Advertisement

21
செங்கதிர் கார்மெண்ட்ஸ்க்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அன்றைய நாளைக்கு பிறகு அவன் வருவதேயில்லை.
முதலில் ஏதோ வேலை என்று தான் எண்ணியிருந்தாள் நயனா. நாளாக ஆக அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. இளவரசன் கூட அவன் வருகை இல்லை என்பதைப்பற்றி எதுவுமே கேட்காததும் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
பொறுக்க முடியாமல் அவளே கேட்டுவிட்டாள் அவள் தந்தையிடம். “என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டாரும்மா ஏதோ வேலை அதிகமாம் கடையில”
“தினமும் எனக்கு போன் பண்ணி விசாரிச்சுட்டு தான் இருக்காரு” என்று முடித்துவிட்டார் இளவரசன். அதற்கு மேல் அவரிடம் எதையும் அவளால் கேட்க முடியவில்லை.
கொடைக்கானல் சென்று வந்த பிறகு ஆதி விலோசனாவை அழைத்துக்கொண்டு மாமனார் வீட்டிற்கு வந்திருந்தான்.
எப்போதும் மலர்ச்சியுடன் இருக்கும் நயனாவின் முகம் வாடியிருக்க மாறாய் விலோசனாவின் முகம் மலர்ந்திருந்தது.
“வாங்க மாமா வா விலோ” என்று வரவேற்றாள் நயனா.
“மாமா இன்னும் வரலையா நயனா”
“ஆமா மாமா அப்பா இனிமே தான் வருவாங்க, நான் ஐஞ்சு மணிக்கே கிளம்பிட்டேன் இன்னைக்கு நீங்க வருவீங்கன்னு பட்சி சொல்லுச்சி மாமா அதான்” என்றாள் கிண்டலாய்.
“அந்த பட்சி அவ்வளவு தான் சொல்லிச்சா, வேற எதுவும் சொல்லலையா??”
“வேற என்ன சொல்லியிருக்கணும்ன்னு நினைக்கறீங்க??”
“உன்னோட ஐடியா பத்தி சனா சொன்னா…”
“ஐடியாவா??”
“அவளுக்கு லென்ஸ் போடுற ஐடியா நீ தான் கொடுத்தியாமே”
“அதுவா அவ கேட்டா நான் சொன்னேன்” என்று கூலாக பதில் சொன்னாள் நயனா.
“அவளுக்கு நீ சொல்லி புரிய வைச்சுருக்க வேணாமா”
“எனக்கு மட்டும் என்ன தெரியும் மாமா நானும் அப்போ சின்ன பொண்ணு தானே. அவ அழுதா அதை சமாதானப்படுத்தணும்ன்னு மட்டும் தான் தோணுச்சு. எனக்கு தெரிஞ்சதை சொன்னேன்”
“நல்லா சொன்னே போ” என்றான் அவன்.
“ஏன் மாமா நான் செஞ்சது தப்பா??”
“நிச்சயமா சரியில்லை, ஆனா தப்புமில்லை. நான் உன்கிட்ட சும்மா தான் கேட்டேன் அதை விடு. நீ கார்மெண்ட்ஸ் போறல்ல எப்படி போகுது வேலையெல்லாம்”
“நல்லா போகுது மாமா…”
“கதிர் வர்றானா??”
“ஹ்ம்ம் வருவார் மாமா”
“அந்த வேலையெல்லாம் எந்த அளவுல இருக்கு…”
“நல்லாவே போயிட்டு இருக்கு மாமா, எப்படியும் இன்னும் ஒரு இருபது நாள்ல வேலை முடிஞ்சிடும், அப்புறம் எல்லாம் செக் பண்ணனும் ஒன்ஸ்”
“வேற எதுவும் விசேஷம் இருக்கா??”
“விசேஷமா?? என்ன விசேஷம் நீங்க எதிர்பார்க்கறீங்க?? பார்க்கப் போனா விசேஷம் எல்லாம் உங்க சைடுல இருந்து தானே மாமா வரணும்” என்று அவள் சொல்ல “ஹேய் சும்மாயிருடி” என்றாள் விலோசனா.
