Advertisement

“ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்”
“இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள்.
“நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா நான் அம்மாவோட தான் இருப்பவும் எப்பவும். எனக்கு பதினாலு வயசு இருக்கும் போது அம்மா தவறிப்போனாங்க உடம்பு சரியில்லாம”
“அப்போ நான் பெரிய மனுஷி ஆகியிருந்தேன். அந்த சமயத்துல நான் அம்மாவை ரொம்பவே தேடினேன்”
“அவங்க எப்பவும் நான் தைரியமா வளரணும்ன்னு சொல்லிட்டே இருப்பாங்க. அவங்க இருந்திருந்தா நான் அப்படித்தான் இருந்திருப்பேன் நினைக்கிறேன்”
“அவங்களோடவே கொஞ்ச நஞ்சமிருந்த என்னோட தைரியமும் போச்சு. உடைஞ்சு போயிட்டேன், நயன் மட்டும் இல்லைன்னா என்னாகியிருப்பேன் தெரியாது. எனக்கு இன்னொரு அம்மாவா அவ தான் இருந்தா”
“நான் தான் அவளுக்கு அம்மாவா இருந்திருக்கணும். ஆனா என்னை தேத்தி அப்பாவை பார்த்துக்கிட்டு அவ தான் தைரியமா இருந்தா” என்று சொல்லி தேம்பி தேம்பி அழுதாள்.
“சனா விடு அதெல்லாம் இனி பேச வேணாம். உனக்கு எல்லாமா நயனா இருந்திருக்கா. அவளோட ஆசை என்னன்னு நீ தெரிஞ்சுக்கிட்டியா”
நிமிர்ந்து தன் கணவனை பார்த்தவள் “என்ன சொல்றீங்க?? அவளுக்கு அப்படியெல்லாம் எதுவும் எப்பவும் இருந்ததில்லை”
“உனக்கு பார்த்து பார்த்து செஞ்சவளுக்கு என்ன தேவைன்னு உனக்கு தெரியலை. நீ தெரிஞ்சுக்கலைன்னு தான் சொல்லணும்”
“என்னங்க புதிர் போடறீங்க”
“புதிர் எல்லாம் இல்லை உனக்கு புரியலை. விடு அதை அப்புறம் பேசுவோம்”
“உன்கிட்ட நான் ஒண்ணு சொல்லணும்”
“என்னங்க”
“இனியும் நீ லென்ஸ் போட்டுத்தான் ஆகணுமா??”
அவளிடம் பதிலில்லை, “சரி அது உன்னிஷ்டம்”
“ஆனா நான் உன்னை அதுக்காக எல்லாம் கல்யாணம் பண்ணலை. ஆப்கோர்ஸ் அன்னைக்கு நான் உன்கிட்ட சொன்னது நிஜம் தான். நான் ப்ராக்டீஸ் பண்ணிட்டு இருந்த சமயம் அது”
“அப்போ தான் அந்த சின்னப்பொண்ணை பார்த்தேன். என்னவோ அந்த கண்ணும், முடியும் என்னை இம்ப்ரெஸ் பண்ணிச்சு அது உண்மை தான்”
“நம்ம லைப்ல வர்ற பொண்ணு இப்படி இருந்தா நல்லாயிருக்கும்ன்னு எல்லாரும் மாதிரி எனக்கும் அந்த நேரத்துல தோணின ஒரு எண்ணம் தான் அது…”
“உன்னை பெண் பார்க்க வந்தப்போ உன்னை பார்த்ததுமே எனக்கு பிடிச்சுப் போச்சு. அப்படி பார்க்காத சனா அது தான் உண்மை”
“உன் கண்ணை பார்க்கணும்ன்னு நினைச்சேன், உன்கிட்ட பேசணும்ன்னு நினைச்சேன், அது அந்த பழைய நினைப்பு இருந்ததுனால தான். அதுக்காக நீ வேணாம்ன்னு எல்லாம் நினைக்கலை”
“ஆனா நீ என்னைப் பார்க்கவே இல்லை. அப்போ தான் நான் ரொம்ப டென்ஷன் ஆனேன். வேலைமெனக்கெட்டு உன்னை பார்க்க வந்திருக்கோம் நீ பாட்டுக்கு எங்கயோ பார்த்திட்டு பதில் சொன்னே”
“அதனால தான் போடி சரித்தான்னு தோணிச்சு, அதான் பிடிக்கலைன்னு சொல்லிட்டு வந்திட்டேன்”
“அதுக்கு பிறகு என்னால எந்த பொண்ணையும் பார்க்க முடியலை. வீட்டில கொஞ்ச நாளைக்கு எந்த பேச்சும் வேணாம்ன்னு சொல்லிட்டேன். ஒரு வருஷம் கழிச்சு அம்மா ரொம்ப பிடிவாதம் பிடிச்சு பொண்ணு பார்த்தாங்க”
