Advertisement

17
“உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர்.
“எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நயனா மாமா எங்க இன்னும் ஆளைக் காணோம். பேசணும்ன்னு சொன்னேனே??” என்றான் ஆதித்யன்.
“அப்பா எனக்கு மெடிசன் வாங்க கடைக்கு போயிருக்காங்க மாமா. இப்போ வந்திடுவாங்க”
“அவங்களை எதுக்கு கடைக்கு அனுப்பினே, நான் தான் இருக்கேன்ல போக மாட்டேனா??”
“இல்லை மாமா அப்பாகிட்ட நேத்தே சொல்லியிருந்தேன். அதான் அவங்க கிளம்பிட்டாங்க”
“உங்கக்காகிட்ட சொல்லி எங்களுக்கு ஜூஸ் எதுவும் கொண்டு வரமுடியுமா??”
“நான் எடுத்திட்டு வர்றேன் மாமா” என்று நகர்ந்தாள் அவள்.
தாங்கி தாங்கி நடந்துச் செல்லும் அவளையே பார்த்திருந்தான் கதிர். ‘அவ மாமன்கிட்ட மட்டும் என்னா பம்மு பம்முறா’ என்று தான் பார்த்தான்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே இளவரசன் வந்துவிட கதிரை அடையாளம் கண்டுக்கொண்டவர் “வாங்க வாங்க தம்பி. நானே உங்களை நேர்ல பார்க்கணும்ன்னு நினைச்சுட்டு இருந்தேன்” என்றவர் கையில் இருந்ததை அங்கிருந்த டிபாயின் மேல் வைத்தார்.
அவர் வந்ததும் மரியாதை நிமித்தம் எழுந்து நின்றிருந்தவனின் கரத்தை பற்றிக்கொண்டார் அவர். “ரொம்ப ரொம்ப நன்றி தம்பி அன்னைக்கு நீங்க மட்டும் சரியான நேரத்துல என் பொண்ணை ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகலைன்னா என்னாகியிருக்கும்” என்றார்.
“விடுங்க சார், ஆதி அங்க இருந்து என்ன செஞ்சிருப்பானோ அதைத்தான் நான் செஞ்சேன்” என்றான் அவன்.
“உட்காருங்க தம்பி” என்று அவனை அமரச் செய்தவர் அவனருகில் அமர்ந்துக் கொண்டார்.
“மாமா”
“சொல்லுங்க மாப்பிள்ளை” என்றார் ஆதியிடம் திரும்பி.
“உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்” என்று நிறுத்தினான் ஆதித்யன்.
செங்கதிருக்கு உள்ளே ரயிலின் வேகமாய் இதயம் தடதடத்தது. என்ன பேசப் போகிறான் என்று ஆதி இப்போது வரை சொல்லவில்லை. எதுவாக இருக்கும் என்று அவனுமே ஆவலாய் பார்த்தான்.
“சொல்லுங்க” என்றார் அவர்.
விலோசனா பழச்சாற்றுடன் வந்தாள். “வாங்க” என்று கதிரை விசாரித்து அவனுக்கும் மற்றவர்களுக்கும் பழச்சாறை கொடுத்தவள் அங்கேயே நிற்க ஆதி அவள் புறம் திரும்பினான்.
“லஞ்ச் ரெடி பண்ணுங்க, நாங்க கொஞ்சம் முக்கியமா பேசணும்” என்று சொல்ல விலோசனா முகம் கருத்தது. ஒன்றும் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்தாள்.
இளவரசனே என்ன இது தான் பார்த்தார். மருமகன் சொல்லும் போது அதை எதிர்த்து அவர் சொல்ல முடியுமா என்ன என்று அமைதியாய் இருந்தார்.
அவள் உள்ளே செல்லவும் “மாமா ஒரு பிசினஸ் ஒண்ணு. அதை எப்படி பண்ணலாம்ன்னு சொல்லுங்க” என்றான் மொட்டையாய். கதிருமே புரியாமல் தான் பார்த்திருந்தான். 
“என்ன பிசினஸ் மாப்பிள்ளை??”
