Advertisement

20
“என்னங்க இது இந்த சட்டையில ஒரு பக்கம் தூக்கலாவும் இன்னொரு பக்கம் இறக்கமாவும் இருக்கு. கொஞ்சம் கவனமா தைங்க. உங்களை பார்த்தா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுது”
“கொஞ்சம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் எல்லார்க்கும் டீ கொண்டு வரச் சொல்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் செங்கதிர்.
டீ எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “என்னண்ணே இன்னைக்கு கொஞ்சம் லேட்டா வர்றீங்க போல. இனிமே கொஞ்சம் நேரமா வந்து கொடுங்க”
“ஏன் சார் எனக்கு வேலை இல்லையா சார்?? நான் ஒரு ஆளே இங்க இருக்க பத்து கடைக்கும் போகணும் சார்… முன்னபின்ன தான் சார் இருக்கும்…” என்றான் அவன்.
“அண்ணே தப்பா எடுத்துக்காதீங்க. உங்க கடை டீ தான் இங்க இருக்கவங்களுக்கு எனர்ஜியே. நேரம் ஆகிடுச்சுன்னா அவங்க சோர்ந்து போய்டுவாங்கண்ணே அதான் சொன்னேன்”
கதிரின் அப்பேச்சில் மனம் குளிர்ந்தவன் “சரி சார் முடிஞ்சவரை சீக்கிரம் வரப்பாக்குறேன். நீங்க ஒரு பிளாஸ்க் வேணா வாங்கி வைச்சிடுங்க. கொஞ்சம் சீக்கிரமே டீ போட்டு கொண்டு வந்து வைச்சுட்டு போய்டறேன்”
“எனக்கும் நெறைய கடை ஏறி இறங்கணும் நீங்க புரிஞ்சுக்குவீங்கன்னு நினைக்கிறேன்” என்று அவன் சொல்ல அது கதிருக்கும் சரியாக தோன்ற “சரிண்ணே வாங்கி வைக்குறேன்” என்றுவிட டீ கொண்டு வந்தவர் அங்கிருந்து நகர்ந்தார்.
தூரத்தில் இருந்து அவனின் ஒவ்வொரு செயலையும் கவனித்துக் கொண்டு தானிருந்தாள் நயனா. வேலை செய்பவர்களின் லேசான சோர்வும் கூட வேலையை பாதிக்கும் என்றுணர்ந்து சிறு சிறு விஷயத்தையும் உன்னிப்பாய் கவனித்து செய்பவனின் ஒவ்வொரு செயலும் நயனாவின் மனதில் பதிந்துக் கொண்டே இருந்தது.
“என்னம்மா என்ன பார்க்கறே??” என்று எட்டிப்பார்த்தார் இளவரசன். 
“ஒண்ணுமில்லைப்பா கதிர் சார் வேலை வாங்குறதை பார்த்திட்டு இருக்கேன். ரஞ்சனி ஏதோ மிஸ்டேக் பண்ணிட்டாங்க, அவங்க ரொம்ப டல்லா இருக்காங்க அதான் அப்படி தப்பு பண்ணிட்டாங்கன்னு போய் ரெஸ்ட் எடுக்க சொல்லி இருக்கார்”
“நல்ல பையன்மா… மாப்பிள்ளை மூலமா தெரிஞ்சாலும் எனக்கு வேலை விஷயத்துல எப்படி இருப்பாங்களோன்னு ஒரு சின்ன உறுத்தல் இருக்கத்தான் செஞ்சுது”
“ஆனா வேலையில ரொம்ப சரியா இருக்கார். ஒரு சின்ன தப்பும் நடக்கக்கூடாதுன்னு கவனமா பார்த்து பார்த்து செய்யறார், கெட்டிக்காரர் தான்” என்று பாராட்டு பத்திரம் வாசித்து நகர்ந்துவிட்டார் இளவரசன்.
இரண்டு நாட்கள் கடந்திருந்தது, கதிர் இன்னமும் கார்மெண்ட்ஸ்க்கு வந்திருக்கவில்லை. கதிர் எப்போதும் மதியத்திற்கு மேல் தான் அங்கு வருவான். நயனா மட்டுமே இருந்தாள், இளவரசன் பேங்க் வரை சென்றிருந்தார்.
