Advertisement

19
வகுப்பறையில் கூட அவளால் பாடத்தை இயல்பாய் கவனிக்க முடியவில்லை. எங்கே மாலையில் அவர்களை மீண்டும் பார்த்துவிடுவோமோ என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது.
அவளை ஆர்வமாய் பார்த்தவர்களிடமோ அவளுடன் பேச முயன்ற அருகமர்ந்த பெண்ணிடமோ பேசக்கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.
நல்ல வேளையாக மாலையில் யாரையும் அவள் பார்க்கும் சூழல் ஏற்படவில்லை. வீட்டிற்கு சென்று நயனாவிடம் சொல்லி ஒரே அழுகை.
“நயன் அவங்க எப்படிலாம் பேசுனாங்கன்னு தெரியுமா??” என்று சொல்லி சொல்லி அழுதாள்.
“இங்க வந்து எதுக்கு அழறே விலோ?? அங்கவே அவனுங்களுக்கு நல்லா நாலு கொடுக்க வேண்டியது தானே. இல்லை நாக்கை பிடிங்குற மாதிரி கேட்க வேண்டியது விட்டு சும்மா நை நைன்னு அழுத்திட்டு இருந்தா ஆச்சா” என்று கடிந்தாள் தங்கை.
“நயன் எனக்கு அவங்களை பார்த்தாலே பயமா இருக்கு”
“என்னத்தை பயமோ உனக்கு… இப்படியே இருந்தா எப்படி விலோ” என்றாள் அவள்.
“நான் என்ன செய்ய நயன், பேசாம காலேஜ்விட்டு நின்னுடவா”
“லூசா நீ??” என்று திட்டினாள் தங்கை.
“எனக்கு காலேஜ் போக பயமாயிருக்கு. நாளைக்கும் இப்படியே பண்ணா நான் இனிமே காலேஜ் போக மாட்டேன்”
“டெய்லி எல்லாம் அப்படி செய்வாங்களா, அவங்களுக்கு வேலை இல்லையா என்ன… நீ படிக்க போறே, அந்த வேலையை மட்டும் பாரு, உனக்கு மெரிட்ல சீட் கிடைச்சிருக்கு”
“அதுவும் இந்த ஊர்ல நம்ம கேட்ட காலேஜ்ல கிடைச்சிருக்கு. அதெல்லாம் வேணாம்ன்னு சொல்றே, ஒழுங்கா படி விலோ” என்று அட்வைஸ் செய்தாள் அவள்.
தங்கையின் சமாதானத்தில் கொஞ்சம் சாந்தமானவள் மறுநாள் கல்லூரிக்குச் சென்றாள். அன்று எந்த வித தொந்திரவும் இல்லாமல் நல்லபடியாகவே சென்றுவிட்டது.
அடுத்த இரண்டு நாளில் மீண்டும் அவர்களின் கண்களில் அவள் விழுந்துவிட அன்று அவளை இன்னும் அவர்கள் கலாட்டா செய்துவிட ஒரே வாரத்தில் அந்த கல்லூரிக்கு முழுக்கு போட்டிருந்தாள் அவள்.
“ஏன்மா நான் வேணும்ன்னா ப்ரின்சிபால்கிட்ட வந்து பேசறேன்ம்மா… இதுக்காக எல்லாம் காலேஜ்விட்டு நிக்கலாமா”
“நேத்து உங்க கார்மெண்ட்ஸ்ல வேலை பார்க்கிற ஒருத்தரோட பையன் அங்க படிக்கிறாங்கன்னு சொல்லி அவங்ககிட்ட ஹெல்ப் கேக்க சொன்னீங்க”
“அந்த அண்ணா பேசுனா அவங்க அவங்களையும் ரொம்ப வம்பு பண்ணிட்டாங்கப்பா. பாவம் என்னால அவங்களுக்கு கஷ்டம் இதெல்லாம் வேணாம்ப்பா…”

“தவிர யார்கிட்ட பேசினாலும் அங்க படிக்கப் போறது நான் தானே. அவங்களை பார்க்கும் போதெல்லாம் அவங்க பேசினது தான் எனக்கு ஞாபகத்துக்கு வரும்”
“அவங்க வேணுமின்னே என்னை எதாச்சும் ஒருவிதத்துல அட்டாக் பண்ணத்தான் பார்ப்பாங்க… என்னை கட்டாயப்படுத்தாதீங்க. நான் அந்த காலேஜ் தான் போகணும்ன்னா அதுக்கு நான் படிக்காமலே இருந்திடுவேன்” என்று பிடிவாதம் பிடித்தாள்.
