Advertisement

“இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள்.
புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்… நல்லவிதமா சொல்லிட்டேன், வா… வாழ்த்துகள்…” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது.
பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
இதென்ன புது குழப்பம் என்ற எண்ணம் தான் அவனுக்கு. அவன் கைபேசி வேறு அழைத்துக் கொண்டிருந்தது. அதை எடுக்கக் கூட தோன்றாமல் நயனாவையே பார்த்திருந்தான்.
பெண் வீட்டார் யாரோ தன்னை விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்ற செய்தியே அவனுக்கு புதிது. இதில் நயனாவின் அழுகை வேறு அவனை பலவீனப்படுத்தியது.
எதற்கு அவன் பதில் சொல்வதென்றே புரியாமல் சில நொடி விழித்து நின்றவன் “எனக்கு தெரியாது நயனா, நான் யாரையும் வரச்சொல்லலை” என்றான் அவளுக்கு விளக்கம் சொல்லும் விதமாய்.
அவளோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே அழுத்தமாய் நின்றிருந்தாள். அவன் கைபேசி விடாமல் அடிக்க சலிப்புடன் அதை எடுத்து அட்டென்ட் செய்தான்.
“சொல்லுங்கம்மா… யாரைக் கேட்டு வரச்சொன்னீங்க?? எதுக்கு வந்தாங்க?? எனக்கு அசிங்கமா இருக்கும்மா?? என்கிட்ட முன்னாடியே சொல்லியிருக்கணுமா வேணாமா” என்று அவன் நயனாவிற்கு கேட்காத குரலில் மெதுவாய் பேசினாலும் அந்த அறை சிறியதென்பதால் அவள் காதில் ஸ்பஷ்டமாய் விழுந்தது அவன் பேச்சு.
போனை வைத்துவிட்டவன் தலையில் கை வைத்து தேய்த்துக் கொண்டிருந்தான். “சாரி நயனா எனக்கு தெரியாது. அம்மா தான் ஏதோ பண்ணியிருக்காங்க”
“எனக்கு எதுக்கு விளக்கம் சொல்றீங்க?? நான் உங்களை எந்த கேள்வியும் கேட்கலையே??” என்றாள்.
“நயனா ப்ளீஸ் நீ பேசுறது எனக்கு சுருக் சுருக்குன்னு தைக்குது”
“என்னைவிடவா” என்று நிமிர்ந்து பார்த்து சொன்னவளின் கண்களில் கண்ணீர் வழிந்தது. அதை இயலாமையுடன் பார்த்திருந்தான் செங்கதிர்.
“ப்ளீஸ் நீங்க கொஞ்சம் நேரம் வெளிய போறீங்களா??”
“நயனா நீங்க…”
“வேணாங்க நான் உங்களை எதுவுமே கேட்கலை. எனக்கு எதுவும் தெரிய வேணாம்…”
“நான் உன்கிட்ட பேசணும்” என்றான் இப்போது ஒருமையில்.
“எனக்கு பேச எதுவுமில்லை”
“நான் உனக்கு எந்த வாக்கும் கொடுக்கலை நயனா. நான் எந்தவிதத்துல உன்னை டிஸ்டர்ப் பண்ணேன்னு எனக்கு புரியலை”
“தயவு செஞ்சு சொல்றேன் இங்க இருந்து போய்டுங்க. நீங்க எதுவுமே செய்யலை, எல்லாமே நான் தான் பண்ணது. தப்பு என்னோடது மட்டும் தான் சரிங்களா”
“உங்களை நான் எப்பவும் குற்றம் சொல்லவே மாட்டேன். நீங்க குற்றவாளியும் ஆக மாட்டீங்க சரிங்களா”
“நயனா நீ திரும்ப திரும்ப என்னோட பேச்சை வெட்டுறது மாதிரியே பேசுற என்னை பேசவே விடமாட்டேங்குற??”
“என்ன பேசணும்ன்னு நினைக்கறீங்க பேசுங்க. என்னோட விதி நான் அதை கேட்டுக்கறேன். இன்னும் என்னெல்லாம் நான் கேட்கணுமோ நான் கேட்கறேன் சொல்லுங்க” என்றவளின் விழிகள் நிரம்பி அணையுடைத்திருந்தது. அதைக் காண சகியாதவன் எட்டி அவளை அணைத்திருந்தான்.