நயனா அப்போது தான் ரவுண்ட்ஸ் முடித்து அவள் அறையில் ஏதோ கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மேடம்” என்ற அழைப்பில் கணினியில் இருந்து கண்களை அகற்றி நிமிர்ந்து பார்த்தாள். அங்கு வேலை செய்யும் பெண்ணொருவர் தான் அழைத்திருந்தார்.
“சொல்லுங்க பிருந்தா”
“கதிர் சாரை பார்க்க வந்திருக்காங்க மேடம்”
“அவர் தான் இன்னும் வரலையே சொன்னீங்களா அவங்ககிட்ட”
“சொன்னேன் மேடம்”
“என்ன சொன்னாங்க??”
“வேற யாரு இருக்காங்கன்னு கேட்டாங்க” என்று அவர் சொல்லவும் யோசனையுடன் பார்த்தாள் நயனா.
“என்னை பார்க்கணும்ன்னு சொன்னாங்களா??”
“அப்படிச் சொல்லலை மேடம், ஆனா”
“என்னன்னு சொல்லுங்க??”
“அவங்களை வரச்சொல்றேன் மேடம் நீங்க கொஞ்சம் பேசுங்களேன்” என்றுவிட்டு நயனாவின் பதிலுக்காய் பார்த்திருந்தார் பிருந்தா.
ஒரு புருவச்சுளிப்புடனே “சரி வரச்சொல்லுங்க, நான் கதிர் சார்க்கு போன் பண்ணி சீக்கிரம் வரச் சொல்றேன்” என்றாள் அவள்.
பிருந்தா சென்ற சில நிமிடங்களில் அவருடன் இரண்டு பேர் உள்ளே நுழைந்தனர். வந்தவர்களில் ஒருவருக்கு வயது அறுபதை நெருங்கியிருக்கும், மற்றொருவருக்கோ மத்திம வயதே இருக்கும்.
வந்தவர்களை வரவேற்கும் விதமாய் எழுந்து நின்றவள் “வாங்க வாங்க… உள்ள வாங்க, உட்காருங்க” என்றாள்.
அவர்களும் “வணக்கம்மா” என்று ஒருசேர கைக்கூப்பி இவள் காட்டிய இருக்கையில் அமர்ந்தனர்.
“கதிர் தம்பி??” என்று ஒருவர் ஆரம்பிக்க “இனிமே தான் சார் ஆபீஸ்க்கு வருவாங்க. இந்நேரம் அவங்க கடையில இருப்பாங்க… போன் பண்ணி இப்போ வரச்சொல்றேன்” என்றவள் பிருந்தாவிடம் திரும்பி “காபி எடுத்திட்டு வரச்சொல்லுங்க” என்றாள்.
“அதெல்லாம் வேணாம்மா”
“இருக்கட்டுங்க” என்றவள் அவருக்கு கண்ணைக் காட்ட அவர் அப்புறம் நகர்ந்தார்.
“தம்பிக்கு நீங்க போனெல்லாம் பண்ண வேண்டாம்மா…”
“இல்லை அவங்க வர்றதுக்கு நேரமாகுமே, வேணும்ன்னா கடை அட்ரஸ் தரவா அங்க வேணா போய் பார்க்கறீங்களா??”
“இல்லைம்மா வேண்டாம் அவங்க இங்க இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சு தான் வந்தோம்” என்ற அவர்களின் பேச்சு அவளை குழப்பியது.
யோசனையாகவே அவர்களை ஏறிட்டாள். “நாங்க பேசுறது உங்களுக்கு புரியலைன்னு தெரியுதும்மா. எங்க வீட்டு பொண்ணுக்கும் அந்த தம்பிக்கும் கல்யாணத்துக்கு பேசியிருக்கோம்”
“அதான் மாப்பிள்ளை எப்படின்னு விசாரிச்சுட்டு போலாம்ன்னு வந்தோம்மா. அவங்க இருக்கும் போது விசாரிச்சா என்ன நினைப்பாங்களோ”
அவர்கள் சொல்லச் சொல்ல நயனாவின் இதயத்தை குத்தீட்டி ஒன்று நேராய் வந்து தைத்தது போல வலி எடுத்தது அவளுக்கு.