“சரி போய் பார்ப்போம்ன்னு போனா, என்னால உள்ள கூட போக முடியலை. உன் முகம் தான் மனசுல வந்துச்சு. அந்த நிமிஷம் முடிவு பண்ணேன். உன்னை தான் கல்யாணம் பண்ணனும்ன்னு”
“நேரா உன்னைத்தேடி வந்து என் விருப்பத்தை சொல்லவும் செஞ்சிட்டேன். நீயே சொல்லு உன் கண்ணை பார்த்தோ முடியை பார்த்தோவா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு நினைச்சேன்”
“எங்கயும் நீ நீயாவே இருக்கலை. அப்படியும் உன்னை எனக்கு பிடிச்சிருந்தது. இதுவரைக்கும் தான் அப்படி இருந்திட்டே, இது உன் வாழ்க்கை நீ நீயா இரு சனா. அது தான் அழகு”
“நீ மாறமாட்டேன் இப்படித்தான் இருப்பேன்னா நான் எந்த தடையும் சொல்லப் போறதில்லை. நிச்சயம் அதுக்காக நான் முகம் சுளிக்கவோ உன்னை கட்டாயப்படுத்தவோ மாட்டேன். ஆனா ஒரு விஷயம் நீ பண்ணுறது சரின்னு நான் எப்பவும் சொல்ல மாட்டேன்”
“ஏன்னா எனக்கு அது பிடிக்கலை. கோபத்துக்கே திரை போடக்கூடாதுன்னு நினைக்கிறவன் நான். நீ திரை போட்டுட்டு தான் சுத்துவேன்னு சொல்றே?? இனிமே உன்னிஷ்டம் இதுக்கு மேல நான் சொல்ல ஒண்ணுமில்லை” என்று தெளிவாகவே உரைத்தான் அவளிடம்.
விலோசனா அவனிடம் வேறொன்றும் சொல்லவில்லை. ஆனால் செயலில் காண்பித்தாள், அவள் விழிகளுக்கிட்டிருந்த திரையை விலக்கிவிட்டாள்.  ஆதி அதை பெரிதாக காட்டிக்கொள்ளாவிட்டாலும் மனைவியின் அந்த முயற்சி அவனுக்கு சந்தோசமே.
மறுநாள் பொழுது அவர்களுக்கு ரம்மியமாகவே இருந்தது. கோக்கர்ஸ் வாக்கில் நடந்துக் கொண்டிருக்கும் போது தான் கேட்டாள்.
“என்னங்க நேத்து எங்க போனீங்க நீங்க??”
“இப்போ தான் கேட்கணும்ன்னு தோணிச்சா உனக்கு. நேத்தே கேட்பேன்னு எதிர்பார்த்தேன்”
“சொல்லுங்க”
“அப்போவே அவனை தூக்கி உள்ள வைச்சாச்சு”
“என்ன” என்று வாய் பிளந்தாள்.
“வாயை இவ்வளவு பெரிசா திறக்காதே” என்றவன் அவன் கையால் மெதுவாய் மூடியவன் விரல்கள் அவள் இதழை மெதுவாய் வருடியது.
“சொல்லுங்க ஏன் அப்படி செஞ்சீங்க??”
“வேற என்ன செய்யணும்?? அவனுக்கெல்லாம் எவ்வளவு கொழுப்பு பப்ளிக்ல பேசுறோம், அதுவும் அவ புருஷன் முன்னாடி பேசுறோம்ன்னு இல்லாம என்ன தைரியம் அவனுக்கு”
“போலீஸ் தூக்கி உள்ள வைச்சதும் ஆடிப் போய்ட்டான். அடுத்த வாரம் அவன் வெளிநாடு போகப் போறான் போல. விசா பேப்பர்ஸ் எல்லாம் வந்திடுச்சாம், ப்ளீஸ்விட்டுடுங்க, இனிமே உங்கப்பக்கமே வரமாட்டேன்னு சொன்னான்”
“அப்புறம் என்ன செஞ்சீங்க விட்டுட்டீங்களா” என்று சற்று நலிந்த குரலில் அவள் கேட்க இல்லையென்று தலையசைத்தான் அவன்.
“விடலையா அப்போ”
“விட்டாச்சு”
“அப்புறம்”
“இங்க வரச்சொல்லி இருக்கேன்”
“எதுக்காக??” என்று சத்தமாக கேட்க “மெதுவா பேசு” என்றான் அவன்.
“எதுக்கு அவனை இங்க வரச் சொன்னீங்க”
“வருவான் தெரிஞ்ச்சுக்கோ” என்று அவன் சொல்லி முடித்த சில நொடிகளிலேயே அவன் வந்து நின்றான்.
அவனைப் பார்த்து விலோசனா ஆதியின் பின்னால் செல்ல “நீ என்ன பண்ணி வைச்சிருக்கேன்னு தெரியுதா உனக்கு. உன்னை பார்த்து பயந்து போகலை அவ விலகி ஓடுறா” என்றான் ஆதி அவனைப் பார்த்து.