“என்ன மாமா அக்கா வெட்கமெல்லாம் படுற மாதிரி தெரியுது. கொடைக்கானல் நல்லா வேலைஞ்சிருக்கும் போலவே”
“ஆமாமா வேலை செஞ்சிருச்சு. சரி எங்க கதை இருக்கட்டும், உன் கதை என்ன??”
“என் கதையா??”
“அந்த கதையை பத்தி அப்புறம் பேசுவோம்” என்று அந்த பேச்சை முடித்துவிட்டான் ஆதி. அன்று கணவனும் மனைவியும் அங்கேயே தங்கிவிட்டு மறுநாள் அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
அன்றைய இரவு ஆதி பேசியதை தான் யோசித்துக் கொண்டிருந்தாள் நயனா. ‘மாமா பேசுறது எல்லாம் ஏதோ பொடி வைச்சு பேசுற மாதிரியே இருக்கே என்னவா இருக்கும்’ என்ற எண்ணமே ஓடியது அவளுக்கு.
அதைப்பற்றி அதிதீவிரமாய் நினைப்பதற்கு நேரமில்லாமல் கதிரை பற்றிய எண்ணங்கள் தான் இப்போது அவளை ஆக்கிரமித்தது.
அவன் வரவில்லை என்றாலும் நயனா அவன் வேலையை சிறப்பாகவே செய்தாள். அவன் எப்படியெல்லாம் யோசிப்பான் என்ன எதிர்பார்ப்பான் என்பதை தான் அவள் நேரடியாய் பார்த்திருக்கிறாளே.
அங்கிருந்தோர் சிலர் கூட சொல்லிவிட்டனர், “நீங்க கதிர் சார் மாதிரி கேள்வி கேட்கறீங்க” என்று. அப்படி சொல்லியவர்களிடம் லேசான முறைப்பை கொடுத்து நகர்ந்துவிடுவாள் அவள்.
அதோ இதொவென்று அவர்கள் வேலையும் கிட்டத்தட்ட முடியும் தருவாய் நெருங்கியிருந்தது. இன்றுடன் வேலை முடிந்துவிடும் அனைத்தும் ஒரு முறை சரிபார்க்கப்பட்டு கடைசிக்கட்ட பேக்கிங் செய்து டெலிவரி செய்யும் வேலை மட்டுமே இருந்தது.
நயனா தன் தந்தையை தேடி முதல் மாடிக்கு சென்றாள். “அப்பா” என்றழைக்க “வாம்மா நயனா” என்றார் அவர்.
“அப்பா ஒரு விஷயம் பேசணும் ப்ரீயா இருக்கீங்களா??”
“சொல்லும்மா ப்ரீயா தான் இருக்கேன்”
“கதிர் சார் எப்போ வருவாங்க?? எதுவும் பேசினாங்களா??”
“அதைப்பத்தி ஒண்ணும் சொல்லலையேம்மா. என்னாச்சு??”
“அப்பா வேலையெல்லாம் இன்னையோட முடிஞ்சிடும். எல்லாத்தையும் ஒரு தரம் செக் பண்ண வேண்டாமா. அவரை வரச்சொல்லுங்கப்பா”
“அதான் நீயே எல்லாம் பார்த்திட்டியேம்மா…”
“அப்பா நான் சொல்ற மாதிரி செய்ங்க, அதான் நல்லது”
“சரி நான் பேசறேன்”
“நானே பேசறேன்ப்பா…”
“இதை நீயே பேசிட்டு வந்து சொல்லியிருக்க வேண்டியது தானேம்மா…”
“உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்ல வேண்டாமாப்பா அதான்…”
“சரிம்மா நீ பேசு… அப்புறம் இன்னொரு ஆர்டர் வேற வந்திருக்கும்மா”
“என்ன ஆர்டர்ப்பா??”
“சேம் இதே போல யூனிபார்ம் தான்ம்மா, கதிர் கொண்டு வந்த ஆர்டர் தான். இந்த முறை ஆயிரம் பீஸ் தான், நல்லா பண்ணா நமக்கு ஆர்டர்ஸ் கிடைக்கும்ன்னு சொன்னார்”
“இதெல்லாம் எப்போ சொன்னார்ப்பா??”