“கதிரோடது…”
“எதுவா இருந்தாலும் நேராவே சொல்லுங்க மாப்பிள்ளை. இப்படி விட்டுவிட்டு சொன்னா அதை புரிஞ்சுக்கற அளவுக்கு எனக்கு தெரியாது” என்றுவிட்டார் அவர்.
லேசாய் சிரித்துக் கொண்டவன் “கதிர்க்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு மாமா. ஒரு ஐடி கம்பெனி அவங்களோட யூனிபார்ம் தைக்கிற ஆர்டர் அவனுக்கு கொடுத்திருக்காங்க”
‘இதை எதுக்கு இவன் அவர்கிட்ட சொல்றான்’ என்று விழித்தான் செங்கதிர். ஆதி பேசி முடிக்கும் போது தான் அவன் ஏன் இளவரசனிடம் அதைப்பற்றி பேசினான் என்றே அவனுக்கு புரிந்தது.
“பர்ஸ்ட் வந்த நூறு பீஸ் சக்சஸ்புல்லா முடிச்சிட்டான். இப்போ அவனுக்கு அதைவிட பெரிய ஆர்டர் வந்திருக்கு. அவனோட கடை சின்னது மாமா ரொம்ப…”
“அந்த ஆர்டர் எடுக்கறதுக்கு யோசிச்சுட்டு இருந்தான். நான் தான் உங்ககிட்ட பேசலாம்ன்னு கூட்டிட்டு வந்தேன் மாமா. எனக்கொரு ஐடியா இருக்கு”
மருமகன் எதற்கு இந்த பேச்சை அவரிடம் ஆரம்பித்தார் என்று அவருக்கு கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.
“சொல்லுங்க” என்றார் அவர்.
“நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இதை செஞ்சா என்ன?? அது என்ன மாதிரி டெர்ம்ஸ் அதெல்லாம் நீங்களே பேசுங்க. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இன்னொரு யூனிட் மாதிரி ஆரம்பிச்சு பார்ட்னர்ஷிப் பேசிஸ்ல பண்ணுங்க”
“இல்லையா இவ்வளோன்னு பிக்ஸ் பண்ணிட்டு பண்ணுங்க. அது உங்க கன்வினியன்ஸ் பொறுத்தது. அவனுக்கும் வேலை முடியும், புது பிசினஸ் கிடைக்கும். உங்களுக்கும் அதுனால லாபம் தானே மாமா என்ன சொல்றீங்க” என்று எல்லா வழியும் அவனே சொல்லிவிட்டான். 
“டேய்” என்று ஆதித்யனின் காதைக் கடித்தான் கதிர்.
“என்னடா??”
“அவர் என்ன பண்றார்??”
“புரியலை எனக்கு”
“அவர்க்கு என்ன வேலைன்னு கேட்டேன்”

“கார்மென்ட்ஸ் வைச்சிருக்கார்டா”
“அடப்பாவி இதை ஏன் நீ முதல்லவே சொல்லலை என்கிட்ட, நான் மொத்த ஆர்டரும் அவருக்கே போற மாதிரி செஞ்சிருப்பேன்ல” என்று நண்பனுக்கு மட்டும் கேட்கும் அளவில் மெதுவாய் சொன்னான்.
“அவ்வளவு நல்லவனாடா நீ” என்று பார்த்தான் ஆதி.
“என்னால முடிஞ்சதை தான் நான் செய்யணும், அகலக்கால் வைக்க முடியாதுல” என்ற கதிர் அவனே இளவரசனிடம் பேச ஆரம்பித்தான்.
“சார் ஆதி சொல்ற மாதிரி பண்ணனும்ன்னு அவசியம் இல்லை. இந்த ஆர்டரை நான் உங்களுக்கே மொத்தமா கொடுத்திர்றேன். நீங்க பண்ணிக்கோங்க சார், அங்க கம்பெனில கூட நான் பேசிடறேன்” என்றவனை ஆதி முடிந்த மட்டும் முறைத்தான்.
இளவரசன் இருவர் சொன்னதையும் கேட்டுக்கொண்டார் வேறு ஒன்றும் சொல்லவில்லை. அவருக்கு சட்டென்று எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. முன்பு போல அவர் உடலும் ஒத்துழைக்கவில்லை. அதனால் புதிதாய் எந்த பிசினஸ் அவர் செய்யவில்லை. பழைய வாடிக்கையாளர்களை கொண்டே அவர் தொழிலை ஓட்டிக் கொண்டிருந்தார்.
