Advertisement

18
காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.
ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அருள்செல்வன் தன் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.
“ஆதி…”
“ப்பா…”
“உனக்கு இந்த வாரம் தொடர்ந்து லீவு இருக்கும் தானே ஒரு ரெண்டு மூணு நாளைக்கு. வரிசையா பண்டிகையா வருதே…”
“ஹ்ம்ம் ஆமாப்பா…”
“சரி என் பிரண்டு லிங்கம் கொடைக்கானல்ல இருக்கான்ல அவன்கிட்ட சொல்லி இருக்கேன். அவனோட ரிசார்ட் அங்க இருக்கு, நீயும் விலோசனாவும் அதுலவே ஸ்டே பண்ணுங்க”
“இப்போ எதுக்குப்பா இதெல்லாம்??”
“உனக்கும் லீவு இருக்கு, கல்யாணம் முடிஞ்சு நீங்க எங்கயும் போகலை. சோ போயிட்டு வாங்க…” என்று அவர் முடித்துவிட அவன் மேற்கொண்டு மறுத்துச் சொல்லவில்லை.
பெரும்பாலும் தந்தை எதையும் அவனிடத்தில் சொல்வதில்லை. அவர் ஒன்று சொல்லி அதை அவன் மறுத்ததுமில்லை. அதனாலேயே விலோசனாவை அழைத்துக் கொண்டு கிளம்பியிருந்தான்.
நயனாவும் வேலைக்கு செல்ல ஆரம்பித்துவிட்டாள். அதனால் அவளை வீட்டிற்கு அழைத்து வரச்சொல்லி சந்தியா சொல்லியிருக்க அதற்குள் தந்தை இப்படியொரு ஏற்பாட்டை செய்திருந்தார்.
அவளை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வந்தான். அன்றே ஊருக்கு கிளம்ப வேண்டியதாயிருக்க தேவையானதை எடுத்துக்கொண்டு காரிலேயே கிளம்பியிருந்தனர்.
மலை ஏற ஏற குளிர் ஊசிக் கொண்டு துளைத்தார் போன்று அவள் உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்தது. அணிந்திருந்த புடவையை குளிருக்காய் இழுத்து போர்த்தி அவள் அமர்ந்திருப்பதை பார்த்தான்.
“ஸ்வெட்டர் இல்லையா எடுத்து போட வேண்டியது தானே”
“என்கிட்ட இல்லை”
“ஏன்??”
“ஏன்னு கேட்டா என்ன சொல்ல, நம்ம ஊர்ல அப்படியொன்னும் குளிர் இருக்கறதில்லை. சோ ஸ்வெட்டர் எல்லாம் நான் போடுறதில்லை. இங்க இவ்வளவு குளிரும்ன்னு எனக்கு தெரியாது” என்றவளை முறைத்து பார்த்தான்.
“நீ இதுக்கு முன்ன இங்க வந்ததில்லையா??”
“இல்லை…”
“நிஜமாவா??”
“நான் ஏன் பொய் சொல்லணும்??”
“அதுக்காக கேட்கலை. மதுரையில இருந்துக்கிட்டு கொடைக்கானல் போனதில்லைன்னு சொல்றியே அதான் யோசிச்சேன்…”
“நான் மதுரையை தாண்டி வெளிய போனதில்லை”
காரை ஓரிடத்தில் நிறுத்தியவன் தான் அணிந்திருந்த ஜெர்கினை கழற்றி அவளிடத்தில் கொடுத்தான்.
“எதுக்கு??”
“போட்டுக்கோ இன்னும் மேல போகப்போக குளிர் அதிகம் எடுக்கும் போடு…”
“இல்லை உங்களுக்கு…”
“என்னால சமாளிக்க முடியும் நீ போடு… போற வழியில உனக்கும் ஒண்ணு வாங்கிடலாம்”
“நான் அதுவரைக்கும் மேனேஜ் பண்ணிக்கறேன்”
“உன்னால முடியாது சொன்னா கேளு” என்றவன் திரும்பி அவளைப் பார்த்தான்.
அவள் ஜெர்கினை அணிந்துக் கொண்டதை பார்த்த பின்பே தான் காரை எடுத்தான். கொடைக்கானல் வந்ததும் துணிக்கடை ஒன்றில் அவளுக்கு ஜெர்கின், ஷால் எல்லாம் வாங்கிக்கொண்டு அவர்கள் ரிசார்ட் நோக்கிச் சென்றனர்.
ஆதி அவர்கள் அறைக்கு வந்ததும் ஹீட்டர் ஆன் செய்து வென்னீரில் குளித்து படுத்துவிட்டான். கார் ஒட்டி வந்த அலுப்பு அவனுக்கு.