“நேத்து ஈவினிங் ஏழு மணி போல வந்திருந்தார் இங்க. அப்போ தான் சொன்னார்”
நயனாவிற்கு ஆத்திரமாக வந்தது. செங்கதிர் தன்னை வேண்டுமென்றே தான் அவாய்ட் செய்திருக்கிறான் என்று புரிந்தது. அவள் முன்னால் வரவேண்டாம் என்று சொன்னது அவளே தான். ஆனால் அவன் அதை செய்த போது அதிகமாய் வலித்தது.
தந்தையிடம் பேசிவிட்டு அவளின் அறைக்கு வந்திருந்தாள். அவளின் கைபேசியில் இருந்து கதிருக்கு அழைத்தாள்.
முதல் இரண்டு அழைப்பும் முழுதாய் சென்று ஓய்ந்திருக்க நயனாவும் ஓய்ந்து தான் போனாள். பத்து நிமிடம் கழித்து மீண்டும் முயற்சிக்க அழைப்பு ஓய்ந்து போகும் தருவாயில் தான் போனை அட்டென்ட் செய்தான் கதிர்.
“ஹலோ சொல்லுங்க”
“நயனா பேசறேன்”
“தெரியுது” என்ற அவன் பதிலில் பல்லைக் கடித்தாள் அவள்.
“என்ன தெரியுது உங்களுக்கு??” என்றாள் இருபொருள் பட
“பேசுறது நீங்க தான்னு தெரியுது”
“அப்போ எதுக்கு பேச வந்தேன்னும் உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் போல”
“ஹ்ம்ம் தெரியும்”
“தெரியுமா நான் தான் எதுக்குன்னு சொல்லவே இல்லையே”
“நாளைக்கு நான் அங்க வருவேன், மூணு நாள் முழுசா அங்க தான் இருப்பேன். எல்லாம் ரெடி பண்ணிட்டு பேக்கிங் முடிச்சு டெலிவரி முடிக்கறவரை இருப்பேன் ஓகே தானே”
“ரொம்ப தேங்க்ஸ்”
“ஓகே போனை வைக்குறேன்” என்று சொல்லி அவன் வைத்தும் விட்டான். நயனா போனை தூக்கி அடிக்காத குறை தான் கோபமாய் வந்தது அவளுக்கு.
மறுநாள் சொன்னது போலவே கதிர் வந்தான். ‘ஒண்ணுமே நடக்காத மாதிரி எப்படித்தான் இவரால இருக்க முடியுதோ. எனக்கு தான் பைத்தியம் பிடிக்குது’ என்ற புலம்பல் தான் நயனாவிற்கு. அவளுக்கும் மேற்கொண்டு எதுவும் யோசிக்க நேரமில்லை. வேலை ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது.
எல்லாம் முடித்து டெலிவரி செய்த பின்னே தான் சற்று ஆசுவாசம் வந்தது அவர்களுக்கு. அதற்கு பின் ஒரு வாரம் கதிர் மீண்டும் கார்மெண்ட்ஸ் பக்கமே எட்டிப்பார்க்கவில்லை. அன்று காலை வந்தவன் இளவரசனை தான் சென்று பார்த்தான். “வாங்க கதிர்”
“சார் அமௌன்ட் வந்திடுச்சா, நேத்தே ட்ரான்ஸ்பர் பண்ணிட்டேன்னு எனக்கு போன் பண்ணாங்க”
“நயனாகிட்ட செக் பண்ண சொன்னேன். நேத்து ஈவினிங் வரைக்கும் வரலைன்னு தான் சொன்னா, இருங்க நான் அவளை கூப்பிடுறேன்” என்றவர் மகளுக்கு அழைத்து கீழே வரச்சொன்னார்.
அடுத்த பத்து நிமிடத்தில் அவள் வந்துவிட கதிரை கண்டும் காணாமல் கண்டுக்கொண்டவள் “சொல்லுங்கப்பா” என்றாள்.
“அமௌன்ட் வந்திடுச்சாம்மா??”