“என்ன மாமா யோசனையா இருக்கீங்க??”
“உங்களுக்கு வேணாம்ன்னா விட்டிறலாம் மாமா”
“அதில்லை மாப்பிள்ளை. வேணாம் வேணும்ன்னு எனக்கு எந்த முடிவும் எடுக்க முடியலை. நான் என் பொண்ணுகிட்ட பேசிட்டு சொல்லவா” என்றார் அவர்.
“விலோசனாகிட்டயா மாமா??”
“இல்லை மாப்பிள்ளை நயனா தான் இதெல்லாம் சரியா சொல்லுவா. வீட்டு நிர்வாகம்ன்னா விலோ சொல்லுவா. இந்த மாதிரி முக்கியமான முடிவெல்லாம் சின்னவகிட்ட கேட்டா தான் சரியா வரும்”
‘அப்போ கண்டிப்பா இது நடக்கப் போறதில்லை’ என்று முடிவே செய்துவிட்டான் கதிர்.
“சரி மாமா நீங்க பேசிட்டு சொல்லுங்க… இப்போவே கேட்க போறீங்களா இல்லை டைம் வேணுமா??”
“எப்போ சொல்லணும்??” என்று இருவரையும் பார்த்தார்.
ஆதி திரும்பி நண்பனை பார்த்தான். “அவங்களுக்கு புதன்கிழமை சொல்றேன்னு சொல்லியிருக்கேன். அதுக்கு முன்னாடி தெரிஞ்சா போதும்” என்றான் அவன்.
“நாளைக்கே சொல்லிடறேன்” என்றார் அவர்.
பின் மூவரும் பொதுவாய் பேசிக்கொண்டிருந்தனர். நயனா வெளியே வரவேயில்லை. உணவு வேளை வந்த போது விலோசனா தான் வந்திருந்தாள்.
“சாப்பிட வாங்க” என்று மூவரையும் பொதுவாய் பார்த்து அழைத்தாள்.
கதிரோ “ஆதி நான் கிளம்பறேன்டா. அக்காகிட்ட அங்க வர்றேன்னு சொன்னேன்”
“அடிச்சேன்னு வை அத்தனை பல்லும் கொட்டிரும் பார்த்துக்க. மரியாதையா சாப்பிட வா” என்று முறைக்க செங்கதிர் தயங்கியே சென்றான்.
டைனிங் டேபிளில் மூவரும் அமர்ந்திருக்க அவர்களுக்கு அக்காவும் தங்கையுமாக பரிமாறினார்கள்.
நயனா அவனருகே வரும் போதெல்லாம் கதிர் என்ன உணர்ந்தான் என்று அவனுக்கே புரியவில்லை. ஒரு மாதிரி பறப்பதான உணர்வு. உணவு நன்றாகவே இருந்தது. நன்றாகவே உண்டான் கதிர்.
இளவரசன் சீக்கிரமே சாப்பிட்டு எழுந்திருந்தார். “பாயாசம் நீ செஞ்சதா நயனா. நல்லா இருக்கு” என்றான் ஆதி.
“தேங்க்ஸ் மாமா, அது மட்டுமில்லை இன்னைக்கு மொத்த சமையலும் என்னோடது தான்” என்று அவள் கதிரை பார்த்து சொல்ல அவன் முகம் இன்னமும் மலர்ந்ததை பார்த்திருந்தாள் அவள்.
“என்ன நீயே செஞ்சியா??” என்ற ஆதி அருகில் நின்றிருந்த மனைவியை முறைக்க “நான் தான் எல்லாம் கட் பண்ணிக் கொடுத்தேன். ஏத்தி இறக்கறது மட்டும் தான் அவ செஞ்சா” என்றாள் மெதுவான குரலில்.
“அவளுக்கு ரெஸ்ட் கொடுத்திட்டு நீ செய்ய வேண்டியது தானே” என்றவன் இன்னமும் அவளை கடுப்பாகவே பார்த்திருந்தான்.