“சாரி சார். என்னை மன்னிச்சிடுங்க இனிமே இப்படி செய்ய மாட்டேன்” என்று இருகரம் கூப்பினான் அவன்.
விலோசனா அப்போதும் முன்னால் வரவில்லை, ஆதியின் கையை இறுக்கமாய் பற்றிக் கொண்டு நின்றிருந்தாள்.
“சனா நீ மன்னிச்சுட்டேன்னு சொன்னா தான் அவன் போவான்”
“அதெப்படி அடிச்சிட்டு வலிக்குதான்னு கேட்குற மாதிரி இருக்கு. இவனை எல்லாம் மன்னிக்க நான் யாரு, நானே இதெல்லாம் மறக்க முயற்சி பண்ணிட்டு இருக்கேன். போக சொல்லுங்க அவனை இங்க இருந்து” என்று அவள் சொல்லவும் “மறுபடியும் கேட்கறேன் என்னை மன்னிச்சிடுங்க” என்றுவிட்டு அவன் நகர்ந்துவிட்டான்.
“சனா அவன் போய்ட்டான்”
“ஏன் இப்படி பண்ணீங்க?? எப்போ பார்த்தாலும் இப்படி தான் ஏடாகூடாமா எதாச்சும் பண்றீங்க நீங்க. இப்படித்தான் பொண்ணு பார்க்க வந்திட்டு பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனீங்க. எப்போ உங்களுக்கு கோபம் வரும்ன்னும் தெரிய மாட்டேங்குது, எப்போ என்ன பண்ணுவீங்கன்னும் புரிய மாட்டேங்குது” என்றாள் விலோசனா.
“எனக்கு அனாவசியமா கோபம் வந்ததில்லை சனா. எந்த கோபத்தையும் நான் அதிக நேரம் இழுத்து பிடிச்சதில்லை”
“அடுத்த சில நிமிஷத்துலவே நானாவே வந்து பேசிடுவேன். ஆனா இப்போ நான் என் கோபத்தை எல்லாம் நான் குறைச்சுட்டேன் தெரியுமா எல்லாம் உன்னால தான்”
“நம்பிட்டேன் நம்பிட்டேன்”
“நிஜமா தான் சொல்றேன். நீ நம்பினாலும் நம்பலைன்னாலும் அதுக்கு நான் ஒண்ணும் பண்ண முடியாது. பொண்ணு பார்க்க வந்தப்போ நான் பிடிக்கலைன்னு சொன்னது உன்னை ரொம்ப ஹர்ட் பண்ணிடுச்சா??”
“அது புரியாம தான் சொல்லிட்டு போனீங்களா…”
“உங்களை போட்டோவில பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. ஆனாலும் ஒரு பயம் எனக்கு, நான் காலேஜ்ல பார்த்த பசங்க மாதிரி நீங்க இருந்திடுவீங்களோன்னு. அன்னைக்கு நீங்க என்கிட்ட பேசணும்ன்னு சொல்வீங்கன்னு நான் எதிர்பார்க்கலை”
“அப்போ தான் ஒரு பயம் பதட்டம் எல்லாம் வந்துச்சு. அதுல தான் உங்களை பார்க்கலை நானு. நீங்க அப்போ தான் கோபமா பேசிட்டு போயிட்டீங்க. எவ்வளவு பீல் பண்ணேன் தெரியுமா”
“அதுக்கு பிறகு எத்தனை மாப்பிள்ளை வந்து பார்த்தாங்க தெரியுமா. அவ்வளவு கஷ்டமா இருக்கும் அவங்க முன்னாடி போய் நிக்கறோமேன்னு”
“நீங்க திரும்பி வந்தப்போ அவ்வளவு சந்தோசமா இருந்துச்சு எனக்கு. நயன் வேணாம்ன்னு சொல்லியும் நான் பிடிவாதமா சரின்னு சொன்னேன்”
“நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்னால இயல்பாவே இருக்க முடியலை. நீங்க என்னை வேணாம்ன்னு சொன்ன கோபம் எனக்கிருந்துச்சு. தவிர அன்னைக்கு நீங்க என் கண்ணை பத்தி பேசவும் தான் நான் ரொம்ப பேசிட்டேன்”
“என்னால நீங்க மாமாகிட்ட பேச்சு வாங்கிட்டீங்க. மனசுக்கு ரொம்ப கஷ்டமா போச்சு”
“உன்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டு போனதுக்கு நான் சாரி கேட்க மாட்டேன். ஆனா அது தப்பு தான், விடு எல்லாம் நல்லதா தானே நடந்திருக்கு. இனிமே நல்ல லைப் சந்தோசமா தொடங்குவோம்” என்றவன் தன்னவளின் தோளில் கைகளை போட அவளும் அவன் இடையில் கைப்போட்டு இறுக்கிக் கொண்டாள்.

Advertisement