விலோசனா குளித்து வருவதற்கு முன்பே ஆதி நன்றாய் உறங்கியிருக்க அவளுக்கு தூக்கம் எங்கோ போயிருந்தது. வரும் வழியிலேயே அவள் கொஞ்சம் உறங்கியிருந்தாள்.
அங்கிருந்த சோபாவில் சென்று அமர்ந்துக் கொண்டாள். ஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை விழியகலாது பார்த்திருந்தாள்.
ஊருக்கு போன் செய்து அவர்கள் வந்துவிட்ட தகவலை சந்தியாவிற்கும் தன் தங்கைக்கும் தெரியப்படுத்தினாள். சிறிது நேரம் அவர்களிடம் பேசிவிட்டு நேரத்தை பார்க்க மணி ஒன்பதரையை நெருங்கிக் கொண்டிருந்தது.
இன்னமும் இருவரும் எதுவும் உண்டிருக்கவில்லை. பசி லேசாய் வயிற்றை கிள்ளியது அவளுக்கு. எழுந்துச் சென்று ஆதியை மெதுவாய் அழைத்தாள்.
“என்னங்க… என்னங்க…” என்று அவள் அழைத்தது அவனுக்கு உறக்கத்தில் எங்கோ கேட்டுக் கொண்டிருந்தது.
அவனை அழைப்பதை விட்டு உலுக்கி பார்த்தாள். அவன் அப்போதும் எழுந்திருக்கவில்லை. ‘பேசாம நாம மட்டும் சாப்பிட்டு படுப்போமா… ச்சே வேணாம் அவரே சாப்பிடலை நாம எப்படி சாப்பிட’ என்று எண்ணியவள் அவள் ஹேண்ட்பேக்கில் இருந்த பிஸ்கட் பாக்கட்டை பிரித்து சாப்பிட்டு படுத்துக் கொண்டாள்.
காலையில் விலோசனாவிற்கு முன்பே ஆதி கண் விழித்திருந்தான். முதல் நாள் குளித்துவிட்டு உறங்கியது தான் தெரியும், அப்படியொரு உறக்கம் இரவு உணவையும் மறந்து.
விழித்த பின்பே அதை உணர்ந்தான். ‘இவ சாப்பிட்டாளான்னு தெரியலையே நாம தூங்கிட்டோமே’ என்று எண்ணியவன் குளித்து வந்தவன் அவளுக்கும் தனக்குமாய் காபியை பிளாஸ்கில் கொண்டு வருமாறு பணித்திருந்தான். 
சிறிது நேரத்திலேயே எழுந்துவிட்டாள் விலோசனா. ஆதியை தேட அவன் வாயிலில் நின்று வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
இவளின் அரவம் கேட்டு திரும்பியவன் “குட் மார்னிங்” என்று தலைசாய்த்து சிரித்தவாறே சொல்லிட அவள் முகமும் புன்னகை பூசிக் கொண்டது. பதிலுக்கு அவனுக்கு தலையசைத்து உள்ளே சென்றாள்.
அவள் காலை வேலை எல்லாம் முடித்து குளித்து அழகிய இளம் பச்சை நிற ஜார்ஜெட் சேலையில் வந்திட ஆதியின் உள்ளம் தடுமாறிப்போனது அவளைக்கண்டு. “காபி சாப்பிடலாம்” என்றவன் இருவருக்கும் அவனே ஊற்றி ஒன்றை அவளிடம் நீட்ட அதை மறுக்காமல் வாங்கி குடித்தாள் அவன் மனைவி.
கொடைக்கானல் இருவரின் மனநிலையை சற்றே மாற்றியிருந்தது போலும். அவர்களின் கோபம், வீம்பு, ஈகோ என்று அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டு இருவருக்கும் ஒருவரின் மீதான மற்றவரின் நேசம் மட்டும் ஆட்சி செய்தது அங்கு.
அதுவே அவர்கள் இதமாய் நடந்துக் கொள்ள உதவியது. “நேத்து நைட் ரொம்ப டயர்ட் அதான் தூங்கிட்டேன் நீ என்னை எழுப்பியிருக்கலாம்ல, சாப்பிட கூட இல்லையே”
“எழுப்பினேன் நீங்க அசந்து தூங்கிட்டு இருந்தீங்க. அதான் விட்டுட்டேன்”
“நைட் நீ சாப்பிட்டியா??”
“நீங்க சாப்பிடலை நான் மட்டும் எப்படி சாப்பிட”
“சாரி”
“எதுக்கு சாரி கேட்கறீங்க. ஒரு நாள் அசந்து தூங்கினா தப்பா என்ன” என்று அவன் மனைவி கேட்ட தினுசில் அயர்ந்து தான் போனான் ஆதி.
இது என்னவள் தானா, எனக்காக பரிந்து எல்லாம் யோசிப்பாளா என்று தான் தோன்றியது அவனுக்கு. “சரி கிளம்பு வெளிய போய் சாப்பிட்டு சைட் சீயிங் பார்க்கலாம்” என்று அவளை கிளப்பினான்.
