறம் சொன்னியே இழுத்து பிடிச்சு கல்யாணம் முடிக்கறேன்னு அப்படி இருந்தா தான் என்ன தப்பு”
“எனக்கு அது அவமானம்”
“அதை ஏன் அப்படி நினைக்கிறே??”
“மாமா உங்களுக்கு புரியாது என்னோட வலி” என்று சொல்லும் போது அவள் கண்களில் இருந்து லேசாய் கண்ணீர் வழிந்தது.
“சரி இப்போ என்ன இந்த கல்யாணம் வேணாம் அதானே”
“ஹ்ம்ம்…”
“நான் இப்போவே அவங்ககிட்ட சொல்லிடறேன், இந்த கல்யாணம் நடக்காதுன்னு. என்னோட பிரண்டு கேசவ் கிருஷ்ணா குழந்தைங்க டாக்டர் தனியா ப்ராக்டீஸ் பண்றான். நல்ல பையன்”
“எங்க கல்யாணத்துல உன்னை பார்த்திருப்பான் போல பிடிச்சிருக்குன்னு சொன்னான். நான் உங்க விஷயம் தெரிஞ்சதால பிடிக்கொடுத்து பேசலை அவன்கிட்ட”
“நாளைக்கு நல்ல நாள் தான் அவன்கிட்ட சொல்லி பெண் பார்க்க வரச்சொல்லிடறேன்” என்றான்.
“மாமா என்ன விளையாடுறீங்களா?? ஒண்ணு இல்லைன்னா இன்னொண்ணுன்னு போயிட்டே இருக்க சொல்றீங்களா??”
“வேற என்ன செய்யறதா உத்தேசம் உனக்கு??”
“இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்”
“மாமாவோட விருப்பம் அது அவர் நல்லா இருக்கும் போதே அவர் கடமையை முடிக்க நினைக்கிறார். அதுல எந்த தப்புமில்லையே??”
“ஏன் என்னை கார்னர் பண்றீங்க?? எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்”

“அது பரவாயில்லை நயனா அவங்க வந்து பேசி முடிச்சிடுவாங்க. நீ எப்போ கல்யாணத்துக்கு தயார்ன்னு சொல்றியோ அப்போ கல்யாணம் வைச்சுக்கலாம், நான் கேசவ்கிட்ட பேசறேன்” என்றான் ஆதியும் விடாமல்.
“மாமா நான் எப்படி வேற ஒருத்தரை, அது தப்பு”
“அப்படியா?? நீ நேசிச்சவன் உன்னை நேசிக்கலை அப்புறம் எப்படி அது தப்பாகும்??”
“நீங்க விதாண்டாவாதம் பண்றீங்க”
“உனக்கு புரிய வைக்க முயற்சி பண்றேன்”
“எனக்கு எதுவும் புரிய வேணாம்”
“உனக்கு ரெண்டே ஆப்ஷன் தான் நயனா. ஒண்ணு நீ கதிரை கட்டிக்கணும், இல்லையா கேசவ் வருவான்”
“நீ தான் முடிவு பண்ணணும்”
“எனக்கு கல்யாணமே வேணாம்”
“அந்த ஆப்ஷன் உனக்கில்லைம்மா”
“இங்க பாரு நயனா உனக்கென்ன பிரச்சனை கதிர் உன்னை மனசுல வைச்சுட்டு வெளிய உன்கிட்ட வேணாம்ன்னு சொல்றான்னு தானே. அப்படி உனக்கு டவுட் இருந்தா அதை அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவன் சட்டையை பிடிச்சு கேளு”
“கல்யாணத்துக்கு அப்புறம் நீங்க முட்டிக்குவீங்களோ?? மோதிக்குவீங்களோ?? அது உங்க பாடு. நாங்க யாரும் கேட்க மாட்டோம், இப்போ எங்க கடமையை செய்ய விடு. கதிர் வீட்டை பொறுத்தவரை இது அரேன்ஜ் மேரேஜ்” என்று சொல்லவும் முகம் இறுகியது அவளுக்கு.
