Advertisement

“இவன் சொல்றதை நம்பாதீங்க. இவன் என்கிட்ட தப்பா பேசறான்” என்றாள் உடைந்த குரலில்.
அவள் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்ட ஆதி மற்றவனை பார்த்து “யார் நீ??” என்றான்.
“அதான் சொன்னேன்ல இவளோட ஆளுன்னு” என்று மீண்டும் அதையே சொல்லிட அவன் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது ஆதி கொடுத்த அடியில்.
“டேய்” என்று அவன் கத்த “கொன்னுடுவேன்” என்று விரல் நீட்டி எச்சரித்தான் ஆதி.
“என்னடா பெரிய ரவுடியா நீ… இவளுக்கு நீ தான் மாமா பயலா” என்று கன்னாபின்னாவென்று அவன் வார்த்தையை விட மேலும் இரண்டு அடி வைத்தான் ஆதி.
“இவர் என் புருஷன்” என்று விலோசனா சொல்ல “நீயெல்லாம் கூட கல்யாணம் பண்ணிக்கிட்டியா??” என்று அவன் இன்னமும் இகழ்ச்சியாய் பேச ஆதியின் கோபம் கரைக்கடந்து கொண்டிருந்தது.
அதற்குள் லேசாய் கூடியிருந்த கூட்டத்தை பார்த்து உதவிக்கு நின்றிருக்கும் காவலர் ஒருவர் ஓடிவந்தார். வந்தவருக்கு அடிவாங்கியவனை நன்றாய் தெரிந்திருக்க அவனுக்கு ஆதரவாய் பேச ஆரம்பித்தவரை ஆதி முறைத்தான்.
“என்ன சார் அவனுக்கு சப்போர்ட் பண்ணுற மாதிரி இருக்கு”
“அவன் எனக்கு தெரிஞ்ச பையன் தான் சார், நல்லவன் நீங்க தான் ஏதோ அவன்கிட்ட வம்பு பண்ணியிருக்கீங்க. எதுக்கு அவனை அடிச்சீங்க??” என்று அவர் சரமாரியாய் ஆதியை கேள்வி கேட்க ஆரம்பித்தார்.
“பார்த்தியா என்னோட பவர் என்னன்னு தெரிஞ்சுக்கோ” என்றான் அடிவாங்கியவன்.
விலோசனாவோ ஆதியிடம் “வேணாம் ப்ளீஸ் வாங்க போவோம்” என்றிட ஆதியோ திரும்பி அவளை முறைத்தான்.
“ப்ளீஸ் எல்லாரும் பார்க்கறாங்க, அசிங்கமா இருக்கு…” என்று அவள் கெஞ்சிய குரலில் சொல்ல அவளை எரிக்கும் பார்வை பார்த்தவன் அடுத்தவனிடம் திரும்பி “உன் பேரு என்ன??” என்றான்.
“தெரிஞ்சுட்டு என்ன பண்ணப்போறே??” என்றான் அவன் தெனாவெட்டாய்.
“தைரியம் இருந்தா சொல்லு” என்று அவனை தூண்டும் விதமாய் பேசினான் ஆதித்யன்.
“பார்றா என் தைரியத்தை இவரு டெஸ்ட் பண்ணுறாரு” என்றவன் “என் பேரு…” என்று அவன் ஆரம்பிக்க அந்த காவலர் அவனிடம் கண்ணைக் காட்ட அவன் நிறுத்திக் கொண்டான்.
அதை கண்டுக்கொண்ட ஆதி அந்த காவலரின் பெயர் தாங்கிய பேட்ஜை ஒரு பார்வை பார்த்துவிட்டு மற்றவனை பார்த்து ஒரு ஏளனப் புன்னகை உதிர்த்து கிளம்பினான்.
“என்னடா நக்கலா சிரிக்கறே??”
“உன் அறிவை நினைச்சு நான் வியந்து போயிட்டேன்டா” என்றான் ஆதி திமிராக.
“என்ன??”