“விலோ என்ன பேசறே நீ?? இப்போ தான் அப்பா உனக்கு பீஸ் கட்டி அங்க சேர்த்துவிட்டாங்க. நீ காலேஜ் வேணாம்ன்னு வந்து நின்னா நல்லாவா இருக்கும் சொல்லு”
“ஏற்கனவே நம்ம அத்தைங்க எல்லாம் என்ன கிடைக்கும்ன்னு நம்மை பேசலாம்ன்னு பார்த்திட்டு இருக்காங்க. நீ அதுக்கு அவல் கொடுக்கறா போல இருக்கு”
“அதுக்காக என்னை அந்த காலேஜ் போக சொல்றியா. அவங்க எல்லாம் எவ்வளவு அசிங்கமா பேசறாங்க தெரியுமா. உன்னை பேசியிருந்தா உனக்கு தெரிஞ்சிருக்கும்”
“என்னை பேசியிருந்தா அவங்க தெறிச்சு ஓடியிருப்பாங்க. ஓட வைச்சிருப்பேன் நானு”
“நீங்க என்ன சொன்னாலும் சரி நான் இனிமே காலேஜ் போக மாட்டேன். அப்பா ப்ளீஸ்ப்பா எனக்கு இனிமே அந்த காலேஜ் வேணாம். இங்கவே ஏதாச்சும் ஒரு லேடிஸ் காலேஜ்ல என்னை சேர்த்துவிட்டிருங்கப்பா” என்று சொல்ல வேறு வழியில்லாது அவர் மகளை வேறு கல்லூரியில் சேர்த்துவிட்டார்.
———————-
‘இதெல்லாம் ஒரு பிளாஸ்பேக்கா அதுக்கு இருந்த மரியாதையே போச்சே’ என்ற நமது மைன்ட் வாய்சை ஆதியும் கேட்ச் செய்துவிட்டான்.
“இதுக்காக யாராச்சும் காலேஜ்விட்டு நிப்பாங்களா??”
“அவங்க பேசினதை கேட்டுட்டு அங்கவே என்னை படிக்க சொல்றீங்களா?? பார்த்தீங்கள்ள நான் வேற காலேஜ் சேர்ந்து என் படிப்பு முடிஞ்சே ரெண்டு வருஷம் மேல ஆகுது”
“அதுக்கு முன்னாடி நான் அந்த காலேஜ்ல ஒரு வாரம் தான் படிச்சேன். அதை இன்னும் ஞாபகம் வைச்சுட்டு வந்து இன்னைக்கு என்கிட்ட எப்படி பேசினான் பார்த்தீங்கள்ள. அப்புறமும் நான் அங்க தான் படிச்சிருக்கணும்ன்னு எப்படி சொல்றீங்க” என்ற அவளின் கேள்வி ஆதிக்கு நியாயமாகவே இருந்தது.
“ஆனாலும் நீ இன்னும் தைரியமா இந்த விஷயத்தை ஹேண்டில் பண்ணியிருக்கலாம் நயனா சொன்ன மாதிரி”
“சரி போகட்டும் காலேஜ் மாறிட்ட ஓகே, இந்த கண்ணுக்கு லென்ஸ் போடுற ஐடியா எல்லாம் எப்படி தோணிச்சு. அதான் பிரச்சனை முடிஞ்சு போச்சே. அப்புறமும் ஏன்??”
“அது அது… இன்னைக்கு பார்த்தோமே அவனை மறுபடியும் ஒரு தடவை பார்த்தேன் இதுக்கு முன்னாடி. நான் காலேஜ் கடைசி வருஷம் படிக்கும் போது. இன்னும் ரெண்டு பேரு அப்போ அவன் கூட இருந்தாங்க”

“மூணு பேரும் சேர்ந்து அன்னைக்கு போற வர்ற பொண்ணுங்களை எவ்வளவு அசிங்கமா பேசினாங்க தெரியுமா. அதுல ஒருத்தன் என்னை பார்த்திட்டு அவன் தொடர்ந்து வரவும் நான் எப்படியோ வந்த பஸ்சுல ஏறி தப்பிச்சுட்டேன்”
“சரி…”
“அதுக்கு அப்புறம் ஒரு அண்ணா என்னை ப்ரொபோஸ் பண்ணார்” என்று அவள் சொல்லவும் ஆதிக்கு சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.
அவளே கஷ்டப்பட்டு சொல்லிக் கொண்டிருக்கிறாள் தான் சிரித்தால் என்னாவது என்று அடக்கிக்கொண்டு மேற்கொண்டு அவள் சொல்லப் போவதை கேட்க சித்தமாயிருந்தான்.