அப்படி பொய் சொல்லி இந்த கல்யாணம் நடக்க வேண்டிய அவசியமென்ன என்று மனம் கூப்பாடு போட்டது அவளிடம்.
“சரி வா ரொம்ப நேரமாச்சு உன் அக்கா எட்டி எட்டி பார்க்கறா” என்றவன் உள்ளே செல்ல விலோசனா தங்கையின் கையில் காபி அடங்கிய ட்ரேயை கொடுத்தாள்.
எதுவும் பேசாமல் அதை வாங்கிக்கொண்டவள் வந்தவர்களுக்கு கொடுத்துவிட்டு அங்கேயே நிற்க பூங்கோதை பூ வைத்துவிட்டாள் அவளுக்கு.
அவளின் முகத்தில் அவ்வளவு புன்னகை. “எனக்கு எவ்வளவு சந்தோசம் தெரியுமா. என் தம்பி கொடுத்து வைச்சவன்” என்றாள் அவள் அதே புன்னகையுடன். நயனா லேசாய் இதழ் விரித்து வைத்தாள். 
அவளின் குழந்தைகளும் அவளிடம் வந்து நின்றுக்கொண்டு அவளை தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தது. பூங்கோதையின் கடைசி பெண்ணை கையில் தூக்கிக் கொண்டாள் அவள்.
கையோடு அவர்கள் வெற்றிலை கைமாற்றி தான் சென்றிருந்தனர். அடுத்து வரும் முகூர்த்த நாளில் திருமணத்தை முடித்துவிடுவது என்று பேசித்தான் கிளம்பினர்.
———————–
விலோசனா ஆதியிடம் முகம் கொடுத்து கூட பேசவில்லை அவள் வீட்டில் வந்ததில் இருந்து. அவன் வேறு வேலையாக இருந்ததால் அவளை அவன் சரியாக கவனித்திருக்கவில்லை.
மாலை கிளினிக்கிற்கு கிளம்பி சென்றுவிட்டவன் இரவு தான் வந்தான். இரவு உணவு முடித்து அவன் அறைக்கு வர விலோசனாவும் சற்று நேரத்தில் வந்தாள்.
“என்ன சனா இப்போ உனக்கு சந்தோசமா?? உன் தங்கைக்கு கல்யாணம் எவ்வளவு வேலை இருக்கு” என்று அவன் பாட்டுக்கு சொல்ல அவள் கட்டிலில் அமர்ந்திருந்தவள் குலுங்கி குலுங்கி அழுதுக் கொண்டிருந்தாள்.
அவளின் அழுகை சத்தம் கேட்கவும் தான் அருகே சென்றவன் “சனா என்னாச்சு எதுக்கு அழறே நீ இப்போ?? அவளுக்கு நல்ல வாழ்க்கை கிடைச்சிட்டு அப்புறம் எதுக்கு நீ அழறே??”
“நீங்க பேசாதீங்க என்கிட்டே”
“ஏன்?? நான் என்ன செஞ்சேன்??”
“அவளுக்கு பிடிக்காத கல்யாணத்தை பேசிட்டீங்க நீங்க. அவ இன்னைக்கு எப்படி அழுதா தெரியுமா. எங்கம்மா இல்லை அதானே நீங்க எல்லாம் சேர்ந்து இப்படி செய்யறீங்கன்னு கேட்கறா”
“ஏங்க நானாச்சும் அம்மாவை நொடிக்கொரு தரம் தேடுவேன். அது எல்லாருக்கும் தெரியும். ஆனா அவ அப்படி எப்பவுமே காட்டிக்கிட்டது இல்லை”
“இன்னைக்கு சொல்றா எங்கம்மா இல்லாததுனால தானே உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்றீங்கன்னு”
“எனக்கு எந்த சமாதானமும் சொல்ல முடியலை அப்போ. நீங்க என்னடான்னா அவளை தனியா கூட்டிட்டு போய் பேசறீங்க. எதுக்கு அவளுக்கு பிடிக்காததை நாம செய்யணும்”
“உங்க பிரண்டு அப்படிங்கறதுக்காக நீங்க பாரபட்சம் பார்க்கறது எந்தவிதத்துல சரி சொல்லுங்க” என்றாள்.