“இப்போ தான் செக் பண்ணேன்ப்பா… வந்திடுச்சு அதை சொல்லலாம்ன்னு நினைச்சேன் அதுக்குள்ளே நீங்களே கால் பண்ணிட்டீங்க”
“கதிர்க்கு அமௌன்ட் ட்ரான்ஸ்பர் பண்ணிடும்மா”
“சார் அதுக்கு இப்போ எந்த அவசரமும் இல்லை நான் பேமென்ட் வந்திருச்சான்னு கன்பார்ம் பண்ணத்தான் வந்தேன்”
“சார் எனக்கு ஒரு சின்ன விருப்பம்”
“சொல்லுங்க கதிர்”
“இந்த ஆர்டர் நல்லபடியா முடிய இங்க வேலை பார்த்த எல்லாரும் தான் காரணம் அவங்க எல்லார்க்கும் ஒரு சின்ன பார்ட்டி மாதிரி கொடுக்கலாமா”
“அது அவங்களுக்கு மட்டும் இல்லை, இந்த ப்ளோர்ல இருக்க எல்லாரையும் சேர்த்துக்கலாம். அது அவங்களுக்கும் ஒரு சின்ன மாற்றமா இருக்கும், எல்லாரும் என்ஜாய் பண்ணுவாங்க”
“நல்ல ஐடியா தான் நயனா கூட இதே தான் சொல்லிட்டு இருந்தா. நீங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரி யோசிக்கறீங்க” என்றவர் “நான் நயனாகிட்ட பேசிட்டு எப்படி என்னன்னு உங்களுக்கு சொல்றேன் கதிர்”
“தேங்க்ஸ் சார்”
“அடுத்த ஆர்டர் வந்திருக்கு, நான் நாளைக்கு திருப்பூர் போயிட்டு வர்றேன். வந்ததும் ஸ்டார்ட் பண்ணிடலாம் அந்த வேலையை” என்றவரிடம் “சந்தோசம் நீங்க பத்திரமா போயிட்டு வாங்க. இப்போ நான் கிளம்பறேன் சார். இந்த வொர்க் நீங்க பார்த்துப்பீங்கல்ல சார்…”
“பார்த்துப்போம் ஆனா நீங்களும் கண்டிப்பா கூட இருக்கணும்” என்றார் அவர். “கண்டிப்பா சார், பை சார்” என்று அவரிடம் சொல்லிவிட்டு நயனாவை தாண்டிக் கொண்டு சென்றுவிட்டான்.
———————
“என்ன மாமா காலையிலேயே வந்திருக்கீங்க சர்ப்ரைஸா இருக்கு. விலோ நீ கூட சொல்லவே இல்லை” என்று காலையிலேயே வீட்டிற்கு வந்திருந்த தமக்கையையும் ஆதியையும் பார்த்து கேட்டாள் நயனா.
“ஏன்டி நான் கேட்க வேண்டியதை நீ கேட்கறே??” என்றாள் உடன்பிறந்தவள்
“என்ன விலோ சொல்ற எனக்கு புரியலை??”
“நயனா மாமா உன்கிட்ட ஒண்ணும் சொல்லலையா??”
“எதுக்கு புதிர் போட்டுட்டு இருக்கீங்க நேரா சொல்லுங்களேன் மாமா”
“இன்னைக்கு உன்னை பொண்ணு பார்க்க வர்றாங்க”
“என்ன!!” என்று அதிர்ந்து பார்த்தாள் நயனா.
“அப்பா எங்கே நயன்??”
“வாக்கிங் போயிருக்கார், ஏன் என்கிட்ட இதை முன்னாடியே சொல்லலை. யாரைக் கேட்டு அரேன்ஜ் பண்ணாங்க??”
“நயனா கேள்வியெல்லாம் அப்புறம் கேட்டுக்கலாம், முதல்ல நீ போய் ரெடி ஆகு. சனா கூட்டிட்டு போ” என்று விரட்டினான் ஆதித்யன்.
“விலோ யாரு வர்றாங்க?? உனக்கு முன்னாடியே தெரியுமா??” என்று அவளுடன் நடந்துக் கொண்டே கேள்வியை அடுக்கினாள் நயனா.