சிரமப்பட்டு தன்னை சரியாகக் காட்டிக்கொண்டாள். “என்ன தெரியணும் உங்களுக்கு சாரை பத்தி??”
“என்னன்னு நாங்க கேட்டு அதுக்கு நீங்க பதில் சொல்றதைவிட அவர் எப்படின்னு நீங்க சொன்னா நாங்க தெரிஞ்சுக்குவோம்மா” என்றார் முதலாமவர்.
“அப்பா தெளிவா கேளுங்கப்பா, அவருக்கு தண்ணி, சிகரெட் பழக்கம் இப்படி இருக்கான்னு” என்றார் இரண்டாமவர்.
“எங்களுக்கு தெரிஞ்சவரை அவருக்கு அப்படி எந்த கெட்டப் பழக்கமும் இல்லைங்க. நல்ல உழைப்பாளி உங்க பொண்ணை நம்பி கொடுக்கலாம் நல்லா பார்த்துக்குவார். நல்ல குணசாலியும் கூட”
“உங்களுக்கு என் பேச்சுல நம்பிக்கை இல்லைன்னா இங்க இருக்கவங்ககிட்ட கூட நீங்க விசாரிச்சுக்கலாம்”
“எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாங்களா??” என்றாள் தொடர்ந்து.
“சொல்லுங்கம்மா”
“இல்லை அவர் கடையில போய் விசாரிக்காம இங்க வந்து இருக்கீங்களே, அதான்…” என்று முடிக்காமல் இழுத்தாள் அவள்.
“கடைக்கு நேத்தே போய் விசாரிச்சுட்டோம்மா. நாலு இடத்துல விசாரிக்கறதுல தப்பில்லீங்களே, எங்க பொண்ணை கொடுக்கப் போறோம் அதான்ம்மா” என்றார் அவர்.
அதற்குள் காபி வந்துவிட அவர்கள் அதை குடித்துவிட்டு எழ உடன் நயனாவும் எழுந்தாள்.
“பிருந்தா” என்றழைக்க “சொல்லுங்க மேடம்” என்று வந்தார் அவர்.
“இவங்களுக்கு இடத்தை சுத்தி காமிங்க. அவங்க எதுவும் கேட்டா தயங்காம பதில் சொல்லுங்க. நம்ம ஸ்டாப்ஸ்கிட்டயும் சொல்லுங்க நான் சொன்னேன்னு” என்றுவிட்டு அவர்களை நோக்கி திரும்பியவள் “நீங்க போய் பாருங்க சார்… அப்படியே என்ன விசாரிக்கணுமோ விசாரிங்க” என்றாள்.
“ரொம்ப நன்றிங்கம்மா” என்றவர்கள் கிளம்பிவிட நயனா அவள் இருக்கையில் தொப்பென்று விழுந்தாள்.
சிறிது நேரத்தில் திரும்பி வந்த பிருந்தா அவர்கள் கிளம்பிவிட்ட தகவலை சொல்லிவிட்டு செல்ல “எனக்கு ரொம்ப தலைவலிக்குது நான் கொஞ்சம் படுத்திருக்கேன். ஒரு மணி நேரத்துக்கு என்னை டிஸ்டர்ப் பண்ண வேணாம்” என்றாள்.
பிருந்தாவும் தலையாட்டி நகர்ந்துவிட மேஜையில் தலை கவிழ்ந்து படுத்துக்கொண்டாள் நயனா. உள்ளுக்குள் எதுவோ அடைப்பதான உணர்வு.
தொண்டை வரை அடைத்த அவ்வுணர்வை கட்டுப்படுத்த முடியாமல் போக விம்மல் வெடித்தது அவளிடம். கதிர் அப்போது தான் கார்மெண்ட்ஸ்க்குள் நுழைந்தான்.
வந்ததும் வெளியே அனைத்தும் பார்வையிட்டு ஒரு சிலரிடம் தேவையான மாற்றங்களை கூறி சரி செய்யச் சொல்லிவிட்டு அவன் அறைக்குள் நுழைந்தான்.
நயனாவின் அறைக்கு வெளியே இருந்த அறை தான் செங்கதிரின் அறை. இளவரசன் பெரும்பாலும் முதல் மாடியில் இருக்கும் அவரின் அறையில் தான் இருப்பார்.