“நீ சொல்லலைன்னா உன் பேரை நான் தெரிஞ்சுக்க முடியாதா என்ன, அதை நினைச்சு தான் சிரிச்சேன்… சீக்கிரமே வர்றேன், தயாரா இரு…” என்றுவிட்டு விலோசனாவின் கையை பிடித்து காருக்கு சென்றான்.
அவளை கூட்டி வந்து அறையில் விட்டுச் சென்றவன் திரும்பிக் கூட பார்க்காது அங்கிருந்து சென்றுவிட்டான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு பிறகு திரும்பி வந்திருந்தான் ஒரு வழியாய்.
மதிய உணவு நேரமும் கடந்திருந்தது அப்போது. வந்தவன் அப்படியே கட்டிலில் சரிந்துவிட்டான். விலோசனாவின் முகத்தை கூட பார்க்கவில்லை அவன். விழி மூடி அவன் படுத்திருந்தாலும் உறங்கவில்லை என்பதை அவன் கண்மணியின் அசைவினிலே உணர்ந்தாள் அவன் மனைவி.
அவனருகே சென்று அவன் இடக்கரத்தை தன் இருக்கரத்தினிலும் அடக்கிக் கொண்டு அதிலேயே முகம் புதைக்க ஆதி அவன் கரத்தை விடுத்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான்.
எதுவும் அவனாகவே கேட்கவில்லை, பேசாமலே இருந்தான். அவள் கட்டிலில் முகம் புதைத்து அழுகையை தொடரவும் முதலில் வேடிக்கை பார்த்தவனின் மனம் பின் மெதுவாய் அவள் தலையின் மீது கை வைக்க அதுவே போதுமானதாக இருந்தது விலோசனாவிற்கு. எட்டி அவனை கட்டிக்கொண்டு கதறினாள்.
“இப்போ என்னாச்சுன்னு இப்படி அழறே??”
அவளின் அழுகை மட்டுப்பட்டு இப்போது விசும்பலில் நின்றது. அவள் முதுகை தடவிக் கொடுத்தவன் “நீ சொன்னா தான் எனக்கு தெரியும்?? அவன் யாரு??”
“என்னோட சீனியர் காலேஜ்ல”
“என்ன?? என்ன சொன்னே??”
“ஹ்ம்ம்”
“நீ லேடிஸ் காலேஜ் தானே படிச்சே??”
“ஆமா…”
“அப்புறம் எப்படி??”
“முதல்ல எனக்கு இன்ஜினியரிங் காலேஜ்ல தான் சீட் கிடைச்சது” என்றவள் அந்த நிகழ்வுகளை அவனிடம் பகிர்ந்தாள்.
———————-
விலோசனாவிற்கு படபடப்பாக இருந்தது. இதுவரை பெண்கள் பள்ளியிலேயே படித்து முடித்துவிட்டாள். ஆண்களிடம் அதிகம் பேசியதில்லை, அதற்கு எந்த சந்தர்ப்பமும் அவளுக்கு அமைந்திருக்கவில்லை.
சிறு வயதில் அக்கம் பக்கம் விளையாட்டு கூட பெண்களிடத்தில் மட்டுமே. அவளின் அத்தைக்கு மகன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் இவளின் அம்மா இறந்த பிறகு அத்தைகள் யாரும் அவர்களின் பிள்ளைகளை அங்கு எதற்கும் அனுப்பியிருக்கவில்லை.
அவளுக்கு, அப்பா அதற்கு பின் நயனா மட்டும். பள்ளியில் கூட அவளுக்கென்று ஒரே ஒரு தோழி மட்டுமே. சிறிய உலகம் அவளது அதிலேயே இருந்தவள் இன்று முதல் நாள் கல்லூரிக்கு செல்கிறாள்.
அது ஆண் பெண் இருபாலரும் பயிலும் கல்லூரி முதல் நாள் கல்லூரிக்கு அவரே கூட்டிச் சென்று விட்டுவந்திருந்தார். மறுநாள் முதல் அவள் கல்லூரி பேருந்தில் செல்லும்படி ஏற்பாடு செய்து அதற்கு பணமும் கட்டியிருந்தார் இளவரசன். அவரே வந்து ஏற்றியும் விட்டிருந்தார். 