“எனக்கும் தெரியாது நயன். அப்பா ஆறு மணிக்கெல்லாம் போன் பண்ணாங்க. இன்னைக்கு நாள் நல்லாயிருக்கு உன்னை பெண் பார்க்க வர்றாங்கன்னு சொன்னாங்க”
“மாப்பிள்ளை வீட்டில உன்னை எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சு போச்சாம். கையோட வெத்தலை கை மாத்துறதா வேற சொல்லியிருப்பாங்க போல. அதை தான் அப்பா சொன்னாங்க”
“மாப்பிள்ளை பத்தி நீ எதுவும் விசாரிக்கலையா??”
“விசாரிக்காம இருப்பேனா மாப்பிள்ளை இந்த ஊர் தானாம். நல்ல பையன்னு சொன்னாரு”
“எனக்கு பிடிச்சிருக்கான்னு நீ கேட்டியா இல்லையா??”
“ஏன் நயன் இப்படி கேட்கறே?? உனக்கு பிடிக்கலையா??”
“நீ அப்பாவை கேட்டியா இல்லையா??”
“இல்லை…”
“ஏன் கேட்கலை??”
“ஏன்னா என்ன சொல்ல, அப்பா தானே எனக்கும் மாப்பிள்ளை பார்த்தார் என்ன கெட்டுப் போச்சு சொல்லு. உங்க மாமா மாதிரி கிடைப்பாங்களா…”
“விலோ லூசு மாதிரி பேசாத நான் ஒண்ணும் அப்பா நமக்கு கெடுதல் பண்ணுவார்ன்னு சொல்லலை”
“அப்புறம் என்ன யோசனை உனக்கு?? மாப்பிள்ளை வரட்டும் வந்ததும் நீ உனக்கு பிடிச்சிருந்தா சரின்னு சொல்லு இல்லைன்னா வேணாம்ன்னு சொல்லு”
“ஓ!! அப்புறம்”
“நயன்”
“என்ன நயன் டென்னுட்டு இருக்க, வெத்தலை கை மாத்துற அளவுக்கு பேசியிருக்காங்க. எனக்கு தெரியணுமா வேணாமா… கல்யாணம் எனக்கு தானே”
“கண்டிப்பா உனக்கு தான்மா நயனா” என்ற குரலில் பெண்கள் இருவரும் திரும்பி பார்க்க இளவரசன் நின்றிருந்தார்.
“அப்பா…”
“அப்பா உன்னை கேட்காம செஞ்சிட்டேன் தான் ஆனா உனக்கு பிடிக்காததை கண்டிப்பா செய்யலைம்மா” என்றார் அவர்.
அவரின் புதிரான பதில் அவளை யோசிக்க வைக்க அமைதியானாள் நயனா. “சீக்கிரம் போய் ரெடியாகிட்டு வாம்மா…”
“மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க. விலோம்மா உங்க மாமனார் மாமியார் எப்போ வர்றாங்க”
“கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்கப்பா”
“சரிம்மா நீ போய் நயனாவை ரெடி பண்ணி கூட்டிட்டு வா… மதிய சாப்பாட்டுக்கு நான் ஹோட்டல்ல சொல்லிட்டேன், கொஞ்ச நேரத்துல வந்திடுவான்” என்று அவர் சொல்ல விஷயம் தன் கை மீறி சென்றுக் கொண்டிருப்பதாக உணர்ந்தாள் நயனா.
நயனாவை பட்டுப்புடவை கட்ட வைத்து தலைப்பின்னி பூ வைத்துவிட்டாள் விலோசனா. அதுவரை முகத்தை இறுக்கமாக வைத்திருந்த நயனாவின் கண்கள் லேசாய் கலங்கியது.
“நயன் எதுக்குடி இப்படி கண்ணு கலங்குறே??”
“நீ பேசாத போ… அம்மா இருந்தா இப்படித்தான் என்னை கேட்காம உங்க இஷ்டத்துக்கு செய்வீங்களா… என்கிட்ட ஒரு வார்த்தை கேட்கணும்ன்னு யாருக்குமே தோணலையா?? நீ கூட என்னை ஏமாத்திட்ட விலோ…” என்றுவிட்டு குமுறி குமுறி அழுதாள் நயனா.
எப்போதும் விலோசனா தான் அம்மாவை அதிகம் தேடியிருக்கிறாள், முதல் முறையாக நயனா தன் தாயின் இழப்பை நினைத்து கண் கலங்குவதை பார்த்த விலோசனாவிற்கும் அழுகை வந்தது.