“மாம்ஸ் போதும் போதும் உங்க பாசத்துக்கு அளவே இல்லாம போச்சு. எவ்வளோ நாளைக்கு உட்கார்ந்திட்டே இருக்க முடியும், நடக்க நடக்க தான் சரியாகும்”
“எங்க அக்காவை என் முன்னாடியே சத்தம் போடறீங்க. கல்யாணத்துக்கு முன்னாடி நாம பேசினது எல்லாம் மறந்து போச்சா உங்களுக்கு. அவ கண்ணுல தண்ணி வந்துச்சு. வெங்காயத்தை அரிஞ்சு உங்க கண்ணுல வைச்சிடுவேன் பார்த்துக்கோங்க” என்று செல்லமாய் மிரட்டினாள் அவள்.
“நீ செஞ்சாலும் செய்வம்மா, காளி நீ இங்க இருக்கறதை மறந்து சொல்லிட்டேன் என் பொண்டாட்டிகிட்ட மன்னிச்சுடுங்க அம்மணி”
“போனா போகுது மன்னிச்சுட்டேன் விடுங்க” 
“உங்க பிரண்டு  வாய்க்கு பூட்டு எதுவும் போட்டுட்டு வந்திட்டாரா??” என்று கதிரையும் வம்பிழுத்தாள் அவள்.
“அவன் ரொம்ப சாப்ட்ம்மா என்னை மாதிரி இல்லை. பாவம் அவனை விட்டிரு” என்றான் ஆதித்யன்.
“ஹ்ம்ம் ஆமா உங்க பிரண்டு உங்களை மாதிரி வெளிப்படையா பேசுறவர் இல்லை” என்று அவள் குத்த செங்கதிருக்கு புரையேறியது.
அவசரமாய் சாப்பிட்டு எழுந்துவிட்டான். கை கழுவி வந்தவன் “ஆதி நான் கிளம்பறேன்” என்று அவன் பதிலுக்கு கூட காத்திராமல் மற்றவர்களிடம் தலையசைத்து கிளம்பியே விட்டான்.
‘போங்க போங்க நல்லா ஓடி ஒளிஞ்சுக்கோங்க எவ்வளவு நாளைக்கு தான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம்’ என்று தான் தோன்றியது நயனாவுக்கு.
——————–
“இந்த பட்டனை சரியா தைங்க…”
“என்ன இது ஓவர்லாக் பண்ணாம விட்டிருக்கீங்க இந்த சட்டையில. கொஞ்சம் பார்த்து கவனமா வேலையை செய்ங்க” என்று செங்கதிர் அங்கிருந்தவர்களை விரட்டிக் கொண்டிருந்தான்.
“என்னாச்சு??” என்று அங்கு வந்து நின்றாள் நயனா.
“இல்லை மேடம் சார் சட்டையை ஒழுங்கா தைக்கலைன்னு சொல்றார்” என்றாள் அப்பெண்.
நயனா திரும்பி கதிரை பார்த்தாள்.
“சட்டையை ஓவர்லாக் பண்ணாம விட்டுட்டாங்க”
“தப்பு தானே அது…” என்று அப்பெண்ணை திரும்பி பார்த்து முறைத்தாள் அவள்.
அப்பெண் தலைகுனிந்தாள். “இங்க பாருங்க, உங்க பேரு??”
“அர்ச்சனா…”
“ஓகே அர்ச்சனா, நீங்க ஒரு விஷயத்தை புரிஞ்சுக்கோங்க. அவர் உங்க வேலையை குற்றம் சொல்றார்ன்னு குறையா நினைக்காதீங்க…”
“இந்த ஆர்டர் எங்களுக்கு அவ்வளவு முக்கியம். அப்பா, நான் இங்க எவ்வளவு முக்கியமோ அவரும் அப்படித்தான்…”
“இந்த ஆர்டர் முழுக்க முழுக்க அவரோட உழைப்பு. இந்த யூனிட்ல பாதி பங்கு அவரோடது. அவர் எப்படி நம்ம வேலையை குற்றம் சொல்லலாம்ன்னு யோசிக்கறதை விட்டு நம்ம வேலையை நாம எப்படி சரியா செய்யணும்ன்னு யோசிங்க. ஓகே…”
“இது இவங்களுக்கு மட்டுமில்லை. இங்க இருக்க எல்லாருக்கும் சேர்த்து தான் சொல்றேன்…” என்று அவள் அதிகாரமாய் சொல்ல அனைவருக்கும் அது தங்களுக்கு புரிந்தது என்பது போல தலையாட்டிவிட்டு தங்கள் வேலையை பார்க்க ஆரம்பித்தனர்.