“பாரேன் உனக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு” என்றான் அவன் கிண்டல் குரலில்.
விலோசனா அவனை முறைத்தாள். “சரி உன் தங்கச்சிக்கு நான் பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னு யார் சொன்னா”
“யார் சொல்லணும் அவ தான் வேணாம்ன்னு சொன்னாளே?? அதுக்கு மேல என்ன வேணும் உங்களுக்கு” 
“அந்த மாப்பிள்ளை எனக்கு பிடிக்கலை அதனால வேணாம்ன்னு சொன்னதை நீ கேட்டியா??”
“என்ன சொல்ல வர்றீங்க நீங்க எனக்கு புரியலை”
“இத்தனை வருஷம் ஒண்ணா வளர்ந்திருக்கே, கூட பிறந்தவ மனசுல என்ன இருக்குன்னு கூட உனக்கு தெரியலை”
“இதுல என்னை கேள்வி கேட்க வந்திட்டே போடி” என்றான் சற்றே கோபமாய்.
“எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க”
“உனக்கு என்னைக்கு தான் புரிஞ்சு இருக்கு, எல்லாமே உனக்கு விளக்கி தான் சொல்லணும். எல்லாம் உன் தங்கச்சியை சொல்லணும், உன்னை யோசிக்க விடாம அவளே உனக்காக யோசிச்சு செஞ்சால அவளைத்தான் சொல்லணும்”
“கொஞ்சமாச்சும் யோசி சனா என்ன நடக்குதுன்னு. என்ன சொன்ன என் பிரண்ட்க்காக நான் பண்றேன்னா, நல்லா திட்டி விட்டிருவேன் உன்னை”
“அவனுக்காக நான் எதையுமே செய்யலை. உன் தங்கச்சிக்காக தான் இந்த கல்யாணமே அவ கதிரை தான் மனசுல நினைச்சுட்டு இருக்கா போதுமா” என்று போட்டு உடைத்தான் ஆதித்யன்.
விலோசனா அதிர்ச்சியாய் பார்த்தாள் தன் கணவனை. “எப்படி??”
“அது ரொம்ப நாளாவே நடக்குது. எனக்கு ஆஸ்பிட்டல்ல வைச்சு தான் தெரியும்” என்று ஆதி சொல்ல விலோசனாவிற்கும் லேசாய் புரிவது போல் இருந்தது.
மறுநாள் காலையிலேயே கதிர் மருத்துவமனை வந்தது தான் அவள் நன்கறிவாளே. அது இதனால் தானா என்று மனம் காரணத்தை எடுத்து வைத்தது.
“அப்போ ஏன் அவ கல்யாணம் வேணாம்ன்னு சொன்னா??”
“அதையெல்லாம் அப்புறம் சொல்றேன். இப்போதைக்கு உனக்கு இந்தளவுக்கு தெரிஞ்சா போதும் சனா. எனக்குமே முழுசா தெரியாது”
“உங்க பிரண்ட் உங்ககிட்ட எதுவும் சொல்லலையா??”
“அவனைப்பத்தி பேசாதே, அவன் மேல நான் கோபமா இருக்கேன். அவனோட நான் சரியா பேசறது இல்லை இப்போ” என்றான் அவன்.
“எதுக்காக??”
“உனக்கு எல்லாம் இப்போ சொல்ற மூட்ல நானில்லை சரியா. ஒண்ணு நிஜம் ரெண்டு பேருக்குமே பிடிக்காத வாழ்க்கையை நாங்க அமைச்சு தரலை சரியா” என்று முடித்துவிட்டான் ஆதி.
—————————
இன்னும் ஒரே மாதத்தில் நயனாவின் திருமணம் ஏற்பாடு ஆகியிருந்தது. கதிர் இன்னும் கூட அவளை வந்து பார்த்திருக்கவில்லை.