இரண்டாவது மாடி இப்போது இந்த புது ஆர்டருக்காக தானே எடுத்திருந்தனர். அதில் தான்  நயனாவிற்கென்று தனியறை இருந்தது.
செங்கதிர் அறைக்கு வந்தவன் காலையில் இருந்து முடித்த உடைகளின் எண்ணிக்கையை சரி பார்த்தான். அடுத்து தயாரான உடைகளை பார்வையிட செல்ல வேண்டும்.
இருக்கையில் இருந்து எழுந்தவனுக்கு லேசான விசும்பல் ஒலி கேட்க சுற்றுமுற்றும் பார்த்தான். ‘என்ன சத்தம்’ என்ற எண்ணம் தான் அவனுக்கு.
‘நயனா எங்கே போனா??’ என்று யோசித்துக்கொண்டே அவள் அறைக்கதவை தட்ட பதிலில்லை.
மெதுவாய் அறைக்கதவை திறக்க அதிர்ந்து போனான் அவன். நயனா தான் மேஜையில் கவிழ்ந்து அழுதுக் கொண்டிருந்தாள்.
பதறியவனாக “ஏங்க என்னங்க ஆச்சு?? என்னாச்சுங்க” என்றான்.
அவளோ பதில் சொல்லாமல் இன்னும் அழுகையில் தானிருந்தாள்.
“நயனா கேக்கறேன் பதில் சொல்லுங்க எதுக்கு அழறீங்க??” என்று அவன் கேட்கவும் ஒருவாறு சுயநினைவு வந்தவளாக கண்ணைத் துடைத்து எழுந்தமர்ந்தாள் அவள்.
“ஒண்ணுமில்லை”
“ஒண்ணுமில்லாமலா அழுதிட்டு இருக்கீங்க?? கால் எதுவும் வலிக்குதா?? வேற எதுவும் பிரச்சனையா??” என்றான் அவன்.
“எனக்கு என்ன பிரச்சனை வந்தா உங்களுக்கென்ன?? நீங்க வந்து அதை தீர்த்து வைக்கப் போறீங்களா??” என்றாள் சீறலாய்.
“என்னன்னு சொல்லுங்க அப்போ தானே தீர்க்க முடியும். எதுக்குங்க அழுதீங்க??”
“நான் எதுக்கோ அழறேன். அதைப்பத்தி நீங்க ஏன் கவலைப்படுறீங்க. போங்க போய் உங்க வேலையை மட்டும் பாருங்க… என்னைப்பத்தி யோசிக்க உங்களுக்கு எதுவுமில்லை” என்ற அவளின் குத்தலான பேச்சு அவனுக்கு புரியாமலில்லை.
ஆனாலும் எதற்கு அழுதாளோ என்று எண்ணித்தான் அவன் மனம் தவித்தது. “என்னன்னு என்கிட்ட சொல்லலாம்ல??” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க “நீங்க யாரு எனக்கு?? நான் எதுக்கு உங்ககிட்ட என்னோட பர்சனல் எல்லாம் சொல்லணும்” என்றாள்.
“நயனா…” என்றான் சற்றேறிய குரலில்.
“என்ன??” என்றாள் அவனுக்கு சற்றும் தளராத குரலில்.
“என்னை உங்க பிரண்ட்டா நினைச்சு சொல்லலாமே”
“நீங்க எனக்கு பிரண்டு கிடையாது” என்றாள் முகத்திலடித்தது போல்.
“ஒரு வெல்விஷரா நினைச்சுக்கோங்க”
“எனக்கு நீங்க எதுவுமே கிடையாதுங்க பேசாம போய்டுங்க. இந்த ஆபீஸ்ல நீங்க ஒரு பார்ட்னர் அதுவும் எங்கப்பாக்கு அவ்வளவு தான் அதுக்கு மேல எந்த உறவுமில்லை நமக்குள்ள” என்று சொல்லி முகத்தை திருப்பிக் கொண்டாள்.
அதற்கு மேல் அங்கிருந்தால் அவள் இன்னும் காயப்படுத்துவாள் என்றுணர்ந்தவனாய் வெளியேறப் போனவனை அவள் குரல் நிறுத்தியது.

Advertisement