‘என்னா கெத்தா பேசுறாங்க. நமக்கு இதெல்லாம் வரலையோ…’ என்று தான் பார்த்தான் கதிர்.
ஆதித்யன் சொன்னது போல இளவரசன் உதவியுடன் செங்கதிர் அந்த ஆர்டரை எடுத்துக் கொண்டான்.
இளவரசன் மறுநாளே தன் மக்களிடம் பேசினார். ஆதி மருத்துவமனை கிளம்பிச் சென்றுவிட அதன் பின் பெண்கள் இருவரையும் அழைத்தார்.
“சொல்லுங்கப்பா” என்றாள் நயனா.
அவர் ஆதி சொன்னதை பற்றி பேச “அதெல்லாம் சரியா வரும்மாப்பா” என்று விலோசனா சொன்னாள்.
“சரின்னு சொல்ல வேண்டியது தானேப்பா” என்றாள் நயனா.
“விலோ நீ ஏன்மா சரியா வருமான்னு கேட்கறே??”
“எனக்கு உங்க வேலை பத்தி சரியா தெரியாதுப்பா. ரெண்டாவது கதிரை உங்க மாப்பிள்ளை தான் ரெபர் பண்றார். அவர் நல்லவர் தான் அதுல எந்த அப்ஜெக்ஷனும் இல்லை”
“ஆனா அவர் வேலையில எப்படி இதெல்லாம் நமக்கு தெரியாதுப்பா. ஒருத்தரோட கூட்டு சேர்ந்து செய்யற வேலை எந்தளவுக்கு சரியா வரும்ன்னு எனக்கு தெரியலை”
“ஒருவேளை அவர் அந்த ஆர்டரை மொத்தமா உங்களுக்கே கொடுக்கற மாதிரி இருந்தா ஓகே சொல்லுங்க. அதுக்கு அவருக்கு கமிஷன் மாதிரி எதுவும் கொடுக்கறதுன்னா கொடுத்திடலாம்” என்று தன் கருத்தை சொன்னாள் மூத்தவள்.
“என்ன விலோ பேசறே நீ?? கமிஷன் கொடுக்கறதா அந்த ஆர்டர் அவங்க திரும்ப கொடுக்கறேன்னு சொன்னதே அவரோட வேலை பிடிச்சு போய் தான். உண்மையா உரிமைப்பட்டவர் அவர். அவருக்கு கமிஷன் கொடுத்தா அவர் உழைப்பை அதுல ஒண்ணுமே இல்லைங்கற மாதிரி ஆகிடும்”
“அப்பா எனக்கு அக்கா சொல்றது எதுவும் பிடிக்கலை. எத்தனை வருஷமா நீங்க வேலை பார்க்கறீங்க. ஒருத்தரோட நடவடிக்கை வைச்சே அவங்களை உங்களால கணிக்க முடியாதா”
“அவர்கிட்ட நானே நிறைய தடவை துணி தைக்க கொடுத்திருக்கேன். அவங்க கடைக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கு. அவங்க வேலை சுத்தமாவே இருக்கு”
“உன்னோட முடிவு என்னம்மா??” என்றார் அவர் நேரிடையாய்.
“அவரும் நீங்களும் சேர்ந்து பண்ணுங்க. நம்ம ஆபீஸ்க்கு மேல ஒரு காலி இடம் இருக்குல்ல அதை வாடகைக்கு எடுங்க, இல்லைன்னா குத்தகைக்கு பேசுங்க”
“அதை ரெண்டு பேரு சேர்ந்து பண்ணுற மாதிரி பார்த்துக்கோங்க. ஏற்கனவே இருக்கற வேலையை அப்படியே செய்ங்க. இந்த புது ஆர்டர் மட்டுமில்லாம இனி வர்ற இது போல ஆர்டரை ரெண்டு பேரும் சேர்ந்து ஷேர் பண்ணி செய்ங்க”
“பிப்டி பிப்டி ஷேர் வரவு செலவு எல்லாத்துலயும்” என்று தன் கருத்தை சொன்னாள் சின்ன மகள். “உங்க கருத்து என்னப்பா” என்று கேட்கவும் செய்தாள்.