———————
“சனா” என்று காதோரமாய் கேட்ட மெல்லிய குரலில் உறக்கம் லேசாய் கலைய கண்ணை மெதுவாய் திறந்து அருகிருந்தவனை பார்த்தாள்.
சோம்பலாய் அவனுக்கு “குட் மார்னிங்” என்றிருந்தாள்.
“மார்னிங் எல்லாம் இன்னும் ஆகலை”
“என்ன சொல்றீங்க??”
“இன்னும் நல்லா விடியறதுக்கு ரெண்டு மணி நேரம் இருக்கு”
“மணி என்ன??”
“ஐஞ்சு”
“இப்போ தானே எழுந்துக்கணும்ன்னு சொன்னீங்க?? ஊருக்கு கிளம்பணும்ல இன்னைக்கு”
“இன்னைக்கே கிளம்பணுமா??”
“நான் எப்போ அப்படிச் சொன்னேன். நீங்க தானே நேத்து சொன்னீங்க”
“மறுபடியும் எல்லா இடத்தையும் ஒரு தரம் சுத்திப் பார்ப்போமே…”
சட்டென்று எழுந்து அமர்ந்தாள் விலோசனா. அவளுக்கும் இன்னும் இரண்டு நாட்கள் இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் என்று தோன்றியது. முதல் நாள் தான் இருவரும் சற்று நன்றாகவே பேசியிருந்தனர்.
அதற்குள் கிளம்ப வேண்டுமா என்று தான் நினைத்திருந்தாள். இதோ அவளின் கணவனும் அதையே தான் சொல்கிறான் “நிஜமா தான் சொல்றீங்களா. எனக்கும் ஆசையா தான் இருக்கு” என்றாள் அவள்.
“ஆசையா இருந்தா சொல்ல மாட்டியா??”
“எனக்கென்ன தெரியும் உங்களுக்கு லீவு இருக்காதுல. அதான் நான் எதுவும் சொல்லலை”
“நான் இன்னும் ஒரு ரெண்டு மூணு நாள் லீவு போடலாம்ன்னு நினைக்கிறேன். இருந்து நல்லா சுத்தி பார்த்திட்டு அப்புறம் தான் கிளம்பறோம் ஓகே வா” என்றவன் பேச்சில் துள்ளலையும் மீறி எதுவோ இருந்தது.
விலோசனாவிற்கும் அவனின் மகிழ்ச்சி ஒட்டிக்கொண்டது. ஆதியும் சொன்னது போலவே மேலும் மூன்று நாட்கள் தன்னுடைய விடுப்பை நீட்டித்திருத்தான். 
“இன்னைக்கு எங்க போறோம். சைக்கிள் எடுத்திட்டு சுத்தலாமா??”
“அது நாளைக்கு பார்க்கலாம்”
“அப்போ எங்க போகலாம் கோக்கர்ஸ் வாக். எனக்கு அது ரொம்ப பிடிச்சது”
“அதுவும் நாளைக்கு போகலாம்”
“அப்போ அந்த மரமெல்லாம் நிறைய இருந்துச்சு அந்த இடத்துக்கு கூட்டிட்டு போறீங்களா”
“சனா இன்னைக்கு நாம கண்டிப்பா சுத்திப் பார்க்கறோம். ஆனா வெளிய இல்லை”
“என்ன??”
“ஆமா வெளிய இல்லை”
“புரியலை எனக்கு”
“உனக்கு புரிஞ்சிருந்தா தான் உலக அதிசயமாச்சே”
“சுத்தி வளைக்காம என்ன விஷயம்ன்னு சொல்லுங்க”
“சுத்தி வளைக்கிறது தான் விஷயமே” என்றவன் அவளின் அருகே நெருங்கியிருந்தான்.
“நீ என்னை சுத்தி பார்த்தது இல்லை. நானும் உன்னை சுத்தி பார்த்தது இல்லை. நாம சுத்தி பார்ப்போமே” என்றவனின் கரம் அவள் இடையில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுத்திருக்க அவன் சொல்ல வந்தது அப்போது தான் புரிந்தது அவளுக்கு.