‘ஒருத்தன் ப்ரொபோஸ் பண்ணானாம் அவனை இவ அண்ணான்னு வேற சொல்லுறா, பாவம் அவன் இதைக்கேட்டதுமே தெறிச்சு ஓடியிருப்பான் போலவே’ என்று தான் தோன்றியது அவளின் கணவனுக்கு.
“அவங்களும் உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உன்னோட இந்த முடியும் உனக்கு அழகை சேர்க்குது. மொத்ததுல நீ ரொம்ப அழகுன்னு சொன்னாங்க”
ஆதிக்கு இந்த இடத்தில் புகைந்ததை நான் தனியாக வேறு விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை. 
“நான் என்னைப் பார்த்தா ஒரு மாதிரி பொண்ணாவா தெரியுது. எல்லாரும் கண்ணை பத்தியே பேசுனாங்க. அன்னைக்கெல்லாம் எனக்கு மனசே சரியில்லாம போச்சு. நான் புலம்பிட்டே இருந்தேன்”
“என் கண்ணு தான் எல்லாரையும் டிஸ்டர்ப் பண்ணுது அதான் அப்படி எல்லாம் ரியாக்ட் பண்ணுறாங்கன்னு நான் நயன்கிட்ட சொல்லிட்டு இருந்தேன்”
“அவ தான் அவ காலேஜ்ல ஒரு பொண்ணு டெய்லி ஒரு கலர்ல லென்ஸ் போட்டு வருவான்னு சொன்னா, பேசாம நீயும் ஒண்ணை வாங்கி போட்டுக்கோயேன்னு சொன்னா”
“அந்த பெரிய மனுஷி சொன்னான்னு நீ கேட்டியா. ஊருக்கு போய் வைச்சுக்கறேன் அவளுக்கு”
“அவளை எதுக்கு திட்டுறீங்க, எனக்காக தானே அவ சொன்னா”
“நீ என்ன சொன்னாலும் சரி அவ கூட நான் சண்டை போடத்தான் போறேன்” என்றான் ஆதி.
“இந்த முடியை இப்படி கன்றாவியா ஆக்கச் சொன்னதும் அவ தானா”
“இல்லை நான் தான்…”
“ஏன்??”
“அது எனக்கு அடங்கவே மாட்டேங்குது அதான்…” என்று அவள் சொல்ல சத்தமாகவே சிரித்துவிட்டான் ஆதி.
“எதுக்கு சிரிக்கறீங்க??”
“சும்மா தான் விடு” என்றவன் “என்ன வேணா சொல்லு, நீ செஞ்சது சரின்னு என்னால ஒத்துக்க முடியலை. நீ இன்னும் கொஞ்சம் துணிச்சலாவே இதையெல்லாம் சமாளிச்சிருக்கணும்ன்னு தோணுது”
“என்கிட்ட எவ்வளவு பேசினே, என்னை பக்கத்துலவே வரக்கூட விடலை. இதை நீ ஏன் மத்தவங்ககிட்ட செய்யலை??”
அவள் முகம் கோணியது. “அவங்களும் நீங்களும் ஒண்ணா?? சொல்லுங்க அவங்களும் நீங்களும் ஒண்ணா??”
“அவங்களும் மனுஷங்க தானே”
“நீங்க என் புருஷன் உங்ககிட்ட எனக்கு எல்லா உரிமையும் இருக்கு. உங்களை நான் என்னவும் பேசுவேன் என்னை நீங்க என்னவும் பேசலாம். அடுத்தவங்ககிட்ட ஏன் பேசலைன்னு கேட்டா நான் என்ன சொல்வேன்” என்று கொஞ்சம் அவள் சத்தமாகவே சொல்லிவிட ஆதி தான் அயர்ந்தான்.
அவள் உரிமை பற்றி பேசவும் அவன் மனம் குளிர்ந்து தான் போனது. ஆனால் அதற்காக அவளின் பேச்சு சரியென்று அவனால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
“இதுக்கு மேல என்ன சொல்லன்னு எனக்கு தெரியலை. நீ இப்படி இருந்தா நாளைக்கு நம்ம பசங்க எப்படி தைரியமா வளர்வாங்க”
“கண்டிப்பா வளர்வாங்க. நான் அவங்களை நல்லா வளர்ப்பேன். எங்கம்மா என்னை பாதியில விட்டுப் போய்ட்டாங்க. நான் என்ன கஷ்டப்பட்டேன்னு எனக்கு தான் தெரியும்” என்று சொல்லும் போது விழிகள் நிரம்பி அருவியை பொழிய அவளை சேர்த்தணைத்துக் கொண்டான் ஆதி.

Advertisement