முதலில் குறிஞ்சி ஆண்டவரை பார்ப்பதில் தொடங்கிய அவர்களின் பயணம் ப்ரயண்ட் பூங்கா, பசுமை பள்ளத்தாக்கு, டால்பின் மூக்கு, ஊசியிலை மரங்கள் அடர்ந்த பகுதி என்று மெதுவாய் சுற்றிவிட்டு அறைக்கு இரவு ஏழு மணி போலத்தான் திரும்பி வந்தனர்.
அதிகம் ஒட்டி உறவாடவில்லை என்றாலும் ஒருவருக்கு மற்றவரின் அருகாமை சந்தோசத்தை கொடுத்தது. ஒரு இதமான சூழ்நிலையே ஆட்சி செய்தது இருவருக்குள்ளும்.
ஆதிக்கு அவளிடம் நிறைய எதிர்பார்ப்பு இருந்தாலும் பெரிதாய் எதையும் அவன் காட்டிக்கொள்ளவில்லை. இருவரும் மனம்விட்டு பேசும் தருணம் கூடிவருவதை அவர்களே உணர்ந்தனர்.
மறுநாள் தான் சூழ்நிலை லேசாய் மாற ஆரம்பித்தது. காலையில் இருவரும் சுற்றிப்பார்க்க சென்றனர். முதலில் குணா குகைகளை பார்வையிட்டுவிட்டு கொடைக்கானல் ஏரிக்கு வந்திருந்தனர்.
படகு சவாரி செய்வதற்கு டிக்கெட் வாங்க ஆதி சென்று விட விலோசனா தனியே நின்றிருந்தாள். “ஹேய் சிலுக்கு நீ எப்படி இங்க??” என்று இளித்தவாறே அவளருகே ஒருவன் வந்து நின்றான்.
சிலுக்கு என்ற வார்த்தை கேட்டதுமே தூக்கிவாரிப்போட திரும்பி பார்த்தாள் விலோசனா. ‘இவன் எங்க இங்க’ என்ற பார்வை பார்த்தவளின் விழியிரண்டும் ஆதியை தேட அவன் சற்று தொலைவில் டிக்கெட் வாங்குமிடத்தில் நின்றிருந்தது தெரிந்தது.
“பார்ரா புடவைலாம் கட்டியிருக்க, செம பிகரா இருக்கே போ… ஆமா நீ ஏன் பாதியில காலேஜ்விட்டு போனே, நீ இல்லாம நாங்க எல்லாம் தவிச்சு போய்ட்டோம் தெரியுமா” என்று அவன் பேசப்பேச விலோசனா தவித்துக் கொண்டிருந்தாள்.
அவனின் அருவருப்பான பேச்சை சகிக்க முடியாமல் அவள் பல்லைக் கடித்து நின்றிருக்க அவனோ “இன்னும் உன் கண்ணு என்னை வா வான்னே கூப்பிடுது. எப்போமே உன்னோட கண்ணு தான் பச்சக்குன்னு இருந்துச்சு”
“இன்னைக்கு மொத்தமாவே நீ பச்சக்குன்னு ஒட்டிக்கிற மாதிரி இருக்க, பேசாம இங்க ஒரு ரூம் போட்டிருவோமா” என்றவன் அருகே நெருங்கியிருக்க அவள் கைகள் தானாய் நீண்டு அவன் கன்னத்தை பதம் பார்த்துவிட்டது. அதில் கடுப்பானவன் சட்டென்று அவளை வளைத்துப் பிடிக்க போக ஆதி வந்திருந்தான்.
“கையை விடு” என்றான் அவனைப் பார்த்து.
“நீ யாரு” என்றவன் இன்னமும் அவள் பிடியை விடாமலே நின்றான்.
“அதை உனக்கு சொல்லணும்ன்னு அவசியம் இல்லை, அவளை விடு” என்ற ஆதி விலோசனாவின் கையை பிடித்து தன் புறம் இழுக்க மற்றவனோ இன்னும் அழுத்தமாய் அவளை இழுக்க வலியில் துடித்தாள் விலோசனா.
அதைக்கண்ட ஆதி அவன் பிடியை தளர்த்தி “மரியாதையா சொல்றேன் கையை எடு, இல்லைன்னா நீ ரொம்ப கஷ்டப்படுவே சொல்லிட்டேன்” என்று எச்சரித்தான்.
“விட முடியாதுடா, இவ என்னோட ஆளு” என்று அவன் சொல்லிட அவனிடம் இருந்து கையை உருவ போராடிய விலோசனா அவனை எட்டித்தள்ளி ஆதியின் புறம் வந்து நின்றாள்.

Advertisement