அதில் ஆண்கள் பெண்கள் என்று கலந்து அமர்ந்திருந்தனர். அவளின் கண்கள் காலியிருக்கையை தேடி கடைசி இருக்கைக்கு முன்னால் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்திருந்தாள். 
புதிதாய் அவள் அதில் பயணிப்பதால் அனைவருமே அவளை ஒரு பார்வை பார்த்திருந்தனர். அதுவே அவளுக்கு பெரும் கூச்சத்தை கொடுத்தது.
ஒரு வழியாய் கல்லூரியும் வந்துவிட அதிலிருந்து இறங்கினாள். “ஹேய் கைஸ் இங்க பாருங்கடா கண்ணழகி” என்று ஒருவன் கூச்சலிட ஆங்காங்கே அமர்ந்திருந்த ஓரிருவர் எழுந்து எட்டிப் பார்த்தனர்.
யாரையோ சொல்கிறார்கள் என்ற ரீதியில் இருந்த விலோசனா தன் வகுப்புக்கு செல்லப் போக “ஹேய் நீலக்கண்ணு நில்லு” என்று ஒருவன் வந்து வழியை மறித்தான்.
“அதென்ன உனக்கு கண்ணு நீலமா இருக்கு??” என்று கேட்க இவள் பதில் சொல்லாமல் விழித்தாள். இன்னொருவனோ “சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்” என்றான்.
மற்றொருவனோ “இதென்ன உன் முடி இப்படி அடங்காம பப்பரப்பான்னு இருக்கு” என்று சொல்ல அவளுக்கு அழுகையே வரும் போல இருந்தது.
“டேய் மச்சான் இவ கண்ணை பாரேன் அப்படியே சொக்குதுடா, நம்ம சில்க் சிமிதாவை பார்த்தா எப்படி ஒரு கிறக்கம் இருக்கும் அப்படியிருக்குடா” என்று சொல்ல மற்றவர்களும் அதை ஆமோதிக்க இன்னும் இருவர் இவளை நோக்கி வர இவளோ தப்பித்தால் போதும் என்ற ரீதியில் அங்கிருந்து நகரப் போனாள்.
“ஹலோ அதான் பேசிட்டு இருக்கோம்ல நீ பாட்டுக்கு போனா என்ன அர்த்தம்” என்று வந்தான் ஒருவன்.
“சீனியர்ஸ் ஒரு மரியாதை இல்லாம நீ பாட்டுக்கு போற, ஆமா நீ என்ன ஊமையா நாங்க இவ்வளவு பேசுறோம் நீ பாட்டுக்கு பேசாம இருந்தா என்ன அர்த்தம்”
“ப்ளீஸ் வழியை விடுங்க நான் போகணும்” என்று அவள் சொல்ல “டேய் பத்தினி தெய்வம்டா இது, நீ என்னவோ சிலுக்குன்னு சொல்லிட்டு இருக்க”
“டேய் ஒரு பழமொழி சொல்வாங்கடா ஒண்ணும் தெரியாத பாப்பா…” என்று அவன் ஆரம்பிக்க “ஓ நீ அப்படி வர்றியா” என்று ஒருவர் மாற்றி ஒருவர் அவர்களே பேசிக் கொண்டிருக்க அவளால் காது கொடுத்து கேட்க முடியவில்லை அவர்களின் பேச்சை.
கல்லூரி மணி அடித்துவிட அவர்கள் நகர ஆரம்பிக்கவும் இவள் ஓடியே போனாள் அவளின் வகுப்பறைக்கு.
இதுவரை யாரும் இப்படி அவளை இழிவாக பேசியதில்லை. பள்ளியில் கூட இவளுடன் பயிலும் பெண்கள் “உன் கண்ணு ரொம்ப அழகா இருக்கு, உனக்கு கண்ணு நீலமா இருக்கறதே ஒரு அழகு” இப்படித்தான் சொல்லிக் கேட்டிருக்கிறாள். முதன்முறையாக அவளை தவறாக சித்தரிக்கும் வகையில் அவர்கள் பேசியது அவளை கலங்கச் செய்தது.

Advertisement