போன் செய்வான் என்று எதிர்பார்த்து நயனா ஏமாந்து போயிருந்தாள். அவளாக செய்யவும் அவளின் மனம் இடம் கொடுக்கவில்லை. அவள் யோசனையில் இருக்க வாயிலில் குரல் கேட்டது.
“அம்மா வீட்டில யாரும் இல்லையா??” என்ற குரல் கேட்டு வாயிலுக்கு வந்தாள் நயனா.
“சொல்லுங்க”
“பெயின்ட் அடிக்கணும்ன்னு வரச்சொன்னாங்க??”
“பெயின்ட் அடிக்கவா இங்கயா இருக்காதுங்க. இப்போ தான் அக்கா கல்யாணத்துக்கு அடிச்சோமே”
“சார் இல்லைங்களா அவங்க தான் வரச் சொன்னாங்க” என்றான் அவன்.
“அப்பா…” என்று இவள் குரல் முடியும் முன்னேயே அங்கே வந்திருந்தார் இளவரசன்.
“சொல்லும்மா” என்று இவளை பார்த்து சொன்னவர் அப்போது தான் வாயிலை பார்க்க “வாப்பா வாப்பா உள்ள வா…” என்றார்.
“பெயின்ட் எதுக்குப்பா?? அக்கா கல்யாணத்துக்கு தானே அடிச்சு முடிச்சோம்”
“மாடி வீட்டுக்கு ஆளுங்க வர்றாங்கம்மா??”
“அதை வாடகைக்கு விடப் போறீங்களா என்கிட்ட சொல்லவே இல்லைப்பா”
“நீ கல்யாணம் ஆகி போய்டுவ, நான் தனியா தானேம்மா இருப்பேன். அதான் மாடி வீட்டை வாடகைக்கு விட்டா இங்க ஆளுங்க இருக்க மாதிரி தோணும் அதுக்கு தான்” என்று முடித்துவிட்டவர் வந்தவரிடம் பேச ஆரம்பித்துவிட்டார். மாடி அறையின் சாவியை எடுத்து கொடுத்து வேலையை முடிக்க சொன்னார்.
பத்து நாளைக்கு பின் ஓர் நாள் ஆதித்யன் விலோசனாவுடன் அங்கு வந்திருந்தான். “என்ன ரெண்டு பேரும் காலையிலேயே இங்க வந்திருக்கீங்க??”
“இன்னைக்கு கதிர் புது வீட்டுக்கு போறான். கல்யாணம் ஆகப்போகுது கொஞ்சம் பெரிய வீட்டுக்கு போறேன்னு சொன்னான். அதுக்கு தான் நாங்க கிளம்பினோம், நீயும் வாயேன், உன்னையும் கூட்டிட்டு வரச் சொன்னாங்க எல்லாரும்” என்றான் ஆதி.
“நான் எதுக்கு??”
“நீ தானே அந்த வீட்டு மருமக பொண்ணு. அதான்”
“கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணை யாரும் மாப்பிள்ளை வீட்டுக்கு கூட்டி போவாங்களா??”
“பார்றா, கல்யாணத்துக்கு முன்னாடியே பொண்ணு யார்கிட்டயும் சொல்லாம மாப்பிள்ளையோட மனசுல நுழைஞ்சுட்டாலாம் வீட்டில நுழையறதுக்கு மட்டும் சட்டம் பேசுவாங்கலாம். கலி காலம்டா சாமி” என்று சிரித்தான் ஆதித்யன்.
“எனக்கு கார்மெண்ட்ஸ்ல இன்னைக்கு கொஞ்சம் வேலையிருக்கு” என்று முணுமுணுத்தாள் அவள்.
விலோசனா அவர்கள் இருவரையும் பார்த்திருந்தாள். சகஜமாக உரையாடிக் கொண்டிருந்தனர் அவர்கள். ஒரு நாள் கூட நயனா அவளிடம் இப்படி சகஜமாக உரையாடியதில்லை என்று அவள் மனம் அவளை குத்திக் காட்டியது.