“நானும் இப்படி தான் யோசிச்சு வைச்சிருக்கேன். ஆனா எனக்கு இதுல ஒரு சின்ன மாற்றுக்கருத்து இருக்கு”
“என்னப்பா??”
“இல்லை இன்னொரு யூனிட் மாதிரி போட்டுக்கறது பத்தி எந்த பிரச்சனையும் இல்லை. ஆனா இந்த வேலை முடிஞ்ச பிறகு அடுத்து என்ன… எந்த ஆர்டரும் இல்லைன்னா வேலை செய்யறவங்களை எல்லாம் அனுப்பிடணுமா”
“கடையை என்ன செய்யறது. அதெல்லாம் தான் யோசனையா இருக்கு”
“அப்பா நீங்க ஏன் அப்படி நினைக்கறீங்க. அவங்க முதல் நூறு ஆர்டர் பார்த்திட்டு தான் இப்போ ஆயிரம் சட்டை தைக்க சொல்லி ஆர்டர் கொடுத்து இருக்காங்க. இது இன்னும் அதிகமாகும்ன்னு நினைங்க. நான் இனிமே உங்ககூட ஆபீஸ்க்கு வர்றேன். புது பிசினஸ் எடுப்போம்ப்பா உங்களுக்கு ஏன் அந்த கவலை”
“அப்போ கூட எனக்கு திருப்தியா இல்லையேம்மா”
“என்னன்னு புரியற மாதிரி சொல்லுங்கப்பா…”

“இல்லைம்மா இந்த ஆர்டர் அந்த தம்பி கொண்டு வந்திருக்கு சரி கூட்டு சேர்க்கறோம் ஓகே. இதுக்கு அப்புறம் நாம எடுக்கற ஆர்டருக்கும் அவரை கூட்டு சேர்க்க முடியுமா. நீ சொன்ன மாதிரி நம்மோட உழைப்புக்கு அவருக்கும் சன்மானம் கொடுக்கற மாதிரி அது ஆகாதா”
“அவ்வளவு தானா… அப்பா… அப்பா…” என்றவள் தொடர்ந்தாள்.
“அப்பா அவர் கொண்டு வர்ற ஆர்டருக்கு மட்டும் ஷேர் கொடுப்போம். மத்தப்படி நம்ம புதுசா எடுக்கற ஆர்டர்க்கு அவரை கூட்டு சேர்க்கணும்ன்னு அவசியமில்லை”
“எனக்கென்னவோ அதுக்கெல்லாம் அவசியம் இருக்காதுன்னு தோணுது. அவரே நமக்கு நெறைய புது ஆர்டர் வர காரணமா இருப்பார்ன்னு தோணுது” என்று முடித்தாள்.
ஒருவழியாய் இளவரசனும் ஒத்துக்கொண்டு இதோ வேலையும் தொடங்கி இருந்தது. ஆயிரம் ஆர்டர் என்று வாய்மொழியாய் சொல்லியிருந்தவர்கள் ஐந்தாயிரம் சட்டைகளுக்கு உரிய முன்பணத்தை கொடுத்து ஆர்டரும் கொடுத்திருக்க வேலையும் தொடங்கிவிட்டது.
கதிருக்கு நிற்க நேரமில்லாமல் ஓடியது. பெரிய கடைக்கு நம்பிக்கையான ஒரு ஆளை போட்டு பார்த்துக்கொள்ளச் சொன்னான். அருகே இருந்த புதுக்கடைக்கும் ஒரு ஆளை நியமித்திருந்தான். 
இருவருக்குமிடையில் ஒப்பந்தம் போடப்பட்டு மளமளவென்று வேலைகள் ஆரம்பித்தது. 

Advertisement