முகம் சிவந்துவிட அவன் மார்பிலேயே சாய்ந்துக் கொண்டாள் அவள்.
“பதில் சொல்லு” என்று அவளின் முகம் நிமிர்த்தினான் அவன்.
அவளோ பிடிவாதமாய் திருப்ப மறுக்க “வேணாமா??” என்று அவன் கேட்கவும் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவளின் சம்மதம் அந்த ஒற்றை பார்வையில் தெரிந்துவிட அவளின் இதழை வருடினான்.
“சொல்லு”
“சுத்தி பார்க்கணும்ன்னு முடிவு பண்ணிட்டு என்கிட்ட சம்மதம் கேட்கறீங்க??” என்றாள் அவள் சிணுங்கலாய்.
“நீ என்னை சுத்தி பார்க்க நான் சம்மதிக்க வேணாமா??” என்றவன் சொல் “உங்களை…” என்றவள் அவன் தோளிலேயே நன்றாக குத்தினாள்.
தங்களின் இல்லற வாழ்வை தொடங்கியவர்கள்  தங்களின் தேனிலவை நிறைவாய் சந்தோசமாய் கொண்டாடிவிட்டு தெளிந்த முகமாய் வீடு திரும்பியிருந்தனர்.
ஆதியின் வீட்டில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவியது. சந்தியா கூட மகனை கிண்டல் செய்தார். ஆதி சமையறையில் தன் மனைவிக்கு உதவி செய்துக் கொண்டிருந்தான்.
“ஏங்க நீங்க ரொம்ப மோசங்க??” என்று ஆரம்பித்தார் சந்தியா.
“ஏன் சந்து நான் என்ன செஞ்சேன்??” என்றார் அருள்செல்வன்.
“ஒரு நாளாச்சும் நீங்க எனக்கு உதவி பண்ணியிருக்கீங்களா… பாருங்க உங்க புள்ளைய பொண்டாட்டிக்கு என்னமா ஹெல்ப் பண்றான். இங்க ஆதி ஆதின்னு ஒரு புள்ளை இருந்துச்சு இப்போ பெட்டிப்பாம்பா அடங்கிருச்சு” என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஆதி விலோசனாவுடன் வந்தான்.
“என்னம்மா என்னைப் பத்தி பேசிட்டு இருக்கற மாதிரி இருக்கு” என்றான்.
“ஆமா ஆதி உன் அருமை பெருமை தான் பேசிட்டு இருந்தேன்”
“என்னம்மா அப்பாக்கிட்ட என்னை காணோம்ன்னு கம்பிளைன்ட் பண்ணிட்டு இருந்தீங்க போல. அப்பாவை எவ்வளவு பெரிய டிஎஸ்பி அவர்கிட்ட பஞ்சாயத்து வைக்கறீங்க” என்றான் அவன்.
“ஊருக்கே போலீசா இருந்தாலும் எனக்கு அவர் புருஷன்டா. என் புருஷன்கிட்ட நான் கம்பிளைன்ட் பண்ணுறேன் உனக்கென்ன”
“நான் பாட்டுக்கு சிவனேன்னு தானே இருக்கேன். அம்மாவும் புள்ளையும் சேர்ந்து என்னை ஏன் ஓட்டுறீங்க” என்றார் அவர் பாவமாய்.
“ஆனா ஆதி இந்த கொடைக்கானல் போற பிளானை உங்கப்பா முன்னாடியே செஞ்சிருக்கலாம். தமிழ் சினிமால எல்லாம் கிளைமாக்ஸ்ல தான் போலீஸ் வருவாங்க”
“அது மாதிரி உங்கப்பாவும் கடைசியா தான் இந்த ஐடியா யோசிச்சிருக்கார் பாரேன். என்ன இருந்தாலும் அவரும் போலீஸ் தானே” என்று இன்னும் கொஞ்சம் தன் கணவரை டேமேஜ் செய்துக் கொண்டிருந்தார் சந்தியா.
ஆதி மதுரைக்கு வந்த இரண்டு நாளில் விருதுநகருக்கு சென்றிருந்தான் முக்கிய வேலை ஒன்றை முடிப்பதற்காய்…

Advertisement