“நயன் ப்ளீஸ்டி அழாதே”
“ஆனா நீ எதுக்கு இப்போ இப்படி அழறே?? நான் தான் சொன்னேன்ல உனக்கு பிடிக்கலைன்னா கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது நான் அப்பாகிட்டயும் உங்க மாமாகிட்டையும் பேசறேன் ப்ளீஸ் நயன் கண்ணைத் துடை” என்றவள் தானே துடைத்தும் விட்டாள்.
“அப்பா சடனா சொல்லவும் என்னால எதுவும் சொல்ல முடியலை நயன். அவங்க மாமா அத்தைகிட்ட தான் முதல்ல பேசினாங்க. அப்புறம் உங்க மாமாகிட்ட பேசிட்டு கடைசியா தான் என்கிட்ட சொன்னாங்க”
“நான் என்ன செய்ய முடியும்ன்னு நீ நினைக்கிறே?? அவங்க பொண்ணு பார்க்கட்டும், வேணாம்ன்னா சொல்லு பேசிக்கலாம்” என்று தங்கையை கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்தாள் விலோசனா.
ஒரு வழியாய் அமைதியான நயனா நடக்கப் போகும் நிகழ்வுக்கு மனதளவில் தன்னை தயார் செய்துக் கொண்டிருந்தாள். விலோசனாவை ஆதி வந்து அழைக்க அவள் சென்றுவிட்டாள். 
அறையில் தனித்திருந்தாள் நயனா, கையில் இருந்த கைபேசியையே வெறித்து பார்த்தாள். கதிருக்கு அழைக்க துடித்த மனதை இழுத்து பிடித்து கடிவாளம் போட்டாள்.
கைபேசியை தூக்கி தூர வைத்தாள். ‘உன்னை வேணாம்ன்னு சொன்னவனை ஏன் நினைச்சுட்டு இருக்க’ என்று அவள் மனம் கூப்பாடு போட்டது. விலோசனாவும் சந்தியாவும் உள்ளே வந்தனர். 
“என்னம்மா கல்யாண பொண்ணு எப்படியிருக்க??” என்ற சந்தியாவை பார்த்து லேசாய் இதழ் வளைத்தாள். “நயன் போகலாம் அவங்க எல்லாம் வந்திட்டாங்க… அத்தை நீங்க போய் அவங்ககிட்ட பேசிட்டு இருங்க. நான் இவளை கூட்டிட்டு வர்றேன்” என்றாள் விலோசனா.
“சரிம்மா” என்றவர் நகர்ந்துவிட நயனாவின் முகத்தை துண்டு ஒன்றை கொண்டு அழுந்த துடைத்த விலோசனா லேசாய் பவுடர் ஒற்றி கலைந்திருந்த தலை முடியை திருத்தினாள்.
“போகலாம் நயன்” என்று சொல்ல கீ கொடுத்த பொம்மை போல அவளுடனே நடந்தாள் நயனா. “எல்லாருக்கும் வணக்கம் சொல்லிக்கோ நயன்” என்று தங்கையின் காதில் கிசுகிசுத்தாள் தமக்கை.
அவள் முகத்தை நிமிர்த்தாமலே வணக்கம் சொல்லிட “நயனா மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை நல்லா பார்த்துக்கோ” என்ற ஆதியின் குரலில் அவனை முறைத்துப் பார்க்க நிமிர்ந்தவள் திகைத்து நின்றாள்.
ஆதியின் அருகில் அமர்ந்திருந்தது செங்கதிரின் அன்னை ராஜாத்தி. எதிரில் இருந்த இருக்கையில் அவன் தமக்கை பூங்கோதை தன் குழந்தைகளுடனும் கணவருடனும் அமர்திருந்தாள். சுற்றிமுற்றி பார்க்க கதிர் வந்திருக்கவில்லை.
நயனாவின் பார்வை ஆதியை தொட்டு நின்றது. ‘இதெல்லாம் உங்கள் வேலை தானா’ என்று. அவனும் பதிலுக்கு ஆமென்ற பார்வை பார்த்தான்.

Advertisement