தப்பு என் மேல தான் என்று தன்னையே சொல்லிக் கொண்டாள் அவள்.
“நீ எதுக்கு இன்னும் வேலைக்கு போய்கிட்டு”
“வர வேணாம்ன்னு அப்பா சொல்லியிருந்தார். ஒரு சின்ன கணக்கு வழக்கு முடிக்காம இருந்துச்சு அதான் இந்த ஒரு வாரமா போயிட்டு வந்திட்டு இருக்கேன். நாளையோட அந்த வேலை முடிஞ்சிடும்” என்றாள்.
“அப்போ சரி” என்றான் ஆதி.
“விலோ நீ என்ன ரொம்ப அமைதியா இருக்கே?? பேசவே மாட்டேங்குற என்கிட்ட” என்றாள் தமக்கையின் அமைதி கண்டு.
அந்த வார்த்தையிலேயே கண்ணீர் வந்துவிட்டது மற்றவளுக்கு. “விலோ நீ எதுக்கு இப்போ அழறே??” என்று பதறினாள் தங்கை.
ஆதிக்கு தன் மனைவியின் கழிவிரக்கம் புரிந்தது. அதனால் பேசாமல் நின்றிருந்தான்.

“மாமா நீங்க எதுவும் சொன்னீங்களா அவளை. உங்ககிட்ட என்ன சொன்னேன் நான் அவ கண்ணுல இருந்து கண்ணீர் வரக்கூடாதுன்னு சொன்னேனா இல்லையா” என்று அவனிடம் பாய்ந்தாள் அவள்.
“அந்த அழுகைக்கு நான் காரணமில்லைம்மா… நீ தான் காரணம்” என்றான்.
“நானா?? நான் என்ன செஞ்சேன்?? விலோ சொல்லு விலோ நான் என்ன செஞ்சேன்??”
“சாரிடி நயன். நான் உனக்கு ஒரு நல்ல அக்காவா இருக்கலை எப்பவும், ஆனா நீ எனக்கு நல்ல தங்கையா இருந்திருக்க. ஒரு படி மேல சொல்லணும்ன்னா நீ எனக்கு ஒரு நல்ல அம்மாவா கூட இருந்திருக்கே”
“இப்போ எதுக்கு விலோ இதெல்லாம் சொல்றே??”
“அன்னைக்கு அப்படி அழுதியேடி… அம்மா இருந்தா இப்படி செய்வீங்களான்னு, நான் அம்மாவை மிஸ் பண்ணதை விட நீ எவ்வளவு மிஸ் பண்றேன்னு அப்போ தான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்”
“விலோ அது சாரி விலோ நான் வேற ஏதோ நினைச்சு சொன்னேன். நீ ப்ளீஸ் அழாத”
“இல்லை நயன் எல்லாம் என்னால தான்…” என்று அழுதவளை அப்போதும் சமாதானம் செய்தது அவளின் தங்கை தான்.
கல்யாணத்திற்கு புடவை எல்லாம் எடுத்தாயிற்று. கதிர் அவளிடம் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக் கொண்டிருந்தான். இதுவரை அவன் அவளின் கண்ணில் படவேயில்லை.
திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்களே இருந்தது. இளவசரன் பத்திரிகை வைக்க வெளியில் சென்றிருந்தார். புதிதாய் குடித்தனம் வந்திருந்த மாடி வீட்டிலும் அன்று ஆளில்லை.
மாலை நேரம் வாசல் தெளித்து நயனா வாயிலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். அவள் வேலை முடித்து வெளி கேட்டை சாத்தும் முன்னே வண்டி ஒன்று வந்து அங்கே நின்றது.
வண்டியில் இருந்து கதிர் இறங்கி வந்துக் கொண்டிருந்தான். திருமணம் பேசியதில் இருந்து ஓடி ஒளிந்துக் கொண்டிருந்தவனை அன்று தான் பார்க்கிறாள்.
அவள் வீட்டு வாயிலில் அவன் வண்டியை நிறுத்தியிருக்க அவனை முறைத்து நின்றிருந்தாள் இவள்.

Advertisement